பெலாரஸ் – பனிப்போரின் புதிய ஆடுகளம்
சுவிசிலிருந்து சண் தவராஜா
கொரோனாக் கொள்ளைநோயின் தாக்கத்தில் இருந்து விடுபட உலகம் திணறிக் கொண்டிருக்கும் அதேவேளை அரசியல் கொள்ளைநோயும் ஒருபுறம் மக்களைத் தாக்கியவாறே இருக்கின்றது. மக்களின் உயிரைக் காக்க மருந்து கண்டுபிடிப்பதற்காக ஒருசில அரசுகள் முயற்சித்துக் கொண்டிருக்க, சமாந்தரமாக பதவிகளைத் தக்க வைப்பதற்கான தேர்தல்களும் நடந்தவாறே இருக்கின்றன.
நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிலையான அரசாங்கம் தேவை என்பது யதார்த்தமாக இருந்தாலும், தாம் விரும்பாத ஒருவர் அல்லது சக்திகள் பதவியில் அமர்வதைத் தடுத்துவிடும் சதிகளும், ஆட்சி மாற்ற முயற்சிகளும் இடம்பெறாமலும் இல்லை. சர்வாதிகாரத்தை ஒழித்தல், மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்தல், மனித உரிமைகளைப் பேணுதல் என்பன போன்ற அலங்கார வார்த்தைகளைக் கொண்டு கட்டமைக்கப்படும் இத்தகைய ஆட்சிமாற்ற நடவடிக்கைகள் வல்லாதிக்கத்திற்கும், பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் சேவைசெய்யும் முயற்சிகளே என்பதே கசப்பான உண்மையாக இருக்கின்றது. இத்தகைய ஒரு முயற்சியின் புதிய ஆடுகளமாக கிழக்கு ஜரோப்பிய நாடான பெலாரஸ் மாறியுள்ளது.
மேற்குலகின் கரிசனை
சோவியத் ஒன்றியத்தின் முன்னைநாள் உறுப்பு நாடான பெலாரஸ், ரஸ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா, லற்வியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு. சோவியத் ஒன்றியத்தின் கைத்தொழில் கட்டுமானத்தால் பல தொழிற்சாலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாட்டு மக்கள் தொகை வெறும் 94,48,899 மாத்திரமே.
சனச்செறிவு குறைவான இந்த நாட்டின் தலைநகரான மின்ஸ்க் இல் மாத்திரம் 20 இலட்சம் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். 1991 இல் சோவியத் ஒன்றியம் சிதைந்தபோது சுதந்திர நாடாக மாறிய இந்த நாடு ஏக காலத்தில் ரஸ்யாவுடனும் அதன் எதிர் முகாமான ஜரோப்பிய ஒன்றியத்துடனும் நல்லுறவைப் பேணி வருகின்றது.
இங்கே 1994 முதல் 26 வருடங்களாக அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ அரசுத் தலைவராக இருந்து வருகின்றார். அண்மைக் காலமாக, ரஸ்யாவின் பக்கம் சற்று அதிகமாகச் சாயத் தொடங்கியுள்ள அல்லது மேற்குலகின் பக்கம் இருந்து சற்று விலகத் தொடங்கியுள்ள இவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டுத் தமக்கு வாய்ப்பான ஒரு தலையாட்டிப் பொம்மையை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட மேற்குலகம் முடிவு செய்து விட்டது.
இந்த நிலையில், ஓகஸ்ட் 9 ஆம் திகதி அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலில் 80 வீதமான வாக்குகளைப் பெற்று லுகாஷென்கோ வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியது. காத்திருந்த மேற்குலகின் முகவர்கள், எதிர் கட்சியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், அரசைப் பதவி விலகக் கோரும் அறைகூவல்கள், தேர்தல் முடிவை நிராகரிக்கக் கோரும் வேண்டுதல்கள் என பெலாரஸ் அரசியற் களம் சூடுபிடித்துக் கிடக்கின்றது.
எதிர்க் கட்சித் தலைவியும், அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி(?)யைத் தழுவியவருமான ஸ்வெற்லேனா ரிக்கோனோவ்ஸ்கயா காவல்துறையின் கெடுபிடியில் இருந்து தப்பும் நோக்குடன் அயல்நாடான லித்துவேனியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். அது மாத்திரமன்றி நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் சுயாதீனமான முறையில் புதிய தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தடுமாறும் லுகாஷென்கோ
அதேவேளை, லுகாஷென்கோ அவர்களை ஆதரிக்கும் போராட்டங்களும் தலைநகர் மின்ஸ்கில் இடம்பெற்றுள்ளன. அந்நிய சக்திகள் தமது நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றஞ் சாட்டியுள்ள லுகாஷென்கோ, தனக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அந்நிய சக்திகளே ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக தன்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதியில் ரஸ்யா ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டிவந்த லுகாஷென்கோ, தற்போது நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களின் பின்னணியில் நேட்டோ உள்ளதாகத் தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.
