நிர்பயாக்களும் மனுவின் பிள்ளைகளும்..!
இந்த தேசத்தில் பெண்பிள்ளைகள் நிறைந்த அணிகலன்களுடன் நடு இரவில் சுதந்திரமாகச் செல்லும் நாள் என்று வருகிறதோ அன்றைக்கே இந்தியா முழுமையாக விடுதலைப்பெற்றதாகச் சொல்வேன் என்றார் காந்தியார். மனுவோ தனது நீதியாகப் பெண்களை பொதுவெளியில் நடமாட அனுமதிக்க மறுப்பதுடன் அப்படியானப் பெண்கள் தமது நடத்தையில் பாலியல் இச்சை மிகுந்தவர்கள் என்று ஒரேயடியாக அவர்களை இழிவுபடுத்துகிறார். காந்தி தேசத்திற்கும், மனுவின் தேசத்திற்குமிடையேதான் நிர்பயாக்கள் வல்லுறவுக்கு ஆளாகிக் கொண்டுள்ளனர்.
இம்முறை மனீசா. இதை எழுதிக் கொண்டிருக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பாலியல் வல்லுறவு நேர்வதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துக் கொண்டுள்ளது. எனவே பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு பெயரற்ற, முகமற்ற ஒரு பெண்ணுடல் குத்திக் கிழிக்கப்படுகிறது. அவளது உறுப்புக்கள் சிதைக்கப்படுகின்றன. அவள் கொல்லப்படுகிறாள் அல்லது உடையற்ற அவளது உடல், அடர் வனத்திலோ, வயல்வெளி நடுவிலோ, பொது மைதானத்திலோ, சாலை ஓரங்களிலோ விசிறி எறியப்பட்டுவிடுகிறது.
ஒரு பதினைந்து நிமிடத்தின் கதையில்தான் நிர்பயா இருந்தாள். இப்போது மனீசா. பிறகும் நிர்பயாக்கள் இருக்கக்கூடும். தனது வயதானத் தாயின் வேலைக்கு உதவுவதற்காக வயல்வெளிக்குச் சென்ற மனீசா வயல்வெளிக்கு அருகிலிருந்தப் புதர் ஒன்றிற்குள் நான்கு உயர்சாதிக் கும்பலால் இழுத்துச் செல்லப்பட்டாள். காது கேட்காத அந்த வயதானத் தாயால் அதை உணர்ந்து கொள்வதற்கு முன்பாகச் சற்று அருகிலேயே அந்த கொடுமை அரங்கேறியிருக்கிறது.
நாட்டில் அதிகளவுப் பாலியல் வல்லுறவுகளும், அத்துமீறல்களும் நடக்கும் உத்திரபிரதேசத்தில்தான் மனீசா வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறாள். உபியின் ஹத்ரஸ் நகர் அருகே கடந்த செப்தம்பர் 14 ஆம் திகதியன்று அவள் காணாமல்போய் பின்பு வெற்றுடலாக மீட்கப்பட்டிருக்கிறாள்.
மனீசா 19 வயது பெண் என்பதோ, அவள் அழகாக இருக்கிறாள், காது கேட்காதத் தனது வயது முதிர்ந்தத் தாயுடன் தனியாக இருக்கிறாள் என்பதெல்லாம் வல்லுறவு துணிச்சலுக்கான முக்கியமானக் காரணமாக இருந்திருக்கவில்லை. மாறாக அவள் யாரும் கேட்கும், தீண்டும் இடத்தில் இல்லாதவளாகத் தலித்தாக, பார்வையில் பட்டாலேத் தூர விலகிச் செல்லும் சாதியைச் சார்ந்தவளாக இருக்கிறாள். தீண்டப்படாதச் சாதியைச் சார்ந்த தீண்டும் உரிமைப் பெற்ற மேல்சாதிகளின் தீண்டும் உடலாக, பெண் உடலாக இருந்திருக்கிறாள்.
பதினைந்து நிமிடப் பாலியல் வல்லுறவுகள் என்பவற்றில் 99 சதவீதம் பட்டியலினப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாவதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியும். ஒரு சதவீதம் என்பது எதிர்ப்புணர்வு மழுங்கடிக்கப்பட்ட, வலுவற்றப் பெண்ணுடல், என்பதற்காக வல்லுறவுக்கு ஆளாகின்றனர். பட்டியலினப் பெண் என்பது தீண்டுவதற்கானக் கூடுதல் அதிகாரத்தைத் தருகிற அதே சமயம் பெண்ணுடல் ஆணுக்கானது என்ற மனநோய் பிற எல்லாப் பெண்களையும் வல்லுறவின் கீழ் கொண்டு வந்துவிடுகிறது. ஆணின் பாலியல் வல்லாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுகிறது.
மனீசாவை கூட்டுப் பாலியல் செய்தவர்கள் இளைஞர்கள். உ.பி.இன் மேல் சாதியினரானத் தாகூர் வகுப்பைச் சேர்ந்த 19 வயதுக்குள்ளானவர்கள். உபி முதல்வர் யோகிஆதித்யநாத்தும் தகூர் சாதியைச் சார்ந்தவர் என்பதையும் இத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். இன்றையப் பாலியல் மற்றும் ஆணாதிக்க மற்றும் சாதி ஆதிக்கம் என்பவற்றின் நவீன பிரதிநிதிகள். கூட்டு வல்லுறவு செய்ததுடன், மனீசாவை கிட்டத்தட்ட நான்கு கி.மீ தொலைவு வரை இழுத்துச் சென்றுள்ளனர். அவள் கதறி பிறரைத் துணைக்கழைக்காமலிருக்க அவளது நாவைத் துண்டித்தனர். ஆனால் மனீசா வலிதாளமால் தாமாகவே தமது நாவைத் துண்டித்துக் கொண்டதாகக் காவல்துறை அறிக்கை சொல்கிறது. நல்லவேளை அவளது முதுகெலும்பு முறிந்து போனதும் அவளாகவே முறித்துக் கொண்டதாக, அவளது கால் எலும்புகள் முறிந்து போனது எல்லாம் அவளாகச் செய்து கொண்டதாக அறிக்கையில் இருக்கவில்லை. இனி அப்படியான அறிக்கைகள் வெளிவரக்கூடும்.
மனீசாவுக்கு நேர்ந்தத் துயரம் குறித்து அவர்களது உறவினர்கள் அளித்தப் புகாரை வழமைபோல உள்ளுர் காவல் நிலையம் அலட்சியப்படுத்திய நிலையில், அவர்கள் போராட்டத்தில் இறங்கியப் பிறகே முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டது. ஆனால் அதில் கூட்டுப் பாலியல் வல்லுறவு என்று குறிப்பிடப்படவில்லை. அரைகுறை உயிருடன் மீட்கப்பட்ட மனீசா வல்லுறவுக்கு ஆளான அன்று செப்தம்பர் 14 அலிகார் மருத்துவமனையிலும் அதன் பிறகு தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிர் பிரிந்த செப்தம்பர் 29 அதிகாலை வரையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். உயிருக்குப் போராடியக் கொண்டிருந்த நிலையில்தான் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களைக் கைது செய்வதில் அரசும், அதிகாரவர்க்கமும் கொஞ்சமும் கரிசனம் காட்டுவதாக இருக்கவில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதே.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் முதல் தகவல் அறிக்கை கூட்டுப்பாலியல் வல்லுறவு என்பதை பதிவு செய்து கொண்டவுடன் அதிகாரவர்க்கம் தமது வழமையானக் கடமையைச் செய்யத் தொடங்கியது. அதாவது வல்லுறவுத் தொடர்பான அடையாளங்களை அழிக்கத் தொடங்கியது. முதலில் தாய் மற்றும் உறவினர்ளை அவர்களது வீட்டில் சிறைவைத்ததுடன் கிராமத்தினரை வீட்டைவிட்டு வெளியேவரக்கூடாது என எச்சரித்ததுடன் காவல்துறை மனீசாவின் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்து அவசர அவசரமாக கிராமத்திலுள்ள இடுகாட்டில் வைத்து எரித்தனர். மனீசாவின் குடும்பத்தார் அனுமதியுடன் எரிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக அவரது தந்தை, சகோதர் முன்பாக மனீசா உடல் எரியூட்டப்பட்டது.
மனீசாவின் உடலத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாகவே கிராமத்தின் முக்கிய சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தியதுடன் கிராமத்தினர் எவரையும் எரியூட்டப்பட்ட இடத்திற்கு அனுமதிக்கவில்லை. சப்தர் சங் மருத்துவனையில் உடற்கூறாய்வுக்கு முன்பாக சில கைச்சாத்துக்களைப் பெறும் முன்பாக தாம் சகோதரியின் உடலைக் கடைசியாகப் பார்த்தாகவும் மனீசாவின் சகோதரர் தெரிவிக்கிறார்.
மனீசாவின் உடலை தனியாகவும், அவரது தந்தை மற்றும் சகோதரரை பிறிதொரு வண்டியிலுமாக ஏற்றிக் கொண்டுச் சுமார் 200 கி.மி பயணித்து நேராக இடுகாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளது காவல்துறை. அதற்கு முன்பு மனீசாவின் தந்தையும் சகோதரரும் வரும் வண்டி தமாதமானதால் பிரதானச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வானில் இருந்த மனீசாவின் உடலை பார்ப்பதற்கு அவளது தாய் மற்றும் உறவினர்கள் எவ்வளவு கெஞ்சியும் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.
முகத்தையாவதுப் பார்த்துவிடுகிறோம் என்று அவரது தாய் கண்ணீர் விட்டுள்ளார். காவல்துறை வாகனத்தின் முகப்பில் அவர் தலையை மோதிக் கொண்டு அழும் காட்சிகள் சமூக ஊடகங்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளன. கிராமத்துப் பெண்கள் அதிகாரிகளின் கால்களில் விழுந்து கதறி புரண்டும் காவல்துறை அனுமதிக்கவில்லை. ‘பத்துமாதம் சுமந்து பெற்ற என் மகளை யாருமற்ற அநாதைப் போலக் காவல்துறை ஏன் எரிக்க வேண்டும் அவர்களுக்கு யார் அந்த உரிமையைத் தந்தது?” என்ற மனீசாவின் தாயாரின் கேள்விக்கு யாதொரு பதிலுமிருக்கவில்லை.
முன்னதாக மனீசாவின் குடும்பத்தினரைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட் அடங்கியக் குழு, அவரது இறுதிச் சடங்கிற்கான அனைத்து உதவியும் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்ததெல்லாம் மனீசாவின் சிதையோடு சேர்ந்து எரிந்துபோயிற்று.
முதலில் வழக்குப்பதிவு செய்வதற்கே போரட்டம் நடத்த வேண்டிய நிலையிலேயே மனீசாவின் குடும்பத்தினரும், அவர்களது கிராமத்தினரும் இருந்தனர். பின்னர் உடல் அடக்கத்திற்கும் அதற்குப் பிறகு முறையான விசாரனை நடத்தக் கோரியும் அவர்கள் போராடிக் கொண்டுள்ளனர். இன்னும் அவர்கள் பல நாட்கள் வீதியில்தான் கழிக்க வேண்டியிருக்கும். இந்தியச் சாதியச் சனநாயகத்தில் அது ஒன்றுதான் அவர்களுக்கான இறுதி வழியாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஒடுக்கப்படுவதற்காகவே பிறந்தவர்கள். மனீசாக்களின் உடல்கள் மேல்சாதிகள் புணரவும், ஆண்கள் என்றால் கூலி வேலை செய்யவுமானவை.
