மொழி வரலாறு : குரங்குகள், பெருங்குரங்குகள், மனிதர்களை வைத்து ஒரு ஆய்வு
பூமியில் மனிதர்கள் பயன்படுத்தும் மொழியின் அடிப்படைக் கட்டமைப்பு (Building Blocks of Human Language) 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாகிவிட்டதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒலித்தொகுப்புகளுக்கு (groups of sounds) இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வதுதான் மொழியின் அடிப்படைப் பண்பு. இப்பண்பு, மனிதர்களின் மிக நெருங்கிய முன்னோராகக் கருதப்படும் (Primates) பெருங்குரங்குகளிடமும் (Apes), பழங்குரங்குகளிடமும் (Old monkeys), மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாகிவிட்டதாக, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அடிப்படையில், மொழி என்பது சொற்றொடர்களால் (sentences) ஆனது. ஒரு சொற்றொடரில் அமைந்த ஒவ்வொரு சொல்லிற்கும் (word) பொருள் உள்ளது. பொருள் , இலக்கணத்திலிருந்து (grammar or syntax) வருகிறது. அதாவது,சொற்கள் அடுக்கப்படும் விதத்திலிருந்து, பொருள் உருவாகிறது எனலாம். ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களுக்கு இடையிலான தொடர்பை அடையாளம்கண்டு, சொற்றொடர்க்கானப் பொருளை பகுத்தறிவதுதான், மனித மூளை எவ்வாறு மொழியைப் பகுப்பாய்வு செய்கிறது என்பதன் அடிப்படை ஆகும்.
இப்படி, ஒலிக்குறிப்புகளை அடையாளம்காணும் திறனின் தோற்றத்தை (Origin) அறிந்துகொள்வதற்காக ஆய்வாளர்கள் ஒரு சோதனை செய்தனர். செயற்கையாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். எப்படியென்றால், ஆறு ஒலிப்பிரிவுகளில் (six acoustic categories), ஒலிகளை (audio tones) உருவாக்கி, அவற்றைக்கொண்டு சொற்றொடரை உருவாக்கினார்கள். அதன்பிறகு, மனிதர்கள் மற்றும் மர்மோசெட் (marmosets) என்னும் பழங்குரங்குகள், சிம்பன்சிகள் ஆகியவற்றைக்கொண்டு ஆய்வு செய்தனர்.
ஆய்விற்காக, கணினி துணைகொண்டு ஒலிகளை உருவாக்கினார்கள். சொற்களை அடுக்குவதுபோல, உருவாக்கப்பட்ட ஒலிகளை வரிசைப்படுத்தினார்கள்
உண்மையில் அந்த ஒலிகளுக்கு எவ்வித பொருளும் இல்லை. ஆனாலும், குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகள் அதே இடங்களில் தோன்றி, அவற்றிற்கிடையே ஒருவிதத் தொடர்பை ஏற்படுத்தின.
அதன்பிறகு, செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்த ஒலிக்குறிப்பு வரிசைகளைக்கொண்ட இலக்கணத்திற்கு 24 மனிதர்கள், 17 சிம்பன்சிகள், 16 மர்மோசெட் பழங்குரங்குகள் பழக்கப்படுத்தப்பட்டன. சிம்பன்சிகளுக்கும், குரங்குகளுக்கும் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு ஒலிக்குறிப்புகள் பழக்கப்படுத்தப்பட்டன.
அடுத்த கட்டத்தில், ஒலிக்குறிப்பு விதிகள் பிழையாகும்போது, மூன்று இனமும் எப்படி அவற்றைக் கண்டுபிடிக்கின்றன என்று ஆய்வு செய்யப்பட்டது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் சூரிச் பலகலைக்கழகத்தின் ‘மொழி ஒப்பீட்டுத்துறையில்’ (Dept. of Comparitive Linguistics at the University of Zuich) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தவறான பொருள்கொண்ட சொற்றொடரை உருவாக்கியபோது, மனிதர்கள், குரங்குகள், சிம்பன்சிகள் ஆகிய மூன்று இனமும் சரியாகவே அடையாளம் கண்டதாக, அதாவது மொழியைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இடையே ஒற்றுமை (similarities) காணப்பட்டதாக சூரிச் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர் ஸ்டாட் வாட்சன் (Stuart Watson) தெரிவிக்கிறார்.
