வண்ணங்களும், எண்ணங்களும்…
பூமியில், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களும், பறவைகளும்,
மலர்களும், மரங்களும், வைரம், வைடூரியம்போன்ற உயிரில்லாப்பொருட்களும்
வெறும் கருப்பு-வெள்ளையாக மட்டுமே இல்லாமல் வண்ணமயமாகவும்
காட்சியளித்து நமக்கு இன்பத்தைக்கொடுக்கின்றன. அவ்வப்போது தோன்றும்
வானவில் (rainbow), துருவங்களில் தோன்றும் ஒளிவெள்ளம் (arora porealisis)
போன்ற வானியல் நிகழ்வுகளும் பலவண்ணங்களில் தோன்றி நம்மைப்
பரவசப்படுத்துகின்றன.
நிறங்களை (colours) உணர்ந்துகொள்வதில், கண்பார்வையின் பங்கு
முதன்மையானது. மங்கலான வெளிச்சத்தில், ஒருவரால் நிறங்களை
பிரித்தறியமுடியாமல் இருக்கலாம். ஆனால், ஒளிச்செறிவை கூட்டும்போது,
அதே நபர் நிறங்களைத் தனித்து அடையாளம் காணக்கூடும். ஒரு குறிப்பிட்ட
ஒளிச்செறிவுக்கு மேலாக இருந்தால் மட்டுமே, நிறங்களைக் கண்டு
அறியமுடியும்.
கண்கள் காணும் காட்சிகளுக்கு, மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதும்
நிறங்களை அடையாளப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒரே
மாதிரியான சூழலில், ஒருவருக்கு சிவப்பாகத் தோன்றும் பொருளொன்று
இன்னொருவருக்கு ஆரஞ்சு நிறத்தில் தோன்றக்கூடும்.
ஆக, நிறம் என்பது, காட்சி (vision), ஒளி (light), மற்றும் காண்பவர் (Observer)
சார்ந்து வெளிப்படுவதாக உள்ளது. நிறத்தைப் புரிந்துகொள்ள, இயற்பியல்
(Physics), உடற்கூறியல் (Physiology), மற்றும் உளவியல் (Psychology) ஆகிய
பிரிவுகள் தேவைப்படுகின்றன.
ஒரு பொருள், ஒளியுடன் வினைபுரிவதன் அடிப்படையில் நிறம்
தோன்றுவதால், நிறம்பற்றிய இயற்பியல் கூறுகள் தேவைப்படுகின்றன.
நிறத்தை அடையாளப்படுத்துவதில், மனிதர்களின் கண்களும், மூளையும்
பங்குபெறுவதால், உடற்கூறியல் அவசியமாகிறது.
காட்சிப்பதிவுகளை மனிதமனம், நினைவில் உள்ள தரவுகளுடன்
ஒப்பிட்டுப்பார்த்து, நிறத்தைப் புரிந்துகொள்வதால், உளவியலும், நிறம்பற்றிய
புரிதலுக்குத் தேவையாக உள்ளது.
நிறங்களின் தன்மை: (Nature of Colour)
கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில், வெண்மையும், கருமையும் கலந்து நிறங்கள்
உருவாவதாகக் கூறினார். ஆனாலும், 1666-இல் சர் ஐசக் நியூட்டன் தனது
முப்பட்டகம் சோதனையில், சூரிய ஒளியை ஏழு நிறங்களாகப் பிரித்துக்காட்டி,
நிறங்கள்பற்றிய அறிவியலைத் தொடங்கிவைத்தார். போலவே, ஏழு
வண்ணங்களையும் குறிப்பிட்ட தகைவில் ஒரு வட்டத் தட்டில் தீட்டி, அதனை
வேகமாகச் சுழற்றி மீண்டும் வெண்மை நிறத்தை நியூட்டன் உருவாக்கிக்
காட்டினார்.
இசையின் அடிப்படைக்கூறுகளான ஏழு சுரங்களுடன் ஒப்பிட்ட நியூட்டன் ஏழு
நிறங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ, ஊதா என்று
பெயரும் வைத்தார். ..
நிறத்தை, அதன் சாயல் (hue), தெவிட்டியசெறிவு (saturation), மிகை ஒளிர்வு
(brightness -பிரகாசம்) ஆகிய மூன்று பண்புகளின் அடிப்படையில் துல்லியமாக
அடையாளப்படுத்த முடியும்.
நிறச்சாயல்’ (hue), என்பது, சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் போன்றவற்றோடு
தொடர்புடையது.
தெவிட்டியசெறிவு (saturation), என்பது, ஒரே நிறச்சாயலைக்கொண்ட பல்வேறு
செறிவுகளைக் குறிப்பது. எடுத்துக்காட்டாக, அடர்தனிச்சிவப்பு மாறும்
செறிவுகொண்ட வெண்மையுடன் கலக்கும்போது, மங்கலான சிவப்புநிறங்கள்
தோன்றும், இப்படித்தோன்றும் நிறங்கள், தெவிட்டாத நிறங்கள் (unsaturated
colours) எனப்படும்.
குறிப்பிட்ட சாயலும், தெவிட்டியசெறிவும்கொண்ட நிறங்கள் பல்வேறு மிகை
ஒளிர்வுகளைக் (brightness) கொண்டிருக்க முடியும். அது, ஒளியின் மொத்த
ஆற்றலைச்சார்ந்தது.
நிறக்கலவைகளின் விதி: (Laws of Colour Mixtures)
10,000 க்கும் அதிகமான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல், மனிதக்
கண்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைத்து நிறங்களும்,
இரண்டுவகையான நிறக்கலவைகளால் உருவாகின்றன.
1 கூட்டு நிறக்கலவை (Additive mixture)
நிறங்களைக் கலந்து, புதிய நிறங்களை உருவாக்கலாம். நியூட்டனின் ‘
நிறவட்டம்’ (Colour Circle) புதிய நிறங்களை உருவாக்குவதற்கு, இன்றளவும்
பயனுள்ளதாக இருக்கிறது.
நியூட்டன் நிற-வட்டம், நிறமாலையில் தோன்றும் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள்,
பச்சை, சியான் (Cyan-கடல் நீலம்), இண்டிகோ மற்றும் நீலம் – ஊதா (blue-violet)
ஆகிய நிறங்களை, நிறமாலையில் இடம்பெறாத மெஜந்தாவுடன் (majenta)
கலந்து புதிய நிறங்களை உருவாக்க வகைசெய்கிறது.
நிற-வட்டத்தின் மையத்தில் வெண்மை உள்ளது. அது, வட்டத்தில் நேர்-எதிரில்
உள்ள நிறங்களைக் கலப்பதால் உருவாகிறது. எடுத்துக்காட்டாக, பச்சையுடன்
மெஜந்தாவைக் கலக்கும்போது அல்லது சியானுடன், சிவப்பைக் கலக்கும்போது,
வெண்மை கிடைக்கும்.
சிவப்பு (Red), பச்சை (Green) மற்றும் நீலம் (Blue) ‘. ஆகியவற்றை, பல
விகிதங்களில் கலந்து அனைத்து நிறங்களையும் உருவாக்கமுடியும். எனவே
அந்த மூன்று நிறங்களும், ‘முதன்மை நிறங்கள்’ (Primary Colours)
எனப்படுகின்றன.
தொலைக்காட்சி, கணினி, கைபேசி ஆகியவற்றின் திரைகள் அனைத்துமே
நிறங்களை வெளியிடுகின்றன என்பதால், கூட்டு நிறக்கலவைக்கு (additive colour
mixing) சான்றுகளாகும்.
2 கழித்தல் அல்லது உட்கவர்தல் நிறக்கலவை: (Subtractive Colour Mixing)
இயற்கையில், சில நிறமிகளுக்கும் (pigments), சாயங்களுக்கும் (dyes) குறிப்பிட்ட
நிறங்களை உட்கவர்வதும் (absorpson), குறிப்பிட்ட நிறங்களை மட்டுமே
எதிரொளிப்பதும் (reflection) அல்லது விலகலடையச்செய்வதுமானப் (refraction)
பண்புகள் இருக்கின்றன. அதன்காரணமாக, புதிய நிறங்கள் தோன்றுவது,
‘கழித்தல் நிறக்கலவை’ ஆகும்.
வெள்ளை ஒளியில், குறிப்பிட்ட வண்ணத்தை மட்டுமே கடத்தும் வகையில்
உள்ள அமைப்பு ‘நிறவடிகட்டி’ (colour filter) எனப்படும். ஒரு சிவப்பு வடிகட்டி,
சிவப்பு நிறத்தை மட்டுமே வெளியிடும். மற்றவை உட்கவரப்படும். ஒரு பச்சை
வடிகட்டி, பச்சையை மட்டுமே வெளியிடும். சிவப்பு மற்றும் பச்சை
வடிகட்டிகளை அடுத்தடுத்துப் பயன்படுத்தினால், அனைத்து நிறங்களும்
வடிகட்டப்பட்டு, கருப்பு (black) கிடைக்கும்.
சிவப்பை மட்டும் உட்கவர்ந்து, பச்சையும், நீலமும் கலந்து வெளியேறுமானால்
கிடைப்பது, நீலப்பச்சை (blue-green). அதுதான்’ சியான்’ (cyan) எனப்படுகிறது.
பச்சையை மட்டும் உடகவர்ந்து, சிவப்பும், நீலமும் கலந்து வெளியேறும்போது
கிடைப்பது மெஜந்தா (mejanta).
நீலம் மட்டும் உட்கவரப்பட்டு, பச்சையும், சிவப்பும் வெளியேறுமானால், அந்தக்
கலவை உருவாக்குவது, மஞ்சள்.
எனவே, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் ஆகியவை, கழித்தல்
நிறக்கலவையின் முதன்மை நிறங்கள் (Primary Colours)ஆகின்றன.
லி பிலான் (Le Blon) என்பவர்தான் முதன்முதலாக சிவப்பு (Red), மஞ்சள்(Yellow),
நீலம்(Blue) ஆகிய முதன்மை நிறங்களைக்கொண்டு (primary colours), துணை
நிறங்களான (secondary colours) பச்சை, பழுப்பு, ஆரஞ்ச் ஆகியவற்றை
உருவாக்கி, அச்சிடும் முறையைக் கண்டுபிடித்தவர்.
புத்தகங்கள், ஓவியங்கள், கார்கள் அனைத்தும் குறிப்பிட்ட அலைநீளம்கொண்ட
ஒளியை உட்கவர்வதால், கழித்தல் நிறக்கலவைக்கு (subtraction colour mixing)
சான்றுகளாகும்.
நிறத்தோற்றம்: (perception of colour)
ஒளி ஊடுறுவ முடியாத ஒரு பொருளைப் பார்க்கும்போது, அந்தப் பொருள்மீது
பட்டு எதிரொளிக்கும் ஒளியைக் கண்வழியாக மூளை பார்க்கிறது. ஒவ்வொரு
புள்ளியிலும் ஒவ்வொரு விதமான ஆற்றல்-பங்கீடு இருந்தாலும், கண்ணும்,
மூளையும் ஆகச்சிறந்த அமைப்புகளாகச் செயல்பட்டு, வழக்கமான நிறங்களை
அடையாளம் காண்கின்றன. இது, ‘ மாறா நிறம்’ (colour constancy) எனப்படுகிறது.
நிறப்பார்வை: (colour vision)
1801-இல் தாமஸ் யங் (Thomas Young) என்னும் ஆங்கிலேயர் முதன்முதலாக,
‘மூன்று நிறக்கொள்கையை’ (tri-chromatic theory) வெளியிட்டார். 50 ஆண்டுகளுக்குப்
பிறகு அந்தக்கொள்கை ஜெர்மன் அறிவியலாளரான ஹெர்மன் வான்
ஹெல்ம்ஹோல்ட்ஸ் (Hermann Von Helmholtz) என்பவரால் மேம்படுத்தப்பட்டது.
