தமிழகத்தில் சாதி உருவாக்கமும், சமூக மாற்றமும்
நொபுரு கரோஷிமா & எ.சுப்பராயலு
சு.இராமசுப்பிரமணியன்
இந்நூல், மறைந்த அறிஞர் நொபுரு கராஷிமாவும், எ,சுப்பராயலும் தனித்தனியாகவும், இணைந்தும் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் நான்கும், கல்வெட்டுச்சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்றும், பொது ஆண்டு (Common Era) 800 முதல் 1500 வரை தமிழ்நாட்டு சமூக வரலாற்றின் சில கூறுகளை ஆராய்வதே அவற்றின் நோக்கம் என்பதும் தெரியவருகிறது.
1. தமிழ்நாட்டில் தீண்டாதார், 2. சோழர்காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள், 3. புதிய ஓம்படைக்கிழவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும், 4. பதினைந்தாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ள நான்கு கட்டுரைகளாவன.. அவற்றோடு, ‘ நானும் எனது ஆய்வுகளும்’ என்னும் நொபுரு கராஷிமாவின் ஒரு பின்னிணைப்பும் உள்ளது.
‘தமிழ்நாட்டில் தீண்டாதார்’ என்னும் முதல் கட்டுரையிலிருந்து, அன்றைய சாதிகளையும், சாதிப்படிநிலைகளையும், தீண்டாச்சாதியினரின் இருப்பையும், சில சாதியினர் அடிமைகளாக விற்கப்பட்டும், வாங்கப்பட்டும் வந்த மனித அடிமை வியாபாரத்தையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
ராஜராஜனின் 29-ஆம் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த (பொ.ஆ. 1014) இரண்டு தொடர்ச்சியான கல்வெட்டுகளில், ‘தீண்டாச்சேரி’ பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தக்கல்வெட்டுகளில், ‘பறைச்சேரி’ என்ற மற்றொரு குடியிருப்பு பற்றிய செய்தியும் கிடைக்கிறது. “உறுதியாக, தமிழ்நாட்டில் தீண்டாச்சாதி என்று நன்கு அறியப்பட்ட பறையர்களின் குடியிருப்புப்பகுதி என்பதே இதற்கு அர்த்தம்”
அரசுஆணை பொறிக்கப்பட்டுள்ள கல் உடைந்துள்ளதால், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 40 கிராமங்களில், 33 கிராமங்கள் பற்றிய செய்தி மட்டுமே துல்லியமாகக் கிடைத்திருக்கிறது.. அந்த 33-இல், முப்பது கிராமங்களில், ‘பறைச்சேரி’ பற்றிய குறிப்பு வருகிறது. அதன் பொருள் என்னவென்றால், எல்லா கிராமங்களும், அவற்றின் எல்லைக்குள் பறைச்சேரியைக் கொண்டிருக்கவில்லை என்பதாகும்.
33 கிராமங்களில், இரண்டில் மட்டுமே ‘தீண்டாச்சேரி’ குறிப்பிடப்படுகிறது. ஆகவே தீண்டாச்சேரி இருப்பும் பரவலாக இல்லை என்று ஆகிறது. என்றாலும், தீண்டாச்சேரிக்கும், பறைச்சேரிக்கும் உள்ள உறவு தெளிவற்று உள்ளது.
இரண்டு கிராமங்களில் மட்டும், தீண்டாச்சேரியுடன், பறைச்சேரியும் இருந்துள்ளது. இது, அவை இரண்டும் வேறானவை என்பதையும் உணர்த்துகிறது. ஆயினும், தீண்டாச்சேரியில் வாழ்ந்த சமூகத்தினர் யார் என்பது தெரியவில்லை.
வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவொத்தூர் கல்வெட்டு, ‘நாடு ஆழ்வர்’ (நாட்டுத் தலைவர்) குடும்பத்தின் இரு சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலைக் குறிக்கும்போது, அந்த வட்டாரத்திலிருந்த எல்லா சமூகங்களையும் குறிப்பிடுகிறது.
