ஞானி புகழஞ்சலி – 1
ஞானி- தமிழ் மார்க்சியர்!
-இரா.மோகன்ராஜன்
ஞானி கரைந்துவிட்டார். மறைந்துவிட்டார் என்ற சொல் இருத்தல் அற்றதாகிவிடும். ஞானி இருக்கிறார். கரைந்திருக்கிறார். ஆகவே இருக்கிறார். தமிழோடும், தமிழரோடும், தமிழர் வாழ்வோடும், தமிழர் அறத்தோடும் கரைந்திருக்கிறார். எனவே அவர் வாழ்கிறார். மார்க்சியமும், தமிழும் தமது இரண்டு கண்கள் என்றார். நெடுங்காலமாக காட்சிப்புலனற்ற ஞானி அறிவுப்புலமாக, அறப்புலமாக, கண்டறிந்த, கண்டடைந்ததே தமிழ் மார்க்சியம்.
ஞானியின் நிலம் தமிழ்த்தேசமாக இருந்தாலும் அது மனிதம் என்ற பரந்த ஆகாயத்தைப் புலமாகக் கொண்டிருக்கிறது. ஞானி தமிழ், மார்க்சியம் என்று பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மார்க்சியருக்கும், தமிழ்தேசியருக்கும், குழப்பமாக இருந்திருக்கக் கூடும். மார்ச்சியத்தைத் தமிழறமாகவும், தமிழறத்தை மார்க்சியமாகவும் அவர் புரிந்து கொண்டிருந்தார். மதம் என்பதை மார்க்ஸ் இதயமற்ற இதயமாக, ஆன்மாவற்ற ஆன்மாவாக விவரித்துக் கொண்டிருந்தபோது மதம் என்பது அறம் என்று சொன்னார் ஞானி. அதே சமயம் ஆதிக்கமற்ற, அதிகாரமற்ற மனிதன், அதிகாரமற்ற, ஆதிக்கமற்ற மதம் என்பதையே மதம் என்கிறார் அவர். மதம் என்பதை இந்து மதம், பார்ப்பனியம் என்றே புரிந்து கொண்டவர்களுக்கு மார்க்சின் வார்த்தைகளில் இல்லையென்றாலும் அதற்கு அப்பால் மதம் என்பது ஓர் அறச் செயற்பாடு என்று வரையறுத்தார்.
அவரைப் பொறுத்தவரை மதம் என்பது அதிகாரமும், ஆதிக்கமும் கொண்டதல்ல. மதம் என்பது அறம். எனவே மதத்தையும் அறத்தையும் அவர் பிரித்துப் பார்க்கவில்லை. ஆதிக்கமும், அதிகாரமும் நிரம்பியவன் எப்படி மனிதனாக இருக்க முடியாதோ அப்படியே மதம் என்பதும் அதிகாரமும், ஆதிக்கமும் கொண்டதாக இருக்க முடியாது என்று வரையறுக்கிறார். ஞானி மதவாதி என்று சொன்னால் அவரை இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். ஞானி ஒரு மார்க்சியவாதி என்று சொன்னால் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். புரிந்து கொள்ள வேண்டும்.
மதம் என்பது அதிகாரத்துவமுடையது. அரசுடனும், முதலாளிகளுடனும் நெருக்கத்தில் உள்ளது. தன்னளவில் அதிகாரத்தைக் களைந்து கொள்ளாதது. ஆன்மிகம் என்பது அதற்கு அடியானது. தன்னளவில் அதிகாரமற்றது. பேரன்புடையது.
கடவுள் என்பது ஓர் கருத்தாக்கம், பேருணர்வு, மெய்யியலின் ஓர் படைப்பு, அந்நியமாதலின் ஒரு விளைவு என்றெல்லாம் மதம் குறித்துப் பேசும் ஞானி, நிறுவனமயப்பட்ட மதத்தை ஒருபோதும் ஏற்றவரில்லை. அவரளவில் ஆன்மிகமே மதமன்றி, மதம் ஆன்மிகமல்ல.