மனீசாவின் கிராமமான பூல்கரி இன்னும் ஹத்ரஸ் நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் பலவற்றில் வால்மீகி என்ற ஒடுக்கப்பட்டச் சாதியைச் சார்ந்தவர்கள் வசிக்கிறார்கள். மனீசா வால்மீகி சாதியைச் சார்ந்தவர். அங்கு ஆதிக்கசாதியினரானத் தகூர் மற்றும் பார்ப்பனர் சாதிக்கான ஏவலர்களாகச் சுயசார்பு, சுயமரியாதை அற்றவர்களாக வாழ கட்டயாயப் படுத்தப்படுபவர்கள் வால்மீகிகள். திட்டமிட்ட வகையில் அவர்களது எண்ணிக்கை ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மையாகவே வைக்கப்பட்டிருக்கிறது. மனீசாவின் குடும்பத்தையும் சேர்த்து பூல்கரியில் மொத்தம் நான்கு குடும்பத்தவர்களே அங்கு வசிக்கிறார்கள். வசிக்க வேண்டும்.
வால்மீகியினர் வாழும் பகுதிகள் தாகூர், பார்ப்பனர் வீடுகளைவிட உயரம் குறைவானதாக இருக்க வேண்டும். அவர்கள் ஏவும் பணிகளை செய்ய வேண்டும். சொந்தமாக நிலம் வைத்துக் கொள்ள முடியாது. வயல்வெளியின் நடுவில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ வேண்டும். அவர்கள் எலிகளையே உணவாகக் கொள்ள வேண்டும். எலி பிடிப்பது அவர்களது தொழிலாக இருக்க வேண்டும். இதுவெல்லாம் எந்த காலம் என்று கேட்பவர்கள் மனீசாவின் மீதான கூட்டுப் பாலியல் வல்லுறவை, மனிசாவை அவரது சாதியை, அவரது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்.
ஆதிக்கச் சாதியிரைவிட சற்று உயரத்தில் அவர்களது வாழ்வோ, வீடோ இருக்க அனுமதியில்லை. இது இந்திய சட்டத்தின்படியான, நீதியின்படியான விதிமுறைகளா என்ற கேள்வி எழக்கூடும். அது மனீசாவுக்கு வழங்கப்படும் நீதியைப் பொறுத்தது என்றாலும், மனீசா போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கானச் சமூக, சட்ட நீதியை மனு முன்பே எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அது என்றும் நடைமுறையில் இருப்பதைத்தான் மனீசாவின் சாவு நமக்குச் சொல்கிறது. சமூக வாழ்வின் நடை முறை சொல்கிறது. இந்தியச் சட்டமும் பல சமயங்களில் அதை நிறுவுகிறது.
மனு வகுக்கும் நால்வருணப் பிரிவிற்கு உட்படாத அதற்கு வெளியிலாக இருக்கும் சூத்திரனுக்கான மனுவின் எல்லா சட்டங்களும் எழுதியும், எழுதப்படாமலும் மனீசாவை, அவரது சாதியை, சமூகத்தை அவரது குடிசையை, அவரது உணவை, அவரது கல்வியை, அவரது வாழ்வைத் இன்றும் தீர்மானித்தப்படியேதான் இருக்கின்றன. இருக்கும்.
வால்மீகியினர் எலி பிடிக்கிறார்கள். அதனை சாப்பிட்டே ஆகவேண்டும். அவர்கள் எலி வளை போன்ற வீடுகளிலேயே வசிப்பதுடன் வீட்டிற்குள் குனிந்து ஒருவர் மட்டுமே உள்ளே செல்லும் வகையிலேயே வாசல்கள் அமைந்திருக்க வேண்டும். அந்த முதுகெலும்புகள் எதன் பொருட்டும் நிமிர்ந்துவிடக்கூடாது. இது தாகூர், பார்ப்பனர் என்ற மேல்சாதிக் கூட்டு ஆதிக்கத்தின் படியான நீதி மட்டுமல்ல, மனுவின் சட்டமும் அதை நடமுறை படுத்தும் மனுவின் வாரிசுகளாகவும் அவர்கள் இருக்கிறார்கள். மனுவின் சட்டத்தை மீறுவது என்பது மதத்தை மீறுவது. சாதியை மீறுவதாகும் எனவே மனிசாவுக்கு வழங்கப்பட்டது மனுவின் தண்டனை. மனுவின்படியான நீதி. இதில் வேறுவகையிலான நீதியையோ, தீர்ப்பையே எதிர்பார்க்க முடியாது.
