தகராறு
பேராசிரியர் யொஹான் கால்டுங் (Johan Caltung), Transcend and Transform, An Introduction to Conflict work என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நூலை, முனைவர் சுப.உதயகுமார் ‘தகராறு’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
குறைந்தது இரண்டு மனிதர்கள் சேர்ந்திருந்தாலே, அங்கு தகராறுக்கு வாய்ப்பு வந்துவிடுகிறது. அப்படிப்பட்டத் தகராறு, எங்கெல்லாம் ஏற்படும் வாய்ப்பு உண்டு, என்ன மாதிரியெல்லாம் தகராறுகள் ஏற்படும் என்பதன் அடிப்படையில், சிறுதகராறு, குறுந்தகராறு, பெருந்தகராறு, மாபெரும்தகராறு என்றெல்லாம் தகராறை வகைப்படுத்தி, தனித்தனித் தலைப்பில் விரிவாகவே விவாதிக்கிறார், நூலாசிரியர் யொஹாங் கால்டுங்.
தகராறு எப்படி உருவாகிறது, யார் யாருக்கிடையே ஏற்படுகிறது என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லும் நூலாசிரியர், அத்தகராறுகளைத் தீர்க்கும் பல்வேறு வழிமுறைகளையும் குறிப்பிடுகிறார். அவற்றுள்ளும், தகராறைத் தீர்ப்பதற்கு எது சிறந்த நடைமுறையாக இருக்கும் என்பதையும், பல்வேறு நடைமுறை சான்றுகளுடன் விவரித்துச் செல்வது மிகவும் சிறப்பாகும்.
தகராறு (Conflict) என்பது, மனப்பாங்கு (attitude), செயல்பாடு (behavior), முரண்பாடு (contradictions) என்பனவற்றின் சேர்க்கை என்று யொஹான் கால்டுங் கூறுகிறார்.
Conflict என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக எத்தனையோ சொற்கள் தமிழில் இருந்தபோதும், ‘தகராறு’ என்பது மிகவும் பொருத்தமான சொல்லாக இருப்பதாக, மொழிபெயர்ப்பாளர் சுப.உதயகுமார் கூறுகிறார்.
தகராறு என்பது, குறைந்தது இரண்டு நபர்களுக்கிடையே ஏற்படும் நோக்கங்களின் முரண் ஆகும். வாழ்க்கையும், நோக்கங்களும் இணைபிரியாதவை. எங்கே நோக்கங்கள் இருக்கின்றனவோ, அங்கே முரண்பாடுகள் எழுவது இயல்பு.
தனிமனிதர்களுக்குள் ஏற்படும் கருத்துமுரண்கள், இரு நபர்களுக்கிடையே ஏற்படும் பூசல்கள், இருபாலர் (gender), இரு வகுப்பார் (classes), இரு இனத்தார் (races), இரு அரசுகள் (States), இரு நாடுகள், இரு நாகரீகங்கள் (civilizations) இவற்றிற்கிடையேயும் தகராறுகள் ஏற்படுகின்றன.
சிறு தகராறுகள்:
கணவன்-மனைவி, தந்தை-மகன், இரண்டு நண்பர்கள், அண்டைவீட்டார் என்று இரண்டு தனி நபர்களிடையே உருவாகும் முரண், சிறுதகராறு.
“ஒரு தகராறினை எதிர்கொள்ளும்போது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்குள் எவ்வளவு அமைதி அல்லது மனப்பக்குவம் இருக்கிறது என்பதைச் சொல்லமுடியும்.
எரிமலை போன்றும், பாராமுகமாகவும் ஒரு தகராறினை எதிர்கொள்வது தோல்விகரமான அணுகுமுறை. தகராறு தரும் சவாலை எதிர்கொண்டு, முரணைக் களைந்து, தகராறைத் தீர்த்துக்கொள்வதுதான் சிறந்த வழி. அதற்குத் தகராறை அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் வேண்டும்., குறிப்பாக, உணர்வுகள் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது.
பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, படைப்பாற்றல் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தப் படைப்பாற்றல், முந்தைய தகராறுத் தீர்வு அனுபவங்களிலிருந்து பெறப்படலாம் ”.
குறுந்தகராறுகள்:
இனம், வகுப்பு போன்ற சமூகங்களிடையேத் தோன்றும் முரண்கள்பற்றிப் பேசுவது.
அமெரிக்காவில் நிலவும் ‘நிறபேதம்’ அடிப்படையிலான தகராறு, முதலாளி-தொழிலாளிப்பிரச்சினை, மாற்றுப் பொருளாதாரம், மாற்று அரசியல், மாற்று மருத்துவ முறை, பாலியல் வன்முறை பற்றியெல்லாம், ஆசிரியர் ‘குறுந்தகராறு’ என்னும் தலைப்பில் விவாதிக்கிறார்.
ஆணதிக்கமும், மதவாதமும்கூட எதேச்சதிகாரம்தான். நாட்டு மக்களின் உடல், பொருள், மனம் மற்றும் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கப்படாமலிருப்பதே பாதுகாப்பு. பதுகாப்பின்மையை எப்படி தவிர்ப்பது என்பது பல்வேறு தகராறுகளுக்கு வழிவகுக்கிறது என்று ‘மாற்றுப் பாதுகாப்பு’ என்னும் துணைத்தலைப்பில் விவரிக்கிறார்.
பல்வேறு இன மக்கள் சமத்துவத்துடன் கூடிவாழும் முதல் நாடாக ஸ்விட்சர்லாந்து உருவாகியுள்ளதாகக் குறிப்பிடும் கால்டுங், ஜப்பானிலும், இந்தியாவிலும், சமூகத்தில் ஆண்கள் அதிகாரம் உடையவர்களாக இருந்தாலும், வீடுகளில் பெண்களே அதிக அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் என்றும் ‘ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணாதிக்கக் குடும்பங்கள்’ என்றுகூட இதனைச் சொல்லலாம் என்று குறிப்பிடிகிறார்..
பெருந்தகராறுகள்:
குறிப்பாக, அரசுகளுக்கும், மக்களுக்கும் இடையே உருவாகும் முரண்கள், பெருந்தகராறுகள் எனலாம். அரசுகள் என்பன பூகோள ரீதியில் குறிப்பிடப்பட்ட நாடுகளை ஆட்சி செய்யும் அமைப்புகள். மக்கள் என்பவர் கலாச்சார ரீதியில் வரையறுக்கப்பட்ட குழுவினர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்களாக இருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு உரிமை கொண்டாடும்போது, நாம் ஒரு பெரும் தகராறினை எதிர்பார்க்கலாம்.
.உலகில் 200 நாடுகளும், 2000 மக்கட்பிரிவினரும் உள்ளன. 20 நாடுகளில் மட்டுமே ஒரே ஒரு இன மக்கள் வழ்கின்றனர். மற்ற 180 நாடுகளிலும் மக்கள் தகராறுகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர்.
தகராறு கட்சிகளைப்பற்றி நல்லது கெட்டது பேசாது, தகராறு கட்சிகளோடு கருத்துப்பரிமாற்றம் செய்வதுதன் மூலம் சமாதானத்தை உருவாக்கமுடியும்.
ஒரு தனிநபர் கொல்லப்படும்போது, குறைந்தது பத்து பேராவது அதனால் பாதிக்கப்பட்டு, அத்துன்பத்தை எதிர்காலத்திற்குள் தங்களோடு சுமந்து செல்கின்றனர். பத்து பேராவது வெறுப்புக்கு ஆளாகின்றனர். பத்து பேராவது இயலாமை, துக்கம், பழிவாங்குதல் போன்ற உணர்வுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இப்படியாக வன்முறை நிகழ்வு மீண்டும்மீண்டும் பிறக்கிறது.
சாவிலிருந்துத் தப்பித்து காயப்படுத்தப்பட்ட அகதிகள், இடம்பெயர்ந்தோர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டப் பெண்கள் என்று பாதிக்கப்பட்டோர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த வெறுப்பைச் சுற்றியே இவர்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
வன்முறையின் சரித்திரம் என்பது இயற்கையைக் குண்டுபோட்டு அழிக்கும், எளியவரைச் சிறுமைப்படுத்தும், பெண்களைப் பலத்காரப்படுத்தும் ஒரு ராணுவ சரிதிரமாகவே இருக்கிறது.
ஊடகங்கள் வன்முறை பற்றியே அதிகம் பேசுகின்றன. விடுதலைக்காகப் போராடும் ஓர் அடிமையின் போரட்டத்தில் மட்டுமே. சமரசத்திற்குப் பெரிதாக இடம் இல்லை.
மாபெரும் தகராறுகள்:
பிராந்தியம் என்பது அடுத்தடுத்துள்ள நாடுகளை உள்ளடக்கிய பகுதி. நாகரீகம் என்பது அடுத்தடுத்து வாழ்கின்ற பல்வேறு மக்களை உள்ளடக்கியது. பல பிராந்தியங்களிலும், நாகரீகங்களிலும் அங்கம் வகிக்கும் நாடுகள்தான் இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகின் அடிக்கற்கள். தீர்வு செய்யப்படாத தகராறுகள், நாடுகளின்மேல், நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளின்மேல் மொத்த உலகத்தின்மேல் ஒருவித தடையாகவே உள்ளன.
பால், தலைமுறை, இனம், வகுப்பு, தேசியம், அரசு, நாகரீகம், பிராந்தியம் போன்ற அம்சங்களைப் பொருட்படுத்தாது, அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உருவாக்க முயல்கின்ற மக்கள், தகராறுகளினாலும், அவற்றின் தாக்கங்களினாலும் தடுமாறிப்போகிறார்கள். தகராறுகளை மாற்றியமைப்பதும், கடந்துசெல்வதும் உலக இயந்திரத்திற்கு ‘உயவிடுதல்’ (oiling) போன்றதாகும்.
சர்வதேச வகுப்புத் தகராறுகளுக்குப் பின்னால், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்னும் நாகரீகங்களுக்கு இடையிலான தகராறும் நிலவிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ ஸ்பெயின் நாட்டை இஸ்லாம் படையெடுத்து ஆக்கிரமித்தது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலுவைப்போர் ஒன்றை 200 வருடங்களாக நடத்தினர்.
ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரின் சொத்தைத் திருடுவதை நாம் ஏற்பதில்லை. ஆனால், ஒரு நாடு, இன்னொரு நாட்டைத் திருடுவதை ஏற்றுக்கொள்கிறோம்.
பொருளாதாரம், அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தி, , இரண்டும் சேர்ந்து பூட்டப்படட அறைக்குள்ளே ரகசியமாக நடக்கும் கூட்டங்களில் மனிதர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்போது, என்ன நடக்கும் என்பதை இன்றைய உலகமயமாக்கல் தெளிவுபடுத்துகிரது. உலகப்பொருளாதாரம் உள்ளூர் சந்தைகளை அறவே நீக்கி, உலகம் முழுவதையுமே ஓர் எல்லையற்ற சந்தையாக மாற்றிவிடுகிறது.
மலராக இருந்தாலும்,மனிதனாக இருந்தாலும், எப்போதுமே வளர்ந்துகொண்டே இருக்க முடியாது. வளர்ச்சிக்கும் எல்லை உண்டு. மனித இனம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சி எங்கே போய் முடியும் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் இதன் பயணம் நல்லபடியாகத் தொடர உதவுவது நமது கடமை. எதிர்கால சந்ததியினர் வாழும்பொருட்டும், இன்னும் உயர்ந்த இலக்குகளை அவர்கள் எட்டிப்பிடிக்கும் பொருட்டும் வளர்ச்சி நீடித்த நிலைத்தத் தன்மையதாய் இருக்கவேண்டியது அவசியம்.
சிக்மண்ட் ஃப்ராய்ட், தகராறுகள் நமக்குள்ளிருந்து எழுவதாகச் சொல்கிறார். கார்ல் மார்க்ஸ், இருவகுப்பாரிடையே உள்ள உறவுகளில் தகராறுகள் தொக்கி நிற்பதைக் கண்டார். ஹெகல் குறிப்பிட்டது போன்று நிலக்கிழாறும், அவரது அடிமைகளும் ஒருவரோடொருவர் எப்படி கலந்துரையாடுவது என்பதல்ல கேள்வி. மாறாக, இந்த உறவினை எப்படி மாற்றியமைப்பது என்பதுதான் முக்கியம். நமது சமூகக் கட்டுமானங்களை மொத்தமாக சுத்தப்படுத்துவதன்மூலமே நமது சமூகத் தகரறுகளை திறம்படக் கையாள முடியும்.
காந்தி பலமத வித்தகர். அனைத்து மதங்களில் இருந்தும் கருத்துகளை எடுத்துச் சேர்த்து உருவாக்கும் ஓர் அவியல் மதத்தைவிட, காந்தி மத வேறுபாடுகளை அழகாகக் கடந்து செல்கிறார். அவரது எல்லைக்கோடுகள் மதங்களுக்கு இடையே செல்லவில்லை. மதத்தின் கடினமான மற்றும் மென்மையான அம்சங்களுக்கு இடையே செல்கிறது.
