தீண்டாச்சாதிப் படைவீரர்கள் – சு.இராமசுப்பிரமணியன்
இந்தியாவில் மக்கள் சமூகம் சாதியாகப் பிளவுண்டு கிடக்கிறது. ஆரம்பத்தில், இந்து வர்ணாஸ்ரமம் மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு கூறுகளாகப் பிரித்தது. அந்த வர்ணப்படிநிலையில் பிராமணர் உச்சத்திலும், சூத்திரர் நீச்சத்திலும் வைக்கப்பட்டனர்.
இந்த நான்கு மக்கள் பிரிவினரும், தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டனர் என்று இந்து வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், அது தொழில் (labour) அடிப்படையிலானப் பிரிவினை அல்ல என்றும், தொழிலாளர் (labourer) அடிப்படையிலானப் பிரிவினை என்றும் கூறுவது கவனிக்கத்தக்கது.
வர்ண அடிப்படையில் மக்களைப் பிரித்தவர்கள், அந்த நான்கு பிரிவுகளோடு நிற்கவில்லை. சூத்திரர்களுக்கும் கீழாக பெருந்திரள் மக்கள் பிரிவினரைத் தீண்டாச்சாதியினர்(Untouchables) என்று அடையாளப்படுத்தினர்.
தீண்டாச்சாதியினர் மூன்று வகையாக உருவாகியுள்ளனர். உயர்ந்த, சிறந்த, நிலைத்த கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் (Higher and Stable Civilization& Culture )கொண்ட தொல்குடி மக்கள், இம்மண்ணுக்கு வெளியிலிருந்து ஊடுருவிய வெள்ளைத்தோல் இனத்தவருடன் போராடித் தோற்று அடிமைகளாக்கப்பட்டவர்கள் முதல் பிரிவினர்.
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்ததால் சாதிவிலக்கம் (Outcast)செய்யப்பட்டவர்கள், இரண்டாவது வகையினர்.
பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களது மதம் மற்றும் சமூக அமைப்புகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கிளர்ச்சிசெய்தும், வேதங்களையும், பிராமணர்களது மேலாதிக்கத்தையும் ஏற்க மறுத்துவந்தவர்களும் மூன்றாவது வகையினர்.
இந்த மூன்று பிரிவினரும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகளாகவும், உட்சாதிகளாகவும் பிரிந்து, ‘தீண்டாச்சாதியினர்’ (Untouchable Casts or Scheduled Casts)என்னும் அடையாளத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.
தீண்டாச்சாதியினர் ஊருக்கு வெளியே வசிக்கும்படிகட்டாயப்படுத்தப்பட்டனர். சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ளவோ, சொத்து சேர்க்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. கல்வி கற்க, நாகரீகமாக உடை அணிய , ஆயுதங்கள் வைத்துக்கொள்ள, நல்ல உணவு உண்ண, பணம் ஈட்டும் தொழில்கள் செய்ய என்று எந்த உரிமையும் தீண்டாச்சாதியினருக்குக் கிடையாது.
சமூகத்தில் இழிவாகக் கருதப்படும் தோட்டிவேலை, துப்புரவுவேலை(sweeping), செத்த கால்நடைகளின் தோலுரித்தல், கயிறுதிரித்தல் போன்ற தொழில்களையும், இன்னும் மேல்சாதியினர் எவற்றையெல்லாம் இழிதொழில்கள் என்று கருதினார்களோ, அவற்றையெல்லாம் தீண்டாச்சாதியினர் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மொகமதியர்கள் இந்த மண்ணிற்குள் ஊடுருவி வந்தபோது, தீண்டாச்சாதியினர், மதம்மாறி அவர்களது படையணிகளில் போர்வீரர்களாகச் சேர்ந்திருக்கின்றனர் இஸ்லாமியப் படையணிகளில் பல தீண்டாச்சாதியினர் பதவி உயர்வு பெற்று உயர்நிலையை அடைந்திருக்கின்றனர். நசிருடின் குஸ்ரோ ஷா (Nasiruddin Khusro Shaw) என்னும் மதம் மாறிய தீண்டாச்சாதியைச் சேர்ந்தவர், டில்லி சுல்தானாகக்கூட ஆக முடிந்திருக்கிறது.
தீண்டாச்சாதியினர், மராட்டிய, சீக்கியப் படையணிகளிலும் போர்வீரர்களாகச் சேர்ந்திருக்கின்றனர். கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவிற்கு வந்தபோது, அவர்களது படையணிகளில் பெரும் எண்ணிக்கையிலானத் தீண்டாச்சாதியினர் சேர்ந்திருக்கின்றனர். கிழக்கிந்தியக் கம்பனியால் கொங்கன் பகுதியில் (Konkan Area) உருவாக்கப்பட்ட பாம்பே படையணியில் மகர் (Mahar), மாங் (Mank) , கோலி (Koli) ஆகியத் தீண்டாச்சாதியினர் பெருவாரியாக இணைந்திருந்தனர்.
கிழக்கிந்தியக்கம்பெனியின் சென்னைப்படையணியில் இந்துத் தீண்டாச்சாதியினரும், கிருத்துவர்களாக மதம் மாறியத் தீண்டாச்சாதியினரும் சேர்ந்துள்ளனர்.
வங்கப்படையணி, தாழ்ந்தசாதி மற்றும் தீண்டாச்சாதியினரால் நிரம்பியிருந்திருக்கிறது. அறிவுத்திறன் (intelligence), துணிச்சல் (Courage), வீரம் (Valour) ஆகியவற்றோடு திறமையாகப் போர்புரிந்ததால், அவர்கள் ‘சிறந்த வீரர்கள்’ என்று பெயர் வாங்கியிருந்தனர்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்கப்படையணியில் பணியாற்றிய போர்வீரர்களுக்குக் கிடைத்துவந்த நல்ல ஊதியம், பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியப்பயன்கள் ஆகியவற்றை அறிந்த பீகாரைச்சேர்ந்த பிராமணர்களும், ராஜபுத்திரர்களும் ஏராளமானவர்கள் வங்கப்படையணியில் போர்வீரர்களாகச் சேர்ந்தனர். அவர்களோடு, அவர்களது வர்ணாஸ்ரமத்தையும் படையணிக்குள் கொண்டுவந்தார்கள். அது, தீண்டாச்சாதிப் படைவீரர்களுக்குப் பிற்காலத்தில் சிக்கலை உருவாக்கியது.
பிராமண, ராஜபுத்திர வீரர்கள் உயரமாகவும், வாட்டசாட்டமாகவும் இருந்தனர். அவர்கள், வங்கப்படையணிக்குள் வந்தபிறகு, ஏற்கனவே இருந்த தீண்டாச்சாதிப் படை வீரர்களை, இழிவான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தினர். ஒவ்வொரு இந்துப் படைவீரனும், அவனது உணவை அவனே தனிப்பாத்திரத்தில் சமைத்திருக்கிறான். அடுப்பில் எரிக்கவேண்டிய விறகைக்கூட, தீட்டுகழிக்க, தண்ணீரில் கழுவியபிறகேப் பயன்படுத்தும் அளவிற்கு மூடநம்பிக்கை உச்சம்பெற்றிருந்திருக்கிறது.
பிராமண, ராஜபுத்திர வீரர்களின் மூடநம்பிக்கை காரணமாகவே 1806, 1824, 1852, மற்றும் 1857 ஆகிய ஆண்டுகளில் ‘சிப்பாய்க்கலகங்கள்’ நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், 1857-இல் நடைபெற்ற சிப்பாய்க்கலகம்தான் முதல் விடுதலைப்போர் என்று இந்திய வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தீண்டாச்சாதிப் படை வீரர்கள் , பணியிலிருந்து நீக்கப்பட்டனர். வீரப்பரம்பரை (martial race) மற்றும் கோழைப்பரம்பரை (non-martialrace)என்னும் விதத்தில் வங்கப்படையணி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது 19-ஆம் நூற்றாண்டின்இடைக்காலத்தில், உயரமான, உறுதியான வீரர்களைத் தெரிவுசெய்யும் முடிவுக்குக் கிழக்கிந்தியக் கம்பனி வந்துவிட்டபிறகு, வங்கப்படையணி முழுவதும் பிராமணர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், “ஆங்கிலேயர்களுக்கு நிரந்தர நண்பரும் கிடையாது, நிரந்தரப் பகைவரும் கிடையாது, நிரந்தர சுயநலம் (permanent interest) மட்டுமே உண்டு” என்று சொன்னதை இதனோடுப் பொருத்திப் பார்க்கலாம்.
இந்தியாவின் படை வரலாறுபற்றி மிகக்குறைவாகவேப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தத்துவம், சமூகவியல், மதம், அரசியல் போன்றவை ஆய்வாளர்களை ஈர்த்ததுபோல் படைவரலாறு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. , படை மற்றும் போர்க்களம் பற்றிய ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துவருகிறது.
தீண்டாச்சாதியினரும் மற்ற இந்து தாழ்ந்த சாதியினரும், இந்தியப் படை வரலாற்றில் முக்கியப் பங்காற்றியிருந்தபோதும், இந்தியாவில் ஆழமாக வேரோடியிருக்கும் சாதிப் பிரிவினைகள் மற்றும் தீண்டாமை காரணமாக, அவர்களைப்பற்றிய செய்திகள் மிகக்குறைவாகவேப் பதிவு செய்யப்பட்டுள்ளன எனலாம்.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், ‘படைகளில் தீண்டாச்சாதியினர் ‘என்பதுபற்றி ஒரு குறுநூல் எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1956 அக்டோபரில், நாக்பூரில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் பல மில்லியன் தீண்டாச்சாதியினர், இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினர். அதன் விளைவாக, அதற்குப் பிறகான காலகட்டத்தில், மேற்குலகைச்சேர்ந்த பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் மகர் சாதியினர் பற்றி எழுதிவருகின்றனர்.
மகர் சாதியினர்போலவே, பஞ்சாப்பில் சுரர்களும் (Chuhras )பெரிய அளவில், கிருத்துவ மதத்திற்கு மாறியிருக்கின்றனர். சுரர்கள், கிருத்துவத்திற்கும், சீக்கிய மதத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் மாறியது, இந்து அடிப்படைவாதிகளை விழித்துக்கொள்ளச் செய்தது. அவர்கள், பணத்தால் ஆசைகாட்டியும், அதிகாரத்தால் மிரட்டியும், மதமாற்றத்தைத் தடுத்துவிட்டனர். ஆனாலும், சுரர்களின் முந்தைய இழிநிலை அப்படியே நீடிக்கிறது.
மகர் சாதியினர் (Mahar Casts)
மகாராஷ்டிராவில் மகர் சாதியினரேப் பெரும்பானமையினராக இருந்துவருகின்றனர். மராத்திமொழி பேசும் ஒவ்வொரு கிராமத்திலும் மகர்சாதியினர் வசிக்கும் சேரியைக் (Maharwada)காணலாம். இன்னும் சொல்லப்போனால், மகாராஸ்டிரா என்னும் பெயர்கூட பெரும்பானமை மகர் சாதியினரின் அடையாளத்திலிருந்தே பிறந்திருக்கிறது.
மகர் சாதியினர் தெருவில் நடக்கும்போது எச்சில் துப்பக்கூடாது என்றும், அவனது கால்தடத்தை அவனே அழித்துவிடவேண்டும் என்றும் நடைமுறை இருந்திருக்கிறது. அதற்காக, ஒவ்வொரு மகர் சாதிக்காரனும் தனக்குப்பின்னால் ஒரு முள்கிளையை இழுத்துச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. மகர்சாதியினரின் நிழல்கூட பிராமணர்கள்மீதுப் பட்டுவிடக்கூடாது என்பதால் பிராமணன் வந்தால், தொலைதூரம் ஒதுங்கி நிற்கவேண்டும்.
பல இழிதொழில்களை மகர் சாதியினர் செய்தாலும், கழிவறையைக் கழுவுதல் அவர்களது வேலையாக இருந்திருக்கவில்லை. கிராமங்களில் ஊர்க்காவலர்களாகவும், தகவல் சொல்பவர்களாகவும், ஹோலிப் பண்டிகையின்போது, அம்மன்கோயில் முன்பாக முதல் ஹோலி தீபத்தை ஏற்றும் உரிமை பெற்றவர்களாகவும், மகர்சாதியினர் இருந்திருக்கின்றனர். மகர் சாதியினர், சிவாஜி மன்னனின் போர்ப்படை வீரரகளாகவும் இருந்திருக்கின்றனர்.
