ஞானி புகழஞ்சலி – 3
யமுனா ராஜேந்திரன்
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
I
ஞானியை நேரில் சந்திக்கும் போதெல்லாம் நான் ஞானியிடம் எதிர்கொண்ட உருவ ஒற்றுமை ஒன்று குறித்து அவரிடம் ஞாபகமாகச் சொல்லியிருக்கிறேன். ஞானியும் ழான் பவுல் ஸார்த்தரும் ஒரு கண்ணில் பூ வீழுந்த, மங்கலான பார்வை கொண்டவர்கள். புன்னகை செய்யும், கூர்மையான, பகடி செய்யும், அலட்சியம் தொனிக்கும் முகங்கள் இவர்களுடையவை. இருவரும் சிறிய, நொய்மையான உடல் கொண்டவர்கள். தம்மை விடவும் மிகக் குறைந்த வயதும் உத்வேகமும் மிக்க இளைஞர்களால் எப்போதும் சூழப்பட்டவர்கள். மாவோவை ஆராதித்தவர்கள். விடுதலை சார் அரசியல் வன்முறையைப் போற்றியவர்கள்.
தமது முதியவயதில் முற்றிலும் கண்பார்வையை இழந்தவர்கள். தமது வாசிப்புக்கும் நடமாட்டத்திகும் பிறரைச் சார்ந்திருந்தவர்கள். அதனாலேயே அவர்களது உடனடி வாசிப்பில் நேர்ந்த தடங்கல்களையும், அதன் மீதான விமர்சனங்களையும் தவிர்க்கவியலாது எதிர்கொள்ள நேர்ந்திருப்பவர்கள். மிகப்பெரும் வாசிப்பும் சிந்தனைக் கிளர்ச்சியும் பெற்றவர்களாகத் தம்மளவில் தனிமைத் துயரையும், பிறரிடம் புரிந்துணர்வையும் ஒரு சேரக்கோரும் இருத்தலியல் முரண்நிலை இது. ழான் பவுல் சார்த்தரிடமும் ஞானியிடமும் நான் அவதானிக்க நேரும் முரண்களையும், நடைமுறை குறித்த புரிதல்களையும் இந்த இருத்தலியல் பதட்டத்திலிருந்தே நான் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
தடுக்கிவிழ நேர்கிற வரலாற்றின் தடங்களிலெங்கும் தத்துவவாதிகள் தென்பட அன்றாட வாழ்வின் சிக்கல்களுக்கு எதிர்வினை செய்தவர்களும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே என்றும் நடைமுறையில் நினைவுகூரப்படுகிறார்கள். மார்க்சியப் பிதாமகர்களான மார்க்ஸ்-எங்கெல்ஸ் துவங்கி, பிரெஞ்சுத் தததவவாதிகளாகத் திகழ்ந்த ஸார்த்தர்-தெரிதா ஈராக, சமநாட்களின் அந்தோனியோ நெக்ரி-பிரெடரிக் ஜேம்சன் வரை இதுதான் நிஜம். அன்றாட நடைமுறைக்கு எதிர்வினை செய்தவர்கள் எனும் அளவிலும் செயலில் ஈடுபட்டார்கள் எனும் அளவிலும்தான் இவர்களது முக்கியத்துவம் உணரப்படுகிறது.
மார்க்சியத்தை பிற தத்துவங்களில் இருந்து கறாராக வித்தியாசப்படுத்தும் அதனது முக்கியமான பண்பு எது? உலகை வியாக்யானப்படுத்துவதிலிலிருந்து அதனை மாற்றுவது என்கிறார் மார்க்ஸ். மார்க்சியம் நடைமுறைத் தத்துவம் என்றார் கிராம்ஸி. எதிர்விணை செய்தலும் மாற்றுவதற்காக இயக்கத்தில் ஈடுபடுதலும் என்பார் பாவ்லோ பிரெய்ரி. அன்றாட நிலவும் நடைமுறைத் தத்துவத்தின் மீது ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது என இதனை விரித்துச் சொல்வார் லுகாக்ஸ். கலாச்சார மார்க்சியர்களான லுகாக்சும் கிராம்ஸியும் புரட்சிகர நடைமுறைக்காக லெனினியக் கட்சியைக் கட்டமுனைந்தவர்கள்.
தமிழக மார்க்சியம் என எடுத்துக் கொண்டால் கட்சி சார்ந்து கோட்பாட்டு ரீதியில் எழுதியவர்கள் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.விருத்தகிரி, அ.சீனிவாசன், பா.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன், கே.பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன், நா.வானமாமலை, ஆராய்ச்சி குழவினர் மற்றும் நா.முத்துமோகன் போன்றவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து பி.ராமமூர்த்தி, கே.முத்தையா, மாயாண்டி பாரதி, அருணன், எல்.ஜி.கீதானந்தன் போன்றவர்களையும், இருபிரதான கட்சிகளுக்கும் வெளியில் விமர்சன மார்க்சிய எழுத்துக்களைத் தமிழில் கொடுத்தவர்கள் என எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.ராஜதுரை, குணா, கோ.கேசவன், ஞானி, போன்றவர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்
ஞானியைப் பற்றிப் பேசுவதென்பது, ஒரு வகையில் ஐம்பதுகளில் பிறந்த, அறுபதுகளின் இறுதி – எழுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியம் அல்லது அரசியல் கற்க நேர்ந்த, தமது பள்ளி இறுதி நாட்களை விட்டு வெளிவந்த கோவையின் இளைஞர்களைப் பற்றிப் பேசுவதுதான். இலக்கியம் அரசியல் என இவையிரண்டிலும் தீவிரமான ஆர்வம் கொண்ட எவருக்கும் ஞானியைத் தெரிந்திருக்கும். இதுவன்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டிலும் இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தலைமுறையின் இளைஞர்களுக்கும் ஞானியைத் தெரிந்திருந்தது.
அந்நாட்களில்தான் நக்சலிச அரசியல் சார்புடன் வசந்தத்தின் இடிமுழக்கம் எனும் அரசியல் எக்காள முழக்கத்துடன், அறுபதுகளின் இறுதியில் கோவையிலிருந்து புதிய தலைமுறை இதழ் வந்தது. ஞானி அதனது ஆசிரியர் குழவில் இருந்தார். தொடர்ந்து தோழர் அப்புவின் தீக்கனல் இதழும் வந்தது. தோழர் தா. பாண்டியன் உதவ அப்பு தோற்றுவித்த தீக்கதிர் இதழ் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக ஆனது.
புலவர் ஆதி, மனோ என்கிற எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சத்தியமங்கலம் நாகராஜன் போன்ற எழுத்தாளர்களையும், லிங்குசாமி, கண்ணாக்குட்டி, எல்.கீதானந்தன், குமாரவேலு, எல்.அப்பு என வாஞ்சையுடன் அழைக்கப்பெற்ற அற்புதசாமி என்கிற எனது கனவு மனிதர் போன்ற நடவடிக்கையாளர்களையும் நான் அறிந்த நாட்கள் அவைதான். இவர்களில் சத்தியமங்கலம் நாகராஜன், கண்ணாக்குட்டி, அப்பு, லிங்குசாமி,குமாரவேலு, கீதானந்தன் போன்றவர்கள் அடிக்கடி எனது தந்தையைச் சந்திக்க வருவார்கள். ஞானி ஆசிரியர் குழுவிலிருந்த புதிய தலைமுறை, தீக்கனல் போன்ற பத்திரிக்கைகள் அனைத்தையும் எனது தந்தையார் வழி நான் அறிந்தேன். எனது தந்தையார் எப்போதுமே கட்சி சார்ந்த நடைமுறையாளராக இருந்தார் எனும் அளவில் நடவடிக்கையாளர்களைத் தெரிந்த அளவில் எழுத்தாளர்களோடு நேரடிப் பரிச்சயம் அற்றவராகவே இருந்தார்.
ஓரு முறை உப்பிலிபாளையத்தில் காவல்துறையினர் எனது தந்தையாரிடம் அவரது நக்சலிச அரசியல் சார்புக்காக விசாரணைக்கு வருகிறார்கள் என்பதனையிட்டு அவசர அவசரமாக தீக்கனல் பத்திரிக்கையைக் கத்தையாக அள்ளி நான் பரணில் கொண்டு மறைத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
எனது தந்தையாரான ஜி.கே என தோழர்களால் அழைக்கப்பெற்ற, 2008 ஆம் ஆண்டு தனது எண்பத்தி இரண்டாம் வயதில் மரணமுற்ற, ஜி.கஸ்தூரிசாமியின் அரசியல் உடன்பயணி என என்னை நான் சொல்லிக் கொள்ள முடியும். தோழர் எல்.ஜி.கீதானந்தனோடு இணைந்து கண்ணாக்குட்டி அப்பு போன்றவர்கள் அனைவரும் தமிழக மில் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்த நாட்களும் இதுதான்(1). அன்று இலக்கியமும் அரசியலும் எனக்கு மனோரதியமானதாகவே இருந்தது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சலிச அரசியல், மீளவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்பதாகவே, தந்தையின் அரசியல் பயணத்தை அடியொற்றியதாகவே எனது வாலிப நாட்களின் அரசியல் பயணமும் இருந்தது.
ஞானி பெரும்பாலானோர்க்கு இலக்கிய விமர்சகர். இன்னும் சிலருக்கு விரிந்து கற்ற தமிழறிஞர். பிறருக்குக் கடவுள் குறித்து சிக்கலான கருத்துக்கள் தெரிவிக்கும் இறையியலாளர். எனக்கு இவையெல்லாம் ஒரு போதும் முதன்மையானவைகளாக இருந்ததில்லை. ஞானிக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். அவர் அடிப்படையில் மனித விடுதலையை அவாவிய ஒரு மனிதர். அதற்கென மார்க்சிய நெறியைக் கண்டடைந்தவர் அவர்.
எனது எழுத்து வாழ்வின் இளமை நாட்களில் நான் பெற்ற இரண்டு கடிதங்கள் எனது ஞாபகத்தில் எப்போதும் இருந்து வருகின்றன. முதல் கடிதம் அன்று வானம்பாடிகளில் ஒருவராகயிருந்து பிரபஞ்சகவி எனும் பெயரில் கவிதைகள் எழுதிய பிரபஞ்சன் எழுதியது. பிரபஞ்சன் அன்று பாண்டிச்சேரியில் இருந்து நடத்தி வந்த வண்ணங்கள் சிற்றிதழில் எனது அசுரவித்துக்கள் எனும் குறுங்கவிதை பிரசுரமாவது குறித்து எழுதிய அறிவித்தல் கடிதம்.
