இமோஜின்கள்..!
கைபேசி
உயிர் பெற்ற ஒரு
தருணத்தில்
நல்ல மனநிலையில்
இருப்பதாக ஒரு
முகத்தை
அனுப்புகிறீர்கள்..
பிறிதொரு நேரத்தில்
தொங்கவிட்டுக்
கொண்ட
இளமஞ்சள் முகமொன்றை
தெரிவு செய்கிறீர்கள்.
பதிலுக்கு
கோபம் கொண்ட
இளஞ்சிவப்பு நிறத்திலான
முகமொன்று
உங்கள் திரை வெளியில்
தோன்றுகிறது.
இப்போது நீங்கள்
புன்னகையொன்றை
முகமாக அனுப்புகிறீர்கள்.
எதிர் வரும் முகத்தின்
பாவனைகளுக்காகக்
காத்திருக்கிறீர்கள்.
காத்திருக்கும்
உங்கள் முகம்
பாவனைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறது
உங்கள் விரல்களில்.
நீங்கள் எதிர்பார்த்தவாரோ
அல்லது
எதிர்ப்பார்க்காதவாரோ
இப்போது
இமோஜின் ஒன்றை
பெறுகிறீர்கள்.
அன்பு..
காதல்..
கவலை..
எள்ளல்..
பகடி..
துயரம்..
கண்ணீர்..
என
எனது
உங்கள்
இமோஜின்கள்
மாறி மாறி
அவற்றை எதிர் கொள்கின்றன.
முகமற்ற நமது
மஞ்சள்
முகங்கள்
எல்லா பவனைகளையும்,
எல்லா
சொற்களையும்,
எல்லா குரல்களையும்
எனக்காகவும்
உங்களுக்காகவும்
கொண்டிருக்கின்றன.
நீங்களும்
நானும்
உறைந்த
இமோஜின்கள் ஆகிறோம்
இமோஜின்கள்
இப்போது
உரையாடத் தொடங்குகின்றன.