ஹத்ராசைச் சுற்றியுள்ள ஆதிக்கச் சாதியைச் சார்ந்த 12 கிராமத்தினர் மனீசாவின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளதுடன், அவர்களுடன் பொதுச்சமூகம் உரையாடுவதற்கும், சந்திப்பதற்கானத் தடைகளையும் விதித்துக் கொண்டுள்ளனர். மேலும் மனீசா கூட்டு வல்லுறவுக்கு ஆதரவாகத் தாகூர் மற்றும் பார்ப்பனச் சதியினர் பேரணி சென்றதுடன், தேசியக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும் செய்கின்றனர். மனீசாவின் வீட்டிற்கு முன்பு திரண்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். தேசியக்கொடி என்பது அவர்கள் சொந்த உடை போல அதை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களது தேசம். அவர்களது கொடி, அவர்களது நிலம், அவர்களது பெண்கள். இதை இன்றைய நாகரீக அரசும் வேடிக்கைப் பார்க்கவே செய்கிறது. செய்யும்.
ஏனெனில் உ.பி. இல் ஆளும் யோகிஆதிநாத் தலைமையிலான அரசோ, நடுவண் அரசோ இந்தியப் பாராளுமன்றச் சட்டத்தின், நீதித்துறை நிறுவனங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்த வரவில்லை. நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் மனுவின் ஆட்சியை நிறுவுபவர்கள். நிறுவிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி என்பது அவர்களைப் பொறுத்தவரை மனுவின் ஆட்சியே.
பெண்கள், ஆடவர் துணையின்றி பொது வெளியில் நடமாடுவதை குற்றம் என்கிறது மனு. அவர்கள் காமம் மிகுந்தவர்கள் கிடைக்கும் வாய்புள்ள போதெல்லாம் பிற ஆடவரைக் கூடக் கூடியவர்கள் என்கிறார். தமக்கென்று பெண்கள் தனியான விருப்பங்களைக் கொண்டிருக்கக்கூடாது. ஆடவர் விருப்பங்களை மட்டுமே நிறைவு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் என்கிறது. அதனால்தான் மனீசாவுக்கு நேர்ந்து கொடுமை, பெண் உடலின்மீதான அத்துமீறல், மனித உரிமை மீறல், மானுட பண்புக்கு எதிரானது என்பதெல்லாம் அவர்களது உலகால் நிராகரிக்கப்படுவதுடன், முதல் கேள்வியாக அவள் ஏன் தனியாக அங்கே போனாள்?, போகிறாள்?. ஏன் ஆண்களைத் தூண்டும் வகையில் ஆடைகளை அணிகிறாள் என்ற கேள்விகளே முன்வைக்கப்படுகிறது.
இவை ஏதோ பார்ப்பனர், தாகூர் அல்லது சன சங்கத்தை நிறுவிய சாவர்கர், கோல்வால்கர், யோகிஆதித்யநாத் போன்றோரின் கேள்விகள் அல்ல. அது மனுவின் கேள்விகள். மனுவின் நீதிகள். மனுவின் பிள்ளைகள் அதைத்தான் கேட்பார்கள், கேட்கிறார்கள்.
மனு வரையறுக்கும் வாழ்வுக்குள் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட வால்மீகி சாதியைச் சேர்ந்தவர்களுக்கு என்ன வாழ்கை இன்றைக்கும் இருக்கிறது.? மனு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களது வாழ்க்கையை தண்டனையாகவே, வாழ, சகிக்க வொண்ணா வாழ்வாகவே வரையறுக்கிறான். நான்கு வருணத்திற்கு அப்பால் வாழ கட்டயாப்படுத்தப்பட்ட அவர்களது தொழில் எலி பிடித்து உண்ண வேண்டும் என்பது. அந்தத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்பது இரவில் மட்டுமே ஒதுக்குப் புறமாக நடமாட உரிமை உள்ளதென்பது.
