மொழி அரசியல்..!
கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை ஏற்பது குறித்த விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பல கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றன. “இந்தி தெரியாது போடா!” என்ற ‘ஹாஸ்டாக்’ வாசகங்கள், முழக்கங்கள் சுட்டி, முகநூல் போன்றவற்றில் உலகளவிலாக முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. சில பிரபலமான முகங்கள் இந்த வாசகங்கள் கொண்ட சட்டையை அணிந்து கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வலம் வந்தனர். வந்து கொண்டிருக்கின்றனர். டீசர்ட் வாசகங்கள் மூலம் தமிழை வளர்த்து விட முடியாது என்கிறார் பாசக வானதிசீனிவாசன்.
மொழி குறித்த விழிப்புணர்வுக்கு, சரியான விழிப்புணர்வுக்கு, அறிவு வழியிலான விழிப்புணர்வுக்குத் தமிழன் வந்துவிட்டானா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. முன்னரும், அதன்பின்னரும் இவ்வாறான ஹாஸ்ட்டாக்குகள் காலத்திற்கேற்ப எழுந்துள்ளன. ஹாஸ்ட்டாக் என்பது சமூகச் சூழலின் ஊடாக வந்த பரவலான முழக்கங்களையே குறிக்கிறது. ஹாஸ்ட்டாக் முன்னர் துண்டறிக்கையாக இருந்தது. பெருந்திரள் ஆர்ப்பாட்ட முழக்கங்களாக இருந்தது. கறுப்பு அல்லது சிவப்பு அடையாள நிறங்களாக இருந்தது. இப்போதும் இருக்கிறது. தமிழர்கள் எதிர்ப்புகளையெல்லாம் வெறும் அடையாளங்களுக்குள் சுருக்கிவிடுகிறோமோ என்று தோன்றுகிறது. எனினும் எதிர்ப்புகள் இருக்கின்றன இவ்விதமாக எனும்போது ஆறுதலாக இருந்தாலும் அதுவே சரியான எதிர்ப்பு என்று ஆகிவிடுவதில்லை. ஆகிவிடாது.
நடுவணரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கை மும்மொழித் திட்டம் குறித்து பேசுகிறது. இது ஏற்கனவே காங்கிரசு ஆட்சியிலும் பேசப்பட்ட, நடைமுறைக்கு கொண்டுவர இயலாமல் போன மொழித் திணிப்பின் பிறிதொரு வடிவம்தான். கூட்டாட்சி கொள்கையின் படி, மூன்றாவதாக ஒரு மொழியை மாநிலங்களின் மக்கள் ஏற்கவேண்டும் என்றால் அவர்களது ஏற்பு தேவை. ஆனால் ஒற்றையாட்சி முறையில் அப்படி ஏதும் தேவையில்லை. அரசு என்ன சட்டம் கொண்டுவருகிறதோ அதை அப்படியே ஏற்க வேண்டும். ஒரே மொழி இந்தி மட்டும்தான், பள்ளிக் கல்லூரிகளில் இந்தியில் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். வீட்டில் மாநில மொழிகளில் பேசிக் கொள்ளுங்கள் என்றால் ஏற்கதான் வேண்டும்.
ஏனெனில் ஒற்றை மதம், ஒற்றை அரசு, ஒற்றை அதிகாரத்தின் நீதி அது. ஆனால் அரசியல் அடிப்படை சாசனங்கள் மாநிலங்களின் கூட்டாட்சி என்கிறது. அதனடிப்படைதான் இந்தியா என்கிறது. அவரவர் மொழி உரிமைக்கு சட்டவழியிலான பாதுகாப்பு இருக்கிறது. இப்போது மூன்றாவது மொழியை கற்பது என்பது மாநிலம் அல்லது அதன் மக்களின் ஏற்பில் அடங்கியுள்ளது. எந்த ஏற்பும் இல்லாமல், விருப்பமும் இல்லாமல் பிறிதொரு மொழியை ஏற்க செய்வது திணிப்பு. மொழிச்சுமை. அடிமைகள் மீது வலுவில் ஏற்றப்படும் தங்கவியலாத பாரம்.
ஒற்றை இந்தியாவை நோக்கி நகரும் மதவாத பாசக அரசு மூன்றாவதாக ஒரு மொழியை வலுவில் ஏற்கச்செய்வதே வியப்புதான். ஏனெனில் அவர்கள் ஒற்றை தேசத்தின் ஒற்றை மொழியை நோக்கி நகரக்கூடியவர்கள். நகர்கிறவர்கள். இப்போது மூன்றாவது ஒரு மொழி என்பது முதலிடத்திற்கு நகரக்கூடிய சாத்தியங்கள் உடையவை. இந்தியை வைத்துக் கொண்டே மூலமொழியான சமற்கிருதத்தை ஒற்றை மொழியாக நிறுவக்கூடிய தெளிவான அரசியல் இலக்கு கொண்டவை. எனவே மூன்றாவது இடம் என்பது முதலிடத்திற்கு வரும்போது அங்கு சமற்கிருதம் வந்துவிடும். மும்மொழிக் கொள்கை என்பது ஒரு மொழிக் கொள்கையாகிவிடும். இன்றைக்கு மும்மொழிக் கொள்கை என்பது நாளை ஒரு மொழி கொள்கைதான். ஒரு மொழி ஏற்புதான். இதன் தொடர்ச்சியே ஒற்றை மத ஏற்பு, ஒற்றை அரசு ஏற்பு, ஒற்றை அதிகார ஏற்பு. ஒற்றை அடிமைத்தன ஏற்பு.
