கவிஞர் இன்குலாப் : ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம் – குமரன் தாஸ்
எனக்கு இன்குலாப் அவர்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தவர்கள் எனது பத்தாம் வகுப்பு கணித, தமிழ் ஆசிரியர்கள் ஆவர் . அது 1981ஆம் ஆண்டு. ஒரு நாள் திடீரென பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த அவர்களை காவல்துறை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்றது மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் பள்ளியின் ஒட்டுமொத்த ஆசிரியர்களிடையே அவர்கள் மட்டும் மாறுபட்டவர்களாக, மாணவர்கள் மீது, அதுவும் ஏழை மாணவர்கள் மீது மிகுந்த கரிசனம் கொண்டவர்களாக, ஒரேயொரு மாணவனைக் கூட அடித்திராதவர்களாக, வகுப்பின் உள்ளே நுழைந்தது முதல் வகுப்பு நேரம் முடிந்து வெளியேறும் வரையில் இருக்கையில் அமராமல் நின்றவாறே ஒரு நொடி கூட வீணடிக்காமல் பாடம் நடத்த கூடியவர்களாக , டியூசன் எடுப்பது தவறு என்று சொல்பவர்களாக எல்லாவற்றுக்கும் மேலாக ஏதாவது கோரிக்கைகளுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தும் சமயங்களில் மற்ற ஆசிரியர்கள் எல்லாம் ஏதோ காவல்துறை அதிகாரிகள் போல நடந்து கொண்டு மாணவர்களை மிரட்டும் போது இவர்கள் மட்டும் மாணவர்கள் தரப்பு நியாயங்களை உணர்ந்தவர்களாக நடந்து கொண்டனர்
அத்தகையவர்களை, காவல்துறை பள்ளிக்குள் நுழைந்து அழைத்துச் சென்றது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் காவல்துறை சில மணி நேரங்களில் அவர்களை விடுவித்துவிட்டதால் மாணவர்கள் அமைதியாயினர். பிறகுதான் காரணம் தெரிந்ததுஅப்போது நடைபெற இருந்த தேர்தல் பூத்தில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக விசாரிக்கவே அம்மூன்று ஆசிரியர்களையும் காவல்துறை அழைத்துச்சென்ற தாம் என்று.
ஏனென்றால் அம்மூன்று ஆசிரியர்களும் தீவிர கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களாம். இந்த விவரத்தை எனக்கு சொன்னவன் எனது வகுப்புத் தோழன் சீமாச்சு என்ற சீனிவாசன். இப்போது அவன் உயிரோடு இல்லை, விபத்தில்காலமாகிவிட்டதாக அவனது அப்பாவை காரைக்குடி ரயில் நிலையத்தில் சந்தித்த போதுஎன்னிடம் அவர் கூறினார், அவன் அப்பாவும் ரயில்வே தொழிற் சங்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மூலமாக தெரிந்து கொண்ட விவரங்களை சீமாச்சுஎனக்கு கூறினான்.
இந்த விபரங்களால் அம்மூன்று ஆசிரியர்கள் மீதான மரியாதை மேலும் அதிகரித்ததோடு அந்த நல் ஆசிரியர்கள் ஆதரித்த தீவிர கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் மரியாதை ஏற்பட்டது. அந்த ஆசிரியர்கள் தான் இன்குலாப்படைப்புகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு அவர் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவரது இயற்பெயர் சாகுல்ஹமீது என்ற விவரங்களையும் கூறினர்.
1980களில் இன்குலாப்பும் இளவேனிலும் பல்வேறு இதழ்களில் (நக்கீரன்,நெற்றிக்கண், உங்கள் விசிட்டர் போன்ற இதழ்களில்) தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தனர். அவற்றை ஒன்றுவிடாமல் வாங்கி வாசித்துவிடுவதில் நானும் என் நண்பனும்மிகத் தீவிரமாக இருந்தோம்.இக்கட்டுரைகள் தான் பிறகு தொகுக்கப்பட்டுஇன்குலாபின் ” துப்பாக்கிகள் பூவாளிகள்”எனவும் இளவேனிலின் “ 25 வெண்மணி தெரு” என்ற பெயரிலும்நூல்களாக வந்தன.