40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே குரங்கிலிருந்து, சிம்பன்சியும், மனித இனமும் பிரிந்து விட்டன. ஆனால் 5 அல்லது 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் சிம்பன்சிகளிடமிருந்து, மனித இனம் பிரிந்திருக்கிறது. மனிதர்கள், சிம்பன்சிகள் மற்றும் மர்மோசெட் எனப்படும் உலகின் மிகப்பழைய குரங்கினம் ஆகிய மூன்றையும் இப்படி சோதனைக்கு உள்ளாக்கப்படுவதன்வழியே, இந்த மூன்று இனங்களுக்குமான பொது முன்னோரிடம் (common ancestor) இருந்து இந்த மொழி உணரும் பண்பு வந்திருக்குமா என்று ஆய்ந்தறிவது சோதனையின் ஒரு நோக்கமாகும்.
மூன்று இனங்களுமே, புதிய மொழியின் விதிகளைப் புரிந்துகொண்டதோடு, அவை மீறப்படும் இடங்களையும் கண்டறிந்திருக்கின்றன என்பது ஆய்வுமுடிவாகும். இது, 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள், சிம்பன்சிகள், மர்மோசெட் குரங்கினம் (marmoset monkeys) ஆகிய மூன்று இனங்களும், அவற்றிற்குப் பொதுவான முன்னோர் (Common ancestor) இருந்த காலகட்டத்திலேயே, மொழி தோன்றுவதற்கு முன்பாகவே ‘அருகமையாத ஒலிகளைக்கொண்ட மொழியை’ (non-adjacent dependencies in language) கண்டறியும் திறமை பெற்றிருக்கின்றன என்னும் கருத்தை உறுதி செய்தது. (For example, in the phrase “The dog that bit the cat ran away,” the act of running away is linked to “the dog,” and not “the cat.”)
இப்போது சூரிச் பல்கைக்கழகத்தில் செய்யப்பட்டிருக்கும் ஆய்வு முடிவு என்பது, மனிதர்கள், சிம்பன்சிகள், மர்மோசெட் பழங்குரங்கு ஆகியவற்றின் பொது முன்னோரிடம் இருந்துதான் இந்த மொழி அறிவு வந்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை உறுதிசெய்கிறது. இப்படிப்பட்ட மொழி அறிவு 40 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பே உருவானது என்னும் முடிவுக்கு வர ஏதுவாகிறது. அதாவது, மனித இனம் தோன்றுவதற்குப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மொழி உருவாகிவிட்டது எனலாம்.
முதுகுடிகளில் (primates) ஒலிக்குறிப்புகளை மொழியாக மாற்றி செழுமைப்படுத்திய இனமாக மனித இனம் மட்டுமே இருப்பதாக, ஸ்டாட் வாட்சன் (Stuart Watson) கூறுகிறார். என்றாலும், மற்ற முதுகுடிகளும், தங்களுக்குள்ளான தகவல் பரிமாற்றத்திற்கென்றே இப்படிப்பட்டத் திறமைகளைப் பெற்றிருக்கக் கூடும், அவை நாம் அறியாதவையாகவும் இருக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.
“சிம்பன்சிகளுக்கிடையேயான உரையாடலுக்காக 120 வெவ்வேறு விதமான ஒலிகள் இருக்கின்றன. அதனை ஒரு பழமையான மொழியாகக் (pirimitive language) கருதலாம் என்று 56 ஆண்டுகள் காட்டில் சிம்பன்சி குடும்பத்தில் வாழ்ந்து ஆய்வு செய்த ஜேன் குடோ (Jane Goodall) கூறுவது, இந்த ஆய்வுக்கு வலு சேர்க்கிறது எனலாம்.
இந்த ஆய்வு முடிவுகள் Science Advances என்னும் இணைய இதழில் 2020 அக்டோபர் 19-இல் வெளியிடப்பட்டது
முதுகுடிகளின் மனிதப்பண்புகள் (Human like behavior in Primates)
முன்பெல்லாம், உயிரியல் துறையில் (Zoology) , மனிதர்கள் ‘ஹொமினிடே’ (Hominidae) என்னும் பிரிவிலும், ஆப்பிரிக்கப் பெருங்குரங்குகள் ‘பொங்கிடே’ (Pongidae) என்னும் பிரிவிலும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. மரபணு தொழிநுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், இப்போது மனிதர்களையும், ஆப்பிரிக்கப் பெருங்குரங்குகளையும் ‘ஹொமினிடே’ (Hominidae) என்னும் ஒரே பொதுப்பிரிவில் வைத்துப் பேசுகின்றன. காரணம், மனித இனம் பிரிந்துவந்திருப்பதாகக் கருதப்படும் கொரில்லா, சிம்பன்சி, ஒரங்குட்டான், போனபோஸ் போன்ற ‘பெருங்குரங்குரங்குகளின்’ (Apes) மரபணுக்களோடு (DNA), மனிதர்களின் மரபணு 97 விழுக்காடு அளவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
குறிப்பாக, மனிதர்களின் மரபணுக்கள், ஆப்பிரிக்க சிம்பன்சிகளுடன் மிக அதிக அளவில் நெருக்கமாக இருப்பதாக மரபணு (DNA) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவற்றிலும், சிம்பன்சிகளை விடவும், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படும் போனபோஸ் (bonobos) என்னும் பெருங்குரங்குதான், ,இன்றைய மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக, அவற்றின் தசைகளை (muscle) ஆய்வுசெய்த ஒரு ஆய்வுக்குழு தெரிவிக்கிறது..
இன்றைய மனிதர்களும், சிம்பன்சி மற்றும் போனபோஸ் பெருங்குரங்குகளும், ஒரே உயிரியல் வரிசையில் (same linage) வந்து, எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். சிம்பன்சியிலிருந்து, போனபோஸ் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனி இனமாகப் பிரிந்திருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. சிம்பன்சி மற்றும் போனபோஸ் பெருங்குரங்குகள், ஆப்பிரிக்காவில், காங்கோ ஆற்றுப்படுகையில் (Congo riverbed) வாழ்ந்தாலும், அவற்றின் உடற்கூறுகள் வேறுவேறாக வளர்ந்திருக்கின்றன
அந்த முதுகுடிகளிடமும் (Primates), மனிதர்களிடமும் இருக்கும் பல பழக்கவழக்கங்கள் ஒரேமாதிரியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேண்டாம் என்று தலையசைத்தல்: (say NO )
போனபோஸ் குட்டிகள் உணவை உண்ணாமல் விளையாடிக் கொண்டிருக்கும்போதும், தூரமாக விலகிச் செல்லும்போதும், அந்தக் குட்டிகளைப் பார்த்து, தாய் போனபோஸ், மனிதர்களைப்போல, தலையை இடம்வலமாக அசைக்கிறது. அதாவது, அதற்கு, அப்படி செய்யக்கூடாது என்று பொருள்.
ஒரு குட்டி போனபோஸ், மரம் ஒன்றில் ஏறுவதற்கு முயற்சிக்கிறது. ஒவ்வொரு முறையும் தாய் அதனைக் கீழே இழுத்துப் போடுகிறது. குட்டியோ, தாய் சொல்லைக் கேளாமல் மீண்டும் மிண்டும் மரம் ஏற முயற்சிக்கிறது. கடைசியாக, அந்தக்குட்டியைக் காலைப் பிடித்துக் கீழே இழுத்தபிறகு, அந்தக்குட்டியை முறைத்துப்பார்த்து, தாய் தனது தலையை உறுதியாக மறுப்பின் அடையாளமாக அசைக்கிறது. சிம்பன்சிகளிடமும், இப்படியான வேண்டாம் என்னும் பொருளில் தலையசைவு இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்திருக்கின்றனர்.
உணவுக்காகக் கையேந்துதல்: (Beg for food)
2007-இல் நடத்தப்பெற்ற ஓர் ஆய்வில், சிம்பன்சிகளும், போனபோஸ்களும், உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு, முகத்தோற்றத்திற்குப் பதிலாக கைகளையும், கால்களையும் பயன்படுத்துகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. சிம்பன்சிகள், உணவுவேண்டும் என்பதற்காகக் கைகளை நீட்டுவது, , மனிதர்கள் பிச்சைக்காகக் கையேந்துவதுபோலவே, இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பிரிட்டன் உயிரியல் பூங்காவில் ஒரு சிம்பன்சி, ஒருகையால் கண்களை மூடிக்கொண்டு, மற்றொரு கையால் ‘ என்னைத் தொந்திரவு செய்யாதே’ என்னும் பொருளில் சைகை செய்வதாக, அங்குள்ளப் பணியாளர்களின் அவதானிப்பிலிருந்து தெரியவருகிறது..