மொழி பற்றி பேசும்போது அடிமைத்தனம் எங்கிருந்து வர முடியும் என்கிற கேள்வி முக்கியமானது. மொழி என்பது வெறும் குரல் சார் ஊடகம் மட்டும் இல்லை. இன்றைக்கு அதன் பெருமதி விரிந்து பரந்திருக்கிறது. மொழி என்பது வாழுரிமை. பேச்சுரிமை. நடமாடும் உரிமை. மொழியை வெறும் ஊடகமாக அல்லது வணிகத் தேவைகளில் அரசியல் தேவைகளில் செல்லுபடியாகும் ஒன்றாக மட்டும் கணிப்பது ஆகப்பெரிய பிழையாகும்.
மொழி ஊடகமாகத் தோன்றினும் அது வாழ்தலை, இருத்தலை பொருள்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. ஊடகங்கள் தகவல் தொடர்பு என்பதைத் தாண்டி, அது கலையாக வெளிப்பட்டபோது மொழியும் தன்னுள் தானே கலை வடிவமெடுத்துவிடுகிறது. எடுத்துவிடும். மனிதன் வாழும் கலையின், தன்னிருப்பின் அடையாளமாக மொழி இருக்கிறது. மொழியில்தான் மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தனது கலைகளை, தனது அரசியலை, உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். மொழி என்பது மனிதனாகவும், மனிதன் என்பவன் மொழியாகவும் பிரித்தறிய முடியாததாக இருக்கிறது.
ஒவ்வொரு மொழியும், ஒவ்வொரு தனிமனிதன் போல விசேட இயல்புகளைக் கொண்டிருக்கிறது. மொழிக்குள் மொழியே அவ்வாறான விசேட தன்மை கொண்டிருக்கவே செய்கிறது. வட்டார மொழி என்பது பேச்சு மொழி என்பதும் அவ்வம் வட்டாரம் சார்ந்த பேழையாக இருக்கிறது. மக்கள் அவர்தம் வாழ்வனுபவங்களை அவற்றில் இட்டு வைக்கின்றனர்.
ஒரு மொழியை தேவையைக் கருதி தானே கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. எசமானுக்கும், அடிமைக்குமான வேறுபாடு அது. மொழிக்கும், தன்மரியாதைக்குமான இடத்திலிருந்தே மொழி குறித்த விழிப்புணர்வு வருகிறது. வரும். மொழித் திணிப்புக்கும், ஏற்புக்குமான புரிதல் வருகிறது. வரும்.
பெரியார் தன்மரியாதையிலிருந்தே மொழி குறித்த இடத்திற்கு நகர்கிறார். இது திட்டமிட்ட நகர்தல் இல்லை. இயல்பான நகர்தல் அது. இயற்கையான நகர்தல் அது.
விடுதலைக்கு முந்தய காலத்திலிருந்தே பிரித்தானியரிடம் யாசகித்த ஒரு கூட்டமும், அதற்கு எதிரான ஒரு கூட்டமுமாக பார்ப்பனிய மேலாதிக்க வர்க்கம் இருந்தது. இருக்கிறது. பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்ப்பதும் அவர்களே, ஏற்பதும் அவர்களாகவே இருந்தனர். அதிகாரத்தை பிரித்தானியர் மாற்றி தந்தபோது அவர்களுடன் சேர்ந்து அதிகாரவர்க்கத்திலிருந்த பார்ப்பனர் கப்பலேறிவிடவில்லை. ஆளும் சுதந்திரத்தை வாங்கிக் கொண்ட பார்ப்பனருடனே இணைந்து கொண்டனர். ஆக பார்ப்பனருக்கான விடுதலை என்ற பொருளில்தான் பெரியார் இதைச் சரியாகக் கணித்தார். பெரியாரின் விடுதலை என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கம் நீங்கிய சமூகம் மற்றும் அரசியல் விடுதலை. பார்ப்பனரிடமிருந்து விடுதலை என்றால் அவர்களது அதிகாரத்துவமான மதம், மொழி, கலாச்சாரம், சாதிபாகுபாடு, மேலாதிக்க மனோபாவம், மேல் கீழ் பாகுபாடு, அசமத்துவ ஏற்பு, மதத்தையும், கடவுளையும் காட்டி மனிதனை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி வைத்திருத்தல், இரக்கமற்ற மனுசட்டங்களைக் கொண்டு மனிதர்களை விலங்கினும் கீழாக நடத்துதல் இவற்றிலிருந்து அரசியலை, சமூகத்தை விடுதலை செய்வதாகும். கடவுளையும், மொழியையுமே அவர்களிடமிருந்து விடுதலை செய்வதும் கூட அவரது இலக்குகளில் முக்கியமானதாக இருந்தது. பெரியாரின் இலக்காக இருந்தது.
பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனரால் மேலாண்மை செய்யப்பட்ட கடவுள், மொழி இவை இரண்டையும் அவர்கள் இந்திய விடுதலைக்கு முன்பாகவே நன்கு திட்டமிட்டு அரசியல் அரங்கிற்குக் கொண்டு வருகின்றனர். இந்திய விடுதலைக்கு முன்பாகவே இந்தியாவின் பொது மொழி, அல்லது தேசிய மொழி ஒன்று குறித்துப் பேசப்படுகிறது. காந்தியார் உருது, சமற்கிருதம், கலந்த இந்துஸ்தானியை வழிமொழிகிறார். மெய்யாகவே அதிகாரத்திலிருந்த பார்ப்பனர்கள் தேசியப் பொது மொழி என்ற ஒன்றை அவர்கள் பார்ப்பன பண்பாட்டு, அரசியல் வழியிலாக கண்டடைய விரும்புகிறார்கள். பலர் நினைப்பது போல மாநிலங்களுக்கிடையிலான அரசியல் உரையாடலுக்கான பொது மொழி என்பது ஒரு போலித் தோற்றமே.
பார்ப்பன இந்தியாவை இணைப்பதற்கு அவர்களுக்கு ஒருங்கிணைந்த நிலபரப்பு, ஒருங்கிணைந்த கலாசாரம், ஒருங்கிணைந்த சிந்தனைப் போக்கு, ஒருங்கிணைந்த அதிகாரத்துக்கான ஒற்றை மொழி தேவைப்பட்டது. தேவைப்படுகிறது. அது இந்தி அல்ல. இந்தியாவில் எங்கும் பேசப்படாத ஆனால் அரச, அதிகார, ஆன்மிகக் கருமமொழியாக கடந்த காலங்களில் இருந்த சமற்கிருதத்தை மீட்டுருவாக்கம் செய்யவே விரும்புகின்றனர். இந்தி என்பது இந்த இணைவை சாத்தியப்படுத்துவதற்கானது மட்டுமே. பிறகு அந்த இடத்தில் சமற்கிருதம் நிலைநிறுத்தப்படும். இது ஒரு வேலைத்திட்டம். ஆர்.எஸ்.எஸ் இன் கலாசார அரசியல் வேலைத் திட்டம். அகன்ட பாரதத்தின் வேலைத் திட்டம். அதை நடைமுறைப்படுத்தும் இடத்தில் பாசக இருக்கிறது. இருக்கும்.
இந்த மெய்மையெல்லாம் வசதியாக வரலாற்றில் மறைத்துவைத்துக் கொண்டு மும்மொழிதிட்டம், கல்விக் கொள்கை என்று ஏதோ புதிது போலப் பேசமுடியாது. மாநிலங்கள் விரும்பாத வரை இந்தித் திணிப்பு இருக்காது என்று காமராசர் வழி பெரியாரிடம் உறுதிமொழி பத்திரம் வழங்கிய நேருவின் இந்தியா மறந்திருக்கலாம். பெரியாரின் தமிழ்நாடு, அவரது பிள்ளைகள் அவற்றை மறந்துவிட முடியாது. அண்ணாவின் தம்பிகள் மறந்துவிட முடியாது.
எதிர்கால இந்தியாவில் அடிப்படை மனித உரிமைக்கே இடமில்லை, மனித விடுதலைக்கு இடமில்லை என்று பெரியார் முன்னுணர்ந்ததாலேயே ஜின்னாவுக்கு முன்பாகவே அவர் தனிநாடு கேட்பவராக இருந்தார். ஜின்னா, மத உரிமை இருக்காது என்பதால் கேட்டார். பெரியார், மனிதனுக்கு உரிமை இருக்காது என்பதால் கேட்டார். ஆனால் இவ்விருவருமே பார்ப்பனிய மேலாதிக்க அரசியலை எதிர்கொண்டவர்கள் என்பதை வரலாறு பதிவு செய்துவைத்திருக்கிறது. இனியும் செய்யும். இன்றைக்கு மொழித்திணிப்பு பற்றி பேசத்தான் செய்கிறோம். பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஏனெனில் பெரியாரின் தொடர்பை, தொடர்ச்சியை தவறவிட்டிருக்கிறோம். பெரியார் விட்ட இடத்திலிருந்து அண்ணா தொடங்கினார், கருணாநிதி கொஞ்சம் முன்னநகர்த்தினார். ஆனால் அண்ணா கைவிட்டத் தனித்தமிழ்நாட்டுக்கான சிக்கல்கள் இருக்கும் வரை, மொழித்திணிப்பு இருக்கவே செய்யும். செய்கிறது. அதனால்தான் இன்றைக்கும் மொழித்திணிப்பிற்கு எதிராக போராட வேண்டியிருக்கிறது. பாட்டன், முப்பாட்டன், நாம், நமது பிள்ளைகள் என்று அது தொடர்கிறது. தொடரும். தலைமுறையின் பிழை வீதியிலேதான் நிறுத்தும். நிறுத்துகிறது.
வகுப்புவாரி உரிமை மறுக்கப்பட்டபோதே காங்கிரசிலிருந்து வெளியேறுகிறார் பெரியார். திரு விக பெரியாருடன் சேர்ந்து போராடிப் பார்த்துவிட்டு காங்கிரசிலேயே தங்கிவிட, காங்கிரசு என்பதும் பார்ப்பனியம் என்பதும் வேறு வேறு அல்ல என்ற முடிவுக்கு பெரியார் வருகிறார். ஆங்கில ஆதிக்கத்திலிருந்து பார்ப்பன மேலாண்மையை காப்பாற்றிக் கொள்வது. பார்ப்பன மேலாண்மை அரசியலே இந்திய விடுதலை என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டார். இந்து மகா சபை யின் பிறிதொரு வடிவமே காங்கிரசு என்பதை அவர் அறிந்திருந்தார். காங்கிரசை ஒழிப்பதுதான் தனது முதல் வேலை என்று அதனால்தான் அவரால் கூற முடிந்தது.