@
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் சேர நான் சென்றபோது எனது பள்ளி ஆசிரியர்கள் நீ படிக்கப்போகும்கலைக்கல்லூரியில் தான் இன்குலாப்பும் (புகுமுக வகுப்பு) பயின்றார் என்ற விவரத்தைக் கூற கேட்ட நான் மிகுந்த பெருமிதத்தோடு சென்றேன், எங்கள் கவிஞர் இன்குலாப் பயின்ற கல்லூரியில் சேர்ந்த எனக்கு இன்குலாப்புக்கு ஆசிரியராக இருந்த கவிஞர் மீரா அவர்களே எனக்கும் ஆசிரியராக அமைந்ததும் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகும்.
அதுவரை இன்குலாப்படைப்புகளை இதழ்களில் தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்ததற்கு மாறாக கவிஞர் மீரா அவர்களின் அகரம் அச்சகம், அன்னம் புத்தக நிலையம் (தெற்கு சிவன் கோயில் தெரு, சிவகங்கைமறக்கமுடியாத முகவரி) சென்று இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, கிழக்கு பின்தொடரும், சூரியனைச்சுமப்பவர்கள் போன்ற நூல்களை வாங்கி வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அன்னத்தில் அகரம் அச்சகவெளியீடுகள் மட்டுமின்றி சிலிக்குயில் கும்பகோணம், புதுமைப்பதிப்பகம், என்சிபிஎச், சிபிஹெச் மற்றும் பிற பதிப்பகவெளியீடுகள்விற்கப்பட்டன. அங்குதான் நான் சூரியதீபனின் இரவுகள்உடையும் , அ.மார்க்ஸ் எழுதிய உதிர்க்க போவது எதனை?, எது கவிதை?, ரவிக்குமாரின் இதனால் யாவர்க்கும், தர்மபுரி எதிரொலிகள் , இந்திரனின் அன்னியன், பிணங்களைஎரித்தே வெளிச்சம், அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கோ.கேசவனின் பல நூல்கள், பூமணி , நாஞ்சில்நாடன்விழிப்பாஇதயவேந்தன், கந்தர்வன், கி.ராஜநாராயணன், அழகிரிசாமி என பல முக்கியமான எழுத்தாளர்களின்படைப்புகளை வாங்கி வாசிக்கும்வாய்ப்பைப்பெற்றேன் மேலும் நான் செல்லும் நேரங்களில் கவிஞர் மீரா இருந்தால் மிகுந்த ஈடுபாட்டோடுபலருடையஎழுத்துக்களையும் பற்றி எடுத்துக் கூறி இது நன்றாக இருக்கும் வாசி என்று கூறுவார்.
அப்போது அவர் ( மீரா ) இன்குலாப்பின் விரிவான முன்னுரையுடன்இலக்கிய விமர்சனம் ஒரு மார்க்சியப் பார்வை (1981) என்ற கோ.கேசவனின்நூலைவெளியிட்டிருந்தார் . அன்றைய காலகட்டத்தில் இன்குலாப், இளவேனில், கோ.கேசவன், அ.மார்க்ஸ், சூரியதீபன் போன்றோர் வேறுவேறு புரட்சிகரக்குழுக்களின் ஆதரவாளர்களாக இயங்கினாலும், அக்குழுக்கள் தங்களுக்கிடையே தீவிர பகைமையோடு முரண்பட்டுக் கிடந்தும்கூட இவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஓர் ஒற்றுமையுடன் இயங்கியதை நாம் பார்க்க முடிகிறது.
இன்குலாப் நூல்களுக்கு இளவேனில், சூரியதீபன், அக்னிபுத்திரன் போன்றோர் முன்னுரை எழுதி உள்ளனர். குறிப்பாக இன்குலாப் கவிதைகள் (1972) இளவேனில் முன்னுரை. கிழக்குப் பின்தொடரும் (1985) அக்னிபுத்திரன் முன்னுரை. அதுபோலவேஅ.மார்க்ஸ்_ன் எது கவிதை(1984) நூலுக்கு இன்குலாப். படைப்பாளி வாழ்க்கை இலக்கியம் (1986) நூலுக்கு சூரியதீபன். கோ.கேசவனின் கதைப்பாடல்களும் சமூகமும்(1985) நூலுக்கு அ.மார்க்ஸ்ம் முன்னுரை எழுதி உள்ளனர்.