ஆனாலும் அவரின் பிந்திய குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போன்றே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அரச அதிகாரிகள் பலரை இலக்கு வைத்து பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார்.
மேற்குலகிற்கும் லுகாஷென்கோவுக்கும் இடையிலான தேன்நிலவு முடிவிற்கு வந்த தருணம் எதுவெனச் சரியாகத் தெரியவில்லை. இந்த வருடம் பெப்ரவரியில் பெலாரஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொம்பியோ லுகாஷென்கோவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து இருந்தார். ரஸ்யாவுடனான எண்ணைத் தகராறில் பெலாரஸ் நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். ஆறு மாதங்கள் செல்வதற்கு இடையில் அமெரிக்காவின் நிலைப்பாடு தலைகீழாக மாறக் காரணம் எதுவோ?
களத்தில் ரஷ்யா
1991 இன் பின்னான காலகட்டத்தில் ரஷ்யாவின் மீளெழுச்சி என்பது தற்போதைய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் தலைமையில் ஆரம்பித்தது.
1999 டிசம்பர் 31 இல் அரசுத் தலைவராகப் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை ரஸ்யாவின் தலைவிதியைத் தீர்மானிப்பவராக விளங்கும் புட்டின், தனது நாட்டு எல்லைகளில் அமைந்துள்ள முன்னைநாள் சோவியத் குடியரசுகளைத் தன்வசம் இழுக்க நினைக்கும் மேற்குலகின் திட்டங்களை முறியடிப்பதிலும் கரிசனை கொண்டவராக இருந்து வருகின்றார்.
மேற்குலகின் விஸ்தரிப்பு வாதத் திட்டங்களுக்குத் தடையான இந்தச் செயற்பாட்டை விரும்பாத மேற்குலகம் பல்வேறு வழிவகைகளையும் பயன்படுத்தி ரஸ்யாவைச் சூழ்ந்து கொள்ள முண்டியடித்து வருகின்றது. இதற்காகப் பல தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்.
பல்வேறு மனிதநேய முகமூடிகளை அணிந்து உலாவும் இத்தகைய நிறுவனங்கள் ~ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்தல்| என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே தமது எசமானர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து வருகின்றன. இவற்றுக்கு ஆதரவாக ஊடக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
2003 இல் ஈராக்கிற்கு எதிரான போரை பன்னாட்டு ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பது இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. சதாம் ஹ{சைனிடம் பேரழிவை உருவாக்கும் ஆயுதங்கள் உள்ளன என்ற வதந்தியை மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்து, கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உலக மாந்தரும் அதனை நம்பும் நிலையை உருவாக்கிய பின்னரேயே அமெரிக்க இராணுவம் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. பின்னாளில் லிபியாவிலும் இத்தகைய உத்தியே பின்பற்றப்பட்டது.
நிறப் புரட்சி
மேற்கு நாட்டு ஊடகங்களால் ~நிறப் புரட்சிகள்| என வர்ணிக்கப்படும் இத்தகைய திட்டமிட்ட, மேற்குலகிற்குச் சார்பான ஆட்சிக் கவிழ்ப்புகள் ஐனநாயக நடவடிக்கைகள் என நம்பவைக்கப் படுகின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பரீட்சிக்கப்பட்டு வரும் இத்தகைய ~நிறப் புரட்சிகள்| 2000 மாம் ஆண்டில் சேர்பியாவில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களால் பயிற்றுவிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள், பெருந்தொகைப் பணம் மற்றும் மறைந்த ஜேனே சார்ப் என்பவரால் எழுதப்பட்ட கையேடு ஆகியவையே இத்தகைய செயற்பாட்டுக்கான ஆதாரங்கள். இயல்பாக மக்கள் மத்தியில் இருந்து உருவாகும் செயற்பாடுகளை குவிமையப்படுத்தி, தமது நோக்கங்களுக்காக அவற்றைத் திசைதிருப்பி, முடிந்தால் அதனை நிறைவேற்றிக் கொள்வதே இவர்களின் இலக்கு. இதற்காக இவர்கள் ஒரு நிறத்தைத் தெரிவு செய்து, ஆர்ப்பாட்டங்களில் பங்கு பற்றுவோர் அதனை ஒரு அங்கியாகவோ அல்லது கொடியாகவோ கொண்டு வருவதற்குத் தூண்டுவார்கள்.
இதுவே, இன்று பெலாரஸ்ஸிலும் நடந்து வருகின்றது. முன்னைய காலங்களில் பாவிக்கப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த கொடிகள் மின்ஸ்க் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் திடீரென முளைத்துள்ளன. 1918 ஆம் ஆண்டிலும் பின்னர் நாஸிகளின் பிடியில் பெலாரஸ் சிக்கிய போதிலும் பாவனையில் இருந்த இந்தக் கொடிக்கு தற்போது என்ன தேவை?
கடந்த வருடத்தில் மேற்குலக ஊடகங்களில் மிகுந்த மரியாதைக்கு உரியவராக விளங்கிய லுகாஷென்கோ தற்போது ஒரு சர்வாதிகாரியாக வர்ணிக்கப்படுகின்றார் என்றால் அது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே மேற்குலகிற்கு உள்ள சிக்கல் என்னவென்றால் லுகாஷென்கோ மாத்திரமன்றி எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் ரஸ்யாவுடன் நல்லுறவைப் பேணுவதையே விரும்புகிறார்கள். அது மாத்திரமன்றி பெலாராஸ் மக்களில் பெரும்பான்மையானோரும் ரஸ்யாவுடனான தொடர்பைத் துண்டிக்க விரும்பவில்லை. அதனால், எந்த எல்லைவரை செல்வது என்பதில் மேற்குலகிற்கு ஒரு தடுமாற்றம் இருந்து வருகின்றது.
தீர்மானிக்கும் சக்தியாக புட்டின்
இத்தகைய பின்னணியிலேயே யேர்மன் அரசுத் தலைவி அங்கெலா மேர்க்கலும், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனும் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஒருபுறம் ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்துக் கொண்டே மறுபுறம் ரஸ்யாவின் ஒத்துழைப்புடன் பெலாரஸ் நெருக்கடிக்குத் தீர்வு காணவே அவர்கள் விரும்புகிறார்கள் போலத் தெரிகின்றது. மேற்குலகின் இந்த முடிவிற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விடயங்கள்.
முதலாவதாக 2014 இல் உக்ரைனில் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து உருவான உள்நாட்டுப் போரைப் போன்ற ஒன்று பெலாரஸ்ஸிலும் ஏற்படுவதை அது விரும்பவில்லை. அடுத்ததாக பெலாரஸ் நாட்டில் அதிகரிக்கும்; தொழிற்சங்க நடவடிக்கைகளால் அச்சம் கொண்டுள்ளது. பெலாரஸ் போன்ற ஒரு நாட்டில் தொழிற்சங்கங்கள் பலம்பெற்றால் அவை இடதுசாரி அரசியலுக்கு வழிசமைக்கும் ~அபாயம்| உள்ளதாகக் கருதும் மேற்குலகம் அதனைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, சாட்சிக்காரன் காலில் விழுவதை விடவும் சண்டைக்காரன் காலிலேயே விழலாம் என்ற எண்ணத்தில் ரஸ்யாவிடம் பேச்சுக்களைத் தொடங்கியுள்ளன.
ஏலவே, லுகாஷென்கோவுக்கும் புட்டினுக்கும் இடையிலே தொலைபேசி உரையாடல் இட்பெற்றதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. தவிர, ரஸ்ய உளவு அமைப்பிற்குச் சொந்தமான விமானங்கள் மின்ஸ்க் நகருக்கு வந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரிதாபத்துக்குரிய மக்கள்
அரசியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு பெலாரஸ் நாட்டில் நடக்கும் விடயங்களுக்கு பின்னணி, முன்னணி என்பவை விளங்கினாலும் அந்த நாட்டில் வாழும் சாமானிய மக்களைப் பொறுத்தவரை அவர்களின் அன்றாடப் பிரச்சனையே முதன்மையானது. கொரோனா கோரத் தாண்டவம் ஆடத் தோடங்கிய போதில் அது வெறும் தடிமன் கிருமியே எனக் கிண்டலடித்து, ஊரடங்கு மற்றும் உள்ளிருப்பு நடவடிக்கைகளைக் கைக்கொள்ளாத நாட்டுத் தலைவர்களுள் லுகாஷென்கோவும் ஒருவர்.
இறுதியில் தேர்தலுக்கு முன்பாக அவரே கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி மீண்டிருக்கின்றார். தவிர, 94 இலட்சம் மக்கள் வாழும் நாட்டில் சுமார் 70,000 மக்கள் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்பது மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தி உள்ள விடயம். சமூக சமத்துவமின்மை அதிகமாகக் காணப்படும் இந்த நாட்டில் 21.5 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக 2019 ஆண்டுப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மக்களின் அமைதியின்மைக்கு இவை இரண்டு காரணங்கள் மாத்திரமே போதுமானது.
அரசுத் தலைவரை மாற்றிக் கொள்வதால் மாத்திரம் பெலாரஸ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வந்துவிடப் போவதில்லை. ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டு வந்தால் மாத்திரமே மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட முடியும். ஆளும் தரப்போ அன்றி எதிர்த் தரப்போ அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போர் முடிவடைந்து விட்டது என்று நம்பப்பட்டது. அது தற்காலிக உண்மையாகவே இருந்தாலும் தற்போது வேறு வடிவங்களில் அது தொடர்கின்றது என்பதற்கான அண்மைய எடுத்துக் காட்டு பெலாரஸ். யானைகள் மோதும் போது – விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் – நசிபடுவது என்னவோ புற்கள் தான். இந்த எடுத்துக் காட்டு பெலாரஸ் மக்களுக்கும் பொருந்தும்.
(வீரகேசரி வார இதழில் ஆகஸ்ட் 23, 2020 அன்று வெளிவந்த கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது)