திராவிட இயக்கமும் சகோதரத்துவமும்
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை தென்மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் ஓர் அருந்ததிய இளைஞர் அந்த ஊர் இடைநிலைச்சாதியைச் சேர்ந்த தனவந்தரின் தம்பியை ’அண்ணன்’ என்று அழைத்து விட்டார் அதுவும் அவராக அழைக்கவில்லை அவர் வேலை செய்த நிறுவனத்தின் மேலாளர் அதோ போகிறவரை கூப்பிடு என்று கூறியதன் பேரில் அண்ணே உங்களை மேனேஜர் கூப்பிடுகிறார் என்று கூறியுள்ளார்
அதற்கு அந்த இடைநிலைச் சாதி பணக்காரர் ஏண்டா நீ என்ன என் அப்பனுக்குப் பிறந்தாயா? அல்லது நான் உன் அப்பனுக்குப் பிறந்தேனா ? ஐயா, சாமி ன்னு கூப்பிட மாட்டியா? என்று மிரட்டியுள்ளார். இப்போதும் கூட பார்ப்பனரல்லாத ஜாதியினர் அனைவரும் பார்ப்பனர்களை தாமாகவே சாமி என்று அழைப்பதை நாம் பார்த்து வருகிறோம். அவர்கள் கோவில் பூஜாரிகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
எனக்குத் தெரிய டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மேனேஜர் வேலை செய்யும் பார்ப்பனப் பையன் ஒருவனை மற்றவர்கள் அனைவரும் ”சாமி பஸ் எத்தனை மணிக்கு”, “சாமி சீட்டு இருக்கா?” என்று கேட்பதைப் பார்த்துள்ளேன்.
சில திரைப்படங்களில் கூட தாதாக்களிடம் , அல்லது பெரிய முதலாளிகளிடம்கணக்குப்பிள்ளையாக வரும் பார்ப்பனர்களை முதலாளிகளும், தாதாக்களும் அவர்களை சாமி என்று அழைக்கும் காட்சியை நாம் பார்த்துள்ளோமே அதுமாதிரி.
எந்த இடத்திலும் பார்ப்பனர்களை மற்ற ஜாதியினர் அண்ணன் என்றோ தம்பி என்றோ அழைப்பதில்லை. அதுபோலவே பார்ப்பன பெண்களை மாமி என்றே பொதுவாக அழைப்பதையும் இங்கு காண்கிறோம்.
இப்போது 2020 லேயே இப்படி என்றால் 1950களில் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கத் தோன்றுகிறது.
அவ்வாறு சிந்தித்துப் பார்க்கும் வேலையில் தான் அறிஞர் அண்ணா தம்பிக்கு கடிதம் எழுதியதையும், தனது இயக்கத் தோழர்கள் அனைவரையும் தம்பிகளாகக் கருதியதையும் , அவருக்குப் பின் அவரது தொடர்ச்சியாக வந்த டாக்டர் கலைஞர் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் அனைவரையும் அன்போடு உடன்பிறப்பே என்று விழித்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
பொதுவுடமை இயக்கத்தில் அனைவரையும் ”தோழர்” என்ற ஓர் உன்னதமான சொல்லால் அழைத்துக் கொள்வதை நாம் பார்த்து வருகிறோம்.
அது ஓர் உலகம் தழுவிய உன்னதச் சொல் என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் எனது இளம் வயதில், வயது வேறுபாடின்றி பொதுவுடைமை இயக்கத்தினர் தோழர் என்று அழைத்துக்கொள்வதையும், தோழமையோடு நடந்து கொள்வதையும் கண்டு மயங்கிப்போயிருக்கிறேன் என்பதை விட நானே அதை அனுபவித்தும் இருக்கிறேன். எனது பள்ளி ஆசிரியர்கள் சிலர் எனது மார்க்சிய ஆசான்கள் ஆக மாறிப் போனதும் அவர்கள் தங்களது மகன் வயதுடைய என்னையும் தங்களுக்குச் சமமாக மதித்து நடத்தியதையும் கண்டு வியந்து போயிருக்கிறேன்.
ஆகவே வயது சாதி மதம் பால் வர்க்க வேறுபாடு இன்றி அனைவரும் தோழர் என்ற ஒற்றைச்சொல்லால் அழைக்கப்படுவதும் அழைத்துக் கொள்வதும் மிகச் சிறப்பான ஒன்று. இப்போதும் கூட நான் திராவிட இயக்கத்திற்குள் பலரையும் தோழர் என்றே அழைக்கிறேன். பலர் என்னையும் தோழர் என்றே அழைக்கின்றனர். இதற்கு காரணம் தந்தை பெரியார் அவர்களும் தோழர் என்ற சொல்லை ஏற்று அவ்வாறே அனைவரும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது ம் காரணமாகும்.
“ இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் ஒருவருக்கு ஒருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும், ஒரே மாதிரியாக தோழர் என்கிற பதத்தை உபயோகிக்க வேண்டும் என்றும் மகா, ஸ்ரீ, கணம் , திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜ்த் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக்கொள்கிறேன், குடியரசு இதழில் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்“.
(13/11/1932 இல் குடியரசு இதழில் பெரியார்)
ஆனால் அவ்வாறு எழுதிய பெரியார் அவர்களைத்தான் தந்தை பெரியார் என்று அனைவரும் அழைத்து மகிழ்ந்தனர் என்பது இங்கு குறிப்பாக சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும். மேலோட்டமாக பார்க்கும் போது இது பெரியார் விருப்பத்திற்கும், அறிவிப்புக்கும் முரணாகத் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இதனைப் புரிந்து கொள்ள, இன்றைக்கும் சிலர் தந்தை பெரியார் என்கிறீர்களே அவருக்கா பிறந்தீர்கள்? என்று நம்மைப் பார்த்து கேட்கிறார்களே அந்தக் கேள்விக்கும், நாம் இக்கட்டுரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டிய அந்த நிகழ்வில் ”எனது அப்பனுக்கு நீ பொறந்தியா? என்னை அண்ணன் என்று அழைக்கிறாய்? என்ற அந்த இடைநிலைச்சாதிக்காரரின் கேள்விக்குமான காரணங்களின் பின்னுள்ள கண்ணோட்டத்தை , அரசியலைப் பரிசீலிக்க வேண்டும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்திய / தமிழக சாதியச்சமூகத்தின் எவரொருவரும் பிறிதொரு சாதியைச் சார்ந்தவர்களை தனது தந்தையாக, தாயாக, உடன் பிறந்தவராக கருதவும், கருதி அழைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளதா? அவ்வாறான சாதிகளுக்கு இடையிலான மண உறவுகளைக் குற்றமாக கருதும் நாட்டிலே, சமூகத்திலே தான் அனைவராலும் தந்தை என்று அழைக்கப்படும் பெரியாருக்குப் பின் வந்த திராவிட இயக்கத் தலைவர்களான அறிஞர் அண்ணாவும் கலைஞரும் தமது இயக்கத் தவர்களை சகோதரர்களாக, உடன்பிறப்புகளாகவும், பெண்களை தாய்மார்களாகவும் கருதி விளிப்பதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது.
தோழர் என்பது சமத்துவத்தைக் குறிக்கும் மேன்மையான ஓர் சொல் என்பது உண்மைதான் அதேசமயம் அச்சொல் ரத்தக் கலப்பை அடையாளப்படுத்தவில்லை, உடன்பிறப்பே என்ற சொல் தான் அதை நிறைவு செய்கிறது. ஓர் சாதிய வர்க்க சமூகத்தில் உடன்பிறப்பே என்ற சொல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கு தலைவர்களை தந்தை பெரியார், தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள், அன்னை மணியம்மையார், என்று அழைப்பதும் சி.என்.அண்ணாதுரை அவர்களை அன்போடு அண்ணா என்று அழைக்கப்பட்டு அவர் அண்ணன் ஆகவே மாறிப்போனதும், அவர் தனது இயக்கத்தவர்கள் அனைவரையும் உடன் பிறந்த தம்பிகளாகக் கருதியும் அழைத்தும் வந்ததும், அவரைத் தொடர்ந்து கலைஞர் தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று அழைத்ததும் வர்ண சாதி சமூகத்தில் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும்.
இது வெறுமனே விளித்தல் என்ற அளவில் நிலவிய ஒன்று அல்ல என்பதும் நமக்குத் தெரியும். தந்தை பெரியார் காலம் தொட்டு திராவிட இயக்கத்தின் ஜாதி மறுப்பு திருமணங்களும், விதவைத் திருமணங்களும் திட்டமிட்டு தொடர்ந்து இயக்க நடவடிக்கையாகவே நடைபெற்று வந்ததையும் அனைவரும் அறிவர்.
தந்தை பெரியார் காலத்தில் மட்டுமல்ல இன்றைக்கும் திராவிட இயக்கத்தினர் சுயமரியாதை திருமண தகவல் நிலையம், திராவிடர் பண்பாட்டு நடுவம், சாதிமறுப்புத் திருமண தகவல் மையம், ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை, கலப்புத் திருமணத் தம்பதியர் சங்கம் என்பது போன்ற பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி ஜாதி மதச் சடங்கு மறுப்புத் திருமணங்களையும் விதவை மறுமணங்களையும் தமது இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே நடத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம். இதனை போல் பிற எந்தக் கட்சியும் இயக்கமும் இவ்வாறு ஒரு திட்டமிட்ட வேலைத்திட்டமாக கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கலைஞர் அவர்களும் இதனை அதாவது சாதி மறுப்புத்திருமணங்களை தனது குடும்ப அளவில் மிகவும் விருப்பமாகவும், பெருமையோடும் செயல்படுத்தியும் வந்துள்ளார். இதைப்பற்றி அவரது நெஞ்சுக்கு நீதி ஐந்தாம்பாகத்தில் எழுதியுமுள்ளார். அதேபோல் கட்சியில்அனைவரையும் சமமாக, சகோதரர் களாகவும் நடத்தி வந்தார் என்பதையும் நாம் பார்த்துள்ளோம்.