அந்த கல்வெட்டில், பறையருக்குக் கீழ் பாணரும், அதற்கும் கீழ் சக்கிலியரையும் பதிவுசெய்கிறது. பறையருக்கு மேல்சாதிகளாக வேடர், உவச்சர், மன்றாடி, சிவபிராமணர், கைக்கோளர், வாணிகர், , செட்டிகள், இன்னும் பல சாதிகள், அந்தக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கிலியருக்குக் கீழே இறுதியாக உள்ள சாதியாக இருளரை மட்டுமே குறிப்பிடுகிறது. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பறையர், பொதுச்சமூகத்தில் கடைநிலைக்கு மிக அருகில் வைத்தே பார்க்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் அந்தக் கல்வெட்டிலிருந்து புரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவைகாவூர், கொருக்கை ஆகிய இரு ஊர்களில் உள்ள இரண்டு 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள், பல சமூகங்களைக் குறிப்பிடுகின்றன. பறையருக்குக் (கைவினைப்பறையர்) கீழே இறங்கு வரிசையில், சார்வக்காரர், ஈழம் புஞ்சை,(கள் இறக்குவோர்) ,ஆகியோரைக் காணமுடிகிறது. ஏறுவரிசையில், வண்ணார், நாவிதர், குயவர், பொற்கொல்லர், தச்சர், கருமான்கள், எண்ணைச்செட்டிகள், கைக்கோளர், வாணிகர், இன்னும் பலரையும் காணமுடிகிறது. இது, 15-ஆம் நூற்றாண்டில், சமூக மதிப்புறுநிலையில், பறையர் மிகவும் கீழான நிலையை அடைந்துவிட்டனர் என்பதை உறுதிசெய்கிறது.
இதற்கு மாறானத் தொடர்களையும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. முதலாம் ராஜராஜனின் கல்வெட்டில், ‘உழப்பறையரிருக்கும் கீழைச்சேரியும்’, ‘உழப்பறையரிருக்கும் மேலச்சேரியும்’ என்ற தொடர் 28 கிராமங்கள் குறித்த விவரணையில் வருகிறது. உழுதொழில் செய்த பறையர்களை இது குறிக்கிறது.
‘திருவொத்தூர்’ கல்வெட்டு ஓம்படைக்கிளவியில், ‘குதிரைக்குப் புல்லு பறிக்கிற பறையர்’ என்ற தொடரைக் காணமுடிகிறது. 12-ஆம் நூற்றாண்டின் ஒரு கல்வெட்டு, ‘பறைத்தறி’ என்று குறிப்பிடுகிறது. இது, நெசவுத்தொழில் செய்த பறையர்களைக் குறிப்பிடுகிறது.
15-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால விஜயநகரக் கல்வெட்டுகளில் பறைத்தறியும் குறிப்பிடப்பட்டுள்ளது… திருவைகாவூர், கொருக்கை ஆகிய ஊர்களின் கல்வெட்டுகள், ‘கைவினைப்பறையர்’ என்று குறிப்பிடுவதை இதனோடுப் பொருத்திப்பார்க்கலாம்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே தமிழ்மண்ணில், மனிதர்கள் அடிமைகளாக விற்கவும் வாங்கவும் பட்டிருக்கிறார்கள் என்னும் செய்தியை, கல்வெட்டுகளில் இருந்தும், ஓலைச்சுவடிகளில் இருந்தும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
காட்டாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருப்பாலத்துறையிலிருக்கும் ஒரு கல்வெட்டு, வெள்ளாளர், புலையர்களைத் தானம்பண்ணிக் கொடுத்ததைப்பற்றிக் கூறுகிறது. “ஒன்பது வேலி நிலமும், மனையும், மூன்று வெள்ளாளர் அடிமையாரையும், ஏழு புலை அடிமையாரையும் பரிசாகக் கொடுத்தான்” என்பதாக உள்ளது.
பெற்றோர், மகள், நான்கு மகன் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு புலையர்களின் பெயரும் பதிவாகியுள்ளது.. இதில் பெற்றோர்கள் பள்ளன், பள்ளி எனக் குறிப்பிடப்படுவதால், புலையர்களாய்ப் பள்ளர்கள் இருந்தனர் என்று கருதுவதற்கும் இடமளிக்கிறது. இந்தக் கல்வெட்டில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த செய்தி, உயர்சாதியான வெள்ளாளர்களும், அடிமைகளாகக் கைமாற்றிக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்பது.
