தமிழகத்தின் சித்தாந்தமற்ற அரசியல்
கார்த்திகேசு சிவத்தம்பி – (நேர்காணல்: ஆர். விஜயசங்கர்)
பேராசிரியர் சு. இராமசுப்பிரமணியன்
1949-இல் தொடங்கப்பட்ட திராவிடமுன்னேற்றகழகம், 1965-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967-ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணாவே குறிப்பிட்டதுபோல், எதிர்பார்த்ததற்கு முன்பாகவே, தமிழகத்தின் ஆட்சிபீடத்தில் அமர்ந்தது.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கலைஞர், ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமைதாங்கினார். காலப்போக்கில், எம்ஜியார் தலைமையில் அஇஅதிமுக, வைகோ தலைமையில் மதிமுக என்று திமுக சிதறியது, என்றாலும், கலைஞரும், செல்வி ஜெயலலிதாவும் உயிருடன் இருந்தவரையில் அந்த இருபெரும் திராவிடக்கட்சிகளே உறுதியாகத் தமிழகத்தை ஆண்டுவந்திருக்கின்றன.
அவர்களின் மரணத்திற்குப்பிறகான கலங்கிய அரசியல் சூழலில், திராவிட அரசியல் சித்தாந்தம் பற்றி, சுருக்கமாகவும், நிறைவாகவும் எடுத்துரைக்கும் ‘இலங்கையைச்சேர்ந்த மிகச்சிறந்தத் தமிழறிஞரும், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியினை 1940-களிலிருந்து ஆழமாக ஆய்வுசெய்து வருபவருமான கார்த்திகேசு சிவத்தம்பியின்’ நேர்காணலை, இன்றைய இளைஞர்கள் பார்வைக்குக் கொண்டுசெல்வது அவசியமாகிறது.
“தமிழகத்தின் அரசியலில் 40 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகிற திராவிட இயக்கம் இன்று அடையாள நெருக்கடிக்கு (identity crysis) ஆளாகியுள்ளது. திராவிடமுன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்ற கழகம் ஆகிய திராவிடக்கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு, ஆர் எஸ் எஸ் அமைப்பால் இயக்கப்படும் பிஜேபியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வதையும், ஆட்சி அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்வதையும்விட சிறந்த சாட்சியம் வேறு எதுவும் தேவையில்லை.:” என்று இந்த நேர்காணலுக்கான சரியான காரணத்தை துவக்கத்திலேயே முன்வைக்கிறார், சிவத்தம்பியை நேர்காணல்கண்ட இதழாளர் ஆர்.விஜயசங்கர்.
“ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் ‘ என்னும் சங்பரிவாரின் கொள்கை அடிப்படையில் முழுமையாகச் செயல்படும் கட்சி பிஜேபி. ஆனால், அதற்கு முற்றிலும் எதிராக மொழிவழி தேசியம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய இருபெரும் சங்கமத்தின் விளைவாகவே, தமிழகத்தில் வலிமைவாய்ந்த அரசியல் சக்தியாக திராவிட இயக்கம் உருவெடுக்கமுடிந்தது என்னும் சிவத்தம்பியின் கருத்தையே, அதற்குக் காரணமாகவும் கூறுகிறார் ஆர். விஜய்சங்கர்..
அன்றைய சென்னை மாகாணத்தில், பிள்ளைமார்கள், நாயர்கள், கம்மா, காபூ, ரெட்டியார்கள் உள்ளிட்ட பிராமணர் அல்லாத பல சாதிகள் ஒருங்குசேர்ந்து ஒரு குழுவாக செயல்படும் சூழல் உருவானதை திராவிட இயக்கம் தோன்றுவதற்கான முதல்படியாக, சிவத்தம்பி முன்வைக்கிறார்.
குறிப்பிட்ட மொழிகளைச்சார்ந்த குழுக்களின் ஒரு பிரிவு என்ற பொருளுடன் முதலில் தொடங்கி, அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலிருந்து திராவிட இயக்க சித்தாந்தம் மேலும் வளர்ச்சியடைந்ததாக அவர் கூறுகிறார்.
“ஒரு பிராமணர் அல்லாத காங்கிரஸ்காரர் என்னிடம் கூறியதுபோல, சென்னையில் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு, ஒருவிதத்தில் காந்தியடிகளே காரணமாக இருந்தார். ஏனெனில் வைக்கம் போராட்டத்தின்போது மக்கள் மனங்களில் கனன்றுகொண்டிருந்த எண்ண ஓட்டங்களை காந்தி கணிக்கத்தவறிவிட்டார்” என்பதாக திராவிட இயக்கம் தோன்றுவதற்கான மற்றொரு காரணத்தையும் பதிவுசெய்கிறார்.
“விடுதலைப்போராட்ட வீரர்கள், மிகப்பெரும் அரசியல் வெற்றியைச் சந்தித்த நேரத்தில், தமிழகத்தில் சமூக முரண்பாடுகள் முன்னுக்கு வந்தன. 1944-இல் திராவிடர்கழகம் உருவாக்கப்பட்டது. 1949-இல் அது உடைந்து, திமுக உருவானது”
அடிப்படையில் குமுறல்களின் வடிவமாகவே திராவிட இயக்கம் உருவெடுத்தது. இந்த குமுறல்களுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது எவையெனில், ஒன்று, சாதிய ஏற்றதாழ்வுகள், இரண்டாவது, ஏற்றதாழ்வுகளை அங்கீகரித்து, அதன்காரணமாக பிரிட்டிஷ் ஆட்சி வழங்க இருந்த அரசுப்பதவிகளின் பகிர்மானம் ஏற்படுத்திய பிரச்சினைகளும் ஆகும்.”
திராவிட இயக்கம் எங்கே வழிதவறியது? என்னும் கேள்விக்கு, “இது பிராமணியத்தை எதிர்ப்பது என்ற பெயரால், மொத்தத்தில் மதத்தையே நிராகரித்தது. மார்க்சே ஏற்றுக்கொண்டதுபோல, பழமையான , சமநீதியற்ற ஆதிக்க சமூகத்தில் மதமானது சமூகத் தேவையாக இருக்கிறது.
“மதமானது ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு..இதயமில்லா உலகில் இதயம்.ஆன்மா அற்ற சூழலில் ஆன்மா. தமிழகத்தில் ஒருபுறம் உயரிய கோபுரங்களைக்கொண்ட கற்களால் கட்டப்பட்ட கோயில்கள்; மறுபுறம் களிமண்ணால் கட்டப்பட்ட கருமாரியம்மன் கோயில்கள், மற்றும் கிராமத்தெய்வங்களின் கோயில்கள் என்ற பெருத்த வேற்றுமைகளைக் காணஇயலும்.. திராவிட இயக்கத்தால் சமஸ்கிருதம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மக்கள் கருமாரியம்மன் கோயில்களுக்கும் இதர சிறுதெய்வங்கள் கோயில்களுக்கும் சென்றனர். திராவிட இயக்கம் இதற்காக எதுவும் செய்யவில்லை.”
இரண்டாவதாக, திராவிட இயக்கம் முன்னிறுத்திய சமூக அரசியல் குமுறல்களுக்கு அடிப்படையாக இருந்த பொருளாதாரத்தளம்பற்றி அவ்வியக்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. திராவிட இயக்கம் அரசியல் அதிகாரத்திற்கு வந்தபிறகு இக்குறைபாடு வெளிப்படையாய்த் தெரிந்தது.”
“மூன்றாவதாக, திருமணப்பதிவுகள் மற்றும் இட ஒதுக்கீடுகளில் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவது போன்றவற்றில் உரிய அக்கறை செலுத்தப்படாததால் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டப் பிரிவினரின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது. ஆனால் திராவிட இயக்கமோ, நடுத்தர சாதியினரின் சமூக அங்கீகாரம் உயர்வதிலேயே கவனம் செலுத்தியது.
மதத்தை நிராகரிப்பது என்ற அவர்களின் சொந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால்கூட, தலித் உள்ளிட்ட அனைத்துப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முயன்றிருக்கவேண்டும்” என்று கூறுகிறார், சிவத்தம்பி.
அடுத்து, பெரியார் பற்றியும், அண்ணா மற்றும் கலைஞர் பற்றியும் தனது கருத்துகளைப் பதிவுசெய்கிறார், சிவத்தம்பி.
பெரியார் முன்வைத்த சமூகக்குமுறல்களை எல்லாம் அரசியல் ரீதியாக அன்று செயல்படுத்தமுடியாமல் போயிருக்கலாம். அதனால் பெரியார் அரசியலைவிட்டு விலகியே இருந்தார்.
யார் அரசியல் நடவடிக்கைகளைக் கோரியிருக்கவேண்டுமோ அவர்(பெரியார்) அதைச் செய்யவில்லை. யார் அரசியல் நடவடிக்கைகளை விரும்பினார்களோ அவர்கள் (அண்ணாவும், கலைஞரும்) கலாச்சாரத்தை அரசியலாக்கினார்கள்.”
கலாச்சாரத்தை அரசியலாக்குவது என்பதைப் புரிந்துகொள்ளாமல் திமுக-வின் வளர்ச்சி, பலம், பலவீனங்களைப்புரிந்துகொள்ள முடியாது. இது அடிப்படையில் தகவல் தொடர்பு முறையிலான திட்டம். மேடைப்பேச்சுகள், நாவன்மை, நாடகம், பத்திரிகை மற்றும் சினிமா மூலமானவை ஆகும்.
தமிழ் மதத்தை மீட்பதை திமுக நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதற்குப்பதிலாக, தமிழ்க்கலாச்சாரத்தை மீட்பதில்தான் கவனம் செலுத்தினர். சங்க காலத்தைப் புனிதமானதாகச் சித்தரித்தனர். சிலப்பதிகாரத்தைப் புனிதமானதாக வர்ணித்தனர். சிலப்பதிகாரம் முழுவதும் மந்திர வித்தைகள் நிறைந்தது..ஆனால், அதன் உள்ளடக்கத்தில் அரசியலுக்கான அம்சத்தைக் கண்டெடுக்க முடிந்தது. அது சேர, சோழ, பாண்டிய ஆட்சிகளின் அடையாளமாகத் திகழ்ந்தது.”
பெரியார் முன்னெடுத்த சாதிய ஒழிப்பிற்கு மாறாக, தமிழகத்தில் சாதிய மோதல்கள் அதிகரித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, சிவத்தம்பியின் பதில் கவனம்கொள்ளத்தக்கது.
“சாதியின் சமூகப்பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உருவான திராவிட இயக்கம், கீழ் மற்றும் நடுத்தர சாதியினரிடையே சமத்துவ உணர்வை உருவாக்குவதற்கு மாறாக அவர்களிடையே சாதிய உணர்வுகளை உருவாக்கிவிட்டது.
பிராமணரல்லாத சாதியினரிடையேயான ஜனநாயகப் பரவலாக்கலை அதன் தர்க்க ரீதியான இலட்சியம்வரை திராவிட இயக்கம் எடுத்துச் சென்றிருந்தால், அதன் பயன்கள் தமிழ்ச்சமூக்கத்தின் ஒடுக்கப்பட்ட பகுதியினருக்கும் போய்ச்சேர்ந்திருக்கும்.
“இப்போதுள்ள நிலையில், ஒரு சாதாரண பிராமணரல்லாத தமிழ்ப்பெற்றோர் ஆங்கிலவழியிலான கல்வியே பிராமணியத்தை எதிர்கொள்வதற்குள்ள வழியென்றும், அகில இந்தியச்சந்தையில் உரிய இடத்தைப் பெறுவதற்கான ஒரே வாய்ப்பு என்றும் கருதுகிறார்கள் என்பதனால் பிரிவினைவாதத்திற்குத் தமிழகத்தில் இடமிருக்கமுடியாது” என்று தமிழகத்தில் பிரிவினைவாதத்திற்கான வாய்ப்பு இனி இல்லை என்று கூறுகிறார்.
திராவிட இயக்கம் இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதற்கான காரணத்தையும் சிவத்தம்பி கூறுகிறார்.
“திராவிட சித்தாந்தத்தால் உருவான அரசியல் தன்மையை நாம் மறக்கலாகாது. இந்த மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலேயே பேசியதால் திராவிட இயக்கத்தால் மக்களைத் திரட்டமுடிந்தது.:
“திராவிட இயக்கம் இன்றும் பொருத்தமாய் நீடிப்பதற்கு நான் இன்னுமொரு காரணத்தையும் பார்க்கிறேன்..சென்னையில் உள்ள தலைசிறந்த நிபுணர்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு. அவர்கள் அனைவரும் அடிப்படையில் பெரியாரியவாதிகளாக இருப்பதுகண்டு வியந்திருக்கிறேன். சர்வதேசப்புகழ்பெற்ற ஒரு பொறியாளரும், இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு மருத்துவரும், பெரியார் இல்லாமல் தாங்கள் இந்த அளவு வளர்ந்திருக்கமுடியாது என்கிறார்கள். இதுபோன்ற கலாச்சார ரீதியிலான உரிமை நிலைநிறுத்தம், மக்களுக்கு சக்தியைத் தந்துள்ளது.”
ஆரம்பகாலத்தில் தேசிய இயக்கத்திற்கு எதிராகக் களமாடிய திராவிட இயக்கங்கள், பிற்காலத்தில் திராவிட இயக்கக் கூறுகளோடு தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டனர் என்பதற்கு எம் ஜி ஆர், கலைஞரின் செயல்பாடுகள் சான்றாக உள்ளன என்கிறார், சிவத்தம்பி’
“கலைஞரிடம் இதை கூடுதல் தெளிவாகப் பார்க்கலாம். சங்க இலக்கியம் பற்றிப்பேசும் அதே சமயத்தில் அகில இந்திய கூட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். அவரது குடும்பத்தினர், அவரைச் சார்ந்தோர் பெரிய முதலாளிகளாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், தென்னிந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழர்களை அடையக்கூடிய பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.”
திராவிட இயக்கத்தின் எம்.எல்.ஏ, எம்.பி-க்களின் வர்க்கக்குணங்களை ஆராய்ந்து பார்த்தால், பொருளாதார நலன்களைப் பொறுத்தவரை, அண்ணா போற்றி மதித்த சித்தாந்தங்களில் நம்பிக்கையற்றவர்கள் என்பது புரியும். இதுதான் முரண்பாடு. திராவிட இயக்கத்திற்கு முன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமானப் பெரிய பொருளாதாரக் கொள்கையோ, திட்டமோ கிடையாது.
இந்தியா விடுதலை பெற்ற புதிதில் வலிமையாக இருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களைப் பின்னுக்குத்தள்ளி, திராவிட இயக்கம் .எப்படி முன்னேறியது என்பதற்கு, சிவத்தம்பி இப்படிப் பதிலளிக்கிறார். “கம்யூனிஸ்டுகள் கூறுவதை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் அண்ணா வல்லவராக இருந்தார். உழவர்தினம் (பொங்கல்) தமிழர்களின் மேதினம் என்றார். கூடவே அந்த காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகளுக்கு வேறுசில பிரச்சினைகளும் இருந்தன என்கிறார்.
1944-இல் சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்து திராவிடர் கழகம் தொடங்கி, பெரியார் மாபெரும் தவறுசெய்தபோது அண்ணா அவரிடமிருந்து விலகினார். அந்த இணைப்பு நடந்திருக்கக்கூடாது. தாலிகட்டுவதற்கு முன்பாகவே விவாகரத்து ஆனதுபோல் ஆகிவிட்டது. சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் தனித்தனியாகவே இருந்தன.
இந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக, அண்ணா பயன்படுத்திக்கொண்டார். மொழி, கலாச்சார அடையாளங்களோடு, சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் ‘பணத்தோட்டத்தில்’ சொல்லியிருப்பது மாதிரியான சமத்துவத்தைக் கற்பனைசெய்துகூடப் பார்க்கமுடியாது. அது பிராமணர்களுக்கு எதிரானது. மனிதகுலம் முழுவதும் சமம் என்று கூறுவது. சமுதாய சமத்துவத்துக்கு மட்டுமல்லாது, பொருளாதார சமத்துவத்துக்கும் குரல் கொடுப்பது. அண்ணா இந்தத் தளத்தில் இருந்துதான் பேசினார்..
“அண்ணா முதல்வரானபின் அவர் செயல்பட்டவிதம் பற்றி எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. பொருளாதார சமத்துவத்தை நிறைவேற்ற அவர் உண்மையாகவே முயற்சி செய்தார். ஆனால், கட்சிக்குள் உட்பூசல் அதிகமாக இருந்ததால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த விரக்தியில்தான், எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டதாக, சி.பி.எம்.கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம் கூறியிருக்கிறார்.
இலக்கியத்திற்குத் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு பற்றிப் பேசும்போது, “மேடைப்பேச்சு, நாடக, திரைப்பட வசனங்கள் தவிர்த்து, படைப்பிலக்கியத்தில் இவர்களது பங்களிப்பு எதுவும் இல்லை. இன்றுவரை, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி அல்லது லா.சா.ரா போன்ற புகழ்பெற்ற சிறுகதையாசிரியர்கள் யாரும் இவர்களிடமிருந்து உருவாகவில்லை.
அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட நாடகபாணி, தமிழ் பாரம்பரியக் கூத்துக்கலையிலிருந்து வந்ததல்ல..ஆனால் கேரளா, கர்னாடகாவில் அவற்றிற்குக் கதகளி, யக்க்ஷகானத்தோடு தொடர்பு இருந்தது. தமிழ் அடையாளங்களைப்பற்றிப் பெரிதாகப்பேசிய திராவிட இயக்கம், சமஸ்கிருத கலப்பில்லாத கிராமங்களின் தமிழ்க்கலாச்சாரப் பாரம்பரியமான கூத்தைக் கண்டுகொள்ளாதது ஒரு முரண்.
சாதிகளுக்கான ஆதாயம்பற்றிக் கவனமாக இருந்த திராவிட இயக்கம் தனியார்மயம் பற்றி வாய்திறப்பதில்லை. பொதுத்துறைப் பலவீனமடைந்தால், அடித்தளமே நொறுங்கிவிடும். அவர்கள் உலகமயத்தின் தீய விளைவுகளைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். தங்களின் சித்தாந்தத்தை முற்போக்காக முன்னெடுத்துச்செல்லத் தவறிவிட்டனர்.
இது, தலைமையின் வர்க்கக்குணத்தால் ஏற்பட்டதா? என்னும் கேள்விக்கு, “அப்படி அல்ல, அவர்கள் எளிய நிலையிலிருந்து படிப்படியாக அதிகார நிலைகளுக்கு வந்தவர்கள். கலைஞர் ஒரு முதலாளித்துவவாதி என்று கூறிவிட முடியாது. திருக்குவளையில் ஒரு எளியக் குடும்பத்திலிருந்து வந்தவர். இந்த அளவு அவர் உயர்ந்தது பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களைப்பொறுத்தவரை, அரசியல் சமத்துவம், பொருளாதார சமத்துவத்தைக் காட்டாது. எனவேதான், பிந்தைய காலங்களில் வர்க்க நலன்களில் மூழ்கிப்போய்விட்டார்கள். எனவே உழைக்கும் வர்க்கம் ஆட்சியில் அமர்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி பற்றிய மற்றொரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது , “பிரச்சினை என்னவெனில், கருணாநிதி தமிழின அடையாளமாக உள்ளார். அதாவது சிறந்த உரை வீச்சாளர். ஆனால், தமிழகத்தின் துயரம் என்னவெனில் அரசியலிலிருந்து சித்தாந்தத்திற்கு விடையளிக்கப்பட்டதுதான்” என்றும் கூறுகிறார்.
