சே குவேரா : சுதந்திரன் மற்றும் நிரந்தரன்
சே குவேரா எனும் பெயர் சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில் அதன் பெயர் சே குவேரா. சர்வதேசிய மனிதன் என்று சொன்னால், நடந்தும் கடந்தும் விழுந்தும் எழுந்தும் அதன்வழி நடந்தவன் அவன்.
வரலாற்றின் போக்கினில் பற்பல புரட்சியாளர்களின் பெயர்கள் தேய்ந்துபோக, சேகுவேரா எனும் பெயர் மட்டும் இன்னும் இன்னுமென ஒளிரக் காரணம் என்ன? உலக வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை அடுத்து தத்துவாதிகளையும், கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும், திரைப்பட மேதைகளையும் கவர்ந்தவர்களில் அவனே தலையானவன். அவன் மரணமுற்ற பொலிவிய மலையில் அம்மக்களுக்கு அவன் புனித சே குவேரா.
ஆயுதவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தலைமைத்துவப் போராளியாக அதிகம் வாசித்தவன், படைப்பிலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன், தனது அனுபவங்களை, தனது சிந்தனைகளை அதிகமும் எழுத்தில் பதிவு செய்தவன் உலக வரலாற்றில் சே குவேராதான்.
பொலிவிய மலைகளில் அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட பொலிவிய அரச படைகளால் கைது செய்யப்பட்டு, பிற்பாடு பள்ளிக்கூட அறையொன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட சே குவேராவிடமிருந்து மீட்கப்பட்டவை அவரது கையெழுத்து வடிவில் இருந்த இரண்டு குறிப்பேடுகள் மற்றும் லத்தீனமெரிக்க மகாகவி பாப்லோ நெருதாவின் ‘கான்டோ ஜெனரல்’ கவிதைத் தொகுப்பு.
குறிப்பேடுகளில் ஒன்று குவேரா பொலிவியாவில் நுழைந்த நாளில் இருந்து அவர் மரணமுறும் நாள் வரையிலும் எழுதப்பட்ட போராளிகளின் அன்றாட வாழ்வனுபவங்களின் குறிப்பேடான ‘பொலிவியன் டயரி’. இன்னொன்று சே குவேராவின் செல்லக் கவிஞர்களான நான்கு லத்தீனமெரிக்கர்களின் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த படைப்புகளைத் தனது சொந்தக் கையெழுத்தினால் எழுதித் தொகுத்த கவிதைத் தொகுப்பு. இது பின்னாளில் ‘பச்சைக் குறிப்பேடு’ எனும் பெயரில் பதிப்பிக்கப்பட்டது.
‘பொலிவியன் டைரி’ தத்துவ நூலோ அல்லது அரசியல் கோட்பாட்டை விவரிக்கும் நூலோ அல்ல. கொரில்லாப் போராளி ஒருவனின் அன்றாட வாழ்வு அனுபவங்கள் குறித்தது அந்த நூல். ஆரண்யங்களே தோழனாக, விலங்குகளே இரையாக, உயிர்வாழ்தலுக்கு மத்தியில் மக்களின் மீதான மாபெரும் பேரன்பைச் சுமந்த ஒருவனது நாட்குறிப்புக்கள் அவை. அரசியலுக்கு அப்பால் பொதுவாக நட்பின் இலக்கணம் சொல்லும் நூல் அது. நட்புக்கு விசுவாசமாக இருப்பது, அதனோடு நட்பு என்பது உன்னதங்களின் மீதான நண்பர்களின் ஒருமித்த பிடிப்பிலிருந்து எழுவது எனும் அர்த்தத்தில் ‘பொலிவியன் டைரி’ உலகெங்கிலும் போராளிகளின் புனித நூலாக இன்றும் இருக்கிறது.
ஃபிடலுடன் மட்டுமல்ல பிற எந்த கொரில்லா வீரனுடனும் ஒப்பிடுகிறபோது சே குவேரா பல்துறை ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சே குவேராவின் ‘சோசலிச மனிதனும் கியூபாவும்’ எனும் குறுநூல், ‘கியூப, காங்கோ கொரில்லா யுத்தங்கள்’ குறித்த அவரது கோட்பாட்டு நூற்கள், இலத்தீனமெரிக்கப் பயணம் குறித்த அவரது இரு தொகுதிகளிலான ‘மோட்டார் சைக்கிள் டயரி, அவரது ‘இருபத்தியேழு கவிதைகள்’, அவரது கவிதை விமர்சனக் கட்டுரைகள், ‘மார்க்ஸ்-எங்கெல்ஸ் வரலாறு குறித்த அவரது முன்னுரை’ என வேறுபட்ட தளங்களில் சஞ்சரித்தவராக சே குவேரா இருந்திருக்கிறார்.
சே குவேரா குறித்த கலை, இலக்கியக் குறிப்புகள் என்பது இரு தளத்திலானவை. அவர் தன் காலத்தில் படைப்பிலக்கியம், இலக்கிய விமர்சனம் போன்றவற்றில் கொண்டிருந்த ஈடுபாடு ஒரு பரிமாணம் எனில், சே குவேரா எனும் ஆளுமை உலகக் கலை, இலக்கிய. புகைப்பட, ஒவிய, திரைப்படக் கலைஞர்களின் மீது கொண்டிருந்த தாக்கம், அதனது விளைவாக எழுந்த படைப்புக்கள் என்பது இன்னொரு பரிமாணம்.
சார்த்தர், சிமோன் தி பூவா மற்றும் ஃபனான் போன்ற தத்துவாதிகளாலும், பாப்லோ நெருதா, எர்னஸ்டோ கார்டினல், ரோக் டால்டன், அலன் ஜின்ஸ்பர்க் போன்ற உலகக் கவிகளாலும், ஆல்பர்டோ கோர்டா போன்ற புகைப்படப் கலைஞராலும், அயர்லாந்தின் பிட்ஸ்பார்க் போன்ற ஓவியராலும் அவரது பிம்பத்தைப் பச்சை குத்திக்கொண்ட மரடோனா போன்ற விளையாட்டு வீரராலும், சே குவேராவுக்கெனவே பாடலைப் புனைந்த மடோன்னா போன்ற பாடகியாலும், வால்ட்டர் செல்லாஸ், சோடர்பர்க் போன்ற திரைப்பட இயக்குனர்களாலும் ஆராதிக்கப்பட்ட சாகா வரம் பெற்ற ஒரே புரட்சியாளனாக இருப்பவர் சே குவேராதான்.
எனது நினைவுக்கெட்டிய வரையில் சே குறித்து ஆறு நோபல் பரிசுக் கவிகள் உள்ளிட்டு உலகின் 250 கவிகள் கவிதைகள் யாத்திருக்கிறார்கள். 25 நாவல்கள சே குவேராவை மையப் பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. 10 முழுநீளப்படங்களும், 100 ஆவணப்படங்களும் அவரது வாழ்வை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. விரிவஞ்சி அதனைத் தவிர்த்து சே குவேரா நேரடியாக ஈடுபட்ட இலக்கிய ஆக்கங்கள் பற்றி மட்டுமே இங்கு குறிப்புக்களாகச் சொல்ல விழைகிறேன்.
புரட்சியாளன் சே குவேராவின் கையெழுத்தினால் பதிவு செய்யப்பட்ட, பொலிவிய மலையில் அவர் மரணமுற்ற வேளையில் கண்டுபிடிக்கப்பட்ட, அவரது விருப்பமான நான்கு கவிகளின் கவிதைகள் அடங்கிய ‘பச்சைக் குறிப்புப் புத்தகம்’ நாற்பது ஆண்டுகளின் பின் முதல் முறையாக ஸ்பானிஸ் மொழியில் வெளியிடப்பட்டது. மெக்ஸிக்க எழுத்தாளரும், கவிஞரும் ஆன பெக்கொ இக்னாஸியோ தைபோ தொகுப்பினைப் பதிப்பித்திருக்கிறார். சிலியின் பாப்லோ நெருதா, நிகரகுவாவின் எர்னஸ்டோ கார்டினல், பெருவின் ஸெஸார் வல்லேஜா போன்ற இலத்தீன் அமெரிக்கக் கவிகளினிடையதும், லியோன் பிலிப்பே எனும் ஸ்பானிஸ் கவிஞருடையதும் ஆன அறுபத்தி ஒன்பது கவிதைகள் அவரது குறிப்புப் புத்தகத்தில் இருக்கின்றன.