தன்மரியாதையிலிருந்தே சகல விடுதலையும் தொடங்குவதை அவர் கண்டடைந்தார். எனவே அவர் தன்மரியாதையை சமூகத்திலும், அரசியலிலும் ஒருசேரக் கோருபவராக இருந்தார். தன்மரியாதை என்பது சொந்த மரியாதைக்கு அப்பால் ஒரு இனக்குழுவின், ஒரு நில எல்லையின், பண்பாட்டின், கடவுளின், மொழியின் தன்மாரியாதை. அதனால்தான் காங்கிரசிலிருந்து வெளியேறிய சில திங்களுக்குள்ளாகவே 1926 இல் தாம் தொடங்கிய குடியரசு இதழில் ‘தமிழுக்குத் துரோகமும், இந்தியின் இரகசியமும்’ என்று அவரால் எழுத முடிந்தது.
பெரியார் அன்றைக்கே சரியான இடத்தில் முனை முகத்து நின்றார். நின்ற இடத்திற்கு நமது சமூகமும், தேர்தல் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இன்னும் வந்து சேரவே இல்லை. எனவேதான் இன்னும் மொழித் திணிப்புக் குறித்து பேசவும், எழுதவும், போராடவும் வேண்டியவர்களாக இருக்கிறோம். இருப்போம்.
பெண்விடுதலை, பெண்சமத்துவம், சாதியொழிப்பு, கடவுள் மறுப்பு, இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் இவை எல்லாம் பார்ப்பனர் எதிர்ப்பு என்று என்றைக்குமே சுருக்கிக் கொள்ள முடியாது. சுருக்கிப் பேசிவிட முடியாது. இவற்றை பார்ப்பன எதிர்ப்பு- ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக ஆதிக்கச் சாதிக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கப்படுவது இன்று வரையிலுமான திட்டமிட்ட பிரசாரமாகும். பார்ப்பனியம் என்பது அதிகாரம். பார்ப்பனியம் என்பது பாசிசம். எனவே பார்ப்பனியத்தை எதிர்ப்பது என்பது பாசிசத்தை எதிர்ப்பதாகும், அதிகாரத்தை எதிர்ப்பதாகும். அடிமைத்தனத்தை எதிர்ப்பதாகும் இந்த புரிதல் பெரியாருக்கு இருந்தது.
அதிகாரத்தை நோக்கிக் கேள்வி எழுப்புவது என்பது பார்ப்பனியத்தை நோக்கிக் கேள்வி எழுப்புவதுதான். ஆனால் அதை பார்ப்பனரை நோக்கிய வெறுப்பு அரசியலாக கட்டமைக்கப்படுவது கண்டு பெரியார் வருத்தமடைந்தார். “பார்ப்பனர்கள் தங்கள் உயர்வையும், ஆதிக்கத்தையும் உண்டாக்கிக் கொள்வதும், நம்மைத் தாழ்ந்த நிலையிலும் இழி தன்மையிலும் இருக்கும்படி செய்வதும் கொஞ்சமாவது குற்றமென்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் நாம் அவர்களால் தாழ்மையாயும், இழிவாயும் கருதப்படாமல் சமத்துவமாய் சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பது குற்றமாகிவிடுகிறது”. பிறிதொரு இடத்தில், “நாம் ஏதாவது இவற்றில் ஆசைப்பட்டால், நமக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். யோக்கியதை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று நாம் பிரயத்தனப்பட்டால் ‘தேசத்துரோகி’, ‘வகுப்புத் துரோகி’ என்று சொல்லிவிடுவார்கள்!” என்கிறார். சமற்கிருதம், இந்தி எதிர்ப்பு என்பது இந்தப் பின்னணியில் தேசத்துரோகியாகவிடுவது இன்றைக்குமான ஒன்று என்பதை பெரியார் தொட்டு இன்றுவரை புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.
இந்தி அல்லது சமற்கிருதம் ஒரு மொழியாக இருந்துவருவதை பெரியார் உட்பட யாதொருவரும் எதிர்த்தது கிடையாது. தாய்மொழிக்கு அடுத்து அல்லது அதைத் தவிர்த்துவிட்டு வேறொரு மொழியைக் கற்றுக் கொள் என்ற அளவிலேனும் அதை எதிர்ப்பவர் கிடையாது. இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்போதே, திணிக்கும்போதே – பார்ப்பனியம் வருகிறது. அதிகாரம் வருகிறது. பாசிசம் வருகிறது. மொழியை எதிர்க்கவில்லை மொழி வரும் வழியையே அன்றைக்கும் இன்றைக்கும் தமிழர்கள் எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். இருப்பார்கள்.
இங்கு பார்ப்பனியம், பாசிசம், அதிகாரம் என்பவை நேர் பொருளில் இல்லை என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். இருக்கிறது. பண்பாட்டு வழியில் கடவுள், சடங்குகள் வழியாகவும், அரசியலில் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் இங்கு மொழித் திணிப்பு இருக்கிறது. மொழியை எதிர்ப்பது என்பது சமற்கிருதம், அல்லது இந்தியை எதிர்ப்பது என்பது கடவுளை, பண்பாட்டை, சடங்குகளை எதிர்ப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது. மொழி பண்பாட்டளவில் ஒரு ஏற்பு போல மாற்றப்பட்டிருக்கிறது. கடவுள் வந்து நேரிடையாக கடவுள் மொழி சமற்கிருதம் என்று கடவுள் சொல்லாத போதும், அது கடவுள் மொழியாக நிறுவப்பட்டிருக்கிறது.
