நிறம் மாறும் பிள்ளையார் !
அறிவியலா? ஆன்மிகமா?
வாதாபி, கோட்டைச்சுவரிலிருந்த ‘கணபதியை’, பரஞ்சோதிப் பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்தது முதல், தமிழகத்தில் கணபதி வழிபாடு துவங்கியதாகச் சொல்லப்படுகிறது. அனைத்து ஊர்களிலும், தெருக்களிலும், வீடுகளிலும், முச்சந்திகளிலும், அலுவலகங்களிலும், ஆற்றங்கரைகளிலும், குளத்தங்கரைகளிலும் என இந்த கணபதி ஏற்கனவே இந்த மண்ணில் இருந்த கடவுளர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தது எப்படி என்பது மிகவும் வியப்பாகவே உள்ளது.
நம்முடைய அரசமரம்தான் வடக்கே ‘போதிமரம்’. கணபதி இருக்கும் இடமெல்லாம் அரசமரம் இருப்பதைப் பார்க்கும்போது, அரசமரத்தடியில் வீற்றிருந்த ‘புத்தர்’களையெல்லாம் அகற்றிவிட்டு, அருகில் உள்ள ஆற்றில் , குளத்தில் ’ஜலசமாதி’ செய்துவிட்டு, அங்கு இந்த கணபதி இடம் பிடித்திருக்கலாம் என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. எண்ணாயிரம் சமணர்களை ஈவு இரக்கமின்றி ‘கழுவேற்றம்’ செய்த தமிழகத்தில், புத்தர் சிலைகளை அகற்றுவது அவ்வளவு கடினமான செயலா என்ன?
வாதாபியிலிருந்துவந்த ‘கணபதி’, புத்தர் சிலைகளை அகற்றியதோடு நிற்காமல், தமிழ் மண்ணுக்குச் சொந்தமான முருகனை ‘சுப்ரமணியன்’ ஆக்கி, அவனுக்கு அண்ணனும் ஆன அரசியல் ஆய்வுக்குரியது.. (முருகு, முருகனானது தனி அரசியல்)
நம் சமகாலத்திலும்கூட பிள்ளையார் சதுர்த்தி அன்று, ‘விநாயகர் விசர்ஜனம்’ என்னும் பெயரில் வடமொழி திணித்தலுக்கும், மதமோதல்களைத் தூண்டுவதற்கும், அந்தக் ‘கணபதியே’ மத அடிப்படைவாதிகளுக்குப் பயன்படுகிறார்(!) என்பதையும் நாம் பார்த்துவருகிறோம்.
திருவண்ணாமலை அரசுக்கலைக்கல்லூரியில் 12 ஆண்டுகள் பணியாற்றினேன். திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில்,அமைந்திருக்கும் வேட்டவலத்திற்கு அருகில் நாரையூர் என்னும் அழகிய கிராமம் உள்ளது. அந்த ஊரில் இராமச்சந்திரன் என்று ஒரு சித்த, ஆயுர்வேத மருத்துவர் இருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோசியம் பார்ப்பதிலும் வல்லவர். மருத்துவத்தில் LIMP பட்டையப் படிப்பும் படித்தவர். நாடிபார்த்துத் துல்லியமாக நோய் அறிந்து சொல்லும் வல்லமைகொண்டவர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவண்ணாமலைக்கு வந்து, ஒரு நண்பர் வீட்டில் தங்கி மருத்துவம் செய்துவந்தார். அதனால் அவர் ‘சனிக்கிழமை டாக்டர்’ என்று எளிய மக்களால் அழைக்கப்பட்டார். அவரிடம் நோயாளியாகச் சென்று அறிமுகமானேன். அது பழக்கமாகி, நட்பாக மாறியது. மூலிகைகளை அடையாளம் காணும் திறமையும், சித்த மருத்துவத்தில் எனக்கு இருந்த ஆர்வமும், அவரை எனக்கு ஆசானாக்கியது. பல மூலிகைகளையும், அவற்றின் நோய்தீர்க்கும் பண்புகளையும் எனக்குச் சொல்லித்தந்தார்.
அவரிடம் மருத்துவம் கற்றுக்கொண்டு,.நான் முதன்முதலில் எனது இரண்டரை வயது மகளுக்குத்தான் மஞ்சட்காமாலைக்கு மூலிகை கொடுத்துக் குணப்படுத்தினேன்., அதன்பிறகு இருபதுக்கும் மேற்பட்ட மஞ்சட்காமாலை நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறேன்.
சித்த மருத்துவர் இராமச்சந்திரனைப்பற்றி நான் இங்கே குறிப்பிடுவதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. நான் திருவண்ணாமலையிலிருந்து, மன்னார்குடிக்கு பணியிடமாற்றம் பெறும்வரை பத்து ஆண்டுகள் அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். மருத்துவம் காரணமாக, திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு அவருடன் சென்றிருக்கிறேன். அவற்றில் சில மலைக்கிராமங்களும் உண்டு. அப்படிச் செல்லும்போது அங்குள்ள கோயில்களுக்கும் கூட்டிச் செல்வார். அப்படி ஒருமுறை, திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்த சோமாசிபாடி முருகன் கோயிலுக்குச் சென்றோம்.
குன்றின்மீது ஏறி முருகனை வணங்கிவிட்டு, கீழே இறங்கியதும், குன்றின் அடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய தடாகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அந்தத் தடாகத்தின் நீரின் மேற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த ஒரு தாவரத்தைச் சுட்டிக்காட்டினார். அந்த செடியில், ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று ஒரேஒரு பூ பூப்பதாகவும், அந்தப்பூவைப்பறித்து, முருகனுக்கு வழிபாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.
கண்களை அகல விரித்து அவரை நோக்கியபோது, அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்றது.
ஒவ்வொரு கிருத்திகைக்கும், ஒரேஒரு பூ பூப்பது இயற்கையும் அல்ல, இறைவன் அருளும் அல்ல என்றார்.
அந்த செடிக்கு மருத்துவம் செய்து, கிருத்திகை முதல் கிருத்திகை வரை, பூ பூக்கும் காலக்-கடிகாரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அதனைச் செயல்படுத்தியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள் என்றார்.
அவர்,.ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவர். ஆனாலும் மருத்துவம் அறிந்தவர் என்பதால் அந்த செய்தியை உறுதியாக அவரால் வெளிப்படுத்த முடிந்தது.
இது சாத்தியமே என்பதற்கான அறிவியலையும் பார்க்கலாம். பூமி, சூரியனைச் சுற்றும்போது, தன்னைத்தானே சுற்றுகிறது என்பதை நாம் அறிவோம். அதனால்தான், இரவும், பகலும் மாறிமாறி வருகின்றது.. பூமி, ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதற்கு ஆகும் காலம் 24 மணி நேரம்.. அந்த 24 மணிநேரத்துடன் ஒருங்கிசைவு (rhythm), கொண்டு மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் என்று இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு திசுவிலும் ஒரு 24 மணி நேர உயிரியல் கடிகாரம் (bio-clock) இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்துத் திசுக்களின் உயிரியல் கடிகாரங்களையும், மூளையில் உள்ள ஒரு தலைமைக் கடிகாரம் (Master Clock) கட்டுப்படுத்துகிறது. மனிதர்கள் உள்ளிட்ட முதுகெலும்பு உள்ள உயிரினங்களில், தலைமைக் கடிகாரம் என்பது, மூளையின் ஒரு பகுதியான முகுளத்தில் அமைந்த ஏறத்தாழ 20,000 நியூரான்களால் (neurons or nerve cells) ஆன தொகுப்பு ஆகும்.
முகுளத்தில் (hypothalamus) அமைந்திருக்கும் ஒரு உயிரி-வேதியல் அலைஇயற்றி (bio-chemical Oscillator) 24 மணி நேரத்துடன் ஒருங்கிசைவதற்குத் தேவையான உயிரியல் சைகைகளை (bio-signals) உருவாக்குவதன் வழியே, தலைமைக் கடிகாரமாகச் செயல்படுகிறது.