சே குவேராவை ஆகர்சித்த நான்கு ஸ்பானிய மொழிக் கவிஞர்களையும் பார்க்கும் போது அவரது சொந்தக் கவிதைகளுக்கான உந்துதலின் கவி மூலாதாரங்களையும் சமூக மூலாதாரங்களையும் நாம் இயல்பாகவே கண்டுகொள்ள முடியும். நெருதா சிலி கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர். காதல் குறித்தும் ஒடுக்கப்பட்டவர் குறித்தும் சாகாவரம் பெற்ற கவிதைகள் எழுதியவர். எர்னஸ்டோ கார்டினல் கிறித்தவ விடுதலை இறையியலாளர். நிகரகுவா புரட்சியில் பங்குபெற்று அதன் அரசில் கலாச்சார அமைச்சராகப் பொறுப்பேற்ற, சளையாத அமெரிக்க ஏகாதிபத்திய மேலான்மையின் எதிர்ப்பாளர் அவர்.
ஸேஸார் வல்லேஜா பெருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மார்க்ஸியத்தில் ஈடுபாடு கொண்டு, மூன்று முறைகள் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்து, 1938 ஆம் ஆண்டு பாரிஸ் மருத்துவமனையில் மரணமுற்ற நாடோடிப் புரட்சியாளர். லியோன் பிலிப்பே ஸ்பெயினில் பிறந்து, பாசிசத்துக்கு எதிராகப் போராடி, மெக்ஸிக்கோவில் மரணமுற்றவர். பின்னவர் இருவரும் ஸர்ரியலிஸ நனவோடைக் கவிதைகளில் ஈடுபாடு காட்டியவர்கள்.
சே குவேரா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எழுதிய அவரது சொந்தக் கவிதைகள், முழுவதுமாக இருபது கவிதைகள், ஸ்பானிஸ் மொழியில் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் அவரது ஏழு கவிதைகள் ‘கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்’ எனும் எனது நூலில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தனது சொந்தக் கவிதைகள் குறித்து பாராட்டுணர்வு கொண்டவராக ஒருபோதும் சே குவேரா இருந்ததில்லை. பொது மேடைகளில் பிறரது கவிதைகளை வாசிக்கும் போதுகூட, தன் சொந்தக் கவிதைகள் குறித்த சங்கோஜவுணர்வு கொண்டவராகவே அவர் இருந்திருக்கிறார்.
தனது கவி நண்பர் இயான் பிலிப்பேக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘தோல்வியுற்ற கவியொருவனின் துளி இன்னும் என்னிடம் மிஞ்சியிருக்கிறது’ என சே குவேரா எழுதுகிறார். இந்தத் ‘தோல்வியுற்ற கவி’ என்பதைத் தன்னடக்கமாகவும், கவிதை வாசிப்பதற்கோ, எழுதுவற்கோ தனது இளம் கியூப அரசுப் பொறுப்புகளுக்கிடையில் நேரம் கிடையாமை என்பதாகவும் ஒருவர் உணரமுடியும். லியான் பிலிப்பே சே குவேராவுக்கு அனுப்பித்தந்த ஓரு கவிதைத் தொகுதி நேரமின்மையால் படிக்கப்படாமல் தன் பக்கத்திலேயே இருப்பதை பிலிப்புக்கு எழுதிய சே குவேராவின் கடிதம் குறிப்பிடுகிறது.
