மேய்ப்பர் வருவாரா?
நல்லாட்சி அரசாங்கம் சாதித்தது என்ன? அந்த அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்ததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? என அப்பாவித் தனமாகவும், விசமத் தனமாகவும் கேள்வி எழுப்பும் பலருக்கும் விடைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது இன்றைய இலங்கைச் சூழல். விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவரும், இலங்கையில் இந்தியப் படைகள் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவருமான திலீபனின் நினைவு தினத்தை அனுட்டிப்பதில் நீதிமன்றத்தின் உதவியுடன் விதிக்கப்பட்ட தடை உத்தரவு, அதனை மீறி தமிழ் மக்கள் கட்சியின் செயலாளரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றால் பிணை வழங்கி விடுவிக்கப்பட்டு இருப்பது என்பவை எதிர்கால தமிழர் அரசியலின் செல்நெறியைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
2009 இல் நிலவிய சூழல்
எதற்கு எடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறை சொல்லுவோர், 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட சூழலில் தமிழ் மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்தது என்பதையும், அன்றைய அச்ச சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்டுவர கூட்டமைப்பு எவ்வாறு போராடியது என்பதையும் மீட்டிப்; பார்ப்பது நல்லது. மே 19 இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடித்து வைக்கப் பட்டதும், தொடர்ந்து நாடளாவிய அடிப்படையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப் பட்டமையும், மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிராகப் படுகொலைகள், தாக்குதல்கள் முன்னெடுக்கப்படக் கூடும் என்னும் அச்சத்தில் தமிழ் மக்கள், குறிப்பாக தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலே வாழ்ந்த தமிழ் மக்கள் இருந்த நிலமையையும் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு சிறு பொறி கூட பெரும் தீயை மூட்டிவிடக் கூடும் என்ற அச்ச நிலையில் இருந்து படிப்படையாக இன்றைய ஜனநாயகச் சூழலுக்கு தமிழ் மக்களை மாத்திரமன்றி, தென்னிலங்கை மக்களையும் மீட்டு வந்ததில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் பங்கு இருக்கின்றது. ஈழம், பிரபாகரன், விடுதலைப் புலிகள், மாவீரர் போன்ற சொற்களைப் பொது வெளியில் உச்சரிக்கப் பயந்த காலம் 2009. இன்று தமிழ்த் தேசியம் பேசியவாறு மார் தட்டிக் கொண்டு உலாவரும் பலரும் அன்று எங்கு, எப்படி இருந்தார்கள் என்பவை ஒன்றும் இரகசியமான சங்கதிகள் அல்ல. பொதுவாகவே, சுய தணிக்கையோடு செய்திகளை வெளியிடும் வழக்கம் கொண்ட தமிழ் ஊடகங்கள் அப்போது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதைப் போல இரண்டு, மூன்று அடுக்கு தணிக்கைகளை தாமாகவே போட்டுக் கொண்டன.
அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதற்கோ, வெகுமக்கள் போராட்டங்களை நடாத்துவதற்கோ அன்றைய சூழல் அனுமதிக்கவில்லை. மிகப் பொறுமையாக, படிப்படியாக அன்றைய சூழல் மாற்றியமைக்கப் பட்டது. தென்னிலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஜனநாயக சக்திகள், பன்னாட்டுச் சமூகம் என்பவற்றின் உதவியோடு இந்த நச்சுச் சூழலில் மாற்றம் நிகழ்ந்தது. ஒரு சிறிய இடைவெளி கிடைத்த போதும் அது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. மக்கள் வழங்கிய ஆதரவு என்பதற்கும் அப்பால் பன்னாட்டுச் சமூகம் தந்த ஆதரவு, போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உலக மன்றங்களில் எழுந்த குரல்கள், ஒரு கட்டத்தில் போரில் மடிந்தவர்களின் நினைவை அனுட்டிக்க மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது வரை உயர்ந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய குரல்கள் எழுந்த போதில், அந்தக் குரல்களின் பலத்தில், அதனை ஒரு தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகச் சூழலை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தத் தலைமை வழங்கியது.
