நவம்பர் ஏன் 9-வது மாதமாக இல்லை?
நவம்பர் (November) என்பது, இலத்தின் மொழியில் 9-என்னும் எண்ணைக் குறிப்பதாகும் (Latin novem meaning ‘nine’) . எனில், 9-வது மாதமாக இரூக்கவேண்டிய நவம்பர் எப்படி 11-வது மாதம் ஆயிற்று?
செப்டம்பர், அக்டோபர், மற்றும் டிசம்பர் மாதங்கள், ரோமன் எண்களில், முறையே ஏழு, எட்டு மற்றும் பத்து என்னும் மாதங்களைக் குறிப்பனவாகும்.
ஜூலை (Quintilis) மற்றும் ஆகஸ்ட் (Sextilis) ஐந்து மற்றும் ஆறாவது மாதங்களைக் குறிப்பன. இந்த இரண்டு மாதங்களும், பின்னால் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில், அவர்களது பெயர்களால் குறிப்பிடப்பட்டன.
இந்த மாதங்கள் எல்லாமே, இரண்டு மாதங்கள், வரிசை தப்பி இருப்பது ஏன் என்னும் கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கான விடையாக இரண்டு கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
ரோமன் நாட்காட்டியில் (Roman Calendar) மொத்தம் 10 மாதங்களே இருந்துருக்கின்றன. ஒரு காலகட்டத்தில், நாட்காட்டியின் துவக்கத்தில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக மாற்றினார்கள். அதன் காரணமாக மற்ற அனைத்து மாதங்களும் இரண்டு மாதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் அதிகாரத்தில் இருந்த மன்னர்களின் தலையீடுகளால், ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-க்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இத்தாலியின் டூரின் நகரில் அமைந்திருக்கும் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமேலியா கரோலினா ஸ்பரவிக்னா (Amelia Carolina Sparavigna) என்னும் பெண் இயற்பியலாளர். கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் வானில் ஏற்படும் நிகழ்வுகளை எப்படி அறிந்திருந்தார்கள் என்று ஆய்வு செய்தார் (archaeo-astronomical studies). ஓராண்டிற்கு 12 மாதங்கள் இருக்கவேண்டிய இடத்தில் 10 மாதங்கள் என்றால், மாதங்களில் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அப்படியெல்லாம் இருந்திருக்கவில்லை என்பது கரோலினா-வின் வியத்தகுக் கண்டுபிடிப்பு.
இப்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி என்று அழைக்கப்படும் மாதங்களின் நாட்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லையாம். காரணம், அந்த இரண்டு மாதங்களில் வேளாண்மை எதுவும் நடந்ததில்லை. பருவநிலைகளைக் கவனித்து, கணித்து, வேளாண்மையை மையமாக வைத்து, ரோமன் நாட்காட்டி (Roman Calendar) விவசாயிகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. குளிர்காலத்தில் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மார்ச் (Maritus) மாதத்தில் ஆண்டு துவங்கியிருக்கிறது.
எனில், ரோமன் அறிஞர்கள் ஏன் இரண்டு மாதங்களைப் புகுத்தினார்கள் என்பது ஒரு கேள்வி. அப்படி புகுத்திய பிறகு, மற்ற மாதங்களின் பெயர்கள் தவறாகப் பொருள்கொண்டதைப்பற்றி ஏன் கவலைகொள்ளவில்லை என்பது மற்றொரு கேள்வி.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களில், சில மன்னர்கள் தங்களது தந்தையின் பெயரை மாதங்களுக்கு மாற்றி வைத்திருக்கின்றனர். கலிகுலா (Caligula) என்னும் மன்னர்மன்னன், செப்டம்பர் என்பதை ‘ ஜெர்மானிகஸ்’ (Germanicus) என்று தனது தந்தையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் மாற்றியமைக்க முயற்சித்திருக்கிறார். போலவே, டொமிசியன் (Domitian) எனும் மன்னர்மன்னன் அக்டோபர் என்பதை டொமிசியனஸ் (Domitianus) என்று தனது பெயராலேயே மாற்றியமைக்க முயன்றிருக்கிறார். ஆனால், இந்த மாற்றங்கள் நீடிக்கவில்லை. காரணம், ரோம் மக்கள் மிகவும் பழமைவாதிகளாக இருந்தார்களென்றும், மாற்றம் என்பதற்காகவே மாற்றத்தை ஏற்காதவர்கள் என்றும் இயற்பியலாளர் கரோலினா கூறுகிறார்..
ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் சேர்க்கப்பட்ட பிறகும், மற்ற மாதங்களின் பெயர்கள் வரிசைப்படி ஏன் மாற்றியமைக்கப்படவில்லை என்பதற்கு இது ஒரு பகுதி விளக்கம் எனலாம்
இதுபோன்ற நிகழ்வுகள் நம் சமகாலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சிக்காலத்தில், , ‘அன்னை சத்யா போக்குவரத்துக் கழகம்’ என்று அவரது அன்னையின் பெயரை (சத்ய பாமா) வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், தனது பெயரைப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வைக்கத் தயங்கவில்லை..
கருணாநிதி முதல்வராக இருந்த 1971-76 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நெல்லுக்கு, தனது பெயரையே சுருக்கி ‘கருணா’ என்று பெயரிட்டார். அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பாசிப்பயறு (பச்சைப்பயறு) வகை ஒன்றிற்கு, ‘அஞ்சுகம் பாசிப்பயறு’ என்று அவரது அம்மா பெயரையே வைத்தார். அதுமட்டுமா, கலப்புத் திருமண உதவித் திட்டத்திற்கும், ‘அஞ்சுகம் கலப்புத் திருமணத் திட்டம்’ என்றே பெயர்வைத்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அதனை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமணத் திட்டம்’ என்று பெயரை மாற்றினார்.
பல அரசுக் கல்லூரிகளுக்கு, தனது ஆட்சிக்காலத்தில், கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரி என்று பெயர்வைத்தார். அதற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். உயிரோடு இருப்பவர்கள் பெயரை, அரசுக் கட்டிடங்களுக்கு வைக்கக்கூடாது என்று ஒரு அரசு ஆணையைப் பிறப்பித்தார். அதனால், கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரிகள் அனைத்தும் ‘அரசுக் கல்லூரிகள்’ என்று மாறின.
மக்களாட்சி நடைபெறும் நாட்டில், காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களால் இப்படி பெயர்கள் வைக்கப்படுவதும், மாற்றியமைக்கப்படுவதும் நிகழ்கிறது என்றால், மன்னராட்சிக் காலங்களைப்பற்றி சொல்லவே தேவையில்லைதானே?
டுர்காம் பலகலைக்கழகத்தில் (Durham University, UK) பழம்-வரலாற்றுத்துறையில் (Classics and Ancient History) பேராசிரியராக இருக்கும் பீட்டர் ஹெஸ்லின் (Peter Heslin) என்பவரது பார்வை வேறாக உள்ளது. ரோமானியர்கள், தங்களது முன்னோர் செய்த தவறை மறைக்க இப்படி 10 மாதங்கள் என்னும் கருதுகோளை முன்வைப்பதாக ஹெஸ்லின் கூறுகிறார்.
ஆரம்பம் முதலே 12 மாதங்கள் இருந்தன. புத்தாண்டு மார்ச் மாதம் கொண்டாடப்பட்டிருக்கிறது. மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஜனவரி, ஆண்டின் தொடக்கமாக இருந்திருக்கிறது என்று ஹெஸ்லின் கூறுகிறார். இப்போதும்கூட பல நாடுகளில் இந்த நடைமுறை இருக்கிறது அல்லவா? புத்தாண்டு ஜனவரி என்றால் வரி ஆண்டுத் தொடக்கம் மார்ச் ஆகத்தானே இருக்கிறது.
பொது ஆண்டு 153-இல் (153 BCE) ரோம் அதிகாரவர்க்கம் ஜனவரியை ஆண்டின் தொடக்கமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் ரோம் மக்கள் மார்ச் மாதத்தையே ஆண்டின் தொடக்கமாக கடைபிடித்திருக்கின்றனர். காலப்போக்கில், மார்ச் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று பீட்டர் ஹெஸ்லின் கருதுகிறார். இவை எல்லாமே, மாதங்களின் பெயர்களுக்கும் ஆண்டில் அவற்றின் இடத்திற்கும் இருக்கும் தொடர்பற்றத் தன்மைக்கான கருதுகோள்களே (speculations) என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
நாள், வாரம், மாதம், ஆண்டு:
நாள்:
பூமி, அதன் சுழற்சி அச்சில் (spin axis), ஒருமுறைத் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம்.
ஆண்டு:
பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம். 365.26 நாட்கள். அதாவது 365 தற்சுழற்சிகளோடு, 0.26 அளவு கூடுதலாகச் சுற்றுகிறது. ஓராண்டிற்கு 365 நாட்கள் என்று முழுமைப்படுத்திவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை (4X1/4=1) ஒரு நாளை பிப்ரவரி மாதத்தில் கூட்டிவிடுகிறார்கள். அந்த ஆண்டு லீப் ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. 4-ஆல் வகுக்கும்போது, மிச்சம் வராமல் இருந்தால் அது லீப் ஆண்டு. 2020 லீப் ஆண்டு. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதம் 29 நாட்கள் இருக்கும்.
மாதம்:
பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றிவரும் காலத்தில், சந்திரன் பூமியை 12 முறை சுற்றிவிடுகிறது. எனவேதான், ஓராண்டிற்கு 12 மாதங்கள்.
வாரம்:
ஆண்டு, மாதம், நாள் ஆகியவை தெளிவான வானியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், வாரம் என்பதை அப்படிச் சொல்லிவிட முடியாது.
சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்ற ஆகும் காலத்தில் 23 விழுக்காடு ஒரு வாரம் ஆகிறது.
ஒரு மாதத்திற்கு 4 வாரங்கள் என்றும், ஒரு வாரத்திற்கு 7 நாட்கள் என்றும், சீனா, இந்தியா, மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்துவருகிறது. எனவே அந்த நடைமுறையே இன்றும் தொடர்கிறது.
பொது ஆண்டிற்கு 2300 ஆண்டுகள் முன்பு (2300 BCE) , தொலை நோக்கிகள் கண்டுபிடிக்கப்படாத அன்றைய காலகட்டத்தில், வெறும் கண்ணுக்குத் தெரிந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாளன், சனி ஆகிய 5 கோள்களோடு சூரியனையும், சந்திரனையும் சேர்த்து வாரத்திற்கு 7 நாட்கள் என்று பாபிலோனியர்கள் குறிப்பிட்டார்கள். அதுவே இன்றும் தொடர்கிறது.
மணி, நிமிடம், வினாடி:
பழங்கால எகிப்தியர்கள்தான், ஒரு நாளை 24 மணிக்கூறுகளாகப் பிரித்தவர்கள். சூரியன் கிழக்கே எழுவது முதல், மேற்கில் வீழ்வது வரையிலான பொழுதை 12 மணி நேரமாகவும், இரவுப்பொழுதை 12 மணி நேரமாகவும் பிரித்தார்கள்.
எந்த ஒரு வானியல் நிகழ்வையும் அடிப்படையாக வைத்து, 1 மணிக்கு 60 நிமிடங்கள் என்றும், 1 நிமிடத்திற்கு 60 வினாடிகள் என்றும் பிரிக்கப்படவில்லை.
60 என்னும் எண், 2,3,4,5,6,10,12, 15,20,30 ஆகிய பல சிறு எண்களால் மிச்சமில்லாமல் வகுபடக்கூடிய சிறப்புவாய்தது. அப்படிப்பட்ட கணித எளிமைகாரணமாக 60 பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஆதிகாலம்தொட்டே, நாட்காட்டி என்பது சீனா, இந்தியா, எகிப்து, கிரேக்கம், ரோம், போன்ற பல நாடுகளிலும் வானியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றின் நகர்வுகளை, தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் நிலைகளைப் பதிவுசெய்து, துல்லியமாக உருவாக்கப்பட்ட மாயன் நாட்காட்டி (Calendar) வரலாற்று அறிஞர்களால் போற்றப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் Stonehenge மற்றும் அயர்லாந்து நாட்டின் Newgrange ஆகிய இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்கள், புதிய கற்காலம் முடிவுக்கு வந்து வெண்கலக் காலம்( Bronze Age) ஆரம்பித்த காலகட்டமான கி.மு.3000 த்தில் உருவாக்கப்பட்டவையாகக் கணிக்கப்படுகின்றன. Stonehenge இடுகாடாகவும் (Burriyal ground), Newgrange சமயச் சடங்குகள் நடைபெற்ற இடமாகவும் இருக்கக்கூடும் என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்
பூமியின் வடபாதியின் ‘குளிர் துவங்கும் நாள் ’(Winter Solstice). அன்று காலை சூரிய உதயத்தை நோக்கி அயர்லாந்து நாட்டின் Newgrange ம், அதே நாளில் சூரியன் மறைவை நோக்கி இங்கிலாந்து நாட்டின் Stonehenge ம் அமைக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் இரண்டு நினைவுச் சின்னங்களின் வாயில்களும் சூரியனின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி அச்சுடன் ஒரே நேர்கோடாக அமைக்கப்பட்டுள்ளன என்பது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன.