மனு – மனிதாதீதன் – நீச்சா
அம்பேத்கர்
தமிழில்: எஸ். வி. உதயகுமார்
இக்கட்டுரை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்டது. அன்று எனக்கு வழங்கப்பட்ட கட்டுரை நகலின்படி செய்யப்பட்டதே தவிர, அம்பேத்கரின் மூல நூலை நான் படித்துச் செய்தது அல்ல. இக்கட்டுரையில் அம்பேத்கர் எடுத்தாண்டுள்ள நீச்சாவின் மேற்கோளில் இடை வரிகள் சில விடுபட்டிருக்கலாம். அவை முக்கியத்துவம் அற்றவை என்று அம்பேத்கரோ எனக்குக் கட்டுரை வழங்கியவரோ கருதியிருக்கலாம். கட்டுரையில் உள்முரண்கள் இருக்கலாம். நீச்சாவை அறிந்தவர்கள் அவரிடமும் உள்முரணைக் காணக்கூடும். அம்பேத்கரின் மூலக் கட்டுரையை பின்வரும் முகவரியைப் பார்த்து அறிந்து கொள்க.
நீச்சாவின் குறிப்பிட்ட நூலை நான் ஏற்கெனவே வாசித்திருந்ததால், நீச்சாவை வாசகர்கள் மேலும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமென்ற ஆர்வத்தில், அவருடைய நூலில் இருந்து மேலும் சில வரிகளை நானாகவே மொழிபெயர்த்திருக்கிறேன். கட்டுரை வாசிப்புக்கு இடைஞ்சலற்ற வகையில், கட்டுரையின் இறுதியில் ‘மொழிபெயர்ப்பாளர் குறிப்பு’ என்று அதை இணைத்திருக்கிறேன்.
நீச்சாவுக்கு இன்று இருக்கும் மறுவாசிப்பும் வரவேற்பும் அம்பேத்கர் காலத்தில் இருந்திருக்காது என்பதை மனதில் கொண்டு வாசிக்கலாம்.
மனித சமூகத்துக்கான புனிதக் கட்டளைகள் என்ற அளவில், மதக் கருத்துகள் இரு வகைப்படுகின்றன என்பதை மதப் புரட்சி பற்றிய பகுப்பாய்வு காட்டுகிறது.
சமூகத்தை மையமாகக் கொண்டவை ஒரு வகை.
தனிமனிதனை மையமாகக் கொண்டவை மற்றொரு வகை.
அதே பகுப்பாய்வு மேலும் காட்டுவது என்னவென்றால்,
சமூகமைய மதக் கருத்துகளைப் பொருத்தளவில் எது ‘நல்லது’, ‘சரியானது’ என்பதற்கான சோதனை (அதாவது, அறவியல் அமைப்பின் சோதனை),
அக்கருத்துகள் சமூகப் பயன்பாட்டுத் தன்மை கொண்டவையா என்பதே.
தனிமனிதமைய மதக் கருத்துகளைப் பொருத்தளவில் இச்சோதனை,
அக்கருத்துகள் நடுநிலை தவறா நீதி கொண்டவையா என்பதே.
சமூகப் பயன்பாடு, தனிமனித நீதி என்ற இந்த இரண்டு வகைச் சோதனைகளிலும் இந்து மதத் தத்துவம் தேறுவதில்லை. ஏனென்றால், மனித சமூகத்துக்கான புனிதக் கட்டளைகள் என்ற அளவில், அதன் மதக் குறிக்கோள் தன்னளவிலேயே ஒரு வகையாக, தனியொன்றாக இருக்கிறது. இக்குறிக்கோளில் தனிமனிதனும் மையமல்ல, சமூகமும் மையமல்ல. ஒரு வர்க்கம்தான் இதன் மையம் – ‘பிராமணர்கள்’ எனப்படும் ‘மனிதாதீத’ வர்க்கம். மறுக்கப்படவியலாமல் முன்னுந்தி நிற்கும் இந்த உண்மையைக் கருத்தில் கொண்டால், தனிமனித நீதியையோ சமூகப் பயன்பாட்டையோ அடிப்படை கொள்ளாமல் இந்து மதத் தத்துவம் கட்டமைக்கப்பட்டிருப்பதன் காரணம் விளங்கும்.
முற்றிலும் வேறுபட்டதொரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது இந்து மதத் தத்துவம். எது ‘சரியானது’, ‘நல்லது’ என்ற கேள்விக்கு இந்து மதத் தத்துவம் அளிக்கும் விடை வித்தியாசமானது. ஒரு செயல் சரியானதாகவோ நல்லதாகவோ இருக்க வேண்டுமானால், அது பிராமணர்கள் என்ற மனிதாதீத வர்க்கத்தின் நலன்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்கிறது.
