மகராசன் வேதமாணிக்கம் – குமரிமண்ணில் சீர்திருத்த கிருத்துவத்தை நிறுவிய தலித் முன்னோடி
இந்தியத்துணைக்கண்டத்தில் வாழ்ந்த அன்றைய ஆரிய பார்ப்பனர்கள் தெய்வங்களையும், வேதங்களையும், மறுபிறவியையும் நம்பினர். அதே காலகட்டத்தில் வாழ்ந்த சாக்கியர்கள் இதற்கு நேர்எதிராக இந்தப்பூமியை மட்டுமே நம்பினர்.. பூமிக்கு வெளியிலிருந்து ஒரு சக்தி, மனிதர்களையும் மற்றவைகளையும் ஆட்டிப்படைக்கின்றது என்னும் கருத்தியலை சாக்கியர்கள் மறுத்தார்கள்.
சாக்கியர்கள் பொருளீட்டுதலை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைத்தார்கள். குடும்ப ஆளுமை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.. மேல், கீழ் இல்லை. காதல் மணத்தை அமைத்துக்கொண்டார்கள். பெண்கல்வி கட்டாயமானது. பிள்ளைகளுக்குப் பெண்வழி உறவுப்பெயர்களையே இட்டார்கள். சாக்கியர்கள் இயக்கவியலை, ‘தம்மம்’ என்று அழைத்தார்கள்.. சாக்கியமே, சாங்கியம் என மறுவியது.
சாக்கிய குடிகள், காலம், சூழல் காரணமாகப் பலவாகப் பிரிந்தனர். சாக்கியர், நாகர்கள், சாம்பவர்கள், மள்ளர்கள், சாம்பவ பறையர்கள், சாம்பவ மள்ளர்கள், சாம்பவ சுரபார்கள், சாம்பவ சமணர்கள், சாம்பவ சிசர்கள், சாம்பவ குணர்கள் போன்ற அடர்த்தியான இனக்குழுக்களும், அடர்த்திகுறைந்த மேலும் பல இனக்குழுக்களும் உருவாயின.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆரிய பார்ப்பனருக்கு எதிராக சாக்கியர்கள் கருத்தியல் போரிட்டனர். இன்றும் அந்தக் கருத்தியல் போர் ஆரிய பார்ப்பனர்களின் வழித்தோன்றல்களுக்கும், சாக்கியகுடிகளின் வழித்தோன்றல்களுக்கும் இடையேத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அப்படிப்பட்ட கருத்தியல் போரில் பங்கெடுத்தவராக மலையாள மண்ணில் மகராசன் வேதமாணிக்கம் (1763 – 1827) அடையாளப்படுத்தப்படுகிறார். அவர், சாக்கிய இனம், சாம்பவர் கிளை. சாம்பவரில் வள்ளுவர்குடி.
கேரளத்தில் சமூக எழுச்சிக்கு முன்னத்தி ஏர் சாம்பவர்களே (பறையர்கள்). சாம்பவர்களின் சமூக எழுச்சி மகராசன் வேதமாணிக்கத்தால் உருவானது. அதுவே சீர்திருத்த கிறித்துவம் ஆனது.
கேரளத்தில் சமூகப்புரட்சி காலஒழுங்குபடி, மகராசன் வேதமாணிக்கமே அய்யா வைகுண்டர், நாராயண குரு, அய்யன் காளி ஆகிய முன்னோடிகளுக்கும் முன்னோடி. மாத்திரமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரின் குருமார்களில் இரண்டாமவரான மகாத்மா புலேவுக்கும் (1827-1890) முந்தியவராவார்.
மகராசனின் முன்னோர்கள், சோழநாட்டைச்சேர்ந்த சாக்கியத்தமிழர்கள். சோழநாட்டில், சாக்கியர்களே பௌத்தர்களாக இருந்தனர் சோழநாட்டில், பார்ப்பனியம் வெற்றிபெற்றபிறகு, உழுகுடிகளுக்கு நிலம் சொந்தம் இல்லாமல் போயிற்று. சோழநாட்டில் இருக்க மனம் இல்லாத மகராசனின் முன்னோர், அவர்களது நிலத்தைக் குறைந்தவிலைக்கு விற்றும், உறவினரிடம் கொடுத்துவிட்டும் பாண்டிய நாட்டில் திருநெல்வேலி அருகில் வல்லநாட்டுப் பகுதிக்குப் புலம்பெயர்ந்தனர். வேளாண்மை, மருத்துவம், சோதிடம் மூன்றும் இருந்ததால் அவர்களுக்கு மக்களிடம் நன்மதிப்பு கிடைத்தது.
மன்னர்கள் காலத்தில் போர்வீரர்களாகவும் , நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாகவும் இருந்த மறவர்கள், வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் தொழில் எதுவுமில்லாமல் வழிப்பறி, கொள்ளை என்று ஆரம்பித்ததால், குற்றப்பரம்பரை ஆக்கப்பட்டனர். அவர்களது தொல்லைதாங்காமல், அவர்களிடம் இருந்துத் தப்பி, மகராசனின் முன்னோர், திருவிதாங்கூர் பகுதியில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) மயிலாடி என்னும் ஊருக்கு வந்தனர். மயிலாடியிலும், மகராசன் குடும்பத்தினருக்கு நல்ல மரியாதை கிடைத்தது.
மயிலாடியில்தான் 1763-இல் மகராசன் பிறந்தார். அவரது குடும்பம் தீவிர இந்துக்குடும்பமாக இருந்தது. மகராசனும் வளர்ந்தபிறகு, பெற்றொர்களுக்கு வேளாண்மை செய்வதில் துணையாக இருந்தார். இந்து மரபுவழிக்கடவுள் இலங்கமணியனின் உண்மையான சீடராக இருந்தார். ஆண்டுதோறும் பெற்றொருடன் வள்ளியூர் சென்று இலங்கமணியனை வழிபட்டு வருவது வழக்கம். போலவே திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வருவதும் வழக்கம். சத்தியா என்னும் இந்துப்பெண்ணை மணம்புரிந்தார்.
1799-ஆம் ஆண்டு தமையன் மகன் சிவகுருநாதனுடன், சிதம்பரம் தில்லை நடராசனை வழிபட நடைபயணம் மேற்கொண்டார் தன் இந்து ஆன்மிகப்பிம்பத்தைத் தகவமைத்துக் கொண்டதன் நீட்சியே மகராசனின் சிதம்பரம் நோக்கியப் பயணமாகும். சிதம்பரம் கோயில் இவர் எதிர்பார்த்ததுபோல் இல்லை. கோயிலின் உள்ளடக்கம் தீட்சிதர்களாலும், தேவதாசிகளாலும் நிரம்பியிருந்தது. ஏமாற்றமடைந்த மகராசன், தஞ்சாவூருக்குத் தனது உறவினர் வீடுகளுக்கு வருகிறார்.
அவரது உறவினர்களில் பலரும் சீர்திருத்தக் கிறித்துவத்துக்கு மாறியிருந்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மகராசனும், உறவினர்களுடன் தேவாலயம் செல்கிறார். அன்று ஜே.சி.கோலப் ஆராதனை செய்தார். வழிபாட்டில் காணப்பட்ட ஒழுங்குமுறை, இனிய தமிழ்ப்பாடல்கள் மகராசனின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.
மகராசன் தன்னை கிறித்துவ மதத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கோலப்பிடம் வேண்டினார். கோலப், மகராசனிடம் ‘மெஞ்ஞானம்’ என்னும் நூலைப்படித்துத் தெளிவுபெற்று எட்டு நாட்களுக்குப் பிறகு வரச்சொல்கிறார். அவ்வாறே மகராசன் செய்கிறார். ஜே.சி. கோலப் மகராசனை வேதமாணிக்கமாகவும், சிவகுருநாதனை, மாசிலாமணியாகவும் பெயர் மாற்றி கிறிதுவர்களாக முறைப்படி மதம்மாற்றிவிடுகிறார்.
சிதம்பரம் சென்றவர்கள் நீண்ட நாட்களாகத் திரும்பிவராததால், மகராசன் குடும்பத்தினரும், உறவினர்களும் மிகுந்த கவலையில் இருந்தனர். திரும்பிவந்த மகராசனையும், சிவகுருநாதனையும் கண்டஉடன் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். சிதம்பரம் சென்று திரும்பியவர்களைக் காண்பதற்காகப் பல உறவினர்கள் வந்து சூழ்ந்துவிட்டனர். அவர்களில் சிலர் ‘பிரசாதம்’ கேட்டனர். மகராசன் ஒரு பொதியை அவிழ்த்தார். அங்கே விவிலியம் புதிய ஏற்பாடு இருந்தது.
அதனை எடுத்து, அதிலிருந்து பல வாசகங்களை மகராசன் வாசித்துக் காட்டினார். ஒரு குட்டிப் பிரசங்கமும் செய்தார். சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்குக் கவலை, வேறு சிலருக்கு மகராசனுக்குப் பைத்தியம் பிடித்திருக்குமோ என்னும் சந்தேகம். பின்னர்தான் தெரியவந்தது, மகராசன் வேதமாணிக்கமாகவும், சிவகுருநாதன் மாசிலாமணியாகவும் சீர்திருத்த கிறித்துவத்திற்கு மாறியசெய்தி.
என்றாலும் கொஞ்சம்கொஞ்சமாகத் தனது உறவினர்களை சீர்திருத்த கிறித்துவத்திற்கு மாற்றினார். முதலில் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் பெயர்மாற்றம் செய்தார். மனைவிக்கு சத்தியாயி என்றும், மகள்களுக்கு பாக்கியாயி, மாலையம்மாள், அன்னம்மாள் என்று பெயர்மாற்றம் செய்தார். மூத்த மகனுக்கு தேவசகாயம் என்றும், இளயவனுக்கு மோசே என்றும் பெயரிட்டார்.
மாசிலாமணியின் மனைவிக்கு ஏசுவடியாள் என்றும், பெருமாள் என்னும் குடும்பத்தலைவருக்கு ஞானமுத்து என்றும் பெயரிட்டார். இப்படியாக முதன்முதலில் பெயர்மாற்றம் பெற்றவர்கள் 30 பேர். அந்த 30 பேரையும் கொண்டதுதான், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட குமரி மண்ணில் சீர்திருத்த கிறித்துவத்தின் முதல் திருச்சபை.
மகராசன் குடும்பம் மயிலாடி வந்த காலகட்டம், பார்ப்பனியம் வழிநடத்தும் இந்துமதம் உச்சத்தில் இருந்த காலகட்டம். .சாதியின் பெயரால் மனிதர்கள், விலங்குகளைவிடவும் கீழானவர்களாக நடத்தப்பட்டனர். உழைக்கும் மக்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றுசொல்லி, உழைப்பைச்சுரண்டி வாழும் பார்ப்பனியம், ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மீசைவரி, தலைப்பாகைவரி,, முலைவரி என்று பல்வேறுவிதமான உறுப்பு வரிகளை விதித்து, அவர்களைக் காலில்போட்டு மிதித்தது. ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிக்கத்தை எதிர்த்து எந்தவிதமான கேள்வியையும் எழுப்பமுடியாதவர்களாக அடங்கியே இருந்தனர்.
அப்படிப்பட்டச் சூழலில்தான் மகராசன் வேதமாணிக்கமாக மதம்மாறினார். சுற்றத்தாரையும் மதம்மாற்றினார். இந்துமத சாதிசாக்கடைக்குள் வீழ்ந்து மூச்சுவிடத் திணறிக்கொண்டிருந்த அடித்தட்டு மக்களுக்குக் கிறித்துவ மதம் கதவுகளைத் திறந்துவிட்டு, மூச்சுவிடவைத்தது.
