ரத்தத் திலக சேவை
கர்னாடகத்தில், ரங்கோ பட்டவர்த்தன தேசாய் என்பவர் ஒரு வட்டாரத்தைக் கட்டி எழுப்புகிறார். ஊர் என்றால், கோயில் வேண்டுமல்லவா? அவர்களது குலதெய்வமான ‘விட்டலர்’ சாமிக்கு ஒரு கோயிலையும் கட்டி முடிக்கிறார். கோயில் என்றால் தேர் இல்லாமலா? ஒரு தேரும் உருவாக்கப்படுகிறது.
எல்லா ஊர் கோயில்களிலும் உள்ளதுபோல அது மரத்தேர் அல்ல; கல்-தேர். தேரின் இரண்டு சக்கரங்களும் இரண்டாள் உயரம் கொண்டவை. ஒவ்வொரு சக்கரமும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டவை. இத்தனைக்கும், நமது தஞ்சாவூர்போல, அந்த ஊரின் சுற்றுவட்டாரத்தில் எங்கும் பாறைகளே கிடையாது. .
தேரின் அச்சுக்கு மேலாக, ஒன்றரை ஆள் உயரத்திற்கு மரத்தாலான ஒரு சதுர அமைப்பு. .அது ஆறு அடுக்குகளால் ஆனது. முதல் அடுக்கில் எட்டு திசைகளிலும் ஆதிசேஷன் பாம்பு, இரண்டாவது அடுக்கில் எட்டு திசைகளை நோக்கி முகம் காட்டிக்கொண்டிருக்கிற எட்டு ஐராவதங்கள், மூன்றாவது அடுக்கில் மீன், ஆமை, பன்றி மற்றும் காட்டுவிலங்குகள்,
நான்காவது அடுக்கில், எருது, குதிரைகள், கறவைப்பசு, விவசாயத்திற்கு வேண்டிய உழவுச்சாமான்களான நுகத்தடி, கலப்பை, சக்கரம், ஐந்தாவது அடுக்கிலே வில்லும், அம்புகளும், வில்லேந்திய வீரர்களும், கத்தியும், ஈட்டியும், சண்டையிடும் வீரர்களும், வேட்டையாடும் சிங்கத்தின் சீறும் முகமும்,
ஆறாவது அடுக்கில் கலைவாணி சரஸ்வதியும், வேதப்புத்தகங்களும், சலங்கை கட்டிய மயிலும், தம்புறாவும், மேளங்களூம், ஆறாவது அடுக்கிற்கு மேலே தங்கக்கலசமும் என்று இப்படியாகக் கலை நயத்தோடு உருவாக்கப்பட்டத்தேர்.
கிழே இருக்கும் தேர் அச்சிலும்கூட, நதி, காளி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று சிற்பங்களைச்செதுக்கி வைத்திருக்கிறான், தேரைச் செதுக்கிய சிற்பி.
தேர் இழுப்பதற்கு நாள் குறிப்பதற்காக, சாஸ்திரக்கார அய்யர் அழைத்துவரப்படுகிறார். எட்டு மூலைகளிலும் எட்டு அபசகுனம் இருப்பதாகச்சொல்லி, சாஸ்திரக்கார அய்யர், தேரை இழுக்கவேண்டாம் என்று தடுக்கிறார்.. ஆனாலும், அவரை வசைபாடிவிட்டு, சித்திரை மாதம் ஒரு சுபதினத்திலே தேர் இழுக்க நாள் குறிக்கப்படுகிறது.
பல்லாயிரம் மக்கள் தேரோட்டம் பார்க்கக் கூடிவிட்டனர். விட்டலர் சாமியைக் கொண்டுவந்துத் தேரில் வைத்தாகிவிட்டது. ரங்கோ பட்டவர்த்தனத் தேசாயும், அவரது குடும்பத்தினரும் தேர்வடத்தைத் தொட்டுக் கும்பிட்டு, தேரை இழுக்க ,மக்களுக்கு சைகை காட்டினர்.
ஒவ்வொரு வடத்திலும் பல நூறுபேர் நின்று தேரை இழுத்தனர். அனைவருக்கும் அதிர்ச்சியாக, தேர் நகரவில்லைலை. 600 குதிரைகளையும், 600 எருதுகளையும் கட்டி தேரை இழுத்தனர். தேர்ச்சக்கரங்கள், கொஞ்சம்கூட அசையவில்லை. எதுவுமே புரியாமல் திகைத்து நின்றனர் அதிகாரிகள்.
தேர், மற்றொரு நாளில் இழுக்கப்படும் என்று ஊர்மக்களிடம் சொல்லி அனுப்பினார்கள். அதன்பிறகு, ரங்கோ பட்டவர்த்தன தேசாய், கோயில் அதிகாரி, மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூடி, ஆலோசனை செய்தனர். சாஸ்திரக்கார அய்யரை அழைத்துவரச்செய்து, அவரிடம் காரணம்கேட்டனர். பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்த சாஸ்திரக்கார அய்யர், சுவடியைப்பார்த்தும், சோழிகளை உருட்டியும், கணக்குப்பார்த்து ,’தேர் நரபலி கேட்கிறது’ என்று கூறுகிறார்.
அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். மனிதன் உருவாக்கிய தேருக்கு, மனித உயிரைப் பலியிடவேண்டுமா என்று திகைத்து நிற்கின்றனர். தேசாய், அதிகாரி, கணக்குப்பிள்ளை என்று பொறுப்பில் இருப்பவர்கள் யாரும், தங்களுடைய குடும்ப உருப்பினர்களை உயிர்ப்பலி கொடுக்கத் தயாராக இல்லை.
மீண்டும் சாஸ்திரக்கார அய்யரிடமே, என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள்., ‘ முதலிரண்டு அடுக்குகள் தெய்வத்தின் அடுக்குகள், மூன்று முதல் ஆறுவரை மனிதர்களின் அடுக்குகள், கீழடுக்கில் இருப்பவை கீழான விலங்குகள் ‘ என்றுசொல்லி, நரபலியைத் தவிர தெய்வம் வேறெதையும் கேட்கவில்லை என்றும் சாஸ்திரக்கார அய்யர் கூறுகிறார்.
அவ்வளவுதான், தலையாரியை அழைத்து, ‘தெய்வம் ஒரு கீழ்ச்சாதிக்காரனின் ரத்தம் கேட்கிறது, உடனடியாக ஒரு கீழ்ச்சாதிக்காரனைக் கொண்டுவா’ என்று கட்டளை இடுகிறார்கள்.
இதற்கிடையில், விட்டலர் தேர் நரபலி கேட்கிறது என்றும், ஒரு கீழ்ச்சாதி உயிரைப் பலியிடப்போகிறார்கள் என்றும், கிழ்ச்சாதிக்காரர்கள் வசிக்கும் 18 சேரிகளுக்கும் செய்தி பரவுகிறது.
மறுநாள் காலை, நரபலிக்கு ஆள்தேடி, சேரிக்குச் சென்ற தலையாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பதினெட்டுச் சேரிகளிலும், குப்பைக்கூழங்கள் தவிர வேறு மனித வாடையே இல்லை. அனைவரும் இரவோடு இரவாக சேரிகளைக் காலிசெய்துவிட்டு தொலைதூரம் சென்றுவிட்டார்கள்.
வேர்த்து விறுவிறுத்து, தலையாரி ஓடோடி வந்து, தேசாயிடம் செய்தியைக் கூறுகிறான். தேசாயும், அதிகாரியும் கணக்குப் பிள்ளையை அவ்சரமாக அழைத்து, தேர் இழுப்பதற்கு இரண்டுமூன்று தினங்கள்தான் இருக்கின்றன. எப்படியும் ஒரு கீழ்ச்சாதி உயிர் வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாகவோ, முதியவராகவோ இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி என்று கோபத்துடன் ஆணையிட்டு விரட்டுகிறார்கள்.
“இந்த உலகத்துல கீழ்ச்சாதி நூத்தியெட்டு இருக்குது.. பயந்த சுபாவம் உடையவர்கள். வறுமைதான் அவங்க சம்பாதிச்சு சேத்துவைத்திருக்கிற சொத்து. அதனால, இப்படி ஒரு பலிக்கு ஆள்புடிக்கிறது ஒண்ணும் பெரிய வேலையாக இருக்காது” என்பது கணக்குப்பிள்ளையின் மனக்கணக்கு.
ஆனாலும், கணக்குப்பிள்ளைக்குப் பயம் தொற்றிக்கொள்கிறது. சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் அலைந்துதிரிகிறான் ‘தேருக்கு நரபலி கொடுக்க நீ வா, உன் மகனைக்கொடு, உன் மகளைக்கொடு ‘ என்று எப்படிக்கேட்பது என்று தயங்குகிறான். வாய்விட்டு கேட்கவும் முடியாமல், கண்டுபிடிக்கவும் முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மனச்சோர்வுடன் கணக்குப்பிள்ளை வீடுவந்து சேர்கிறான். இதற்கிடையில், ராமநவமி அன்று தேர் இழுக்கப்போகிறார்கள் என்னும் செய்தி மக்களிடையே பரவிவிட்டது.