‘ஒரு விஷயம் தெளிவாய் இருக்கிறதா என்பதைத் தேடித்தான் அறிய வேண்டும்’ என்றார் ஆஸ்கர் வைல்ட். மனுவோ தேடியறியும் வேலை எதையும் வைப்பதில்லை. தெளிவுபட ஓங்கிய குரலில் கம்பீரமாய்த் தன் கருத்தை முன்வைக்கிறார் – மனிதாதீதர்கள் யார் என்பதை; அந்த மனிதாதீதர்களின் நலன்களுக்கு உகந்த செயல் எதுவாய் இருந்தாலும் அது மட்டுமே ‘சரியானது’, ‘நல்லது’ என்பதை.
மனுவின் கூற்றையே மேற்கோள் காட்டுகிறேன்:
‘தன் ஒப்புயர்வற்ற தன்மையினாலும், பிறவிமூலத்தின் மேன்மையினாலும், (குறிப்பிட்ட) கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதனாலும், குறிப்பிட்ட தூய்மையினாலும், பிராமணனே அனைத்து வர்ணத்தாருக்கும் அதிபதி ஆகிறான்’ (10:3).
இம்மாதிரியான காரணங்களை மேலும் விரித்துக்கொண்டே போகிறார். அதுவும் இப்படியொரு தன்மையில்:
‘பிராமணன் என்பவன் (பிரஜாபதியின், அதாவது கடவுளின்) வாயிலிருந்து உதித்தவன் ஆதலால், அவன்தான் முதலில் பிறந்தவன் ஆதலால், அவனே வேதத்தைக் கைக்கொண்டவன் ஆதலால், அனைத்துப் படைப்புக்கும் அவனே அதிபதி ஆகிறான்’ (1:93).
‘தெய்வங்களுக்கும் பித்ருக்களுக்கும் இவன் மூலம் படையலிடப்படவென்றும், இப்பிரபஞ்சம் காக்கப்படவென்றும் – விரதங்கள் காத்து, பின் தன் வாயிலிருந்தே பிராமணனைப் படைத்தான் தன்னிருப்பான (சுயம்பு) கடவுள் – ஆதலால்’ (1:94).
‘எவனுடைய வாயின் மூலம் தமக்குரிய அவிர்ப்பாகத்தைத் தெய்வங்களும், தமக்குரிய பிண்டங்களைப் பித்ருக்களும் தொடர்ந்து பெற்று வருகிறார்களோ, அவனைவிட மேம்பட்டதென்று படைக்கப்பட்டவற்றில் எதுதான் இருக்க முடியும்?’ (1:95).
‘படைக்கப்பட்ட அனைத்திலும் மிகச் சிறந்தவை உயிரிகள்; உயிருள்ளவற்றுள் மிகச் சிறந்தவை அறிவைக் கொண்டு உயிர்ப்பன; அறிவுள்ளவற்றுள் மனிதர்கள்; மனிதர்களுள் பிராமணர்கள்’ (1:96).
தெய்வங்களுக்கும் பித்ருக்களுக்கும் படையல்களைப் பெற்றுத் தருவதன் பொருட்டு, கடவுளால் தன் வாயிலிருந்தே படைக்கப்பட்டதைத் தவிர, பிராமணன் உயர்முதல் நிலையில் இருப்பதற்கு வேறொரு காரணத்தையும் தருகிறார் மனு. அவர் சொல்கிறார்:
‘ஒரு பிராமணனுடைய பிறவி என்பதே புனித தர்மத்தின் (வேதத்தின்) நித்ய அவதாரம். ஏனென்றால், புனித தர்மத்தை நிறைவேற்றுவதற்காகவே பிறந்து, பின் பிரம்மத்தோடு (கடவுளோடு) ஐக்கியமாகி விடுகிறான்’ (1:98).
‘தர்மத்தின் செல்வங்களைக் காக்கும் பொருட்டுப் பிறவியெடுக்கும் ஒரு பிராமணன், தன் பிறப்பாலேயே புவியிலுள்ள அனைத்திலும் உயர்ந்தவனாகிறான்; படைக்கப்பட்ட அனைத்துக்கும் அதிபதி ஆகிறான்’ (1:99).
‘பிராமணன் உண்ணும் உணவு அவனுடையதே; அவன் உடுத்தும் உடை அவனுடையதே; அவன் அளிக்கும் கொடையும் அவனுடையதே. பிற மனிதரெல்லாம் அவனுடைய தயவால் வாழ்பவர்’ (1:101).
ஏனென்றால் மனுவைப் பொருத்தளவில்,
‘உலகிலுள்ள அனைத்துமே பிராமணனின் உடைமையாகும். தன் பிறவிமூலத்தின் மேன்மையினால் பிராமணன் உண்மையாகவே அனைத்துக்கும் உரிமை படைத்தவன் ஆகிறான்’ (2:100).