இவர்கள் உலோகத்தாலானப் பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது, பசு போன்ற புனித விலங்குகளை வளர்க்ககூடாது.(மனு10;52)
பிணத்தின் ஆடைகளையே உடுத்த வேண்டும், இரும்பு, பித்தளை அணிகலன்களையே அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும் பிறரிடம் தொழிலுக்காக வேண்டி நிற்றல் வேண்டும்(மனு10;52)
இந்த வாழ்வுக்கு மேம்பட்ட வாழ்வு ஏதேனும் வால்மீகி அல்லது அவர்களைப் போன்றோருக்கு இன்றைக்கும் வாய்த்துள்ளதா? சுதந்திர இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ளதா? அதற்கான சனநாயக வெளி இன்றுமிருக்கிறதா? இல்லை என்பதையே மனிசாவின் வல்லறவு நமக்குச் சொல்கிறது வால்மீகிகள் வாழ்வும் போராட்டமும் நமக்குச் சொல்கிறது.
கூட்டு வல்லுறவுக்கு ஆளான பெண்ணிற்கு நீதி கேட்கும் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அதற்கு எதிரான குரல்கள் வலுப்படுத்தப்படுகின்றன. அப்படி குரல் உயர்த்தும் ஆதிக்கச் சாதி, மத்தைச் சார்ந்த வீட்டுப் பெண்களுக்காகவும் சேர்த்துதான் மனீசா செத்துப்போயிருக்கிறாள். ஆணாதிக்கம் அவளை நாவறுத்து பேசவிடாமல் செய்திருக்கிறது. அவளது சாவு. ஆணாதிக்க முகத்தில் உமிழப்பட்ட நிரந்தர எச்சில். ஆனால் ஆதிக்கவாதிகள் எப்போதுமே நாணச் சுரணையற்றவர்கள்.
நாட்டின் எதிர்கட்சியின் முக்கியமான இரண்டு தலைவர்களான பிரியங்காகாந்தி, ராகுல்காந்தி போன்ற நவீன சிந்தனையாளர்களுக்கு அரசியலிலோ அல்லது ஹத்ராசில் மனீசாவின் குடும்பத்தைச் சந்தித்துப் பேசவோ இடமில்லை. அனுமதியில்லை. அவர்கள் யோகி ஆதித்யநாத்தின் காவல்துறையால் கீழே வீழ்த்தப்படுகிறார்கள். வீழ்ந்து கிடந்த ராகுல்காந்தி நான் வீழ்த்தப்பட்டதைவிட நாடு வீழ்த்தப்படுவது கண்டு வருந்துகிறேன் என்கிறார். பிரியங்காகாந்தி மனீசாவின் தாயாரைச் சந்தித்து ஆறுதலாக அணைத்துக்கொள்கிறார். எனது ஆட்சியைக் கலைப்பதற்கு எதிர்கட்சிகள் செய்யும் சதி என்றும், சர்வதேச அளவில் இந்த சதி உள்ளதாகவும் உ.பி.முதல்வர் யோகிஆதித்யநாத் குற்றம் சாட்டுகிறார். பெண்களை வல்லுறவு செய்துதான் ஆட்சிகள் கலைக்கப்பட வேண்டும் என்றால் எதிர்கட்சிகளுக்கு வேறு வேலைகளே இருக்க முடியாது. சர்வதேச சதி என்பதற்கும் இதுவே பொருந்தும். ஆனால் கலவரங்களை உருவாக்கிப் பெண்களை வல்லுறவு செய்தே ஆட்சியைப் பிடித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான் இப்படி பேசமுடியும், முடிகிறது. இவர்களது மதம், சாதி, அரசியல், அதிகாரம், ஆன்மிகம், எல்லாம் பெண்களின் யோனியில் தங்கியிருப்பதுதான் பேரவலம். இந்தியப் பெண்களின் பெருந்துயரம். ஆனால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறைநிகழும் பாலியல் வல்லுறவு ஒவ்வொன்றும் நினைவிலிருந்து அகன்றுவிடுவதை மனுபார்த்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் கடந்து போய்விக்கூடும் என்பது மனுவிற்குத் தெரியும். மனு ஒருவேளை சிரித்துக் கொள்ளக்கூடும்.