ஒரு மனிதனின் உடல், மனம், நடத்தையில், ஒவ்வொரு நாளும், அதாவது 24 மணி நேரத்தில், திரும்பத்திரும்ப நிகழும் இயற்கைமாற்றங்கள், ‘உயிரியல்-ஒருங்கிசைவு’ (Circadiation Rhythms) எனப்படுகிறது. உயிரியல் கடிகாரங்கள் (bio-clocks),, உயிரியல்-ஒருங்கிசைவுகளை (Circadiation Rhythms) உருவாக்கவும், அவற்றின் காலத்தை ஒழுங்குபடுத்தவும் செய்கின்றன
இந்த ‘உயிரியல்-ஒருங்கிசைவு’ (Circadiation Rhythm) உடல் உறுப்புகளின் சுற்றுப்புறம் சார்ந்த ஒளி மற்றும் இருளை அடிப்படையாகக் கொண்டது. இரவில் உறங்கி, பகலில் விழிப்பதை, உயிரியல்-ஒருங்கிசைவுக்கான ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.. சூரிய ஒளி, உயிரியல் கடிகாரங்களின் மூலக்கூறு அமைப்பைக் கட்டுப்படுத்தும் உயிரணுக்களைத் (jenes) திறக்கவும், மூடவும் செய்கிறது. :
உறங்கி-விழித்தல், சுரபிகளில் திரவம் சுரத்தல் , உணவு உண்ணல் மற்றும், செரித்தல், உடல் வெப்பநிலை, பெண்களின் மாதாந்திர மாதவிடாய், குளிர் நிலங்களில் வாழும் விலங்குகளின் நீள்உறக்கம் (hibernation cycle) என்பன, ‘உயிரியல்-ஒருங்கிசைவுக்கான’ (Circadiation rhythms) சில எடுத்துக்காட்டுகள். காலஒருங்கிசைவுடன் இதயம் இயங்குவதற்கும் (துடிப்பதற்கும்)கூட, ‘உயிரியல்-ஒருங்கிசைவே’ காரணம் என்று சொல்லப்படுகிறது.
மனிதர்களைப்போலவே, தாவரங்களிலும் விதைமுளைத்தல், தாவரவளர்ச்சி, வாயுப்பரிமாற்றம், ஒளிச்சேர்க்கை, பூ விரிதல், நறுமண வெளியீடு, இலைகளிலும் தண்டுகளிலும் உள்ள துளைகள் திறத்தலும் மூடலும் மற்றும் இலையுதிர்தல் போன்ற அனைத்து தாவரச்செயல்களுக்கும், ‘உயிரியல்-ஒருங்கிசைவே’ (Circadiation rhythms) காரணம் என்கிறது அறிவியல்.
இப்படிப்பட்ட ‘உயிரியல் ஒருங்கிசைவு’ பற்றிய புரிதலும் இருந்த காரணத்தால், ஒரு பூ பூப்பதற்கும், அடுத்த பூ பூப்பதற்குமான காலத்தை மாற்றி அமைக்கவும் முடியும் என்னும் அறிவியலையும், நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்தார்கள் என்று நாம் நம்புவதற்கும் இடம் உள்ளது. அதன் காரணமாகவே சோமாசிபாடி முருகன் கோயில் தடாகத்தில் ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒரு பூ பூக்கிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒரு “அற்புத நிகழ்வு’ பற்றிச் சொல்லவேண்டும். கும்பகோணம் அருகே உள்ளது திருநாகேஸ்வரம் என்னும் திருத்தலம். இங்கு உள்ள சிவன்கோயில் வெளிப்பிரகாரத்தில், ‘ராகு’ சிலை ஒன்று உள்ளது. ராகு என்றால் நாகப்பாம்பு அல்லவா? நாகப்பாம்பு என்றால் நஞ்சும் உண்டுதானே? .நஞ்சேறிய உடல் கருநீல நிறத்திற்கு மாறும் அல்லவா? அப்படி மாறினால்தானே அப்பாவி பக்தன் கடவுளை நம்புவான்.
அந்த ராகு சிலைக்குப் பால் அபிஷேகம் நடைபெறும்போது நான் நேரில் பார்த்திருக்கிறேன். பால் அந்த சிலையின்மீது வழியும்போது, கருநீல நிறத்தில் தெரிகிறது.. ஆனால், சிலையைவிட்டுக் கீழே வழிந்த பிறகு அந்தப்பால் மீண்டும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடுகிறது. ஆக பால், நிறம்மாறவில்லை. மாறாக, பால் சிலையில் வழியும்போது நீலநிறம் தோன்றும் விதத்தில் அந்த சிலையை, சித்த மருத்துவம் அறிந்த ஒரு கல்தச்சன் படைத்திருக்கிறான் என்பது நன்றாகவே புரிகிறது. அதில் உள்ளது அறிவியலே அன்றி ஆன்மிகம் அல்ல.
