மனுஷி: துயரங்களின் படுகளம்…! – இரா.மோகன்ராஜன்
தமிழீழத்துச் சிறுகதைகளை, நாவல்களை வாசிப்பது என்பது ஒரு புதுவகை அனுபவத்துக்குள் இழுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவை. காரணம் அவை நமக்குச் சற்றும் நிகழ்ந்திராதப் போர்க்களத்தின் பாடுகளைப் பற்றி பேசுபவையாகும். புதுவகையான அனுபவம் எனும்போது வாசிப்பில் ஆர்வம் கூடலாம் எனினும் போர்க்கள அனுபவம் என்பதுக் கனநேர அதிர்ச்சிகளும், திகைப்புகளும், பாடுகளும் கொண்டவையாக இருப்பதால் நிலத்தின், அல்லது நிலத்தில் படிந்துப் பரவும் அத்தனை நேர்வுகளும் எழுத்தின் வழி கசியக்கூடியவையாகும்.
துயரங்களின் பாடல்களால் நிரம்பியத் தமிழர் நிலம் கடந்த அரை நூற்றாண்டுகளாகப் போரில் கொட்டிய அத்துனை மனிதர்களின் குருதிகளால் சிவந்தபடியே இருக்கிறது. தமிழர் நிலத்துக் கதைகள் கண்ணீரால் நிரம்பியவை. அவர்களது பாடல்கள் குருதியின் கவிச்சியைக் காற்றில் கரைத்தபடியே இருக்கின்றன. தமிழராகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படவும், தண்டிக்கப்படவும், துயரப்படவுமான நிலத்தில் அவர்களுக்கென இழப்பதற்கு எதுவுமில்லை.
அரசியல்வழி மென்முறைப் போராட்டங்கள் எல்லாம் பவுத்தப் பேரினவாதத்தின் முன் மண்டியிட எழுபதுகளில் தொடங்கிய ஈழத்து இளைஞர்களின் புதியப் புரட்சிகர ஆயுதப்போராட்டம் தமிழர் உயிருக்கு ஒரு தற்காலிக ஆசுவாசமாக இருந்தது. போரில் தற்காப்புக்காரனின் நிலை அது. பேரினவாத அடக்குமுறைக்கு முகங்கொடுக்கக்கூடிய இறுதி வாய்ப்பாக ஆயுதம் தாங்கிய அரசியல் வடிவம் தமிழர் நிலத்தில் இயல்பாகவே முளைத்தெழுந்தது.
1983-ஆம் ஆண்டின் சூலைக் கலவரங்களை அடுத்து இளைஞர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று அரச படைகளிடம் சரணடைந்துக் கைதுக்குள்ளாகி அவர்களதுத் துவக்குச்சூட்டுக்குப் பலியாவது. இரண்டாவது வளர்ந்துவரும் விடுதலைக் கோரும் அல்லது தனித்தாயகம் கோரும் இயக்கங்களுள் இணைந்துக் கொள்வது. இரண்டிலும் சாவு உறுதி என்றாலும் பெருமதி மிக்க மரணமாவது எஞ்சட்டும் என்ற வகையில் தமிழ் நிலத்தின் இளைஞர்கள் விடுதலை இயக்கங்களைத் தெரிவு செய்துக் கொண்டனர். சாவின் வெகுமதியை இப்படியாக நேர்ந்துக் கொண்டத் தமிழீழ நிலத்தின் கதைகள் அவற்றைப் பாடாமல் வேறொன்றை பாட என்ன இருக்க முடியும்?. அந்த வகையில் போர்நிலத்தின் கதைகளை சண்தவராஜாவும் தன்பங்கிற்குப் பதிவு செய்துக் கொண்டுள்ளார்.
குருதிபடிந்த நிலத்தில் அள்ள அள்ளத் துயரங்களின் கண்ணீரும், படுகளத்தின் பாடல்களும், போரின் கவிச்சி நிறைந்தச் சதைத்துணுக்குகளுமே எஞ்சக்கூடியவை. அவற்றை சண்தவராஜாவும் தமக்கானக் காட்சிகளை நமக்கான அனுபவங்களாக மாற்றித் தருகிறார். காத்திரமான சமூக, அரசியல், போரியல் கட்டுரைகளுக்கு அறிமுகமான சண்தவராஜா, சிறுகதைச் சொல்லவருவதுப் புதிதென்றாலும், மனுஷி, அவரது காத்திரமானச் சொற்களைக் கதைகளாக மாற்றுவதில் சற்றும் குறைத்திருக்கவில்லை.
போர் என்று வந்துவிட்டால் முதலில் பலியாவது ‘மெய்’ என்பார்கள். மெய்யைவிட முதலில் பலியாவது ‘மனிதம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
போர்க் காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம்முடன் மொழியைப், பண்பாட்டை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ, சாதியையும் அதற்கேயுரியச் சந்தேகத்தையும் தவறாது காவிக் கொண்டு திரிகிறார்கள் என்பதை முகப்புச் சிறுகதை மனுஷி பேசுகிறது. பெண், பெண்கள் குறித்தத் தமிழ்க் கலாசாரக் கோணல்கள், சொல்லாடல்கள் புலம்பெயர்ந்தும் துரத்துவதையும், அது போரின் வலியைவிடக் கொடியதாக இருப்பதையும் மனுஷி பேசுகிறது.
பெண்கள் வெளியில் போவதோ, பிற ஆண்களுடன், சனங்களுடன் பழகுவதோ தமிழ்க் கலாசாரத்தில் சோரம்போவதற்கு நிகரானது என்ற மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. குழந்தை வெள்ளையாகப் பிறந்துவிட்டதனால் ஏற்படும் கணவனின் சந்தேகம், டி.என்.ஏ என்ற மரபு ஆய்வு செய்வதுவரைச் செல்வதும் கொதித்தெழும் பெண், அவனைவிட்டுப் பிரிவதும் ஒரு தமிழ் மனுஷியின் புலம்பெயர் வாழ்வு அதற்கேயான அவலம் நிறைந்தப் பக்கத்தைச் சொல்லிச் செல்கிறது. ‘என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டு நான் இருக்க வேணுமாம். ஏனென்டா, அது தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணாம். எது தமிழ்ப் பண்பாடு? பொம்பிளையக் காலில போட்டு மிதிக்கிறதோ?”(பக்-14)
தமிழர்ப் போர் நிலத்தில் கடும் போருக்கிடையே இவ்வுளவுகாலமும் தாக்குப்பிடித்து வாழும், உயிரோடிருக்கும் ஒன்று என்று சொன்னால் அது சாதி மட்டுமே. தமிழன் நிழல் போலத் தொடரும் சாதி, குருதிப் பெருகும் நிலத்தில் என்ன செய்கிறது என்பதை ‘வண்டியும் ஒரு நாள்’ சிறுகதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. தமிழனிடம் எத்தனைச் சாதிகள் உண்டோ அவ்வளவுக்கு அவனுக்கு விடுதலை வாங்கித் தருவதாகச் சொல்லும் ஆயுதம்தரித்த இயக்கங்களும் ஒருகாலத்தில் இருந்தன. இயங்கின. கைதுகளும், உட்கொலைகளும், யார் பெரியவன் என்ற இயக்க மோதல்களும் நிறைந்த காலத்தில், சாதியும் ஒளிந்துத் திரிந்து கொண்டுதானிருந்தது.
இந்திய அமைதிப்படைப் போர்ப்படையாக மாறி தமிழ்நிலத்தில் ஆக்கிரமிப்புப் படையாக நின்ற காலத்தில், அமைதித் தொலைந்த காலத்தில், இளைஞர்கள் தொலைந்த காலத்தில் தமிழ் இயக்கங்கள் சொந்தச் சகோதரர்களையேக் காட்டிக் கொடுக்கும் ‘காட்டிக் கொடுப்பு’ இயக்கங்களாக மாறிப்போயின. அப்படியானப் பொழுதில் தன்னோடு படித்த மாணவன், தன்னினும் கீழ் சாதியான அவன் தன்னுடன் தனது வீட்டு முற்றத்தில் சமமாகக் கதிரையில் உட்கார்ந்துப் பேசுவதைப் பொறுக்காத தந்தை அவனைத் தரையில் வீழ்த்தி, அடித்து வசவு சொற்களைப் பேசி விரட்டித்ததும். பின்னர் அந்த மாணவன் விடுதலை இயக்கமொன்றில் இணைந்து பின்னர் இந்தியப் படைகளின் காட்டிக் கொடுப்பு முகாமில் பொறுப்பில் இருப்பதும், தனதுச் சகோதரன் அங்குக் கைதியாக இருப்பதை அறிந்து, தனது தந்தையுடன் சென்று இந்தியப் படை முகாமிலிருந்து அவனை விடுதலைச் செய்வதுக் குறித்து அந்த மாணவனிடம் பேசுவதும், அவனோ பழையக் கசப்புக்களையெல்லாம் மறந்துக் கைதுச் செய்யப்பட்டவனின் உயிருக்கு உறுதியளிப்பதும் மனிதத்தின் உச்சம் என்றாலும் சாதி, அதனினும் உச்சம் என்பதைப் பிறிதொரு நிகழ்வுப் புலப்படுத்துகிறது.
விடுதலைச் செய்தவன் இழி சாதிக்காராகவும், மாற்று இயக்கத்தை, இந்திய அமைதிப்படையின் கைக்கூலி என்ற நீதியோடும் விடுதலையானவன் மேல்சாதிக்காரனானத் தனது சகோதரனே ஒரு குழுவோடு சென்று அவனைச் சுட்டுக் கொல்வதாகத் தன்னிலையில் சொல்லப்படும் கதை முடிகிறது. மனிதத்தைச் சாதி வென்றுவிடும் இடத்தை துலக்கமாகப் பதிவுச் செய்கிறது இந்தச் சிறுகதை.
சிங்களப் பேரினவாதப் போர் முகாமுக்குள் கைதுக்குள்ளாகியிருக்கும் போராளியை மீட்கத் தன்னுடலைத் தந்து மீட்க முயற்சிக்கும் நவீனச் சாவித்திரிப் பற்றி பேசும் ‘இரை’ முக்கியமானச் சிறுகதையே. ‘புதுமைப்பித்தனின் பொன்னகரம் எமது இன்றைய ஈழத்துச் சூழல் மண்நகரம் என்னும் படியாகப் பரிமாணம் பெற்றுள்ளது. மனுஷி மற்றும் மலர்விழி ரீச்சர்ரின் இன்றைய நிலைக்கு விடையளிக்க வேண்டியது ஆண்களே’ என்று தமது முன்னுரையில் செ.யோகராசா குறிப்பிடுவதைத் தமிழ் நிலத்தின் கலாசாரக் காவலர்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும், போர் நிலத்தின் மனவுனமானச் சாட்சியாக இருக்கின்றன. மனுசி மானுடத்தைக் கோரும் போருக்கிடையான உரத்தக் குரல்.
மனுஷி- சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: சண்தவராஜா
முதற்பதிப்பு-ஜுலை,2020
விலை:100
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்.
எண்:17, பாய்க்காரத் தெரு, உறையூர்,
திருச்சி-620003
பேச:94432 84823