பணித்துறைத் தெரிவில் ஒரு இளைஞனின் ஆழ்ந்த சிந்தனை
கார்ல் மார்க்ஸ்1
தமிழில் : மருத்துவர் ச.மருதுதுரை, கோ.வெங்கடாசலபதி
ஒவ்வொரு உயிரினமும் அது இயங்குவதற்கான வட்டத்தை இயற்கையே தீர்மானித்துள்ளதற்கு ஏற்ப அந்த வட்டத்திற்குள் வேறு எதைப்பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த உயிரினம் அமைதியாக இயங்குகின்றது. மனிதனுக்கும் இறைமை ஒரு பொது இலக்கை நிர்ணயித்திருக்கிறது. அதாவது தன்னை உயர்பண்பு கொண்டவனாக ஆக்கிக் கொள்வதோடு மானுடத்தையும் உயர்பண்பு நிலைக்கு உயர்த்துவதே அந்த இலக்கு.
ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முடிவை மனிதனிடமே இறைமை ஒப்படைத்திருக்கிறது. தன்னையும் உயர்த்தி சமுதாயத்தையும் உயர்த்துவதற்கு ஏற்ற அவரவருக்கான பணித்துறையை (PROFESSION) தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை இறைமை மனிதனுக்கு அளித்துள்ளது.
இயற்கையின் மற்றப் படைப்புகளோடு ஒப்பிடுகையில் இது மனிதனுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றச் சிறப்பு.அதே வேளையில் இச்சிறப்பு அவனை முற்றிலுமாக சிதைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.அவனது திட்டங்களையெல்லாம் தவிடுபொடியாக்கவல்ல,மகிழ்ச்சியை முற்றிலும் இழக்கச் செய்துவிடும் சாத்தியத்தன்மையும் கொண்டதாக விளங்குகிறது.
ஒரு இளைஞன் தனது வாழ்வைத்துவங்கும் அந்த முக்கியக் கட்டத்தில் அவன் ஆழ்ந்து சிந்தித்து இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியம்.தனது வாழ்வின் அதிமுக்கியமான நடப்புகளை வாய்ப்புகளுக்கு இடமளிக்கும் தற்செயல் போக்கிற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு.அது தன்னளவில் மிக உயர்ந்த ஒன்றாகவே தென்படும்.பெரும்பாலான சமயங்களில் அது அவனது உள்ளார்ந்த திடநம்பிக்கையின் ஒப்புதலோடு இருக்குமாயின் அது உயர்ந்த ஒன்றே.ஏனெனில் நித்தியமற்ற மனிதனை இறைமை ஒருபோதும் முற்றிலுமாக வழிகாட்டுதலின்றி தனித்து விட்டுவிடுவது கிடையாது.இறைமை பேசுகிறது.மென்மையாக.ஆனால் உறுதியாக.
ஆனால் இந்தக்குரல் சுலபமாக மூழ்கடிக்கப்பட்டுவிடலாம்.எதை நம் ஆத்மார்த்த தூண்டுதல் என்று கண்டோமோ அது அந்த தருணத்தின் தற்காலிக உருவாக்கமாகவும் இருக்கக்கூடும்.எது ஒரு தருணத்தின் தற்காலிக உருவாக்கமோ அதை மற்றொரு தருணம் சிதைக்கவும் கூடும்.
நமது கற்பனைப்பொறி நெருப்பிடப்பட்டு உணர்வுகள் சிலிர்த்தெழுந்து நம் கண்முன் மாயத்தோற்றங்கள் நிழலாட நம்முடைய கட்டுக்கடங்காத உணர்ச்சித்தூண்டுதல் எதைப் பரிந்துரைக்கிறதோ அதனுள் கண்மூடித்தனமாகக் குதித்து விடுகிறோம்.அதைத்தான் இறைமை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது என்றும் கற்பனை செய்து கொண்டுவிடுகிறோம்.ஆனால் எதை நாம் ஆர்வமிகுதியால் தழுவிக்கொண்டோமோ அது நம்மை விரைவிலேயே ஒதுக்கித்தள்ள நேரும்போது நம்முடைய இருத்தலே கேள்விக்குள்ளாகிறது.
எனவே நம்முடைய பணியை தேர்ந்தெடுப்பதில் உண்மையாகவே ஆத்மார்த்த தூண்டுதல் நம்முள் நிகழ்ந்திருக்கிறதா என்பதை நாம் கவனமாக ஆய்வு செய்திடல் வேண்டும்.அதை நம் உட்குரல் அங்கீகரித்திருக்கிறதா அல்லது எதை நம் ஆத்மார்த்த தூண்டுதல் என்று கொள்கிறோமோ அது வெறும் கற்பிதமா,எதை நமக்கு இறைவன் விடுத்த அழைப்பு என்று கருதுகிறோமோ அது வெறும் சுய ஏமாற்றமா என்பதை நாம் ஆராய்ந்துணரவேண்டும்.
அந்த அகத்தூண்டலின் மூலதனத்தை ஆராயாமல் இதை நாம் எப்படி இனம் கண்டுகொள்வது?எது பிரமாண்டமானதோ அது பளபளக்கிறது.எது பளபளக்கிறதோ அது பேராவலைத்(AMBITION)தூண்டுகிறது.அப்பேராவல் நம்முள் அகக்கிளர்ச்சியை உருவாக்கியிருக்க முடியும் அல்லது அப்பேராவலின் விளைவை நாம் இதுதான் அகத்தூண்டுதல்(INSPIRATION)என்றும் கருதியிருக்க முடியும்.ஆனால் பேராவலால் உந்தப்பட்ட மனிதனை அறிவால் கட்டுப்படுத்த இயலாது.அவனது கட்டுக்கடங்காத உணர்ச்சித்தூண்டுதல் எதைப் பரிந்துரைக்கிறதோ அதில் கண்மூடித்தனமாகக் குதிக்கிறான்.அதற்குப்பிறகு அவன் தனது நிலையை தானே தீர்மானிக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறான்.சந்தர்ப்பமும்,மாயையும் அவன் நிலையைத் தீர்மானிக்கத் தொடங்குகின்றன.
அதோடு மட்டுமின்றி நம்முடைய ஆற்றல் முழுவதுமாக பரிமளிப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் பணித்துறையை நாம் சுவீகரித்துக் கொள்வதற்கும் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.அதானது நம் வாழ்வின் பெரும்பகுதியோடு நெருங்கி உறவாடக்கூடிய ஒன்று.அப்படியாக இருக்கக்கூடிய நம்மைக் களைப்புறச் செய்யாமல் நம் உற்சாகத்தைக் குறைத்திடாமல் உந்துணர்வை வாட்டிவிடாமல் அமைந்திட வாய்ப்பில்லாத பட்சத்தில் நம்முடைய லட்சியங்கள் திருப்தியுறாமல் கனவுகள் மெய்ப்படாமல் நாம் இறைவனையும் தாக்கிப்பேசி மனிதக்குலத்தையும் சபிக்கத் தொடங்கிவிடுகிறோம்.
ஆனால் பேராவல் மட்டுமே மனிதனை ஒரு குறிப்பிட்ட பணிக்கான உடனடி உற்சாகத்தைத் தூண்டவேண்டும் என்றில்லை.நாம் நம்முடைய கற்பனையிலே அதற்கு அழகேற்றி அதுவே வாழ்க்கை நமக்கு அளிக்கக்கூடிய உன்னதம்(THE HIGHEST)எனத்தோன்ற அப்படிப்பட்ட சுயமுடிவுக்குக்கூட நாம் ஆளாகியிருக்கலாம்.நாம் அதை நுணுக்கமாக ஆராயவில்லை.அதை முழுமையாகப் பரிசீலிக்கவில்லை.அஃதானது நம்மீது சுமத்தும் பொறுப்பினை நாம் முழுதாக உணர்வதில்லை.அதை நாம் காண்பது சற்றுத் தொலைவில் இருந்துதான்.தொலைவுகள் எல்லாம் ஏமாற்றத்தக்கவை.
நம்முடைய அறிவு மட்டுமே நமக்கு இங்கே ஆலோசனை வழங்க இயலுமா?அனுபவமும் தீவிர கவனமும் இங்கே துணைக்கு அழைக்கப்படாமல் உணர்ச்சித்தூண்டுதல் ஏமாற்றிட கற்பிதம் நம் கண்களை இருட்டாக்கிவிடுகிறது.