கிறித்துவராக மாறிய மகராசன் முதல்காரியமாக,, தங்கள் முன்னோர்கள் நம்பிவந்த சோதிடம் பற்றிய சுவடிகளையும், தேவாரம், திருவாசகம் போன்றவற்றையும் குப்பைகள் என்றுகருதி, அவற்றைத் தீக்கிரையாக்கினார். மயிலாடிக்கு அருகில் உள்ள ஒசரவிளையில் தாம் கட்டிய இலங்காமணியன் கோவிலை இழுத்து மூடினார். தங்கள் வீடுகளில் இருந்த இந்துமத அடையாளங்கள் அனைத்தையும் அழித்தார்.
ஆரம்பகட்டத்தில் கிறித்துவ மதத்தின் பரப்புரையைத் தாழ்த்தப்பட்ட மக்களிடையே தனி ஒருவராகச் செய்துவந்தார். அவருக்கு அய்ரோப்பியர்களின் உதவி தேவைப்பட்டது. மீண்டும் தஞ்சைக்குச்சென்று, அருட்தந்தை கோலப்பிடம் உதவிகேட்டார்.
அப்போது தரங்கம்பாடியில் வந்து தங்கி, தமிழ் கற்றுக்கொண்டிருந்த உல்லியம் தோபியாஸ் ரிங்கல் தோபே என்னும் ஜெர்மானிய அருட்தந்தைக்குக் கடிதம் ஒன்றை வழங்குகிறார் கோலப். அக்கடிதத்துடன் மகராசன், தோபேயைச் சந்தித்து, மயிலாடியில் ஒரு தேவாலயம் நிறுவும் தனது முயற்சிக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகிறார். தோபேயும் சம்மதிக்கிறார்.
மகராசன் கிறித்துவின் போதனைகளைப் பேசியும், சிறு நூல்களை அச்சிட்டு வழங்கியும் என்பதானப் பணிகளை முன்னெடுத்தபிறகு ஒடுக்கப்பட்ட சாம்பவர் மக்கள் பலரும் சீர்திருத்த கிறித்துவத்திற்கு மதம்மாறினர். அடித்தட்டு மக்கள் அதிக அளவில் மதம்மாறிவந்த செய்தி அதிகார வர்க்கத்திற்கும் எட்டியது. அதனால் எதிர்ப்பும் வளர்ந்தது. தோபே மயிலாடி வந்து மகராசன் வீட்டில் தங்கி அருட்பணியைத் தொடரலானார்.
திருவிதாங்கூர் மண்ணில், சிரியன் கிறித்துவமும், ரோமன் கத்தோலிக்கமும் அய்ரோப்பியர்களால் பரவலாக்கப்பட்டது. அவை வீரியமாக அடித்தட்டு மக்களைச் சென்று சேரவில்லை. மாறாக சீர்திருத்தக் கிறித்துவம் மகராசன் என்னும் தமிழரால் முன்வைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. அது இந்து மதத்தில் ஒரு உடைசலை உருவாக்கியது. அதனாலும் ஆட்சியாளர்களின் கண்காணிப்புக்குள்ளானது.
மகராசனின் வீட்டுமுற்றம், ‘விடுதலை செய்தியைக் கேட்க தினமும் கூடிய அடித்தட்டு சாம்பவர் மக்களால் நிரம்பி வழிந்தது. இந்தச்செய்தி வேலுத்தம்பித் தளவாயை எட்டியது. மகராசன் வேதமாணிக்கமும் அவரது குடும்பத்தினரும், பிற கிறித்துவ மக்களும் குறிவைக்கப்பட்டனர். மகராசனைக் கண்டஉடன் சுடவேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. ரிங்கல் தோபே திருநெல்வேலிச் சீமைக்கு ஓடிவிட்டார். மகராசன் குடும்பத்தினர், ஒரு மாதகாலம் மருந்துவாழ்மலையில் மறைந்து வாழ்ந்தார்கள்.
தளவாய் வேலுத்தம்பி, மெக்காலேயின் வீட்டைச் சுற்றிவளைத்து அவரைக் கொல்ல நினைத்தார். அதிலிருந்துத் தப்பிய மெக்காலே சென்னை ஆளுநருக்கு செய்தி அனுப்பினார். மலபாரிலிருந்து ஒரு படை கொச்சிக்கும், மற்றொரு படை ஆரல்வாய்மொழிக்கும் அனுப்பப்பட்டது. வேலுத்தம்பியின் படைக்கும், கம்பனி படைக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. போரில் தளவாய்ப்படைத் தோற்றுப்போனது. வேலுத்தம்பி தலைமறைவானார். அவரைப் பிடித்துக்கொடுப்பவருக்கு 50,000 ரூபாய் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கொட்டாரக்கரையை அடுத்துள்ள மண்ணடியின் பகவதி கோயிலில் வேலுத்தம்பித் தளவாய் ஒளிந்திருப்பதாக செய்தி கிடைத்தது. அவர் சுற்றிவளைக்கப்பட்டார். தப்பமுடியாது என்று தெரிந்ததும், வாளை நட்டுவைத்து அதன்மீது பாய்ந்து குற்றுயிரும், குலை உயிருமாகி உயிரிழந்தார். அதன்பிறகே, மருந்துவாழ்மலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மகராசனும் அவரது குடும்பத்தினரும் மீண்டும் மயிலாடி வந்தனர்.
மயிலாடியில், அய்ரோப்பிய பாதிரியாரும் மயிலாடி ஊர்மக்களும் இணைந்து கட்டிமுடித்த முதல் சீர்திருத்த கிறித்துவ ஆலயம் 1809-இல் வழிபாட்டுக்கு வந்தது. மகராசன் வேதமாணிக்கம் இலண்டன் மிஷனரி சபையின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இன்றைய புரட்டஸ்டாண்டு ஆலயம் அமைந்திருக்கும் வளாகம், மகராசனால் வழங்கப்பட்ட நிலமாகும். அதனைச் சுற்றியுள்ள கிறித்துவக் குடியிருப்பு அமைந்திருக்கும் நிலம், மகராசன் வேதமாணிக்கத்தின் குடும்பத்தலைவர் ஞானமுத்துவால் வழங்கப்பட்டது..
அன்றைய காலகட்டத்தில், திருவிதாங்கூரில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வேதக்கல்வி, நாயர்களுக்கு போர்க்கலைக்கல்வி, வெள்ளாளர்களுக்குத் திண்ணைக்கல்வி என்பதாகக் கல்விமுறை சாதி அடுக்குமுறைசார்ந்து இருந்தது. மற்ற சாதியினருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது மகராசன் வேதமாணிக்கத்தால் உருவாக்கப்பட்ட சீர்திருத்தக்கிறித்துவம் கொடுத்த கல்விமுறை.. அதுவே பின்னர் சமூக மாற்றத்தைக்கொண்டுவரும் கருவியானது. குறிப்பாக, மதம்மாறிய அடித்தட்டு மக்களுக்குக்கிடைத்த ஆங்கிலக்கல்வியைச் சொல்லவேண்டும்.
கிறித்துவம் என்பது ஆன்மிகப்பணி என்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார விடுதலையும் ஆகும். மகராசன் வேதமாணிக்கமும், ரிங்கல் தோபேயும் எங்கெல்லாம் தேவாலயம் கட்டினார்களோ அங்கெல்லாம் பள்ளிகளையும் கட்டினார்கள். 18-ஆம் நூற்றாண்டுவரையிலும் தலித் மக்களுக்கு சட்டப்படியே கல்வி மறுக்கப்பட்டுவந்தது. 1809-இல் மயிலாடியில் ரிங்கல் தோபே உதவியுடன் மகராசன் வேதமாணிக்கம் கட்டிய முதல் பள்ளிக்கூடம், தலித் பிள்ளைகளுக்கு ஆங்கிலக்கல்வியைக் கொடுத்தது. அந்தப்பள்ளியில், ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
தனது மக்களை சீர்திருத்த கிறித்துவத்திற்கு மதம்மாற்றி, கல்விகொடுத்து, சிந்திக்கத்தூண்டி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதே மகராசன் வேதமாணிக்கத்தின் நோக்கமாக இருந்தது. அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
திருவிதாங்கூரில்தான் சாதிக்கட்டமைப்பு மிகவும் இறுக்கமாக இருந்தது. கல்விகற்றவர்களாகவும், நிலவளங்களுக்கு உரிமையாளராகவும் பார்ப்பனர்கள், நாயர்கள், வெள்ளாளர்கள் இருந்தனர். மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்கள் சொகுசாக வாழ்ந்தனர். திருவிதாங்கூரின் வேணாட்டுப்பகுதிகளான இரணியல், திருவிதாங்கோடு, பாறசாலை, நெய்யாற்றின்கரை, , கொல்லம் முதலான இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆடுமாடுகளைப்போல விற்கவும் வாங்கவும் ஆன அடிமைவணிகம் நடந்துகொண்டிருந்தது.
அந்தச்சூழலில், அடிமைகளுக்கான விடுதலைக்கங்கைப் பற்றவைத்தவராக சீர்திருத்த கிறித்துவத்தை உருவாக்கிய மகராசன் வேதமாணிக்கமே முன்நிற்கிறார். திருவிதாங்கூரில் இருந்த கிறித்துவ மெஷனரிகள் இணைந்து எடுத்த முயற்சியின் காரணமாகவே, 1885 ஜூன் மாதம் அப்போதைய உத்திரம் திருநாள் மகராஜா அடிமை வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அரசாணையை வெளியிட்டார்.
மகராசன் வேதமாணிக்கம், ரிங்கல் தோபே காலத்திலேயே, பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதியினர் கட்டிவந்த உடல் உறுப்பு வரிகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. மகராசன் வேதமாணிக்கம் நிறுவிய கிறித்துவத்தை வளர்த்தெடுக்கவந்த மிஷனரிகள், திருவிதாங்கூரில் நிலவிய சமூக ஏற்றதாழ்வுகளையும், ஒடுக்குமுறைகளையும் மகராசன்வழி அறிந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விகொடுத்து அவர்களை சிந்திக்கவைப்பதனால் மட்டுமே சமூக விடுதலை சாத்தியமாகும் என்று அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகப் பல கல்விக்கூடங்களைப் பல்வேறு பகுதிகளில் திறந்தனர்.
புத்தகங்களும், துண்டறிக்கைகளும் மக்கள் மொழியான தமிழில் அச்சிடப்பட்டதால், ஆட்சியாளர்கள் செய்யும் சீர்கேடுகளை மக்கள் எளிதில் புரிந்துகொண்டார்கள். இன்று கன்னியாகுமரி மாவட்டம் நூறு விழுக்காடு கல்விபெற்ற மாவட்டமாக இருப்பதற்கான அடித்தளம் இட்டவர்கள் மகராசன் வேதமாணிக்கமும், ரிங்கல் தோபேயும் ஆவர்.
1820-ஆம் ஆண்டு இந்துப் பிள்ளைகளும் கல்விபெறும் வகையில் நாகர்கோயில் மிஷனரி வளாகத்தில் ஒரு பள்ளி திறக்கப்பட்டது. அருகில் கிறித்துவ நிறுவனங்கள் இருந்ததால், இந்துப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் திரும்ப அழைத்துக்கொண்டனர். அதனால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வடசேரி சந்தைக்கு அருகில் 1820- ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் இந்துக்களுக்கென ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. இந்து, இஸ்லாமியப் பிள்ளைகள் சேர்ந்து கல்விகற்றனர். பார்ப்பனர்களும்கூட தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்பினர். அந்தப் பள்ளியின் முதல் ஆசிரியர் மகராசன் வேதமாணிக்கம்தான்.
குமரி மண்ணுக்கு இரண்டாவது மிஷனரியாக வந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்ல்ஸ் மீட். ஒடுக்கப்பட்டப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்னும் காட்டுமிராண்டித்தனமான அரசக்கட்டுப்பாடு அவருக்கு அதிர்ச்சியளித்து. அதனை மாற்றிட அப்போதே அவர் எண்ணம்கொண்டார். சார்ல்ஸ் மீட்டும், மகராசன் வேதமாணிக்கமும் எடுத்த முன்முயற்சி காரணமாகவே, பின்னர் 1822, 1828, 1855 ஆண்டுகளில் தென்திருவிதாங்கூரில் ‘தோள்சீலைக்கலகம்’ நிகழ்ந்தது.
மகராசன் வேதமாணிக்கம் ஏற்படுத்திய சீர்திருத்த கிறித்துவ மார்க்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமேம்பாட்டிற்கும், சுயமரியாதைக்கும் வழிகோலியது. நம்பகமான ஆன்மிகத்தளத்தை உருவாக்கி, அதில் சமுதாயப் பிரச்சினைகளை உள்ளடக்கினார். அதன் தொடர்ச்சியாக, சமூகமாற்றங்கள் நிகழக் காரணமானார்.
சார்ல்ஸ் மீட் குமரி மண்ணில் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்த நாடார்களை சீர்திருத்தக் கிறித்துவத்திற்குள் கொண்டுவந்தார். காலப்போக்கில், சாம்பவரான மகராசன் வேதமாணிக்கத்தால் தொடங்கப்பட்டு, சாம்பவர்களால் நிரம்பியிருந்த சீரிதிருத்த கிறித்துவ அமைப்பு முற்றிலும் நாடார்கள் வசமானது. மகராசன் வேதமாணிக்கம் பெயர் நீக்கப்பட்டு, ரிங்கல் தோபேயின் பெயர் மட்டுமே நிறுவனராக நிலைநிறுத்தப்பட்டது. 1891-இல் பணியிலிருந்த 18 பாஸ்டர்களும் 24 சுவிஷேச ஊழியர்களும்கொண்ட அருட்பணியாளர்கள் அனைவருமே நாடார்சாதியினராக இருந்தனர். குமரி மண்ணில் சீர்திருத்த கிறித்துவ அமைப்பு முழுவதும் நாடார்சாதியினருக்கானது என்று மாறிவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, அதற்குப் பின்பான காலத்தில், குமரி மண்ணைச்சேர்ந்த சாம்பவர்கள், இரட்சண்ய சேனையிலும், அமெரிக்க லுத்தரன் சபையிலும் சேரவேண்டிய நிலை உருவானது. இப்படியாக மகராசன் வேதமாணிக்கத்தால், குமரிமண்ணில் அடித்தட்டு சாதியான சாம்பவர்களின் சுயமரியாதைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும், எழுச்சிக்கும் உருவாக்கப்பட்ட சீரிதிருத்த கிறித்துவம் நாடார்கள் என்றும் சாம்பவர்கள் என்றும் பிரிந்துபோனது. சாதிஅமைப்பை உடைக்க உருவாக்கப்பட்ட சீர்திருத்த கிறித்துவம் , சாதிகளாகப் பிளவுண்டது வரலாற்று முரண்.
பயன்பட்ட நூல்: மகாத்மா பூலேவுக்கு முன், மகராசன் வேதமாணிக்கம்.
ஆசிரியர்: ஏபி. வள்ளிநாயகம்
வெளியீடு: தலித் ஆதார மையம், மதுரை.