பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றதெப்படி?
பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதளக் கூட்டணியின் வெற்றியானது பெரும்பாலான ஜனநாயக ஆற்றல்களின் எதிர்பார்ப்பிற்கு மாறான ஏமாற்றமளிக்கிற முடிவாக வந்துவிட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் பாஜக மேற்கொண்ட கண்மூடித்தனமான ஊரடங்குக் கெடுபிடிகள், பொருளாதார வீழ்ச்சி, சொந்த ஊர் நோக்கிய ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களின் துயர்மிகு நடைபயணம், வேளாண் திருத்தச் சட்டங்கள், தொழிலாளர் திருத்தச் சட்டங்கள் போன்ற காரணிகள் பாஜகவிற்கு எதிரான எதிர்ப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கியிருக்கும் என ஜனநாயக சக்திகள் எதிர்பார்த்தனர். ஆனால் எண்ணியதற்கு மாறான முடிவாக, போட்டியிட்ட 110 தொகுதிகளில் 74 தொகுதிகளை பாஜக கைப்பற்றி, பிகார் மாநிலத்தில் பெரும் கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிரான வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனை தேர்தலில் பிரதிபளிக்குமென எண்ணியது மட்டும் ஓரளவிற்கு முடிவுகளோடு ஒத்துப் போகிறது.
1.தேர்தல் முடிவுகள்
நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வானது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுவிட்டது. பிகார் மாநில அரசியலில் சுமார் கால் நூற்றாண்டுகாலம் செல்வாக்கு செலுத்திய நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இத்தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 2015 சட்டமன்றத் தேர்தலில் 71 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிதிஷின் ஐக்கிய ஜனதாதளக் கட்சியானது, இம்முறை போட்டியிட்ட 115 தொகுதிகளில் வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தற்போது பாஜகவின் தயவால் மட்டுமே நிதிஷ் குமார் முதல்வராகிறார். அதுவும் எத்தனை நாட்களுக்கு எனக் கூற முடியாது. பிகாரில் 18 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக முதல்வாராக இருந்த S.K சின்ஹாவின் சாதனையை இம்முறை நிதிஷ் குமாரால் முறியடிக்க முடியுமா என்பது பாஜக கையிலே உள்ளது! அமைச்சரவையை முடிவு செய்வதிலிருந்து அரசின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது வரைக்கும் பிகாரில் பாஜகவின் கைப்பாவையாக ஐக்கிய ஜனதாதளம் மாற்றப்படும் என்பதை நிதிஷ் குமாரே அறிவார்!
ஆகவே இத்தேர்தல் வெற்றியானது தேசிய முற்போக்கு கூட்டணியின் வெற்றியாக இல்லாமல் பாஜகவின் மிகப்பெரும் வெற்றியாக இருக்கிறது.
மற்றொருபுறம் காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம்-இடதுசாரிக் கட்சிகளின் “மகா கட்பந்தன்’ கூட்டணியின் தோல்வி, காங்கிரசின் தோல்வியாக உள்ளது. காங்கரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக்கு தலைமை வகித்த லாலுவின் மகன் தேஜஸ்வியின் ராஷ்ட்ரியா ஜனதா தளம் போட்டியிட்ட 144 தொகுதிகளில் 75 இல் வெற்றி பெற்று தேர்தலில் அதிக விழுக்காடு ஒட்டு பெற்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. போலவே இடதுசாரிக் கட்சிகள் (CPI,CPI(M),CPI-ML) போட்டியிட்ட 29 தொகுதிகளில் 16-ல் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2. “மகா கட்பந்தன்” கூட்டணி தோல்விக்கு முன்வைக்கப்படும் வாதங்கள்
இத்தேர்தலில் “மகா கட்பந்தன்” கூட்டணியின் தோல்விக்கு காரணமாக முன்வைக்கப்படுகிற காரணிகள் குறித்த வாதத்தை முதலில் பார்ப்போம்.
i) ஒவைஸி காரணி
“மகா கட்பந்தன்” கூட்டணியின் தோல்விக்கு அசாதுதீன் ஒவைஸியின் அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் மீது மொத்த பழி பாவமும் சுமத்தப்படுவது அரசியல் விமர்சகர்களின் பேஷனாகிவிட்டது. மகா கட்பந்தன் கூட்டணியின் ஓட்டைப் பிரித்து பாஜகவின் வெற்றிக்கு ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி துணை போய்விட்டதாக காங்கரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே விமர்சிக்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பாகவே இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சீமாஞ்சல் பகுதியிலுள்ள 24 தொகுதிகள், தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிற தொகுதிகளாக இருக்கலாம் எனப் பேசப்பட்டது. இப்பகுதியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சியானது, பகுதி மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உத்தரவாதம் உள்ளிட்ட சமூகப் பொருளாதார முன்னேற்ற உறுதிமொழிகளை வழங்கி தொகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது. இதன் விளைவாக, சீமாஞ்சலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிட்ட 14 தொகுதிகளில் 5 இல் வென்றிருக்கிறது. இதில் நான்கு தொகுதிகள் 2015 தேர்தலில் மகா கட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள்!
ஒவைஸியைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியின் போலியான மதச்சார்பின்மையை தொடக்கம் தொட்டே காட்டமாக விமர்சனம் செய்து வந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம், ஊபா ஆள்தூக்கிச் சட்டத்தின் மூலமாக செயல்பாட்டாளர்களை கைது செய்தது போன்ற பாஜகவின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளில் காங்கிரசின் நீர்த்துப்போன நிலைப்பாடு குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். அதோடு “மகா கட்பந்தன்” கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூட உதாசீனப் படுத்தப்பட்ட்டார். இதுவரை பெரியண்ணன் மனோபாவத்தில் அணுகிய மகா கட்பந்தன் கூட்டணிக் கட்சிகளை தற்போதைய தனது தேர்தல் வெற்றியின் மூலமாக ஒவைஸி கவனிக்க வைத்துள்ளார். ஒவைசி கூறுவது போல “காங்கரஸ் தங்களது விரக்தியை மறைக்க ஒவைசியை குறை கூறுகிறார்கள்” என்பதே உண்மை!
ii) சிராக் பஸ்வான் காரணி
மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியானது, இத்தேர்தலில் 137 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து லோக் ஜன சக்தி வெளியேறினாலும், சிராக் பஸ்வான் தன்னை மோடியின் ஹனுமான் என்றும் தாங்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக மட்டுமே போட்டியிடுகிறோம் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவை பலப்படுத்த கவனம் செலுத்துவோம் என அறிவித்துக் கொள்கிறார். மேலும் முதல்வராக நிதிஷ் குமார் வருவதை எதிர்ப்போம் எனவும் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட இடங்களில் மட்டுமே லோக் ஜன சக்தி வேட்பாளரை நிறுத்தியது. இதன் மூலமாக நிதிஷை பலவீனப்படுத்த லோக் ஜன சக்தியை பாஜக பயன்படுத்துகிறது என்ற விமர்சனம் எழுந்தது. உண்மையிலேயே பாஜகவின் “பி” அணி லோக் ஜன சக்திதான் என நிதிஷ் குமாரே இப்போது அறிந்திருப்பார்! பிகாரின் சமூக நீதி அரசியல் மரபில் தனது இந்துத்துவ அரசியல் ஊடுருவலை மேற்கொள்ள லோக் ஜன சக்தி எனும் திரை பாஜகவிற்கு அவசியமாகிறது.
முன்னதாக 90 களின் தொடக்கத்தில் சங்பரிவாரின் ராம் ஜென்ம பூமி இயக்கத்தின் போது அயோத்திக்குள் அத்வானியை நுழையவிடாமல் பிகாரின் எல்லையில் வைத்து (சமஸ்திபூரில்) அத்வானியை லாலு பிரசாத் யாதவ் கைது செய்தார். நாட்டைக் காக்கவும் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை காக்கவும் அத்வானியை அப்போது கைது செய்ததாக பின்பு லாலு தெரிவித்தார். பிகாரின் தற்போதைய முக்கிய மூன்று மாநிலக் கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜன சக்தி ஆகிய மூன்று கட்சிகளுமே ஜனதாதளக் கட்சியிலிருந்து பிளவுபட்டுத் தோன்றியவை. இக்கட்சியின் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய மூவருமே லோஹியாவின் சமூக நீதி பாரம்பரிய பின்புலத்திலும், ஜெயப்பிரகாஷ் நாராயணின் எமெர்ஜென்சிக்கு எதிரான (ஜே பி இயக்கம்) போராட்டப் பின்புலத்திலும் அரசியல் அரங்கிற்கு வந்தவர்கள். இந்தியாவில் அரசுப் பணியில் பிறப்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்த ஆண்டு முதலாக பிகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதிக் கோரிக்கை பிகாரின் அரசியல் தலைமைப் பாத்திரத்தில் தீர்மானகரமான பங்கு வகித்து வருகிறது.
பிகாரில் ஆர் எஸ் எஸ் – பாஜக தனது இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் பெயரிலான அரசியல் தடையாக உள்ளது. இந்நிலையிலேதான் பதவி அதிகாரத்திற்காக அவ்வப்போது இடம் மாறுகிற நிதிஷ் குமாரையும், மறைந்த ராம் விலாஸ் பஸ்வானையும் பாஜக பயன்படுத்தி வந்தது. இதற்கிடையேதான் “மகா தலித்” எனும் ஒற்றுமை கோஷ முழக்கத்தை நிதிஷ் கையிலெடுத்து தலித் ஒற்றுமை மாநாடு, பட்டியலின சிறப்புத் திட்டங்கள் என நகர்கிறார். நிதிஷின் “மகா தலித்” உக்தியில் பஸ்வான் தனிமைப்படுத்தப்பட்டு பட்டியலின மக்களின் ஒட்டு வங்கியை நிதிஷிடம் இழக்கிறார். தொடர்ச்சியாக மூன்று தேர்தலில் நிதிஷ் வெற்றி பெறுவதற்கு இந்த உக்தி முக்கிய காரணியாகியது. இறுதியில் பஸ்வான் சமூகத்தின் 4 விழுக்காட்டு ஒட்டு வங்கி பலத்தோடு ராம் விலாஸ் பஸ்வானின் கட்சி சுருக்கப்பட்டது. இதனால்தான் தலித் சகோதரர்களுக்கு இடையே நிதிஷ் குமார் பிளவு ஏற்படுத்துவதாக மறைந்த ராம் விலாஸ் பஸ்வானும் தற்போது அவரது மகன் சிராக் பஸ்வானும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்குப் பிறகான காலத்தில் அவரது கட்சி பிழைப்பதற்கு பாஜகவை சார்ந்திருக்கிற முடிவை அவரது மகன் சிராக் தேர்ந்துகொண்டுள்ளது வெளிப்படை. அதோடு சில பரிசோதனைகளை இத்தேர்தலில் சிராக் மேற்கொண்டார்.
முன்னதாக உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மேற்கொண்ட உக்தியை பிகாரில் சிராக் மேற்கொள்கிறார். இத்தேர்தலில் பாஜகவில் சீட்டு கிடைக்காமல் முரண்பட்டு வெளியேறிய 25 உயர் சாதி இந்துக்களை தனது கட்சியில் உள்ளிளுத்துக்கொண்டு மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களாக உயர் சாதி இந்துக்களை தனது கட்சி வேட்பாளாராக சிராக் நிறுத்தினார். பாஜகவிலும் இரு ஜனதா கட்சியிலும் சீட்டு கிடைக்காத உயர் சாதி இந்துக்களின் ஓட்டையும் பஸ்வான் சமூகத்தின் ஓட்டையும் பெறுகிற, உயர் சாதி இந்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிக்கான இணைப்புக் கட்சியாக தனது லோக் ஜன சக்தியை சிராக் முன்னிறுத்தினர். 2015 இல் 4.83 விழுக்காடாக இருந்த லோக் ஜன சக்தியின் ஓட்டு வங்கி, இத்தேர்தலில் 5.63 விழுக்காடாக உயர்ந்தது. மேலும் 60 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிக்கு தடையாகியது. 27 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் தோல்வியடைந்த ஒட்டு விழுக்காட்டிற்கு நிகரான ஓட்டுக்களை லோக் ஜன சக்தி பெற்றது.
iii.தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளின் சேர்க்கை
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ராம் விலாஸ் பஸ்வானின் வெளியேற்றத்தால் தலித் மக்களுக்கு எதிரான கூட்டணி என்ற தோற்றம் உருவாவதை தடுக்கிற நோக்கில் முன்னாள் முதல்வர் மான்ஜியின் கட்சிக்கு(HAM-S)ஏழு தொகுதிகளையும் VIP கட்சிக்கு 11 தொகுதிகளையும் கடைசி நேரத்தில் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் ஒதுக்கியது. இதில் இரு கட்சிகளும் தலா நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றன.
மேற்கூறிய காரணங்களோடு மின்னணு ஒட்டு இயந்திர முறைகேடு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன. இதற்கான ஆதாரமாக சில வீடியோக்கள் வருவதைத் தாண்டி பிரம்மாண்டமான மின்னணு இயந்திர முறைகேட்டை பாஜக மேற்கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஆகவே இந்த விமர்சனத்தை தற்காலிகமாக இங்கே ஒதுக்கிவிடுவோம்.
iv சமூகப் பொறியமைப்பு உக்தி
பிகாரில் பல்வேறு சிறு பெரும் சாதிகளாக பிளவுப்பட்டுள்ள சமூகத்தை, சாதி ரீதியாக அணி சேர்க்கை நடத்துகிற social engineering எனப்படுகிற சமூகப் பொறியமைப்பு உக்தியை பாஜக திறம்பட கையாள்கிறது. Lokniti CSDS மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பானது சாதி ரீதியான ஓட்டுப்பதிவு கணக்கை வழங்குகிறது.
பாஜக-ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி – பிராமணர், பூமிஹார், ராஜபுத்திரர், குர்மி, கௌரி, ரவிதாஸ், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் உயர் சாதிகளின் ஓட்டுக்களைப் பெற்றுள்ளது.
மகா கட் பந்தன் – யாதவர், இஸ்லாமியர் ஆகிய இரு சாதி மத அடையாள மக்களின் பிரதான ஓட்டுக்களைப் பெற்றுள்ளது
லோக் ஜன சக்தி- பஸ்வான் சமூக ஓட்டுக்களைப் பெற்றுள்ளது.
இந்தி பெல்ட் என வர்ணிக்கப்படுகின்ற பின்தங்கிய வட மாநிலங்களிலும் முன்னேறிய மாநிலங்களில் பின்தங்கிய மாவட்டங்களிலும் பாஜகவின் சமூகப் பொறியமைப்பு திட்டம் வெற்றி பெற்று வருகிறது.கூடவே மாநிலத்திற்கு தகுந்தாற்போல மாநில கட்சிகளின் கூட்டணியை உடைத்தும் உருவாக்கியும் சாதி மத அடிப்படைவாத பின்னணியில் தேர்தலில் கூட்டணி வைக்கின்றது. இதனோடு மோடி பிம்ப உருவாக்கம், அதீத தேசியவாதக் கருத்துக்களால் ஊசலாட்டத்துடன் உள்ள நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை வசப்படுத்திக் கொள்கிறது.
3. இந்திய வரலாறும் வர்க்க உணர்வும்
மேற்கூறிய நான்கு காரணிகள் யாவுமே முதலாளித்துவ குடியரசு அமைப்பினில் போட்டியிடுகிற கட்சிகளின் ஓட்டுவங்கி அரசியல் உக்தியின் பாற்பட்டது. மாறாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த நாள் தொட்டு சீர்திருத்தம் என்ற பெயரில் பாஜக அரசு மேற்கொண்டு வருகிற விவசாய விரோத தொழிலாளர் விரோத சட்டங்கள், இட ஒதுக்கீட்டு பறிப்பு,கல்விக் கொள்கை மாற்றங்கள், குடியரிமை திருத்த சட்டம்,வேகமான தனியார்மய ஊக்குவிப்புகள், மாநில அரசுகளின் சுயசார்பைப் பறித்து வெறும் மாநகராட்சியாக சுருக்குகிற அவலம், ஆளுனர் மூலமான ஜனநாயக விரோதத் தலையீடுகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மீதான ஆள்தூக்கி சட்ட வன்முறை,காஷ்மீர் சிறப்புச் சட்டம் பறிப்பு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நாட்டின் சுயாதீன நிறுவனங்களை தனது கைப்பாவை நிறுவனங்களாக மாற்றியது, நாட்டின் வகுப்புவாத அரசியலைத் தூண்டி சிறுபான்மை சமூகத்தின் மீதும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதும் வெறுப்பரசியல் செய்வது என நாட்டின் சிவில் சமூகத்தின் அனைத்து வர்க்கப்பிரிவினரின் (முதலாளித்துவம் வர்க்கம் நீங்கலாக) மீதும் பாஜக-ஆர் எஸ் எஸ் பெரும் போரையே தொடுத்துக் கொண்டுள்ள சூழலில், பாஜகவிற்கு எவ்வாறு மக்கள் மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடுகிறார்கள் என்றப் புதிரை மேற்கூறிய பிரதான நான்கு காரணிகள் விடுவிக்கவில்லை.
பெரும்பாலான விமர்சனம் யாவுமே பாஜகவின் சமூகப் பொறியமைப்பு திறனையும், தேர்தல் ஆணையத்தின் சார்பையும், மின்னணு ஒட்டு இயந்திரம், காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தையும் (புதிதாக ஓவைசி!) சுற்றிச் சுற்றி வருகிறது. இறுதியாக பாஜகவிற்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக காங்கரஸ் நடத்திய தீரவேண்டும் என நொந்து கொள்ளுகிற நிலைக்கு ஜனநாயகவாதிகள் வந்துவிட்டார்கள். இது ஒரு பரிதாபகரமான நிலைதான்!
இப்போது நம்முன் பளிச்சென எழுகிற கேள்வி இதுதான். பாஜகவின் இரண்டாம் சுற்று ஆட்சியில் டசன் கணக்கிலான மக்கள் விரோதச் சட்டங்கள், மோசமான பொருளாதார நிலைமை, கொரோனா பேரிடரை மோசமாகக் கையாண்டது என அத்தனையும் மீறி பாஜக எவ்வாறு தேர்தலில் வெல்கிறது என்பதுதான். அப்படியானால் கோடிக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் திரள் மீது மத்திய அரசு மேற்கொள்கிற மாற்றங்கள் யாவுமே எந்தப் பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்தவில்லையா என்பதுதான்?
இக்கேள்வி சமூகத்தின் அரசியல் பொருளாதார விழிப்புணர்வு நிலை மீதான ஆய்விற்கு இட்டுச் செல்கிறது.
ஒரு சமுதாயத்தின் குறிப்பிட்ட வர்க்கத்தின் “அரசியல்” உணர்வானது சமுதாயத்தில் அக்குறிப்பிட்ட வர்க்கத்தின் தன்னுணர்வு குறித்ததாகும். சமுதாயத்தின் பொருளாதார அமைப்பில் தனது நிலையை உணர்ந்துகொள்கிற நிலையில் ஒரு வர்க்கம் தன்னுணர்வு கொள்கிறது.
முதலாளித்துவ வருகையும் வர்க்க உணர்வும்:
மனித குல வரலாற்றில் முதலாளித்துவத்தின் வருகைக்குப் பின்னர்தான் வர்க்க உணர்வு துல்லியமாக வெளிப்படத் தொடங்கியது. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தனது நவீன முதலாளித்துவ உற்பத்திக் கட்டமைப்பிற்கு ஏற்ற அமைப்பாகவோ கீழான சார்பான அமைப்பாகவோ முதலாளித்துவ அமைப்பு ஒழுங்கமைக்கிறது. முதலாளித்துவ சமுதாயத்திற்கு முந்தைய சமுதாயத்தில் நிலவிய சிக்கலான நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என துல்லியமாக வர்க்க நிலைப்படி சமுதாயம் ஒழுங்கமைக்கப்படுகிறது. அதற்கேற்ற சட்ட வடிவத்தை உருவாக்குகுகிறது. இத்தகைய சமுதாயத்தில் வரலாற்றில் முதல் முறையாக வர்க்கமும் வர்க்க உணர்வும் தீர்மானகரமாக வெளிப்படுகிறது. தனக்கு கீழ்படியாத வர்க்கங்களை பலவந்தமாக வன்முறையாக ஒடுக்குகிறது.
முதலாளித்துவத்திற்கு முந்தைய சகாப்தத்தில் நிலவிய சிக்கலான சமுதாய அமைப்பில் பொருளாதார சுரண்டல் முறையானது சாதி மத அடிப்படையிலே நிகழ்த்தப்பட்டது. வாழ்வை பாதிக்கக்கூடிய பொருளாதாரக் கூறுகள் மதத்துடனும் சாதியுடனும் பிணைக்கப்பட்டுள்ளதால், சுரண்டப்படும் வர்க்கம் தன்னுணர்வற்று தெளிவில்லாமல் இருந்தது.
முதலாளித்துவ சமுதாயத்தில் மட்டுமே பொருளாதார காரணிகள் ஒளிவு மறைவின்றி நேரடியாக சமுதாயத்தில் வெளிப்படையாக வெளிப்படத் தொடங்கின. சுரண்டல் அமைப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது. அதற்கு சமயத் திரையோ, சாதித் திரையோ தேவைப்படவில்லை.
சமுதாயத்தில் வர்க்கப் படிநிலைகளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களும் முதலாளித்துவ சமுதாயத்தில் துல்லியமாகத் தெரியத் தொடங்கின. முதலாளித்துவ சமுதாயத்திலேதான் ஒருவர்க்கமானது தனது பொருளாதார நிலைமைக்கான காரணம் குறித்து பொருளாதார அடிப்படைகள் குறித்து வர்க்க உணர்வு பெற முடிகிறது.
நாம் மேற்கூறிய வரலாற்று வளர்ச்சி விதிப்படியே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் சமுதாய அமைப்புறை தோன்றியது. இந்தியாவிலே இந்த வரலாற்று வளர்ச்சி அபப்டியே ஐரோப்பாவை ஒத்தாற்போல நிகழவில்லை. இங்கே முதலாளித்துவ சமுதாயத்தின் அரசு வடிவம் அதாவது நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்தில் குடியரசு ஆட்சி எழுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும் இந்திய சமுதாயத்தின் உற்பத்தி உறவில் முற்றிலும் முதலாளித்துவ சமுதாய உறவாக மாற்றிட வில்லை.
இந்திய சமுதாயமும் வர்க்க உணர்வும்:
அரசியல் வானில் எழும் புயல் மேகங்களால் சமுதாயத்தின் பொருளாதாரக் கூறுகள் தொடப்படாமல் அப்படியே நீடிக்கின்றன என சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் கூறியது இன்றும் இந்திய சமூகத்திற்கு பொருந்துகிறது.
இந்திய சமுதாயத்திற்கு ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பு என ஒன்றில்லை. தேசம் தழுவிய நவீன முதலாளித்துவ உற்பத்தி கட்டமைப்பாக இந்திய பொருளாதார கட்டமைப்பு வலுவாக உருவாக்கப்படவில்லை. இதை நிறைவற்ற வேண்டிய புரட்சிகர வரலாற்றுக் கடமையை இந்திய முதலாளித்துவ சக்திகள் செய்யவில்லை. இதன் பலனாக இந்திய சமுதாயம் நகர்ப்புறம் சார்ந்த முதலாளித்துவ மூலதன முதலீடு எனும் பொருளாதார அமைப்போடு, கிராமப்புறம் சார்ந்த நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்ச உற்பத்தி உறவு மற்றும் முதலாளித்துவ உற்பத்திக்கு மாறிச் செல்கிற இடைநிலை வணிக உறவு ஆகியவற்றோடு ஒட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விதிவிலக்கான பொருளாதாரக் கட்டமைப்பானது நகர்ப்புறத்தில் முதலாளித்துவ சமுதாய உறவையும் கிராமப்புறத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய அமைப்பைபின் மிச்ச சொச்சத்தையும் நிலவச் செய்கிறது.
இந்தியாவின் சமகால பொருளாதார கட்டமைப்பு இந்திய சமுதாயத்தை இறுக்கி பிடிப்பதாக இல்லை. இந்தியாவிலே இன்னும் மைய அரசை சார்ந்திடாமல் சொந்த உற்பத்தி மறு உற்பத்தி அமைப்பினிலே அரசுக்கு தொடர்பில்லாமல் இயற்கையாக வாழ முடிகிறது என்றே கூறலாம். இத்தகைய பொருளாதார அமைப்பிற்கு சட்ட வடிவம் தேவையில்லாமல் போகிறது.