குறிப்பாக மேடைகளில் பெரும்பாலும் தனக்கு இளையவர்கள் அனைவரையும் தம்பி என்ற அடைமொழியோடு அவர் அழைப்பதை நாம் அதிகமாக பார்த்தும் கேட்டும் உள்ளோம். அதேசமயம் தன்னை விட வயதில் மூத்தவர்களை கடந்தகாலத்தில் அண்ணன் என்று குறிப்பிட்டு பேசியுள்ளதையும் நாம் கேள்விப்படுகிறோம். உண்மையில் தனது தம்பி வயதுடைய துரைமுருகன் துவங்கி பேரன் வயது உடைய கவிஞர் பா.விஜய் வரை அனைவரையும் தம்பி என்ற முன்னொட்டோடு தம்பி திருமாவளவன், தம்பி கமலஹாசன், தம்பி ஆ.ராசா, தம்பி ஸ்டாலின், என்று விளிப்பதை பார்த்திருக்கிறோம்.
பொதுவுடைமை இயக்க தலைவர்களை மட்டும் மேடையில் தோழர் என்ற அடைமொழியோடு அவர் குறிப்பிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த முறைமையை எம்.ஜி.ஆராலும் கூட மீற முடியவில்லை . திமுகவிலிருந்து பிரிந்து சென்ற பிறகு அவரது கட்சிக்கு திமுகவுக்கு முன்னொட்டாக அண்ணா பெயரை சேர்த்து அண்ணா திமுக என்று வைத்துக்கொண்டதைப்போலவே கலைஞர் தம் இயக்கத்தவரை அழைக்கும் உடன்பிறப்புகளே என்ற தொடருக்கு முன்னால் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று சற்று மிகைப் படுத்தி விளித்தார்.
ஆனால் இதையெல்லாம் பார்ப்பனர்களும், பார்ப்பனஅடிமைகளும் கேலி செய்தார்கள். குறிப்பாக துக்ளக் ஆசிரியர் சோ தொடர்ந்து இதனை, உடன்பிறப்புக்களே என்ற சொற்றொடரை , தாய்க்குலமே என்பதையும் கொச்சைப்படுத்தி வந்தார். பார்ப்பனர்களுக்கும் சனாதனிகளுக்கும் ஒருபோதும் உடன்பிறப்புக்கள் என்பதன் பின்னுள்ள அரசியலை புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.
ஆனால் நவீன இந்தியாவின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துக்களை வாசித்தால் இந்த சாதியசமூகத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை நம்மால் ஒருபோதும் மறுக்க இயலாது.
அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார் :
“சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும், சகோதரர்களாக கருதும் ஒரு உணர்வு, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. …. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும், . ஒருமைப்பாட்டையும் அளிக்கும். ….. அமெரிக்காவில் சாதிப் பிரச்சனை இல்லை, இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த ஜாதிகள் தேசத்திற்கு எதிரானவை. முதலில், ஜாதி சமூக வாழ்க்கையில் பிளைவை ஏற்படுத்துகிறது, அது பொறாமையையும் எதிர்விளைவையும் ஏற்படுத்துகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால் இத்தகைய இடர்பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போது தான் சகோதரத்துவம் உண்மையாகும்.. சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப்பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்“
(25/11/1949) அன்று மக்களவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து.
ஆகவே தமிழகத்தில் திராவிட இயக்கம் உருவாக்கிய இந்த சகோதரத்துவ சொல்லாடல் காலப்போக்கில் இன்று வெறும் அலங்கார சொல்லாகவும், கேலிக்குரியது (உ பி ) என்பதாகவும் மாற்றப்பட்டுள்ள சூழலில் அதன் வரலாற்று, சமூக, அரசியல் முக்கியத்துவத்தையும் , தேவையையும் உணர்ந்து ஒரு கட்சிக்குள் திரட்டப்பட்டவர்களுக்கான சொல்லாக மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் ஒரு தாய் மக்களே, சகோதரர்களே, உடன்பிறப்புகளே என்று உணரவும், அழைப்பதற்குமானதாக விரிவுபடுத்த வேண்டும். அதுதான் திராவிட இயக்கத்தின் இலக்கு ஆகும்.