ஞானியின் முதல் கடிதமும் ஞானியை முதன்முதலில் நேரடியாகக் கண்ட தருணமும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. வடகோவையில் தேசியத் தனிப்பயிற்சிக் கல்லூரியில் மாதம் தோறும் இரண்டாவது ஞாயிறன்று நிகழும் இலக்கியக் கூட்டமொன்றுக்கு நானும் நண்பர்கள் வி.உதயகுமாரும், ஆர்பாலகிருஷ்ணனும் சென்றிருந்தோம். கூச்ச சுபாவமும் தனிமை விரும்புதலும் ஒதுங்கியிருத்தலும் அப்போதைய எனது இயல்புகள். எவரிடமும் நேரில் சென்று அறிமுகப்படுத்திக் கொள்ள மறுக்கிற, எவ்வளவுதான் முக்கியமான ஆளுமைகளாயிருந்தாலும் அவர்களின் பாலான வழிபாட்டு உணர்வை மறுக்கிற எனது அன்றைய இயல்பு இன்றுவரை தொடர்கிறது.
அன்று வருகை தந்தவர்களின் பதிவேட்டில் எனது பெயரை மட்டும் பதிந்துவிட்டு வந்தேன். பிற்பாடு பதின்மவயதுகளை அப்போதுதான் கடந்திருந்த எனக்கு ஞானியிடம் இருந்து முன்பக்கத்தில் மட்டுமே எழுதப்பட்ட சுருக்கமான தபால் கார்டு வந்தது. அறிவித்துக் கொள்ளாமல் வந்து சென்றிருக்கிறீர்கள். தொடர்ந்து கூட்டத்திற்கு வரவேண்டும் என ஞானி எழுதியிருந்தார். தாமரை, செம்மலர், மனிதன், விடியல், புதிய நம்பிக்கை போன்ற மார்க்சிய இலக்கிய இதழ்களில் யமுனா புத்திரன் எனும் பெயரில் எனது கவிதைகள் பிரசுரமாகியிருந்த காலம் அது.
இன்றைய திமுக அரசியலாளரும் உளியின் ஓசை திரைப்பட இயக்குனருமான கவிஞர் இளவேனிலின் – பின்னாளில் இவரது கவித்துவத்துடன் அழகான வடிவமைப்பில் ஒரு கையடக்கச் சிருங்காரப் பத்திரிக்கையும் வந்தது – அற்புதமான ஓவியங்களுடனும் வடிவமைப்புடனும் கார்க்கி, சிகரம், பிரகடனம், மனிதன் பிற்பாடு சோலை போன்ற மார்க்சிய சஞ்சிகைகளும், புவியரசு மற்றும் தற்கொலை செய்து கொண்டு மரணமுற்ற கங்கைகொண்டான் போன்றோரது அழகான வடிவமைப்பில் வானம்பாடி – விலையிலாக் கவிமடல் என மனோரதியமும் புரட்சிகர அரசியலும் கலந்து இளைஞர்களை முறுக்கேற்றிக் கொண்டிருந்த நாட்கள் அது. நக்சலிச அரசியலுக்கும் மரபான கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்கும் இடையில் கோவையின் இடதுசாரி இளைஞர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த காலமும் அதுதான்.
பிறிதொருபுறத்தில் மார்க்சியர்கள் பற்றிய விமர்சனங்களுடன் தீவிரமான இலக்கியப் பிரக்ஞையுடன் கசடதபற பத்திரிக்கை வெளியானது. சிறுகதையாசிரியர் இராஜேந்திர சோழனின் ஆசிரியத்துவத்தில் பிரச்னை போன்ற இதழ்களும் முன்பின்னாக வந்தன. பின்னாளில் பிரக்ஞை வெளிவந்தது. வெங்கட்சாமிநாதன் தர்மு அரூப் ஜீவராமு என்கிற பிரமிள் போன்றோர் வானம்பாடிகளை ஒரு புறம் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, வானம்பாடிகளினுள் நக்சலிச அரசியல் போக்கும், மரபான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவான போக்கும் என்பதற்கு இடையில் முறுகல் நிலை துவங்கியிருந்தது. இந்திரா காந்தி கொணர்ந்த அவசர நிலைக்கு ஆதரவாக சிற்பி புவியரசு மேத்தா போன்றோரும், அதற்கு எதிராக ஞானி அக்கினிபுத்திரன் போன்றோரும் அணிபிரிந்த காலம் இது. தத்துவக் கூடுகளுக்கு எம்மைத் தாங்குகிற வலிமை இல்லை என்பதாக முத்திரைகளும் முகத்திரைகளும் என்கிற சிற்பியின் வானம்பாடி இதழ் தலையங்கத்துடன் வானம்பாடி இயக்கம் தனது பிளவை உறுதி செய்தது.
கோவை தேசியத் தனிப்பயிற்சிக் கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் சிற்பி புவியரசு ஞானி சக்திக்கனல் சிதம்பரநாநன் ஆகியோர் பிரசன்னமாயிருக்க, இலக்கியப் படைப்பில் மார்க்சிய அரசியலும் கடப்பாடும் குறித்த அழுத்தத்துடன் நான் ஒரு கட்டுரை படித்தேன். ஞானி எனது கட்டுரையை ஆதரித்துப் பேசினார். அதனோடு அக்கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். அன்று கைதவறி எங்கோ வைத்த கட்டுரையை மறுபடி இருபது ஆண்டுகளின் பின் 2001 ஆம் ஆண்டு நான் இங்கிலாந்திலிருந்து கோவை சென்ற தருணத்தில்தான் கண்டெடுக்க முடிந்தது.
ஞானியுடன் இணங்கிய தருணங்கள் போலவே முரண்பட்ட வேளைகளும் வன்மமுடன் வன்முறையில் இறங்கிய தருணமும் உண்டு. கருத்தியல் அளவில் ஒரு தனிநபராக நக்சலிச அரசியலுடன் ஒட்டுதலும் விலகுதலும் கொண்டவனாக மட்டுமல்ல, தந்தையின் அடியொற்றிச் சென்றவனாக அவருடன் அவரது மரபான கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுடன் முரண்பட்டு மாதக் கணக்கில் அவருடன் பேசாது ஒரே வீட்டில் வாழ்ந்த பிளவுண்ட மனிதனாக நான் இருந்த நாட்கள் அவை. கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்த பல இளைஞர்கள் நக்ஸலைட்டுகளின் தியாக அர்ப்பணி உணர்வுக்கு ஆட்பட்டவர்களாக இருந்தார்கள். பல தலைமறைவு நக்ஸலைட் தோழர்களுக்கு எனது தந்தையின் கருத்தை மீறி பொருளாதார ரீதியிலும் அவர்களது தங்குதலுக்கும் உதவிக் கொண்டிருந்த நான், பிறிதொரு புறத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சதா விமர்சித்துக் கொண்டிருந்த, நேரடியான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாத ஞானி நாகராஜன் ராஜ்கௌதமன் போன்றோர் பங்குபற்றிய கோவை இலக்கு மாநாட்டின் மீது பெரும்கோபம் கொண்டு அங்கு நான் சார்ந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பினருடன் சென்று கலவரத்தில் ஈடுபட்டேன்.
ஞானி அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அவரது முன்னாள் அரசியல் சகா தோழர். கீதானந்தனுடன் தனது வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். கோட்பாட்டு நடைமுறையை அழுத்தமாகப் பேசிவந்த ஞானியினது பங்களிப்பை – இன்றும் நான் எனது புத்தக அடுக்கில் தொகுத்து வைத்திருக்கிற பரிமாணம் இதழ்களும் அதனுள் சொருகப்பட்டிருக்கும் ஞானியின் நான்கு பக்க வேண்டுகோளும் அதனது சாட்சியங்களாக என்முன் இருக்கிறது – எதிர்த்து நடவடிக்கையாளன் எனும் நோக்கிலிருந்து நான் செய்த அன்றைய எனது கலக நடத்தைக்காக, இருபது ஆண்டுகளின் பின்பு 2001 ஆண்டு ஞானியை அவரது இல்லத்தில் சந்தித்தபோது என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
II
எழுபதுகளின் இறுதி என்பது நக்சலிச அரசியல் இந்தியாவெங்கிலும் கடுமையான அடக்குமுறையையும் பின்னடைவையும் அழித்தொழிப்பையும் சந்தித்த காலம். மனோரதிய அரசியலும் அதையொட்டிய இலக்கியமும் கரைந்தழிந்த காலம். சிற்றிதழ்களில் கோலோச்சிய இலக்கிய அடிப்படைவாதம் என்பது கோட்பாட்டுச் சர்ச்சைகளில் அதிகமும் ஈடுபாடு கொள்ளத் துவங்கியது. ஞானியின் பரிமாணம், தமிழவனின் படிகள், ராஜ்கௌதமனின் இலக்கிய வெளிவட்டம், சென்னை நண்பர்களின் பிரக்ஞை போன்ற சிற்றிதழ்கள் கலை இலக்கியம் தாண்டி அரசியலிலும் சமூகவியலிலும் கோட்பாட்டிலும் இப்போது அதி அக்கறை காட்டின. இந்த வரலாற்றுப் போக்கில் வேள்வி, பரிமாணம், பிற்பாடு நிகழ், பிற்பாடாகத் தமிழ்நேயம் என இவ்வாறு ஞானியினது வேறுபட்ட அக்கறைகள் இப்போது அவரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக, தமிழ்தேசியத்தில் அதி பற்றுள்ளவராகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
வானம்பாடிகளின் காலமும் வானம்பாடிகளும் குறித்த எதிர்மறையிலான புறக்கணிப்பு விமர்சனங்களே வந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அது குறித்த ஞானியினது மௌனம் எனக்கு ஆச்சரய்மாக இருக்கிறது. சுந்தர ராமசாமியின் காலச்சுவடு, காலஞ்சென்ற ராஜமார்த்தாண்டன் அடியொற்றி சுகுமாரன், குட்டி ரேவதி வரை தட்டையாக வானம்பாடி இயக்கம் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். வானம்பாடிகள் கோஷங்களை மட்டுமே எழுதினார்கள் என்பது மாதிரியான சித்திரத்தை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
புவியரவின் இதுதான் தொகுதிக் கவிதைகள், ஏலி ஏலி லாமா சபக்தானி போன்ற அவரது அகம்சார் அரசியல் கவிதைகள், கங்கை கொண்டானின் கூட்டுப் புழக்கள் தொகுதி, வானம்பாடி பிளவுபட்டபின் வைகறை பதிப்பகம் சார்பாக ஞானி கொணர்ந்த வெளிச்சங்கள் தொகுதியிலான பல கவிதைகள், அவசரநிலைக் காலகட்டத்தில் வந்த போஸ்டர் கவிதைகள் தொகுப்பு, இன்குலாப்பின் பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிறார்கள் உள்ளிட்ட கவிதைகள் என்பவனவற்றைத் துப்புரவாக எவரே புறக்கணிக்க முடியும்? கோஷங்களையும் இவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதற்காக வானம்பாடிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டுமானால் தர்முஜீவராமுவின் முழுத் தொகுப்பின் பாதிக் கவிதைகள், பிறர் மீதான விமர்சனக் கவிதைகள் மற்றும் எதிர்கோஷங்கள் எனும் வகையில் எழுதப்பட்டவை அனைத்தும், இலக்கிய வரலாற்றின் குப்பைக் கூடைக்குத்தான் போகும். விமர்சனமற்று கடவுள் நிலைக்கு இன்று உயர்த்தபட்டிருக்கும் தர்மூவின் அந்த எழுத்துக்களில் அவ்வளவு அபத்தங்கள் குவிந்து கிடக்கின்றன.
வானம்பாடிகளின் மீதான பிறிதொரு முனையிலான வன்மமான தாக்குதல் ஜெயமோகனிடம் இருந்து வருகிறது. கேரளத்தின் காத்திரமான கவிகளான சச்சதானந்தன், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போன்றோரின் அரசியல் கவிதைகள் வானம்பாடி இதழ்களில்தான் வந்தன. ஈழக் கவிதைகளுக்கென அவர்கள் ஒரு சிறப்பிதழும் வெளியிட்டார்கள். பிற்பாடு சச்சிதானந்தனின் கவிதைகளை சிற்பி தனது மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். பிரமிளின் ஐன்ஸ்டீனின் சூத்திரம் குறித்த கவிதையை சிற்பி சிறந்த கவிதையாகக் கொண்டாடினார். புவியரசு தொழில்முறை வருமானத்துக்கு வேறுபட்ட மொழிபெயர்ப்புக்களைச் செய்தாலும், நஸ்ருல் இஸ்லாம் மற்றும் தாஸ்தயாவ்ஸ்க்கியின் கரமசோவ் சகோதரர்களையும் அவர்தான் மொழிபெயர்க்கிறார். புதுக்கவிதை மரபில் காங்கிரஸ் கட்சியின் அரசியலோடு அகம்சார் நமைச்சல்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த புதுக்கவிதைச் சூழலில், இடதுசாரிச் சார்புடன் கவிதையைச் சமூகவயப்படுத்தியதில் அரசியல்மயப்படுத்தியதில் வானம்பாடிகளின் பங்கை எவரும் மறுக்க முடியாது.
சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்களில் முன்னாள் வானம்பாடிகள் கொண்டிருக்கும் அதிகாரம், பரிசுகளை அவர்களுக்கே அளித்துக் கொள்வது போன்ற மோசமான இன்றைய நடைமுறைகளை மட்டுமே முன்னிறுத்தி, வரலாற்று ரீதியில் வானம்பாடிகளின் மீதான சமநிலையற்ற விமர்சனங்கள் மலிந்திருக்கும் சூழலில் அக்காலகட்டம் பற்றிய சமநிலை கொண்ட பார்வையை ஞானி நிச்சயமாக முன்வைக்க முடியும். இது தனிநபர்கள் சார்ந்த பிரச்சினை இல்லை. ஓரு வரலாற்று இயக்கத்தின் எழுச்சியும் தேய்வும் வீழ்ச்சியும் பற்றியதாகும். சிற்பி, புவியரசு, ஞானி போன்ற வானம்பாடியின் தூண்கள் இது குறித்த மௌனத்தைக் கலைக்க வேண்டும். அவர்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும்.
ஞானியின் மிகு முக்கியமான நூல்கள் என்று நான் கருதுவது அவருடைய எழுபதுகளின் நூல்களான இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் எனும் அழுத்தமான நிறங்களிலான அழகான அட்டைப் படத்துடன் வந்த தத்துவ நூலையும், பிற்பாடு கலை இலக்கியம் – ஒரு தத்துவப் பார்வை என வெளியான கலையும் கருத்தியலும் குறித்த அவரது குறுநூலையும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றிய அவரது வாசிப்பில் விளைந்த இறை அனுபவம் குறித்த மணல் மேட்டில் ஒரு அழகிய வீடு எனும் குறு நூலையும்தான். கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம், பெரியாரியம், இறையியல், மார்க்சியம், தேசியம் என்பன குறித்த ஞானியினது பிற்பாடான விரிவான நூல்களுக்கான அடிப்படைகளை நாம் அவரது குறிப்பிட்ட இந்த ஆரம்ப நூல்களில் காணமுடியும்.
அறுபதுகள் தொடக்கம் இன்றுவரையிலும் ஞானி எழுதி வந்திருக்கிற எழுத்துக்களைத் தொகுதிகளாக காவ்யா பதிப்பகம் கொண்டு வந்து கொண்டிருக்கிறது (எடுத்துக்காட்டு : மார்க்சியமும் பெரியாரியமும் : ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் தொகுதி இரண்டு : 2006). தனது வாழ்வின் இன்றியமையாத சூழலில் மார்க்சியத்தைத் தேர்ந்து கொண்ட ஞானி, தனது சொந்த வாழ்வுக்கான அர்த்தம் தேடிய தனது எழுத்து வாழ்வில், அவர் வந்து அடைந்திருக்கும் தத்துவார்த்த நிலைபாடுகளை இந்தத் தொகுதிகள் நமக்குச் சொல்கின்றன. தன்னுடைய பார்வையை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் அல்லது நிலைபாடு எடுக்கும் நோக்கில் தனது வாசிப்பிலிருந்து தான் செரித்துக் கொண்டதை, முரண்பட்ட பார்வைகளினுள்ளும் தான் தேர்ந்து கொண்டதை, தான் மதிக்கிற நோக்குகளிருந்தும் தான் கடந்து சென்றதை ஞானி தனது எழுத்துக்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார்.
புதிய தலைமுறை இதழிலிருந்து பரிமாணம், நிகழ் போன்ற இதழ்கள் வரை, எண்பதுகளின் இறுதிவரையிலும் நான் இந்தியாவில் இருந்த வேளையில் இவ்விதழ்களை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். தொண்ணூறுகள் தொடக்கம் வந்த பிற்பாடான அவரது தொகுப்பு நூல்களையும் தமிழ் நேயம் இதழ்களையும் 2001 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்தியா செல்லுகிற ஒவ்வொரு முறையும் ஞானி எனக்குக் கொடுத்து வந்திருக்கிறார்.
மீள் பார்வையில், அவர் எழுதிய, அதனோடு அவர் தொகுத்த கட்டுரைகளின் பேசுபொருளை, அவரது பாஷையில் தொகுத்துக்கொள்ள முயன்றால் அது பின்வருமாறு அமையும் : சோவியத் சீன மார்க்சிய அனுபவங்கள், ஸ்டாலினியம், விமர்சன மார்க்சியமாக எழுந்த கிராம்ஸி, அல்தூசர், ஹெர்பர்ட் மார்க்யூஸ் போன்றோரது சிந்தனைகள், மாவோயிசம், குறிப்பாக சோசலிசக் காலகட்டத்தில் வர்க்கப் பேராட்டம், கலாச்சாரப் புரட்சி, புரட்சியின் இலக்கை நோக்கிய வழிமுறையில் அறவியலின் பாத்திரம், அந்நியமாதல் கருத்தாக்கத்தின் அடிப்படையில் சமயம், கலை இலக்கியம் போன்றவை குறித்த புரிதல், சர்வதேசியமும் தேசியக் கலாச்சாரமும், மண்ணுக்கேற்ற அல்லது குறிப்பிட்ட பண்பாட்டு வேர்களினுள்ளிருந்து பெறப்படும் பொதுவுடமைச் சாரம் என்பதாக அவரது உலக நோக்கு விரிகிறது.
அவரது மார்க்சியம் அந்நியமாதல் கோட்பாட்டில் அக்கறை செலுத்திய இளைய மார்க்ஸ், பிற்பாடாக விஞ்ஞானமாக கம்யூனிசத்தை முன்வைத்த முதிய மார்க்ஸ் எனப் பிளவுபடாத மார்க்சியம். மனிதாபிமான மார்க்சியம். ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தில் துவங்கி, இடையில் அரசு தனியுடைமை போன்றவற்றினால் மானுடசாராம்சத்தை இழந்த மனிதன், இயற்கை சமூகம் என இரண்டிலிருந்தும் அந்நியமான மனிதன், கலை இலக்கியம் சமயம் போன்றவற்றில் தொடர்ந்து அவனது இழந்த கூறுகளைப் பதிந்து கொண்டு, அவனது உழைப்புச் சிருஷ்டியின் வழி தனது சாராம்சத்தை மீளப் பெறுவதன் மூலம் விமோசனத்தை அடையும் மனிதாபிமான மார்க்சியம்.