நிறங்களைச்சேர்த்தல் (colour matching) தொடர்பான சோதனைகளின்
அடிப்படையில், மூன்று நிறக்கொள்கையானது, கண்களில் மூன்றுவிதமான
ஒளி ஏற்பிகள் (light Receptors) இருப்பதாகக் கூறியது. அவை, அவற்றின் வடிவம்
காரணமாக, கூம்புகள் (cones) என்று அழைக்கப்படுகின்றன. கண்களில்
கூம்புகளின் இருப்பு, 1960-களில் உறுதிசெய்யப்பட்டது.
நிறமாலையில், சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை
நிறங்களுக்கும், பெரும உணர்திறன்கொண்ட மூன்று விதமான கூம்புகள்,
கண்களில் அமைந்துள்ளன. அக்கூம்புகளின் உட்கவர்திறன் (absorptive power),
முறையே 45nm , 53nm , 56nm (nm- நெனோமீட்டர்) ஆகிய அலைநீளங்களில்
உச்சமாக உள்ளது. இவை, முறையே S-கூம்பு, M- கூம்பு, L- கூம்பு, எனப்படும்
(S- short wavelength; M-medium wavelength; L-long wavelength).
இந்த மூன்று நிறக்கூம்புகளும் பெறுகின்ற ஒளிச்செறிவுகளைச் சார்ந்து,
நிறங்கள் உருவாகும் என்று மூன்று நிறக்கொள்கை கூறுகிறது. மூன்று
கூம்புகளும் சமமாக ஒளிச்செறிவைப்பெறுமானால், வெள்ளையாகத்தோன்றும்.
வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டியில், இந்த அறிவியல் தொழில்நுட்பமே
பயன்படுத்தப்படுகிறது. அனைத்து நிறங்களும் சிவப்பு, பச்சை, நீலம் என்று
மாற்றப்பட்டு காட்சி சைகளாக (vision signals) அனுப்பப்படுகின்றன.
தொலைக்காட்சிப் பெட்டியில், திரையில் இருக்கும் சிவப்பு, பச்சை, நீலம்
நிறமிகள் வெளிப்படுத்தும் ஒளி ஒருங்கிணைந்து மீண்டும் இயற்கை
நிறங்களைத் தோற்றுவிக்கின்றன.
நிறக்குருடு : (colour blindess)
கண்களில் உள்ள நிறக்கூம்புகளில் பழுது ஏற்படுமானால், சில குறிப்பிட்ட
நிறங்கள் தெரியாமலே போகலாம். அதுபோன்ற பார்வைக்குறைபாடு,
‘நிறக்குருடு’ எனப்படும்.
M-கூம்பு அல்லது L-கூம்பு பழுதுபடுமானால், அந்த நபரால் நீலம் மற்றும்
மஞ்சள் நிறங்களை மட்டுமே உணரமுடியும். மற்ற நிறங்களை அடையாளம்
காணமுடியாது.
S- கூம்பு பழுதுபட்டால், பச்சையும், சிவப்பும் மட்டுமே தெரியும்.
இந்த மூன்று கூம்புகளுமே பழுதானால், அனைத்தும் சாம்பல் (grey)
நிறத்திலேயே தெரியும்.
வண்ணங்களும் எண்ணங்களும்: (psychology of colours)
நிறங்களுக்கும், மனித மனங்களுக்கும் தொடர்பு உள்ளது. சிவப்பு, ஆரஞ்ச்,
மஞ்சள், பழுப்பு (brown) ஆகிய நிறச்சாயல்கள் (hues) வெப்பத்துடனும், நீலம்,
பச்சை, சாம்பல் ஆகியவை குளிர்ச்சியுடனும் மனித உணர்ச்சிகள் சேர்த்துப்
பார்க்கின்றன.
சிவப்பு என்றால் புரட்சி; கருப்பு என்றால் சோகமும், எதிர்ப்பும்; வெள்ளை,
என்றால் சமாதானம்; காவி, என்றால் ஆன்மிகம்’ பச்சை, என்றால் செழிப்பு;
மஞ்சள் என்றால் மங்கலம் என்று வண்ணங்கள் மனித மனங்களோடு
அடையாளப்படுத்தப்படுகின்றன.
மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் வண்ணங்களும் மாறுகின்றன.
இவற்றில்சில, நாட்டுக்கு நாடு மாறவும்கூடும். ஒருவருக்குப் பிடிக்கும் நிறம்
இன்னொருவருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு
தனிமனிதருக்கும் பிடிக்கும் நிறமானது, அவர்களது எண்ணம்சார்ந்தது.
பாபா சாகேப் அம்பேத்கர் நீல நிறத்தையும், பெரியார் கருப்பு நிறத்தையும்
தெரிவுசெய்ததையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.
நிறங்களைக் குறிக்கும் சொற்கள் (colour terminology), நிறங்களின் இணக்கம் (colour
harmony), நிறங்களின் குறியீடு (colour symbolism) இன்னும் இதுபோன்ற மனித
மனங்களின் புரிதல்கள், இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஒரே இடத்திலும்,
காலத்துடன் வேறுபடக்கூடியதாக இருக்கிறது.
உடை, உணவு, இருப்பிடம், வாகனம், நகைகள் உள்ளிட்ட மனிதர்களின்
அன்றாட வாழ்வில் இடம்பெறும் அனைத்திலும், தங்களுக்கு விருப்பமான
நிறங்களைப் பயன்படுத்தும் மனிதர்களின் உளவியலைக் காணமுடியும்.
வெள்ளை அனைவருக்குமே பிடிக்கக்கூடிய நிறமாக உள்ளது. ஆனால், கருப்பு,
சிவப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்கள் சிலருக்கு விருப்பமாகவும், பலருக்கு
வெறுப்பைத்தருவதாகவும் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது.
நிறங்களை அடிப்படையாக வைத்து, பழமொழிகளும்கூட
உருவாக்கப்பட்டுள்ளன. நிறங்களின் குறியீட்டுத்தாக்கம், அன்றாட வாழ்வில்,
கலை, மதம், அரசியல், கேளிக்கைகள், விழாக்கள் ஆகியவற்றோடு
முதன்மைப்பங்காற்றுகிறது.
வெள்ளைமனம், கருப்புதினம், மஞ்சள்நீராட்டு, மஞ்சள்பத்திரிகை, நீலப்படம்,
சிவப்புவிளக்குப்பகுதி, பச்சைப்பொய் போன்றவை நிறங்களால்
தொடர்புபடுத்தப்படுபவை. கணவனை இழந்த பெண்கள், வெள்ளை ஆடை
உடுத்தி விதவை என்று அடையாளம் பெற்றதும் நம் மண்ணில்
நிகழ்ந்திருக்கிறது.
மருத்துவர்களும், செவிலியரும் வெள்ளை உடை அணிவதும்,
நோயாளிகளுக்குப் பச்சை ஆடை அணிவிப்பதும் உளவியல்சார்ந்ததே.
காண்பவரின் வயது, மனநிலை, ஆகியவற்றோடும் நிறங்கள்
தொடர்புடையதாக இருக்கின்றன.
ஒரு தனிநபரின் நிறங்கள்பற்றிய புரிதல் அவரது உடல்நிலை மற்றும்
மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ளப்பயன்படும் என்கின்றனர். மாத்திரமல்ல,
அப்படிப்பட்ட நிறத்தை நோய்தீர்க்கவும் (therapy) பயன்படுத்தலாம் என்கின்றனர்.
கலைஞர்களும், வடிவமைப்பாளர்களும் (artists & designers) பல நூற்றாண்டுகளாக,
நிறங்களின் தாக்கத்தைப்பற்றி ஆய்வுசெய்துவருகின்றனர். அவற்றிலிருந்து,
உலகம் அனைத்திற்குமான பொதுவிதி எதுவும் இல்லை என்றும், அது தனிநபர்
உளவியல் சார்ந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.