ஆபிரகாம்லிங்கன் தாடி வளர்த்த கதை
ஆரம்பத்தில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் அனைவருமே, முகத்தில் தாடி, மீசை இல்லாமல் முழுவதும் மழித்தவர்களாகவே தோற்றம் காட்டியிருக்கின்றனர்.
அவர்களில் விதிவிலக்காக, ஆபிரகாம்லிங்கன் மட்டுமே, முதன்முதலாக, முகத்தில் தாடிவைத்தவராக இருந்திருக்கிறார். அவரும்கூட, இன்று நாம் பார்க்கும்படங்களில் இருக்கும் தாடியுடன்கூடிய முகம்போல் அல்லாமல், முழுவதும் மழித்தத் தோற்றத்திலேயே இருந்திருக்கிறார்.
ஆபிரகாம் லிங்கன் தாடி வளர்த்ததற்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது. கதை என்று சொன்னதும், புனைவு என்று கொள்ளவேண்டாம். அது உண்மை வரலாறு.
நெடுநெடுவென்று வளர்ந்த உடலமைப்பு, நீண்ட கழுத்து, சுருக்கம்விழுந்த கன்னங்கள், என்று பார்ப்பதற்கு சுவாரசிமில்லாததாகவே ஆபிரகாம்லிங்கனின் முகமும், உடலமைப்பும் இருந்திருக்கிறது. அதனால், அவரது நண்பர்களும், எதிரிகளும், அவரது உருவம்குறித்து கேலிபேசியும் வந்திருக்கின்றனர்.
1860-இல் ஆபிரகாம்லிங்கன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை “ஒல்லியான, உயரமான, நீண்ட எலும்பாலான கால்களையும், கைகளையும், கோரமான முகத்தையும் கொண்ட மனிதர்” என்று ஒரு அமெரிக்க நாளிதழ் கிண்டலடித்துப் பதிவுசெய்திருந்தது.
1858-இல் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் ஸ்டீஃபன் டக்ளஸ் (Stephen Douglas), லிங்கனைப்பார்த்து, “ இரட்டை-முக (two-faced) மனிதர்” என்று கேலிபேசியிருக்கிறார். டக்ளசுடனான நேருக்குநேர் விவாதத்தில் திறம்பட பேசியபோதும், அவர் தோற்றுப்போனதற்கு அவரது உருவமே காரணமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.
நியூயார்க் நகரின் குடியரசுக்கட்சியினரில் சிலர், ஆபிரகாம்லிங்கன் தாடிவளர்த்தும், மடங்காமல், நேராக நிமிர்ந்து நிற்கும் கழுத்துப்பட்டைகளைக்கொண்ட (standing collars) சட்டைகளையும் அணிந்தால், பார்ப்பதற்கு அவரதுத் தோற்றம் முன்னேற்றமடையும் என்றும் அவரிடம் ஆலோசனை கூறினார்கள்.
இந்த வகையான ஆலோசனை, லிங்கனின் ஆதரவாளர்களில் ஒருவரான கிரேஸ் பெடல் (Grace Bedell) என்னும் 11 வயது சிறுமிக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கிறது. 1860-இல், குடியரசுக்கட்சியைச்சேர்ந்த பெடலின் தந்தை, ஆபிரகாம்லிங்கனின் படங்களைக்கொண்ட சுவரொட்டிகளை வீட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார். அவற்றைப்பார்த்த பெடலுக்கு, லிங்கனின் முகத்தோற்றம் மனநிறைவு தரவில்லை. அதனால், 1860 அக்டோபர் 15-இல், பெடல் லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறாள்.
அந்தக்கடிதத்தில், “ எனக்கு நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் உங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். நீங்கள் தாடி வளர்த்தால், மற்றவர்களையும் உங்களுக்கு வாக்களிக்குமாறு என்னால் செய்யமுடியும். அனைத்துப் பெண்களுக்கும் தாடிவளர்க்கும் ஆண்களைப்பிடிக்கும். அவர்களும், அவர்களது கணவன்மார்களை வற்புறுத்தி உங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். பிறகென்ன, நீங்கள்தான் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெடலின் கடிதத்திற்கு, லிங்கன் அக்டோபர் 19-இல் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “ இப்போது நான் தாடிவளர்த்தால், மக்கள் என்னைக் கேவலமாகப் பார்க்கமாட்டார்களா, பேசமாட்டார்களா? “என்னும் கேள்விகளைப் பதிலாக எழுப்பியுள்ளார். அந்தப்பெண்னின் ஆலோசனையை லிங்கன் அந்த காலகட்டத்தில் ஏற்கவில்லை..
தாடிவளர்க்காமலேயே, ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, முடிதிருத்துபவரிடம், “ நான் தாடிவளர்க்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததற்கு சரியான காரணம் தெரியவில்லை. என்றாலும், அதற்குப் பின்னணியில் சிறுமி பெடலின் கடிதமும் உந்துசக்தியாக இருந்திருக்கலாம்
1860 நவம்பர் 6 அன்று இரவு, லிங்கன், இலினாயிஸ் (Illinois, Springfield) தந்தி அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளக் காத்திருந்தார். அது, 25 ஆண்டுகள் அவர் வாழ்ந்த பகுதி. பின்னிரவு 2 மணிக்கு அவரது வெற்றிச் செய்தி அவரை வந்தடைந்தது. அதுவரை மிகவும் அமைதியாக இருந்தவர், அதன் பிறகு தன்னுடைய வீட்டிற்குச் சென்று, தனது மனைவியிடம் அவரது வெற்றிச் செய்தியைத் தெரிவிக்கிறார்
ஆபிரகாம்லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே “லிங்கன் ஒருபோதும் அமெரிக்க அதிபர் ஆக முடியாது, ஆகவும் விடமாட்டோம், அவர் மரணிக்கவேண்டும், மரணிப்பார்” என்று ஃபெராண்டினி( Ferrandini) என்பவர் சூழுரைத்திருக்கிறார்.
அவரைக் கொலைசெய்ய ஒரு கூட்டம் இயங்கியிருக்கிறது. அவர்களிடம் இருந்து, லிங்கனைக் காப்பாற்றி, அதிபர் மாளிகைக்கு, இரவுநேர இரயிலில் அழைத்துச்சென்ற வரலாற்றை, அவரது பாதுகாப்பாளர் பதிவு செய்திருப்பதை வாசிக்கும்போது, இருக்கையின் நுனியில் இருந்து பார்க்கும் திகில் படம்போல இருக்கிறது..
1861 புத்தாண்டில், அவருக்கு நிறைய கடிதங்கள் வர ஆரம்பித்தன. அதனால், தனக்கு உதவிசெய்யும்பொருட்டு, ஜான் நிக்கோலே (John Nicolay) என்பவரை உதவியாளராக அமர்த்திக்கொண்டார். லிங்கனுக்கு வந்த பல கடிதங்கள், அவருக்குக் கொலை மிரட்டல்விடும் கடிதங்களகவே இருந்ததைக் கணடு, ஜான் நிக்கோலே பதட்டமடைந்திருக்கிறார். ஆனால், லிங்கனோ அரசியல் வெறுப்பு ஒருவரை கொலை செய்யும் அளவிற்காப் போகும் என்று கேட்கும் அளவிற்கு அப்பாவியாக அல்லது நல்ல மனிதராக இருந்திருக்கிறார் என்று நிக்கோலே பதிவுசெய்திருக்கிறார்.
1861 மார்ச் 4 அன்று வாஷிங்டனில் நிகழ இருக்கும் அவரது பதவியேற்பு விழாவிற்கு அவரை அழைத்துச் செல்வது திட்டமிடப்பட்டது. தனக்கு இராணுவப் பாதுகாப்புத் தேவை இல்லை என்றும், சாதார்ண மனிதனாகப் பயணிக்கவே விருப்பம் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், கள நிலவரம் வேறுமாதிரியாக இருந்திருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், உண்மை நிலையைப் புரிந்துகொள்ளவில்லை. அவரை அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவிடாமல் தடுப்பதற்காக எவ்வித சதிச் செயலிலும் எதிரிகள் ஈடுபடக்கூடும் என்று நம்பபட்டது.
பிங்கர்டன் ( Pinkerton) என்பவர் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அவரிடம், லிங்கனைத் தலைநகருக்குப் பாதுகாப்பாகஅழைத்துச்செல்லும்பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ப்ரிங்க்ஃபீல்டிலிருந்து, வாஷிங்டனுக்கு லிங்கனின் இரயில் பயணம் திட்டமிடப்பட்டது. பயண அட்டவணை பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது. கத்தியாலும், துப்பாக்கிக்குண்டாலும், நச்சு-மையாலும், நச்சுச் சிலந்திகளாலும் லிங்கன் கொலைசெய்யப்படுவார் என்று மிரட்டல்விடுக்கும் கடிதங்கள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருந்தன. பிப்ரவரி 11, 1861 இரவு 8 மணிக்கு, ஆபிரகாம் லிங்கனை ஏற்றிக்கொண்டு, இரயில் ஸ்ப்ரிங்க்ஃபீல்டிலிருந்து புறப்பட்டது. விளக்குகள் அணைக்கப்பட்ட இரயிலின் கடைசிப் பெட்டியில் ஆபிரகாம் லிங்கன் பயணித்திருக்கிறார்.
இரயில் பால்டிமோர் வழியாகச் சென்றாகவேண்டும். அங்குவைத்து, லிங்கனைக் கொலைசெய்ய ஃபெராண்டினி (Ferrandini) என்னும் புரட்சியாளனின் தலைமையில் திட்டமிடப்பட்டிருப்பதாக ஒரு செய்தி, லிங்கனின் பாதுகாப்பாளருக்குக் கிடைக்கிறது. .