மனு போதிப்பதாவது:
‘அரசன் அதிகாலை எழுந்ததும், மூன்று வேதங்களையும் சாஸ்திரங்களையும் (அரசியல் நீதி) கற்றுத்தேர்ந்த பிராமணர்களை வணங்கி, அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றுவானாக’ (7:36).
‘வேதம் அறிந்த, தூய்மையான, முதிர்ந்த பிராமணர்களை அவன் தினமும் வணங்கி வருவானாக’ (7:38).
‘அரசன் அதிகாலை எழுந்ததும், மூன்று வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்த பிராமணர்களைப் பணிந்து, அவர்களின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவானாக’ (7:37).
‘வயதிலும் இறையொழுக்கத்திலும் முதிர்ந்தவராய், வேதங்களை அறிந்தவராய், உடலிலும் மனதிலும் தூய்மை பெற்றவராய் விளங்கும் பிராமணர்களை அவன் தொடர்ந்து மதித்து வருவானாக. முதியோருக்கு மரியாதை செய்பவன் கொடிய அரக்கர்களிடமிருந்தும் மரியாதை பெறுவான்’ (7:38).
‘மிக இக்கட்டான தேவையில் அரசன் இருந்தாலும், பிராமணர்களின் உடைமையைக் கவர்ந்து அவர்களுக்குச் சினமூட்டாதிருப்பானாக; சினமூட்டப்பட்ட பிராமணர்கள் தங்கள் யாகங்களாலேயே, சாபங்களாலேயே அரசனை அவனது நால்வகைப் படைகளோடும் சேர்த்து அழித்து விடுவர்’ (9:313).
இறுதியாக மனு கூறுவதாவது:
‘(இதன் மூலம்) பிராமணன் (உலகைப்) படைப்பவன், தண்டிப்பவன், குரு, (ஆகவே படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும்) புரவலன் என்று உறுதிப்படுகிறது. எந்த ஒரு மனிதனும் பிராமணனிடம் சினமூட்டும்படி ஏதும் கூறாதிருப்பானாக; கடுமையான சொற்களைப் பயன்படுத்தாதிருப்பானாக’ (11:35).
மனிதாதீதத் தத்துவத்தை, எது நல்லது, சரியானது என்ற தத்துவத்தை முழுமையாய், முடிவாய்ச் சொல்வதற்கு, பின்வரும் மனுவின் இரண்டு உரைகளைத் தருகிறேன்.
‘விண்ணுலகு கருதி, அல்லது இப்பிறப்பின், அடுத்த பிறப்பின் நலம் கருதியாகிலும், சூத்திரன் பிராமணர்களுக்குப் பணிபுரிவானாக; பிராமணனின் பணியாள் எனப்படுபவன், அப்பட்டத்தினாலேயே தன் இறுதிப் பலன்களை அடைந்து விடுகிறான்’ (10:122).
‘பிராமணனுக்குப் பணிவிடை என்பதே ஒரு சூத்திரனுக்கு மிகச் சிறந்த தொழில் ஆகும்; இதுவன்றி வேறெது செய்தாலும் அது பலனைத் தராது’ (10:123).
மேலும் மனு கூறுவதாவது:
‘இயலுமென்றாலுங்கூட, ஒரு சூத்திரன் சொத்துச் சேர்க்கக்கூடாது; சொத்துச் சேர்த்த சூத்திரன் பிராமணனுக்கு வேதனையைத் தருகிறான்’ (10:129).
இந்து மதத் தத்துவத்தின் மையத்தை, அதன் சாரத்தை மேற்கண்ட மனுவின் உரைகள் வெளிப்படுத்துகின்றன. இந்து மதம் என்பது மனிதாதீதனுக்கான வேதவாக்கே. மனிதாதீதனுக்கு எது உகந்ததோ, அதுவே அறநெறிப்படி சரியானது, நல்லது என்று போதிக்கிறது இந்து மதம்.
இந்தத் தத்துவத்திற்கு இணையாக வேறெதுவும் இருக்கிறதா? இருக்கிறது; அதைச் சுட்டிக்காட்ட எனக்கு விருப்பமில்லையானாலும் அது வெளிப்படையாகவே இருக்கிறது. இந்து மதத்தின் இத்தகைய தத்துவத்திற்கு இணையான தத்துவத்தை நீச்சாவிடம் காணப்பெறலாம். இப்படிக் கூறுவதால் இந்துக்கள் கோபப்படுவார்கள். இயல்பானதுதான். நீச்சாவின் தத்துவம் மிகவும் வெறுப்புக்கு ஆளானதல்லவா? அது ஒருபோதும் வேர்கொள்ளவில்லை.
நீச்சாவின் சொற்களிலேயே சொன்னால், அவர் ‘சில நேரங்களில் மேற்குடி ஆட்சிக்கான, கிழார் ஆட்சிக்கான தத்துவஞானி என்று போற்றப்பட்டார்; சில நேரங்களில் தூற்றப்பட்டார்; சில நேரங்களில் அனுதாபத்துக்கு ஆளானார்; சில நேரங்களில் மனிதனே அல்லவென்று ஒதுக்கித் தள்ளப்பட்டார்’.
வல்லமை விருப்பாற்றல், வன்முறை, ஆன்மிக மதிப்பீடுகளை மறுத்தல், மனிதாதீதன், மற்றும் பாமர மனிதனின் தியாகம், அடிமைத்தனம், இழிநிலை ஆகியவற்றோடு அடையாளமிடப்படுவது நீச்சாவின் தத்துவம். இத்தகைய சிறப்படையாளங்களால் அவருடைய தலைமுறையினரின் மனங்களிலேயே அவருடைய தத்துவம் ஒரு வகையான வெறுப்பையும் பீதியையும் உண்டாக்கியிருந்தது. அறவே வெறுத்து ஒதுக்கப்படவில்லையாயினும், முற்றிலும் தவிர்க்கப்பட்டவராகவே அவர் இருந்தார். அவரும் ‘மறைவுக்குப் பின் அறியப்படும் மனிதர்களில்’ ஒருவராகத் தன்னைக் கருதி ஆறுதல் கொண்டார்.
தன்னைப் போற்றக்கூடிய மக்கள் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொலையெதிர்காலத்தில் தனக்கு வாய்ப்பார்கள் என்று அவரே கணித்துக் கொண்டார். இதிலும்கூட நீச்சா ஏமாற்றத்திற்கு ஆளானார். இக்காலத்தாழ்வு அவருடைய தத்துவத்தைப் போற்றுவதற்கு மாறாக, அவருடைய தலைமுறையினர் அவரைப் பற்றிக் கொண்டிருந்ததைக் காட்டிலும், பீதியையும் வெறுப்பையும் அதிகரிக்கவே செய்தது. நீச்சாவின் தத்துவம் நாஸிஸத்தை உருவாக்க வல்லது என்பது வெளிப்பட்டதுதான் முக்கியமான காரணம்.
இப்படிப்பட்ட பொருள்கோளை அவருடைய நண்பர்கள் தீவிரமாக மறுத்திருக்கிறார்கள் (M.P. Nicholas, From Nietzsche Down to Hitler, 1938). ஆனால், மனிதாதீதனை உருவாக்கப் பயன்படுவதைப் போலவே, உயர் அரசை (super state) உருவாக்கவும் அவருடைய தத்துவத்தைப் பயன்படுத்த முடியும் என்றறிவது ஒன்றும் கடினமானதல்ல. இதைத்தான் நாஸிகள் செய்திருக்கிறார்கள்.
எப்படியிருந்த போதிலும், நீச்சாவிடமிருந்தே தங்கள் வழிமூலத்தைக் காண்கிறார்கள் நாஸிகள். அவரையே தங்கள் ஞானப் பிதாவாகக் கருதுகிறார்கள். நீச்சாவின் சிலைக்கு அருகில் நின்று ஹிட்லரே படம் பிடித்துக் கொண்டார். தன் ஆசானின் கையெழுத்துப் பிரதிகளைத் தன்னுடைய சிறப்புப் பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். நீச்சாவின் நூல்களிலிருந்து உரைகள் எடுக்கப்பட்டு, ‘புதிய ஜெர்மானிய நம்பிக்கை’ என்று நாஸிக் கூட்டங்களில் பறைசாற்றப்பட்டன. நீச்சாவைத் தங்கள் ஞான மூதாதை என்று நாஸிகள் சொந்தம் கொண்டாடுவதை அவருடைய நெருங்கிய உறவினர்களும் எதிர்க்கவில்லை.