சோழர், விஜயநகரம் காலகட்டங்களைவிட மிகவும் பிந்தைய காலகட்டமான 19-ஆம் நூற்றாண்டில், ஓலை ஆவணக்குறிப்புகளைப் பயன்படுத்தி பள்ளர்களின் நிலையை ஆராய்ந்ததில், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும், அதற்குத் தெற்கிலும் முதன்மையாக வேளாண்மையை மேற்கொண்டு வாழும் சமூகம் பள்ளர் சமூகம் என்று தெரியவருகிறது. ஆனாலும், . தர்ஸ்டன் குறிப்பின்படி, அவர்கள் பறையர்களுக்கு இணையான சமூக மதிப்புறு நிலையையேப் பெற்றிருந்தனர். ஆகவே, அவர்கள் ஊருக்கு வெளியே சேரிகளில் வாழும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி, நெரிஞ்சிலக்குடி கிராமத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 64 ஓலை ஆவணங்களில், ஏழு ஆவணங்கள் பள்ளர்கள் செய்துகொண்ட குத்தகை ஒப்பந்தங்கள் ஆகும். நில உடமையாளருக்குக் குறிப்பிட்ட அளவு தானியமும், பிறவும் அளிப்பதற்கு வாக்குறுதி அளிப்பதுபோன்ற ஓலை ஆவணங்களில் குறிப்பிடப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். உண்மையில் பள்ளர்கள் அடிமைகள் அல்லர், மாறாகக் குத்தகைதாரர்கள் என்றும் பொருள்கொள்ளலாம்.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ்நாட்டில் ரயத்துவாரி முறை அமல்படுத்தப்பட்டதுடன், 1843-இல் அடிமை ஒழிப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
சுருங்கச் சொன்னால், 1. சோழர் காலத்தில் தீண்டாதார் என்று கருதப்பட்ட பல சாதிகள் இருந்தபோதிலும், அவர்கள் யார்யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. 2. உழவு, புல்வெட்டுதல், தோல்தொழில், நெசவு உள்ளிட்ட கைவினைத் தொழில்களை மேற்கொண்டிருந்த பறையர் சமூகம், படிநிலையில், அடிமட்டத்திற்கு அருகிலேயே இருந்தனர். 3. பறையர்களும், புலையர்களும் அடிமைகளாக்கப்பட்டு, விற்கவும், வாங்கவும்பட்டனர். வெள்ளாளர்களும் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கின்றனர்.
பொது ஆண்டு 10-13-ஆம் நூற்றாண்டுகளில், சாதி ஒரு சமூக நிறுவனமாக ஓரளவிற்கு முழுமையடைந்தது என்பதற்குக் கல்வெட்டுச்செய்திகள் சான்றுபகர்கின்றன என்பதாக இரண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது.
சோழர்கால கல்வெட்டுகளில், அரச குடும்பத்தினர், அரசு அலுவலர், வட்டாரத்தலைவர், ஊர்மன்றத்தலைவர், வேளாண்குடிகள், கைவினைஞர்கள் என்று பலர் பல சூழ்நிலைகளில் காட்சி தருகிறார்கள். இவர்களுள் ஒரு பகுதியினரை கொடையாளர்களாகவும், இன்னொரு பிரிவினரை கொடை பெறுபவர்களாகவும் பிரிக்கலாம்.
கொடையாளர்கள் என்ற நிலையில் பிராமணர், வெள்ளாளர், வணிகர், ஆகியோர் பரவலாகக் காணப்படுகிறார்கள். எல்லா வகையிலும், பரவலாக முதன்மை இடத்தைப்பிடித்த இரு சமூகங்களாக பிராமணரையும், வெள்ளாளரையும் சொல்லலாம்.
வைதிகச் சடங்குகள் செய்பவர்கள் என்ற முறையிலும், கோயில் பூசைகளோடு நெருங்கிய தொடர்புகொண்டவர்கள் என்ற முறையிலும் பிராமணர்கள் முதலிடத்தைப் பிடித்தார்கள். இந்த சடங்கு வழியிலான அவர்களது தகுதியை, அவர்கள் பெற்ற நிலவுடமை மேலும் கூட்டியது.
