ஜூலியன் அசாஞ்சே: நாம் அறிந்திர இயலாத யுத்தம்
நம் காலத்தின் தன்னேரில்லாத தனிமனிதன் ஜூலியன் அசாஞ்சே. புதியதொரு தொழில்நுட்பத்தை மக்கள் சார்பாக மாற்றிய சிந்தனையாளன் அவன். ஊடகத்தைச் சமூகத்தின் நான்காவது தூண் என்கிறோம். சமூகத்திற்கும் அரச அதிகாரத்திற்கும் ஆன உறவில் என்றும் சமூகத்தின் பக்கம் நிற்கவேண்டியது ஊடகவியலாளனின் கடமை. சோசலிச நாடுகளில் சுயாதீன ஊடகம் என்பதே இல்லை. லிபரல் ஊடக அறம் என்பது போலித்தனம். அசாஞ்சே ‘உளவறிந்தார்’ என்ற கருத்தாக்கத்தை நியூயார்க் டைம்ஸ், த கார்டியன் போன்ற லிபரல் ஊடகங்கள் ஏற்கின்றன. மக்கள் நலன் என்று வருகிறபோது எந்த அரச அதிகாரமும் அம்பலப்படுத்தப்பட வேண்டியதுதான். அதுவே ஊடகவியலாளனின் கடமை. அசாஞ்சே தண்டிக்கப்படுவாரானால் அன்றைய நாள் உலகின் ஊடகவியல் அறத்தின் அந்திம நாள். அரசுகளின் அச்சமூட்டல் மட்டுமே அப்போது மிச்சம் இருக்கும். அஞ்சா நெஞ்சன் என்பதற்கு வாழும் உதாரணம் ஜூலியன் அசாஞ்சே..
அசாஞ்சேவுக்கு வெளிப்படையான தமது ஆதரவைத் தெரிவித்திருப்பவர்களில் மொழியியலாளரும் மனித உரிமையாளருமான நோம் சாம்ஸ்க்கி, இடதுசாரிக் கோட்பாட்டாளரான தாரிக் அலி, மனித உரிமையாளரான பியானா ஜாக்கர், இங்கிலாந்து நாவலாசிரியர்களான ஏ.எல்.கென்னடி மற்றும் ஹனிப் குரேஸி போன்றவர்களும் உள்ளிடுவர்.
இரண்டு நாடுகள் அவரைக் குற்றவாளி எனத் தேடி அலைந்து கொண்டிருந்தன.
ஐக்கிய அமெரிக்கா முதலாவது நாடு. ஸ்வீடன் இரண்டாவது நாடு. ஸ்வீடன் நாட்டுப் பிரஜைகளான இரண்டு பெண்களை அசாஞ்சே வன்புணர்வுக்கு உட்படுத்தினார் எனத் தேடித்திரிகிறது ஸ்வீடன் அரசு. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களைத் திருடி உளவுவேலை செய்ததாக அசாஞ்சேவைத் தேடித் திரிகிறது அமெரிக்க அரசு.
சமவேளையில் ஸ்வீடன் வழியாகவோ அல்லது பிரித்தானியாவிலிருந்து நேரடியாகவோ அசாஞ்சேவை அமெரிக்காவுக்குக் கடத்திச் சென்று அவர் மீது உளவுபார்த்ததாக வழக்குத் தொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
அசாஞ்சேவின் வழக்கு சிலருக்கு ஊடக வியாபாரத்திற்குக் கவர்ச்சிகரமான வழக்கு. ‘அசாஞ்சே’ மற்றும் ‘வன்புணர்வு’ என இரு சொற்களை கூகிளில் தேடினால் இருபது இலட்சம் பதிவுகள் வருகின்றன. டிவிட்டர் பேஸ்புக் என அசாஞ்சே விருப்புடன் பாலுறுவு கொண்ட இரு ஸ்வீடன் பெண்களின் முன்னைய பதிவுகள், அவர்களது தளங்களில் ‘வன்புணர்வு வழக்கின் பின்’ அடித்தலுக்கும் திருத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. ‘வன்புணர்வு’ வழக்கிலிருந்து நாம் துவங்குவதா, அன்றி இந்த வழக்கின் பின்னுள்ள ஐந்துவருட கால ‘அரசியலில்’ இருந்து நாம் துவங்குவதா?
1971 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிறந்த ஜூலியன் அசாஞ்சே ஒரு நித்திய நாடோடி. மூன்று முறை மணம்செய்து கொண்ட தாயுடன் வாழ்ந்த அன்புத் தனயன். தனது திருமணத்தில் பிறந்த ஒரு மகனைத் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பிய, அதற்காகத் தனது விவாகரத்துப் பெற்ற மனைவியுடன் பல்லாண்டுகள் போராடிய தனியன். அந்த வழக்கின் போக்கில் சகலரும் குழந்தைக் காபந்து தொடர்பான சட்டமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலில் ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி அதனை இலவசமாக முன்வைத்தார் அசாஞ்சே.
ஆறு பல்கலைக் கழகங்களில் கணிதமும் பௌதிகமும் அதனோடு நரம்பியலும் தத்துவமும் பயின்ற, ‘ஒரு போதும் பட்டப்படிப்பு முடித்திராத’ ஒரு கணணியியலாளன். அரசு மற்றும் நிறுவனங்களின் கணணிகளுக்குள் அத்துமீறி நுழைந்து – ஹாக்கிங் – அதனை பெருவிருப்புடன் இன்றும் செய்ய விரும்பும் சாகசவாதி. அவுஸ்திரேலியா, கென்யா, தான்சானியா, ஐஸ்லாந்து, ஸ்வீடன், இங்கிலாந்து என அலைந்து திரிந்த, நிரந்தமான முகவரி அற்ற ஒரு மனிதன்.
அவரது பிணையின்போது அவரால் ஒரு நிரந்தரமான முகவரி தர இயலாததால், முதலில் ஒரு தபால்பெட்டி இலக்கத்தையும், பிற்பாடு ஒரு அவுஸ்திரேலிய நகரத்தின் பெயரையும் அவர் குறிப்பிட்டார். நிரந்தரமான முகவரி அற்ற அவருக்கு அந்தக் காரணத்தினாலேயே முதலில் பிணை மறுக்கப்பட்டது. பிற்பாடு பிரன்ட்லைன் கிளப் நிறுவனரின் விருப்புடன் அவரது வீட்டுமுகவரி தரப்பட்ட பின்னால் ஜூலியன் அசாஞ்சே பிணையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட உலகின் கலைஞர்களாலும் ஊடகவியலாளர்களாலும் மனித உரிமையாளர்களாலும் போற்றப்படுகிற ஜூலியன் அசாஞ்சே தனது கணணி அறிவை பரந்துபட்ட சமூகத்திற்கான நல்விளைவுகளுக்காக அர்ப்பணித்தார். மனித உரிமையாளர்கள் பாவிப்பதற்கெனவே, அரசுகளிடமிருந்து தப்பிக்கிற மாதிரியிலான சங்கேத கணணி மென்பொருள்களை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கணணி மென்பொருள்கள் அனைத்தையும் அவர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாகவே அளித்தார்.
அவரே சொல்கிறபடி அனைத்து அரசியல் கருத்தியல்களும் தோற்றுப் போன காலத்தில் நாம் வாழ்கிறோம் என அவர் கருதினார். தனது உலகப் பார்வை இடது அல்லது வலது என்பதற்கு அப்பாலான பார்வை கொண்டது என்கிறார் அசாஞ்சே. தகவல்களின் நிஜம் அல்லது பொய் என்பதனை அறியாத நம்பிக்கைகளில் மேற்கொள்ளப்படும் அரசியல், அதனையொட்டிய கருத்தியல், ‘தகவல் அறிதலின் நிஜம் அல்லது பொய்’ என்பதன் அடிப்படையிலேயே அமையும் என்பதால் தகவல்களின் ‘அறிந்திராத பக்கத்தைத் தேடி முன்வைப்பதே’ தனது நோக்கம் என்கிறார். அரசுகள் மற்றும் நிறுவனங்களின் மறைபக்கங்களையும் ஊழல்களையும் உளவுவேலைகளையும் அம்பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை அகலிக்கவும் சமூக அமைப்பில் மாற்றங்களை உருவாக்கவும் முடியும் என அவர் கருதினார்.
அரசு மற்றும் அதிகாரம் கொண்ட நிறுவனங்களைக் குலைப்பதன் மூலம் ஜனநாயகபூர்வமான சமூகத்தை விளைவதே தனது இலக்கு எனவும் அவர் அறிவித்தார். இடதுசாரி அரசியல் மரபை அறிந்தவர்க்கு ஜூலியன் அசாஞ்சேவின் இயங்குதளம் அராஜியவாத தளம் – அரசுநிறுவனங்களுக்கு எதிரான தளம் – என்று புரிந்து கொள்வது இயல்பானது. இதன் காரணமாகவே அசாஞ்சேவின் நடவடிக்கைகள் கடும் அரசியல் அதிர்வுகளை உலகெங்கிலும் ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகள் மட்டுமல்ல சீனா, ஈரான் போன்ற எதேச்சாதிகார அமைப்புக்களும் அசாஞ்சேவுக்கு எதிர்நிலைகளையே கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஆதிக்கத்தினால் பாதிப்புறும் வெனிசுலா, ரஸ்யா போன்ற நாடுகள் அசாஞ்சேவை வெளிப்படையாக ஆதரித்திருக்கிறன்றன. அசாஞ்சேவை சமாதான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்குமாறு ரஸ்யா கோரியிருக்கிறது.
அசாஞ்சே எனும் பெருநிகழ்வு மெல்ல மெல்லவே அதனது விளைவுகளை காட்டிக் கொண்டு வந்திருக்கிறது. 2006 ஆம் ஆண்டு அசாஞ்சேவினது தலைமைப் பொறுப்பில் ஆசியா, ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு போன்ற நாடுகளிலுள்ள கொடுங்கோன்மை அரசுகள், அவைகளினது ஊழல், சர்வாதிகாரர்களின் காட்டாட்சி, அவர்தம் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவது என்பதாகவே விக்கிலீக்சின் நடவடிக்கைகள் துவங்கியது. கென்யா, பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் குறித்த மனித உரிமை மீறல்களையே அது துவக்கத்தில் வெளிப்படுத்தி வந்தது. இந்தக் காரணங்களுக்காக, கென்யப் படுகொலைகளை வெளிப்படுத்தியதற்காக, 2008 ஆம் ஆண்டு அம்னஸ்டி இன்டர்நேசனல் விருதையும், 2009 ஆம் ஆண்டு இன்டக்ஸ் ஆன் சென்சர்ஷிப் விருதையும் அசாஞ்சே பெற்றார்.
மேற்கல்லாத நாடுகளின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துவது அமெரிக்காவுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ உவப்பல்லாத விஷயங்கள் இல்லை. மாறாக, அமெரிக்கா அல்லது மேற்கல்லாத நாடுகளின் அரசியலில் தலையிடுவதற்கான ஒரு முகாந்திரத்தையே இது அவர்களுக்கு வழங்கி வந்தது.
விதி வலியது. அசாஞ்சேவின் அரசுநிறுவன எதிர்ப்பு அங்கேயே முற்றுப் பெறவில்லை. இந்த மூன்றாம் உலக நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளின் காவலர்களாகவும், இந்த நாடுகளைச் சீர்குலைக்க உளவு வேலை பார்க்கிற கொலையாளிகளாகவும், மூன்றாமுலகின் கொடுங்கோலர்களுடன் சமரசம் செய்கிற, அவர்களை தமது வழிக்குக் கொண்டு வர மனித உரிமையை ஒரு கருவியாகப் பாவிக்கிறவர்களாகவும் அமெரிக்க மேற்கத்திய நாடுகள் இருந்ததையும் அசாஞ்சே அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்.
2006 ஆம் ஆண்டு தனது தகவல் அம்பலப்படுத்தல்களைத் துவங்கிய விக்கிலீக்ஸ் இதுவரை எதனையெல்லாம் அம்பலப்படுத்தியிருக்கிறது? 2010 ஆம் ஆண்டு இறுதியில், விக்கிலீக்ஸ் துவங்கி 5 ஆண்டுகளின் பின் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அசாஞ்சேவை வேட்டையாட வேண்டிய காரணம்தான் என்ன?
2006 முதல் 2009 வரை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய ஆவணங்களில் முக்கியமானது ஆப்ரிக்க நாடான கென்ய அரச ஆயுதப்படைகளால் 1,333 வெகுமக்கள் கொல்லபட்ட கென்ய சம்பவம், ஸ்விஸ் வங்கிகள் மற்றும் பார்க்கிலேஸ் வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்கள், பிரித்தானியாவின் வெள்ளை இனவாதக் கட்சியான பிரிட்டிஸ் நேசனல் பார்ட்டியின் உறுப்பினர்களின் பட்டியல் போன்றனவாகும். இந்த அம்பலப்படுத்தல்கள் மேற்கத்திய அமெரிக்க அரசநிறுவனங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு அவர்களைப் பொறுத்து பெருவெடிப்பு நிகழ்ந்த காலம். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி, ‘கொலெட்டரல் டேமேஜ்’ எனும் பெயரில் 2007 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன ஊழியர்கள் உள்பட ஈராக்கிய பொதுமக்கள் அமெரிக்க வானூர்திகளின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட நிகழ்வின் ஒளிநாடா விக்கிலீக்சில் பதிவு செய்யப்பட்டது. 2010 ஜூலை 25 ஆம் திகதி, ஆப்கானிஸ்தான் பற்றிய அமெரிக்க யுத்தக் குறிப்பேடு பதிவுசெய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி, ஈராக் குறித்த அமெரிக்க யுத்தக் குறிப்பேடு பதிவு செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி, அமெரிக்கத் தூதரகங்கள் உலக நாடுகளிலிருந்து அமெரிக்க அரசுக்கு அனுப்பிய 2,50,000 செய்திக்கோப்புகள் பதிவுசெய்யப்பட்டன.
2010 ஆம் ஆண்டு எப்ரல் 5 ஆம் திகதி முதல், நவம்பர் 28 ஆம் திகதி வரை, விக்கலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகெங்கிலும் நடத்தி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான அதனது ‘புனித’ யுத்தத்தின் இலட்சணம் தொடர்பானது. உலக நாடுகளின் அரசுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், கட்சிகள், ராஜாங்க நபர்கள் போன்றவர்கள் பற்றிய அமெரிக்க அரசின் உளவறிதல்களை, மறைதிட்டங்களை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. உலகுக்குத் தெரியாமல் அமெரிக்க ராணுவம் கொன்று குவித்த பிறநாட்டு மக்கள் குறித்த தகவல்களை இந்த ஆவணங்கள் வெளியிடுகின்றன. ஓரு புறம் பயங்கரவாதம், மனித உரிமை மீறல் எனப் பேசிக் கொண்டே மறுபுறம் பிறநாடுகளில் பயங்கரவாதத்தையும் மனித உரிமை மீறல்கள் புரிந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஆதரித்து வந்திருக்கின்றன என்பதனை இந்த ஆவணங்கள் பதிவு செய்திருக்கின்றன.