இவர்களது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்ததன்வாயிலாக கல்லூரி நாட்களில் கவிதைகள் என்ற பெயரில் சில கிறுக்கல்களை முயற்சித்ததும் உண்டு. இவ்விடத்தில் மற்றொரு நிகழ்வினையும்குறிப்பிடவேண்டும் 1987–1988 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் எனது வகுப்பு நண்பன் ஒருவன் கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு நுண் கலை மன்றச் செயலாளராக வெற்றி பெற்றான். மன்றத்தின் ஆண்டு விழாவுக்கு சிறப்பு பேச்சாளரை அழைக்கும் பொறுப்பை அவன் என்னிடம் ஒப்படைத்தான். இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால் இன்குலாப்போன்றவர்களின் எழுத்தின் தாக்கத்தால் நான் மாணவர் தலைவர் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப்புறக்கணித்தும் இருந்தேன்.
இருப்பினும் கிடைத்த வாய்பைப் பயன் படுத்தும்நோக்குடன் நண்பனையும் மற்றும் சில மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அகரத்திற்குச் சென்றேன். கவிஞர் மீரா யாரை அழைப்பதாக முடிவு செய்து உள்ளீர்கள் என்று கேட்க, நான் இன்குலாப், அ.மார்க்ஸ், கோ.கேசவன் இவர்களில் ஒருவரை அழைக்க ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கூறினேன் . மீரா என்ன நினைத்தார் என்று தெரியவில்லை .
அப்போது இன்குலாப்சென்னையிலும், கேசவன் புதுக்கோட்டையிலும், அ.மார்க்ஸ்தஞ்சையிலும் பணி செய்து கொண்டு இருந்தனர் என நினைவு. வேறு யாரையாவது அழைக்கலாமா? நான் கூப்பிட்டால்வைரமுத்து கூட வருவார் என்று மீராகூறியவுடன் என் நண்பனுக்கு அதாவது நுண்கலைமன்றச்செயலாளருக்கு மிக மகிழ்ச்சி ஆகிவிட்டது. அவனுக்கு தெரிந்த ஒரே கவிஞர் வைரமுத்து மட்டும்தான், இன்குலாப் யார் என்றே தெரியாது. பிறகு நான் அவ்விழாஏற்பாட்டில் இருந்து ஒதுங்கிக்கொண்டேன். யாரோ ஒருவரை அழைத்து வந்து விழாவை நடத்தினர் நான் விழாவுக்கும் செல்லவில்லை.
மற்றொரு சம்பவம் இன்குலாப், இளவேனில் என்ற பெயர்களின் தொடர்ச்சியாக”இ”துவங்கும் பல பெயர்களை யோசித்து ஒன்றும் சரிப் படாமல் இறுதியாக இளஞ்சுடர் என்ற புனைப்பெயரில் சிறுகதை என ஒன்றை எழுதி இன்குலாப் ஆசிரியராக இருந்த புதிய மனிதன் இதழுக்கு அனுப்பி வைத்ததும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அது பிரசுரமாகவில்லை . இன்குலாப் அவர்களின் ஜானிஜான்கான் சாலை என்ற முகவரி மறக்க முடியாத ஒன்று. அம் முகவரிக்கு புதிய மனிதன் இதழ்கள்வேண்டி மணி ஆர்டரில் பணம் அனுப்பியதும்,அம் முகவரியில் இருந்து பணம் பெற்றுக்கொண்டமைக்காண ரசீதுகமருன்நிஷா என்ற கையொப்பத்துடன் வந்து சேர்ந்ததும் இப்போதும் நினைவிலிருக்கிறது.
மற்றொரு நிகழ்வு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. இன்குலாப் அவர்களுடைய துப்பாக்கிகள்பூ வாளிகள், யுகாக்கினி ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகளும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. புதிதாக அறிமுகமாகும்நண்பர்களுக்கு முதலில் வாசிக்க கொடுக்கும் நூல்களில்முதன்மையானவையாக அவை இருந்தன ஆனால் துப்பாக்கிகள்பூ வாளிகள் போலில்லாமல் யுகாக்னி பிறரிடம் மாறுபட்ட கண்ணோட்டத்தை ஏற்படுத்தி இருந்ததையும் அறியும் வாய்ப்பும். ஏற்பட்டது எங்கள் ஊரில் பிள்ளைமார் சாதி சங்கத்தைச் சேர்ந்த இரு முதியவர்கள் எங்களிடம் வந்து உங்களிடம் இன்குலாப்என்பவர் எழுதிய யுகாக்கினி என்னும் புத்தகம் இருக்கிறதாமே அதை வாசிக்கத் தரமுடியுமா என்று கேட்டனர்.