பாப்லோ நெருதாவின் கவிதைகள் மீது தீராத காதல்கொண்ட சே குவேரா, அவரது ‘காண்டோ ஜெனரல்’ கவிதை நூலுக்கு மிகவிரிவான விமர்சனமும் எழுதியிருக்கிறார். இயற்கையோடும், வறிய மனிதரோடும் கலந்த, சே குவேராவின் மனிதனின் கனவுலகினைத்தான், சேவின் ஏழு கவிதைகளிலும் நாம் தரிசிக்கிறோம். அவர் கவிதைகள் நம்மை நோக்கித்தான் நேரடியாகப் பேசுகின்றன. கடல் தனது நட்புக் கரத்தால் நமக்குக் கட்டளையிடுவது போல, சேகுவேராவின் பேரன்பு நமக்கு அவரது பிரபஞ்சமயமான கனவுலகு நோக்கிச் செயல்படக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறது.
‘ஃபிடலுக்கு ஒரு பாடல்’ எனும் தனது கவிதையில் சே குவேரா இவ்வாறு சொல்கிறார் :
“நாங்கள் புறப்படுவோம்
விடியலின் சூரியப் பிரகாச தீர்க்கத்தரிசியே
மங்கலான
ஜன சஞ்சாரமற்ற பாதைகளில்
நீ மிகவும் நேசிக்கும்
அந்தப் பச்சை நிற முதலைகளை விடுவிக்க வேண்டி
நாங்கள் புறப்படுவோம்
அட்டூழியங்களை முறியடித்து
எமது நெற்றிகளில்
மார்ட்டியின் எழுச்சி நட்சத்திரங்களால் பொறிக்கப்பட்டு
வெற்றி பெறுவோம்
அல்லது
எமது சாவைச் சந்திப்போம் எனச் சபதம் செய்வோம்
முதல் துப்பாக்கி வெடிச்சப்தம் எழும்போதும்
முழுக் கிராமப்புறமும்
புதிய ஆச்சரியத்துடன் விழித்துக் கொள்ளும்போதும்
அங்கே நாங்கள்
அமைதியின் போராளிகள் உன் பக்கத்திலிருப்போம்
எல்லாத் திசைகளிலும் உன் குரல்
விவசாயச் சீர்திருத்தம் நீதி
ரொட்டி
சுதந்திரத்தின் செய்திகளைக் கொண்டு செல்லும்போது
அங்கே நாங்கள்
உன்னை எதிரொலித்தபடி உன் பக்கத்திலிருப்போம்
கொடுங்கோலனை விரட்டியடிக்கும் நடவடிக்கை
முடிவடையும் நேரத்தில்
அங்கே நாங்கள் முடிவான போருக்கு ஆயத்தமாக
உன் பக்கத்திலிருப்போம்
தாய்நாட்டை மீட்டெடுக்கும் அம்பு
அந்த மிருகத்தைத் துளைக்கையில்
காயம் பட்ட விலாவை
அவன் நக்கிக் கிடக்கையில்
அங்கே நாங்கள் எமது ஆத்மாக்களின் கர்வத்துடன்
உன் பக்கத்திலிருப்போம்
நேர்த்தியாய் உடையணிந்த
மேனா மினுக்கிப் பணியாட்கள் கொண்டுவரும் பரிசுகளால்
எமது உறுதி பலவீனமாக்கப் படலாம் என
என்றுமே நினையாதே
நாங்கள் கேட்பது ஒரு துப்பாக்கி
துப்பாக்கி ரவைகள்
மேலிருந்து சுடுவதற்கு ஒரு குன்று மட்டுமே
வேறேதும் வேண்டேன்.
எம் வழியில்
ஈய ரவை குறுக்கிடுமேயானால்
நாம் கேட்பதெல்லாம்
எமது கொரில்லா எலும்புகளை மூட
அமெரிக்க வரலாற்றுத் திசை வழியில்
கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி
வேறேதுமில்லை”.
கவிதைகளில் சே குவேரா தன் வாழ்நாள் முழுதும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவன்றி அனுபவம், தத்துவ விசாரம், புனைவு எனும் எல்லைகள் மயங்குகிற இரு பிரதிகளை அவர் எழுதியிருக்கிறார். விமர்சகர்கள் பலர் அதனைச் சிறுகதை எனவும் வகைமைக்குள் கொண்டுவருகிறார்கள். ‘கல்’ மற்றும் ‘சந்தேகம்’ எனும் இந்த இரு பிரதிகளையும் 1965 ஆம் ஆண்டு ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருக்கும் போது அவர் எழுதியிருக்கிறார்.