கன்னியாகுமரி மாவட்டத்தில், பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிப்பார்த்துவிட்டு, தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயிலுக்கு, நான் முதன்முதலாகச் சென்றபோது ஒரு மிகப்பெரிய அரசமரத்தடியில், ஒரு கல் பிள்ளையார் சிலை இருப்பதைக் கண்டேன். அந்த பிள்ளையார் ஆறுமாதம் கருப்பாகவும், அடுத்த ஆறுமாதம் வெளுப்பாகவும் நிறம் மாறிக்கொண்டே இருக்கும் என்று அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள்.
‘கேரளவர்மன் என்கிற மன்னன், ராமேஸ்வரம் சென்று, அங்குள்ள கடலில் குளித்தபோது, அவரால் கண்டெடுக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டு, கேரளபுரத்தில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டதுதான் அந்த நிறம் மாறும் பிள்ளையார் என்று கோயிலைச் சேர்ந்தவர்கள் தல புராணமாகச் சொல்கிறார்கள்.அந்த மன்னன் பெயராலேயே, அந்த ஊர் கேரளபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
சித்திரை மாதம் முழுவதும் கருமை நிறத்திலும், கார்த்திகை மாதம் வெள்ளை நிறத்திலும் காட்சிதரும் இந்தப் பிள்ளையார், மற்ற மாதங்களில் கருப்பிலிருந்து வெள்ளைக்கும், மீண்டும் வெள்ளையிலிருந்து கருப்புக்கும் நிறம் மாறிக்கொண்டிருப்பார். வெள்ளை என்றால், தூய வெள்ளை அல்ல. கருமையை ஒப்பிட வெள்ளை, அவ்வளவுதான். நிறம் மாறிக்கொண்டே இருப்பதால், பெரும்பாலும் ‘கருப்பு – வெள்ளை ‘ பிள்ளையாராகவே காட்சியளிக்கிறார்.
இது இறைவன் அருள் என்று ஆன்மிகவாதிகள் நம்புகிறார்கள். ஆனாலும், சோமாசிபாடி முருகன்கோயில் தடாகத்தில் கிருத்திகை அன்று மட்டும் பூக்கும் ஒரேஒரு பூ, மருத்துவர்களால் காலச்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டது என்று நாரையூர் டாக்டர் ராமச்சந்திரன் சொன்ன செய்தி, என்னை வேறுவிதமாகச் சிந்திக்கத் தூண்டியது. இதுவும்கூட அப்படி ஒரு மனிதனின் செயலே என்னும் முடிவுக்கு இட்டுச்செல்கிறது.
கொட்டை இல்லாத திராட்சை, குஞ்சு பொரிக்காத முட்டை, முட்டை இடாத கோழி, விதையில்லா (மலட்டு) தானியம், சோதனைக்குழாய்க் குழந்தை, குளோனிங்க் செய்யப்பட்ட ஆடுகள் உள்ளிட்ட, இற்கைக்கு மாறான இன்றைய சமகால அறிவியல் சாதனைகள், தாவரத்தின் பூ பூக்கும் காலக்கடிகாரம் ஒரு மனிதனால் சரிசெய்யப்பட்டது என்னும் கடந்தகால நிகழ்வை அறிவியலாக ஏற்பதில் உள்ளத் தயக்கத்தைப் போக்குகிறதுதானே?
கன்னியாகுமரி மாவட்டத்தில், மயிலாடி என்னும் ஊரில் இன்றும்கூட சிலைசெய்யும் தொழில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிலை செய்வதற்கான கல்லும் இந்த மாவட்டத்தில் தாராளமாகக் கிடைக்கிறது. சித்தமருத்துவம், ஆயுர்வேதம், வர்மக்கலை போன்ற பாரம்பரிய மருத்துவத்துறைகளில் சிறந்துவிளங்கிய பலர் வாழ்ந்த, வாழ்கின்ற மாவட்டமும் ஆகும். மாத்திரமல்ல, அனைத்துவிதமான மூலிகைகளும் இம்மாவட்டத்தில் உண்டு.