அவர்களில் ஒருவர் அரசுப் பணியில் இருந்தாலும் அவர்கள் இருவரும் ஆர்எஸ்எஸ் அபிமானிகள் ஆகவும் இருந்தனர். யுகாக்கினி யை ஏன் கேட்கின்றனர் என்று முதலில் புரியவில்லை, பிறகுதான் தெரிந்தது யுகாக்கினியில்இன்குலாப் இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கக்கூடிய வர்க்கசாதிய ஆணாதிக்கப் போக்குகளை மிகக் கடுமையாகச் சாடியும், தனது சுய அனுபவங்களின்ஊடாக விவரித்து எழுதி உள்ளதை தங்களது இந்து மதத்தை விட இஸ்லாம் உயர்ந்தது இல்லை என்று கூறுவதற்கு இந்த நூல் சாட்சியாகப் பயன்படும் என்ற நோக்கத்தின் காரணமாகவே யுகாக்கினியை எங்களிடம் பெற்று வாசிக்க விரும்பி உள்ளனர் என்பதும் தெரிந்தது. அவர்களுக்கு அந்நூலைகொடுக்கவில்லை.
அன்று சிறுசிறு நூல்களாக வெளி வந்த இன்குலாப் கவிதைகள், வெள்ளை இருட்டு, கிழக்கு பின்தொடரும், சூரியனைசுமப்பவர்கள், யாருடைய கண்களால், துப்பாக்கிகள் பூவாளிகள், யுகாக்கினி போன்றவற்றில் இன்று ஒன்று கூட கையில் இல்லாமல் போனதற்கு காரணம் பிறருக்கு அதிகமும் வாசிக்க கொடுத்து திரும்பப் பெறாமல் தொலைத்த நூல்கள் தோழர் இன்குலாப் எழுதியவையே ஆகும். அந்த அளவிற்கு மிக எளிமையாக வாசித்துப் புரிந்துகொள்ள கூடியவையாகவும் அதேசமயம் புதிய சமூக அரசியல் கண்ணோட்டத்தை ஏற்படுத்த கூடியவையாகவும்வாசிப்பவர்களிடம் இருக்கும் பிற்போக்கு வர்க்க , சாதிய , ஆணாதிக்க கழிசடைத் தனங்களின் மீது சவுக்கடி கொடுத்து அவற்றை நீக்க கூடியவையாகவும் அவரது எழுத்துக்கள்அமைந்திருந்தன.
எடுத்துக்காட்டாக முதல் மரியாதை திரைப்படத்தை ஆண்கள் எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்த போதுஇன்குலாப் மட்டும் ‘யாருக்கு முதல் மரியாதை’ என்ற தலைப்பில் (இதழ் எது என நினைவிலில்லை) பெண்ணிய நோக்கில் கட்டுரை எழுதி வில்லியாகச் சித்தரிக்கப்பட்ட (வடிவுக்கரசி ) பெண்ணின் தரப்பு நியாயங்களைப் பேசியதோடு மலைச்சாமி (சிவாஜி =கதாநாயகன் ) தவறுகளைத் தோலுரித்துக்காட்டினார் . விமர்சனத்தை வாசித்த பிறகு தான் சினிமாவை யாருடைய கண்களால் பார்க்கவேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது . கூடவே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் பார்வையில் அமைந்த சினிமா விமர்சனங்களையும் தொடர்ந்த எழுத முடிந்தது. தோழர் இன்குலாப்பின்அடியொட்டியே பின்னாளில் அழகி திரைப்படத்திற்கு விமர்சனத்தை எழுதினேன்.
அடுத்து நாங்கள் வாங்கிய முதல் புரட்சிகரநாட்காட்டிஇன்குலாப் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய புதிய மனிதன் இதழ் வெளியிட்ட நாட்காட்டி 1986 ஆகும் நாட்காட்டியில் கை, கால்களில் பூட்டப்பட்ட தளைகளை உடைத்துக்கொண்டு ஒரு மனிதன் எழுந்து நிற்பது போன்ற அழகிய ஓவியமும் அதற்கு ஏற்ப இன்குலாப் அவர்களின்,
தொடங்கும் நாளின்
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்க்கையை நிரப்பு
போராடி
சேர்ந்து
விடுதலை வெளியில்
மானுடம் தொடரும்
காலம் விரியும்
தூரம் வரையும்
என்ற கவிதை வரிகளும் இடம் பெற்றிருந்தது மறக்கமுடியாத ஒன்றாக நினைவில் பதிந்து போய் விட்டது.