நல்லாட்சி அரசாங்கம்
இந்தச் செயன்முறையின் போது பன்னாட்டுச் சமூகத்துடன் ஏற்பட்ட புரிதலும், பரிச்சயமும் நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்திய போது நிலைமை வேறு ஒரு கட்டத்திற்குச் சென்றது. மேற்குலகின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கடந்த 4 பத்தாண்டுகளில் மிகவும் ஜனநாயகத் தன்மையைக் கொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மக்களின் ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தடை இல்லாத ஒரு சூழல், ஒரு அரசுத் தலைவரே நேரடியாக மக்களின் காலடிக்குச் சென்று கருத்துக் கேட்கும் அளவிலான புதிய போக்கு, எந்தவொரு விடயமானாலும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப் படுவது, வானளாவிய அதிகாரங்களைக் கொண்டிருந்த அரசுத் தலைவரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையிலும், மக்களால் தெரிவு செய்யப்படும் நடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சிந்தனையுடனும் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பிற்கான 19 ஆவது சீர்திருத்தம், எல்லாவற்றிற்கும் அப்பால் இலங்கைத் தீவிற்கான ஒரு அரசியலமைப்பு உருவாக்கத்தில் வரலாற்றில் முதல் தடவையாக சிறுபான்மை மக்களின் வகிபாகம் எனப் பல முற்போக்கு விடயங்களில் கூட்டமைப்பின் பங்கு கணிசமாக இருந்தது.
சிங்களப் பேரினவாதிகளுக்கு மனதுக்கு ஒப்பாத பல அம்சங்கள் இருந்த போதிலும், 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு – இன்றைக்கு அந்தத் திருத்தச் சட்டத்தையே மாற்றியமைக்கத் துடிக்கும் பலர் உட்பட – ஆதரவு வழங்கியிருந்தார்கள். அல்லது ஆதரவு வழங்கியே ஆக வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
தமிழர் தாயகமெங்கும் பல்வேறு வகையான வெகுமக்கள் போராட்டங்கள் இந்தக் காலப் பகுதியிலேயே – அச்சங்கள் எதுவுமின்றி – முன்னெடுக்கப்பட்டன. காணி விடுவிப்பு, இறுதி யுத்தத்தில் காணாமற்போனோரைத் தேடும் போராட்டம், அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றோடு அன்றாட விவகாரங்களுக்கான போராட்டங்களும் இக்காலப் பகுதியிலேயே அதிகளவில் முன்னெடுக்கப்பட்டன. இவை தவிர, மாவீரர் நாள் உட்பட நினைவு தினங்களும் பெருமெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.
தலைகீழாக மாறிய நிலைமை
ஆனால், இன்று நிலமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச பெற்ற வெற்றி, அதனால் ஏற்பட்ட சிங்கள இனவாத எழுச்சி, தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 5 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற மாபெரும் வெற்றி, அதனால் மீண்டும் உருவான ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி என்பவை சிங்களக் கடும்போக்காளர்களை உற்சாகப் படுத்துவதாக அமைந்துள்ளன. இதன் விளைவாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதில் முட்டுக்கட்டை போடப்படும் நிலை உருவாகியுள்ளமை மட்டுமன்றி, 3 பத்தாண்டுகாளாக நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் மிகச் சிறிய அறுவடை எனக் கருதப்படும் மாகாணசபை முறைமையிலேயே கைவைக்கக் கூடிய அபாயமும் எழுந்துள்ளது. இந்திய நடுவண் அரசின் ஒத்துழைப்போடு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது பிரிவை ஒழித்துக் கட்ட வேண்டும் என, அந்தப் பிரிவின் விளைவாக உருவான மாகாணசபை முறைமைக்குப் பொறுப்பான அமைச்சரே உரத்துக் குரல்தரும் நிலை உள்ளது என்றால் வரலாற்றின் முரண்நகையை என்னவென்பது? அமைச்சர் சரத் வீரசேகராவின் தனிப்பட்ட கருத்து என அதைச் சொல்வதற்கு வாய்ப்பு இருப்பினும், ஒரு அமைச்சரை நியமிக்கும் போது அவரின் சொந்தக் கருத்தை மதிப்பீடு செய்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்தின் தலைவருக்கு இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
மறுபுறம், பசுக்களைக் கொல்வதற்கு எதிராகச் சட்டம் ஒன்றை நிறைவேற்றும் எத்தனிப்பில் அரசாங்கம் உள்ளது என வெளிவரும் செய்திகள், மாகாணசபை முறைமையை ஒழித்துக் கட்ட அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் எழுப்பக்கூடிய எதிர்ப்பைச் சமாளிப்பதற்கான உத்தியாக இருக்குமோ எனும் ஐயத்தையும் எழுப்புகின்றது.
ஜனநாயத்திற்கு எதிரான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் அடுத்து என்ன நடைபெறப் போகின்றதோ என்ற அச்சம் உள்ளது. திலீபன் நினைவை அனுட்டிக்க இடம்தராத அரசாங்கம் அடுத்து வரவுள்ள மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளின் போது எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என்ற கேள்வி எழுகிறது. திலீபன் நினைவுநாளுக்கு முன்னதாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடரபிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தமை தெரிந்ததே. சட்டத்தின் துணை கொண்டே இவை நடப்பதாகக் காட்டுவதற்கான முயற்சியே காவல்துறையினர் நீதிமன்றங்களை நாடுவது.
மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல் என வகைப்படுத்தக் கூடிய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரான ஒருமித்த குரல்கள் தமிழர் தரப்பில் இருந்து காத்திரமாக எழாமை எதிர்காலம் தொடர்பில் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்காமல் தத்தம் அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் போக்கு தொடர்ந்து நீடித்த வண்ணமேயே உள்ளது. ஜனநாயகத்திற்கு ஆபத்து வருகின்ற போது மௌனம் காப்பது அத்தகைய ஜனநாயக மீறல்களை வரவேற்பதாக ஆகிவிடும்.
ஜனநாயக உரிமைகளுக்காக அரசியல் கட்சிகள் குரல்தர வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, குடிமக்கள் சமூகமும் தமது உரிமைகளுக்காக குரல்தர வேண்டிய கடப்பாடு உள்ளது. துர்வாய்ப்பாக, வடக்கு கிழக்கில் உள்ள குடிமக்கள் அமைப்புகள் – அரசியல் கட்சிகளுக்கு இணையாக – தம் மத்தியில் இன அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் பிளவுண்டே கிடக்கின்றன. தன்னார்வ நிறுவனங்களுட் பல நுண்கடன் வழங்குவதில் காட்டும் அக்கைறையை விடவும் குறைந்தளவு அக்கறையையே ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் விடயத்தில் காட்டுகின்றன என்பதே யதார்த்தம்.
தவிர, தாம் வாழும் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள ஜனநாயக அமைப்புகளுடனோ அல்லது நாட்டுக்கு வெளியே உள்ள குடிமக்கள் சமூக அமைப்புக்களுடனோ தொடர்புகள் அற்றவர்களாகவும் இத்தகைய பிராந்திய அமைப்புகள் இருந்து வருகின்றன. முறையான வழிகாட்டுதல்கள் மாத்திரமன்றி தூர நோக்குடன் கூடிய தலைமைத்துவமும் கூட இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது.
அதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் என்று பேசப்பட்ட விடயங்களில் தமிழ் மக்களின் குரலோடு சேர்ந்து முன்னைய காலங்களில் ஓங்கி ஒலித்த பன்னாட்டுச் சமூகத்தின் குரல்கள் தற்போது மென்மையான குரலில் ஒலிப்பதையும் காண முடிகின்றது. இதனைத் தமிழ் மக்கள் தமது நண்பர்களை இழந்து இருக்கின்றார்கள் எனப் புரிந்து கொள்வதா அல்லது நடப்புச் சூழலைக் கருத்தில் கொண்ட எதார்த்த நிலைப்பாடு எனப் புரிந்து கொள்வதா எனத் தெரியவில்லை.
இழப்பதற்கு எதுவுமே இல்லாத வெகுமக்களைப் பொறுத்தவரை மக்கள் நலனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் போராட்டங்களானாலும் அரசியல் நடவடிக்கைகளானாலும் பங்கு கொள்வதற்குத் தயராகவே உள்ளனர். அவர்களை மேலும் அரசியல் மயப்படுத்தி, வழிநடத்திச் செல்வதற்கான மக்கள் தலைவர்களையே காண்பது அரிதாக உள்ளது.
இத்தகைய நிலையில் இலங்கைத் தீவில் வெகுமக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சிங்களப் பேரினவாத எழுச்சியின் கீழ் மழுங்கடிக்கப் படக்கூடிய ஏதுநிலையே உள்ளது. தங்களுக்கான மேய்ப்பர் வரும்வரை காத்திருப்பதுதான் மக்களின் ஒரே தேர்வு. ஆனால், அந்த மேய்ப்பர் வரும்வரை மக்கள் மீதமாகி இருப்பார்களா என்பதே பெறுமதியான கேள்வி?
(20.09.2020 தேதியிட்ட வீரகேசரி வார இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுபிரசுரம்)