மழ்பி சீக்கியர்கள்: (Mazhbi Sikhs)
மூன்று ‘சுரர்கள்’ என்னும் தூப்புக்காரர்கள்(Chuhras, the sweepers), அவுரங்கசீப்பால் கொல்லப்பட்ட ஒன்பதாவது குருவான டெஹ் பகதூரின் (Tegh Bahadur) உடலை (1675) மிகுந்த வீரத்துடன் மீட்டுக்கொண்டுவந்தார்கள். வீர மரணம் அடைந்த குருவின் உடலுடன் அமிர்தசரஸ் வந்து சேர்ந்ததும், அவர்களது வீரத்தையும், அர்ப்பணிப்பையும் (Valour & devotion) பாராட்டி, குரு கோவிந்த் சிங்(Guru Govind Singh) , அந்த மூன்று தூப்புக்காரர்களையும், சீக்கியர்களாக மாற்றி, சாதி மேல்நிலையாக்கம் செய்திருக்கிறார். அவர்கள்தான் மழ்பி சாதியினர்(Mazhbi Sikhs)என்று அழைக்கப்பட்டனர்.
பின்னர் சீக்கியர்களாக மாறிய சுரர்களும் மழ்பி சாதியினர் என்றே அழைக்கப்பட்டாலும், அவர்களிடையே வேறுபாடு இருக்கவே செய்கிறது. குருவின் உடலை மீட்டுக்கொண்டுவந்தவர்களின் வழித்தோன்றல்களே, மழ்பி சாதியினரில், உச்சத்தில் இருக்கும் பிரிவினர் ஆவர்..
ரஞ்சித் சிங் (1780 – 1839) மழ்பி சாதியினரை, ‘கல்சா’ படையணியில்(Khalsa Army) சேர்த்தார். உயர்சாதி சீக்கியர்களிடம் இருந்து எதிர்ப்பு வலுக்கவே, மழ்பி பிரிவினரை மட்டும்கொண்ட தனிப்படையணி உருவாக்கப்பட்டது.
‘கல்சா’ படையினர், ஆங்கிலேயர்களுடனான இரண்டாவது போரில் (1849) தோற்றுப்போகவே, பெரும்பாலான மழ்பி சாதியினர் வழிப்பறி செய்பவர்களாக மாறிவிட்டனர். சில ஆண்டுகள் வரையிலும் அவர்கள் குற்றப்பிரிவினராகக்(Criminal Class) கருதப்பட்டனர்.
1851க்குப் பிறகு, காஷ்மீரை ஆண்டுவந்த இந்து மன்னன் குலாப் சிங் (Gulab Singh of Dogra, Kashmir), தனது ஆளுமைக்குக்கீழ் உள்ள முஸ்லீம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கருதி,மழ்பி சாதியினரைத் தனது படையணியில் சேர்த்திருக்கிறார்.
கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், சீக்கியர்கள் வாழும் நிலப்பரப்பில் மழ்பி பிரிவினர் சிறுசிறு குழுக்களாகப் பரவி வாழ்கின்றனர் என்பது தெரியவருவதாக ஆடிய பாஷம் குறிப்பிடுகிறார். அவர்கள் தங்களதுத் தூப்புத் தொழிலை விட்டுவிட்டு, விவசாயக்கூலிகளாக வாழ்கின்றனர். என்றாலும் அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை.
மகர் மற்றும் மழ்பி சாதியினர், ஒரு ஒப்பீடு:
மகர்கள் வாழும் கிராமங்களில் அவர்களது வாழ்வியல் , அந்த கிராமங்களில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் நில உடமையாளர்களாக இல்லையென்றாலும், அவர்களுக்கான பரம்பரை உரிமைகள் உள்ளன. அவர்கள் விரும்பினால் எந்த ஒரு மாற்றுத் தொழிலையும் ஏற்கக்கூடியவிதத்திலேயே வாழ்கின்றனர். எந்த ஒரு வேலையையும், வெறுமனே வேலை என்னும் அளவில் மட்டுமே செய்யாமல், சேவை மனப்பான்மையுடன் செய்யும் குணம் உடையவர்கள் (service Oriented rather than task oriented) என்பதால், அதிகார மாற்றங்களில் அவர்களது பங்கு இன்றியமையாதது ஆகிவிடுகிறது.
