த யங் கார்ல்மார்க்ஸ்
இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டில் கார்ல்மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மேரிகாப்ரியல் எனும் பெண்மணி அதற்கு மிகப்பொருத்தமாக ‘காதலும் மூலதனமும்’ எனப் பெயரிட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகளால் எழுதப்பட்ட பெரும்பாலுமான வரலாறுகள் கார்ல்மார்க்சை ஒரு அறிவுஜீவி மற்றும் புரட்சியாளர் எனும் வகையிலேயே முன்வைத்தன. அவரது வாலிப வயதின் சேட்டைகளும், குடிப்பழக்கமும், அடிதடி ரகளைகளும், சிறை செல்தலும், மனோரதியக் காதல் கவிதைகளும், புனைவு மொழியில் நாவலும் எழுதிய மார்க்சை இவற்றில் நாம் காணமுடியாது.
தனது கருத்து எதிரிகளைச் சகியாத, அவர்களை நேருக்கு நேர் பண்படுத்துகிற, பிறரைச் சட்டென்று புறக்கணிக்கிற, அதீதக் காதலும் காமமும் நட்புணர்வும் தோழமையும் கொண்ட உன்னதமான அதேவேளை சாதாரணமானஆசாபாசங்கள் கொண்ட மார்க்ஸ் எனும் மனிதனை இந்த வரலாறுகளில் நாம் காணமுடியாது. அறிவு மேதைமையும் கொண்டாட்டமும் துயரும் தோழமையும் நிரவிய முழுமையான ஒரு மனிதாய வாழ்வை மார்க்ஸ் வாழ்ந்திருக்கிறார்.
மார்க்சின் மனைவியான ஜென்னிமார்க்ஸ் 1881 ஆண்டு டிசம்பர் 2 ஆம்திகதி மரணடைகிறார். அவர் மரணமுற்று இரண்டு ஆண்டுகளில் 1883 பிப்ரவரி 14 ஆம் திகதி கார்ல்மார்க்ஸ் மரணமுறுகிறார். மார்க்ஸ் மரணமுற்ற இரண்டு ஆண்டுகளில் எங்கல்ஸ் மரணமுறுகிறார். ஜென்னி கார்ல்மார்க்சைவிட 4 ஆண்டுகள் மூத்தவர். எங்கெல்ஸ் மார்க்சை விட 2 வயது இளையவர். மார்க்ஸ் தனது 64 வயதிலும் ஜென்னி தனது 68 ஆம் வயதிலும் எங்கெல்ஸ் தனது 75 ஆம் வயதிலும் மரணமுறுகிறார்கள்.
42 வயதே வாழ்ந்த அயர்லாந்து தொழிலாளி வர்க்கப்பெண்ணும் எங்கல்சின் காதலியும் ஆன மேரிபர்ன்ஸ் 1864 ஆம் ஆண்டு மரணமுறுகிறார். கார்ல்மார்க்ஸ் – ஜென்னி தம்பதியர்க்கு 7 குழந்தைகள் பிறந்து அவற்றில் 4 குழந்தைகள் மரணமுற மிஞ்சிய 3 பெண் குழந்தைகளான எலியனார், ஜென்னி, லாரா போன்றவர்களில் எலியனாரும் லாராவும் தற்கொலை செய்து மரணமுறுகிறார்கள். மார்க்ஸ் – ஜென்னிதம்பதியரின் பணிபெண்ணான ஹெலன்டமுத் கார்ல்மார்க்ஸ் உறவில் ஹென்றி எனும் பெயரில் ஒரு ஆண்மகன் பிறந்ததாக அவரது பெரும்பாலுமான வரலாற்றாசிரியர்கள் (பிரான்சிஸ்வீன், அலக்சிகொலின்னிகோஸ், மேரிகாப்ரியல்) போன்றோர் ஏற்கிறார்கள். எங்கல்சின் காதலி மேரிபார்ன்ஸின் மரணத்தின்பின் அவரது சகோதரியான லிஸ்ஸிபார்சுடன் வாழ்ந்த எங்கெல்ஸ், லிஸ்ஸி அவர் தனது 51 வது வயதில் 1878 ஆம்ஆண்டு மரணமுறுவதற்கு முதல்நாள் லிஸ்ஸியின் மத நம்பிக்கையை மதித்து அவரை மணந்துகொள்கிறார். எங்கெல்சுக்குக் குழந்தைகள் என ஏதும் இல்லை. தனது சொத்துக்களை மார்க்சின் குழந்தைகளுக்கு எங்கெல்ஸ் எழுதிவைத்தார்.
உலகெங்கிலும் கார்ல்மார்க்சின் 200 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் தருணத்தில், கார்ல்மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியாகிய 150 ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வரும் தருணத்தில், மார்க்சின் இதுவரை வெளியாகாத எழுத்துக்கள் முழுமையாகத் தொகுக்கப்படும் முனைப்புகள் உலகில் வேகப்பட்டிருக்கும் தருணத்தில், தென்அமெரிக்கநாடான ஹைதியைச் சேர்ந்த கறுப்பின இயக்குனரான ராவுல்பெக்கின் ‘த யங் கார்ல்மார்க்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
திரைப்படம் கார்ல்மார்க்சின் வாழ்வில் 1943 ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிய 6 ஆண்டுகள் காலத்தை நிகழ்களமாக எடுத்துக்கொள்கிறது. இது புரட்சியாளர்களின் வாழ்வு குறித்த ராவுல்பெக்கின் மூன்றாவது திரைப்படம். ஆப்ரிக்கப் புரட்சியாளரான லுமும்பா மற்றும் ஆப்ரோ அமெரிக்கப் புரட்சியாளரான ஜேம்ஸ்பால்ட்வின் பற்றியவை அவரது பிறிதிரண்டு திரைப்படங்கள்.
உலகத்திரைப்பட வெளியில் மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற திரைப்படக்கலைஞர்கள் உலகத்தின் உழைக்கும் மக்களின் வாழ்வு தழுவி உன்னத சிருஷ்டிகளைத் தந்திருந்தாலும், உலகப் புரட்சிகள் குறித்து நூறுநூறு திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், உலகப் புரட்சியாளர்களான லெனின், டிராட்ஸ்க்கி, ஸ்டாலின், மாவோ, ஃபிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா, பாட்ரிஸ் லுமும்பா, ரோஸாலுக்சம்பர்க், கிராம்சி போன்றோரது வாழ்வு குறித்த திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், மார்க்சியப் பிதாமகர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் அவர் தம் துணைவியர்கள், அவர்தம் சமகாலத்தவர்கள் குறித்த வரலாற்று ரீதியான திரைப்படம் எனஎதுவும் உலகு தழுவி இதுவரை வெளியாகாத ஓருசூழலில் தான் ராவுல்பெக்கின் ‘த யங் கார்ல்மார்க்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
உலகு தழுவி பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம் மூன்றுமொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு முன்பாக, உலகுக்கு எட்டாத வகையில், சோவியத் யூனியனிலும் கிழக்கு ஜெர்மனியிலும், ரஸ்ய-ஜெர்மன் மொழிகளில் தயாரிக்கப்பட்ட மார்க்ஸ்-எங்கல்ஸ் வாழ்வு குறித்த மூன்று முழுநீளத் திரைப்படங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு சப்டைட்டில்கள் போடப்படாததால் இன்றுவரை சோவியத்யூனியன், கிழக்குஜெர்மன் அல்லாது இந்த நாடுகளுக்கு வெளியில் இந்தப் படங்களைப் பார்த்தவர் எவருமிலர்.
1940 ஆண்டு கிரிகோரிகசின்ஸ்சோவ் மற்றும் லியோனிட்டிராபர்க் என இரு ரஸ்ய இயக்குனர்கள் மார்க்ஸ் வாழ்க்கை சார்ந்து ஒருதிரைப்படத்தை எடுக்க முன்றனர். ‘போதிய பெருமதியுடன்’ அந்தப்படம் உருவாகவில்லை எனும் காரணத்தினால் அந்த முயற்சி அரைகுறையாக முடிந்து போனது. முதன்முதலாக, 1965 ஆம் ஆண்டு ‘எ இயர் இன் எ ஃலைப்’ டைம் எனும் பெயரில் 1848-49 ஆண்டுகளின் நிகழ்வுகளையொட்டி இரண்டு பாகங்களிலான ரஸ்யமொழிப்படம் பிரபல இயைமைப்பாளரான சஸ்டகோவிச்சின் இயைமைப்பில் வெளியானது. இரண்டாவது திரைப்படம் கிழக்குஜெர்மனியில் 1968 ஆம் ஆண்டு வெளியான ‘மூர் அன்ட் த ரேவன்ஸ் ஆப் இலண்டன்’. மார்க்சின் கறுப்பு நிறத்தைக் குறிப்பிடும் ‘மூர்’ எனும் சொல் படத்தின் தலைப்பில் பாவிக்கப்பட்டது. இலண்டன் தொழிற்சாலையில் வேலை செய்யும் இண்டு குழந்தைத் தொழிலாளர்களுக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் புனைவுபடமாக இது உருவாகியிருந்தது.
மூன்றாவது படம் 1980 ஆம் ஆண்டு ரஸ்ய-கிழக்கு ஜெர்மன் கூட்டுத்தயாரிப்பில் வெளியான ‘கார்ல்மார்க்ஸ் :த ஏர்லி இயர்ஸ்’ திரைப்படம் தாலா ஒரு மணி நேரங்கள் கொண்ட 7 பாகங்கள் கொண்ட படமாக இருந்தது. 1835-1848 ஆண்டுகளிலான கார்ல்மார்க்சின் வாலிப நாட்களின் வாழ்வைச் சொல்வதாக இந்தப்படம் அமைந்தது. பரவலாக வெளிஉலகை எட்டியிராத இந்த முழுநீளப்படங்கள் தவிர கார்ல்மார்க்ஸ் குறித்து ‘மார்க்ஸ்ரீலோடட்’எனும் ஆவணப்படமொன்றை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேசன்பேக்கர் இயக்கியிருக்கிறார். இவர் 2018 ஆம்ஆண்டு ‘மார்க்ஸ் ரிட்டர்ன்ட்’ என ஒருநாவலையும் எழுதியிருக்கறார். மார்க்சின் 200 ஆவது ஆண்டை ஒட்டி நூற்றுக்கணக்கில் வாழ்க்கை வரலாறுகளும் ஆய்வுநூற்களும் வந்திருந்தாலும் திரைப்படவெளியில் முதன்முதலில் உலகுதழுவிய ஒரு படமாக வெளியாகியிருப்பது ராவல்பெக்கின் ‘த யங் கார்ல்மார்க்ஸ்’ திரைப்படம்தான்.
‘த யங் கார்ல் மார்க்ஸ்’ திரைப்படக் கதைக்கானஆதாரங்கள் இரண்டு. ஆங்கில எழுத்தாளரான பிரான்சிஸ்வீன் எழுதிய ‘கார்ல்மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாற்று நூல். மற்றது ‘மார்க்ஸ்-எங்கல்ஸ் கடிதங்கள்’. வசனங்கள் நூற்றுக்கு நூறு வரலாற்றின் அடிப்படையில் ஆவணப்படுத்தப்பட்ட எழுத்துக்களில் இருந்து கையாளப்பட்டிருக்கிறது. கதையின் புனைவுத்தன்மை என்பது உணர்ச்சிவசமான மானுட நாடகங்களை, சரீர உறவுகளை ஒளியாலும் பிம்பங்களாலும் சப்தங்களாலும் கையகப்படுத்தும்போது எடுத்துக்கொண்ட படைப்புச் சுதந்திரம்தான்.
முதலில் படக்கதையை எழுதிமுடித்த போது மார்க்சின் பிறப்பு முதல் லண்டனில் அவரது இறப்பு வரையிலான மார்க்ஸ் குறித்த முழுமையான ஒருபடம் என்பதாகவே எழுதி முடிக்கப்பட்டது. படத்தின் நீளம் ஏழுமணி நேரங்களாகத் திட்டமிடப்பட்டது. சேகுவேரா பற்றிய சோடர்பர்க்கின் திரைப்படத்தின் அசல்நீளம் 5மணி 30 நிமிடம் என்பதையும் பிற்பாடுஅது 2 பாகங்களாக வெட்டப்பட்டு வெளியானது என்பதையும் ஞாபகம்கொண்டால் இந்தத்திட்டமிடுதலைப் புரிந்து கொள்ளமுடியும்.
பிற்பாடு, மூலதனம் திரட்டுதல் என்பது படத்தின் நீளத்தையும் கால அளவையும் வரையறைப்படுத்துதல் எனத்தேர்ந்தநிலையில் மார்க்ஸ் வாழ்வின் 6 ஆண்டுகளை எடுத்துக்கொள்வது என்றும், அவரது தத்துவம் மற்றும் மதம் சார்ந்த விமர்சன ஈடுபாடுகள் எவ்வாறு பொருளாதாரமும் அரசியலும் சார்ந்ததாக உருவாகி, ஒரு புரட்சிகரக்கட்சியைக் கட்டும் நோக்கில் வளர்ச்சிபெற்றது என்பதுடன் அறுதிப்படுத்திக்கொள்வது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
‘த யங் கார்ல்மார்க்ஸ்’ எனும் தலைப்பு மார்க்ஸின் அறிவுப்பரிமாணம் குறித்த ஐரோப்பிய விவாதங்களைக் கவனித்து வந்திருப்போர்க்கு ஒரு காலத்தருணத்தை ஞாபகமூட்டக்கூடும். கார்ல்மார்க்ஸ் தத்துவத்திலும் மதம்சார் ஆய்விலும் கவனம் செலுத்திய ஹெகலிய மற்றும் அந்நியமாதலை மையம் கொண்ட ‘இளைய மார்க்சின்’ நாட்கள் எனவும், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் என்பதை மையப்படுத்திய ‘முதிய மார்க்சின் மூலதனநாட்கள்’ எனவும் மார்க்சை இரண்டு மார்க்ஸ்களாகப் பார்த்த அல்தூசரை ஒருவர் ஞாபகம் கொள்ளமுடியும்.
எங்கெல்சும் மார்க்சும் பாரிஸ் மதுவிடுதியில் செஸ் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியில், மார்க்சிடம் எங்கல்ஸ் ‘தத்துவம், மதம்போன்ற உனது எழுத்துக்களுக்கு அப்பால் நீ ஆங்கிலப் பொருளாதாரம் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்’ எனச்சொல்வதையும், ‘கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை’ எழுதி முடிக்கும் வரை மார்க்சும் எங்கல்சும் கோட்பாட்டு இரட்டையர்களாகச் செயல்பட்டதையும் இங்கு கூடுதலாக நினைவு கூரலாம். மார்க்சியத்தை நடைமுறைக்கோட்பாடு – பிராக்சிஸ் – எனக் கொள்வோமாயின் மார்க்ஸ் வாழ்வின் இருநடைமுறைச் சாதனைகள் என ‘கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை’ யையும், முழுமையுறாததாயினும் அவரது ‘மூலதனம்’ நூலையும் நாம் சொல்லமுடியும். ‘கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை’யுடன் இளைய மார்க்சின் காலம் நிறைவடைகிறது. மூலதனத்துடன் முதியமார்க்சின் ‘சிந்திப்பதை நிறுத்திக்கொண்ட’ காலம் நிறைவடைகிறது.
‘த யங் மார்க்ஸ் திரைப்படம்’ கார்ல்மார்க்சின் தனிப்பட்டவாழ்வு அல்ல. அது இரு நண்பர்களதும் அவர் தம்துணைவியரதும் வாழ்வு. ஓரு மாபெரும் புரட்சிகரச் செயல்போக்கில் எவ்வாறு ஆண்களும் பெண்களும் இணைவதால் அது முழுமையடைகிறது என்பதைப் படம்சொல்கிறது.
மேரிபர்ன்சின் வாழ்ந்துபட்ட தொழிலாளி வர்க்க வாழ்வும் அவரது நேரடி ஆய்வு உதவியும் இல்லையெனில் எங்கல்சினால் ‘த வொர்க்கிங்கிளாஸ் கன்டிஷன் இன் இங்கிலாந்து ’ நூலை எழுதியிருக்கமுடியாது. அந்த நூலை எங்கெல்சிடம் மார்க்ஸ் விதந்து பேசும்போது அந்தநூலில் இருதளங்கள் இருக்கிறது. ஓன்று, முதலாளியச் சுரண்டல் தன்மை தொடர்பானது. இரண்டாவது, தொழிலாளி வர்க்க வாழ்பனுபவம் தொடர்பானது. ‘முதலாவதை முதலாளி மகனாக நீ உனது வாழ்வு அனுவத்திலிருந்து பெற்றிருக்கமுடியும். இரண்டாவது எப்படி?’ எனும் போது ‘அது ஓரு காதல்கதை’ என்கிறார் எங்கல்ஸ்.
மார்க்சின் சிக்கலான கோணல்மானலான கையெழுத்தை வாசிக்க முடிந்தவர் மூவர். ஜென்னி, அடுத்து எங்கல்ஸ், மூன்றாவதாக மார்க்சின் இளையமகள் எலியனார். மார்க்சின் கட்டுரைகளையும் நூற்களையும் அவர் வாழ்ந்தவரை படியெடுத்து அதனை அச்சுக்கு அனுப்பியவர் ஜென்னி. ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் அசல் பிரதியின் இடையிடையே ஜென்னியின் சொந்தக் கையெழுத்து இருப்பதைத்தான் பார்த்ததாகச் சொல்கிறார் இயக்குனர் ராவுல்பெக்.
புரூதோன், பகுனின் உட்பட அனாரச்சிஸ்ட்டுகளினுடனான மார்க்சின் விவாதங்களில் உடனிருந்து விவாதித்தவர் ஜென்னி. ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் பின் ‘கம்யூனிஸ்ட் லீக்’ ஆகப் பரிமாணம் பெற்ற ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ அமைப்பை மார்க்ஸ்-எங்கல்சுக்கு அறிமுகப்படுத்தியவர் மேரிபர்ன்ஸ். மார்க்ஸ் எங்கல்ஸ் என இருவரதும் கோட்பாட்டுச் செயல்பாடுகளில், புரட்சிகர அமைப்பைக் கட்டும் செயல்பாடுகளில் இரண்டரக்கலந்து செயல்பட்டவர்கள் ஜென்னியும் மேரிபர்ன்சும். உடலும் உணர்வும் சிந்தையும் கருத்தும் இணைந்து செயல்பட்ட மகத்தான மனிதர்களாக இந்த நால்வரும் ‘த யங் மார்க்ஸ்’ படத்தில் உயிர் பெற்றிருக்கிறார்கள்.
படத்தின் முதல் காட்சி 1843 ஆம் ஆண்டின் ஒரு நாளில் ஜெர்மனியில் ‘ரெய்னிச்ஜூடுங்‘ பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் நடக்கும் விவாதங்களையும், மரத்திலிருந்து உலர்ந்து விழுந்த சுள்ளிகளைச் சேகரிக்கும் வறிய மக்களையும் அவர்களை பிரஸ்ய அரசின் குதிரைப்படையினர் வேட்டையாடும் காட்சிகளையும் இடைவெட்டிக் காட்டுகிறது. மார்க்சின் கோட்பாட்டு வாழ்வில் அந்தச்சம்பவமும் அதையொட்டி ‘ரெய்னிச்ஜூடுங்’ பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரையும் தொடர்ந்து நடந்த சம்பவமும் திருப்பு முனையாக அமைந்த சம்பவம்.
நிலம், உடைமை, பொருளாதாரம், சட்டம், உரிமை, போராட்டம் குறித்த பொருளாயத ரீதியிலான மார்க்சின் ஆய்வு எழுத்துக்களின் முதல்படி இது எனலாம். எங்கல்ஸ் மார்க்சுடனான பிற்பாடான உரையாடலில் சொல்கிறபடி ‘ஹெகலை காலில் ஊன்றி நிற்க வைத்த’, அல்லது புருதோன் மார்க்சிடம் ‘நீ ஹெகலியர்’ எனும்போது மார்க்ஸ் பதிலாக ‘அல்ல பொருள்முதல்வாதி’ எனச்சொல்கிறபடி ஹெகலின் கருத்து முதல்வாதப் பண்பிலிருந்து முறித்துக் கொண்ட மார்க்ஸை அன்று அவர் அந்தக் எழுதிய கட்டுரையே உருவாக்கியது. அவர் வறிய மக்கள் ஆதரித்து பிரஸ்ய மன்னனை விமர்சித்து எழுதிய கட்டுரைக்காக கைது செய்யப்படுகிறார். அதன் விளைவாக கைக்குழந்தையுடன் குடும்பத்துடன் மார்க்ஸ் பிரான்சுக்குக் குடிபெயர நேர்கிறது.
இரண்டாவது காட்சி மான்செஸ்டரில் எங்கெல்ஸ்சின் தந்தையும் எங்கல்சும் பஞ்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெண்களுக்கிடையில் உரையாடும் காட்சியாக விரிகிறது. பழுதுபட்ட இந்திரத்தில் வேலை செய்ததால் ஒரு பெண்ணின் கைவிரல்கள் துண்டுபட்டதால் இயந்திரச் சக்கரங்களை இணைக்கும் பெல்ட்டை பெண்கள் அறுத்துவிடுகிறார்கள். ‘யார் அறுத்தது?’ எனக் கேட்கிறார் எங்கல்சின் தந்தை. ‘விரல்கள் வெட்டுப்பட்ட பெண்ணுக்கு என்ன வழி?’ என்று கேட்கிறார் தொழிலாளியான மேரிபர்ன்ஸ். அவர் வேலையிலிலிந்து அகற்றப்படுகிறார். எங்கல்ஸ் மேரிபர்ன்ஸசைத் தொடர்ந்து வெளியேறுகிறார். தந்தைக்கும் எங்கல்சுக்கும் ஆன மனமுறிவு, எங்கல்ஸ் மெரிபர்ன்ஸ் உறவு, பிற்பாடான எங்கல்சின் தொழிலாளிவர்க்கத்தின் நிலைகுறித்த ஆய்வு இங்கிருந்து துவங்குகிறது.
மார்க்சுக்கு இப்போது 26 வயது. எங்கல்சுக்கு 24 வயது. ஐரோப்பாவின் இருவேறு நகர்களில் வாழும் இரு இளம் கோபக்கார இளைஞர்கள் தமது கம்யூனிசக் கனவு நோக்கி நகரத் துவங்கிவிடுகிறார்கள். இந்த இருவரும் பாரிசில் அர்னால்ட்ரூஜின் சஞ்சிகை அலுவலகத்தில் சந்திக்கிறார்கள். மார்க்ஸ் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கு ரூஜ் இன்னும் பணம் தரவில்லை. வீட்டில் பணக்கஷ்டம். வாடகை தர முடியவில்லை. ஒரு பெண்குழந்தை. வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இரண்டு மாதம் சம்பளம் தரவில்லை. பணம் வேண்டும் என ரூஜ்ஜிடம் கேட்கிறார் மார்க்ஸ். ஏற்கனவே அங்கிருக்கும் எங்கல்ஸை ரூஜ் மார்க்சிடம் அறிமுகம் செய்கிறார்.
மார்க்ஸ் எங்கல்சை இதற்குமுன்பே மிகச் சுருக்கமாக ஜெர்மனியில் சந்தித்திருக்கிறார். அவருக்கு எங்கல்சின் பணக்காரத்தனமும் அகந்தையும் அன்று பிடித்திருக்கவிலலை. அதற்காக எங்கல்ஸ் இன்று வருத்தப்படுகிறார். ரூஜ் பணம் கொண்டுவர உள்ளறைக்குச் சென்றுவரும் நேரத்தில், இருவரும் குடிக்கத் துவங்கி மார்க்சை தான் படித்திருப்பதை சொல்லி எங்கல்ஸ் ‘நீ ஒரு மேதை’ என்கிறார். உனது ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ தன்னேரில்லாத ஒருநூல் என்கிறார் மார்க்ஸ். ரூஜ் அறையிலிருந்து வரும் முன்பே இருவரும் வெளியேறி மதுவிடுதிக்குச் சென்று வெறியேறக் குடிக்கிறார்கள். மார்க்ஸ் வாந்தி எடுக்கிறார். எங்கல்ஸ் பத்திரமாக நண்பரை வீடு கொண்டு சேர்த்து அவரது முன்னறையில் தூங்கியும் விடுகிறார். இப்போது ஜென்னி எங்கல்சுக்கு அறிமுகமாகிறார். மேரிபர்ன்ஸ் ஜென்னிக்கு அறிமுகமாகிறார்.
இந்தக்காட்சி துவக்கம் படம் வேகமெடுக்கத் துவங்கிவிடுகிறது. நண்பர்களின் சொந்தவாழ்வு பின் போய் அரசியல் அவர்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. தமது கம்யூனிசக்கனவை அன்று பிரான்சில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த புரூதோன் தலைமையில் முன்னெடுக்க இளஞர்கள் முனைகிறார்கள். புரட்சிகர த்ஸ்தாபனம் ஒன்றை உருவாக்குவதற்கான அவர்களது தத்துவார்த்தப் போர் இவ்வாறு துவங்குகிறது. அன்று பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழிலாளிவர்க்கத்திடம் செல்வாக்குப் பெற்றிருந்த இரு சிந்தனைப் போக்குகளை மார்க்சும் எங்கல்சும் எதிர்த்துப் போராட வேண்டிவந்தது. ஓன்று புரூதோன் மற்றும் பகுனின் போன்றவர்கள் பேசிய அராஜகவாதம், மற்றது வெய்ட்லிங் பேசிய கிறித்தவ சகோதரத்துவ சோசலிசம். ‘அரசு, அரசன், சொத்து மூன்றையும் அழிப்பது தமது நோக்கம’ என்றனர் அராஜகவாதிகள். ‘தொழிலாளி வர்க்கத்தின் திட்டவட்டமான ஒரு கட்சியமைப்பு என்பதற்கு மாற்றாக தன்னெழுச்சியான போராட்டங்களே போதும்’ என்றனர் அராஜகவாதிகள். ‘கிறித்தவம் பேசிய சகோதரத்துவ அன்பின் அடிப்படையில் சோசலிசத்தைக் கொண்டு வந்து விடமுடியும்’ என்று பேசினர் வெட்லிங்கின் ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ அமைப்பினர். இந்த அமைப்பினர் நிகழ்த்திய கூட்டங்களில் மார்க்சும் எங்கல்சும் ஜென்னியும் மேரிபர்ன்சும் கலந்து கொள்கிறார்கள். மார்க்ஸ் கடுமையான சொற்களில் வாதிடுகிறார். மிகுந்த மரியாதைக்குரிய புரூதோன், வெய்ட்லிங் போன்றவர்களை சமயத்தில் மார்க்ஸ் விவாதங்களின் போது புண்படுத்தவும் தவறுவது இல்லை.
ஜெர்மனியில் பிரஸ்ய மன்னரைக் கொலை செய்யும் முயற்சி தோல்வியைடைந்தையடுத்து, ஜெர்மனியின் அழுத்தத்தின்மீது புருதோன், மார்க்ஸ் உள்ளிட்ட புரட்சியாளர்கள் பிரான்சைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். மார்க்சும் ஜென்னியும் இங்கிலாந்து வருகிறார்கள். மார்க்சின் பிரெஞ்சு இங்கிலாந்து வாழ்வு முழுவதும் அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பை எங்கல்ஸ் ஏற்கிறார். மார்க்ஸ் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்கிறார். அயர்லாந்துத் தொழிலாளர்களைச் சந்திக்கிறார். ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ அமைப்பின் கூட்டத்தில் எங்கெல்ஸ் மார்க்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை முன் வைத்து உரையாற்றுகிறார். ‘இது வரைத்திய வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’ என்கிறார் எங்கல்ஸ். ‘முதலாளியுடன் சகோதரத்துவம் பேண முடியாது’ என்கிறார். ‘அவன் நமது எதிரி’ என்கிறார். ‘வர்க்கப் போராட்டமும் இரத்தச் சிந்துதலும் தவிர்க்க முடியாதது’ என்கிறார்.
சாதாரண மனிதர்களாக மார்க்ஸ்-ஜென்னி, எங்கல்ஸ்- மேரிபர்ன்ஸ் இடையிலான கலவிக் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. மேரிபர்ன்சைத் தேடி தொழிலாள குடியிருப்புக்கு வரும் எங்கல்சை பர்சின் தோழர் கடைவாயில் இரத்தம்வர அடித்துக் கீழே சாய்க்கிறார். எங்கெல்ஸ் மயங்கி விழிக்கும் போது பேர்ன்ஸ் ‘வலிக்கிறதா?’ என்கிறார். ‘ஆம்’ எனும் எஙகெல்ஸ் மேரியின் விரல்களுக்குள் தன் விரல்களை விட்டு அளைகிறார்.
குடிவெறியின் இடையிலும் மார்க்ஸ் ரூஜ்ஜிடம் கேட்ட காசை மறக்காமல் எங்கல்ஸ் மார்க்சிடம் தருகிறார். குடியேற்றப் போலீசாரிமிருந்து தப்பி பாரிஸ் நகரில் தெருத்தெருவாக ஓடுகிறார்கள் நண்பர்கள். எங்கல்ஸ் அனுப்புகிற மணிஆர்டரை தபால் நிலையத்தில் பெற்று வரும் மார்க்ஸ் வாடகை பாக்கிக்காக நிற்பவருக்குத் தந்து அனுப்புகிறார். இரண்டாவது குழந்தை ககுலாரா என மார்க்ஸ் பெயரைப் பரிந்துரைக்கும் போது ‘ஹெலன்டமுத் ஏற்றால் சரி’ என்கிறார் ஜென்னி. அவர் தம் முதல் பணிப்பெண் திருடுகிறாள் என ஜென்னி சொல்லும்போது, ‘இரண்டு மாதமாகச் சம்பளம் தரவில்லை. திருடட்டும்’ என்கிறார் மார்க்ஸ்.
மார்க்ஸ் புருதோனின் மனம் உடைந்து போகும்படி கடுமையாகப் பேசுகிறார். ‘நாம் ஓருவரை ஒருவர் அழித்துக் கொள்ளாமல் இருப்போம்’ என புருதோன் மார்க்சிடம் சொல்கிறார். ‘கடுமையாக எல்லாவற்றையும் விமர்சிப்போம். முதலில் நான் கில்லட்டினுக்குப் போகிறேன். பிற்பாடு உனது நண்பர்கள். கடைசியில் விமர்சிக்க யாரும் இல்லாபோது நீயே போக வேண்டியிருக்கும்;’ எனப் பொருள்படும்படி வெயிட்லிங் மார்க்சிடம் ஒரு தருணத்தில் சொல்கிறார்.
மார்க்ஸ் ஜென்னி உறவு ஜென்னியின் குடும்பத்திற்கு உடன்பாடானது அல்ல. ஜென்னியின் சகோதரனிடமும் மார்க்சுக்குச் சரியான உறவு இல்லை. மாமியாரிடம் காசு வாங்குவதிலும் மார்க்சுக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. நூற்கள் எழுதுவதற்கான ஆன்றமைந்த மனநிலைக்கும் குடும்பக் கஷ்டங்களுக்கும் இடையில் கிடந்து மார்க்ஸ் வாழ்வு முழுக்க அல்லாடினார். அவரது மரணம் வரையிலும் இந்தநிலைமை தொடர்ந்தது. மார்க்ஸ் பல சமயங்களில் பலரிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பதனை ஜென்னி மார்க்சுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
படத்தில் உச்சக்காட்சிக்கு முன்பாக வரும் காட்சியொன்று அதி உன்னதமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கிறது. கடற்கரையில் மார்க்சும் எங்கெல்சும் உலவுகிறார்கள். குழந்தைகள் ஓடித்திரிகின்றன. துணிப்பந்தலின் கீழ் ஜென்னியும் மேரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 வாரங்களில் ‘லீக் ஆப் ஜஸ்டிஸ்’ கூட்டத்தில் மார்க்சும் எங்கெல்சும் எதிர்கால வேலைத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். இப்போது நண்பர்களுக்கிடையிலும் தோழியர்க்கிடையிலும் உரையாடல் நிகழ்கிறது.
மார்க்ஸ் தான் சோர்ந்து போய்விட்டேன் என்கிறார். கட்டுரைகளாக எழுதிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நூற்களாக எழுத விருப்பம் என்கிறார். குழந்தை, குடும்பம், அதற்கான பொருளியல் தேவைகளுக்கு இடையில் இப்படிக் கடன் வாங்கிகொண்டு தொடர்ந்து வாழமுடியாது என்கிறார். ஒருவகையில் எங்கல்சை மனமுடைந்து போகும் சொற்கள் இவை. ஆத்ம நண்பனாக இதுவரை எங்கெல்ஸ் செய்த அனைத்தையும் மறுத்து அவரை விலக்கிவைக்கும் சொற்கள் இவை. ‘நீ நியாயமாகப் பேசமாட்டேன் என்கிறாய்’ என எங்கல்ஸ் இப்போது சொல்கிறார்.
‘தத்துவம், கோட்பாடு என நிறைய எழுதிவிட்டோம். சாதாரண மனிதனுக்குப் புரிகிற மாதிரி, எளிய சொற்களில், நமது திட்டத்தை நாம் முன்வைக்கவேண்டும். இன்னும் ஐந்து வாரங்களில் நாம் எழுதியே ஆகவேண்டும்’ என்கிறார் எங்கல்ஸ். அந்த அறிக்கையை எழுதுவது அவர் தம்நடைமுறை இயக்கச் செயல்பாட்டில் ஒரு திருப்புமுனை. இப்போது மார்க்சை உற்சாகம் பற்றிக் கொள்கிறது. ‘நான் எப்போதும் என் வேலையை நிறுத்திக் கொள்வதில்லை’ என்கிறார் மார்க்ஸ்.
தோழியரின் உரையாடலின் போது ஜென்னி மேரியைப் பார்த்து ‘குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா?’ என்கிறார். ‘எங்கெல்ஸ் ஒரு பணக்கார முதலாளியின் மகன். நான் ஒரு தொழிலாளி. எனக்குப் பணம் வேண்டாம். திருமணம் வேண்டாம். குழந்தை வேண்டாம். எனக்கு என் சுதந்திரம் வேண்டும். தொழிலாளிவர்க்க வாழ்வு வேண்டும். எங்கல்சுக்குக் குழந்தைவேண்டுமானால் எனக்குப் பின்னால் என் தங்கை அதனை அவருக்குத் தரட்டும். அவள் காத்திருக்கிறாள். அவளுக்கு இப்போது 16 வயது’ என்கிறாள்.
தனிச் சொத்துரிமையும் பெண் உடைமையானதும் குறித்து எழுதிய எங்கல்ஸ் திருமணத்தில் நம்பிக்கை கொண்டவர் இல்லை. சமூகநிர்ப்பந்தம் கருதி மேரியை அவர் பிறரிடம் அறிமுகப்படுத்தும்போது தன் மனைவி எனவே அறிமுகப்படுத்துகிறார். மேரியின் விருப்பத்தின்படி அவரது மரணத்தின் பின் எங்கல்ஸ் அவரது தங்கையான லெஸ்ஸியுடன் வாழ்கிறார். லெஸ்ஸி மரணமுறுவதற்கு முதல்நாள் அவளது விருப்பத்தின்படி லெஸ்ஸியை மணந்து கொள்ளவும் செய்கிறார். மார்க்ஸ் தனது குடும்பம் குழந்தைகள் மீது மிகப்பெரும் அன்பு வைத்திருந்தார். ஜென்னி, மார்க்ஸ் மறைவுக்குப்பின் அந்தப் பொறுப்பை எங்கல்ஸ் ஏற்றுக் கொண்டார்.
‘இந்தப் படத்திற்கான அடிப்படைப் பிரதி கார்ல்மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதங்கள்தான். அந்தக் கடிதங்களில் அவர்கள் கோட்பாட்டு அரசியல் சரச்சைகளை, நூல் வாசிப்பைப் பகிர்ந்து கொண்டார்கள். கூடவே அவர்கள் தம்காதல் வாழ்வையும் தனிப்பட்ட துயர்களையும் கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்’ என்கிறார் ராவுல்பெக். மார்க்ஸ் இறந்த பிறகும் மார்க்சின் இளையமகள் எலியனார் எங்கல்சை பிறிதொரு தந்தைபோலவே உறவுகொண்டு வாழ்ந்தார் என்பதையும் இங்கு நாம் ஞாபகம் கொள்வோம்.
‘இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மார்க்சை அறிமுகப்படுத்துவதும், அவரது இளமை நாட்களில் என்ன நடந்துது என்பதைச் சொல்வதும் தான் திரைபடத்தின் நோக்கம்’ எனும் ராவுல்பெக், ‘இந்தத் திரைபடத்தில் மனிதர்களாக மார்க்ஸ் எங்கெல்ஸ், அவர்தம் துணைவியார் மற்றும் அவர் தம் சமகாலத்தவரின் மனங்களுக்குள் நான் சென்று பார்த்தேன்’ என்கிறார் ராவுல்பெக். ‘உலகின் பற்பல கட்சிகள் மார்க்சை பல்வேறு விதங்களில் முன்வைக்கின்றன. வேறுபட்ட பார்வைகளுடன் அவரது வரலாறு எழுதப்பட்டுள்ளது. இவர்களுக்கிடையில் பெரும்விவாதங்களும் இருக்கின்றன. இந்தப்படத்தை இவைகளின் அடிப்படையில் நான் உருவாக்கவில்லை. அன்றைய வரலாற்றில் இவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், மனிதர்களாக எப்படி இருந்தார்கள், எவ்வாறு விவாதித்தார்கள் என்பதையே தான் காண்பிக்க விரும்பினேன்’ என்கிறார் ராவுல்பெக்.
1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளியானது. ராவுல்பெக்கின் ‘த யங் கார்ல்மார்க்ஸ்’ கார்ல்மார்க்ஸ் எங்கெல்ஸ் எனும் காவியநட்புக் கொண்ட இரு ஆத்மநண்பர்களின் மனவெளியினூடே ஒருபயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆரம்ப ஆண்டுகளில் அலையடித்த விடுதலைச் சிந்தனைக் கடலில் ஒரு பயணம். 1848 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் ‘கம்யூனிஸ்ட் லீக’ உருவாவதுடன். மார்க்சும் எங்கலெசும் கட்டித் தழுவுவதுடன் ‘த யங் கார்ல் மார்க்ஸ்’ படம் முடிகிறது. ரஸ்ய, சீன, கியூப, ஆப்ரிக்கப் புரட்சிகள் காட்சிகளாக வந்து போகின்றன. லெனின் முதல் லுமும்பா, சேகுவேரா வரையிலான புரட்சியாளர்கள் திரையில் தோன்றுகிறார்கள். அவர்ளைத் தொடர்ந்து இன்று வரையிலும் உலகெங்கிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
மதுவிடுதிகளில் கிடந்து முடிவற்ற இரவுகளில் ஐரோப்பிய நகர்களில் இருளில் அலைந்து திரிந்த இரு இளம் நண்பர்கள் அந்த உன்னதக் கனவைக் கண்டார்கள் : ‘உலகை வேறு வேறு விதங்களில் பற்பலர் வியாக்யானப்படுத்தியிருக்கிறார்கள். பிரச்சினையாதெனில் உலகை மாற்றுவது’ எனும் அந்தத் தாரகமந்திரத்தை இயக்குனர் ராவுல்பெக் ‘த யங் கார்ல்மார்க்ஸ்’ திரைப்படத்தின் வழி இந்தத் தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார்.