அவனது மனச்சோர்வுக்குக் காரணம் கேட்கிறாள் கணக்குப்பிள்ளையின் மனைவி. கணக்குப்பிள்ளையும் காரணத்தைக் கூறுகிறான். ‘ “நீயெல்லாம் ஒரு கணக்குப்பிள்ளையா? இதற்கு வழி இல்லாமலா போகும்?” என்று கணக்குப்பிள்ளையின் மனைவி, கனவனைக் குறை சொல்கிறாள். அவளது மனதில் ஒரு திட்டம் உருவாகிவிட்டதை, அவளது கண்கள் காட்டின.
ஒரு சுளவு (முறம்) நிறைய சோளம், கோதுமை, பருப்பு, வெல்லம், ஆகியவற்றை எடுத்துக்கோண்டு அவள்போய் சேர்ந்த இடம், பொம்மலாட்டக்காரன் தேவப்பாவின் இருப்பிடம். தோல்பாவைக்கூத்து நடத்திப் பிழைக்கும் தேவப்பாவும், அவனது கர்ப்பிணி மனைவியும். ஒன்பது பிள்ளைகளும் பட்டினியுடன், பிழைப்புக்கு வழியில்லாமல், சோகப்பெருமூச்சுடன், கோயிலுக்கு வெளியில் ஒரு மூலையில் இருக்கிறார்கள். மாத்திரமல்ல, சேரி மக்கள் ஊரைக் காலிசெய்த செய்தியும், அதற்கான காரணமும் அவர்களை எட்டியிருக்கவில்லை. அதனைக் கணக்குப்பிள்ளையின் மனைவி கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கிறாள்,. ‘உனது ஒரு பிள்ளையை விட்டலர் சாமி பலியாகக் கேட்கிறார். நீ கொடுத்தாயானால், உனக்கு எட்டு ஏக்கர் நிலம் கிடைக்கும், மற்ற பிள்ளைகளோடு பசியின்றி வாழலாம்’ என்று ஆசைமூட்டுகிறாள்.
தேவப்பாவின் மூத்த மகனைப் பலியாகக் கேட்கிறாள், கணக்குப் பிள்ளையின் மனைவி. மூத்தவனைத் தரமுடியாது என்று தேவப்பா சொல்லும்போதே, அவன் ஆசைக்குப் பலியாகிவிட்டான் என்பது புரிந்தது. தேவப்பாவின் மனைவி, “வேண்டாமையா, பிள்ளையைக் கொடுக்காதே” என்கிறாள். ஆனால் தேவப்பா அவனது ஐந்தாவது பிள்ளை சந்திரராசனைத் தருவதாக ஒப்புக்கொள்கிறான். கணக்குப் பிள்ளையின் மனைவி, வீடு திரும்பி, தனது கணவரிடம் சொல்ல, அவர் அந்த செய்தியை அதிகாரிக்குக் கடத்திவிடுகிறார்.
பொம்மலாட்டக்காரன் தேவப்பாவின் மனைவி, அழுது அடம்பிடிக்கிறாள். பிள்ளையைக்கொடுக்காதே என்கிறாள். இரவோடுஇரவாக ஊரைவிட்டே ஓடிப்போயிரலாம் என்கிறாள். ஆனால், தேவப்பாவோ, அவனது முடிவில் உறுதியாக இருக்கிறான்..ஒரு பிள்ளை போனாலும், மற்றவர்கள் வசதியாக வாழலாம் என்று கணக்குப் பிள்ளையின் மனைவி கூறியதையே அவனும் சொல்கிறான்.
ராமநவமியும் வந்தது. தேர் இழுப்பதற்கான அனைத்து வேலைகளும் முடுக்கிவிடப்பட்டன. விட்டலர் சாமியைக் கொண்டுவந்து தேரில் வைத்தாகிவிட்டது. பொம்மலாட்டக்காரனின் ஐந்தாவது மகன் சந்திரராசனைக் மஞ்சள் நீரால் குளிப்பாட்டி, சிவுப்புப் பட்டாடை உடுத்தி, நெற்றி நிறைய குங்குமம் வைத்து, விட்டலர் சாமியை வணங்கி, தேரைச்சுற்றி வலமாக அழைத்துவருகிறார்கள்..
தனது கையை இறுக்கமாகப் பிடித்திருந்த தேவப்பாவின் கரங்களை உதறிவிட்டு, ‘மகனே தப்பித்து ஓடி விடுடா’ என்று சொல்லிக்கொண்டே மகனைநோக்கிப் பாய்கிறாள் அந்தத்தாய். அவளை, மற்றவர்கள் பிடித்து, தேரிலிருந்து நீண்ட தொலைவிற்கு இழுத்துச் சென்றுவிட்டார்கள்.
