முகமூடி உலகு..!
எல்லோரிடத்திலும்
முககவசம் இருந்தது.
எல்லோர் கண்களிலும்
அச்சமும், அய்யமும்
வெறுப்புமிருந்தது.
எல்லோருக்கும் கொஞ்சம்
சளியும்,
இருமலும்,
தும்மலுமிருந்தன.
எல்லோரிடத்திலும்
இரு கைகளும்
அதில்
விரல்களும் இருந்தன.
முககவசம் அணிந்து கொண்டு
இருமுங்கள்,
தும்முங்கள்
உரையாடுங்கள்,
என்றனர்.
முககவசம் இல்லாமல்
இவற்றை
செய்யமுடியாது
என்பது போல.
முகத்துக்கு ஏற்றார் போல
கவசங்கள் வந்துவிட்டன
இப்போது
கவசத்துக்கு ஏற்றார் போல
முகங்களும் இனி
வரக்கூடும்.
முகங்களுக்கு ஏற்ற
நிறங்களில்
கவசங்களின்
நிறங்களுக்கு ஏற்ப
முகங்களும் அமையக்கூடும்
இனி.
முகங்களின் பாவனைகள்
போல
பிரித்தறிய முடியாமல்
இருக்கிறது
முகமும்,
கவசமும்.
முகத்தைவிட
வசதியாகத்தான்
இருக்கிறது
முககவசம்.
தெரிந்தவர்களை
தெரியாமலே கடந்து
செல்வதும்,
தெரியாதவர்களை
தெரிந்தது போல
தலையாட்டிச்
செல்வதற்கும்
முகத்தைவிட
வசதியாகத்தான்
இருக்கிறது.
கடன் கொடுத்தவர்கள்
வாங்கியவர்கள்
பகைவர்கள்
யாரென்றே
அறியமுடியாமல்
கடந்து போகின்றன
கவசம் அணிந்த
முகங்கள்.
சிறு
புன்னகையும்,
வெறுப்பும்,
பெருஞ்
சீற்றமும்
அடங்கிப் போகின்றன
அதற்குள்.
முககவசம் என்பது
முகத்தைவிட
பாதுகாப்பானதாகவும்,
நம்பிக்கையானதாகவும்
இருக்கிறது.
அடிக்கடி
முககவசத்தை
மாற்றுவது போல
முகத்தை மாற்ற முடியாதவர்கள்
முககவசத்துடன்
வாழப்பழகுவது நன்று.
முககவசம்
அணிந்த அன்று
முகத்தை அணிந்து வர
மறந்துவிட்டேன்.
முககவசத்தைவிட
முகம் அவ்வளவு
அவசியம் இல்லை
என்றுதான்
எதிர்பட்டவர்கள் சொல்கிறார்கள்.
பெருந்தொற்றிலிருந்து
காப்பாற்றுவது
முகமல்ல
முகமூடிதான் என்று
அடித்து சொன்னவர்கள் கூட
முகமற்றவர்களாகதான்
இருந்தனர்.
வலி, துன்பம்,
கவலை,
ஏக்கம்
யாதொன்றையும்
தூக்கிச் சுமக்கும்
முகத்தை விட
புன்னகை வரைந்த
முககவசம்
எளிமையானதாகத்தான்
இருக்கிறது.
துவைத்து பின்
மாற்றி
அதுவும் சரியில்லாதபோது
வேறொன்றை அணிந்து
செல்வது
தலையால் ஆகாது.
தலைஅணிந்த
மனிதர்களைவிட
முககவசம்
அணியாதவர்களைத்தான்
ஆபத்தில்லாதவன்
என்றுசொல்கிறது
பெருந்தொற்று உலகு.
துரியோதனன் துடைகிழித்த
பீமனும்,
பாஞ்சாலி துகிலுரித்த
துச்சாதனனும்
வில்லேந்திய ராமனும்
சீதையை சிறையெடுத்த
ராவணனும்,
மதுரையை எரித்த
கண்ணகியும்,
தூணிலும், துரும்பிலும்
கடவுளைக் கண்ட
பிரகலாதனும்
மேடைவிட்டு இறங்கியதும்
மறக்காமல்
அணிந்து கொண்டனர்
முககவசம்.
நினைவில்லாத ஒரு பொழுதில்
திடீரென்று
தொலைந்துவிட்டது
என் முகம்.
வழக்கமாக அமரும்
நாற்காலியின் மீதும்
எழுது பொருட்கள்
வைத்திருக்கும்
மேசையின் மீது
இழுப்பறைகள் மீது
தேடியும் கிடைக்கவில்லை
அது.
பேனாவின் மூடியை போல
உடலில் செருகி வைத்து
மறந்துவிட்டேனோ
அப்படியும் அது
அங்கில்லை.
மனைவியிடம் கேட்டேன்
எனது எழுது பொருளை
தவறவிட்டுத் தேடும் போது
வரும் அதே
புன்னகையில் உதடு பிதுக்கினாள்.
பிள்ளைகளுக்கு வழக்கமாக
எனது
விளையாட்டில் ஒன்றென
எண்ணிச் சிரித்தன.
புத்தகங்களின் அலமாரியில்
அது எங்கேனும்
தொலைந்திருக்கலாம்
நான் தொலையும்
இடங்களில் அதுவும் ஒன்று.
தலையில்லாதது
பற்றி சிந்திக்க திகைப்பாக
இருந்தது.
தலையில்லாமல் சிந்திக்கிறேனே
என்று
தலையிருந்து சிந்திப்பதைவிட
இது பரவாயில்லை.
முகமில்லாமல்
எப்படி உறங்கப்போகிறேன்.
எப்படி கனவு
காண்பது என்பதே
உறங்கவிடாமல் செய்தது.
காதலியின் பழைய
முத்தங்கள்
மனைவியின்
கரிசனையான செல்லத்தட்டல்,
குழந்தைகளின் பிஞ்சு
உதடுகளின் அன்பு.
தலைபோகும் அவசரத்திலான
காரியங்கள்..
எல்லாம் அவற்றில்தான்
அடைத்து வைத்திருக்கிறேன்.
தலையில்லாவிட்டால்
என்ன,
நன்றாக
நினைவிருக்கிறது
முககவசத்தைத் தேடி
அணிந்து கொண்ட நாளில்தான்
அது
தொலைந்திருக்க வேண்டும்.
எல்லோரும்
வாழப் பழகியிருக்கின்றனர்
முகத்தைப் போல,
முககவசத்துடனும்.
விதவிதமான
வண்ணங்களில்
விதவிதமான மோஸ்தர்களில்
வந்துவிட்டது இப்போது.
விதவிதமான முகங்கள்
தாம் தேவைப்படுகின்றன
அவற்றிற்கேற்ப.
பெண்கள் தம்
ஆடைகளின் நிறங்களுக்கு
ஏற்ப அல்லது
கவசங்களின் நிறங்களுக்கு
ஏற்ப
அணியத் தொடங்கியிருக்கின்றனர்.
கவசமற்ற முகங்களே
இல்லையென்பது போல
இருக்கின்றன
முகங்களும் அவற்றுக்கான
கவசங்களும்.
அய்யம் நிரம்பிய
கண்களுடன் அலையும்
கவசமணிந்த
முகங்களுக்கு
எப்படியிருக்கும் என்பது
மறந்துதான் போய்விட்டது.
நம்பிக்கையின்
இதம் கொண்ட
மெல்லிய
ஒரு புன்னகை.