18 நூற்றாண்டு கவிஞர்கள் கடவுளின் மொழி தமிழ் என்கிறார்கள். தமிழில் உருகிப்பாடினார்கள். ஆனால் அவர்கள் காலத்தில்கூட கடவுள் மொழியாக அது இருக்கவில்லை. கடவுள் மொழி என்பதும், அரசியல் அதிகார மொழி என்பதும் வேறு வேறல்ல. கடவுள், சமூக அதிகாரமாகவும், அரசு, அரசியல் அதிகாரமாகவும் இருக்கும் நிலையில் இந்த இரண்டு அதிகார முனையிலும் மொழிக்கான ஏற்பு என்பது இரண்டு நிலையிலும் நிகழ்கிறது. எனவேதான் கடவுள் மொழியாகவும், அரசின் மொழியாகவும் சமற்கிருதம், இந்தி இந்த இரண்டும் இருக்க முடிகிறது. இந்த இரண்டிலும் செல்வாக்கு செலுத்துபவர்களின், அதிகாரம் செலுத்துபவர்களின் மொழியே கடவுள் மொழியாகவும், அரசியல் மொழியாகவும் இருக்க முடியும்.
பெரியாரின் போராட்டம், நீதிகட்சியின் ஆட்சி அதன் பின்னரான திராவிட கட்சிகளின் ஆட்சி என்பவற்றாலேயே தமிழ் மொழி தமிழ்நாட்டின் கல்வி மொழியாக மாற்றப்பட்டது என்பதே வரலாறாகும். அதுவரையில் தமிழகத்தில் கல்வி என்பதே சமஸ்கிருதமாகவும், சமற்கிருத வழியிலேயே கல்வி கற்பதாகவுமிருந்தது. எனவேதான் கல்வியும், சமற்கிருதமும் ஒரு குறிப்பிட்ட மத, சாதியினருக்கு மட்டுமானதாக பார்ப்பன உயர்குடிகளுக்கு மட்டுமானதாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் சமற்கிருதம் கற்றவருக்கே இடம். இவையெல்லாம் ஆதிக்க வெள்ளை இனத்துடன் பார்ப்பனர் இணைந்து சென்று சமசரம் செய்துகொண்ட ஒரு ஏற்பாடாகும். விடுதலைக்கு முந்தய பார்ப்பனத் தேசியத்தின் நகர்வுகளாகும். சொந்த மொழியை பேசவும் எழுதவும், கற்பிக்கவுமானத் தடைகள் உலகில் வேறெங்கும் பார்க்க முடியாத அவலமாகும். அதற்காகப் போராடவும், உயிர்துறக்கவும் நேர்ந்த சமூக அரசியல் அவலம் தமிழகத்துக்கு மட்டுமேயானது.
அதையும் கடந்து மொழிக்காக உயிர் கொடுப்பது குறித்து இங்கு பேசப்படும் விவாதங்களில் வெறும் எள்ளலும், கிண்டலுமே இருக்கின்றன. தன்னுரிமை, தன்மரியாதை என்பதும் தன் மொழி என்பதும் வேறு. என்று பிரித்துப் பேசப்படுவதன் அரசியல் மிகவும் ஆபாசமானதாகும். உள்நோக்கமுடையதாகும். தன்மொழி திணிப்பவர்களின் மமதை அது.
மொழி உரிமை குறித்த அறியாமையிலிருப்பவர்கள் தாம் மொழி திணிப்பு என்பது குறித்தும் அறியாமையிலிருக்கிறார்கள். தன் மரியாதைக் குறித்த அறியாமை யிலிருக்கிறார்கள். தன் மரியாதை குறித்த அறியாமையிலிருத்தல் என்பது அடிமைத்தனத்தின் பிறிதொரு பெயரே.
தன்மரியாதை வேண்டாம் என்பதும், தன்மரியாதை தேவையில்லை என்று சொல்பவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று பொருள். தன்மொழி வேண்டாம் என்று சொல்பவர்களும், தேவையில்லை என்று சொல்பவர்களும், அடிமையிலிருக்கிறார்கள் என்று பொருள். மொழி விடுதலை என்பது தன்விடுதலையின் நீட்சியாக உள்ளது. அதைத்தான் பெரியார் இனம் கண்டவராக இருந்தார். அம்பேத்கர் சதா அதுகுறித்து போராடுபவராக இருந்தார். சி.என். அண்ணாதுரை என்ற அண்ணா சொன்னார் “இது பற்றி பேசிப் பேசி வாய்வலிக்கவே செய்கிறது. புரிந்து கொள்ளும்வரை பேசுவோம். அறிந்து கொள்ளும் வரை பேசுவோம்!” என்று.
எப்படி கடவுளை, பிள்ளையாரை ஒழிப்பதன் வழி அதிகாரத்தை ஒழிக்க முடியும் என்று அதன் வழி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒழிக்க முடியும் என்று பெரியார் கண்டடைந்தாரோ அவ்வாரே அடிமைத்தனத்தை ஒழிக்கவும், மொழியை மீட்கவும் பார்ப்பனியமே தடையாக இருப்பதை கண்டறிபவராக இருந்தார். பார்ப்பனியம், பல கண்ணிகள் கொண்ட சமூக அரசியல் பொருளாதாரம், தனிமனித விடுதலை இவற்றை பிணைத்து வைத்திருக்கும் நீண்ட சங்கிலியாக, கண்ணுக்குத் தெரியாத சங்கிலியாக இருப்பதைக் கண்டார். தனிமனித விடுதலை, சமூக விடுதலை என்பது பார்பனியத்திலிருந்து விடுபடுவதே, விடுதலை பெறுவதே என்பதை சரியாக இனம் கண்டார். அதனால்தான் வெறும் அரசியல் விடுதலை என்பதை, பார்ப்பனிய அதிகார விடுதலையாகக் கண்டார். அதிகாரத்தின் திறப்பு கைமாறுவதாகவே சென்னார். துக்க நாள் என்று சொன்னார்.
கற்றலில் மொழியின் வகிபாகம் என்பது ஊடகமாகவே இருந்தது. குறிப்பாக கற்றல் என்பது மத செயற்பாட்டுக்கான ஒரு ஊடகமாக இருந்தது. மொழி பிரதானமாக இருக்கவில்லை. இது சகல மதத்திற்கும் பொருந்துவனவாகும். அதிகாரம் செலுத்தவும், மத பிரசாரத்திற்காகவுமான மொழியாகவே மொழிகள் இருந்தன. அதிகாரமற்ற இலக்கியத்திற்கான மொழி, மக்கள் புழங்கு மொழி என்பன பெரும்பாலும் அதிகாரத்தைக் களைந்தவையாக இருந்தன. சமற்கிருதம் என்பது செய்விக்கப்பட்ட மொழி என்ற பதத்தில் வருவதாக மொழி அறிஞர்கள் சொல்கிறார்கள். மேலாண்மை செய்வதற்காக மேலாண்மை செய்தவர்களால் செய்யப்பட்ட மொழி. அரசியல், மற்றும் சமூக அதிகாரத்திற்காக செய்யப்பட்ட மொழி. ஒரு தொகுதி மக்களாலோ, நிலத் தொடர்ச்சியாலோ பேசப்பட்ட மொழியல்ல. சிந்தனை ஓர்மையும், அதிகாரமும், அரசுமிருக்கிறது. எனவே அது செத்த மொழியாக இருந்தாலும் அரசு அதிகாரத்தால் தூக்கி நிறுத்தி நடமாடவிடப்படுகிறது.
தமிழ் போன்ற தொல் மொழி தன்னளவில் வலிமையாக இயங்கினாலும், அது அதிகாரமும், அரசும், ஆதிக்கமும் பெறும்போதே அது மேலும் வளர்ச்சியடைகிறது. மக்கள் நாவில் புழங்கும்போது அது பண்பாட்டளவில் நின்றுவிடுகிறது. அரசியல், அதிகார இடத்தைப் பெறும்போதே நிலைபேற்றை அடைகிறது. தமிழையும், சமற்கிருதத்தையும் இப்படி ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.
மொழியின் விடுதலை என்பது மனிதனின், மொழி பேசுவோரின் விடுதலையுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாகும். மனிதன் புழங்கும் வெளி என்பது மொழி புழங்கும் வெளியும் கூட. எனவே சமூக, பொருளாதார, அரசியல், அதிகார புழங்கு வெளியை மறுக்கும்போது மொழியின் புழங்கு வெளி தீர்மானகரமாக தடுக்கப்படுகிறது. தமிழின் புழங்கு வெளியை இத்துடன் சேர்த்து புரிந்து கொள்ளும்போதே மொழி குறித்த விழிப்புணர்வை, போராட்டங்களை, அதற்கான அரசியல், சமூக, பொருளாதார நீதியைப் புரிந்து கொள்ள முடியும்.
பேசும் மொழியின் சமூக , பொருளாதார, அரசியல் உரிமையை கோருவது என்பது அதைப்பேசும் மனிதனின், வாழ்தலின், அவன் வாழும், நிலத்தின் உரிமையையும் சேர்த்துக் கோருவதே ஆகும். கோரும் இடத்தில் இருக்கிறான் என்றால் மறுக்கும் இடம் இருக்கிறது என்றே பொருள். அண்ணா நிலத்தின் வழி மொழியின் உரிமை பேசுகிறார். பெரியார் சுயமரியாதை, தன்மரியாதையின் வழி மொழி உரிமை பேசுகிறார். இவ்விரண்டு பேசுமொழியுமே தன்மரியாதையின் மீதும், மொழி உரிமையின் மீதுமான நிலஉரிமையின் மீதுமான இந்திய பார்ப்பனிய வல்லாதிக்கப்போக்கிற்கு எதிராகவே எழுகின்றன.
மெய்யான கூட்டாட்சி குறித்து அரசியல் நிர்ணயசபை கொள்கை வகுப்பிற்கும் மேலாக இந்தியக் குடியரசு என்பது பார்ப்பனிய குடியரசு என்பதற்கான எல்லா ஒருங்கிணைப்பையும் அது பெற்றுக் கொண்டிருந்தது. இனவழி தேசியம், அதன் நிலம், மொழி, பண்பாடு, கலாசாரம் என யாதொன்றையும் மறுக்கும் பார்ப்பனியத்தின் பிரதியீடாகவே இந்திய குடியரசு அமைந்தது. அதிகாரத்தை பகிர்ந்தளிக்க அது இன்றுவரை மறுத்து வருகிறது. காசுமீருக்கான சிறப்புத் தகுதி என்று சொல்வதே ஆபாசமானதாகும். காசுமீருக்கான சிறப்புத் தகுதியாக கருதப்படும் 370ஆவது சட்டப்பிரிவு என்பது எல்லா மாநிலங்களுக்குமாக இயல்பாக வழங்கப்பட வேண்டிய மாநில அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இயல்பான உரிமையை சலுகை போல அல்லது சிறப்புத் தகுதி போல பேசுவது வல்லாதிக்கமாகும். இன்றைக்கு அந்த சிறப்புப் பிரிவே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.
மொழி சிக்கல் என்பது கல்வியை நடுவணரசு எடுத்துக் கொண்டதிலிருந்தே தொடங்குகிறது என்றாலும் நடுவணரசு அல்லது நடுவணரசில் அதிகாரத்தை நிலையாகக் குவித்து வைத்திருக்கும் பார்ப்பனியம், இரண்டாயிரம் ஆண்டு இன, மொழி மேலாண்மையை, அதிகாரத்தை இழக்க விரும்பாததாலேயே மொழியும், கல்வியும் சிக்கலுக்குரியதாக ஆகிறது. ஆக்கப்படுகிறது. சமூக சமத்துவத்தை விரும்பாத பார்ப்பனிய மேலாதிக்க வர்க்கம் நீட் போன்ற தேர்வுத் தடைகள் வழி கற்றலின் சமத்துவத்தைக் குலைத்து தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதுடன் பிறரையும் அந்த இடத்திற்கு நகர்வதை தடை செய்துவிடுகிறது.
செப்தம்பர் 13 ஆம் திகதி நடந்த நீட் தேர்விற்கு முன்னும் பின்னுமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபோது அவர்களது தன்னம்பிக்கை பற்றி பேசப்பட்ட அளவிற்கு சொந்த மொழியில் எழுதுவதற்கும், கற்றலுக்குமான தடை குறித்தோ, பார்ப்பனியத்தின் சகிக்க முடியாத மேலாண்மைச் சதி என்ற அளவிலோ பேசத்தயாரக இல்லை. சமற்கிருதத்திலேயே மருத்துவக் கல்வி கற்பிக்கப்பட்டதும், சமற்கிருதம் கற்றால்தான் மருத்துவக்கல்லூரிக்குள் நுழைய முடியும் என்பதெல்லாம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சென்னைப்பட்டினத்தில்தான் சட்டமாக இருந்தது. நீட் அதன் பிரதி செயற்பாடுதான். அன்றும் இன்றும் பார்ப்பனியத்துக்கான பட்டயமாகவே மருத்துவம் பார்க்கப்படுகிறது. தாய்மொழியில் உரிமை கோருவோர் சகல துறைகளிலும் மொழி உரிமையைக் கோராமல் விட்டதன் விளைவுகள் இவை.
இந்தி நாளன்று (1409.20) அன்று உள்துறை அமைச்சர் அமித்சா பேசும்போது இந்தி இந்தியாவை ஒருங்கிணைக்கும் வலுவான சக்தியாக இருக்கிறது என்கிறார். இந்தியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். என்று பேசுகிறார். வலிமை படுத்த வேண்டுமென்றால் இந்தி பேசும் இடத்தில் என்று பொருளல்ல. இந்தி பேசாத இடங்களில் என்பதே அதன் பொருளாகும். இந்தியை வலுப்படுத்துவது என்பது சமற்கிருதத்தை வலுப்படுத்துவது. பாசக, ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புக்களை, மதவாதத்தை வலுப்படுத்துவது.
“ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியார் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபார்சு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலைமைப் பற்றி கவலையும் அவர்களுக்கு இல்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும், அதற்குச் சாதகமாயிருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகிறது. காப்பிக் கிளப்புப் பாப்பான், உத்யோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்டமறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக் கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” (சமற்கிருதக் கல்விக்கான உதவித் தொகையை நிறுத்த வேண்டும் என்ற பிரித்தானியரின் நடவடிக்கையை எதிர்க்கும் பார்ப்பனியம், பார்ப்பனர் குறித்துப் பெரியாரின் பேச்சு-சமற்கிருத படையெடுப்பு-திராவிடர் கழக வெளியீடு.)
பெரியார் இன்றைக்கு பேசியதல்லதான் இது. ஆனால் இன்றைக்கும் பேசுவதாகவே இருக்கிறது. இதன் பொருள், பொருத்தப்பாடு எல்லாமும். நான்கு கட்ட இந்தி எதிர்ப்பு போர், உயிர்பலிகள், பின்வந்த மொராஜிதேசாய் தொடங்கி ராஜீவ் முதல், இன்றைக்கு இருக்கக்கூடிய மோடி அரசு வரை சமற்கிருத, இந்தி திணிப்பை ஒரு இலக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அமித்சா சொல்கிறார். இந்தி மொழிக்கு இணையாகவே பிற இந்திய மொழியின் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது என்று. கடந்த 3ஆண்டுகளில் பாசக அரசு 643 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இன்னும் ஒதுக்கக்கூடும். பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு என்று இவர்கள் ஒதுக்கியிருக்கும் மொத்தத் தொகையே 25கோடி என்பதிலிருந்தே இவர்கள் பிற மொழிகள் மீது கொண்டிருக்கும் கரிசனம் விளங்கிப்போகும்.