மாறுபட்ட கருத்துக்கள், கருத்தியல்கள், இலக்கிய சிருஷ்டிகள் போன்றவற்றுக்கும் பின்னுள்ள பொருள்வகையிலான அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவரது பார்வை. மதம் குறித்த அவரது பார்வை பகுத்தறிவுவாதிகளுடன் குறிப்பாகப் பெரியாரியப் பார்வையுடன் உடன்படாத பார்வை. கடவுள் என்பதனை ஒரு கருத்தாக்கம் எனப் புரிந்து கொள்ளும் ஞானி கடவுளை நிலைநாட்டுகிறவர்களில் புரோகிதர்களும் தீரக்கதரிசிகளும் என இரு பிரிவுகள் இருக்கின்றனர் என்பதை ஏற்கிறார். புரோகிதர்கள் சுரண்டலோடு ஒடுக்குமுறையோடு தொடர்புபட்டவர்கள். தீர்க்கதரிசகள் அன்புமயமானவர்கள். ஆன்மாவற்ற உலகின் ஆன்மவாக, இதயமற்ற உலகின் இதயமாக, ஒடுக்குமுறைககு எதிராகக் கடவுளை முன்நிறுத்துகிறவர்கள் இவர்கள். கடவுள் அல்லது சமயம் ஒரே சமயத்தில் போதையாகவும் வலிநிவாரணியாகவும் இருக்கிறது. சுரண்டல் காரணங்களுக்காக, ஒடுக்குமுறைக்கான காரணங்களுக்காக, ஆதிக்கவாதிகள் கடவுளை சமயத்தை முன்நிறுத்துகிறார்கள். கடவுள் குறித்த ஒரு பகுதி உண்மைதான் இது. பிறிதொரு பகுதி உண்மைக்குள், பிரச்சினைக்குள் பகுத்தறிவுவாதிகள் செல்வதில்லை. ஓடுக்கப்பட்ட மக்கள், சுரண்டப்படும் மக்கள், துயருற்ற மக்கள் ஏன் கடவுளை ஏற்கிறார்கள்? அவர்களை முட்டாள்கள் என்று சொல்வது பிரச்சினையை எளிமைப்படுத்துவதாகும் என்கிறார் ஞானி. இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் அந்நியமான நிலையே சமயம் கலை இலக்கியம் போன்றவற்றின் இருத்தலுக்குக் காரணம் என்பது போலவே, ஆதிப் பொதுமைச் சமூகத்தின் தன்மைகளோடு மனிதனது ஆறுதலாகவும் ஆன்மாவாகவும் இவைகள் இருக்கின்றன என்கிறார் ஞானி.
ஞானியினதும், ஞானியினது மார்க்சியத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்கியிருப்பவரான எஸ்.என்.நாகராசனதும் எழுத்துக்களை (2) வாசிக்கிறபோது அவைகள் வெறுமனே கோட்பாடு எனும் மட்டத்திலேயே சஞ்சரிப்பதை ஒருவர் உணரமுடியும். அதுபோலவே தத்துவத் தோய்விலேயே நடைமுறைப் பிரச்சினைகளை இவர்கள் கடந்து போய்விடுவதையும் ஒருவர் அனுபவம் கொள்ள முடியும். ஞானி முரணியக்கத்தில பகை முரணுக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கக் கூடாது, சாதக முரணுக்கும் இடம்தர வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார். மாவோவும் மாவோயிசமும் எஸ்.என்.நாகராசன் மீதும் ஞானியின் மீதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதனை ஞானி பதிகிறார். முரண்பாடுகள் குறித்து மாவோ, தலைமைப் பீடத்தைத் தகர்த்தெறிவது குறித்து மாவோ, மக்களிடம் அன்பு செய்வது குறித்து மாவோ, கம்யூனிச சமூகம் என்பது இறுதியல்ல எனப் பேசிச் செல்லும் ஞானியினது எழுத்துக்களில், மாவோ காலத்தில் மாவோ சிலியின் கொடுங்கோலன் பினோசேயை அவர் ஆதரித்தது குறித்தும், கம்போடியப் படுகொலையாளன் போல்பாட்டை மாவோ ஆதரித்தது குறித்தும், மாவோவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் கலைஞர்கள் வேட்டையாடப்பட்டது குறித்ததுமான நடைமுறை விவாதங்கள் இடம்பெறுவதில்லை.
மாவோவின் மாபெரும் பாய்ச்சல் காலத்தில் கொல்லப்பட்ட சீன வெகுமக்கள் பற்றி அமர்த்யா சென் போன்றவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஸ்டாலினியம் குறித்தும், சமூக ஏகாதிபத்தியமாக சோவியத் யூனியனது நடைமுறை குறித்தும் ஞானி பதிவு செய்த அளவில், மாவோவினதும் மாவோயிசத்தினதும் அவப்பக்கங்கள் பற்றி ஞானியினது எழுத்துக்களில் பதிவு செய்யப்படவில்லை. சோவியத் யூனியனது இன்றைய பின்னடைவுக்கான அல்லது பேரழிவுக்கான காரணத்தை ஸ்டாலினியத்தில் நாம் காணமுடிவது போலவே, சீனா இன்று வந்து அடைந்திருக்கும் பெருந்தேசிய நிலைபாட்டுக்கும், மனித உரிமைமீறல் நிலைபாட்டுக்கும் – காலஞ்சென்ற பிரட் ஹாலிடே இது குறித்து பதிவு செய்கிறார் – மாவோவிலிருந்தே நாம் துவங்க வேண்டியிருக்கும். இத்தகைய விமர்சனத்தின் சுவடுகளை நாகராசனிடமோ அல்லது ஞானியிடமோ நாம் காணமுடிவதில்லை.
நகரப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும், உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்குமான இடைவெளியை நிரவுவதில் மாவோவின் பங்களிப்பும், அவரது புதிய ஜனநாயக் தந்திரோபாயம் எனும் பங்களிப்பும் என ஒரு சில மட்டுமே இன்று அவரிடமிருந்து நாம் தேர்ந்துகொள்ள இருக்கிறது.
மார்க்சியத்தில் ஆதிப் பொதுவுடமைச் சமூகத்தைச் சுட்டிச் சொல்லப்படுகிற மனிதனது சாராம்சம், மார்க்ஸ் பேசிய அரசு உதிரும் எனும் கருத்தாக்கம் போன்றன நடைமுறையில் அரத்தமற்றதாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். நிலையான மனித சாராம்சம் என்பதனை பெண்ணிலைவாதம், நிறம், பால்வேற்றுமை, பாலிலி நிலைமை, வேறுபட்ட அடையாளங்கள், வித்தியாசங்கள் போன்றன கேள்விக்குட்படுத்திவிட்டன. சோசலிச சமூகத்திலும் சரி அதன் பின்னும் சரி அரசு என்பது தற்காலிகமானதாக இருக்கவில்லை. மாறாக அது மிகவும் இறுகிப்போய்விட்டது. லெனினது கட்சி மூன்றாவது வர்க்கமாக ஆகிப்போனது. இச்சூழலில் மனித சாராம்சம் என்பதனையும் அரசு உதிரும் என்பதனையும் வைத்து – அம்பேத்கார் அரசு உதிரும் என்பதைக் குறித்த விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் – இன்று ஒரு கற்பனா ராஜ்யத்தைக் கட்டுவது பொறுத்தமாக இருக்கும் எனத் தோன்றவில்லை.
பாட்டாளி வர்க்கம் இன்று திரளாகவோ முன்னணிப் படையாகவோ பாத்திரம் வகிக்க முடியாத சூழலில் பாட்டாளி வர்க்க மையவாதமும் அதனது சர்வாதிகாரமும் அர்த்தமிழந்துவிட்டன என்றே தோன்றுகிறது. ஞானி தொடர்ந்து மார்க்சியப் பொருள்முதல்வாதப் பகுப்பாய்வின் பொருத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார். கருத்துமுதல்வாதம் எனும் போக்கின் பின்னுள்ளவற்றைக் கூட பொருண்மையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமேயொழிய அதனை எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை என்கிறார். கலை இலக்கியம் போன்றவற்றின் சுயாதீனத்தன்மையை நாம் நிச்சயமாக இவ்வகையில் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். சோசலிச அமைப்பையும் அதனது நடைமுறைகளையும் கடுமையாக நிராகரிக்கிற கம்யூனிச விரோதிகள் கூட, ஒவ்வொரு முறையும் உலகில் பொருளாதார நெருக்கடி முற்றுகிறபோது மார்க்சின் பொருள்முதல் வகையிலான பகுப்பாய்வை ஏற்கிறார்கள். அதனோடு மனிதனது அந்நியமாதல் குறித்தும் மார்க்சினது கருத்துக்களைப் பகுதியாக ஏற்கிறார்கள்.
மார்க்சினது அந்நியமாதல் கருத்தாக்கம், அதனையடியொற்றி சமயம், கலை இலக்கியம் கருத்துமுதல்வாதம் போன்றவற்றை ஞானி அணுகுகிறார். கலை இலக்கியத்தில் ஆதிப்பொதுவுடமைக்கான ஏக்கமும், மனித சாராம்சத்துக்கான வேட்கையும் பொதிந்திருப்பதாக ஞானி கருதுகிறார் என இதனைக் கொள்ள முடியும். ஞானியின் கலை இலக்கியம் தொடர்பான விமர்சனப் பார்வை இவ்வாறுதான் தோற்றம் கொள்கிறது. ஜெயகாந்தனது ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகத்தில் அவர் ஆழந்து போகிறார். ஜெயமோகனின் விஷ்ணுபரத்திலும் அவர் ஆழந்துவிடுகிறார். பிரமிளின் கவிதைகளுக்குள் அவர் தியானநிலைக்குச் சென்று விடுகிறார். அதே ஞானிதான் கடப்பாடும் புரட்சிகர நடைமுறையையுயும் முன்நிறுத்துகிற கவிஞர் இன்குலாபை கவிஞர்களின் கவிஞர் என அழைக்கிறார்.
ஜெயகாந்தனோ அல்லது ஜெயமோகனோ அல்லது பிரமிளோ இன்குலாபை ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. கடப்பாடும் நடைமுறையும் இணைந்த இன்குலாபை ஏற்கும் ஞானி ஜெயமோகனையும், ஜெயகாந்தனையும், பிரமிளையும் எவ்வாறு விமர்சனமின்றி, சில வேளைகளில் கடுமையான மாறுபட்ட பார்வைகளை முன்வைக்காமல் ஏற்க முடியும்? இதற்கான விடை கலை இலக்கியம் குறித்த ஞானியினது பார்வையினுள் இருக்கிறது. டால்ஸ்டாய் பற்றிய, மயக்கோவ்ஸ்க்கி பற்றிய லெனினது பார்வையினுள், பால்சாக் அல்லது ஹென்றிச் ஹெனே பற்றிய மார்க்சினது பார்வையினுள் இதற்கான பதில் இருக்கிறது.
ஜெயகாந்தனின் ஹென்றி ஆதிப்பொதுவுடமைச் சமூகத்தின் தனிநபர் உடமை மனப்பான்மையை உதறிய மனிதன். அன்பு மயமான மனிதன். இத்தகை மனிதன் சமூகத்திற்கு அந்நியன்தான். விஷ்ணுபரம் தீமைகளால் வீழும் ஒரு இலட்சிய சமூகம், எதிர்வரும் உன்னத கனவு சமூகம் எனும் எதிர்மையைப் புனைவுலகமாகப் படைத்திருக்கிறது. ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் எழுதிய ஜெயகாந்தன் ஜெயேந்திரருக்கு ஆதரவாக எழுதிய ஹர ஹர சங்கராவில் எதனைப் படைக்கிறார்? ஆர்.எஸ்.எஸ். போன்ற ஒரு இந்துத்துவ பாசிச அமைப்பிலிருந்து வெளியேறிய ஜெயமோகன் அது பற்றின கடுமையான விமர்சனங்களைப் புனைவில் வைக்காமல், ஏன் மார்க்சியம் சுட்டிய இலட்சிய உலகின் வீழ்ச்சிக்குள் பின்தொடரும் நிழலின் குரல் வழி வெறுப்புடன் நுழைகிறார்? படைப்புக்கும் படைப்பாளனது அரசியலுக்கும் நேரடியிலான உறவுகளை நாம் பார்க்கத் தேவையில்லை. என்றாலும் ஒரு படைப்பாளியின் படைப்புத் தேர்வின் பின்னுள்ள அரசியலை ஒரு மார்க்சியர் புறக்கணிக்க முடியாது.
ஓன்றின் தொடர்ச்சியான பிறிதொன்று எனத் தொடரும் முரணியக்க நடவடிக்கைகளில் உள்ளுறைந்த அரசியல் இருக்குமானால் – அது புரோகிதர்கள் முன்வைக்கும் தீமையின் சார்பாக இருக்குமானால் – அதனை எவ்வாறு தீர்க்கதரிசிகளை முன்னிறுத்தும் ஒருவர் பாராது போதல் சாத்தியம்? முரணியக்கத்தில் சாதக அம்சங்களை மட்டுமே எல்லா வேளையிலும் நாம் முன்னிறுத்தமுடியாது. பகை முரண்களையும் நாம் அவதானமாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஜெயகாந்தனது ஜெய ஜெய சங்கராவை ஏற்கிறவர் நிச்சயமாக ஹர ஹர சங்கராவை ஏற்க முடியாது. இன்னும் படைப்பு பற்றிய பார்வை என்பது தான் வாழும் வராற்றின் கருத்தியல் அரசியல் சரச்சைகளில் படைப்பாளி எங்கே நிற்கிறான் என்பதனைக் கவனத்தில் கொள்ளாமலும் மேற்கொள்ள இயலாது. படைப்பாளி எங்கே உரத்துப் பேசி எவரை வெறுப்பின் வழி பார்க்கிறான், எவருடன் அவன் மௌனமொழியில் உரையாட விரும்புகிறான் என்பது மார்க்சியம் நடைமுறையின் தத்துவமாக ஒரு நடைமுறைக் கேள்வி. ஞானியிடம் இந்தக் கேள்விகள் உரத்து ஒலிப்பதில்லை.
பெரியாரினது நோக்கில் மிகமுக்கியமான இரு கூறுகளில் முதலானது சாதிய ஒழிப்பு பிறிதொன்று பெண்விடுதலை. இந்த நோக்கிலிருந்தே அவரது மதம் மற்றும் இலக்கியம் குறித்த பார்வை வெளிப்படுகிறது. செவ்விலக்கியக்கியங்கள் குறித்த பெரியாரியப் பார்வையை பாரதிதாசனே கூட ஏற்கவில்லை. இலக்கியம் குறித்த தத்துவப் பார்வை எதனையும் பெரியார் கொண்டிருக்கவில்லை. சமயம் குறித்த பெரியாரியப் பார்வை கவனம் கொள்ளாத, துயருற்ற வெகுமக்கள் ஏன் அதனை எற்கிறார்கள் என்பதற்கான விடையாக அவர்கள் முட்டாள்கள் என்பது பொருத்தமானது இல்லை. ஞானி சமயத்தின் இருத்தலுக்கான காரணத்தை அந்நியமாதலின் வழி காண்கிறார். அன்றாட வாழ்வில் மதத்திற்குள்ளும் வர்க்கப்போராட்டம் நடைபெறுகிறது என்பதனை கிராம்சியை வாசித்தவர் ஒப்புக்கொள்வர். இந்த வர்க்கப் போராட்டத்தை மதநிறுவனம் எனும் தளத்தினுள் தீர்க்கதரிசிகள் மேற்கொள்வர். இயேசு, அல்லா, புத்தன் என இப்படி இவர்களை இனம் காணமுடியும். இவர்கள் பற்றிய இணக்கமான பார்வையை மாரக்சியர்கள் கொண்டிருக்க முடியும். புரோகிதர்கள் பற்றிய இணக்கமான பார்வையை மார்க்சியர் கொண்டிருக்க முடியாது. மட்டுமன்று மதநிறுவனத்தினுள் அதனது செயல்போக்கினுள் மாரக்சியர் இடம்பெற்று வர்க்கப் போராட்டத்தை அதனுள் நடத்தவேண்டிய அவசியமுமில்லை. விடுதலை இறையியலாளர் கிறித்தவ நிறுவன அமைப்பினுள் இருந்தே தோன்றினர். சூபியிசம் இஸ்லாமுக்குள் இருந்துதான் கிளைவிட்டது. பக்தி இயக்கமும் இந்துமத அமைப்பினுள் இருந்துதான் தோன்றியது.
மதம் மனிதனுக்கு விரோதமாகப் போகாதவரை, அவனை இழிவுபடுத்தாத வரை, ஒடுக்கும் நிறுவனத்துக்கு தூணாக நிற்காதவரை மதம் குறித்து பிரச்சினையில்லை. பிடல் காஸ்ட்ரோ இப்படித்தான் மதம் பற்றிப் பார்க்கிறார். லெனின் மனிதனது தனிநபர் வெளி சார்ந்தது மதம் என இதனால்தான் அவதானிக்கிறார். மார்க்சியர் இப்படித்தான் மதநிறுவனங்களில் இருந்து தூரத்தைக் கடைபிடிக்கின்றனர். மதத்தை பிற சமூக நிறுவனங்களிடமிருந்து பிரித்து நிறுத்தியது அறவொளியுகத்தின் மிகப்பெரும் பங்களிப்பு. சில வேளைகளில் மதம் அரசினதும் நிறுவனங்களினதும், முழு சமூக அதிகாரத்தினதும் பகுதியாக ஆகுமானால், அதற்கான அமைப்புத் தன்மையை குறிப்பிட்ட மதம் கொண்டிருக்குமானால் அந்த மதத்தின் தலைமையைத் தகர்க்காத வரையிலும் அதற்கு அடிப்படையிலான கருத்தமைவைத் தகர்க்காத வரையிலும் அந்த மத்தினுள் வர்க்கப் போராட்டமும் சாத்தியமில்லை. ஜனநாயக்த்திற்கான போராட்டமும் சாத்தியமில்லை.
இந்து மதத்திலுள்ள சாதியம் எனும் கருத்தமைப்பும் அதில் பார்ப்பனர்களின் மேலான்மையும் அத்தகையதாகும். அம்பேத்கார் சொன்னபடி நீட்சே அதிமனிதன் என்பவனைத் தனிமனிதனாகவே காண்கிறார். இந்துமதம் பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தையே அதிமனிதர்களாகக் கட்டமைத்து வைத்திருக்கிறது. இந்துமதத்தில் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் விடுதலை இறையிலாளர்களாக இல்லாது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பாகத் திரண்டதும் அதற்குப் பார்ப்பனர்கள் தலைமையேற்றதும் மிகுந்த ஆய்வுக்குரிய ஒரு விஷயமாகும். இச்சூழலில் பாரப்பனர்கள் என்கிற அதிமனிதக் கூட்டம், அதனைத் தாங்கி நிற்கும் அமைப்பு முறை என்பது இருக்கும் வரை இந்து மதத்தினுள் வர்க்கப்போராட்டம் அல்லது ஜனநாயக்திற்கான போராட்டம் என்பது அந்த அமைப்பினுள் தோன்றுவது சாத்தியமேயில்லை.
மதம் தனிநபர் தொடர்பானது. அதனை சமூகநிறுவனங்களுக்குக் கொணர்கிறபோது அதற்கென அதன் மனிதவிரோதத்திற்கு எதிரான எதிர்ப்பு அதனுள் இருந்தே திரளும். அந்த எதிரப்புக்கான பொறியை மார்க்சியர்கள் மதத்திற்கு வெளியில் தமது அரசியல் அறவியல் செயல்பாட்டில் இருந்துதான் உருவாக்குகிறார்கள். மதத்தை எதிர்மறையாகப் பார்ப்பதோ அதனை மூடத்தனம் என்பதோ அதனை நம்புகிறவர்களை முட்டாள்கள் என்பதோ சமயம் குறித்த தத்துவப் பார்வையாக ஆகமுடியாது. மனிதனது பொருள்வகையிலான அனுபவத்துக்கு அப்பாற்பட்டதெல்லாம் எவ்வாறு கடவுளாக ஆகாதோ அது போலவே அது மூடத்தனமும் ஆகாது. பெரியாரை இவ்வகையில் கடந்து செல்வது என்பதில் ஞானியோடு உடன்பட முடியும்.
குறிப்பான மதம் குறித்த பார்வை என வரும்போது, நடைமுறையில் இஸ்லாம் பௌத்தம் கிறித்தவம் போன்றவற்றில் காண்கிற அறிவொளிசார் அம்சங்களை இந்துமதத்தில் – குறிப்பாக இந்தியச் சூழலில் பிறப்பை முன்வைத்த சாதியம் – காணமுடியாது. பெண்களின் விடுதலை என்பதில் அதற்கெதிரான மிகப்பெரும் விரோதியாக இருப்பது இஸ்லாமிய மதம்தான். ஞானி இந்திய வாழ்க்கையும் இந்தியச் சிந்தனையும் குறித்தே அதிகமும் முக்கியத்துவம் தந்து பேசுகிறார். ஓப்பீட்டளவில் பிற மதங்களுடன் இந்திய மரபை வைத்துப் பேசுவதான ஒப்பீட்டு நடைமுறை குறித்து அவரது எழுத்துக்களில் நாம் கொஞ்சமே காணமுடியும். இதற்கான காரணத்தின் தடங்களை நாம் அவரது இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் நூலிலும் இந்தியச்சிந்தனை மரபு தொடர்பாக அவர் ஜெயமோகனுடன் பெருமளவில் தன்னால் உடன்பட முடிகிறது எனும் கூற்றிலும் காண முடியும். இன்று மதம் மற்றும் சாதியம் குறித்த இடதுசாரி உரையாடலில் ஞானியின் தாக்கம் நடைமுறையில் போதியளவு இருப்பதற்கான சாத்தியம் இயல்பில் இல்லை எனவே கருதுகிறேன். ஜெயகாந்தன் ஜெயமோகன் போன்றோரது படைப்பில் இயங்கும் நடைமுறை இந்துத்துவம் சாதியம் குறித்து அவர் பேசாதபோது ஞானியின் மதநீக்க அரசியல் என்பது நடைமுறைச் சிக்கலுக்கு உள்ளாகிறது எனவும் நான் நினைக்கிறேன்.
தமிழக மார்க்சிய அரசியலில் மொழி, பண்பாடு, செவ்வியல் இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் அக்கறை கொண்ட கலாச்சார மாரக்சியர்களின் மரபு ஒன்று உண்டு, மார்க்சியத்தை வெறுமனே அதிகார அரசியலாகவும் தொழிற்சங்கப் பொருளாதாரவாதமாகவும் புரிந்து கொண்ட அரசியல் மரபு ஒன்றும் உண்டு. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் பின்னதற்கு பி.ராமமூர்த்தியையும் முன்னதற்கு ப. ஜீவானந்தத்தையும் நாம் குறிப்பிட்டால், பிளவுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளில் பின்னதற்கு கே.முத்தையா-அ.சீனிவாசன் போன்றவர்களையும் முன்னதற்கு தணிகைச் செல்வன்-ஆர்.கே.கண்ணன் போன்றவர்களையும் குறிப்பிடலாம். ஞானி இந்த மரபில் ப.ஜீவானந்தம், ஆர்.கே.கண்ணன் போன்றவர்களின் மரபில் அவர்களைக் கடந்து சென்ற நவீன கலாச்சார மார்க்சியர் எனலாம்.
தமிழகத்தின் பிற மார்க்சியரிடமிருந்து ஞானி வேறுபடும் இடம் ஞானியின் மொழிநடையும் அதனை வெளிப்படுத்தும் முறையும் எனலாம். அவரது சிந்தனையமைப்பை, அவர் தனது வாசகனோடு காலந்தேறும் நடத்தும் மிக நீண்ட உரையாடல்வெளி எனலாம். கல்விப்புலம் சார்ந்த மேற்கோள் வகையிலான மார்க்சிய எழுத்தைத் தாண்டி, தனது வாசிப்பைச் செரித்துக் கொண்டு தன்அனுபவமாக மாற்றி, அதனைத் தனது வாழ்வு குறித்த சுயதேடலாக முன்வைப்பது ஞானியின் எழுத்துமுறை. பிற எந்த மார்க்சியரை விடவும் படைப்பிலக்கியவாதிகளை ஞானி ஆகர்ஷிப்பதற்கு இந்தத் தன்மையே காரணமாக இருக்கிறது.
ஞானியின் தமிழ்மொழி மீதான அவரது முதன்மைக் காதல், மனிதவிடுதலை தழுவிய அவரது மார்க்சியத்தின் மீதான தேட்டம் எனும் அவரது தனிமனித வாழ்வுக்கு அர்த்தம் தேடிய சிந்தனையின் மிகப்பெரும் இரு கூறுகளுக்கு இடையில்தான் அவரது பிற அக்கறைகள் இயல்பாக எழுகின்றன என்பதை அறியமுயலாதவர்கள், அவரது ஆளுமையை ஒரு இலக்கிய விமர்சகர் எனும் அளவில் குறுக்கிவிடுகிறார்கள் எனக் கருதுகிறேன். இவர்களால் ஞானியினது முழமையான ஆளுமையைப் பற்றிப்பிடிக்க முடிவதில்லை என்று கூட என்னால் சொல்லமுடியும். ஞானி குறித்த இவர்களது மிகைப்படுத்தல்களும் அபத்தமான பார்வைகளும் ஞானியினது ஆளுமையைக் குழப்புவதற்கும், பிற மார்க்சியரது பங்களிப்பைக் கொச்சைப்படுத்திவிடும் ஆபத்தும் இதில் உண்டு. குறிப்பாக அந்தோனியோ கிராம்சியின் சிந்தனைகளுக்கு இந்திய முன்னோடிகளாக எஸ்.என். நாகராசனையும் ஞானியையுயும் நிறுத்துவதும்(3), அந்நியமாதல் கோட்பாட்டின் முக்கியத்துவத்தினை நிறுவ, அல்தூசரின் பார்வையுடன் இணக்கமாக முன்வைப்பதும்(4) கூட இத்தகையை அபத்த நிலைப்பாடுகளாகவே இருக்கும்.
இந்திய, தமிழக மார்க்சியத்தை மேற்கத்திய விமர்சன மார்க்சிய அனுபவங்களுடன் கற்று, குறிப்பான இந்திய, தமிழக அனுபவங்களுடன் இணைக்க முனைந்த தலைமுறையின் பிரதிநிதி ஞானி என்று சொல்லலாம். இவர்கள் பெருமளவில் மாவோவினாலும் சீன அனுபவங்களாலும் ஆட்கொள்ளப்பட்டவர்கள். மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்லது சீனாவின் தனித்தன்மைகளுக்கேற்ற மார்க்சியம் என்ற மாவோவைப் போல, இந்தியாவுக்கு ஏற்ற மார்க்சியம் – ஞானியைப் பொறுத்து அது தமிழ்நிலத்துக்கு ஏற்ற மார்க்சியம் – என்ற பார்வையை ஏற்றவர்கள் இவர்கள்.
இந்தப் போக்கில் முக்கியமானவர்கள் மூவர். முதலாமவர் எஸ்.என்.நகாகராசன். பிறகு ஞானி மற்றும் எஸ்.வி.ராஜதுரை. நாகராசன் அந்நியமாதல் கோட்பாட்டின் வழி மனிதவிமோசனத்தை விளக்கியவர். ஞானியையும் எஸ்.வி.ராஜதுரையையும் இணைக்கும் புள்ளி இது. நாகராசன் இலக்கியம் குறித்து அதிகம் எழுதியவர் இல்லை. ராஜதுரையும் ஞானியின் அளவு இலக்கியம் குறித்து எழுதியவர் இல்லை. அதுபோன்று ஞானி ராஜதுரையின் அளவு நடைமுறை அரசியல் குறித்து எழுதியவர் இல்லை. நடைமுறை அரசியலில் ஈடுபட்டவரும் இல்லை. ராஜதுரையையும் ஞானியையும் இன்று வித்தியாசப்படுத்தும் பகுதி இருவரதும் பெரியார் பற்றிய புரிதலும் தமிழ்தேசியம் புற்றிய புரிதலும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஞானியினது செவ்விலக்கியம் பற்றிய, மதம் குறித்த பார்வையை ராஜதுரையின் பெரியாரியம் ஏற்க முடியாது. ஞானியின் முழுமையான பண்பாட்டுத் தமிழ் தேசியத்தையும் சர்வதேசியவாதியான ராஜதுரையால் ஏற்கமுடியாது. ஞானியினது பங்களிப்பு என்பது நடைமுறை அரசியல் சார்ந்தது என்பதனைவிடவும், தமிழ் மொழியின் மீதான அவரது நேசத்தை அடிப்படை கொண்ட தமிழ் தேசியக் கலாச்சார அரசியல் சார்ந்தது எனவே இன்று வரையரை செய்ய முடியும்.
III
2008 ஆம் ஆண்டு மே மாதம் எனது தந்தையார் மரணமுறுவதற்கு முன்னால் அவரது கடைசிநேர ஆசைகள் என்னவாக இருக்கும் என நான் யோசித்தேன். அவரது நண்பர்களைப் பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் என நினைத்து எஸ்என்.நாகராசனை அழைத்து வந்து காண்பிப்பது என முடிவு செய்தேன். அதனை எனது தந்தையாரிடம் நான் முன்பே சொல்லவில்லை. அவருக்கு எதிர்பாராத சந்தோஷத்தை அளிக்க விரும்பினேன். கோணங்கள் திரைப்பட இயக்க நண்பர் சந்திரன் மூலம் எஸ்.என்.நாகராசனைத் தொடர்பு கொள்ள சந்திரன் நாகராசனை எமது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
எலும்புக் கூடாக மெலிந்து கேபாயிருந்த எனது தந்தை ஒருக்களித்து சுவற்றைப் பார்த்துப் படுத்திருந்தார். அவர் மூச்சுவிடப் படும்பாடு அவரது நெஞ்சுக் கூட்டில் தெரிந்தது. மல்லாந்து படுத்தால் இருமலில் அவர் உயிரே போய்விடுவது போல எனக்குத் தோன்றும். நாகராசன் மெதுவாகத் தனது மெலிந்த கைகளை எனது தந்தையின் தோளின் மீது வைத்தார். தந்தை உலரந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு நாகராசனைத் திரும்பிப் பார்த்தார். புன்முறுவலுடன் நாகராசன் என்றார். பிரகாசமும் அன்பும் சந்தோஷமும் முகத்தில் தெரிந்தது. நாகராசன் கஸ்தூரி என்றபடி தனது பிடியை மெல்ல இறுக்கினார். எனக்கு அழுகை வந்தது. அம்மா வந்து அருகில் நின்று ‘நாகராசன் வந்திருக்குது, சந்தோஷமா?’ என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார். 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் மரணமுற்ற எனது அம்மா நாகராசனைக் கண்டவுடன் அடையாளம் சொன்னார். அப்பா புன்முறுவலுடன் தலையைசைத்தார். ஓரு மணி நேரம் வரை அப்பாவின்மீது கைவைத்தபடி நாகராசன் பேசிக் கொண்டேயிருந்தார். நாங்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.
கரை புரண்டோடும் வெள்ளமென நாகராசன் பேசிக் கொண்டேயிருப்பார். அது தான் அவரது இயல்பு. ‘நாகராசன் யாரையும் பேசவிட மாட்டான்’ என்பார் அப்பா. நள்ளிரவு தாண்டி நாகராசன் எமது உப்பிலிபாளையும் வீட்டுக்கு வந்த பொழுதுகள், எனதுதந்தையும் அவரும் பத்திரகாளியம்மன் கோவில் மேடையில் அமர்ந்து அதிகாலைவரை சதா சலசலவென பேசிக் கொண்டிருந்த, நான் தூக்கக் கலக்கத்தில் அவர்களை ஆச்சர்யத்தடன் பார்த்துக் கொண்டிருந்த எனது சிறுபிராய நினைவுகள் ஞாபகம் வந்தன. நாகராசன் இப்போதும் பேசிக் கொண்டுதான இருந்தார். இப்போது எந்தவிதச் சலனமும் இல்லாமல் நாகராசன் பேசுவதைக் எனது தந்தையார் கேட்டுக் கொண்டிருந்தார். நான் நண்பர்கள் இருவரையும் முழுமையாக ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தேன்.
நான் இங்கிலாந்து வந்து சேர்ந்த ஒரு மாதத்தின் பின் என் தந்தையார் மரணமுற்றார். கோவை பாப்பநாயக்கன்பாளையும் மின் மயானத்தில் அவர் எரியூட்டப்பட்டுச் சாம்பலானார். மதம் சார்ந்து அல்லது மதம் மீறி என அவருக்கு இறுதி ஆசைகள் ஏதும் இருக்கவில்லை. எனது தாயின் விருப்பத்தின்படி அவரது சாம்பல் பேரூரின் சன்னமான நதிநீரில் கரைக்கப்பட்டது. அவரது உடல் எரிக்கப்படும் முன்னர் என் தந்தையின் உடலைப் பார்க்க வெகுதொலைவிலிருந்து எஸ்.என்.நாகராசனும் ஞானியும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்து சேரும் முன் அவரது உடல் எரிக்கப்பட நேர்ந்ததால், அவர்களது முதுமையும் ஞானியினது அசைலச்சலும் கருதி அவர்களைப் பாதிவழியில் திரும்பிச் செல்லும்படி எனது அன்பு நண்பன் விசுவநாதன் கேட்டுக் கொண்டான்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவைப் பார்க்க அவரது நண்பன் வந்திருக்கிறான். ஞானி எனது தந்தைக்கு நண்பரும் இல்லை. கட்சி சார்ந்த நடவடிக்கையாளராக அவரை ஞானி பொருட்படுத்தி அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஞானியை அவருக்குத் தெரியும். முறைப்படி ஆரம்பக் கல்விகூட படிக்காத கிராமத்து மனிதரான அவர் ஒரு தொழிலாளியாக ஞானியைப் படித்திருக்கிறார். தனது அரசியல் வாழ்வில் அவர் வாழ்காலத்திலேயே எல்.அப்பு போன்ற அவரது தோழர்கள் காணாமல் போனார்கள். பிற்பாடு கர்னாடகாவில் அவர் கொல்லப்பட்டார் என எஸ்.என்.நாகராஜன் பகிரந்து கொண்டார். ஏனது தந்தையின் பல தோழர்கள் கொல்லப்பட்டார்கள். பலரது வாழ்வு நிலை குனிந்து போனது. தனது மகனாக என் மீது கொண்ட அன்பிலும் எனது பாதுகாப்பலும் அக்கறை கொண்டு, இருபது ஆண்டுகளின் முன் ஞானியின் அரசியல் குறித்து என்னிடம் அவர் எச்சரித்திருக்கிறார். உயிரற்ற உடலாக என் தந்தையைக் காணவந்த, என்மீது கொண்ட அன்புக்கு ஞானிக்கு நன்றி எனச் சொல்லிக் கொள்கிறேன்.
வாசிப்பு இயக்கத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரும் பாய்ச்சலுக்கு ஞானியால் இயல்பாகவே ஈடுகொடுக்கு முடியாது எனும் உண்மையை அவர் அறிந்திருக்கிறார். அந்தப் பாய்ச்சல் இணையவெளி எழுத்துக்கள். தமிழின் சிறு மற்றும் நடுவாந்திரப் பத்திரிக்கைகள் முதல், இன்று எழுதவரும் எழுத்தாளர்கள் ஈராக, பிரபலமான எழுத்தாளர்கள் தத்தமது தளங்களைக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய அரசியல் தத்துவ விவாதங்கள் இன்று இணையவெளியில் நடக்கின்றன. பிரபலமான எழுத்தாளர்கள் தமது அரசியல் கருத்துக்களை அன்றாடம் எழுதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து செல்லாத ஒருவரால் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் குறித்து கருத்துக்களைக் கொண்டிருப்பது என்பது சாத்தியமில்லை. ஞானி இந்த இடைவெளியை நிரவ முடிந்தவரை முனைகிறார்.
குறிப்பாக ஒரு சம்பவத்தை நான் சொல்ல வேண்டும் : கோணங்கள் திரைப்பட இயக்கத்திற்காக ஸ்பானியத் திரைப்பட விழாவொன்றினை நான் நெறிப்படுத்தினேன். ஸ்பானிய இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்கள் மரணமுற்று ஆவிகளாக எதிரிகளைப் பழிவாங்க அலைவது எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஆவிகளின் நிறம் சிவப்பு எனும் தலைப்பில் திரையிடலை நான் நெறிப்படுத்தினேன். திரைப்படம் என்பது முற்றிலுமாகப் பார்வை அனுபவம் என்பது ஒரு அடிப்படைப் பாடம். ஞானி தனது உதவியாளருடன் அந்தத் திரைப்பட விழாவுக்கு வந்திருந்து. திரைப்படத்தின் ஒலியைச் செவிமடுத்து, அவரது உதவியாளர் படக்காட்சிகளை அவ்வப்போது அவருக்கு விளக்கிச் சொல்ல, விக்டர் எரிஸின் அமர காவியமான தி ஸ்பிரிட் ஆப் த பீ ஹைவ் எனும் படத்தை முழுமையாக இறுதிவரையிலும் இருந்து அனுபவமாக்கிக் கொள்தலின் வழி, புரிந்து கொள்ள முனைந்தார். அறிதலில் ஞானிக்கு இருந்த இடையறாத வேட்கைக்கு இது ஒரு சானறு.
எழுத்தாளர்களிடமும் வாசிப்பவர்களிடமும் வேறுபட்ட அனுபவங்கள் கொண்டவர்களிடமும் நிறையப் பேசி, அதனைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு மறுமுறையும் அதனைக் கேட்கிறார். உதவியாளர்களை வைத்துக் கொண்டு வாசிக்கவும் தொடர்ந்து எழுதவும் செய்கிறார். இலக்கியக் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் சென்று வருகிறார். தமிழ்நேயத்தைத் தொடர்ந்து கொண்ட வருகிறார். 2010 ஜூன் மாத கோவை செம்மொழி மாநாட்டுக் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, விமர்சன நோக்கில் உலகெங்கிலும் வாழும் தமிழ் படைப்பாளிகளிடம் கேட்டு வாங்கி 420 பக்கத்தில் பெரிய அளவில் தமிழ் இலக்கிய ஆய்வுத் தொகுப்பொன்றினை மே மாதத்தின் இறுதிலேயே கொண்டுவருகிறார். அவரது முன்னைய இடையறாத தன்வயமான வாசிப்புச் செயல்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை பிற செயல்பாடுகளின்வழி அவர் கடந்துசென்று கொண்டிருக்கிறார்.
என்னோடும் எனது நண்பர்களோடும் அவர் மதுவிடுதிக்கு வந்து தண்ணியடிக்கவும் செய்தார். பாலுறவுத் தோய்வை எப்போதும் போல அப்போதும் அழகான மொழியில் நாம் பேசிக் களித்தோம். காந்திபுரம் தெருவிலுள்ள கையேந்தி பவனில் நள்ளிரவு கழிந்த நேரத்தில் எங்களோடு நின்றபடி மல்லிகைப் பூ இட்டிலியும் முறுகல் தோசையும் சாப்பிட்டார். வயதை ஞானி அப்படித்தான் கடந்து கொண்டிருக்கிறார். கோவையில் நாங்கள் கழித்த இருபது ஆண்டுகளின் முன்பான எமது வாலிப நாட்களையும் எமது குழந்தைமையையும் இப்படித்தான் அவருடன் நாங்களும் மீட்டுக் கொண்டிருக்கிறோம்..
பின் குறிப்புகள் :
1.இக்காலகட்டம் பற்றிய ஒரு அரசியல் சித்திரத்தைத் தரும் ஒரு அற்புதமான நூல் காலஞ்சென்ற என். கண்ணாக்குட்டி அவர்களால் எழுதப்பட்ட போராட்டம் என் வாழ்க்கை (1982). ஓன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நக்சலிச அரசியல் காலம் வரையிலான தனது பயணத்தைத் தனது தோழர்களினுடனான தனது அனுபவங்களின் வழி விளக்கும் நூல் இது. கம்யூனிஸ்ட் கட்சி மீதான கொடிய அடக்குமுறைக் காலங்களில் தனிமனிதராக மிகப்பெரும் தியாகங்களைப் புரிந்த தோழர். கண்ணாக்குட்டி தனது இறுதிக் காலத்தில் திமுகவில் சேர்ந்தார். இந்த அரிய வரலாற்று நூலை எனக்குப் படியெடுத்துக் கொடுத்த நண்பர் செந்தலை. கவுதமன் அவர்களை நான் இப்போது நெகிழ்வுடன் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். தோழர். அப்பு குறித்தும் இவ்வாறான ஒரு குறுநூல் வெளியாகியிருப்பதாகக் கேள்வியுற்றபோதும் இன்று வரையிலும் அந்த நூலை என்னால் பெற இயலவில்லை எனும் துயரத்திலும் ஆழந்திருக்கிறேன். இந்த அனுபவங்களுடன் இன்றும் எம்மிடையில் இருக்கிற தோழர். எல்.ஜி.கீதானந்தன் தமது அனுபவங்களை எமக்குத் தரவேண்டும் என எதிர்பார்க்கிற மனிதர்களில் நானும் ஒருவன். ஞானியும் இந்த அனுபவங்களை எழுத வேண்டும் என விரும்புகிறேன். தோழர். கண்ணாக்குட்டி சொல்லச் சொல்ல எழுதப்பட்ட அவரது நூல் நிறையப் பிழைகளை – வாக்கியம், சொல்,எழுதுமுறை எனக் கொண்டிருந்தாலும் – புரட்சியாளன் ஒருவனது ஆத்மதரிசனமும் துயரும் தொனிக்கும் ஒரு இருத்தலியல் பதட்டம் மிக்க சுயவரலாறு என்பதனை மறுபடி படிக்கவும் என்னால் உணரமுடிகிறது. இந்த நூலைப் படிக்க எனக்குத் தோன்றிய மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று இன்றைய சூழலில் மிகமுக்கியமானது : பிரதியின்பம் என்பதும் செய்நேர்த்தி என்பதும் ஒரு படைப்பில் பெரும் முக்கியத்துவம்தான் என்ன?
2.எஸ்.என்.நாகராசனின் முழு எழுத்துக்களும் கீழை மார்க்சியம் : வரலாறு-அரசியல்-மெய்யியல் ( காவ்யா : 2008) என ஞானியின் முன்னுரையுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. தமது தனித்துவம் எனும் அளவில் அடையாளம், வித்தியாசம், கீழைக் கலாச்சாரம் போன்ற கோருதல்கள் பிரபஞ்சமயமான மனித உரிமைகள் எனும் நிலைபாட்டுக்குச் சவாலாகத் தோன்றியிருக்கும் இன்றைய சூழலில் வைத்து எஸ்.என்.நாகராசனின் கீழை மார்க்சியம் எனும் கருத்தமைவை வாசிக்கத் தோன்றுகிறது. மார்க்சியர்களும் மனித உரிமைகளும் குறித்த விவாதத்தில் மட்டுமல்ல, தேசியக் கலாச்சாரங்களும் மனித உரிமைகளும் எனும் விவாதங்களிலும் கூட, தமது கலாச்சாரத்திற்கு மேற்கத்தியக் கருத்தாக்கங்கள் ஒவ்வாதவை என தேசியத் தலைவர்கள் கூறி வருகிறார்கள். தியானன்மென் சதுக்கப் படுகொலைகளையும், ஈழத் தமிழர் படுகொலைகளையும் இப்படித்தான் தேசியத் தனித்துவத்தின் பெயரில் இந்நாடுகளின் தலைவர்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். அதீதமான நிலைகளில் நின்று கிழக்கு மேற்கு எனும் பிரிவினையைப் பேசுபவர்களுக்கு மாற்றான கருத்துக்களை இன்று முன்வைத்து வருபவர் நோபல் பரிசுபெற்ற பொருளியலாளரான அமர்த்யா சென். அன்பு-அறம்-அதிகாரம்-ஊழியம் என கீழைநாடுகளுக்கு உரியதென நாகராசன் பேசிவரும் நிலைபாடுகளை மேற்கின் மார்க்சியர்கள் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். ஓற்றைக் கட்சி அதிகாரம்- ஸ்டாலினியம் – மனித முகத்துடன் சோசலிசம் – மூன்றாம் வர்க்கம் – மாரக்சியத்தினுள் ஆணாதிக்கம் – மனித உரிமை – ஜனநாயகம் எனும் பிரச்சினைகளில் விமரிசன மார்க்சியர்கள் இதனைத்தான் பேசி வந்திருக்கிறார்கள். மேற்கத்திய மார்க்சிய விவாதங்களை ஊன்றிக் கவனிப்பவர்கள் இதனை உணரமுடியும். நாகராசனின் பார்வையில் என்னளவில் தேரந்துகொள்ள ஏதேனும் இன்று இருக்குமானால் அது இதுதான் : எமது பண்பாட்டு வேர்களிலிருந்து, எமது வெகுமக்களின் மொழியின் வழி எத்தனை பெரிய கோட்பாடுகளாயினும் பேசப்பட வேண்டும். இது ஒரு தொடர்பாடல் கருவி அல்லது பிரக்ஞைபூர்வமான தந்திரோபாயத் தேர்வாக மட்டுமே இடம்பெறும் என நினைக்கிறேன். இந்நூலில் இடம்பெறும் பிடல் காஸ்ட்ரோ பற்றிய ஒரு கட்டுரை நாகராசனின் சமகால அரசியல் பிரக்ஞைக்கு ஒரு சான்று. பிடல் காஸ்ட்ரோ ஸ்டாலினை விமர்சித்த அதே பொழுதில் தியானன்மென் படுகொலையை ஆதரிக்கிறார். மாறுபட்ட கருத்துள்ள கலைஞர்கள் பால் அவரது அரசு அன்பைக் கைக்கொள்ளவில்லை. ஈழப் பிரச்சினையில் அவரது அரசு இனக்கொலையை ஆதரித்து நிற்கிறது. இன்று நிலவும் சோசலிச அரசுகளை நடத்திச் செல்வது கருத்தியலுக்கு மாறாக தேசியநலன்கள் என்பது ஒரு மகத்தான சோகம். நாகராசனின் மார்க்சியம், நடைமுறை அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத கோட்பாட்டு மாரக்சியம் மட்டுமே என்பதனையே உலக அனுபவங்கள் நிரூபிக்கிறது.
3.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பண்பாடு என்பது வெறுமே பொருளியல் செயல்பாடுகளின் நுரை மட்டுமல்ல என்று சொல்ல முனைந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அண்டோனியோ கிராம்ஷி. இவர் இத்தாலிய சிந்தனையாளர். இவரது சிந்தனைகள் எழுபதுகளில்தான் ஐரோப்பிய மொழிகளில் பரவலாகப் பேசப்பட்டன. இந்தியாவில் எண்பதுகளில் பேசுபொருளாயின. ஆனால் நாகராஜனும் ஞானியும் சமகாலத்திலேயே அவற்றை முன்வைத்தவர்கள். அவ்வகையில் கிராம்ஷியை ஒரு தீவிர உரையாடலுக்குக் கொண்டுவந்த ஆரம்பகட்ட இந்திய மார்க்ஸியர்கள் இவர்களே. (ஞானிக்கு இயல் விருது : ஜெயமோகன் : ஜெயமோகனது வலைத்தளம் : ஜனவரி 3 : 2010) என்கிறார் ஜெயமோகன். அந்தோனியா கிராம்சி குறித்து அந்தோனியோ கிராம்ஸி : வாழ்வும் சிந்தனையும் எனும் முழுமையானதொரு நூலை தமிழ்ச் சூழலில் எஸ்.வி.ராஜதுரை எழுதியிருக்கிறார். எழுபதுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினால் வெளியிடப் பெற்ற மார்க்சிஸ்ட் மிசலினி இதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளரான காலம்சென்ற மொகித்சென் அந்தோனியோ கிராம்ஸி குறித்து எழுதியிருக்கிறார் ((Leninism of Gramsci : Mohits Sen: Marxist Miscellany : No. 5 : 1974). ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டாலின் பிரச்சினை போன்றவை குறித்த சிறப்பிதழ்களையும் எழுபதுகளிலேயே இவ்விதழ் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் கிராம்சிய சிந்தனைகளின் பரவலாக்கம் ((Gramsci’s Presence in India : Sobhanlal Dutta Gupta : International Gramsci Society Newsletter : Number 3 :March 1994) அறுபதுகளிலேயே வங்காளத்தில் துவங்கிவிட்டது எனத் தரவுகள் வந்துள்ள இன்றைய சூழலில், ஞானியைக் குறித்த இவ்வகையிலான மிகையான கோருதல்கள் அவரை வெட்கமடையச் செய்யும் எனவே நான் கருதுகிறேன்
4…அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தார். மார்க்சின் கருத்துப்படி மனித உழைப்பு ஒரு படைப்புச் செயல். அது அவனை மகிழ்ச்சியாகவைத்திருப்பது. ஆனால் அந்த உழைப்பு அவனுக்குப் பயனையோ மகிழ்ச்சியையோ அளிக்காத நிலையை முதலாளியம் உருவாக்குகிறது. உழைப்பை மட்டும் வழங்குகிற அவன் அதன் பலனிலிருந்து விலக்கப்படுகிறான். அந்நியப்படுத்தப்படுகிறான். மார்க்சிய ஆய்வுகளிலிருந்து லூயி அல்தூசர் பகுத்தெடுத்த இந்தச் சிந்தனையை ஞானியும் அவரது சகாவான எஸ்.என். நாகராசனும் பரவலான சிந்தனைக்கு விட்டார்கள். அந்நியமாதலின் துக்கத்தையும் அதற்கு எதிரான தனிமனித சமூகக் குறுக்கீடுகளையும் ஆய்வதையே தனது இலக்கியக் கோட்பாடாக ஞானி வகுத்துக்கொண்டார் (ஞானியுடன் நடந்த தூரம் : சுகுமாரன் : காலச்சுவடு 123 : மார்ச் 2010) என்கிறார் சுகுமாரன். அந்நியமாதலை முன்நிறுத்தி மனிதாபிமானம் பேசிய இளைய மார்க்ஸ், பிற்பாடு கறரான விஞ்ஞானமாக மார்க்சியத்தை வளர்த்தெடுத்து முதிய மார்க்ஸ் என மார்க்ஸைப் பிரித்துப் பார்த்த அல்தூசரின் எதிர்மனிதாபிமான மார்க்சியத்தை மறுத்து – இக்காரணத்தினால் அல்தூசர் ஒரு ஸ்டாலினிஸ்ட் எனவும் விமர்சிக்கப்படுகிறார் – மனிதாபிமான மார்க்சிய நிலைபாடு எடுக்கும் ஞானியினது தத்துவார்த்த நிலைபாட்டை அல்தூசரின் அமைப்பியல் மார்க்சியத்துடன் இணக்கப்படுத்துவது அவருக்கு நியாயம் செய்கிற பார்வையாக இருக்காது. அல்தூசர் கோட்பாட்டுச் செயல்பாட்டையம் மேல்கட்டுமானத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியவர் எனினும் அவர் வந்து சேர்ந்த எல்லைகள் நிச்சயமாக ஞானிக்கு எதிர்திசையிலானது. அல்தூஸரின் மார்க்சியம் குறித்து, அதிலிருந்து தான் விலகும் புள்ளி குறித்து, ஞானி தனது மார்க்சியத்திற்கு அழிவில்லை (புதுப்புனல் : 2001) நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். க்ரியா பதிப்பகம் வெளியிட்ட எஸ்.வி.ராஜதுரையின அந்நியமாதல் (1979) எனும் முழுமையான நூல் இங்கு கவனத்திற்கு உரியது. எதிர்மனிதாபிமானம், மனிதாபிமானம் மற்றும் அல்தூசர் குறித்து தனது நூலின் முன்னுரையில் எஸ்.வி. ராஜதுரை குறிப்பிடுகிறார்.
(ஞானிக்கு ‘கனடா இலக்கியத்தோட்டம்’ 2009 ஆம் ஆண்டுக்கான ‘இயல்’ விருது அளித்தபோது வெளியான ‘காலம்’ ஞானி சிறப்பிதழில் வெளியான கட்டுரை)