வாய்விட்டு சிரித்தல் (Laugh out loud)
சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே வாய்த்தது என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் அந்த உரத்த சிரிப்பு முதுகுடிப் பெருங்குரங்குகளிடமும் காணப்படுகிறது. சிரிப்பு மூட்டப்பட்டால் (tickling) வாயை அகலமாகத் திறந்து அவை சிரிக்கும்போது வெளிப்படும் ஒலி அளவு, மனித சிரிப்பு அளவிற்கு இல்லை என்றபோதும், முகபாவத்தை மாற்றி, ஒலியை ஏற்றி இறக்கி அவை சிரிப்பது, மனிதர்களின் சிரிப்பை ஒத்திருக்கிறது என்று உறுதியாகக் கூறமுடியும்.
முகத்தை நினைவுகொண்டு அடையாளப்படுத்துதல்: (Recognize Faces)
மனிதர்களைப்ப்போலவே, குரங்குகளும் கூட்டங்களில் முகங்களின் தனித்த அடையாளங்களைக்கொண்டு வேறுபடுத்தி அறியும் திறன்பெற்றிருக்கின்றன என்று ஜெர்மனி, மேக்ஸ் ப்ளாங் ஆய்வு மையத்தின் (Max Plank Research Institute) உயிரியல் துறையில் நடத்தப்பெற்ற ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நொறுக்குத்தீனியை விரும்பும் குரங்குகள் ; (Eat Junk Food to calm Nerves)
மனிதர்களைப்போலவே, குரங்குகளிலும் படிநிலைகள் உள்ளன. கீழ்நிலையில் உள்ள குரங்குகளுக்கு மன அழுத்தம் (stress) அதிகமாகும்போது, வழக்கத்திற்கு மாறாக, வாய்க்கு சுவையான, உடலுக்கு நன்மைபயக்காத உணவுகளை அதிகமாக உண்ணுகின்றன என்று ஒரு ஆய்வுமுடிவு தெரிவிக்கின்றது.
கருவி செய்தல் (Tool making)
ஆப்பிரிக்கக் கண்டத்தின் டான்சேனியாவின் கோம்பே ஆற்றுப்பள்ளத்தாக்கில் (Gombe Stream National Park, Tanzania) சிம்பன்சி குடும்பங்களுடன் 56 ஆண்டுகள் தங்கி, ஆய்வு செய்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜேன் குடோ (Jane Goodall). பெருங்குரங்குகளில், சிம்பன்சிதான் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன என்பதைத் தனது அவதானிப்புகளின்மூலம் பதிவு செய்துள்ளார்.
சிம்பன்சிகள், . கோரைப் புல்லைக் கிழித்து, கரையான் (termites) உள்ள இடங்களில் நுழைத்து, வெளியே எடுத்தபோது அதில் கரையான்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. கரையான்கள் புரதச்சத்து மிகுந்தவை என்பதால் அவற்றை சிம்பன்சிகள் உணவாகக் கொள்கின்றன. . .
வருந்திக்கொண்டிருக்கும் ஓர் உறுப்பினரை, மற்ற சிம்பன்சிகள் அரவணைத்து ஆறுதல் சொல்லும் சமூகப்பழக்கம் , அநாதையாக்கப்பட்ட குட்டிகளை, மற்ற சிம்பன்சிகள் ஏற்றுக் கொள்ளும் பொதுசேவை வழக்கம், அன்புடன் அணைத்தல், முத்தம் கொடுத்தல், ஆதரவுடன் முதுகைத்தடவுதல், சிரிப்பு மூட்டுதல் போன்ற மனிதர்களுக்கான குணங்கள் சிம்பன்சிகளிடம் இருப்பதையும் ஜேன் குடோ பார்த்துப் பதிவுசெய்திருக்கிறார்.
போனபோஸ் உறவு கொள்ளல் (Bonobos love Making)
மனித இனத்தின் நேரடி முதுகுடியாகக் கருதப்படும் போனபோஸ் பெருங்குரங்குகளிடம் காணப்படும், கட்டி அணைத்தல், முத்தமிடல், உறவுகொள்ளல் (Love making) ஆகியவை, பரிணாம வளர்ச்சிபெற்ற மனிதர்களைப்போலவே இருப்பது மிகவும் வியப்பாக இருப்பதோடு, போனபோசிடமிருந்துதான் மனித இனம் பிரிந்துவந்தது என்னும் கொள்கைக்கு வலு சேர்ப்பதாகவும் அமைகிறது.