பால்டிமோர் இரயில் நிலையத்தில் கொலைகாரர்கள் கூடுவதற்கு முன்பாகவே லிங்கன் வரும் இரயில், பால்டிமோரைக் கடந்துவிட்டால், லிங்கனைப் பாதுகாப்பாக வாஷிங்க்டனுக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என்று பாதுகாப்பாளர் பிங்கர்டன் திட்டமிடுகிறார். அதற்கு லிங்கன் ஒப்புக்கொள்ளவில்லை. என்றாலும், சதிகாரர்களைத் திசைதிருப்பி, சரியான நேரத்தில், லிங்கனை வாஷிங்டன் கொண்டுசேர்ந்திருக்கின்றனர்.
பதவியேற்பு விழாவிற்கு வாஷிங்டன் செல்லும் வழியில், பெடலின் சொந்த ஊரில் இரயில் நின்றபோது லிங்கன் அங்கிருந்த மக்களிடையே உரையாற்றியிருக்கிறார். அப்போது, தாடி வளர்க்கச் சொல்லித் தனக்குக் கடிதம் எழுதிய பெடலைப் பற்றிக் குறிப்பிட்டு, அப்பெண் அந்தக் கூட்டத்தில் இருந்தால், முன்னுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் பெடலை, அவரது தந்தை லிங்கனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். லிங்கன், பெடலைக் கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறார். அந்தவேளையில், பெடல் விரும்பியபடியே லிங்கன் வளர்த்திருந்த தாடி பெடலின் கன்னத்தை வருடியதில், உண்மையாகவே பெடல் மகிழ்ந்திருப்பாள் என்று கூறப்படுகிறது.
ஆபிரகாம் லிங்கனுடைய தாடிவைத்த முகத்தோற்றம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. 1861-இல் ஆபிரகாம்லிங்கனை கொலை செய்வதற்கு செய்யப்பட்ட ஒரு முயற்சியில் இருந்து அவரை அவரது தாடிதான் காப்பாற்றியது என்றும் சொல்லப்படுகிறது.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஐக்கிய குடியரசின் 16-வது தலைவராகப் பதவியேற்றார். 1863 ஜனவரி 1-இல் , அமெரிக்காவில் உள்ள அடிமைகளின் விடுதலைக்கான சட்டத்தில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க ஒன்றியத்திலிருந்து 11 தெற்கு மாநிலங்கள் பிரிந்து, ஒருங்கிணைந்து குடியரசுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றன. வடக்கில் 23 மாநிலங்களில் 21 மில்லியன் மக்களும், தெற்கில் 9 மில்லியன் மக்களும் வாழ்ந்திருக்கின்றனர். அந்த 9 மில்லியனிலும், 4 மில்லியன் கருப்பின அடிமைகள். 1967-பொதுத்தேர்தலில் அண்ணா முன்வைத்த ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” முழக்கம், அமெரிக்காவிற்கும் பொருந்திப்போயிருக்கிறது.
தெற்கில் உள்ள மாநிலங்கள் பெரிதும் அடிமைகளின் விலையில்லா உழைப்பை (free labour) நம்பியே இருந்திருக்கின்றன. அதனால், வடக்கு அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று சொன்னபோது, தெற்கில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிழம்பியிருக்கிற்து.
அடிமை முறையை ஒழிக்க சட்டம் இயற்றவேண்டும் என்னும் கொள்கையை திடமாக முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர், ஆபிரகாம் லிங்கன். அதன்பொருட்டே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கபட்டது. ஆபிரகாம்லிங்கன் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபிறகு, பிரிந்துசென்ற 11 தெற்கு மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து, கலகம் செய்ததில், 4 ஆண்டுகள் (1861-65) நீடித்த உள்நாட்டுப்போர் (civil war) துவங்கியது.
பலருடைய வியப்பிற்கும் மத்தியில், ஆபிரகாம் லிங்கன் அரசுப் படைகளுக்கு அவரே நேரிடையாகத் தலைமைதாங்கி வழிநடத்தியிருக்கிறார். 4 ஆண்டுகள் நீடித்த போர், பலநூறு உயிரிழப்புகள் மற்றும் பெரும் பொருட்சேதத்திற்குப் பிறகு முடிவிற்கு வந்திருக்கிறது.
1864-இல் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு, 1865, ஏப்ரல் 14, புனித வெள்ளி (good Friday) அன்று, ஃபோர்ட் திரையரங்கில் வைத்து, தெற்கைச் சேர்ந்த ஜான் விக்ஸ் பூத் (John Wilkes Booth) என்னும் நடிகரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்கைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்த மூன்று தினங்களுக்குப் பிறகு லிங்கன் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுவரை, ஆபிரகாம்லிங்கனின் முகத்தோடு அவரது தாடி அடையாளமாகிவிட்டது. தாடிவைக்கச் சொன்ன பெடலின் பெயரும் வரலாற்றில் நிலைத்துவிட்டது.