இன்னும் சொல்லப்போனால் கடவுள், ஆன்மிகம் என்பவை ஒரு அறச் செயற்பாடு. இவ்வுலகின் சுரண்டலுக்கு ஆளான சமனற்ற சமூகத்தின் ஓர் ஆறுதல் படைப்பு, நம்பிக்கையின் படைப்பு, தனியன்களின் கண்டடைவு, பேரன்பின் பிறிதொரு பக்கம். இந்தப் பேரன்பின் விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே அவர் இலக்கியத்தையும், அதன் செயற்பாடுகளையும் கண்டடைகிறார்.
மார்க்சியம் என்பதும் பேரன்பின் தொகுப்பே. எனவே தான் மார்க்சிய பேரன்பின் ஒளியில் தமிழர் அறம், ஒப்புரவு ஆகியனவற்றை மேலும் செழுமைப்படுத்திப் பேசமுடியும், இயங்க முடியும் என்று நம்பினார்.
சங்ககாலம் தொடங்கி வர்க்கப்போராட்டம் நீடித்து வரவே செய்கிறது. சமதர்மத்திற்கான குரல்கள் தமிழ் இலக்கியமெங்கும் ஒலித்துவரவே செய்தது. அந்தக் குரல்களை மார்க்சியத்தின் வழி கண்டடைவதற்கான முயற்சியாகவே அவரது இலக்கிய, எழுத்துச் செயற்பாடுகள் இருந்தன. மார்க்சியம் இல்லாமல் தமிழருக்கு வாழ்வில்லை என்று அதனால்தான் அவர் குறிப்பிடுகிறார்.
இளங்கோவும், வள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும் தமிழறத்தின், தமிழ் மார்க்சியத்தின் தொடர்ச்சியாகவும், மரபாகவும் கண்டறிகிறார்.
ஒப்புரவின், சமதர்மத்தின் வலுமிக்க தமிழ், தமிழ்ச்சூழலின் ஆகப்பெரிய கலகக்குரலாக சித்தர்களை வைக்கிறார் ஞானி. அந்த வகையில பெரியாரை சித்தராகக் காண்கிறார் அவர். உடைமைச் சமூகத்தின் எதிர்க் குரல்களை, இப்படித்தான் வைத்துப் பேச முடியும் அந்த வகையில் கட்சி மார்க்சியத்தை தான் மீறவே செய்வேன் என்கிறார். ஆன்மிகம் என்பது அனுபவம், உள்ளுணர்வு சார்ந்தது. அது அனுபவித்துப் பார்க்கவேண்டிய ஒன்று என்கிறார். மார்க்சியமும் தன்னளவில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார். பெரியாரியத்தின் சாரமே சமதர்மம்தான். அது வளர்த்தெடுக்கப்படாமல் கடவுள், மத, சாதி, பார்ப்பனிய எதிர்ப்பில் ஒரே அடியாக முடங்குவதை ஏற்பாரில்லை.
அதே சமயம் ஆரிய நாகரீகம் மேட்டுக்குடி சார்ந்ததாகவும், அதிகாரம் சார்ந்தாகவும் இருந்த போது திராவிட- தமிழர் நாகரீகம் எல்லாக் காலத்திலும் உலகியலை முதன்மைப்படுத்தும் நாகரீகமாக இருந்ததை மறுக்க முடியாது. இந்தச் சூழலில்தான் தமிழர், தமிழ் நிலம், தமிழ் இலக்கியம், தமிழர் அரசியல் பொருளியல், தமிழ்ச் சமூகம் என்று ஞானி பேசத் தொடங்குகிறார். தமிழ் இலக்கியங்களை அறச் செயற்பாட்டின், அரசதிகாரத்தின் எதிர்க் குரலாக முன்நிறுத்திப் பேசுகிறார். மார்க்சிய விழியால் தரிசிக்கிறார்.
இறுகிக் கெட்டித்தட்டி தேங்கிய குட்டையான மதங்களை அவர் ஆன்மிகமாகவேக் கருதவில்லை. அதை அவர் ஆதரிப்பதாக எழும் ஓலங்கள் மிகவும் பரிதாபரகமானவையாக முடியக்கூடியவை.
ஜெ.மோ போன்றவர்கள் இந்த விடுதலை அரசியல், விடுதலை ஆன்மிகம், விடுதலை மொழி, விடுதலை நிலம் என்பதின் போதாமையால்தான் ஞானியை சிமிழுக்குள் அடைத்துச் செரிக்க விரும்புகின்றனர். ஆகப்பெரிய இழிவும், சிறுமையும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
அரசியல், பண்பாடு, சமூக நீதி என்பனவற்றில் ஆரியத்தின் தடித்தனத்தை அவர் கடுமையாகச் சாடவே செய்கிறார். சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை இந்தியாவில் கேள்விக்குட்படுத்துகிற ஒரே இனம் தமிழினம்தான். ஆரியத்தை மறுக்கிறவர்கள் தமிழர்கள். இந்திய நாகரீகத்தின் அடிப்படை திராவிடநாகரீகம் என்பதில் இவர்களுக்கு உடன்பாடில்லை. வேதம், கடவுள், பார்ப்பனியம் ஆகியவற்றை மறுப்பவர்களும் தமிழர்கள்தான்.
இந்துத்துவம்தான் இவர்களை அனைவரையும் ஆட்டிவைக்கிறது. இந்திமொழி பேசுபவர்தான் இந்தியாவை ஆளவேண்டும், இந்தியா என்ற சொல்லே இந்துமதத்தைக் குறிப்பதாக இவர்கள் நம்புகிறார்கள். இந்துத்துவம் என்ற வெறிதான் காஷ்மீர் முதலிய சிக்கல்கள் தீராமல் இருப்பதற்குக் காரணம். தமிழனை முன்னேறவிடக்கூடாது இலங்கையில் தமிழர் விடுதலையை இவர்கள் எதிர்ப்பதற்கும் இதுதான் காரணம்.
மார்க்சியம் என்று பேசுகிறபோது மொழி, இனம், வரலாறு, நிலம், மரபுப்பொருளியல், ஆன்மிகம் என்ற வரையறைகளோடு தமிழ்தேசியத்தை, தமிழரை, தமிழ் அறத்தை முன்நிறுத்துவதையே அவர் மார்க்சிய அறமாகக் கொள்கிறார்.
முதலாளித்துவ, உலகமய, சுரண்டல் அரசியலில் தமிழ்ச் சூழலை எழுதியும், பேசியும், இயங்கவேண்டியவராகிறார் .
அரணமுறுவல் குறிப்பிடுவது போல ‘ஞானியின் கவலை என்பது தமிழர்களின் கவலை’. தமிழை, தமிழரை அதன் வழி தமிழர் அறத்தை முன் நிறுத்தி மார்க்சியத்தின் துணையுடன் மானிட விடுதலை பேசுவதே ஞானியின் ஆகப்பெரிய இலக்காக இருந்திருக்க முடியும்.
பெரியாரியம் ஆதிக்கத்துடன் எவ்வகையிலும் ஒத்துச் செல்வதாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுவதுடன் அரசதிகாரத்துடன் ஒத்துழைப்பவராக, அதிகாரத்தில் பங்குபெற முனைபவராக பெரியரியரோ, மார்க்சியராகவோ ஒருபோதும் இருக்க முடியாது என்று தெளிவுப்படுத்துகிறார். பெரியாரியர் தமக்குச் சொத்து சேர்த்துக் கொள்ள முடியாது என்று அதனால்தான் அவரால் சொல்ல முடிகிறது. ஏனெனில் அதிகாரத்திற்கும், உடைமைக்கும், எதிரானதாகத்தான் பெரியாரியம் இருக்க முடியும் என்று நாம் விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.
புத்தரின் துறவு அன்பின்பாற்பட்டது. அந்த அன்பு சமனற்றச் சமூகத்தின் மீதான கரிசனையின் பாற்பட்டது. பொதுவுடைமை காலச் சமூகம் தன் கண்முன்னே கலைந்தது கண்டு அதை மீட்டெடுக்கும் பொருட்டெழுந்தது. சித்தர்மரபும் அப்படியானதே. மார்க்சியமும் முன்னய சமூகத்தின் ஆதி சமூகத்தின் பொதுமையை மீட்கவே படைக்கப்பட்டது.
தனி உடைமை, அதிகாரம், சுரண்டல் போக்குகள், சாதி, மத நிறுவனங்களுக்கெதிராக பேரன்பை, மார்க்சியத்தை, தமிழறத்தை, பெரியரியத்தை முன்நிறுத்த முடியும் என்பதையே தமது எழுத்தில் ஞானி வெளிபடுத்துபவராக இருந்தார்.
பேரன்பாகவே மார்க்சியத்தைக் காண்கிறார் ஞானி என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அப்படியான பேரன்பின் பகுதிகளாகத்தான் தமிழ் இலக்கியங்களையும், அதன் படைப்பாளிகளையும் காண்கிறார். வள்ளுவனையும், இளங்கோவையும் காலம் கடந்த தமது நட்புப் பட்டியலில் வைக்கிறார் ஞானி. கனியன் பூங்குன்றனாரையும், கபிலரையும், அவ்வை போன்றவர்களையும் சமதர்மத்தின் பின்னய வடிவங்களாகக் காண்கிறார்.
சிலப்பதிகாரம் என்பது உடைமைச் சமூகத்தின் அழிவையும் கூறும். அதே சமயம் பொதுமைச் சமூகத்தின் தேவையையும் இளங்கோ தமது படைப்பில் முன் வைக்கிறார். இதுவே மார்க்சியம், இதுவே தமிழறம். இதுவே ஞானியின் மார்க்சியப் பார்வையிலான இலக்கிய வாசிப்பும் கண்டடைவுமாகும்.
சித்தர் இலக்கியம் என்பது அற இலக்கியம். அதிகாரத்திற்கெதிரான இலக்கியமாக ஞானி முன்நிறுத்தும் அரசியல் முக்கியமானதாகும். அதனால்தான் அதைத் தமிழ் இலக்கியத்தின் சாரம் என்று அவரால் சொல்ல முடிகிறது.
அதிகாரம் தளைப்படுத்தக்கூடியது, சுரண்டக்கூடியது. மதம், முதலாளியம் அரசதிகாரத்துடன் ஒத்துப்போகக் கூடியது. இப்போது முதலாளியத்திற்கும் அரசுக்குமே வேறுபாடு கிடையாது. எனவே முதலாளியத்தை உள்வாங்கிய மார்க்சியமோ, பெரியாரியமோ இருக்க முடியாது, கூடாது என்கிறார்.
அதிகாரத்தை மக்கள் மயப்படுத்தப்படும்போதே அரசதிகாரம் உதிரும். அரசு உதிர வேண்டும் என்பது மார்க்சியக் கொள்கை. அரசு உதிர்தல் என்பது அதிகாரத்தின் உதிர்தல். தனி உடைமை, முதலாளியம், மதம் ஆகியவற்றின் உதிர்தல் என்று ஞானியின் பார்வையோடு நாம் விரிவுபடுத்திக் கொள் முடியம்.
‘பெரியாரை வியத்தலும் இலமே சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே’ என்பதே ஞானியின் ஆன்மிகம், அறம், தமிழ்மார்க்சியம்.
அதிகாரத்தைக் களைந்து கொண்ட மனிதன், மொழி, ஆன்மிகம், அரசு, சமூகம் இதுவே ஞானியின் மார்க்சிய வழியிலான பெருவிருப்பம்.
“மார்க்சியம் என் தமிழ் உணர்வையும், அறிவையும், மேம்படுத்தியது. தமிழிலக்கியம் எனக்குள் மார்க்சியத்தை செழுமைப்படுத்தியது. இத்தகைய ஒரு இணைவு என் வாழ்வை இன்று வரை நெறிபடுத்துகிறது. கட்சி மார்க்சியர் இப்படிச் சொல்ல முடியாது. ஒரு வேளை திருவிக, ஜீவா போன்றவர்கள் இப்படிச் சொல்லும் தகுதியுடையவர்கள்!” என்கிறார்.
எந்த வகை ஆதிக்கமும் மனிதனைச் சிறுமைப்படுத்தக்கூடியது. மார்க்சு கூறுவது போல அடிமை விலொங்கொடிய வேண்டுமென்றால் முதலில் ஆண்டை விடுவிக்கப்பட வேண்டும். பெண்ணுக்கு விடுதலை தேவையென்றால் ஆண் அதிகார வட்டத்திலிருந்து விடுதலையடையவேண்டும். எனவே பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம் தனித்தனியாக இயங்க முடியாது. இந்த விடுதலையின் இறுதி இலக்கு என்பது மனித விடுதலையாகத்தான் இருக்க முடியும் என்பதே ஞானி வந்தடையும் இடம். மார்க்சு, புத்தர், ஏசு, வள்ளலார் போன்றவர்கள் வந்தடையுமிடமும் கூட..