தமிழ்வழிக்கல்வி பற்றிய கேள்விக்கு, “தொடக்க வகுப்புகளில் தமிழ்வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பெரிய அதிகாரிகளும், அறிவுஜீவிகளும் எதிர்த்தார்கள். நாம் சமஸ்கிருத மேலாதிக்கத்திலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்பது பற்றியே பேசுகிறோம். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின்பு, உண்மையாகவே காலனியாதிக்க எண்ணங்களிலிருந்து விடுபடவே இல்லை. அதன் விளைவாக, இன்றும் காலனிகால அதிகாரவர்க்கம் உள்ளது. அது மக்களின் தேவைகளை உணர்வதில்லை.
1967 முதல், எந்த முதல்வரும் தமிழ்வழிக்கல்வியைக் கொண்டுவரவில்லை. சமூக இடைவெளி, மேல், கீழ் தட்டுகளுக்கிடையிலான இடைவெளி ஒருபோதும் தொடப்படவில்லை. தலித் இயக்கம் இதிலிருந்துதான் தொடங்குகிறது.” என்று கருத்துரைக்கிறார் சிவத்தம்பி.
இச்சிறுநூலை வாசித்து முடிக்கும்போது, தமிழ்மொழியையும், தமிழ்க்கலாச்சாரத்தையும் ஆயுதமாககொண்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை, அரசியல் சதுரங்கத்தில் வீழ்த்தி, மிக வேகமாக வளர்ந்து நிலைத்துவிட்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் பிராமணர் அல்லாத மக்களின் சுயமரியாதையை உயர்த்தி, கல்விபெற்று வேலைவாய்ப்புகளையும் பெற்று வளர்வதற்குக் காரணமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதே வேளையில், இடைநிலைச்சாதிகளின் உயர்வுக்குக் காரணமாக இருந்த திராவிட இயக்கம், தலித் மக்கள் மேலெழுந்து வருவதற்கான ஆக்கப்பூர்வமானப் பணிகளை முன்னெடுக்கவில்லை என்பதையும் ஒரு குறையாகப் பார்க்கவேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்தளத்தில், தெளிவான திட்டமிடல் இல்லை என்பதையும், மாநிலம்சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்கள், அண்ணா காலத்திற்குப் பிறகு வழிமாறி, தனக்கு முற்றிலும் முரணான கொள்கையை உடைய பி.ஜே.பி. கட்சியுடன் உறவுவைத்ததால் திராவிட இயக்கம் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
‘திராவிட இயக்கத்தால் வாழ்ந்தோம், வளர்ந்தோம்’ என்று ஒரு பிரிவினரும், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று மற்றொரு பிரிவினரும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்நூலை (முதல் பதிப்பு – 2008) வாசிப்பது இருசாராருக்குமே, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் எனலாம்.
நூல் விபரம்
தமிழகத்தின் சித்தாந்தமற்ற அரசியல்
நேர்காணல் : கார்த்திகேசு சிவத்தம்பி
நேர்கண்டவர் : ஆர். விஜய்சங்கர்
தமிழில் :இ.எம்.ஜோசப், கா.சுவாமிநாதன், சி.சுப்பாராவ்
பாரதி புத்தகாலயம் (புத்தகம் பேசுது)
விலை :20/