ஆழ்கலாச்சாரம் (Deep Culture), ஆழ்செயல்பாடு (Deep behavior), ஆழ்க்கட்டமைப்பு(Deep Structure):
தங்களைக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களென்றும், தங்களுக்கு உன்னத வரலாறுகளும், எதிர்காலமும் உண்டு என்றும், தாங்கள் எண்ணிலடங்கா துன்பங்களையும், துயரங்களையும் அடைந்திருக்கிறோம் என்றும் ஒருவித அடிப்படை எண்ண ஓட்டங்களை சில கலாச்சாரங்கள் கொண்டிருக்கின்றன. இதே மனோநிலை ஒரு தனி மனிதனிடமும் ஏற்படலாம்.
பல குறுந்தகராறுகளிலும், பெருந்தகராறுகளிலும் மேற்கண்ட மனோநிலை மேலோங்கி இருப்பதைக் காணலாம். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு மனநோய் மருத்துவம் செய்யப்பட வேண்டிய அவசியமும் வரலாம்.
ஆனால், ஆளும் வர்க்கத்தினரிடையே இம்மாதிரியான மனநோய் , தேசப்பற்று என்றும், தாய் நாட்டின் மீதான அன்பு என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆழ்கலாச்சாரம் பெரும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட ஆதிக்க சிந்தனையைக் கொண்டிருக்கும் மக்களின் அரசு இயந்திரம், பிற மக்களை அடிமைப்படுத்தவே செய்யும்.
படைப்பாற்றல், கருத்துப்பரிமாற்றம், பேச்சுவார்த்தை:
அறிவுக்கும், உணர்வுக்கும் இடையிலான எல்லைக்கோட்டில் அமைவதுதான் படைப்பாற்றல்.
அறிவும் உணர்வும் ஒன்றுசேர்ந்து உந்தும்போது, அதனில் எழும் கடந்து செல்லல்தான் படைப்பாற்றல்.
ஒரு நல்ல கருத்து, ஓர் ஆழமான உணர்வாகத் தோன்றி, மூளைக்குச் சென்று, வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டு மிகுந்த சக்தியுடன் வெளிப்படுகிறது.
தகராறு தீர்வினைப் பொறுத்தவரை, முரண்பாடுகள்கொண்ட எதிர்தரப்பைப் புரிந்துகொள்ளுதல் போன்ற செயல்வினைகளிலும், அகிம்சை என்னும் கொள்கையின் மூலமும் படைப்பாற்றல் செயல்படுகிறது.
திருக்குறளும், தகராறு தீர்வுகளும் – வள்ளுவரோடு ஓர் உரையாடல்:
இம்மொழிபெயர்ப்பு நூலில், இறுதியாக, மொழிபெயர்ப்பாளர் சுப. உதயகுமார், தகராறுதீர்க்கும் வழிமுறைகள்பற்றி வள்ளுவரோடு உரையாடுவதுபோன்ற ஒரு பகுதியை வடிவமைத்துள்ளார்.
இவர் கேட்கும் கேள்விகளுக்கு, வள்ளுவர் அதற்கான குறள்களையேப் பதிலாக சொல்வதுபோல உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது மிகவும் சிறப்பு. அதற்காக, முப்பாலில் முக்குளித்து, 60 குறள்களையும் பயன்படுத்தியுள்ளார்.
இந்நூலை வாசித்து முடிக்கும்போது, தனிமனிதர்கள் சார்ந்து, மொழிசார்ந்து, இனம்சார்ந்து, நாடுசார்ந்து, கலாச்சாரம்சார்ந்து, பொருளாதாரம்சார்ந்து எழும் தகராறுகள் பற்றி, உலக அளவில் பல பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்மையான தகராறுகளை மேற்கோள் காட்டி, மிகவும் விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது புரிகிறது. மிகவும் நிதானமாக, ஆழமானப் புரிதலோடு உள்வாங்கி வாசிக்கவேண்டிய ஒரு நூல். ஒருசிலவற்றை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.
சொல்லவேண்டியது ஏராளம் உள்ளன. சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய நூல். சுப.உதயகுமாரின் மொழிபெயர்ப்பும் சிறப்பாகவே உள்ளது.
நூல் விபரம்
தகராறு – கடந்து சென்றிடும் வழிவகையும், மாற்றியமைத்திடும் நெறிமுறையும்.
மொழியாக்கம் – முனைவர் சுப.உதயகுமார்.
பதிப்பகம்; டிடான்செண்ட் சௌத் ஏசியா, நாகர்கோயில்தொ.பே. 91 4652 240657, விலை ரூ100-