இதற்கு மாறாக, மழ்பி சாதியினரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. சீக்கியர்கள் என்று சொல்லப்பட்டாலும், முன்னாள் தூப்புக்காரர்கள் என்னும் அடிப்படையில், சமூகப்படிநிலையில் மற்ற சீக்கியர்களால் மழ்பியினர் தாழ்ந்தவர்களாகவேப் பார்க்கப்படுகின்றனர்.
மகர் மற்றும் மழ்பி சாதியினர் படைகளில் சேர்ந்ததனால் கிடைத்த நற்பயன்கள்:
மகர்சாதியினர்:
கல்வி கற்பதற்குக் கிராமப்பள்ளிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, அந்தச்சூழலில், கிழக்கிந்தியக் கம்பனி, அதன் படைவீரர்களுக்குக் கட்டாயக் கல்வி அளித்தது. அதன் காரணமாக, மகர்சாதியினருக்கு, கல்வி கற்பதற்கான சூழல் முன்கூட்டியே உருவாகியது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் (Dr. B.R.Ambedkar) தந்தையான சுபேதார் மேஜர் ராம்ஜி சக்பால்(Subedar Major Ramji Sakpal) , இராணுவப்பயிற்சிப்பள்ளியில் (Normal School) பயிற்சிபெற்ற பள்ளி ஆசிரியர்.மத்திய இந்தியாவில் உள்ள ஒரு இராணுவப்பள்ளியில், ராம்ஜி சக்பால் 14 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மற்றொரு ஓய்வுபெற்ற மகர் இராணுவ வீரர், முதல் மகர் நாளிதழை ஆரம்பித்திருக்கிறார்.
இராணுவத்தில் பணியாற்றியதால், ஓரளவிற்குப் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைத்தது.
மரபுசாராத் தொழில்களை நோக்கிய வாய்ப்புகளை உருவாக்கியது.
மகர் சாதியினருக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் இடையே பாலமாக செயல்படும் வாய்ப்பு உருவாகியது.
கிராமங்களில் வசித்த மகர்கள் கிராம அதிகார அமைப்புகளுடனேயே நின்றுவிட்டனர். ஆனால், படைவீரர்களான மகர்கள் மேல்மட்ட அதிகாரத்துடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர்.
மழ்பி சாதியினர்:
இராணுவத்தில் படைவீரரகளாகச்சேர்ந்த மழ்பி சாதியினருக்கு, நல்ல ஊதியம் மற்றும் ஓய்வூதியம், பயன்களாகக் கிடைத்தன. முதல் உலகப்போரின்போது, இந்திய இராணுவம் பஞ்சாப் வீரர்களால் நிரப்பப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான மழ்பிசாதியினர் இராணுவத்தில் சேர்வதற்கு அது வழிவகுத்தது.
மகர் சாதியினர்போல் அல்லாமல், மழ்பிசாதியினர் இந்தியாவிற்கு வெளியே சென்றும் பணியாற்றினர்.
பொதுவாக ஈட்டியப் பணத்தை நிலங்களிலும், நிலம்சார்ந்த தொழில்களிலும் முதலீடு செய்வது, சீக்கியர்களின் பொதுக்குணம். அதிலிருந்து வேறுபடும் மழ்பி சாதியினர், டீ, மது, இறைச்சி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அதன் விளைவாக, அவர்களில் ஒருசிலர் தவிர மற்றவற்றவர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை.
விடுதலைக்குப் பிறகான இந்திய இராணுவம்:
விடுதலைபெற்ற இந்திய இராணுவத்தில், படைவீரர்களைச் சேர்க்கும்போது, , சார்பற்ற வீரர் இனக்கொள்கை (secular martial races theory) கடைபிடிக்கப்பட்டது. இது, எந்த ஒரு சாதியைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ‘வீரம்செறிந்த சாதனைகளை நிகழ்த்தும் பண்புள்ளவர்கள்’ (martial achievements) தான் என்பதை முதன்மைப்படுத்தியது. அந்த வகையில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்திய இராணுவத்தில் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும். என்றாலும் , இந்திய இராணுவம் வட இந்திய குடிகளாலும், குலங்களாலுமே (North Indian Casts & Class) நிரம்பியுள்ளது.