1937 சமற்கிருத செல்வாக்கு சரிவதைக் கண்டே ராசகோபாலசாரி கட்டாய மொழித் திணிப்பை எடுத்துவந்தார். எனினும் அக்காலத்தில் ஒரு சமற்கிருத பேராசிரியரின் சம்பளத்தில் கால்வாசிக் கூட தமிழ் பேராசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை பெரியாரே சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறார். நீதி கட்சியின் முன்னாள் முதல்வர் பனகல் அரசரே இது பற்றி கொதித்துப் போய் தம்மை குடியரசில் எழுதும்படி கேட்டுக் கொண்டார் என்கிறார் பெரியார். 2000 பேரை சிறைக்கனுப்பி, நானும் 3 ஆண்டுகள் கடும்காவல் பெற்ற பிறகே ஆசாரியாருக்கு ஞானோதயம் வந்தது என்கிறார் அவர். பகுத்தறிவும், சமதர்மத்தையும் அழிப்பதற்கான மொழியாகவே இந்தியையும், அதன் தாய்மொழியான சமற்கிருத்தையும் இனம் கண்டார் பெரியார். இத்தனைக்கும் 1921 இல் இந்தியா முழுவதும் சமற்கிருதம் பேசுவோர் மொத்த எண்ணிக்கை 356. இவற்றில் 315 பேர் தமிழகத்தில்தான் இருந்தனர். இவர்களுக்கான அதிகார குவிப்பும், அரசியலுமே பின்வந்த காலங்களில் தமிழரை வீதிக்கும், சிறைக்கும் அனுப்புவதாக இருந்தன.
ஒரு சமூகத்தின் கலாசாரத்தை, அனுபவங்களை, வாழ்வியலை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் மொழி, அம்மொழி பேசுவோரின் சகல செயற்பாடுகளையும், மொழிபேசுவோரின் உளவியல் உட்பட யாதொன்றையும் விளக்கக்கூடியதாகும் அந்த வகையில் சமற்கிருதம் பற்றியும், அதன் சமூக அரசியல் செயற்பாடு குறித்தும் தெற்றென பேசுகிறார் பெரியார். சமற்கிருதம் நமது சூழலுக்குப் பொருந்தாது. சூழலை எதிர்த்து சமற்கிருதம் பேசினால் வயிற்றுவலிதான் வரும் என்று எச்சரிக்கிறார் பெரியார். ஆனால் பேசாவிட்டால் அவர்களுக்கு வயிற்றுவலி வருகிறது. தீரா நெஞ்சுவலி வருகிறது. அதிகாரவலி வருகிறது. ஆதிக்க வலி வருகிறது. வரும். இன்றும் அப்படித்தான் வலியும், வலிக்கான வலிகளும் தொடர்கின்றன.
மொழிவழி மாநில கோரிக்கையும், அதன் ஏற்பும் மொழியை தனது நிலத்துக்குள் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளவும், சமூக, பொருளாதார அரசியல் நிலையில் அதனை பிரதியீடு செய்யவுமே என்பதை யாதொருவரும் மறுத்துவிட முடியாது. மொழிவழி மாநில ஏற்பு என்பதே மொழிக்கான மாநிலம் என்று சொல்ல முடியும் போது மொழிக்கான பிற மொழி தேவைக் குறித்து மொழிவழி மாநிலம்தாம் முடிவு செய்ய முடியுமே தவிர மொழிவழி மாநிலத்துக்கு வெளியே உள்ளவர்கள் அதை முடிவு செய்ய முடியாது. ஆனால் முடிவு செய்கிறார்கள். கூட்டாட்சியை மறுத்து ஒற்றையாட்சியை வலியுறுத்துபவர்கள் முடிவு செய்கிறார்கள்.
“ நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன் ஆனால் திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றை கூட விட்டுவிடவில்லை. அதைச் சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை. திராவிட நாடு கேட்டதற்கு காரணமே இங்கே தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்குதான். அடுத்து மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிட நாடு கேட்டோம். மொழி பாதுகாப்புக் கொள்கையை விட்டுவிடவில்லை!”. என்றார்.
“பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டு விடவில்லை. ஆகவே திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக் கூட விட்டுவிடவில்லை!”. (சட்டப்பேரவையில் திராவிட நாடு கோரிக்கை குறித்து அண்ணாவின் உரைப் பகுதி-27.06.1967)
மொழியை அதன் எல்லா சாராம்சங்களுடனும் பாதுகாத்துக் கொள்வதற்கு நில எல்லையை வரையறுத்து, அதன் அரசியல் எல்லையை வரையறுத்து, அதன் அதிகார எல்லையை வரையறுத்து கொள்வதன் ஒரு வழியாகவே அண்ணாவின் திராவிட நாடு இருந்தது. இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அண்ணா சொன்னது போல, காரணங்கள் அப்படியே இருக்கிறது என்றால் சிக்கல்கள் அப்படியே இருக்கின்ற என்று பொருள். இருக்கும் என்று பொருள். ஆக சிக்கல்கள் இருக்கும் வரை காரணம் இருக்கவே செய்யும். மொழி, அதன் நிலம் உரிமை என்று அதன் சிக்கல் தொடரவே செய்யும். அண்ணாவும் தொடரவே செய்வார். செய்கிறார். பெரியாரும் முன் நிற்பவராக இருப்பார். இருக்கிறார்.