நீச்சாவின் சிந்தனையே செயலுருவில் ஹிட்லர் என்றும், நாஸிகளின் அதிகார எழுச்சிக்கு அதிமுன்னோடி நீச்சாதான் என்றும் நீச்சாவின் ஒன்றுவிட்ட சகோதரரான ரிச்சர்ட் ஆக்லரே ஒப்புக் கூறுகிறார். தன் சகோதரன் மீது உரிமை கொண்டாடிக் கௌரவித்ததற்காக, அதிபருக்கு (ஹிட்லருக்கு) நன்றி தெரிவிக்கும் வகையில், ஜராதூஷ்டிரனின் தீர்க்கதரிசனமான ‘மனிதாதீதனின்’ அவதாரத்தை அவரில் (ஹிட்லரில்) காண்பதாக நீச்சாவின் உடன்பிறந்த சகோதரியே தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
எவருடைய பெயரும் தத்துவமும் மிகுந்த பீதியை, வெறுப்புணர்வைத் தூண்டுகிறதோ, அந்த நீச்சாவை மனுவுடன் பொருத்திக் கூறுவது இந்துக்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியையும் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தவே செய்யும். ஆனால் உண்மை அப்படித்தான் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மனுவின் திட்டத்தையே தன் தத்துவத்தில் கையாண்டிருப்பதாக நீச்சாவே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்ற நூலில் நீச்சா கூறுவதாவது:
என்ன நோக்கத்திற்காகப் பொய்மைகள் புனையப்படுகின்றன என்பதுதான் இறுதியில் கேள்வியாய் நிற்கிறது. கிறிஸ்துவத்தில் ‘புனித’ நோக்கங்கள் அறவே இல்லை என்ற உண்மைதான் அதன் வழிமுறைகள் பற்றிய எனது ஆட்சேபத்தின் அடிப்படை. அதன் நோக்கங்கள் தீமையானவை – வாழ்வை நஞ்சாக்குவது, தூற்றுவது, மறுப்பது, உடலை இகழ்ந்தொதுக்குவது, ‘பாவம்’ என்ற கற்பிதத்தால் மனிதன் தன்னையே தாழ்த்திக் கொள்வது, தன்னையே மாசுபட்டவனாக்கிக் கொள்வது… வழிமுறைகளும் தீமையான வழிமுறைகள். மனுவின் நீதிநூலைப் படிக்கும்போதோ என் உணர்வுகள் நேர்மாறாய் இருக்கின்றன. இணையற்ற அறிவார்த்தமும் ஒப்புயர்வின்மையும் கொண்ட அந்நூலை பைபிளோடு சேர்த்துக் கூறுவதே அறிவுத்திறத்துக்கு எதிரான பாவமாய் இருக்கும்.
ஏனென்று நீங்கள் உடனே கணித்துவிடலாம். அது (மனுநூல்) ஒன்றும் வெறுமனே யூத மதகுருமார்களின் போதனைகளை, மூடநம்பிக்கைகளைக் கலந்தெடுத்த நாற்றமடிக்கும் யூதக் கலவை அல்ல. அதன் மரபிலும், அதன் உள்ளிலும் ஓர் உண்மையான தத்துவம் இருக்கிறது. மிக மிகக் கறாரான உளவியலறிஞனுக்கும் ஆய்ந்து பார்க்க ஆழமாக ஏதாவது இருக்கிறது.
எல்லாவற்றிலும் மறக்கக்கூடாத மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த வகையான பைபிளில் இருந்தும் அது அடிப்படையிலேயே வேறுபட்டது என்பதுதான். இதன் துணைகொண்டு தத்துவஞானிகளும் வீரர்களுமான உயர்குலத்தோர் பாமர மக்களைப் பாதுகாத்து வழிநடத்துகின்றனர். இது உன்னதமான மதிப்பீடுகள் நிரம்பப் பெற்றது. தன்னிலும் வாழ்விலும் ஆரோக்கியம் கொண்டுவிட்ட வெற்றியுணர்வில், வாழ்வுக்கு இசைவு கூறி, முழுமை பெற்றுவிட்ட உணர்வைக் கொண்டிருப்பது. ஞானசூரியன் ஒளிர்கிறான் அந்நூலெங்கும்!
அளப்பரிய விகாரத்தோடு கிறிஸ்துவம் புகைகப்பி வைத்திருக்கும் ‘குழந்தை பெறுதல், பெண்கள், திருமணம்’ போன்ற விஷயங்கள் இங்கே (மனுவில்) மனமார்ந்து, மரியாதையோடு, அன்போடு, நம்பிக்கையோடு கையாளப்படுகின்றன.
‘கள்ளக் கலவி புரியாதபடிக்கு, ஒவ்வோர் ஆணும் தனக்கென ஒரு மனைவியை, ஒவ்வொரு பெண்ணும் தனக்கென ஒரு கணவனை ஏற்படுத்திக் கொள்ளட்டும்… விரகத்தில் வெந்து கிடப்பதைக் காட்டிலும் விவாகம் புரிந்து கொள்வது நல்லது’ (மொ.பெ.: புதிய ஏற்பாடு: 1 கொரிந்தியர்: அதிகாரம் 7:2,9 ).
இப்படிப்பட்ட அருவருப்பான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை எப்படித்தான் ஒருவன் தன் பெண்டு பிள்ளைகளுக்குத் தர முடிகிறதோ! மேரியின் களங்கமற்ற கர்ப்பம் என்ற கருத்தால் மனிதகுலத்தின் தோற்றமே – மனிதனின் தோற்றம் கிறிஸ்துவத்தில் கூறப்பட்டுள்ளபடிதான் என்றளவில் – களங்கப்பட்டுவிடும்போது, ஒருவன் கிறிஸ்துவனாய் இருப்பது கௌரவத்துக்கு உகந்ததா?
பெண்களைப் பற்றி இதமான, அன்பான வாசகங்கள் மனுவின் நீதிநூலில் உள்ளளவு வேறொரு நூலில் நான் கண்டதில்லை.
‘பெண்ணின் வாய், கன்னியின் மார்பு, குழந்தையின் பிரார்த்தனை, வேள்விப் புகை – இவை எப்போதுமே தூய்மையானவை’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் மனு.
இறுதியாக இன்னுமோர் இடத்தில் குறிப்பிடுகிறார் (இதுவும்கூட ஒரு புனிதப் பொய்யாகவே இருக்கக்கூடும்) * :
‘நாபிக்கு மேல் உள்ள துவாரங்கள் அனைத்தும் தூய்மையானவை; கீழுள்ள அனைத்தும் தீட்டானவை. ஒரு கன்னிப் பெண்ணிடம் மட்டுமே, உடலின் அனைத்துப் பகுதிகளும் தூய்மையானவை’.
(மொ.பெ.: கிறிஸ்துவுக்கு எதிரானவன், மொழி: 56 )
‘ஜராதூஷ்டிரன்’ என்பது மனுவின் புதிய பெயரே, இவ்வாறு சொன்னான் ஜராதூஷ்டிரன் என்பது மனு ஸ்மிருதியின் புதிய பதிப்பே என்பதை மேலுள்ளவை சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டுகின்றன. மனுவுக்கும் நீச்சாவுக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருக்குமானால், அது இதுதான்:
இப்போது உள்ள மனித இனத்தோடு ஒப்பிட, அதியாற்றல் வாய்ந்த மனிதாதீத இனம் என்ற புதியதொரு மனித இனத்தைப் படைக்க உண்மையான ஆர்வம் கொண்டிருந்தார் நீச்சா. மனுவோ, மனிதாதீதர்கள் என்று தங்களைக் கற்பித்துக் கொண்ட ஒரு சமூக வர்க்கத்தினரின் தனியுரிமைகளை நிலைநாட்டுவதற்கான ஆர்வம் கொண்டிருந்தார்.
நீச்சாவின் மனிதாதீதர்கள் தங்கள் தகுதியால் மனிதாதீதர்கள் எனப்படுபவர்கள். மனுவின் மனிதாதீதர்களோ, தங்கள் பிறப்பால் மனிதாதீதர்கள் எனப்படுபவர்கள். நீச்சா பாரபட்சமற்ற ஓர் உண்மையான தத்துவஞானி. மனுவோ, ஒரு சமூகக் குழுவில் பிறந்தவர்கள் மனிதாதீதர்கள் என்பதற்கான தகுதிகளை இழந்திருந்த போதிலும், அப்பட்டத்துக்கான தனியுரிமைகளை இழக்காதபடி, அவ்வர்க்கத்தினரின் நலன்களை முன்னிறுத்துவதற்காக அமர்த்தப்பட்ட கையாள். மனுவின் இந்த உரைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்:
‘மேற்குறிப்பிட்டபடி தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளைப் புரிந்து ஒரு பிராமணன் பிழைக்க முடியவில்லையானால், ஒரு சத்ரியனுக்கான கடமைகளைப் புரிந்து அவன் பிழைப்பானாக. அதுதான் அவனது அடுத்த சமூகத் தரநிலை’ (10:81).
‘இவ்விரு வகையான தொழில்களிலும் அவனால் பிழைக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்று கேட்கப்படுமேயானால், அவன் ஒரு வைசியனாக வாணிபத்திலும் உழவிலும் கால்நடை பேணுவதிலும் ஈடுபட்டுப் பிழைப்பானாக’ (10:82).
‘கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும் அர்ப்பணிக்கப்படாவிட்டாலும், அக்னி மிகப் புனிதமானது. அதைப் போலவே, அறிஞனாயினும் அறிவீனனாயினும் பிராமணன் மிகப் புனிதமானவன்’ (9:317).
‘எனவே, பிராமணர்கள் எவ்வகை இழிதொழிலில் ஈடுபட்டிருந்தாலும், எல்லா வகைகளிலும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் (ஒவ்வொருவரும்) தெய்வத்தன்மை பொருந்தியவர்கள்’ (9:323).
இப்படி, நீச்சாவின் தத்துவத்தைப் பார்க்கிலும், மனுவின் தத்துவம் தரந்தாழ்ந்த சீர்கேடான தத்துவமாகும். எனவே இது நீச்சாவின் தத்துவத்தைவிட மிக மிக அருவருப்பான, வெறுக்கத்தக்க தத்துவமாகும். சமூகப் பயன்பாட்டுக்கான சோதனையிலும் சரி, தனிமனித நீதிக்கான சோதனையிலும் சரி, இந்து மதம் ஏன் தேறுவதில்லை என்பதை இது விளக்குகிறது.
பாமர மனிதனில் அக்கறை கொண்டதல்ல இந்து மதம். சமூகம் முழுமைக்குமான அக்கறை கொண்டதல்ல இந்து மதம். அதன் அக்கறை மையம் கொண்டிருப்பது ஒரு சமூக வர்க்கத்தில். அவ்வர்க்கத்தினரின் உரிமைகளை ஆதரிப்பதிலும் நிலைநிறுத்துவதிலுமே அக்கறை கொண்டது அதன் தத்துவம். அதனால்தான், இந்து மதத் தத்துவத்தில் ‘மனிதாதீத’ வர்க்கத்தின் நலன்களுக்காக, பாமர மனிதனுடைய, ஒட்டுமொத்தச் சமூகத்தினுடைய நலன்கள் மறுக்கப்படுகின்றன; ஒடுக்கப்படுகின்றன; கைவிடப்படுகின்றன.
எனவே, இந்து அறநூல்களையும் மீறி, உபநிஷத்துக்களின் தத்துவத்தையும் மீறி – மனு முன்னிறுத்தும் இந்து மதத் தத்துவம் ஒரு சிறு அளவுகூட, இம்மியளவுகூட குன்றிப் போய்விடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. மதம் என்ற பெயரில் மனுவால் போதிக்கப்பட்ட இழிவைப் போக்க அந்நூல்கள் திறனற்று, வலுவற்றுப் போய்விட்டன. அவையெல்லாம் இருந்தபோதிலும்கூட, ஒருவர் கூற முடியும்:
‘இந்து மதமே, உன் பெயரே ஏற்றத்தாழ்வு!’.
—————————————————————————–
* மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
அம்பேத்கர் வழங்கியுள்ள நீச்சாவின் மேற்கோளில், ‘என்ன நோக்கத்திற்காகப் பொய்மைகள் புனையப்படுகின்றன என்பதுதான் இறுதியில் கேள்வியாய் நிற்கிறது’ என்று தொடங்கும் அந்த மேற்கோள், ‘இதுவும்கூட ஒரு புனிதப் பொய்யாகவே இருக்கக்கூடும்’ என்று முடிவதால், ‘புனிதப் பொய்’ பற்றிய நீச்சாவின் மேல்விளக்கத்தை இங்கு தரலாம் என்று கருதுகிறேன்:
“எந்த ஒரு சிறந்த நீதிநூலும் கொண்டிருக்கும் அதே மூலத்தைத்தான் மனுநீதியும் கொண்டிருக்கிறது. பன்னூறாண்டு அனுபவத்தின், அறிவுநுட்பத்தின், அறச்சோதனையின் சாரமாய் விளங்குகிறது. விஷயங்களை எல்லாம் ஒரு முடிபுக்குக் கொண்டு வருகிறது. இனியும் எதையும் உருவாக்கிக் கொண்டிருப்பதில்லை.
இப்படிப்பட்டதொரு சட்டத் தொகுப்புக்கு ஒரு முன்நிபந்தனை இருக்கிறது. படிப்படியாய் வருந்திப் பெறப்பட்ட உண்மையினுடைய அதிகாரத்தை நிறுவும் வழிமுறைகள், அதனை மெய்ப்பிக்க ஒருவன் மேற்கொள்ளும் வழிமுறைகளிலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டவை என்ற அறிதல்தான் அந்த முன்நிபந்தனை. பயனுடைமையை ஒருபோதும் ஓதிக் கொண்டிருப்பதில்லை ஒரு நீதிநூல். தன் அடிப்படைகளையோ, அடித்துக்கூறும் முற்சான்றுகளையோ எடுத்தோதிக் கொண்டிருப்பதில்லை. அப்படிச் செய்து கொண்டிருந்தால், ‘இவ்வாறு நடந்து கொள்வாய்’ என்ற கட்டளைக் குரலை, பணிவைக் கோரும் அடிப்படையை அது இழந்து விடுகிறது.
விஷயம் இதுதான்: ஒரு சமூகத்தின் படிவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அச்சமூகத்தின் அங்கமான ஒரு வர்க்கம் – மிக ஆழமான நுண்ணோக்குக் கொண்ட, அதாவது மிகத் தொலைவான பின்னோக்கும் முன்னோக்கும் கொண்ட வர்க்கமானது – சமூகத்திலுள்ள அனைவரும் எவ்வாறு வாழலாம், எவ்வாறு வாழ முடியும் என்பதைத் தீர்மானிக்கும் அனுபவத் தேவைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்று அறிவிக்கிறது. சோதனைகள் நிறைந்த காலத்திலிருந்து, கடினமான அனுபவங்களின் காலத்திலிருந்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு வளப்பமான, நிறைவான விளைச்சலை அறுவடை செய்வதே இப்போதைய நோக்கமாகிறது. விளைவாக, வேறெதைவிடவும் இனித் தவிர்க்க வேண்டிய விஷயம் எதுவென்றால், மேற்கொண்டும் சோதனை செய்து கொண்டிருப்பதுதான் –
வரையறையற்றிருப்பது, பரிசோதிக்கப்படுவது, தேர்ந்தெடுக்கப்படுவது, விமர்சனத்துக்குட்படுவது என்ற நிலையிலேயே முடிவே இல்லாதபடி மதிப்பீடுகள் தொடர்ந்து கொண்டிருப்பது.
இந்நிலைக்கு எதிராக, ஓரு இரட்டை மதிற்சுவர் எழுப்பப்படுகிறது:
ஒருபுறம், வெளிப்பாடு என்பது –
சட்டங்களின் பின்னணிக் காரணங்கள் மனிதனில் உருவானவை அல்ல; படிப்படியானதொரு நீண்டகால நிகழ்வில், ஏராளமான பிழைபாடுகளுக்குப் பிறகு தேடிக் கண்டடையப்பட்டவை அல்ல.
மாறாக, சட்டங்கள் புனித மரபார்ந்தவை; அவை வரலாற்றில் உருப்பெற்றவை அல்ல; வரும்போதே முழுமை பெற்றனவாய், குறைவற்றனவாய், ஒரு கேளாக் கொடையாய், தெய்வாதீனமாய்த் தோன்றியவை
– என்ற கற்பிதம்.
மறுபுறம், மரபு என்பது –
இந்தச் சட்டம் நினைவெட்டாக் காலந்தொட்டே மாறுபாடே இல்லாமல் காலாகாலத்துக்கும் நின்று நிலவி வந்திருக்கிறது; அதைக் கேள்விக்குட்படுத்துவது தெய்வத் துரோகம், முன்னோர்களுக்கு எதிரான குற்றம்
– என்ற கற்பிதம்.
இவ்வாறு, சட்டத்தின் அதிகாரம் நிலையூன்றியிருப்பது இந்த வழிகோளில்தான்: ‘கடவுள் அளித்தது; முன்னோர் பின்பற்றியது’.
வாழ்க்கைக் கலையின் எல்லாவிதமான ஆளுமைக்கும், எல்லாவிதமான முழுமைக்கும் அடிப்படைக் கட்டாயமாய் இருக்கும் தன்னியல்பை, தன்னியக்கத்தை உள்ளுணர்வு அடையும் பொருட்டு,
‘சரியாக வாழ்தல்’ என்பது பற்றிய கருத்துக்களில் (அதாவது, பரந்துபட்ட, கவனமாய்ப் பரிசீலிக்கப்பட்ட அனுபவத்தின் மூலம் சரியானது என்று மெய்ப்பிக்கப்பட்டதான கருத்துக்களில்) விழிப்புணர்வானது அக்கறை கொள்வதிலிருந்து சிறுகச் சிறுக கவனந்திருப்புவதே இப்படிப்பட்ட நடைமுறையின் உள்நோக்கம்.
மனுவினதைப் போன்றதொரு நீதிநூலை வகுப்பதானது, எதிர்கால ஆளுமையின் சாத்தியத்தை, அடையக்கூடிய முழுமையின் சாத்தியத்தை ஒரு சமூகத்தின் முன் வைப்பதாகும். இது வாழ்க்கைக் கலையின் அதியுன்னதங்களை ஆர்வங்கொள்ள அம்மக்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
அந்தளவில், சொல்லப்படுவது நினைவிலியாக்கப்பட வேண்டும் – எந்தவொரு புனிதப் பொய்யின் நோக்கமும் அதுதான்.”
-கிறிஸ்துவுக்கு எதிரானவன் நூலிலிருந்து (மொழி: 57 )
ஆங்கிலக் கட்டுரை மூலம்:
Manu’s Brahminism, to Nietzsche, to Hitler: Dr. BR Ambedkar
https://sabrangindia.in/article/manu%E2%80%99s-brahminism-nietzsche-hitler-dr-br-ambedkar
Published on: July 2, 2016