பின் நம் கண்களை யாரை நோக்கித்தான் திருப்புவது?அறிவு நம் உதவிக்கு வர இயலாதபோது யார் நமக்கு ஆதரவு கொடுப்பது?
நம் பெற்றோர்கள்தான் அதை செய்யவேண்டும்.வாழ்க்கைப் பயணத்தில் நெடுந்தூரம் பயணித்தவர்களும் விதியின் கடுமையை அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையிலும் அவர்கள்தான் நம்மை வழிநடத்தத் தலைப்பட்டவர்கள் என நம் இதயம் சொல்லும்.அவர்களது கருத்துக்குப்பின் நம் உந்துதல் உற்சாகத்தின் தீவிரம் குறையாமல் இருக்குமேயானால் நாம் ஒரு குறிப்பிட்ட பணியை உண்மையாக நேசித்தோமேயானால் அதை தீவிரமாக ஆராய்ந்த பின்னரும் அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என நாம் திடமாக நம்பினோமேயானால் அப்போது மட்டுமே நாம் பணியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.அப்படி இருக்கும்போது நம்முடைய அவசரத்தன்மையோ ஆர்வமிகுதியோ நம்மை ஏமாற்றிவிடாது.
இதற்குத்தான் நாம் அழைக்கப்பட்டிருப்பதாய் நாம் நம்பும் பணி நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.நாம் அதை தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே நம் சமூகத் தொடர்புகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிடுகின்றன.உதாரணத்திற்கு நம்முடைய உடற்கட்டமைப்பு,மனப்பாங்கு இன்னபிற.நம்முடைய உடற்கட்டமைப்பே ஒரு அச்சுறுத்தும் தடையாக விளங்கக்கூடும்.அதன் உரிமை மீது கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமையில்லை.அவற்றைத் தாண்டிச்செல்ல நாம் முயல்வோம் என்பது உண்மையே.ஆனால் அப்படி செய்யும்போது நம்முடைய வீழ்ச்சி அதிதீவிரமாக இருக்கும்.ஏனென்றால் நாம் நொறுங்கிக்கொண்டிருக்கும் இடர்பாடுகளின் மீது புதிய கட்டுமானத்தை தீர்மானிக்க முயல்கிறோம் என்று அர்த்தம்.
நம்முடைய உளவியல்,உடலியல் கோட்பாடுகளும் பயனுடைய தேவைகளுக்குமான மகிழ்வற்ற போராட்டமாகவே வாழ்க்கை நீடிக்கும்.
தன்னுள் போரிடும் கூறுகளுக்கு இணக்கமான தீர்வைக்காண முடியாத ஒருவனால் எப்படி வாழ்க்கையில் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளமுடியும்?எப்படி அவனால் அமைதியாக செயல்படமுடியும்?அமைதியிலிருந்துதானே நுணுக்கமான உயரிய செயல்கள் தோன்றமுடியும்.அமைதி என்ற நிலத்தில் இருந்து மட்டுமே முதிர்ந்த கனிகள் விளைய முடியும்.
நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பு இல்லாமல் மகிழ்ச்சியோடு அதிகநேரம் உழைக்க முடியவில்லை என்றாலும் கடமைக்காக நம்முடைய நலனை தியாகம் செய்கிற எண்ணமும் பலவீனமாக இருந்தபோது தீவிரமாக செயல்படவேண்டும் என்கிற முனைப்பும் அவ்வப்போது நம்முள் எழும்.
நாம் தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஏற்ற ஆற்றல் நம்மிடம் இல்லாதிருக்குமேயானால் நம்மால் அப்பணியை பயனுள்ள வகையில் செயல்படுத்தமுடியாமல் போகும்.அப்போது நம் இயலாமையை உணர்ந்து நாம் வெட்கி நமக்கு இட்ட பணியை நிறைவேற்ற இயலாத பயனற்ற ஜடநிலை சமூக அங்கத்தினன் என நம்மை நாமே சொல்லிக்கொள்ள ஆட்படுவோம்.அதன் இயல்பான விளைவாக நேரிடுவது சுயஅவமதிப்பு(SELF-CONTEMPT)ஆகும்.சுயஅவமதிப்பை விட அதிக வலிமைமிக்க உணர்வு வேறு எதுவாக இருக்க முடியும்?முழு உலகம் எது கொடுத்தாலும் சுயஅவமதிப்பை சரிசெய்து விட இயலாது.
சுயஅவமதிப்பு ஒரு மனிதனின் இதயத்துக்குள் குடிபுகுந்து சதா தீண்டிக்கொண்டேயிருக்கும் ஒரு நச்சுப்பாம்பு.அது அவனது உயிரோட்டத்தை உறிந்து அதனை விரக்தி,மனித இனவெறுப்பு எனும் விஷத்தோடு கலக்கச் செய்கிறது.
தீர ஆராயப்பட்ட ஓர் குறிப்பிட்ட பணிக்கான ஆற்றலைக் குறித்த சுயகற்பிதங்கள் நாம் செய்கிற மிகப்பெரிய தவறு.அது நம்மீது பழிதீர்த்துக் கொள்கின்றது.அது முழு உலகின் கண்டனத்தைச் சந்திக்காத போதிலும் அப்படிப்பட்ட கண்டனம் தரக்கூடிய வலியைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான வலியை உண்டாக்குகிறது.
இவை எல்லாவற்றையும் ஆராய்ந்தபின்பு நம்முடைய வாழ்க்கை நிலை நாம் விரும்புகிற ஒரு பணியை நாம் தேர்ந்தெடுக்கலாம்.அதானது நாம் முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒரு பணிக்குரிய சத்தியக்கருவை ஆதாரமாகக் கொண்டது.அது மனிதகுலத்திற்குக் கடமையாற்றுகிற அகன்ற வாய்ப்பை வழங்கக்கூடியது.மேலும் அது எல்லாத் தொழில்களும் தங்கள் பொது இலக்காகக் கொண்டுள்ள பூரணத்துவத்திற்கு நம்மை அருகே அழைத்துச்செல்ல வல்லதாக அமைகிறது.
ஒருமனிதனை வேறெதைக்காட்டிலும் மிகவும் உயர்த்தவல்ல உணர்வு மதிப்புணர்வு(FEELING OF WORTH).அது அவனது செயல்களுக்கும் முயற்சிகளுக்கும் உன்னதத்தை ஊட்டுகிறது.அவனை பலவீனமற்றவனாக மாற்றுகிறது.ஜனத்திரளிலிருந்து அவனை உயர்த்தி அக்கூட்டத்தாலேயே பாராட்டச் செய்கிறது.அடிமைத்தனமின்றி எப்பணி சுதந்திரமாக நம்மை நம் எல்லைக்குள் செயல்படச் செய்கிறதோ அதுவே மதிப்புணர்வை உறுதியளிக்கும் பணியாகும்.
நிந்திக்கத்தக்கச் செயல்களை நிர்ப்பந்திக்காத தொழிலே இந்த மதிப்புணர்வை உறுதி செய்யமுடியும்.வெளிப்பார்வைக்குக் கூட நிந்திக்கத்தக்கச் செயல்களை நிர்ப்பந்திக்காத தொழிலை மட்டுமே உன்னதப் பெருமிதத்தோடு பின்பற்ற இயலும்.இதை வெகுவாக சாத்தியப்படுத்தும் தொழிலே நாம் தேர்ந்தெடுக்க ஏதுவான ஒன்று.
மதிப்புணர்வை சாத்தியப்படுத்தாத ஒரு பணி எப்படி நம்மை சிதைத்துவிடுமோ ஒரு பணியின் ஒப்புக்கொள்ளப்பட்ட சத்தியத்தன்மை பின்னாளில் பொய்யென உணரப்படும் நிலை ஏற்படும்போது அதன் வலி தாளாமல் நாம் நொறுங்கிப்போய் விடுவதற்கான வாய்ப்பிருப்பதும் நிச்சயமே.அப்போது நமக்கு புகழிடமாக மிஞ்சுவது சுய ஏமாற்றம்(SELF DECEPTION)மட்டுமே.நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டதற்கான செயலால் நமக்குக் கிடைத்த பரிதாபமான முடிவு.
திடப்படாத கொள்கைகள்,ஸ்திரப்படாத நம்பிக்கைகள் கொண்ட இளைஞனுக்கு யதார்த்த வாழ்வியலோடு பொருந்தாத விழுமியம் சார்ந்த(VALUE BASED)பணிகள் பெரும் அச்சுறுத்தலான பணிகளாகவே அமையும்.அதே வேளையில் அப்பணி நமது இதயத்தில் ஆழமான வேர்விட்டு நமது வாழ்க்கையையும் நம்முடைய முயற்சிகளையும் அந்தப் பணியில் வாழுகின்ற சத்தியத்திற்காக தியாகம் செய்ய முடியுமானால் அதைவிட உன்னதமான பணி வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்தப் பணிக்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உள்ளுணர்வோடு நம்புகிற மனிதனுக்கு அந்தப் பணி மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.
மாறாக எவனொருவன் அவசரகதியில் எண்ணிப்பார்க்காது அந்தத்தருணத்தின் உந்துதலுக்கு ஆட்பட்டு தொழிலைத் தேர்ந்தெடுக்கிறானோ அவனை அத்தொழிலே அழித்துவிடுகிறது.
ஒரு பணி எந்தக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறதோ அவற்றின் மீது மாறாத மதிப்பு கொண்டிருப்பவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்கள்.அவர்களது மதிப்பு உயர்வதோடு மட்டுமின்றி அவர்களது செயல்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஒரு பணியைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையான வழிகாட்டியாக இருப்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் நல்வாழ்வும் தனிமனித பரிபூரணத்துவ முமே(PERFECTION).இவை இரண்டும் ஒருபோதும் எதிரெதிரானவை அல்ல.ஒன்றை அழித்துதான் மற்றது வெளிப்படவேண்டும் என்றில்லை.மாறாக சகமனிதனின் நலனுக்கும் முழுமைக்கும் உழைப்பதன் மூலமாகவே தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும்படியாகவே மனித இயல்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மனிதகுலத்திற்காக அல்லாமல் தனக்காக மட்டுமே ஒருவன் உழைக்கிறான் என்றால் அவன் கற்றறிந்த அறிஞனாக,மாமுனியாக,பெருங்கவிஞனாக ஆகலாம்.ஆனால் அவன் ஒருபோதும் முழுமையான உண்மையான மனிதனாக முடியாது.
பொதுநலனுக்காக உழைப்பதன்மூலம் தன்னை உந்நதப்படுத்திக் கொண்டவர்களையே வரலாறு உயர்ந்தவர்கள் என்று அழைக்கிறது.
எவனொருவன் அதிகமான மக்களை மகிழ்வித்திருக்கிறானோ அவனையே மகிழ்ச்சியான மனிதன் என வாழ்க்கை பதிவு செய்திருக்கிறது.
மனிதகுலத்திற்காக தன்னை தியாகம் செய்துகொண்ட மனிதனையே உலகம் பின்பற்ற விரும்பும் இலட்சிய மனிதன் என மதங்களும் நமக்கு போதிக்கின்றன.இதைப் பொய்யெனச் சொல்ல எவர் துணிவர்?
மனிதகுலத்திற்குப் பணியாற்றுகிற வாய்ப்பை நல்கும் பணியை நாம் மேற்கொண்டுவிட்டோமேயானால் எந்தச்சுமையும் நம்மை அழுத்த முடியாது.ஏனென்றால் அவை எல்லோருடைய நலனுக்காகவும் செய்கின்ற தியாகம்.
அப்போது நாம் அனுபவிக்கின்ற மகிழ்ச்சி சிறுமையானதாக,எல்லைக்குட்பட்டதாக,சுயநலம் கொண்டதாக இருக்காது.ஆனால் நம்முடைய மகிழ்ச்சியானது கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமாக இருக்கும்.
நம்முடைய செயல்கள் அமைதியாக அதே நேரத்தில் தொடர்ச்சியாக நம்முடைய பணியில் பரிமளிக்கும்.
நம்முடைய சாம்பலை உந்நத மனிதர்களின் கண்ணீர் ஈரமாக்கும்.
- Reflections of a Youngman on the Choice of a Profession என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்