நிர்பயாவுக்கு ஏறக்குறைய இந்த நாடே கொதித்தெழுந்தது. நிர்பயா மேல்சாதிப் பெண்ணாக இருந்தாள். ஆனால் நிர்பயாவுக்கான நீதியும் கூட எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு நீதி வழங்குங்கள் என்றுதானிருந்தது. இதுவும் மனுவின் குரல்தாம். மனு மேல், கீழ் என்று பெண்களைப் பிரிக்கவில்லை. மொத்தப் பெண்களும் சூத்திரனுக்கும் கீழ்தான் என்கிறான். ஆனால் அதே பெண் உயர்சாதியினனின் உடமை என்று வரும்போதே அவளுக்கான தகுதி உயர்க்கிறது. அவனது உடைமைப் பொருள் எனும்போது மதிப்புக்கூட்டப்பட்டப் பெண்ணாகிறாள்.
ஆனால் மனு பெண்ணை, பெண்ணாகவே, சூத்திரனுக்குக் கீழாகவே பார்க்கும் பார்வையிலிருந்தே இந்த சமூகம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. கூடாது.
பெண்களையும் சூத்திரனையும் கொல்வது மிகக்குறைந்த பாவம் என்று மனுவின் நீதி வரையறை செய்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாலியல் வல்லுறவு செய்தவன் எந்த சாதியைச் சாந்தவன் என்று பார்த்தே அவனுக்கானத் தண்டனையை அது பேசுகிறது. மேல்சாதிப் பெண்ணை வல்லுறவுக் கொள்ளும் சூத்திரனுக்கு மரணத் தண்டனையை விதிக்கும் மனு அதே மேல்சாதியினன் சூத்திரப் பெண்ணை வல்லுறவுக் கொண்டால் அவனைக் காயமின்றி தப்புவித்து பிறிதொரு ஊருக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்ககோருகிறது.( மனு-அ-8, சு-380)
மனு நீதி எங்கே இருக்கிறது? என்பவர்கள் சமூகத்தில் சாதியின் இடம், மதத்தின் இடம் பெண்களின் இடம் என்ன என்பதிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும். வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால் மதம் இருக்கிறது என்று பொருள். சாதி இருக்கிறது என்று பொருள், மனீசா போன்ற பெண்களுக்கு சாதி, மதம் ஆணாதிக்கம், இவற்றின் பெயரால் வல்லுறவு நேர்கிறது என்றால் மனு இன்னும் சாகவில்லை என்று பொருள்.
லக்னோ நீதிமன்றம் மனீசா உயர்சாதி என்றால் நீங்கள் இப்படி நடந்து கொள்வீர்களா என்று அதிகாரவர்க்கத்தைப் பார்த்துக் கேட்கிறது?. ஆக இரண்டு சமூகமும், இரண்டு நீதியும், இரண்டுத் தீர்ப்புகளும் இருக்கிறது என்பதை இன்றைய நீதிமன்றமும், நீதியும் ஒப்புக் கொள்கிறது. இதே கேள்வி யார் கைகளுக்குப் போகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான பதிலும், நீதியும் கிடைப்பதாக இருக்கும்.
மனீசா உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர் இப்படி சொல்கிறார்.
“லேசானப் புன்னகை மற்றும் கருமையான நீண்ட கூந்தல் கொண்ட அந்த டீன்ஏஜ் பெண்ணின் உடலில் மிஞ்சியது செவ்வக வடிவில் குவிந்திருந்த சாம்பல் மட்டுமே”.
மனீசா வெறும் சாம்பல்குவியல் அல்ல இரத்தமும், சதையுமாக நம்மிடையே வாழ்ந்த ஒரு பெண், மனுஷி. பல இந்தியப் பெண்களில் அவளும் ஒருத்தி என்பதை அவளுக்காக வழங்கப்படும் நேர்மையான, மெய்யான, நீதி மட்டுமே அதை அழுத்தமாக மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கமுடியும். இருக்கும்.