மநுநூல்-அழித்தொழிக்கும் காலம்.!
தற்போதைய சமூக அரசியல், பண்பாட்டுச் சூழலில் மநுநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்திருக்கிறார். வரலாறு மீண்டும் திரும்புகிறது. விடுதலைக்கு சற்று முன்பும் பின்புமாக அண்ணல் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றவர்கள் மநுநூல் குறித்து தமது வாழ்நாளின் பெரும்பகுதி எழுதியும் பேசியும் போராடியும் வந்துள்ளனர். அதன் தாக்கமும், செயற்பாடுகளும் தமிழகத்தின் மாபெரும் அறிவு சூழலை உருவாக்கித் தந்திருந்தது. மநுவின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலத்தில் அதற்கான அரசியல், சமூகச் செயற்பாடுகள் திட்டமிட்டவகையில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. திருமாவளவன் இன்றைக்கு மீண்டும் அம்பேத்கர், பெரியார் பற்ற வைத்த தீயை தொடர் ஓட்டம் போன்று கையிலெடுத்துக் கொண்டுள்ளார். காலம் திரும்புகிறது. முன்னெப்போதையும் விட மநுவை அழித்தொழிக்கும் காலம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
கடந்த செப்தம்பர் 27 ஆம் திகதி அய்ரோப்பிய அய்க்கிய ராஜியத் தமிழர்களிடம் பெரியாரும் இந்திய அரசியலும் எனும் பொருளில் இணைய வழி உரையாடல் நிகழ்த்திய திருமாவளவன் மநுகுறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார். மனு மனிதகுலத்தையே இழிவுபடுத்தும் ஒரு சட்டத்தொகுப்பு என்பதுடன் அதில் பெண்கள் குறித்த பார்வை ஒட்டு மொத்தப் பெண் பிறப்பையுமே இழிவுப் படுத்தக்கூடியதாகும். மநுநூலின் சில பக்கங்களை எடுத்து, வருண வேறுபாடின்றி பெண்களை மநு எப்படி இழிவுபடுத்துகிறது என்று வாசித்துக்காட்டினார். இதுவே இன்றைக்கு வலதுசாரிகள் மற்றும் மதவாதக் குழுக்களால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திவிட்டார். அவரை நமது பெண்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர் வெளியில் நடமாடவிடமாட்டோம் என்ற வகையில் வலதுசாரிக் குழுக்களும் சில தனிநபர்களும் திருமாவுக்கு எதிராகக் கிளம்பிக் கொண்டுள்ளனர்.
திருமா செய்ததெல்லாம் மநுநூலின் வாசகங்களை அப்படியே படித்துக் கட்டியது மட்டும்தான். வாசித்துக் காட்டியவருக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள், திருமாவை இழிவாகச் சித்தரிப்பவர்கள், வாசித்த நூல் பற்றி எதுவும் பேசுவதாக இல்லை. பேசமாட்டார்கள்.
வாசித்த நூலில் இருக்கும் குற்றத்தை வாசித்தவர் மீது திருப்புவதும் வசைபாடுவதும் அறமறியாதவர்களின் செயற்பாடாகவே இருக்கிறது. இருக்கும். அறமற்ற நூல் ஒன்றுக்கு சட்டவாக்கம் ஒன்றுக்கு ஆதராவாக இருப்பவர்களிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாதுதான்.
மனுநூலோ, அதன் சட்டவாக்கங்களோ இன்று நடைமுறையில் இல்லை என்று மநுவின் இன்றைய வாரிசுகள் பேசுகிறார்கள். அப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் இப்படி பேசுவதே மநுவுக்கு ஆதரவானதுதான். நடைமுறையில் இல்லையென்று அவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் மநு இன்றைக்கு பண்பாட்டுக் கூறுகளில், அன்றாட வாழ் முறைகளில், நீதிமன்ற வளமைச் சட்டங்களில், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் நீதிமன்றங்களில் சிலையாக மநு இருக்கிறார்.
இந்துவாக இருப்பது என்பது மநுவாக இருப்பதுதான். மநுநூலின்படி இருப்பதுதான். மநுவையும் இந்து கலாசாரத்தையும் பிரித்துவிட முடியாது. மநுவின்படி வாழவில்லை என்றால் இந்துவாக வாழவில்லை என்று பொருள். மநுவை ஏற்பதே இந்துப் பண்பாட்டை ஏற்பதுதான். சாதியை ஏற்பதுதான். வருண முறைகளை ஏற்பதுதான். பெண்கள், சூத்திரர்களை மநுவின் பார்வையிலிருந்து ஒப்புக் கொள்வதுதான்.
மநு நூல் என்பது ஆரிய மேலாண்மைக்காக, மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்ட நூல். அதிகாரவர்க்கத்தின் துணையுடன் தமது பொருளாதார, சமூக அரசியல் நிலைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வசதிபடுத்திக் கொள்வதற்காகத் தம்மைத் தவிர்த்துப் பார்ப்பனர்கள் பிறருக்காக சுயநினைவுடன், தன்னலத்துடன் ஏற்படுத்திய ஏற்படுத்திக்கொண்ட ஓர் ஏற்பாடு இது. இதில் அறத்திற்கான எந்த ஒரு வெளியும் கிடையாது. சனநாயகம் சமத்துவம் இதற்கான பொருள் அவற்றில் கிடையாது. இருக்காது. கூடாது. ஒரு சமூகத்தை அடிமையாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாட்டில் இவற்றை எதிர்பார்க்கவும் முடியாது. தேடுவதும் அபத்தமே.
ஆனால் ஓர் கற்கால பண்பாட்டு நூலை இன்றும் சட்டமாக வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்புவதும், மறுவாசிப்பு செய்வதும் ஓர் அறிவு சமூகத்தின் பொறுப்பாக இருக்க முடியும். இருக்கிறது. முன்னேறிச் செல்லும் அல்லது விசாலித்துச் செல்லும் ஓர் அறிவுச் சமூகம் இவ்வாறு கேள்வி எழுப்பிக் கொள்வதுதான் அது விசாலிப்பதாக பொருள். இன்றைக்கும் ஹமுராபியின் சட்டங்களை அப்படியே யாதொருவரும் பின்பற்றிக்கொண்டு இருக்க முடியாது.
ஆனால் அவ்வாறான சட்டங்கள் இன்றைக்கும் அதை நடைமுறைபடுத்துபவர்களுக்கு தமது சமூக, பொருளாதார, அரசியலில் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கு அடிப்படையாக இருக்கிறது. எனவேதான் கற்கால, அறிவுக்குப் பொருந்தாத மநு சட்டங்களை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். மநுவின் முன்நிபந்தனையான மநு சட்டங்கள் குறித்து கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. எனவே நடைமுறையில் இந்தச் சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை பிரித்தறிய முடியாமல் இல்லை. கலாச்சாரம், சமூகம் இவற்றில் நடைமுறையில் இருக்கும் பிற்போக்குத்தனமானவற்றை தனியே பிரித்தெடுத்தால் அவற்றில் மநு, பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ இருக்கக் காணலாம்.
அறிவுக்குப் புறம்பான, சமூக அறிவியலுக்குப் புறம்பான சமூக, கலாச்சாரத் தளத்தில் அடையாளம் காணப்படும் எந்த ஒன்றும் மநுவாகவே இருக்கின்றன. இருக்கும். அவற்றை கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்கும்போது சமூக, அரசியல் அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து எதிர்ப்புக்கள் வரும். கேள்வி கேட்கக்கூடாது என்ற ஒன்றே மநுவின் முன்நிபந்தனை என்பதை இத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள முடியும்.
உலகின் மிகப்பழமையான சட்டத் தொகுப்புகளில்( லா கோட்) மநுவும் ஒன்று. மனு நீதியின் காலம் கிமு 2,300 என்றும் கி.மு 200 என்றும் கிமு ஆறாம் நூற்றாண்டு அல்லது கிமு 3ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிமு 500 என்று பொதுவான கருத்தை எட்டியவர்களும் இருக்கிறார்கள். இந்து அரசர்களுக்கு என்று அவர்களது ஆட்சிக்கு என்று தனியாகச் சட்டங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் இந்துதர்ம சாத்திரங்களையே சட்டங்களாக்கினார்கள். அவர்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. இந்து சனாதன குருக்களே அவற்றைக் கொண்டிருந்தனர். கேள்விகளுக்கு இடமின்றி அச்சட்டங்களை அரசர்கள் நடைமுறைப்படுத்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்து தர்மசூத்திரங்கள் பலப்பல முன்னோடிகளால் தொகுக்கப்பட்டன. உரை மற்றும் செய்யுள் வடிவில் அவை எழுதப்பட்டன. கவுதமன், பவுத்தாயனா, அபசுத்தாமா, விஷ்ணு, அரிரண்யகேசி, வசிஷ்ட்டர், அகதா, சங்காஇலிகிதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சுயவாம்பு என்ற மநு தொகுத்தபோது அதன் செய்யுட்கள் சுமார்2685 ஆகும். இது 12 பகுதிகளைக் கொண்டிருந்தது.
பிர்கு முனியான ஜமதாக்னி சுமார் 4000 பாடல்கள் கொண்டத் தொகுப்பாக அதை உருவாக்கினார். அவரது மகனான பரசுராமன் 2694 சூத்திரங்களாக சுருக்கித் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.
பரசுராமன் மகாபாரதத்தின் பிரிக்க இயலாத ஒரு கதாபாத்திரம். இவன் சிறு இனக்குழுக்களை ஒடுக்கியும், அழித்தும் தேசிய இன குழுவிற்கானப் பொது மநு சட்டங்களை வகுக்க முயன்றான்.
மநு என்பது தனியான ஒருநபர் கிடையாது. மநு என்பது சட்டமியற்றக்கூடியப் பதவி. பல மநுக்களின் சட்டத் தொகுப்பே மநுநீதி. மநு என்றால், மநுஷயன், மனிதன். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் மனிதன், தனி மனிதன் பின்பற்ற வேண்டியச் சமூகப் பண்பாட்டு, பொருளாதார அரசியல் நெறிமுறையாகும்.
இதுவே கலியுகத்திற்கானச் சட்டம் என்று பிர்கு முனிவர் கூறுகிறார். எனினும் மநுவின் சமகாலத்திலேயே 36 ஸ்மிருதிகள் இருந்தன எனவும் அவற்றில் மநு சட்டத் தொகுப்பே சிறப்பான இடத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது. மநு சட்டம் இவ்வாறு எல்லாவற்றையும் முந்திக் கொண்டிருக்க ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். மநுவில் உள்ள எந்தச் சட்டம் குறித்தும் அவன் அரசனாகவே இருப்பினும் அது பற்றி கேள்வியெழுப்ப முடியாது. மநுவின் முன்நிபந்தனையே அதுதான். அடிப்படையிலேயே பாசிசத் தன்மை கொண்ட மநுவை அரசர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய உளவியல் புரிந்து கொள்ளக் கூடியதே. இன்றைய சனநாயகத்தின் பெயரிலான ஆட்சியாளர்களும் அதன் அடிப்படையிலேயே மநுவை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். நடைமுறைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். மத்தியகாலப் புஷ்யமித்திரனின் அரசும், காலமும், மீண்டும் திரும்புமானால் மநுவும், அவனது சட்டங்களும் உயிர்பெறத்தான் செய்யும்.
கற்காலத்தின் ஒரு சட்டத் தொகுப்பு அது சமூக பண்பாட்டுக் கூறுகளில் ஏற்படுத்தும் தாக்கம் என்பவை அறிவியலுக்குப் புறம்பாகவும், நாகரீகத்திற்கு எதிராகவும் இருக்கிறது. இந்திய சாதிய சமூகம் அறிவியல் வழியில் தமது ஆக்கத்திறனை வெளிப்படுத்துவற்கு மநுதர்ம சாத்திர நடைமுறைகள் பெரும் தடையாக இருப்பதை புரிந்து கொள்ளத்தான் வேண்டும். சமூகத்தைத் தொடர்ந்து மேல், கீழ் என்று பிரித்து வைத்திருக்க மநு உதவுகிறது. எனவே அது அதிகாரவர்க்கத்தின் புனித நூலாகச் சட்டமாக இருக்கிறது.
மநு பண்பாட்டு, அரசியல், பொருளாதார வழியில் ஆள்வோருக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இசைவாக இருப்பதால் இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசியாவிலும் அதன் நீட்சி இருக்கிறது. இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் மநுவின் கூறுகள் இன்றுமிருக்கின்றன. இலங்கையில் இந்து தேசியவளமைச் சட்டம் என்ற இந்துக்களுக்கான சட்டத்தொகுப்பு மநுவை ஏற்றுக் கொள்கிறது. அந்த அடிப்படையிலேயே தீர்ப்புகளும் நீதி மன்றங்களால் வழங்கப்படுகின்றன.
பல வழக்குகளில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மநுவின் அம்சங்களை ஏற்றுத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்டகாலம் மநுவின் கலைவடிவமான பகவத் கீதையின் மீது நீதிமன்ற உறுதி மொழியை ஏற்க வாதியும், பிரதிவாதியும் வலியுத்தப்பட்டிருந்தனர்.
மநு எப்படி நீதிதுறை தீர்ப்புகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை பேரறிஞர் அண்ணா தமது ‘ஆரியமாயை’ நூலில் அக்காலத்தின் நீதிமன்ற வழக்குகள் பலவற்றை சுட்டிக்காட்டி எழுதியிருப்பார். அன்றைக்கு அந்நூல் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதுடன், அண்ணா அவர்களுக்குச் சிறை தண்டனையும் வழங்கியது நீதிமன்றம்.
இந்திய நீதித்துறையிலும் பொதுவெளியிலும் மநுவின் நீதியற்ற நடைமுறையைக் கண்ட அண்ணல் அம்பேத்கர் 1927 இல் மநுநூல் எரியூட்டும் போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் விடுதலைக்கு முன்பும் பின்புமாக பெரியார் மநுநூல் குறித்து தமது வாழ்நாள் முழுவதும் பேசியும், எழுதியும், போராட்டங்கள் பல நடத்தியும் வந்தார். பெரியார் அளவுக்கு மநு குறித்து யாதொருவரும் பேசியிருக்க முடியாது. சமூக ஏற்றத்தாழ்வை நீதியாகக் கொண்ட மநுவை அம்பேத்கரும், பெரியாரும் சரியாகவே இனங்கண்டிருந்தனர். திராவிட இயக்கங்கள் முன்காலத்தில் இருந்த அளவுக்கு பின்வந்த காலங்களில் மநு குறித்த பேச்சுக்களை வளர்த்தெடுக்கத் தவறிவிட்டதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
அநாதி காலம் அல்லது வேத காலம் என்று சொல்லப்படும் காலத்திற்கு இணையான இந்த ஸ்மிருதிகளின் சாரம், அன்றைக்கு சமூக, பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்துடன் எவ்வாறு அணுகியதோ அவ்வாறே இன்றைக்கும் அணுகவேண்டும், பார்க்க வேண்டும் என்று சொல்வது என்பது அன்றைக்கு சமூக, பொருளாதார, அரசியல் இருப்பை யார் தக்கவைத்துக் கொண்டார்களோ அவர்களே இன்றைக்கும் அதன் நீட்சியை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களது இடத்தை இன்றைக்கும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் கும்பலின் அறமற்ற கூச்சலே அது. ஒரு இனத்தை அடிமையாக வைத்துக் கொள்ள விரும்பிய அதிகாரவர்க்கத்தின் கற்காலச் சட்டத் தொகுப்பே மநுநூலாகும்.
இன்றைய ஆட்சியாளர்களின் நேரடி மற்றும் நிழல் முகமான ஆர்.எஸ்.எஸ். மநுநூலை தேசிய நூலாக சட்ட நூலாக தமது அகண்ட பாரத்தின் வேத நூலாக ஏற்கிறது. 1949 இல் ஆர்.எஸ்.எஸ் இன் அதிகாரபூர்வ நாளேடான ஆர்கனைசர் வெளியிட்ட கட்டுரை ஒன்று இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மநுநூலே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. (https://thewire.in/rights/manusmriti-hindu-rashtra-rss)
இன்றைக்கும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக்கு அடிப்படையாக மநுநீதி எப்படி ஒரு சமூகப் பொருளாதார, சாதி, அரசியல் ஆணாதிக்கத்தின் அடிப்படை உளவியலாக இருக்கிறதோ அவ்வாறே அப்பாலியல் வல்லுறவை நீதிபடுத்துவதிலும் இருப்பதை பார்க்கலாம். மநுவை ஏற்கும் சமூக அரசியல் தலைவர்கள் பெண்கள் பொது வெளியில் நடமாடுவதை குற்றம் சொல்வதை, கண்டிப்பதை இதன் வழியே புரிந்து கொள்ளதான் வேண்டும்.
அறத்திற்கு இடமற்ற காலத்தின் சட்டத் தொகுப்பு அறிவுக்கு அறிவியலுக்கு இடமற்ற சட்டத் தொகுப்பு உலகில் வேறு எங்கும் இன்றுவரை நடைமுறையில் இருப்பதாக அத்தனை உறுதியாகச் சொல்லிவிட முடியாது ஏனெனில் அவை சட்டத்திருத்தத்திற்கு, மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. மநு சட்ட நூலாக மட்டும் இருக்கவில்லை. அது சமூக கலாசாரத்தின் பிரிக்க முடியாதப் பகுதியாகவும் இருக்கிறது.
பெண்கள் குறித்த மநுவின் பார்வையும், சட்டங்களும் குறித்துப் பேசுவதே பேரிழிவாகும். பொது வெளியில் பெண்கள் நடமாடுவதை வெறுக்கும், தடை செய்யும் மநுநூல் அவர்களை ஒரு சடப்பொருளாக உடமைப்பொருளாக நடமாடும் காமப் பிண்டமாகக் கருதுகிறது. முற்றிலும் ஆணாதிக்கம் சார்ந்த வக்கிரப் பார்வையுடன் அவர்களை அணுகுகிறது. ஒரு மனநோயாளியின் பிதற்றலாகவே அவை உள்ளன.
ஆணின் தொடர் கண்காணிப்பில் பெண்கள் இருக்க வேண்டும் என்று மநு வலியுறுத்துகிறது. வயதான தந்தையாக இருந்தாலும் அவர் தமது பெண்ணை கண்காணிக்க வேண்டும் என்கிறது. இல்லையென்றால் அவள் ஒழுக்கம் தவறிவிடுவாள் என்கிறது அது. பெண்களின் யோனி குறித்த கவலையே மநுவின் முற்றுமுழுதானப் பெருங்கவலையாக இருக்கிறது.
பெரும்பாலும் மாதர் கற்பிலாள் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுபவற்றைக் கேட்பீராக(மச.9.அ.செ.19)
அறிவிலியேயாயினும் அவர்களை தமது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.(மச.2.அ.செ.214)
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மைப் பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள். மநு.ச.2.செ.213
இவ்வாறு பெண்கள் மீது வெறுப்பை உமிழும் மநு, பெண்களின் கன்னித்திரை கிழிவது முதல் அவளை வல்லுறவு செய்யும் மேல்சாதி ஆணுக்கும், கீழ்சாதி ஆணுக்குமான தண்டனை வரை என்ன என்பதை மிகக்கவனமாக வரையறுத்துச் செல்கிறது.
