அரசியல் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும், கடமை கண்ணியம் கட்டுப்பாடும்
தேர்தல் கட்சியல்லாத பிற இயக்கத்தினரில் பலரைத் தொற்றியிருக்கும்
மற்றொரு பெரும் நோய் அகம்பாவம் ஆகும்.
தேர்தல்கட்சிகள் மீது இயக்கங்கள் வைக்கும் விமர்சனம் “கொள்கை விரோத கூட்டணிகளையும் அமைக்கின்றனர் ” என்பதாகும் .
ஆனால் இயக்கத்தினரில் பலர் கொள்கை அடிப்படையில் கூட பிறருடன் ஒன்றுபட விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
தமது அமைப்பு , தமது தலைவர் தவிர பிற அனைத்தும் , அனைவரும் மட்டம் என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர்.
இரு வேறு இயக்கத்தவர் இரண்டுபேர் சந்தித்தால், யார் யாரை வெல்வது என்பதே அங்கு நோக்கமாக இருக்கும். காரணம் அவர்களது உடனடி இலக்கு ஆட்சியைப் பிடிப்பதோ, அதற்காக மக்களது மனங்களில் இடம் பிடிப்பதோ இல்லையல்லவா? அதுதான் காரணம்.
ஆகவே ஒற்றுமையை விட தாம்தான் சரியானவர் , தமது கொள்கைதான் சரியானது என்று நிருபிப்பதும் தமது சக இயக்கங்களை அழித் தொழித்து காணாமல் போகச் செய்வதுமே இலக்காக உள்ளது.
இந்த வகையிலும் கூட தேர்தல்கட்சியினர் ஜனநாயகத் தன்மை மிக்கவர்களாகி விடுகின்றனர். ஆம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக ரீதியிலாக வெற்றி பெற போட்டிக் கட்சி களும், கூட்டணிக்கு கட்சிகளும் தேவைப்படுகிறதே!
ஆனால் இயக்கங்கள் போட்டியாளர்கள் இல்லாத நிலையை விரும்புகின்றனர். ஈழத்தில் கூட இதுதான் நடந்தது.
அங்கு எழுத்து பேச்சு விவாதம் மூலமாக கருத்து மோதல் என்பது இல்லாமல் ஆயுதவழியில் சக இயக்கத்தவர்களை அழித்தொழித்தனர்.
நல்வாய்ப்பாக, இங்குள்ள இயக்கத்தவர்கள் ஆயுதம் தூக்க வில்லை. தூக்கி இருந்தால் வாய் வார்த்தைகளுக்குப் பதிலாக துப்பாக்கி குண்டுகளின் மூலமாக பதில் சொல்லி இருப்பார்கள்.
இந்த நல்வாய்ப்பையும் இங்கு அம்பேத்கரும், பெரியாரும், திராவிட இயக்கமுமே வழங்கினர்.
தேர்தல்கட்சிகள் இன்று இரு பிரிவாக பிரிந்து எதிர் எதிராக அணியாக நிற்கின்றனர்.
ஒன்று பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய வழிவந்த முற்போக்கு அரசியல்கட்சி களும் அவர்களுடன் மதச்சிறுபான்மையினரும் ஓரணியாக நிற்கின்றனர்.
அவர்களுக்கு எதிராக ஜாதிமத பாசிஸ்ட்டுகளும், அவர்களது அடிமைகளுமான பிற்போக்காளர்கள் எதிரணியாக நிற்கின்றனர்.
இருபிரிவினரும் மக்களுடைய ஆதரவைப் பெற கடினமாகப் போராடிக் கொண்டுள்ளனர்.
தேர்தல் களத்தில் இப்படி ஒரு கொள்கை அடிப்படையிலான அணிசேர்க்கையும் சனாதனவாதிகளும் முற்போக்காளர்களும் மிகச்சரியாக அணி பிரிந்து மோதிக் கொள்வதும் மிகவும் அபூர்வமானதும் மிகச் சிறப்பானதுமாகும்.
ஆனால் இப்போதும் கூட தேர்தலில் போட்டியிடாத இயக்கத் தோழர்கள் அல்லது அரசியல்கட்சிகளுக்கு ஆதரவாளர்களாக வெளியே நிற்பவர்களில் பலர் அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி ஒருவருக் கொருவர் நீ பெரிதா நான் பெரிதா என்று அருவருப்பான முறையில் மோதிக் கொண்டுள்ளனர்.
இது வண்டிக்கு முன் செல்ல வேண்டிய மாடு வண்டிக்கு பின் செல்வதை போல் கூட அல்ல வண்டியை பின் நோக்கி எதிர் திசையில் இழுத்துச் செல்ல முயற்சிப்பதைப் போல் உள்ளது.
இப்போதைய சமூகத்தில் நிலவும் அரசாட்சியை கைப்பற்றுவதற்கே கூட பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையை, ஆதரவை, ஒப்புதலை பெறவேண்டியுள்ள நிலையில் புதிய சமூகத்தை படைக்க விரும்புபவர்கள் தம் பலத்தை எவ்வளவு தூரம் பெருக்கிக் கொள்ள வேண்டும்?
பெரும்பான்மையினரின் ஆதரவை பெற கடினமாகப் போராட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக உள்ளனர்.
நிலவுவது ஒரு ஜாதியவர்க்க சமூகம் என்பதையும் அதை ஒரு சனாதன, ஆணாதிக்க, மதவெறி கட்சி ஆட்சி செய்கிறது என்பதையும் அது பார்ப்பனிய பனியா நலனுக்காக திட்டமிட்டு இயங்குகிறது என்பதையும் மனதில் வைத்தால் சமகால ஆட்சியாலும், சமூக அமைப்பாலும் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் நமது தோழமை சக்திகள் என்பதை நாமும் உணரமுடியும்.
1) மார்க்சியர்களைப் பொருத்தவரை அம்பேத்கரியர்களும் பெரியாரியர்களும் அடித்தளத்தை விட்டு விட்டு மேல் கட்டுமானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மிக நீண்ட காலமாக முன் வைத்து வந்தனர்.
ஆனால் பாசிஸ்டுகளின் அதிகாரம் அமைந்த பிறகு , தமிழ் நாட்டில் பாசிஸ்டுகளை அம்பேத்கர் பெரியார் வழிவந்த இயத்தவர்கள் , கட்சியினர் உறுதியாக எதிர்த்து நிற்கும் யதார்த்த நிலவரம் பெரியாரின் அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரத்தை பற்றி சிந்திக்க வைத்துள்ளது.
இப்போது பொதுவுடமை இயக்கத்தவர்களும் கட்சிகளும் முன் எப்போதையும் விட அம்பேத்கரையும் பெரியாரையும் முன்னிலைப்படுத்தி இயக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாற்றத்தை, மார்க்சியர்கள் என்ற பெயரில் இயங்கும் பழமைவாதிகள் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் கடந்த காலத்தில் போலவே அம்பேத்கரையும், பெரியாரையும் விமர்சிக்கவும் , வர்க்கப் புரட்சியின் மூலமே அனைத்தும் தீர்க்கப்பட முடியும் என்று ஓலமிடுகின்றனர்.
2) இதைப் போலவே பெரியாரிடமே எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. என்றும் அம்பேத்கர் மதத்தை ஏற்றுக் கொண்டார், அம்பேத்கரியர்கள் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையாளர்களாக உள்ளனர். என்றும், கம்யூனிஸ்ட் டுகள் ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வில்லை, என்பது போன்ற பல விமர்சனங்களை பெரியாரிஸ்ட்டுகள் என்ற பெயரில் உள்ள சிலர் முன் வைக்கின்றனர்.
ஆனால் தந்தை பெரியாரும் அவர் வழி வந்த இயக்கங்களும் கட்சிகளும் நீண்டகாலமாகவே கம்யூனிசத்தையும் அம்பேத்கரியத்தையும் தங்களுக்கு மிக நெருக்கமானதாகவே கருதினர். இன்றும் அந்த உறவு அதிகாரப்பூர்வமாக தொடரவே செய்கிறது.
குறிப்பாக தந்தை பெரியாரே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் அம்பேத்கரின் ஜாதியை அழித்தொழிக்கும் வழி நூலையும் முதலில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
தனக்கு உடன் பாடில்லாத ஒன்றையா அவர் வெளியிட்டார். மேலும் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தான் அன்று 1955ல் அம்பேத்கரின் பவுத்த ஏற்பை பாராட்டினர்.
கடவுள் மத நம்பிக்கையற்ற பெரியாரும் அண்ணாவும் ஏன் அம்பேத்கரின் மத மாற்றத்தை பாராட்டினர்? என்று சிந்திக்க வேண்டாமா? கலைஞர் அவர்களும் ஓர் விழாவில் அண்ணலின் பவுத்த ஏற்பு குறித்து பாராட்டிப் பேசியுள்ளதை சமீபத்தில் வலையொளியில் காணமுடிந்தது.
அம்பேத்கரைப் போலவே பெரியார் இசுலாமை முன் மொழிந்ததும் இங்கு வரலாறாக உள்ளது.
3) இவ்வாறே அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அவர் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு மிக நெருக்கமானவராக தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் உணர்ந்தார். அதே போல் கம்யூனிஸத்தையும் அவர் விரும்பவே செய்தார்.
அவர் பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையுமே எதிரிகள் என்றார்.
அவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற ஒன்றை மட்டுமே விமர்சனப் பார்வையோடு அணுகினார். இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய விவாதம் எழுந்தது குறித்தும் நாம் அறிவோம். பவுத்தத்தையும் கம்யுனிஸத்தின் மறு வடிவமாகவும் பவுத்த சங்கங்களை கம்யூன் போலவே அவர் கருதினார்.
அதேபோல பிக்குகள் சொத்து வைத்துக் கொள்ளக் கூடாது , திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற வரையறைகளை எல்லாம் கூட அவர் விரும்பினார்.
அவரும் பெரியாரும் கம்யூனிசத்தை அடைய ஜாதி தடையாக உள்ளது என்பதையே சுட்டிக் காட்டினார்கள்.
ஆனால் இதையெல்லாம் மறுத்து இன்று அம்பேத்கரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் , பெரியார் இயக்கங்களையும் எதிராக நிறுத்தி பிரச்சாரம் செய்கின்றனர்.
இவர்கள் பட்டியலின மக்களை தனிமைப்படுத்தி அழித்துவிட பார்ப்பதோடு பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் மறைமுகமாக காப்பாற்றவும் முயற்சி செய்கின்றனர்.
இது எவ்வளவு பெரிய முரண் பாருங்கள் உண்மையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளவர்களான பார்ப்பனர்களும், பனியாக்களும் தங்களால் சமூக அரசியல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் பெரும்பான்மையான நமது மக்கள் பிரிவினரில் இருந்து மேலும் மேலும் ஆட்களைத் திரட்டி தங்களை வலிமை ஆக்கிக் கொள்வதோடு
அந்த பெரும்பான்மை மக்களான பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி, வேலை உரிமைகளை காக்கப்படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் , போராட்டத்தில் ஈடுபடடுக் கொண்டிருக்கும் கட்சியினருக்கும் இயக்கத்தினருக்கும் எதிராக கொண்டுவந்து நிறுத்தி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவும், வன்முறையில் ஈடுபடவும் வைக்கிறது.
அதாவது நம் சகோதரர்களைக் கொண்டே நம்மை வீழ்த்த முற்படுகிறது.
ஆனால் 90 சதவீத மக்களின் பிரதிநிதிகளான கட்சிகளின் ஆதரவாளர்களான சிலரும் , இயக்கங்களின் ஆதரவாளர்களான சிலரும், இயக்கத்தினராக உள்ள வெகு சிலரும் பெரும்பான்மையான மக்களை தம் பக்கம் ஈர்ப்பது எவ்வாறு என்று சிந்திப்பதற்கு மாறாக ,
ஏற்கனவே ஜாதியாலும், மதத்தாலும் , வர்க்கத்தாலும் கூறு போடப்பட்டு மோதிக் கொண்டு கிடக்கும் 90 சதவீத மக்களை அம்பேத்கர், பெரியார், மார்க்சிய கொள்கையின் பெயராலும் பிரித்து நிறுத்தி சண்டை இட்டுக் கொள்ள தூண்டுகின்றனர்.
இதை இன்னொரு விதமாகவும் கூறலாம். பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியலின மக்களையும், தொழிலாளர் களையும் நிரந்தரமாக பிரித்து நிறுத்துவதற்காண முயற்சியாகவும் கருதலாம்.
சமீபகாலமாக பாஜக மற்றும் சங் பரிவார் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் முன்வைக்கும் கேள்வி 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட இயக்கம் பட்டியலின மக்களுக்கு என்ன செய்தது? என்பதாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
மேலும் தாங்கள் தான் பட்டியலின மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையோடு இருப்பதாகவும் காட்டிக் கொள்வதன் மூலம் திராவிட இயக்கம் என்பது பிற்படுத்தப்பட்ட மக்களின் இயக்கம் என்று முத்திரை குத்தி பட்டியலின மக்களை தம்பக்கம் ஈர்க்கவும் முயற்சிக்கின்றனர்.
அதாவது தீண்டாமைக்கு காரணமான ஜாதி ஒழியவேண்டும் என்று பாடுபட்ட, , பாடுபடுகின்ற திராவிட இயக்கம் பட்டியலின மக்களின் எதிரியாம்.
ஆனால் ஜாதிக்கு அடிப்பையான பார்ப்பனிய இந்துமதம் ,வர்ணதர்மம், மநு (அ)நீதி யை கட்டிக்காப்பவர்கள் பட்டியலின மக்களுக்கு நண்பர்களாம்!?
இதே போல் தான் கம்யூனிஸ்ட் கட்சியினரை தேசதுரோகிகள், அந்நிய மதக்கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல ஜாதி ஒழிப்பில் சனாதன எதிர்ப்பில் உறுதியாக உள்ள தலித் விடுதலை இயக்கத்தினரையும் இந்துமத விரோதிகள் , இசுலாமிய, கிறித்தவ கைக் கூலிகள் என்று குற்றம் சாட்டு கின்றனர்.
இப்படி க்கதை சொல்வதை நம்பி சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு திராவிட இயக்கத்தின் மீதும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் , தலித் இயக்கங்களின் மீதும் புழுதி வாரி தூற்றுகின்றனர்.
இந்த சூழலில் தான் நம் தோழர்கள் சிலர் அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஒருவருக்கு ஒருவர் விரோதிகளாக காட்ட படாதபாடு படுகின்றனர்.
சொல்லுங்கள் நீங்கள் யாருக்கு வேலை செய்கிறீர்கள்?
உண்மையில் இங்கு யாருக்கு பொறுமையும், கடமை உணர்வும் அதிகமாக தேவை?
அனைத்து மக்களையும் திரட்டி வைத்துள்ள மார்க்சிய, பெரியாரிய வழி இயக்கங்களுக்கும் , கட்சிகளுக்குமே இங்கு கடமை அதிகம் உள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களாக தங்களை உணரும் பட்டியலின மக்களுக்கோ, பெண்களுக்கோ , திருநங்கைகளுக்கோ, மதச் சிறுபான்மையினருக்கோ உள்ளதைவிட கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கும் , திராவிட இயக்கத்தினருக்குமே பொறுப்புணர்வு அதிகம் தேவை.
கடந்த காலத்தில் தந்தை பெரியார், தோழர் சீனிவாசராவ் துவங்கி பல்வேறு தலைவர்களும் அப்படிப் பட்ட பொறுப்புணர்வோடும் பொறுமையோடும் தான் நடந்து கொண்டனர்.
அறிஞர் அண்ணாவும் கலைஞரும் இதனை கலையின் வழி பிரச்சாரமாகவும் , அரசு அதிகாரத்தின் வழி சட்ட திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்தினர்.
இவர்கள் அனைவரின் சமுதாய பணியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்களில் கணிசமான பகுதியினர் ஜாதி உணர்விலிருந்து விடுபட்டு ஜாதி மறுப்புத் திருமணங்களை மேற்கொண்டனர்.
பெண்கல்வி, பெண் சொத்துரிமை போன்றவற்றை தமிழ்நாட்டில் ஓரளவு சாதிக்க முடிந்துள்ளது.
மதச்சிறுபான்மையினர் பக்கம் நெருக்கமாக நிற்கும் பண்பு தமிழ்நாட்டில் இன்றும் தொடர்கிறது.
திராவிட, , பொதுவுடைமை,தலித் இயக்கங்களின் கடந்த நூறாண்டு கால சமூக, அரசியல் பணியின் விளைவாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் இவை.
ஆனால் கடந்த பத்தாண்டுகளில் நாம் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகிறோம். எல்லாம் பறிபோய்க் கொண்டுள்ளது.
இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டுள்ள இருண்டகாலத்தில் இருந்து விடுபடவும் நமக்குத் தேவை அதே ஒற்றுமையுணர்வுதான்.
பத்து சதம் உள்ள ஒடுக்குமுறையாளர்களுக்கு,சுரண்டலர்களுக்கு எதிரான 90 சதத்தினரின் விடுதலைக்கான ஒற்றுமை.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பெண்கள், மதச்சிறுபான்மையினர், திருநங்கைகள், திருநம்பிகள், மீனவர்கள், பழங்குடிமக்கள் ஆகியோரின் ஒற்றுமை.
இதைச்சாத்தியமாக்கும் வழிமுறைகளை கண்டடைவதும் அதை நடைமுறைப்படுத்துவதுமே அம்பேத்கர் பெரியார் மார்க்சிய இயக்கத்தவர்களின், ஆதரவாளர்களின் ஒரே கடமையாகும்.