மூக்குத்தி காசி (முப்பாலி)
நூல் அறிமுகம்: பேரா. சு. இராமசுப்பிரமணியன்
தோழர் புலியூர் முருகேசனின் படைப்புகளான மூக்குத்தி காசி, பாக்களத்தம்மாள், படுகைத் தழல் ஆகிய மூன்று நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது (நன்றி, புலியூர் முருகேசன்). மூன்றுமே காத்திரமான உள்ளடக்கங்களைக் கொண்டவைதான். எனினும், அவற்றில், மூக்குத்தி காசி நாவலை அறிமுகம் செய்வதற்கு முதன்மையான காரணம், நாவலின் நாயகன் ஒரு ‘முப்பாலி’ என்பதுதான். ‘முப்பாலி’ என்பதற்கு, மூன்றாம் பாலினம் (Transgender) என்னும் புரிதலோடு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்தபிறகுதான் தெரிந்தது, படைப்பாளி ‘முப்பாலி’ என்பதற்கு வேறு ஒரு பரிமாணத்தைப் புனைந்திருப்பது.
ஆணாகப்பிறந்து, பின் பெண்ணாகப் பால்திரிந்தவர்களும், பெண்ணாகப்பிறந்து, வளரும்போது ஆணாகப் பால்திரிந்தவர்களும் மூன்றாம்பாலினம் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த நாவலின் நாயகன், மூன்றாம்பாலினத்திலும் தனிப்பாலினமாகப் படைக்கப்பட்டிருக்கிறான். ஒரு மாதத்தின் முதல் பத்துத்தினங்கள் பெண்ணாகவும், அடுத்த பத்துத்தினங்கள் ஆணாகவும், கடைசிப் பத்துத்தினங்கள் திருநங்கையாகவும் மாறும் உடலமைப்புகொண்டவனாக, ‘முப்பாலியாகப்’ புனையப்படுகிறான்.
இப்படி ‘முப்பாலி’யாக மாறுவதால் ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும், ‘பால் திரிதலும், மார் சுரத்தலும், பகை முடித்தலும்’ என்னும் தலைப்பில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் புலியூர் முருகேசன்…
“பாம்பாகி, இசையாகி, மரகத உடலாகிப் போனவர்களைப் பாடாதப் பட்டினத்தார்களே” என்னும் அத்தியாயம் மிகவும் கருத்துச்செறிவுடன் காட்டமாக எழுதப்பட்டுள்ளது. பெண்ணின் வலியை, திருநங்கையின் வலியை உணர்ந்து, உருக்கமாகப்பேசுகிறது. இரக்கமற்ற ஆண்திமிரை சமரசமின்றி சாடுகிறது.
ஆணிடம் பெண்தன்மையும், பெண்ணிடம் ஆண்தன்மையும் இருப்பது இயல்பு என்பதை நாம் அறிவோம். ஆனால், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு உடலுமே ஆண், பெண், திருநங்கை என மூன்று தன்மைகளும், அவற்றின் உணர்வுகளும் ஒரே உடலுக்குள் மிகச்சரியான விகிதத்தில் பொதிந்துகிடப்பதை உற்றுக்கவனித்தால் கண்டடையலாம் என்னும் பார்வை, இதுவரை யாரும் சொல்லாதது…
“ஆண்கள், பெண்களிடம் பேசும்போது, கழுத்துக்குக்கீழ்தான் அவர்களது பார்வை இறங்கும். இதற்கு மாறாக, பெண்கள் ஆண்களிடம் பேசும்போது, அவனது கண்களில் உண்மை வழிகிறதா” என்றுதான் பார்க்கிறார்கள் என்பது பெரும்பாலான ஆண்களின் காமம்சார்ந்த உளவியலையும், அதனை உணரும் பெண்களின் தற்காப்பு மனநிலையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
“ருசித்து வயிறு நிறையச் சாப்பிட்டதைச் சொல்லவும், ரசித்துப் படித்தவைகளை வெளிப்படையாகப் பேசிப் பகிரவும், இன்னொரு பெண்ணொடு வாய்த்த அளவிற்கு, ஆணுடன் வாய்க்காது பெண்ணுக்கு” என்று சொல்வது அப்பட்டமான நடைமுறை உண்மை. அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தங்களது படிநிலை துறந்து, பெண்களாக ஒருங்கிணைவதை நான் பலமுறை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில், அதிகாரப் படிநிலைகடந்து, பெண்கள் இப்படி ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் காட்சியைப் புனைவு என்றோ, மிகப்படுத்தல் என்றோ சொல்லிவிட முடியாது. பெண்ணுக்கு, ஆணுடன் வாய்க்காது என்று நாவல் சொன்னாலும், ஆணுக்கும் மற்றொரு ஆணுடன் வாய்ப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.
ஆண்பற்றிய திருநங்கையின் பார்வை எப்படி இருக்கும் என்பதையும் நாவல் பேசுகிறது. திருநங்கையின் பார்வையில், “ஓர் ஆண் காமஎச்சில் ஒழுகித்திரியும் கழுதைப்புலி. பார்த்த பொழுதிலெல்லாம் அச்சமூட்டும் ஆதியுடலின் பாதிதான் ஆண்” என்று ஆதிக்க உணர்வும், காம உணர்வும்கொண்ட ஆண்களின் முகத்தில் காரி உமிழ்கிறது.
பெண்களின் சுயபால் உறவிற்கு சாரைப்பாம்புகளின் பிணைதலைக் குறியீடாகச்சொல்லி, பிணைதலில் பாம்புகளின் ஏக்கத்தையும், அதையே ஒரு படிமமாகவும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
“பொம்பளையும் பொம்பளையும் ஒண்ணா இருந்தா மத்தவங்கக் கண்ணுக்குத் தப்பாத்தெரியுது. ஆனா நம்ப ஒடம்புக்குத் தப்பாத் தெரியலையே. நான் என்ன பண்ணட்டும்” என்னும் அஞ்சலையம்மாவின் ஆதங்கம், பெண்-ஓரினப்புணர்ச்சியாளர்கள் (lesbians) நம் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்வியும் ஆகும்.
பொதுவாக, ஆண்-பெண் இணைசேர்தலில், ஆண் செயல்படுவதாகவும் (active), பெண் செயலற்றவளாகவும் (passive) சொல்லப்படுவதுண்டு. ஆனால், அந்தப்பொழுதில் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் கவலைப்படுவதில்லை. ஆணுக்கு, அவன் ‘காரியம்’ முடிந்தால் சரி என்னும் மனநிலைதான். அதனடிப்படையில் பார்த்தால், “காமப்பொழுதில் உடல்கள் மீட்டுதலை நிகழ்த்துகையில் அடங்காப் பேரலையாய்ப் பெண்ணின் உடலே ஆர்ப்பரிக்கும். அந்தப் பேரலையை பெரும் கேவலமாகவே சித்தரிக்கின்றன ஆண்மைய எழுத்துகள்” என்கின்ற சாடலும் சரிதான்.
பெண்களை மிக இழிவாகப்பாடும் பட்டினத்தார், தாயைப் புனிதமாக்குகிறார். ஏன் அவரால், மற்ற இளம்பெண்களையும் தாயாகப் பார்க்கமுடியவில்லை என்று எழுப்பப்படும் கேள்வி முற்றிலும் ஞாயம்தாம். பெண் என்று வரும்போது சித்தர்களும் தடுமாறுகிறார்கள், தவறுசெய்கிறார்கள் என்னும் பார்வையும் ஏற்கக்கூடியதுதான்.
இந்த ஒரு அத்தியாயத்தில் காணப்படும் மூன்றாம் பாலினம் பற்றியப் படைப்புத் தீர்க்கம், நாவலின் பிற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம், முகநூலில் பகிரப்படும் பதிவுகள்போல பொதுவான சமகால அரசியலை முன்வைத்து நாவல் நகர்த்தப்படுகிறது. ‘முகநூலில் உடைப்பெடுத்த சாதிச்சாக்கடை’ என்று ஒரு அத்தியாயமும் உள்ளது.
நாம்தமிழர் மீதான சாடல், பாரதப்பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்புப்போன்ற மக்களைப் பாதிக்கும் சட்டங்கள், திட்டங்கள்மீதான விமரசனம் என்று நிகழ்கால அரசியலுடன் நாவல் நகர்கிறது. அப்பாவி வாசகனை ஏமாற்றி வயிறுவளர்க்கும் மோசமான எழுத்தாளர்களும் நாவலாசிரியரிடம் இருந்துத் தப்பவில்லை. ‘நவீன கவிஞர் குறிஞ்சிப்பாணன், தனது ஒரே வாசகனையும் இழந்த காதையில்’ அப்படிப்பட்ட எழுத்தாளர்கள், மிகக்கடுமையாக, அதே நேரத்தில் பகடியுடன் சாடப்படுகிறார்கள். ஒரு கோணத்தில் பார்த்தால், மூன்றாம்பாலான மூக்குத்தி காசியை நாயகனாகக்கொண்டு சமகால அரசியல்பேசும் நாவல் என்றும் சொல்லலாம்.
என்றாலும், சாதி இழிவுகளையும், சாதி ஆணவத்தையும் சாடும் விதத்தில் அமைந்த பதிவுகள் இன்றைய தேவையும்கூட.
சிறந்த படைப்பாளியான புலியூர் முருகேசன், பக்கங்கள் குறைந்திருந்தாலும், முழுவதும் மூன்றாம் பாலினம் பற்றி மட்டுமே எழுதியிருந்தால் இந்நாவல் ஒரு காவியமாகியிருக்கலாம். படைப்பாளி என்பதோடு, காத்திரமான அரசியல் செயற்பாட்டாளர் என்பதால் அரசியல் பேசுவது, தவிர்க்க முடியாததாகியிருக்கிறது. என்றாலும் ஆங்காங்கே போகிறபோக்கில் சொல்லிச்சென்றால் நெருடல் இருக்காது. அப்படி எழுதுவது அவரால் முடியும் என்பதற்கு அவர் எழுதியப் ‘படுகைத் தழல்’ நாவலே சான்று. அப்படி ஓர் அழுத்தமான மொழிநடை, கருத்துச்செறிவு. பொதுவாக வரலாற்று நாவல்கள், நகைச்சுவை, காமச்சுவையைப் பேசுபவையாகவே நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணித்து, வரலாற்று நாவலில் இதற்கு முன்பு யாருமே முயற்சிக்காத எதிர் அரசியலைப் படுகைத் தழல் நாவலில் ஆழமான கருத்தோட்டத்துடன் எழுதியும் காண்பித்திருக்கிறார். படுகைத் தழல், சமூக அக்கறை உள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நாவலும் ஆகும்.
நாவலை எப்படி நகர்த்துவது என்பது படைப்பாளியின் உரிமை. வாசகப்பார்வையைச் சுட்டிக்காட்டுவது நம் கடமை.
மூன்றாம் பாலினம் பற்றி, அவர்களது வலியைக்கடத்தும் முயற்சியாக, அவர்களில் ஒருவரை மையப்படுத்தி, இந்த நாவலைப் படைத்தமைக்கேப் புலியூர் முருகேசனை மனம்திறந்து பாராட்டலாம். காரணம், நமதுத் தமிழ்த் திரைப்படங்களிலும், பொதுச்சமூகத்திலும் மூன்றாம் பாலினத்தவர் அளவிற்குத் தரம்தாழ்ந்து கேலிக்குள்ளாக்கப்பட்டவர்கள் வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம்.