எனவே கேரளபுரம் பிள்ளையாரும்கூட, இந்தப்பகுதியைச் சேர்ந்த சித்தமருத்துவம் அறிந்த ஒரு கல்தச்சனின் கைவண்ணமாகவே இருக்கக்கூடும் என்று நம்பலாம். குறிப்பாக, பிள்ளையார் சிலை செய்வதற்கு அப்படி ஒரு கல்லைத் தெரிவு செய்ததுகூட, கல்தச்சனின் அறிவியல் அறிவாக இருந்திருக்கக்கூடும். கல்லில் ஏழிசையைக் கொண்டுவந்தத் தமிழனுக்கு, இது முடியாதா என்ன?
பிள்ளையார் பால் குடித்தாரா?
தெற்கு புதுடில்லியில், 1995 செப்டம்பர் 21 அன்று அதிகாலையில், ஒரு பிள்ளையார் கோயிலுக்கு ஒரு பக்தர் செல்கிறார். வழக்கம்போல், கிண்ணத்தில் இருந்த பாலில் ஒரு கரண்டி(Spoon) எடுத்து, அதனை பிள்ளையாரின் தும்பிக்கைக்குக் கீழே வைக்கிறார். என்ன அதிசயம். பால் மறைந்துவிட்டது. மீண்டும் அவர், கரண்டியில் பால் எடுத்து அது போலவே செய்கிறார். அந்தப் பாலும் காணாமல் போய்விட்டது. அவ்வளவுதான், அந்த நபர் கத்தி, கூச்சல் போட்டு, கூட்டம் கூட்டி, ‘ பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்கிறார். அதன் பிறகு சொல்லவா வேண்டும்? அந்த அதிசயத்தைப் பார்க்க, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அது மட்டுமல்ல, விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) என்னும் இந்து அமைப்பு அந்த செய்தியை உலகம் எங்கும் எடுத்துச் சென்றது. அப்புறம் என்ன, அமெரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ள அனைத்துப் பிள்ளையார்களும் பால் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பிள்ளையார் உண்மையிலேயே பால் குடித்தாரா? அறிவியல் என்ன சொல்கிறது?
இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைக்கான அமைச்சகத்தைச் சேர்ந்த அறிவியலாளர், ரோஸ் மெக்டோல் (, Ross McDowall) பால் குடித்த பிள்ளையாரை ஆய்வு செய்யும் நோக்கில் அங்கு செல்கிறார். பாலில் ஒரு சாயத்தைக் கலந்து, ஒரு கரண்டியில் எடுத்து பிள்ளையாரின் தும்பிக்கைக்குக் கீழே வைக்கிறார்.. அவரது கரண்டியில் இருந்த பாலும் காணாமல் போனது. ஆனால், காணாமல் போன பால், கரண்டியின் அடிப்பகுதியில், பிள்ளையாரின் பீடத்தில் உறைந்திருந்ததை அவர் கண்டார்.
புவியீர்ப்பு விசை காரணமாக பால் கீழே வழிந்து ஓடுவதற்கு முன்பாகவே, பாலின் பரப்பு இழுவிசையும் (surface tension), நுண்புழை விளைவும் (capillary effect) சேர்ந்து கரண்டியை விட்டு பாலை வெளியேற்றிவிடுவதாக அறிவியல் அடிப்படையில், ரோஸ் மெக்டோல் அந்த நிகழ்விற்கு விளக்கம் அளித்தார்.
ஆக, பிள்ளையார்கள் பால் குடித்தற்கு, திரவங்களின் பரப்பு இழுவிசையும், நுன்புழை விளைவுமே காரணம் என்று ஆனது.
அது முழுக்கமுழுக்க அறிவியல் நிகழ்வே தவிர, ஆன்மிக அதிசயம் எதுவும் இல்லை என்பதும் நிரூபிக்கப் பட்டது.
கண்ணால் பார்க்கும் எதையும், கண்மூடித்தனமாக அப்படியே நம்ப கூடாது, அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து அறிந்து,, அதன் பிறகே முடிவுக்கு வர வேண்டும் என்பதற்கு, இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது.