இராணுவத்தின் கையில் பொலிவியாவின் எதிர்காலம்?
சுவிசிலிருந்து சண் தவராஜா
ஐக்கிய அமெரிக்காவின் கொல்லைப்புறம் என வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அரசியல் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. உலகம் முழுவதும் கொரோனாக் கொள்ளைநோய்க்குப் பயந்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் அரசியல் சூடு தணியாத ஒரு பிராந்தியம் அது. மனித உரிமைகள், நல்லாட்சி, பயங்கரவாத முறியடிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு என்ற பல்வேறு சொல்லாடல்கள் ஊடாகத் தனது மேலாண்மையை நிலைநாட்ட எப்போதும் முயற்சித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சவாலாக விளங்குகின்ற நாடுகளும் இந்தப் பிராந்தியத்தில் இல்லாமல் இல்லை. பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா ஆகிய இரண்டு உலகப் புரட்சியாளர்களை அறிமுகஞ் செய்த கியூபா இந்தப் போக்கைத் தொடங்கி வைத்தது. இன்றுவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அசைக்க முடியாத ஒரு தேசமாகவும் அது நிலைத்து நிற்கின்றது.
இந்தப் பிராந்தியம் பல புரட்சிகளையும், எதிர்ப் புரட்சிகளையும், பல பரிசோதனை முயற்சிகளையும், வெற்றிகளையும், தோல்விகளையும், பல படிப்பினைகளையும் தந்து நிற்கின்றது. தொடர்ந்தும் தந்து கொண்டிருக்கின்றது. ஜனநாயகப் புரட்சி ஊடாக சிலியில் ஆட்சியைப் பிடித்த சல்வடோர் அலண்டே புரட்சியைத் தக்க வைக்க முடியாமல் போராடிச் செத்ததை உலகம் கண்டது. ஆயுதப் புரட்சி மூலம் நிக்கரகுவாவில் ஆட்சியைப் பிடித்த டானியல் ஒர்ட்டேகா, தேர்தல் அரசியலில் தோற்கடிக்கப் பட்டதையும், மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததையும் கண்டோம். மற்றோரு நாடான வெனிசுவேலாவில் ஜனநாயகப் பாதையூடாக ஆட்சியைப் பிடித்த ஹியூகோ சாவேஸ், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகப் பாரிய சவாலாக விளங்கி, புற்றுநோய்த் தொற்றுக்கு ஆளாகி அல்லது சிலர் சொல்வது போன்று தொற்றுக்கு ஆளாக்கப்பட்டு மரணத்தைத் தழுவியதையும், அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நிக்கலஸ் மடுரோ மிகுந்த சிரமத்துக்கும், இடைஞ்சல்களுக்கும், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகக்கு மத்தியிலும், இராணுவத்தின் உதவியோடு ஆட்சியைத் தொடர்வதையும் பார்க்க முடிகின்றது.
நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட பொலிவியாவில் 2005 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த முதலாவது பழங்குடி இனத்தவரான, மக்களின் பேராதரவைப் பெற்றவரான ஈவோ மொரலஸ் 14 ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அந்த முடிவுகளுக்கு எதிராக வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டு, இராணுவம் கைவிட்ட நிலையில், நாட்;டைவிட்டுத் தப்பியோடி முதலில் மெக்சிக்கோவிலும் பின்னர் ஆர்ஜென்ரீனாவிலும் அரசியல் தஞ்சம் பெற்றதையும் பார்த்தோம். 2019 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதேபோன்ற மற்றுமொரு நாடகம் அந்த நாட்டில் அரங்கேறும் வாய்ப்பு தற்போது உருவாகியிருப்பதைப் பற்றிப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
லத்தீன் அமெரிக்காவின் முதலாவது சுதந்திரக் குரல்
பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் பொலிவியாவின் சனத்தொகை ஒரு கோடியே 14 இலட்சம். கர்க்காஸ் என அறியப்பட்ட இந்த நாட்டை 1524 இல் கைப்பற்றி தமது குடியேற்ற நாடாக்கிக் கொண்டது ஸ்பானியா. இந்த நாடு மட்டுமன்றி இன்று லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகின்ற பிராந்தியம் யாவுமே ஸ்பானியாவின் ஆட்சிக்குக் கீழேயே இருந்தது. 25 மே 1809 இல் லத்தீன் அமெரிக்காவின் முதலாவது சுதந்திரக் குரல் பொலிவியாவிலேயே எழுந்தது. 16 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின் 6 ஓகஸ்ற் 1825 இல் குடியரசு உருவானது. அதற்குத் தலைமை தாங்கியவர் பெயர் சிமோன் பொலிவியர். இன்று வரைக்கும் லத்தீன் அமெரிக்காவின் முதலாவது சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கொண்டாடப்படும் அவரின் பெயரிலேயே இந்த நாடு தற்போது அழைக்கப்படுகின்றது.
2005 டிசம்பர் 15 இல் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் சோசலிசத்துக்கான இயக்கம் என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈவோ மொராலஸ் 53.7 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பொலிவிய வரலாற்றில் ஒரு அரசுத் தலைவர் வேட்பாளர் இவ்வளவு அதிக வாக்குகளை முதல் சுற்றிலேயே பெற்றமை இது ஒரு சாதனையாகும். பழங்குடி இனத்தவரான அவர் தனது தேர்தல்கால வாக்குறுதிகளுள் ஒன்றான தேசியமயமாக்கல் கொள்கையை நிறைவேற்றி, பன்னாட்டு வணிக நிறுவனங்களினதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டார்.
அரசுத் தலைவராக இருந்த போதிலும், ஒரு எளிய மனதராக வாழ்ந்த அவர் உலகின் முற்போக்குச் சக்திகளுடன் கரங்கோர்த்துக் கொண்டார். கியூபாவின் காஸ்ட்ரோ, வெனிசுவேலாவின் சாவேஸ், நிக்கரகுவாவின் ஒர்ட்டேகா என அவரது நண்பர்கள் அதிகரித்தனர். அது மாத்திரமன்றி அமெரிக்க எதிர் முகாமான ரஸ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடனும் அவர் நட்பு பாராட்ட ஆரம்பித்தார்.
நிர்ப்பந்திக்கப்பட்ட மொராலஸ்
மக்கள் செல்வாக்கோடு 14 வருடங்கள் பதவியில் இருந்த அவரைப் பதவியில் இருந்து அகற்றுவதற்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்த அமெரிக்கா, 2019 நவம்பரில் தனது முயற்சியில் வெற்றி பெற்றது. ‘அரசுத் தலைவர் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே முடிவை இரத்துச் செய்ய வேண்டும்” என எதிர்கட்சிகள் தொடங்கிய போராட்டம், மொராலஸ் தேர்தலை இரத்துச் செய்வதாக அறிவித்த பின்னரும் தொடர்ந்தது. முடிவில், இராணுவம் தனக்கு ஆதரவாக இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மொராலஸ் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டது.
கிட்டத்தட்ட இதே போன்றதொரு நிலைமை தற்போது பொலிவியாவில் தோன்றியுள்ளது.
மொராலஸ் நாட்டைவிட்டு வெளியேறிய காலப் பகுதியில் நாடாளுமன்றப் பெரும்பான்மை அவர் சார்ந்த கட்சியிடமே இருந்தது. அரசுத் தலைவர் இல்லாதவிடத்து, சபாநாயகர் அரசுத் தலைவர் ஆகலாம் என்ற விதியை வைத்துக் கொண்டு, மொரலஸ் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதைத் திட்டமிட்டுத் தடுத்துவிட்டு, எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஜெனீனே அனஸ் என்பவர் அரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். காத்திருந்த அமெரிக்கா உட்பட மேற்குலகம் அவரை அங்கீகரித்தது. அமெரிக்கா அங்கீகரித்தால் என்ன அதனை நாங்கள் ஏற்றுக் கொள் மாட்டோம் என்றார்கள் வெகுமக்கள். அதனை அக்டோபர் 18 இல் நடைபெற்ற தேர்தலில் அவர்கள் காட்டியுள்ளார்கள்.