விடுதலை பெற்ற இந்திய இராணுவத்தில், குலம், குடிசார்ந்த படையணிகள் கலைக்கப்படவேண்டும். காரணம், அது சிலரை உயர்ந்தவர்களாகவும், பலரைத் தாழ்ந்தவர்களாகவும் பிரித்து, அடையாளப்படுத்திவிடுகிறது. ஆயினும், தங்களைப் பாரம்பரிய வீரர்களாகக் கருதுபவர்கள், அவர்களுக்கென்று தனிப்படைப்பிரிவு உருவாக்குவதையே விரும்புபவர்களாக இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலையாகவும் உள்ளது.
குடியரசுத்தலைவரின் தற்காப்புப் படையணி(President’s Bodyguard), 1773-இல் கவர்னர் வாரன் ஹேஸ்டிங்கால் நிறுவப்பட்டது. ஏறத்தாழ 150 வீரர்களைக்கொண்டிருக்கும் இப்படையணிக்கு, இப்போதும்கூட, இந்து ஜாட், சீக்கிய ஜாட் மற்றும் ராஜபுத்ர சாதிகளிலிருந்தே வீரர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
ஆய்வு நூல்:
கனடாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர், திருமதி. ஆடித பாஷம் (Mrs. Ardythe Basham) , தனது எம்.ஏ. பட்ட ஆய்விற்காக, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில், அவர்களது படையணிகளில் பணியாற்றிய தீண்டாச்சாதியினர் பற்றி ஆய்வுமேற்கொண்டுள்ளார். குறிப்பாக, மகாராஸ்டிரத்தைச்சேர்ந்த மகர் சாதியினர் (Mahar) மற்றும் பஞ்சாபைச்சேர்ந்த மழ்பி (Mazhbi) சாதியினர் பற்றி மிக விரிவாக ஆய்வுசெய்துள்ளார்.
அதற்காக, மகர்கள் வாழும் மகாராஸ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்திருக்கிறார். ஜான் படையணியில் (John regiment) பணியாற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் மகர்களின் சந்ததியினரைச் சந்தித்திருக்கிறார். தேசியக் காப்பகம் (National Archieve), ஒருங்கிணைந்த மகர் பயிற்சி மையம், பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறையைச்சேர்ந்த பல்வேறு நூலகங்கள் ஆகியவற்றிலிருந்துத் தேவையானத் தரவுகளைத் திரட்டியிருக்கிறார். ஆய்விற்காகப் பல இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், அறிஞர்கள், இராணுவ வரலாறு படிக்கும் மாணவர்கள், மகர் மற்றும் மழ்பி படையணிவீரர்களுடன் தொடர்புகொண்டிருந்த தீண்டாச்சாதியினர் என்று பலதரப்பினரையும் சந்தித்திருக்கிறார்.
தீண்டாச்சாதியினரில் குறிப்பாக மகர் மற்றும் மழ்பி சீக்கிய சாதியினரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காரணத்தையும் ஆய்வாளர் திருமதி. ஆடித பாஷம் குறிப்பிடுகிறார். இவ்விரு தீண்டாச்சாதியினரும், சமூகத்தில் ஒரேமாதிரியான நிலையில் இருந்தாலும், கிழக்கிந்தியக்கம்பனியின் படையணிகளில் போர்வீரரகளாகச் சேரும் வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட விதம் வேறுபடுவதாக திருமதி. ஆடித பாஷம் குறிப்பிடுகிறார்.
மகர் மற்றும் மழ்பி படைவீரர்களை முன்னிலைப்படுத்தித் திரட்டப்பட்ட ‘தீண்டாச்சாதி படைவீரர்கள்’ பற்றிய தரவுகள், கனடாவில் எம்.ஏ. பட்டத்திற்கானஆய்வுச்சுருக்கமாக (synopsis), திருமதி. ஆடித பாஷத்தால் (Mrs. Ardythe Basham)எழுதப்பட்டுள்ளது. அதுதான், ‘பகவன் தாசால்(Bhagwan Das)நூலாகத்தொகுக்கப்பட்டுள்ளது.‘இந்தியப் படையணிகளில் தமிழகத் தீண்டாச்சாதியினர்’ என்னும் தலைப்பில் யாரேனும் ஆய்வுமேற்கொள்ளலாம்.