சந்திரராசனை, தேரின் இடது சக்கரத்திற்கு முன்பு, படுக்கவைக்கிறார்கள். மக்கள் வடம்பிடித்து இழுக்க, தேர் சந்திரராசனின் உடல்மீது ஏறி இறங்கி நகர்ந்து உருண்டது. சந்திர ராசன் படுத்திருந்த இடம் கூழாகக்கிடந்தது.
கணக்குப்பிள்ளையின் மனைவி வாக்குக் கொடுத்தது போலவே, பொம்மலாட்டக்காரன் தேவப்பாவுக்கு, எட்டு ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. அந்த ஊர், அந்த வட்டாரத்திலிருந்து பத்து மைல் தொலைவில் இருந்தது.
ஒவ்வொரு ராமநவமி அன்றும் விட்டலரின் கல்தேர் இழுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பல நாட்கள் விரதமிருக்கும் தேவப்பா, ஒவ்வொரு ராமநவமிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிடுவான். ஊர் எல்லையிலேயே, ஊர்மக்கள் அவனுக்கு மாலையிட்டு மரியாதைசெய்து வரவேற்பார்கள்.
தேரோட்டம் அன்று, தேவப்பா தனது மண்டையை தேரின் இடதுபுற சக்கரத்தில் மோதி, வழியும் ரத்தத்தைத் தேரின் கிழக்கு முகத்தில் வைப்பான். அதன்பிறகே தேர் இழுக்கப்படும். அதுவே ‘ரத்தத் திலக சேவை’ என்று ஆனது.
ஊருக்குத் திரும்பும்போது, தேவப்பாவுக்கு, வண்டி நிறைய தானியங்களை ஊர் மக்கள் கொடுத்து அனுப்புவார்கள். தேவப்பா இறந்த பிறகு, அவனது வாரிசுகளில் மூத்த மகன் அந்த ரத்தத் திலக சேவையைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட நூற்றய்ம்பது ஆண்டுகள் இப்படி நடந்திருப்பதாக, கன்னட மொழியில் ராகவேந்திர பாட்டீல் எழுதிய சாகித்ய அகாடமி விருதுபெற்ற ‘தேர்’ நாவல் கதை சொல்கிறது. பாவண்ணன் அதனைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ( இது, நாவலின் ஆரம்பப்பகுதி மட்டுமே )
இதனை வெறும் நாவலாக மட்டும் கடந்துபோகமுடியவில்லை. இந்த நாவல் இரண்டு செய்திகளை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. ஒன்று, கடவுளின் பெயரால், அத்தனை சுகங்களையும் அனுபவிக்கும் மேல்சாதியினர், அதே தெய்வம் உயிர்ப்பலி கேட்கிறது என்ற உடன் கீழ்ச்சாதி மனிதர்களைப் பலிகொடுக்கும், மேல்சாதிக்காரர்களின் கீழான புத்தியையும் வெளிப்படுத்துகிறது.
மற்றொன்று, கோடிகோடியாகக் கொட்டிக்கொடுத்தாலும் அம்மாவை விலைக்கு வாங்க முடியாது என்பதை, பத்துப் பிள்ளைகள் இருந்தாலும், வறுமையில் வாடினாலும், எட்டு ஏக்கர் நிலத்திற்காக தனது ஒரு பிள்ளையை இழக்க தேவப்பாவின் மனைவி சம்மதிக்காதது, திமிரி ஓடி மகனைக் காப்பாற்ற முற்படுவது ஆகிய அவளது செயல்கள் உணர்த்துகின்றன..
மாத்திரமல்ல, ஆசை காட்டினால் தந்தை என்னும் ஆண் அதற்கு இணங்கிப்போகிறான் என்பதையும் இந்த நாவல் நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது. பெண் பிள்ளைகள் மீது அப்பாக்களுக்குத்தான் பாசம் அதிகம் என்று சொல்லிவருபவர்கள், தங்கள் பெண் பிள்ளைகள் ஒரு கீழ்ச்சாதி இளைஞனைக் காதலிக்கும்போது அல்லது இரகசிய திருமணம் செய்யும்போது ஆணவக்கொலை செய்பவர்களும் அதே அப்பாக்கள்தான் என்பதையும் நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்த்துவருகிறோம்தானே?
பிள்ளைகள்மீதான பாசத்தில், என்றுமே அம்மாக்களுக்கு, அப்பாக்கள் ஈடாகமுடியாது என்பதுதான் எனது அனுபவம்தரும் செய்தியும்கூட.