இத்தகைய சமுதாயத்தில் வர்க்க உணர்வை அந்தஸ்து, சாதி, மதம் போன்ற சிக்கலான உறவுகள் மூடி மறைக்கிறது அல்லது தடுக்கிறது. இதனாலே இந்திய கிராம மக்களை துன்புறுத்துகிற பொருளாதாரப் பிரச்சனைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியுமால் போகிறது.
தற்போது பிகாருக்கு வருவோம்.
2017-18 ஆண்டின் தகவலின்படி, இந்தியாவின் மொத்த தொழில் நிறுவனத்தில் பிகார் மாநிலத்தில் பங்கு வெறும் 1.5 விழுக்காடுதான். போல அந்நிய மூலதன முதலீட்டில் நாட்டின் மொத்த சரசாரியில் வெறும் 0.01 விழுக்காடுதான். 2011-12 புள்ளிவிவரப்படி மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். பிகார் மாநில மக்களின் தலா ஆண்டு வருமானம் வெறும் 46,664 ரூபாய் தான். (தமிழகத்தின் தலா நபர் வருமானத்தில் 214,236).
கடந்த 2018-19 கணக்கெடுப்பின் படி பிகாரில் வேலைவாய்ப்பின்மை 10.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலே நவீன முதலாளித்துவ சக்திகளில் மூலதன முதலீடு ஊடுருவல் நடைபெறாத பெரும்பான்மையான இந்திய மாநிலங்களின் நிலை இதுதான்.
இப்பிரச்சனை ஒரு கட்டமைப்பு ரீதியானது. ஆனால் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாக பிரச்சாரம் செய்தது. பாஜக 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வாக்குறுதி கொடுத்தது.
பிகாரில் பெரும்பான்மையான மக்கள் பின்தங்கிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிச்ச சொச்ச பொருளாதார கட்டமைப்பின் செல்வாக்கில் வாழ்ந்து வருபவர்கள். முதலாளித்துவ ஊடுருவலின் தொந்தரவுக்கு ஆளாகதவர்கள். பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களாகவும் சிறு குறு விவசாயிகளாகவும், வேலை இல்லாத நிலையில் தற்காலிகமாக பிற மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். இந்த மக்களின் வாழ்வனுபவத்தை இம்மக்களின் பின்தங்கிய பொருளாதார உற்பத்தி அமைப்பின் பாற்பட்ட உணர்வை தீர்மானிக்கிறது. அது பொதுவாக சாதி அடையாள சமுதாயமாக, மத அடையாளத்துடன், ஆணாதிக்க குடும்ப அமைப்பின் பாற்பட்டதாக உள்ளது.
இத்தகைய சமுதாயத்திலே சாதி மத அணிசேர்க்கையில் நிபுணத்துவம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான பாஜக தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு வாய்ப்பை வழங்குகிறது. பிகார் போன்றே ஏனைய இந்தி பெல்ட் மாநிலங்கள் எங்கிலும் இந்த உக்தியை கையாள்கின்றது.
இறுக்கமான இந்திய கிரமாங்களில் சாதி மத அடிப்படைவாத உணர்வுகளுக்கு எதிரான, வேளாண் உரிமை பாற்பட்ட ஜனநாயக போராட்டத்தோடு கார்பரேட்களின் சூறையாடல் பொருளாதார அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை இணைத்துக்கொண்டு தத்துவார்த்த ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் வளர்ச்சி பெறுகிற கட்சியால் மட்டுமே ஆர் எஸ் எஸ் – பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும்.
ஆதாரங்கள்:
http://www.indiatoday.in/elections/bihar-assembly-polls-2020/story/bihar-assembly-election-result-2020-nda-grand-alliance-bjp-rjd-nitish-kumar-tejashwi-1739880-2020-11-11?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=Bihar%20election%20result%20out&utm_content=&utm_term=
http://thewire.in/politics/chirag-paswan-bihar-election-ljp-bjp-jdu-mahadalit
theprint.in/economy/double-digit-growth-but-high-unemployment-challenge-before-nitish-kumars-new-bihar-govt/542298/