ஈவோ மொராலஸின் சகாவும், அவரது ஆட்சிக் காலத்தில் பொருண்மிய அமைச்சராக இருந்து நாட்டை பொருளாதார வளர்சிக்கு இட்டுச் சென்றவரும், சோசலிசத்துக்கான இயக்கத்தின் வேட்பாளருமான லூயிஸ் ஆர்ஸ் 55 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது எதிர்க் கட்சிகள் மீண்டும் பழைய பல்லவியை ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
பாசிச ஆர்ப்பாட்டங்கள்
9 பிராந்தியங்களைக் கொண்டது பொலிவியா. இதில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியமான சன்ரா குருஸ் பிராந்தியம் செல்வந்தர்கள் அதிகம் வாழும், வலதுசாரிச் சிந்தனை கொண்ட பிராந்தியம். நாட்டின் மிகப் பெரிய நகரான சன்ரா குருஸ் டி லா சியரா இந்தப் பிராந்தியத்திலேயே உள்ளது. 2009 நவம்பரில் மொராலஸ{க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த நகரிலிருந்தே ஆரம்பமாகின. தற்போதும் முன்னைய பாணியிலான ஆர்ப்பாட்டங்கள் இந்த நகரிலிருந்தே, புதிதாக அரசுத் தலைவராகத் தெரிவான ஆர்ஸ{க்கு எதிராக ஆரம்பமாகியுள்ளன.
நவம்பர் 2 ஆம் திகதி இரவு பாசிசக் கொள்கையைப் பின்பற்றும் குறுசனிஸ்ரா இளைஞர் அமைப்பு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. நடைபெற்று முடிந்த அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகளை வறிதாக்குதல், வாக்குகளை மீள எண்ணுதல், இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள புதிய அரசுத் தலைவரின் பதவியேற்பை தடை செய்தல், அரச திணைக்களங்கள் இயங்குவதைத் தடைசெய்யும் நோக்குடன் இராணுவத்தை ஈடுபடுத்துதல் போன்றவை அவர்களின் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகள் எதிர்க் கட்சிகளின் நோக்கங்களைத் தெளிவாக உணர்த்துகின்றன. மொராலஸ{க்கு என்ன நிகழ்ந்ததோ அதே போன்று ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கி, மொராலஸ் போன்று ஆர்ஸ் அவர்களும் தனது பதவியைத் துறக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்களின் முயற்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் ஆதரவு கிட்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
குறுசனிஸ்ரா இளைஞர் அமைப்பின் கோரிக்கைகளை இடைக்கால அரசுத் தலைவராக விளங்கும் ஜெனீனே அனஸ் வரவேற்றுள்ளார். ‘சன்ரா குருஸில் ஒலிக்கத் தொடங்கியுள்ள குரல்கள் ஒட்டுமொத்த பொலிவிய மக்களின் குரல். லூயிஸ் ஆர்ஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அவரால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது” என எச்சரிக்கிறார் அவர்.
சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தம்
தேர்தல் முடிவுகள் வெளியான போதில் அந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் பெரும்பாலும் பொலிவிய மக்கள் இருந்தார்கள். பொலிவிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. தற்போதைய நிலையில் 130 அங்கத்தவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களையே சோசலிசத்துக்கான இயக்கமும் அதன் தோழமைக் கட்சிகளும் கொண்டுள்ளன. மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவை. மறுபுறம், மேலவையில் உள்ள 36 இடங்களில் 21 இடங்களே இந்தக் கட்சிகளிடத்தில் உள்ளன. இங்கும் மேலதிகமாக 3 இடங்கள் அவசியமாகின்றன. இத்தகைய பின்னணியில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பதற்குப் பதிலாக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசியலமைப்பைத் திருத்த ஆளுங் கட்சி முடிவு செய்தது. இதுவே, எதிர்க் கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
ஏற்கனவே, கடந்த வருடத்தில் மொராலஸ் வெளியேற்றப்பட்ட சூழலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இடைக்கால ஆட்சித் தலைவியான ஜெனினே அனஸ் காவல்துறையையும், இராணுவத்தையும் பாவித்து ஆர்ப்பாட்டங்களை அடக்கி போதில் 37 பேர்வரை இறந்து போனதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பில் அவர் உட்பட ஆறு அமைச்சர்கள் மீத நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பில் புதிதாகப் பதவியேற்கும் அரசுத் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என் எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்க் கட்சிகள் வீதிகளில் இறங்கியுள்ளன.
இராணுவம் என்ன செய்யப் போகின்றது?
தற்போதைய நிலையில் இராணுவம் அடுத்து என்ன செய்யப் போகின்றது என்பதை அறியவே அனைவரும் ஆவலாக உள்ளனர். அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லூயிஸ் ஆர்ஸ் ‘நாட்டு மக்கள் அனைவரதும் – வலது சாரிகள் உள்ளிட்ட – அரசுத் தலைவராகவே தான் விளங்கப் போவதாகக்” கூறியுள்ளார். எனினும், மொராலஸ் அவர்களைத் திரும்ப நாட்டுக்கு அழைத்துக் கொள்வது மற்றும் இடைக்கால ஆட்சிக் காலத்தில் துண்டிக்கப்பட்ட கியூபா, வெனிசுவேலா, நிக்கரகுவா, ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளைத் திரும்ப ஏற்படுத்துவது உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்துக்கும் மேலாக மொராலஸ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
மொராலஸின் 14 வருட ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் அவரின் அரசியல் எதிரிகளாலும் பாராட்டப்பட்டவை. பெரும்பாலும் வெள்ளையினப் பிரபுக்களால் தொடர்ச்சியாக ஆளப்பட்டு வந்த பொலிவியாவில் மொராலஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆயிரக் கணக்கான மக்களை வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீட்டதுடன், பழங்குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களை சமூகத்தில் இணைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் அமைதியின்மை ஏற்பட்ட காலப்பகுதியில் நடுநிலைமையுடன் செயற்பட்டிருக்க வேண்டிய இராணுவம், நாட்டின் பெரும்பான்மை மக்கள் சார்ந்து சிந்திக்காமல், ஒருசில பிரபுத்துவக் குடும்பங்களின் நிலைப்பாடு சார்ந்து முடிவுகளை எடுத்தமையின் விபரீதங்களை பொலிவியா கடந்த ஒரு வருடத்தில் சந்தித்துள்ளது. மீண்டும் அத்தகைய ஒரு விபரீத முடிவை இராணுவம் எடுக்காது என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பொலிவியா போன்ற நாடுகளில் எதுவும் சாத்தியமே. ஏனெனில், சுமார் 200 வருடகால சுதந்திர வரலாற்றைக் கொண்ட பொலிவியாவில் இதுவரை 190 புரட்சிகளும், ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடந்தேறியிருக்கின்றன. அதில் ஆக்க கூடியதாக அதிக காலம் – 14 வருடங்கள் – நீடித்தது ஈவோ மொராலஸின் ஆட்சி மாத்திரமே. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வில் மிகப் பாரிய நன்மைகளைச் செய்திருந்த போதிலும் கூட, அந்த ஆட்சியும் கூட கடந்த வருடத்தில் கவிழ்க்கப்பட்டு விட்டமையே கசப்பான பொலிவிய வரலாறு.