பொதுவாகப் பெண்களை இழிவுபடுத்தும் மநு மேல்சாதி பெண் என்பதற்காக அவளுக்கு மதிப்பையோ, உரிமையையோ முழுதாக எதையும் தந்தவிடவில்லை. அவன் மேல் சாதிக்காரன் ஒருவனின் உடமை என்கிற அளவிலேயே அவளுக்கான சட்டங்களை விதிக்கிறான். எனினும் மேல் சாதிக்காரன் மேல் சாதிப் பெண்ணை வல்லுறவு செய்வதற்கும், கீழ்சாதிப் பெண்ணை மேல்சாதிக்காரன் வல்லுறவு செய்வதற்குமானத் தண்டனை வேறுபாடு என்பது சாதி வேறுபாடாக இருக்கிறதேயன்றி பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி வழங்குவதாக இருக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
எந்த சாதியையும் சார்ந்தப் பெண்ணைவிட மேல்சாதி ஆணுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையிலேயே அவ்வாறானச் சட்டங்கள் மநுவால் உருவாக்கியளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேல், கீழ் இருவகைச் சாதி ஆண்களாலும் பெண்ணே பாதிக்கப்படுபவளாகவும், தண்டனை பெறுபவளாகவும் பெண் இருக்கிறாள். மநுவைப் பொறுத்தவரை அவளது நடமாட்டமே குற்றம் எனும்போது அவளது இருப்பே இழிவு எனும்போது அவள் வல்லுறவுக்குள்ளாவது குறித்துப் பேச வேண்டும் என்பதில்லை.
அவ்வாறே சூத்திரன் என்று மநு குறிப்பிடும் சமூகத்தின் விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் மேல் நிலைக்கு வருவதை பிற சமூகங்கள் மனதளவில் கூட விரும்புவதில்லை என்பதைப் பார்க்கிறோம். சாதி, வேலைப்பிரிவினை பாலியல் வல்லுறவு, பாலியல் தொடர்பு போன்றவற்றை மீறும் சூத்திரனுக்காகத் தண்டனையும், மேல் வருணத்திற்கான தண்டனையும் நீதியற்றதாக இருப்பதை பற்றி அறம் குறித்துப் பேசுவோர் கூட அது பற்றி வாய்திறப்பதில்லை. அது அறமற்றது என்ற சிந்தை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மநுவை சுயநினைவுடன் அல்லது சுயநினைவற்று ஏற்பவர்களிடம் அறம் குறித்தப்பார்வை அகன்றுவிடுகிறது.
பார்ப்பனனைக் கொல்பவன் அரசனேயாகினும் அவன் பிரம்மஹத்தி தோசத்திற்கு உள்ளாவான் என்கிறது மநு(8-379). பார்ப்பனர் உயிருக்கு காலம் காலமான சமூகப் பொருளாதார, அரசியல் பாதுகாப்பை மநு இப்படித்தான் உறுதிப்படுத்துகிறது. அதே வேளை சூத்திரன் கொல்லப்படுவது குறித்து அது ஒரு கொசுவைக் கொல்லும் அளவிற்கேனும் கவலை கொள்வதை கவனிக்க வேண்டும்.
அண்மையில் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் ஒரு கூலித் தொழிலாளி, பிறிதொருக் கூலித் தொழிலாளியை தம்முன் மண்டியிட்டு தொழச் செய்தப் புகைப்படக் காட்சி ஒன்று சமூகதளங்களில் வளம் வந்து அதிர்ச்சியளிக்கச் செய்தது. அதற்கு காரணமாக இருந்தது ஒருவர் மேல்சாதி, மற்றவர் கீழ்சாதி. காலில்விழச் செய்த, விழுந்த இருவர் பொருளாதார நிலையும் ஒன்றாக இருக்க, தொழில் நிலையும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கப் பிறப்பு அடிப்படையில் ஒரு தொழிலாளியை, மேலாகவும், கீழாகவும் பிரித்ததுடன். சக தொழிலாளியைக் காலில் விழச் செய்திருக்கிறது மநுவின் சாதி.
ஒருவரை பெருமிதம் மிகுந்தவனாகவும், ஒருவரது பிறவியே இழிவு எனவும் கருதச் செய்கிறது. ஒப்புக்கொள்ளச் செய்கிறது. ஏற்க செய்கிறது மநு. மனிதனையும், அவனது மாண்புகளையும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு எதுவித கேள்விக்கும் இடமின்றி நீர்த்துப்போகச் செய்கிறது. அறம் குறித்து சதா பேசுபவர்களால், கேள்விகள் எழுப்புபவர்களால் வாழ்வியலாகக் கொள்பவர்களால் மநுவை ஒருபோதும் ஏற்கமுடியாது. ஏனெனில் மநு அறமற்றது. மநு அறமற்றவன்.