அமெரிக்க அரசினதும் மேற்கத்திய அரசுகளினதும் கைகளில் பிறநாட்டு மக்களின் இரத்தம் படிந்திருக்கின்றது என்பதனை அவர்களது வாய்ச்சொற்களினாலேயே இந்த ஆவணங்கள் பதிவு செய்திருக்கின்றன. கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவான காத்திரமான மரபு கொண்ட அமெரிக்க-மேற்கத்திய ஊடகவியலாளர்களிடமும் அறிவுஜீவிகளிடமும், வெகுமக்களிடமும் இந்த அம்பலப்படுத்தல்கள் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த அமெரிக்க அரசின் பயங்கர முகத்தினை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துவதால், ஜூலியன் அசாஞ்சேவின் குரலை அறவே நிறுத்திவிட அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் களமிறங்கி இருக்கின்றன.
பின்லாடன் போன்றே ஜூலியன் அசாஞ்சேவும் ‘பயங்கரவாதி’ என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், அவரது வாய் அடைக்கப்பட வேண்டும், அவர் கொல்லப்பட வேண்டும் என அமெரிக்கக் குடியரசுக் கட்சி அரசியல்வாதியான சாரா பாலின் முதல், பாக்ஸ் நியூசின் ஊடகவியலாளர்கள் வரை அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். அசாஞ்சேவின் சொந்த நாடான அவுஸ்திரேலியாவின் பிரதமர் அசாஞ்சேவின் கடவுச்சீட்டு திரும்பப் பெறப்படும் என அறிவித்திருக்கிறார். தான் அரசியல் அடைக்கலம் கோர விரும்புவதாக அசாஞ்சே அறிவித்த ஸ்விட்சர்லாந்து அரசுக்கு கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என ஸ்விஸ் அமெரிக்கத் தூதர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த அரசியல் பின்னணிகளில் இருந்து ஜூலியன் அசாஞ்சேவின் ‘வன்புணர்வு’ தொடர்பான நாடகீயமான வழக்குமன்றக் காட்சிகளை நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் ஸ்வீடிஸ் அதிகாரிகளால் அசாஞ்சே மீதான கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் அந்த உத்திரவு சரியான ஆதாரங்கள் இல்லை எனும் காரணத்தினால் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டது. பிற்பாடாக 10 நாட்கள் கழித்து, செப்டம்பர் 1 ஆம் திகதி அசாஞ்சேவின் மீது ஸ்வீடின் பொதுநல வழக்குகளின் இயக்குனர் மரியன்னா நை ‘புதிதாக’ ஒரு பாலுறவு வன்முறை வழக்கை அறிவித்திருக்கிறார்.
குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பவர்கள் ஆர்டின் மற்றும் விலன் எனும் இரு பெண்கள். இவர்களால் வழக்கை நடத்த அமர்த்தப்பட்டிருக்கும் புகழ்வாய்ந்த வழுக்குரைஞரான கிளாஸ் போர்க்ஸ்ராம் விநோதமான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ‘இப்படி அல்லது அப்படி என எதோ ஒரு வகையில் அசாஞ்சே இவர்களை வன்புணர்ச்சி செய்திருக்கிறார். இரு பெண்களும் அசாஞ்சே தங்களை வன்முறை செய்யவோ வற்புறுத்தவோ இல்லை என்பதை ஒப்புக் கொண்டாலும், அவர்கள் வண்புணர்வுக்குத்தான் உட்படுத்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள ‘அவர்களொன்றும் வழக்குரைஞர்கள் இல்லை.’
இந்தப் பெண்கள் இருவரும் அசாஞ்சேயுடன் பாலுறவு அல்லது வன்புணர்வு கொண்ட தருணங்களை ஸ்வீடன் காவல்துறை ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது பிரித்தானியாவின் வலதுசாரிப் பத்திரிக்கையான ‘தி டெய்லி மெயில்’ என்பதையும் ஒரு தரவாக நாம் பதிவு செய்துவைப்போம். ‘அசாஞ்சே எம்மைப் பயமுறுத்தவில்லை என்பதனையும் அவரைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை’ என்பதனையும் தெரிவித்திருக்கும், பிரச்சினைக்குரிய பெண்களில் ஒருவரான ஆர்டன் ‘எமது விருப்புடன் துவங்கிய உடலுறவு என்பது பிற்பாடு தாக்குதலாக ஆகியது’ எனத்தான் நாங்கள் சொல்கிறோம் என ஸ்வீடனின் ‘அப்டன்பிளேட்’ பத்திரிக்கையிலான தனது நேர்முகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்வீடன் சட்டப்படி உடலுறவு கொள்ளும்போது, அது விருப்பத்தின் பாலான உறவே ஆயினும், பிற்பாடு ஒருவர் அதனைப் பிரச்சினைக்கு உள்ளாக்க வேண்டி நேரின், ஆணுறை அணியாமல் உடலுறவு கொண்டதனை வன்புணர்வின் கீழ் கொண்டுவர முடியும் என்பதனையும் நாம் ஒரு தரவாக இங்கு பதிந்து கொள்வோம்.
அசாஞ்சே 2010 ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஆர்டினின் அழைப்பின் பெயரில் ஸ்வீடன் வந்து சேர்கிறார். ஆர்டினின் அறையில் அசாஞ்சே தங்குகிறார். ஆர்டின் பிறிதொரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அவர் 13 ஆம் திகதி காலை தனது அறைக்குத் திரும்புகிறார். இருவரும் மதிய உணவுக்குச் சென்றுவிட்ட ஆர்டினின் அறைக்குத் திரும்புகிறார்கள். உடலுறவு விருப்பப்படிதான் துவங்குகிறது. ஆர்டினின் காவல்துறை தகவல் அறிக்கையின்படி ஆர்டின் அசாஞ்சேவிடம் ரப்பர் உறை போட்டுக் கொண்டு உடலுறவு கொள்ளச் சொல்கிறார். அசாஞ்சே விருப்பமில்லாமல் போட்டுக் கொண்டாலும் கூட உறை கிழிந்துவிடுகிறது. அசாஞ்சே உறையைத் திட்டமிட்டுக் கிழித்தார் என்கிறார் ஆர்டின். தான் அப்படிச் செய்யவில்லை. இயக்கப் போக்கில் உறை கிழித்திருக்கலாம் என்கிறார் அசாஞ்சே.
ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆர்டின் அசாஞ்சே கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அன்று விலன் எனும் ஒரு பெண்ணை ஆர்டின் அசாஞ்சேவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். கூட்டத்தின் முடிவில் அசாஞ்சேவும் விலனும் மதியசாப்பாட்டுக்குச் சென்றுவிட்டு, விலனின் வேலையிடத்துக்கும் சென்றுவிட்டு, திரைப்படம் பாரக்கப் போகிறார்கள். திரைப்படக் கொட்டகையின் பின் இருக்கையைத் தேர்ந்து அமர்ந்து அவர்கள் முத்தமிட்டிருக்கிறார்கள். அசாஞ்சே விலனின் ஆடைக்குள் கைநுழைத்திருக்கிறார். அன்று மாலை ஆர்டினின் குடியிருப்பில் அசாஞ்சேவுக்கென ஒரு விருந்தையும் ஆர்டின் ஏற்பாடு செய்கிறார்.
ஆகஸ்ட் 16 திங்கட்கிழமை அசாஞ்சேவுக்கு தொலைபேசி செய்த விலன், அவரை அழைத்துக் கொன்டு தனது குடியிருப்புக்கு வருகிறார். இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். அடுத்தநாள் காலைச் சாப்பாடு வாங்க வெளியே செல்லும் விலன், மறுபடி அசாஞ்சேயுடன் படுத்துக் கொள்கிறார். விலன் அசாஞ்சேயுடன் பலமுறை ‘பாதித் தூக்கத்தில்’ உடலுறவு கொண்டதாகச் சொல்கிறார். தனது விருப்பமில்லாமல், உறைபோடாமல் இயங்கத் துவங்கிய அசாஞ்சே தனது வலியுறுத்தலினால்தான் பிற்பாடு உறை அணிகிறார் என்கிறார் விலன்.
இரண்டு பெண்களும் அசாஞ்சே வன்முறையில் ஈடுபட்டார் எனவோ, தமது விருப்பமில்லாமல் உறவு கொண்டார் எனவோ கருதுவதில்லை, ஆகஸ்ட் 20 ஆம் திகதி இந்தச் சம்பவங்களின் திருப்புமுனையாக இருக்கிறது. உறை அணியாமல் உடலுறவு கொண்டதால் எய்ட்ஸ் பயம் தொற்றிக் கொண்டதால், அசாஞ்சேவை எச்.ஐ.வி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆர்டின் வலியுறுத்துகிறார். இச்சமயத்தில் இரு பெண்களுடனும் அசாஞ்சே உறவு கொண்டிருப்பது இருவருக்கும் தெரியவருகிறது. முதலில் சோதனைக்கு மறுக்கும் அசாஞ்சே வெள்ளி மதியம் தான் சோதனைக்கு ஒப்புக்கொள்கிறார். வார இறுதி என்பதால் சோதனைச்சாலைகள் மூடுண்டிருப்பதால் அது இயலாமல் போகிறது.
சனிக்கிழமை இரண்டு பெண்களும் காவல்துறையில் அசாஞ்சே மீது புகார் கொடுக்கிறார்கள். இரு பெண்களினதும் முதல் தகவல் அறிக்கையின்படி, அவர் மீது வைத்த குற்றச்சாட்டு அவர் உறை போடாமல் உறவுகொண்டார் என்பதும், அவர் சோதனைக்கு உட்பட வேண்டும் என்பதுதான். பிற்பாடு வழக்குரைஞரின் ‘சட்டபூர்வமான அறிதலின்படி’ ஸ்வீடன் சட்டங்களின்படி, அசாஞ்சே செய்திருப்பது ‘பாலியல் பலாத்காரம்’ என்பதால் அவர் மீது ‘வண்புணர்வு’ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
அசாஞ்சேயின் ஆதரவாளர்கள் சொல்வது இதுதான் : அசாஞ்சே வன்புணர்வில் ஈடுபட்டதாகச் சொல்லிய நாளுக்கு அடுத்தநாள் ஆர்டின் அசாஞ்சேவுக்கென அவரது குடியிருப்பில் விருந்தினை ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் பின்பு ஆறுநாட்கள் ஆர்டினின் அறையில் அவரது படுக்கையில் அசாஞ்சே உறைந்திருக்கிறார். விலனைப் பொறுத்து ஆர்டின் வீட்டிலிருந்து அசாஞ்சேவை அழைத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றவர் அவர்தான். அவர்களுக்கிடையிலான உடலுறவும் பரஸ்பரம் சம்மதத்தினால் நடந்திருக்கிறது. இருவரதும் குற்றச்சாட்டு என்னவெனில், பரஸ்பரம் விருப்பத்தில் துவங்கிய பாலுறவு அதனது போக்கில் வன்புணர்வாக ஆகியது. உறை அணியவில்லை என்பதுதான் இங்கு வன்புணர்வாக ஆகிறது.
இதுமட்டுமன்றி ஆர்டின் அசாஞ்சே விவகாரத்தை பத்திரிக்கைகளுக்குச் கொண்டு சென்றால் பணம் கிடைக்கும் எனத் தனது சிநேகிதிக்கு டெக்ஸ் அனுப்பியிருக்கிறார். விலன் மிகப்பிரபலமான ஒருவருடன் உடலுறவு கொண்ட ‘அற்புதத்தைத் தனது டுவிட்டர் செய்தியில் பதிந்து’ அதனைப் பிற்பாடு அழித்திருக்கிறார். ஆகஸ்ட் இருபதாம் திகதி காவல்துறைக்குப்போகும் முன்பாகவே இச்செய்தி ‘எக்ஸ்பிரசன்’ பத்திரிக்கையில் வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் 21 அசாஞ்சே இது குறித்துக் கேட்கப்பட்டபோது அதற்கு அவர் எதிர்வினை செய்யவில்லை.
முதலில் ஆதாரம் இல்லை என நிராகரிக்கப்பட்ட இந்தப் புகார் பிற்பாடு மறுபடியும் தூசிதட்டப்பட்டு வன்புணர்வு வழக்காக ஆகி இருக்கிறது. பெண்ணிலைவாதமும், வன்புணர்வும் குறித்த விழிப்புணர்வு அதிகம் கொண்ட மேற்கத்திய சமூகத்தில் இரண்டு பெண்களதும் புகார் அலைகளை எழுப்பியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தனக்கு எதிரான புகாரின் மீதான ஆதாரங்கள் தமக்கு வழங்கப்படும் வரை ஸ்வீடனுக்கு நாடுகடத்துதலுக்கு எதிராகத் தான் வழக்குமன்றத்தில் போராடப் போவதாக அசாஞ்சே அறிவித்திருக்கிறார். இது ஒரு ‘அரசியல் அதிரடி’ என்கிறார் அசாஞ்சேவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் ஆவணப்பட இயக்குனர் ஜான் பில்ஜர். ஓருவகையில் அசாஞ்சேவின் வீக்கிலீக்ஸ் எழுப்பிய அரசியல் அதிர்வுகளை இந்த வன்புணர்வுக் குற்றச்சாட்டு பின்தள்ளியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இரு பெண்களதும் நடவடிக்கை அசாஞ்சேவைப் பின்னாளில் ஒரு பொறியில் சிக்கவைப்பதற்கான திட்டமிட்ட செயல்பாடு – அதாவது உறை போடாமல் செய்யச் சொல்லிக் கேட்டோம், அதை அவர் மறுத்துச் செயல்பட்டார் எனும் ஒரே மாதிரியிலான இருவரதும் குற்றச்சாட்டு – என இதனைக் குறித்து அசாஞ்சேவின் வழக்குரைஞரும் அவரது ஆதரவாளர்களும் தெரிவிக்கிறார்கள். ‘ஹனி டிரேப்’ எனும் ஆங்கிலச் சொல்லால் இந்த நிகழ்வுகளை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வேறுவிதமான விமர்சனங்களையும் அசாஞ்சே எதிர்கொள்கிறார். அமெரிக்க தகவல் அறிக்கைகளுக்கு ஆதாரமாக அமைந்த தனிநபர்கள் சிலரது பொய்களும் வெளியாகி இருப்பதால் அவர்களது உயிருக்கு ஆபத்தை விக்கிலீக்ஸ் உருவாக்கி இருக்கிறது என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அசாஞ்சே இதனை மறுக்கிறார். மிகமுக்கியமான தகவல்களின் ஆதாரங்களுக்கு மட்டுமே சில அமெரிக்க ஸ்தானிகர்களின் பெயர்கள் நம்பகத்தன்மைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளதேயல்லாமல், சிக்கலான தரவுகள் என்பதனை மிகுந்த பரசீலனைக்குப் பிறகே வெளியிடுகிறோம் என்கிறார் அவர்.
நடந்து வரும் விவாதங்களில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். விக்கிலீக்ஸ் தகவல்கள் எதனையும் எவரும் பொய் எனச் சொல்லவேயில்லை. அது வெளியானதனால் அசாஞ்சேவை ஒரு பயங்கரவாதியைப் போலப் பாவித்து உடனயாக அவரைக் கொல்ல வேண்டும் எனவே அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. அதனை மேற்கத்திய அரசுகளும் ஆதரிக்கிறது. அதனது அங்கமாகவே அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு இரத்து, ஸ்வீடன் நாடுகடத்தில் போன்றவற்றையும் நாம் கருதுவதில் தர்க்கபூர்வமான நியாங்கள் இருக்கவே செய்கிறது.
விக்கிலீக்ஸ் ஆவணங்களில் சொல்லப்படுபவை அனைத்தும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட, அவ்வாறே ஏற்க வேண்டிய உண்மைகள்தானா? இங்குதான் அசாஞ்சேயின் தூரதரிசனம் செயல்படுகிறது. தகவல்களின் பிறிதொருபுறத்தை, அதிகார நிறுவனங்கள் தமது சொற்களால் சொன்னதை, அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். இதனது பண்புகள் இருவிதமானவை. ஓன்று, தாம் செய்த தீமைகளை அவர்களே ஆவணப்படுத்தியிருப்பது. இரண்டாவது, பிறர் குறித்த அவர்களது அவமானகரமான எள்ளல்கள் மற்றும் கருத்துக்களை ஆவணப்படுத்துவது. ஆப்கான், ஈராக் தகவல்களை விடவும் அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பது உலகெங்கிலுமுள்ள அதனது தூதரகங்களின் அறிக்கை வெளியானதுதான். தமது ஆதிக்கத்தின் பொறுட்டு உலக நாடுகளை எவ்வளவு கேவலமாக அந்த நிர்வாகம் கருதுகிறது என்பதனை அந்தத் தரவுகள் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்க அரசன் அம்மணமாக இருப்பதை அது வெளிப்படையாக முன்வைத்திருக்கிறது.
விக்கிலீக்ஸ் தகவல்கள் அனைத்தையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளாக, கட்டுடைப்புக்கு அப்பாற்பட்டதாக எடுத்துக் கொண்டு, அவை மகா உண்மைகள் போல பல கட்டுரைகள் எழுதப்படுகிறது. அவரவர் அரசியலுக்குச் சார்பாக இந்தத் தகவல்கள் இருக்கிறவாறே பாவிக்கப்படுகிறது. இது ஒரு அபத்தமான நிலை. எடுத்துக் காட்டாக வந்திருக்கும் சில அரசியல் நிலைபாடுகளைப் பார்க்கலாம். இந்து.என்.ராமின் ‘பிரன்ட்லைனில்’ அமெரிக்காவில் வாழும் விஜய்பிரசாத் விக்கிலீக்ஸ் விவகாரத்தை முழுக்க, முழுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோலுரிக்கும் நடவடிக்கை என்பதாக எழுதுகிறார். ஆனால் அதே விக்கிலீக்ஸ் இலங்கையில் நடந்த இனக்கொலையை மகிந்த ராஜபக்சே சகோதரர்கள் தெரிந்தே நடத்தினார்கள் என்கிறது. இதனை ‘பிரன்ட்லைன்’ எழுதுமா என்பது ஒரு சுவாரசியமான கேள்வி.
நடந்து முடிந்த ஈழுவிடுதலைப் போராட்டம் குறித்து சுயவிமர்சனம் மேற்கொள்ளாத நிலைபாடுள்ள விடுதலைப் புலிகள் சார்பானவர்களும், மனித உரிமைக் கோரிக்கைகளை மேற்கில் முன்வைப்பவர்களும் அமெரிக்கா மகிந்த ராஜபக்சேவின் இனக்கொலையைத் திட்டவட்டமாக முன்வைப்பதாக எழுதுகின்றன. அதே வேளை ஈராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்கா புரிந்த நரவேட்டையையும் இந்த ஆவணங்கள் முன்வைத்திருக்கிறது என்பதனை ஒரு தகவலாகக் கூடச் சொல்வதில்லை. பிறதொருபுறம் அமெரிக்க ஆவணங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்துப் பதிகிறது என்பதைச் சுட்டிக் காண்பிப்பவர்கள், காஷ்மீரில் இந்திய ராணுவம் புரிகிற திட்டவட்டமான சித்திரவதைகள் குறித்து இந்த ஆவணங்கள் பேசுவதைச் சுட்டிக்காட்டுவதில்லை.
இந்த சார்புநிலைகளுக்கு அப்பால் அசாஞ்சே தமது தகவல் குறித்த தத்துவநிலைபாட்டைக் குறிப்பிடுகிறார். தனது நோக்கு இடதும் இல்லை வலதும் இல்லை, மாறாக இதற்கு அப்பாலான மறைதகவல்களை கண்டுபிடித்துச்சொல்வதாக அமைகிறது எனகிறார். மறைதகவல்களின் அறிதல்களின் அடிப்படையில்தான் அவரவது அரசியல் அமையும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். ஊடகவியலாளர்களையும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் செயல்படுகிறவர்களையும் பாதித்த நம் காலத்தின் மிகப்பெரும் ஆளுமையாக அசாஞ்சே இருக்கிறார். இந்தத் தகவல்களை அறியும் உரிமை எம் அனைவருக்கும் இருக்கிறது, அவ்வகையில் மரபுரீதியான தகவல்யுகத்தின் அறங்களை மீறிச்சென்ற ஒரு மேதை அசாஞ்சே என அவரைக் குறிப்பிடுகிறார்கள். இந்தக்காரணம் கொண்டுதான் உலகின் புகழ்வாய்ந்த இரு நாளிதழ்களான இலண்டன் கார்டியனும், த நியூயார்க் டைம்சும் அவரது விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஆதாரபூர்வமாகப் பிரசுரிக்கும் தளங்களாக இருக்கின்றன.
அசாஞ்சே அமெரிக்க மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமல்ல. சீனாவுக்கும், ஈரானுக்கும், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அதனது கொடுங்கோல் ஆட்சியாளர்க்கும் ஆபத்தானவர். ஆகவேதான் அவரை வேட்டையாட உலக நாடுகள் துடிக்கின்றன. மாஸ்டர் கார்ட், அமெரிகன் எக்ஸ்பிரஸ், பே பால் போன்ற நிறுவனங்கள் அவரது நன்கொடைகளை முடக்குகின்றன. வங்கிகள் அவர் மீது வழக்குத் தொடுக்கின்றன. பன்னாட்டு மூலதன சக்திகளும் ஏகாதிபத்தியங்களும், சீனா போன்ற எதேச்சாதிகாரங்களும், மூன்றாம் உலகின் சர்வாதிகாரிகளும் அவர் மீது கண்டனம் தெரிவிக்கின்றன.
பில்கிளின்டன் மோனிகா லெவின்ஸ்க்கி விவகாரத்தின் போது பிடல் காஸ்ட்ரோவின் நண்பரும், இலத்தீனமெரிக்கப் புரட்சிகளின் ஆதரவாளரும், கிளின்டனின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாகக் கடுமையாக விமர்சிப்பவரும், நோபல் பரிசாளருமான கார்ஸியா மார்க்வஸ் கிளின்டனுக்கு ஆதவாக ஒரு கட்டுரை எழுதினார். வரலாறு முழுக்க எல்லா ஆண்களும் செய்கிற தவற்றைத்தான் கிளின்டன் செய்திருக்கிறார். அதற்காக அவரை ஏன் இப்படிப் படுத்துகிறீர்கள் என்பதுதான் அவரது கட்டுரையின் சாராம்சம். அமெரிக்க மேற்கத்திய சமூகங்களை அறிந்தவருக்குத் தெரியும், இந்தச் சமூகங்கள் பாலுறவில் இரண்டக நிலை கொண்ட சமூகங்கள். திருமணத்திற்கு அப்பாலான உறவையோ அல்லது பரஸ்பர விழைவுடன் மேற்கொள்ளும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலுலறவுகளையோ இந்தச் சமூகங்கள் ஒரு ‘குற்றச்செயலாகக் கருதுவதில்லை‘. மோனிகா, கிளின்டன் மீது குற்றம் சாட்டவில்லை. கிளின்டன் மோனிகாவை வன்புணர்வு செய்யவுமில்லை. குற்றத்தை அரசியலும் சட்டமும் இரண்டக அறமும்தான் தீர்மானித்தது.
பெண்நிலைவாதம் என்பது வர்க்க-சாதிய-மத-இன-அரசியல் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது இல்லை. அசாஞ்சே மீது குற்றம் சாட்டியிருக்கும் பெண்களும் ஸ்வீடன் தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் விலன் தனது கல்லூரி வாழ்வின் போது பாலின சமத்துவத்துக்காகப் பேசிக் கொண்டிருந்தவர். இரு பெண்களதும் ‘திட்டமிடப்பட்ட’ குற்றச்சாட்டுகளின் வாதங்கள் பெண்நிலைவாத சொல்லணிகளால் நிறைந்திருக்கிறது. விலன் தனது கியூபப் பயணம் ஒன்றின் போது அமெரிக்க உளவுத்துறைக்கு வேவுபார்த்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் இன்று செய்தியாக வருகிறது. அசாஞ்சே ஸ்வீடனுக்கு வந்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனச் சொல்கிற அவரது ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அசாஞ்சே, சரியான வழக்கு ஆதாரங்கள் முன்வைக்காதவரை தான் ஸ்வீடன் செல்லப்போவதில்லை, தனது உயிருக்கு ஆபத்து என அவர் சொல்வதும் திட்டவட்டமான உண்மையாக இருக்கிறது.
அசாஞ்சே சொல்கிறார் ‘கணணிக்குள் நீங்கள் ஊடுறுவல் – ஹாக்கிங் – செய்யும் போது கணணி அமைப்பைச் சேதப்படுத்தக் கூடாது. தகவல்கைளையும் சேதப்படுத்தக் கூடாது. தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுங்கள். தகவல்கள் ஒரு போதும் அறிவு அல்ல, ஆனால் தகவல்கள் குறித்த அறிதலே ஒரு செயல்பாட்டைத் தீர்மானிக்கும்’. வன்புணர்வு தொடர்பான விவாதங்கள் எத்தகையது ஆயினும் அசாஞ்சே நம் காலத்தின் தகவல் தொழில்நுட்ப அறிவியலில் பாய்ச்சலை நிகழ்த்திய நிறுவன எதிர்ப்பு, அரசு எதிர்ப்புத் தூரதரிசனம் கொண்ட அராஜியவாதி. நமது அறிதலின் அரசியல் குறித்து அவர் கொண்டிருக்கும் அவரது நெஞ்சுரமான செயல்பாட்டினாலும் தனித்ததொரு மேதமை கொண்டவராக அவர் நிமிர்ந்திருக்கிறார். அசாஞ்சே விடுதலை பெற்ற ஒரு மனிதனாக இருக்க வேண்டும் எனும் எமது விழைவுக்கு இந்தக் காரணங்கள் மட்டுமே போதுமானது என நாம் கருதுகிறோம்.