பிள்ளையார் சுழி.!
கவிதை
இரா.மோகன்ராஜன்
பிள்ளையாருக்கு
தும்பிக்கை வந்த
கதை சொல்ல
குழந்தைகள் கேட்கும் போதெல்லாம்
ஏதாவது ஒரு கதை சொல்ல
வேண்டியதாகிவிடுகிறது
கதைகளுக்கெல்லாம்
பிள்ளையார் சுழி
இப்படித்தான் போலும்.
குழந்தை, பிள்ளையார்
பிடித்தது மண்ணில்.
பிள்ளையார் போல இல்லை
என்றேன் உதடு பிதுக்கி.
காதை பார்
தும்பிக்கைப் பார் என்றது.
காதை பார்த்தேன்.
தும்பிக்கையும் பார்த்தேன்.
ஆம்
பிள்ளையார்தான்.
பிள்ளையாருக்கு மோதகம்
பிடிக்கும் என்றாள்.
அவித்த கடலை
பச்சரிசி வெல்லம்
பொங்கல்
அவல் பாயாசம் பிடிக்கும்
என்றாள் .
உனக்கு என்ன பிடிக்கும்
என்று
பிள்ளையார்
கேட்காதபோதும்.
யானைக்கு மோதகம்
தந்தனர்.
பிறகு பனை வெல்லப் பொங்கல்
ஊட்டினர்.
பட்டில் அங்கவஸ்திரம்
முகப்படாமில் பட்டை
எழுதி
காலில் விழுந்தனர் தவறாது.
யானை பிள்ளையார் வடிவமாம்.
பிள்ளையார்தான் யானை
வடிவம் இல்லை போலும்
பாவம்
வனத்தில் எல்லை தாண்டும்
யானைகள்!
சுகர் இல்லாத
கொழுக்கட்டை என்று
கொண்டு வந்து வைத்தாள்
மனைவி.
சுகர் உள்ள
பிள்ளையார்
இனி வரக்கூடும்.
எல்லைப் படை வீரனின்
உடையுடனும்,
துவக்குடனும்
கொரோனா காலத்தின்
முககவசம் அணிந்தும்
ஏன் தெருக்கூட்டும்
தூய்மை இந்தியாவின்
பிள்ளையாரும்
விதவிதமாய் காட்சியளித்தனர்.
பிள்ளையாரில் தங்களையும்
தங்களில் பிள்ளையாரையும்
கண்டவர்களால்
வழிபட்டவர்களால்
ஒரு போதும்
காட்சியளிப்பதாக இல்லை
சாக்கடைக்குள்
முங்கியெழும்
பிள்ளையார்.
குழந்தைகள் பிள்ளையார்
செய்தன
பிள்ளையார் போல.
சிலவற்றில்
இருந்தன காதுகள் மட்டும்.
சில
தும்பிக்கைதான் அவை
என்றன நம்பிக்கையுடன்.
பிள்ளையார், பிள்ளையாராக
இல்லாவிட்டால் என்ன
பிள்ளையார், பிள்ளையார்தான்
விளையாடும் பிள்ளைகளுக்கு.
தெரு முக்கின்
பிள்ளையார் காவலுக்கு
நான்கு காவலர் வந்தனர்.
காவலர் ஒருவர் வயிறைப்
பார்த்து சிரித்தது பிள்ளைகள்.
கடைசியில்
பிள்ளையாரை
பாதுகாத்துக் கொள்ள
பிள்ளையார்தான்
வரவேண்டியிருக்கிறது போலும்.
மோதகம் தாங்கும்
கைகளில்
அரசு சாதனைகளை
விளக்கும் பதாகைகள்
தாங்கி
நின்றது
பிள்ளையார் வரிசை.
பிள்ளையாருக்கு மூஞ்செலி
வாகனமாம்.
பிள்ளையாரோ அரசுக்கு
வாகனம்.
எங்களூர்
ரயில்வே ஸ்டேசனிலும்
பிள்ளையார் இருக்கிறார்.
ரயில்
ஏறுவோரும், இறங்குவோரும்
டிக்கெட் எடுக்க மறந்தவரும்,
டிக்கெட்டை தொலைத்தவரும்
அவசரமாய்
முட்டியிட்டு மன்னிப்புக்
கேட்டுக் கொள்ள
உட்கார்ந்த இடத்தில்
ஸ்டேசன் மாஸ்டராய்.
எங்கள் ஊருக்கு எப்போது
ரயில்வே ஸ்டேசன்
வந்தது என்று
சரியாய் நினைவு படுத்திச்
சொல்பவரும்
நினைவு படுத்திச்
சொல்ல முடியவில்லை,
ஸ்டேசனுக்கு
பிள்ளையார் வந்த நாளை.
யாரும் சொல்வதில்லை
குரங்கைப் பிடிக்க
பிள்ளையாராய்ப் போன
கதை.
அணுகுண்டு
வைத்திருந்த
பிள்ளையாரைப்
பார்த்த போது
அதிர்ச்சியாகத்தான்
இருந்தது.
ஞானப் பழத்துக்காக
சண்டையிட்டுக் கொண்ட
பிள்ளையாருக்கு
எப்படியோ?!
சின்னச் சின்ன
குழந்தைகள்
சின்னச் சின்னப் பிள்ளையார்
வைத்து
சின்னஞ்சிறு தேர் செய்து
சிறு மேளமடித்து
வண்ண வண்ணமாய்
ஊர்வலம் போயின.
ஆடை அவிழ்த்து
ஆற்றில் இறங்கி
ஆட்டம் போட்ட
பிள்ளைகளுடன்
கடைசியில்
அவரும் வீடு திரும்பினார்
ஆடைகளற்று.