முதல் ராசராசன் கல்வெட்டு ஒன்று பிராமண ஊர்களில் மற்ற சாதியினர் தங்கள் காணிகளை, விற்றுவிடவேண்டும் என்ற அரசு ஆணையை ஏந்தியுள்ளது.
பரம்பரையாக நிலவுடமையாளராக இருந்த வெள்ளாளர்கள் அடுத்த படிநிலையில் இருந்தார்கள். இவர்களுடைய ஊர்கள் வெள்ளான்வகை அல்லது வேளான் ஊர்கள் என்றும், ஊர்மன்றங்கள் ‘ ஊரார் ’ என்றும் அழைக்கப்பட்டன.
வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தமது தொழிலால் செல்வ வளம் பெற்றவர்களாகவும், நிலவுடமையாளர்களாகவும் இருந்தார்கள். வணிக ஊர்கள், நகரம் என்று அழைக்கப்பட்டன. அவ்வூர்களின் மன்றங்கள் நகரத்தார் எனப்பட்டன. பல ஊர்கள் சேர்ந்த நிலத்தொகுதி நாடு அல்லது சுற்றம் ஆகும். நாடுகளின் நிர்வாக அமைப்பு ‘ நாட்டார்’ என்று அழைக்கப்பட்டது.
‘கலனை’ அல்லது கீழ்கலனை என்ற சொல் சமூகப்படிநிலையில், நிலவுடமையாளரைச் சார்ந்து அடுத்த படிநிலையில் இடம்பெற்ற இனங்களைக் குறிக்கப் பயன்பட்டது. 1036-இல் பொறிக்கப்பட்ட ஒரு சிதம்பரம் கல்வெட்டு வியாபாரிகள், வெள்ளாளர்கள், சங்கரப்பாடியார், சாலியர், பட்டினவர் ஆகியோரைக் குடிகள் என்றும், தச்சர், கொல்லர், தட்டார், கோலியர் ஆகியோரைக் கீழ் கலனை என்றும் குறிப்பிடுகிறது.
’11-ஆம் நூற்றாண்டு முழுவதும் சாளுக்கியர், பாண்டியர், சேரர், கீழைக்கங்கர், இலங்கையர் என்று பல அரசர்களோடு சோழர்கள் பெரும்போர் நிகழ்த்தும் காலமாக இருந்திருக்கிறது. அதன் காரணமாக, நிலத்தில் சமூக உடைமை போய், தனி உடைமை உருவாகியது. மேலும் அப்போர்கள், பெரிய அளவில் மக்களின் இடப்பெயர்வுக்கும் காரணமாயிருந்திருக்கிறது. தமிழ் வீரர்கள், வணிகர் முதலியோர் வெளியில் சென்றனர். காட்டாக, கோலார் மாவட்டத்தில் ஆவனி முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள், தொண்டைமண்டல நிலக்கிழார் அம்மாவாட்டத்தில் குடியேறியதை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டுக்குள்ளேயும் மக்கள் இடப்பெயர்ச்சி பரவலாக இருந்தது. அதுவரை அரசுகளின் தாக்கத்துக்கு ஆளாகாமல் ஒதுங்கியிருந்த பல இனத்தவர் சோழ அரசால் ஈர்க்கப்பட்டு அரசியல்மயப்படுத்தப்பட்டார்கள். சோழரின் பெரும்படையில் சேர்ந்த பலர் முதன்முறையாக அரசியலுக்கும், சமவெளிப் பண்பாட்டிற்கும் அறிமுகமானார்கள். இந்தவகையில், சோழப்படைக்கு ஈர்க்கப்பட்ட ஒரு போர்மரபு இனம் ‘பள்ளி’ ஆகும். சோழப்படையின் வில்வீரர் பிரிவில் இவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். நாளடைவில், பள்ளிகள் நிலக்கிழார்களக மாறினார்கள் என்று தெரிகிறது..
போர்மரபு இனமாக இருந்து நிலவுடமை இனமாக மாறிய மற்றொரு இனம் ‘சுருதிமான்’ இனமாகும். அவர்கள், அகம்படியார் (வீரர்) என்றும் குறிக்கப்படுகிறார்கள்.
‘நத்தமான்’ என்னும் இனம் யாதவக் குலத்தலைவர் என்றும் சித்திரமொழி பெரியநாட்டார் என்றும் பெரம்பலூர் வட்டாரக் கல்வெட்டில் கூறப்படுகிறது. இந்த அடைமொழிகள், இந்த இனத்தவர் முதலில் கால்நடைவளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்றும், 12-13-ஆம் நூற்றாண்டுகளில் நிலக்கிழார்களாக மாறிவிட்டனர் என்றும் காட்டுகிறது. இதை 1184 ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவரங்கம் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு உடைந்த கல்வெட்டில் காணப்படும் அகம்படிய வேளானும், பள்ளி வேளானும் என்ற சொற்றொடர் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, அகம்படியர் மற்றும் பள்ளி இனங்களைச் சேர்ந்தவர்கள், சாதி மேல்நிலையாக்கமாகும் பொருட்டு வேளாளர் தகுதிக்கு உரிமை கோரினார்கள் என்று அதனை விளக்கலாம்.
சோழராட்சிக் காலத்தின் பிற்பாதியில், 11-12-ஆம் நூற்றாண்டுகளில் உண்டான ஒரு சமூகக்கூறு, வலங்கை, இடங்கை என்னும் இரட்டைச்சமூக பிரிவினையாகும். இப்பிரிவினை, அடிப்படையில் படையமைப்பு சார்ந்ததாகக் காணப்படுகிறது.
இலங்கையில், ‘பொலன்ன நுவை’ நகரில் உள்ள 1120-ஆம் ஆண்டை ஒட்டி எழுதப்பட்ட விஜயபாகுவின் கல்வெட்டில், முதன்முதலாக ‘இடங்கை’ படைப்பிரிவு காணப்படுகிறது. அக்கல்வெட்டில் இலங்கை அரசனிடம் பணிபுரிந்த தமிழ் வேளைக்காரப்படை, வலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர், பரிவாரக்கொந்தம், பலகலனை என்ற பிரிவுகளைக் கொண்டிருந்தது என்ற செய்தி கிடைக்கிறது.
13-ஆம் நூற்றாண்டில்தான், இடங்கை 98 சாதிகள் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவை, பெரம்பலூர் வட்டம் ஊட்டத்தூர், வாலிகண்டபுரம், விருத்தாச்சலம் வட்டம் திருவரஞ்சுரம் ஆகிய ஊர்களில் உள்ளன. அந்தணர், ஆரியர், நியாயத்தார், கைக்கோளர், வாணிகர், பன்னாட்டார், சாலியர் முதலானோர் இடங்கை தளத்தில் இருந்த சில சாதிகள்.
சோழர் படையில் முக்கிய இடத்தை வகித்த கைக்கோளரும், சோழர் படையின் ஒரு பிரிவினராக இருந்த நியாயத்தாரும் 15-ஆம் நூற்றாண்டில் நெசவுத் தொழிலுக்கு மாறியிருக்கின்றனர்.
நிலவுடமையில் 10-ஆம் நூற்றாண்டுவரை இருந்துவந்த எளிய கட்டமைப்பு மறைந்து, செறிவான சிக்கலான கட்டமைப்பு, பிற்கால சோழர் காலத்தில் உருவாகிறது என்பதைக் கல்வெட்டுகளில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. புதிய நிலவுடமை இனங்கள் தோன்றியதன் காரணமாக, முரண்பாடுகள் வளர்கின்றன. ஒவ்வோர் இனமும், தங்கள் நிலையை உயர்த்தவும், உறுதிசெய்யவும் கூட்டமைப்புகளை உருவாக்குகின்றன. அந்தச்சூழ்நிலையில், அதுவரை இலைமறைவு காய்மறைவாக இருந்துவந்த சாதி உணர்வு தங்குதடையின்றி வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதிபற்றிப் பேசுவதில் பெருமைப்படுகிறார்கள்.
அடுத்த சில நூற்றாண்டுகளில், பல்கிப்பெருகிய சாதிச்சமூகத்துக்கு உறுதியான அடித்தளம், 12-13-ஆம். நூற்றாண்டுகளில் அமைந்துவிட்டது. பொருளாதார வசதிபெற்ற கொடையாளிகள் உருவாக்கியவைதான் கல்வெட்டுகள். பறையர், புலையர் போன்றோர்பற்றிய செய்திகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனாலும், அந்தச் செய்திகளைக் கொண்டே அவர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பரிதாப நிலையில் இருந்தனர் என்பதை கணித்தறிய முடியும். சமூகத்தின் ஒரு பிரிவினர், தீண்டத்தகாதவர் என்று வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள், நிலவுடமையாளர்களின் பிற சொத்துக்களைப்போன்று கொத்தடிமைகளாக நடத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கும் வழக்கம் எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆயினும், இவ்வழக்கம் கங்கை வெளியிலும், வடக்குத்தக்காண பீடபூமியிலும், குப்தர், வாகாடகர் காலத்தில் பொதுத்தன்மையாக இருந்திருக்கிறது. பல அரசர்கள் உயர்குடியினர் வழங்கிய தானங்கள் பற்றிய ஆவணங்களைச் செப்புப்பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் பொறித்துள்ளனர்.
அந்தக் கல்வெட்டுகளின் இறுதிப்பகுதியில், கொடுக்கப்பட்டத் தானங்களுக்கு ஊறுவிளைவிப்பவர்களுக்கு என்னென்ன கேடு நேரிடும் என்று சொல்லும் ‘ஓம்படைக்கிளவிகளும்’ இடம்பெற்றுள்ளன. காட்டாக, ஒரு கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில், “தானம் கொடுத்த நிலத்தை அபகரித்தவன், அவனுடைய பித்ருக்களுடன் மலத்திலும், அழுகலிலும் நெளியும் புழுவாகக் கிடந்து உழல்வான்” என்று இருக்கிறது. “பத்தாயிரம் பசுக்களைக்கொன்ற பாவத்திற்கு ஆளாவான்” என்றும், “ நரகத்தில் அறுபதினாயிரம் வருஷங்கள் உழல்வார்கள்” என்றும்கூட கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், இந்த வழக்கம், பல்லவ மன்னன், இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் பரவியிருக்கிறது. இப்படி, பிராமணர்களுக்கு ஆதரவாக ஓம்படைக்கிளவிகள் இருக்கிறது என்றால், பிற்காலக் கல்வெட்டுகளில் பிராமணர்களுக்கு எதிரான ஓம்படைக்கிளவிகளும் இடம்பெறுகின்றன. ரத்தினகிரி கல்வெட்டில், “இந்த உடன்படிக்கைக்கு ஊறு விளைவிப்பவன் பிராமணனே ஆனாலும், கண்கள் பிடுங்கப்படும், மூக்கு அறுக்கப்படும்” என்று இருக்கிறது. இது, 13-ஆம் நூற்றாண்டிலேயே பிராமணர்களுக்கும், பிராமணக் கருத்தியலுக்கும் எதிராக நிலவிய மக்களுடைய தீராப்பகை உணர்ச்சியைக் காட்டுகிறது எனலாம்.
தென்னிந்தியாவில் சத்திரியர் என்று முறையாக அழைக்கப்பட்ட எந்தக் குழுமங்களும் இல்லை. இடைக்காலத் தமிழ்நாட்டில், சத்திரியர்களின் பாத்திரத்தை ஆற்றியவர்களாக, உயர்சாதியினரான வெள்ளாளர்களைக் கருதமுடியும்.
பிராமணர்களும், வெள்ளாளர்களும் நேரடியாகப் பயிர்த்தொழில் செய்யவில்லை. உழுகுடிகளைக்கொண்டுத் தங்கள் நிலங்களில் பயிரிட்டிருக்கின்றனர்
இதுவரை, பொதுத்தளத்தில் பேசப்படாத ஓர் உழவர்கிளர்ச்சி, 15-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது. நா, வானமாமலை மட்டுமே அதுபற்றிய ஆய்வுகளை மேர்கொண்டதாகத் தெரிகிறது. ஆடுதுறை, கீழப்பழுவூர், விருத்தாச்சலம், பெண்ணாடம், எலவானாசூர், கொருக்கை, திருப்பனந்தாள், திருவைகாவூர், திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள விஜயநகர அரசுக் காலத்தைச்சேர்ந்தக் கல்வெட்டுகளில் இதற்கு சான்றுகள் உள்ளன. .
இடங்கை, வலங்கை சாதிகள் இணைந்து நடத்திய அந்த உழவர் கிளர்ச்சி முதலில் தென்பெண்ணைக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. பின்னர் அது தெற்குநோக்கி, கொள்ளிடத்திற்கும், காவிரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பிற்கும் பரவியிருக்கிறது.
மேல்தட்டிலிருந்த அதிகார வர்க்கத்தில், பெரும்பாலும் தமிழ்நாட்டிற்கு வெளியிலிருந்துவந்த படைத்தலைவர்களான கன்னடிய நாயக்கர்களும் அவர்களை அண்டிப்பிழைத்த உள்நாட்டினரும் இருந்தார்கள். இரண்டாம் வர்க்கம் நிலவுடமையாளர்களானக் காணியாளர்களைக் கொண்டது. மூன்றாம் வர்க்கத்தில், இடங்கை, வலங்கைப் பிரிவினர் இருந்தார்கள். வலங்கை, இடங்கைப் பிரிவினரை காணியாளர் நசுக்கினர். இந்த இரண்டு பிரிவினரையும், அதிகாரவர்க்கத்தினர் நசுக்கினர்.
மூன்றாம் வர்க்கத்தில் இருந்த இடங்கை, வலங்கையைச் சேர்ந்த உழுகுடிகளும், கைவினைத் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து, மற்ற இரு வர்க்கங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். வெகு விரைவில், இரண்டாம் வர்க்கமான காணியாளர்கள் இவர்களுக்குப் பணிந்ததோடு, இவர்களுடன் சேர்ந்து அதிகார வர்க்கத்தை எதிர்க்க முன்வந்தார்கள். சிறிது காலத்தில் கிளர்ச்சி ஓர் எதிர்ப்பு இயக்கமாகவே மாறியது.
இக்கிளர்ச்சியின் போக்கைப் பின்வருமாறுத் தொகுத்துக்கூறலாம். விஜயநகர ஆட்சி, தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கிய அய்ம்பது ஆண்டுகளுக்குள் ( 1370- 1420) வரிப்பளு பொதுவாக அதிகரித்தது. பரம்பரைக் காணியாளர்களும், புதிதாகவந்த அதிகார வர்க்கத்தினரும் பல வகைகளில் நில உடமைகளைப் பெருக்கிக் கொண்டதோடு, உழுகுடிகளையும், கைவினைத் தொழிலாளர்களையும் சுரண்டத் துவங்கினர். இதன் காரணமாகவே கிளர்ச்சி வெடித்தது.
விஜயநகர மன்னன் குடிகளின் புலம்பலுக்கு ஒருசிறிது செவிகொடுத்தான். அதனால் ஊக்கமடைந்த உழுகுடிகள் மற்றும் கைவினைத்தொழிலாளர்களின் கிளர்ச்சி வேகமெடுத்தது. காணியாளர்கள் உடனடியாகப் பணிந்தார்கள். அதிகார வர்க்கமும் அப்போதைக்குப் பணிந்திருக்கலாம்.
“1426-ஆம் ஆண்டின் உழவர் கிளர்ச்சி, இடைக்கால இந்தியாவில் நடந்த ஒருசில நிலமானியக் கிளர்ச்சிகளுள் முக்கியமானது. ஆயினும், அது ஏன் மேலும் தொடரவில்லை என்பதற்கு அக்காலச் சாதிச்சமூக முரண்பாடுகளுக்கும், வர்க்கமுரண்பாடுகளுக்கும் இடையே நிலவிய ஒவ்வாமைத்தன்மையாக இருக்கலாமோ என்பது ஆய்வுக்குரியதாக இருக்கிறது.”