அதைப் போலவே அவரது கவிதைகளில் ஸ்ரீ ராஜ ராஜேச்சுவரியம், கண்மணி ராஜம், நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள், போன்றவை எனது பதின்மப் பருவத்தில்பசுமரத்து ஆணி போல் பதிந்து போனவையாகும். அவரது ஸ்ரீ ராஜ ராஜேச்சுவரியமும், கண்மணி ராஜமும் தான் ராஜ ராஜசோழனை தமிழ் தேசியத்தின்முப்பாட்டனாகக் கொண்டாடும்அபத்தங்களுக்கும், பெருமிதங்களுக்கும் எதிராக மன்னராட்சி குறித்த தெளிவை இன்றும் வழங்கி கொண்டிருக்கக்கூடிய கவிதைகள் ஆகும். ஓர் ஆய்வறிஞன் செய்யக் கூடிய பணியை இன்குலாப்பின் கவிதைகள் மிக எளிய முறையில் செய்து விடுகின்றன.
காலனி ஆதிக்கத் தொழுநோய் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்கு
கால்கோள் விழாச் செய்த காமுகன்
என்ற அவரது வரிகள் ராஜராஜன் கல்லறையின் மீது பொறிக்கப்பட்ட அடைமொழிகளைப் போல் நம் நெஞ்சங்களில் கல்வெட்டாய்ப் படிந்துகிடக்கிறது.
இதன் தாக்கத்திலேயே பின்னாளில் எனது கட்டுரை ஒன்றிற்கு ’சாதியாதிக்கத் திருவுருக்களுக்குச் சூட்டப்படும் தேசவிடுதலை மகுடம்’ என்று தலைப்பிட்டேன்.
அதேபோல் ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப நாட்களில் அவர் எழுதிய ’கரைகளில் இன்னும் நாங்கள்’ என்ற கவிதையில்
நமது அவசரத்தில்
அட்டைகளிடம் போய்
ரத்த தானம் கேட்க வேண்டாம்,
அதற்காகப் பூதகியைப்போய்
பாலூட்டச்சொல்லாதீர்கள்.
என்ற வரிகள் ஈழப்பிரச்சனையில் இந்தியத் தலையீடு பற்றிய ஒரு தெளிவை வழங்கியிருந்தார்.
அடுத்து 1989 இல் கல்லூரி முடித்து சிவகங்கையிலிருந்து வந்துவிட்ட பிறகும் கூட வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிவகங்கை அன்னம் புத்தக நிலையத்திற்குச் சென்று நூல்கள் வாங்குவது தொடர்ந்தது, அவ்வாறு 1992ல் வாங்கியதுதான் இன்குலாப் அவர்களது சிறுகதைத் தொகுப்பு ’பாலையில் ஒரு சுனை’ இத்தொகுப்பிற்கு கவிஞர் மீரா விரிவான முன்னுரை ஒன்றை வழங்கியிருந்தார் . பாலையில் ஒரு சுனை எனக்கு மிகவும் பிடித்த ஒரு நூல் எங்களது மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பதிவு செய்த நூல்.
கடற்கரை நிலம் சார்ந்த மக்களைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் 1990களில் மிகக்குறைவு, நான் ஏற்கனவே ஜெகாதா எழுதிய சமுத்திரகுமாரர்கள் என்ற நூலை மட்டுமே வாசித்திருந்தேன், அது சங்கு குளிக்கும் தொழிலாளர்களது வாழ்க்கையைப் பேசிய குறுநாவல். பாலையில் ஒரு சுனை ராமநாதபுரம் மாவட்டக்கடலோர கிராம மக்களின் வாழ்க்கையை, மன நிலையைப் படம் பிடித்துக் காட்டிய இலக்கியமாகும் வேதாளை, கீழக்கரை, திருப்பாலைக்குடி, தங்கச்சிமடம், ராமேசுவரம் போன்ற மீனவக் கிராமங்களையும் அதன் குருத்து மணலையும் தனது எழுத்தில்இன்குலாப் பதிவு செய்திருந்தது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமாக்கியது என்றே கூறவேண்டும்.
தொகுப்பில் உள்ள `செடிக்கும் கொஞ்சம் பூக்கள்’ சிறுகதையை என்னால் மறக்கவே முடியாது ஒட்டுமொத்த தமிழ் இலக்கியப்பரப்பில் தங்கச்சிமடம் என்ற சிறு மீனவக்கிராமத்தையும் மல்லிகைப் பதிகங்களையும் பற்றி இன்குலாப் மட்டுமே பதிவு செய்துள்ளார். செடிக்கும் கொஞ்சம் பூக்களை விட்டு வைக்கும் ராவியத்தும், ஆயிஷாவும் இன்னும் என் மனதில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்களது வாழ்க்கையைப் பற்றிய நாவல்களை இன்குலாப் எழுதி இருந்தால் அது மிகப்பெரிய சமூக அரசியல் ஆய்வாகவும், ஆவணமாகவும் இருந்திருக்கக் கூடும், ஆனால் அவர் நாவல் எனும் வடிவத்தை கைக்கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் போன்ற அனைத்தையும் கைக்கொண்ட அவர் நாவலை முயற்சித்துப் பார்க்காதது ஏன் எனத் தெரியவில்லை. அது நமக்கு பேரிழப்பாகும்.
தொடர்ந்து அவரது கவிதை கட்டுரையை வாசித்து வந்த போதும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை, எனது தமிழ் சினிமாவின் நிழல் அரசியலும் நிஜ அரசியலும் (2008) நூலுக்கு தோழர் இன்குலாப் அவர்களிடம் முன்னுரை வாங்க விரும்பினேன். நூலை வெளியிட்ட தோழமை பதிப்பக பூபதியும் கவிஞர் இன்குலாப் வீட்டின் அருகில் தான் குடியிருப்பதாகவும் முன்னுரை வாங்கி விடலாம் என்றும் கூறினாலும் அது முடியாமல் போனது.
ஆனால் இரண்டாயிரத்துக்குப் பிறகு இன்குலாப் அவர்களின் கவனம் ஈழ விடுதலை, தமிழ்த் தேசியம் குறித்து அதிகமாகத் திரும்பியதும், நான் அம்பேத்கர் பெரியார் என திசை மாறியதும் இரண்டாயிரத்துக்குப் பிறகான அவரது படைப்புகளை வாசிக்கும் விருப்பம் எனக்கு குறைந்து போயிற்று ஆனாலும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இன்குலாப் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நீண்ட காலத்திற்குப் பிறகு போதி இலக்கியச் சந்திப்பு (13/7/2008) இரண்டாம் நிகழ்வில் சிறப்புரையாற்ற பள்ளத்தூருக்கு பேராசிரியர், அரசமுருகுபாண்டியன் அவர்களது இல்லத்திற்கு தோழர் இன்குலாப்வந்தபோதுதான் கிட்டியது. அன்றைய நிகழ்வில் கவிஞர் இன்குலாப் பேசியது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிரித்த முகமும் எளிய சொற்களைக்கொண்டும் அதேநேரம் வீரியமான கருத்துகள் கொண்டதுமான மெல்லிய அந்த பேச்சு முறை அவரது பொய்மையற்ற, போலித்தனமற்ற உள்ளத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.
நிகழ்வு முடிந்து அன்று இரவு கவிஞரை சென்னைக்கு வழியனுப்ப காரைக்குடி ரயில் நிலையத்திற்கு, பேராசிரியர் அரசு முருகுபாண்டியன், முனைவர் தெ.வெற்றிச்செல்வன், சண்முகநாதன் ஆகியோர் உடன் போதி இலக்கியச்சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் நானும் உடன் சென்று இருந்தேன். இரவு 12 மணி ரயில் வரும் வரை கவிஞர் இன்குலாப் அவர்களுடன் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
அவ்வேளை அவர் ஏதோ சில மாத்திரைகளையும் விழுங்கினார், ஏற்கனவே இருதய அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். நானும் முருகுபாண்டியனும் மீண்டும் ஒருமுறை இன்குலாப் அவர்களை போதி நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என பலமுறை எங்களுக்குள் பேசிக் கொண்டோம். ஆனால் அது ஈடேறவில்லை.
இன்று கவிஞர் இன்குலாப் நம்மிடையே இல்லை, ஆனால் இன்குலாப் அவர்களின் எழுத்துக்களும் அவரை நேரில் பார்த்த சில நினைவுகளும் மட்டுமே மிச்சமாக இருக்கின்றன. என்னைப்போன்ற அதிகமாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பற்ற, தூரத்தில் நின்று, அவரது எழுத்துக்களோடும் சிந்தனைகளோடும் மட்டுமே நெருங்கி, எழுதவும்கற்றுக் கொண்ட,அவரது அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அவரும், அவருடைய எழுத்துக்களைவிட்டுச்சென்றுள்ளார். அதைப்பின் தொடர்வதே அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.