‘கல்’ எனும் பிரதி அவரது தாய் மரணத்தின் விளம்பில் இருக்கிறார் எனும் உறுதி செய்யப்படாத ஒரு செய்தியை அடுத்து, மரணம் உறுதிசெய்யப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் எழுதப்பட்டது. புகைபிடிக்கும் சிலும்பியைத் தொலைத்துவிடுதல், புகையில் தொலைதல், தனது மனைவி அன்பாகக் கொடுத்த கைக்குட்டை, தனது தாய் அன்பாகக் கொடுத்த தனது சாவிக் கொத்தில் பிணைத்து வைத்திருந்த ஒரு அழகிய கல்லைத் தொலைத்தல் இவற்றை முன்வைத்து, மரணத்தின நிச்சயமின்மை, அறுதியில் மரணம் எனும் இன்மை என்று வாழ்வின் நிலையாமையை, தொலைத்தலை பேசும் பிரதி அது.
‘சந்தேகம்’ ஆப்ரிக்க மக்களிடம்- காங்கோ நாட்டுப் போராளிகளிடம் இருக்கும் ஒரு ஐதீகம் குறித்துப் பேசுகிறது. தன் முன்னால் நிற்கும் எருதுக்கும் தனக்குமான சமர் குறித்த ஒரு வீரனின் அனுவபமாகத் துவங்கும் இந்த விசாரணை, ஐதீகம் சாவாமையைக் கொண்டுவரும் எனில், போர் முனையில் சாவு வருமானால் அந்த ஐதீகம் இல்லாது போகிறதா எனும் நம்பிக்கைக் குலைவு பற்றிப் பேசுகிறது.
இதுவன்றி நாவல்கள் படிப்பதிலும் அவை குறித்துக் கருத்துச் சொல்வதையும் தனது ஈடுபாடுகளில் ஒன்றாக சே குவேரா கொண்டிருந்தார். 1940 ஆம் அண்டு லத்தீனமெரிக்க சிறந்த நாவல் போட்டி ஒன்று நடக்கிறது. கார்லோஸ் பெல்லாய் எனும் தொழிலாளியால் எழுதப்பட்ட ‘அமிதா யுன்னாய்’ எனும் பெயரிலான ஒரு பிரதி நாவலுக்கான தன்மைகள் கொண்டிருக்கவில்லை என தேர்வாளர்களால் நிராகரிக்கப்படுகிறது. சே குவேரா இது குறித்து தனது கருத்துக்களை எழுதுகிறார். அமெரிக்க பகாசுர நிறுவனமான யுனைடட் பழ நிறுவனத்தின் சுரண்டல் பற்றிய, அதில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் பற்றிய ஒரு ஆவணம் என இதனை சே ஏற்கிறார். நாவல் என்பது பேசுபொருளின் சாட்சியமாக இருப்பதல்ல, பங்காளராக இருப்பது என்கிறார். பாத்திரங்களுக்கு உளவியல் பரிமாணம் வேண்டும் என்கிறார். என்றாலும், கச்சாவாக போக்குவரத்துத் தொழிலாளரின் அனுபவங்களைச் சாட்சியமாக இருந்து பார்த்த பண்பினால் இப்பிரதி ஆவண முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்கிறார்.
சே குவேரா தனது ‘சோசலிசமும் மனிதனும்’ எனும் நூலில் அதுவரைத்திய சோசலிச அனுபங்களிலிருந்தும் மேலான ஒரு புதிய மனிதனை கியூப சோசலிசம் உருவாக்க வேண்டும் எனும் தன் விழைவை முன்வைக்கிறார். தன்விருப்பிலான உடல் உழைப்பை அதிகார வர்க்கத்தவரும் சோசலிசக் கட்டுமானத்திற்குத் தரவேண்டும் என வலியுறுத்திய அவர், உற்பத்திப் பெருக்கத்திற்கு ஊக்கத் தொகை தருவதனை அவர் மறுத்தார். தன்மறுப்பு, தன் ஈகம் என்பதைச் சோசலிசக் கட்டுமானத்திற்கான ஒரு அறமாகச் சே குவேரா முன்வைத்தார்.
இந்த நோக்கிலிருந்து கியூபக் கலை இலக்கியங்களிலும் அன்று நடைமுறை சோசலிசக் கலைக் கோட்பாடாக இருந்த சோசலிச யதார்த்தவாதம் குறித்தும் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார் :
“ சோசலிச யதார்த்தவாதம் என்பது நாங்கள் காண்ப்பிக்க விரும்பிய சமூக யதார்த்தம் பற்றிய இயந்திரவயமான பிரதிநிதித்துவம் ஆகிவிட்டது. முரண்பாடுகளோ நெருக்கடிகளோ அற்ற இயந்திரவயமான சித்தரிப்புக்களாக ஆகிவிட்டது. அவர்கள் விரும்புவதென்னவெனில் எல்லாவற்றையும் குறுக்கிக் கொச்சைப்படுத்துவது. சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்கிற மாதிரி படைப்புக்களை உருவாக்குவது. நாம் ஏன் அந்த உறைந்துபோன சோசலிச யதார்த்தவாதக் கலைக் கொள்கையிலேதான் ஒரேயொரு பொருள் பொதிந்த நோய் தீர்க்கும் மருந்து இருக்கிறதெனக் கருத வேண்டும்? ”.
புதிய மனிதனைத் தனது எழுத்துக்களில் கனவு கண்ட சே குவேரா நெஞ்சில் சுடப்பட்டு மரணமடைவதற்கு முன்னால் அவரது இறுதி வார்த்தைகள் இவ்வாறு இருந்தன : ‘என்னைக் கொல்வதற்காகத்தான் நீ வந்திருக்கிறாய் என எனக்குத் தெரியும், சுடு, குள்ளநரியே, ஒரு ஆண்மகனை நீ கொல்லப் போகிறாய்’.
சே குவேரா கொல்லப்பட்டதை வெளியுலகுக்கு உறுதிப்படுத்தவும் அவரது கைரேகைகளைப் பதியவும் அவரது மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டு பார்மால்டீஹைட் திரவத்தில் பதப்படுத்தப்பட்டது. துண்டிக்கப்பட்ட கைகள் பிற்பாடு கியூபாவுக்கு பொலிவிய அரசினால் கையளிக்கப்பட்டது. வெலிகிரான்டே மலைகளின் விமான ஓடு பாதையின் இறுதியில் குவேராவின் உடல் அன்று புதைக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு மத்தியில் குவேராவைக் கொல்வதில் சம்பந்தப்பட்ட அமெரிக்க உளவாளியான ரோட்ரிக், கொல்ல உததரவிட்ட பிராடோ மற்றும் கொலை செய்த மரியா டெரர்ன் போன்றோரின் வாக்குமூலங்களைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட குவேராவின் உடல் புதைக்கப்பட்ட இடம் புதைபொருள் ஆய்வாளர்களால் இனம் காணப்பட்டது.
1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதியிட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் உதவியுடன், வெட்டுண்ட மணிக்கட்டுகள், பற்களின் அமைப்பு, துப்பாக்கிச் சூடுகளின் வடுக்கள், மயிர்க் கற்றைகள், அவரது உடுப்பிலிருந்து புகையிலைத்தூள் போன்றவற்றை அடையாளமாகக் கொண்டு சே குவேராவின் உடல் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
1997 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி ஸாந்தா கிளாரா நகரத்தில் கல்லறையில் புதைக்கப்பட்ட சே குவேராவின் நினைவுச் சின்னம் நிரந்தரமாகக் கியூபாவில் அமைக்கப்பட்டது. ஸாந்தா கிளாரா முனைதான் கியூபப் புரட்சியில் சே குவேரா பங்குபற்றிப் போர்புரிந்த, கியூபப் புரட்சியின் கொத்தளமாக இருந்தது என்பது வரலாறு. அவன் வாகை சூடிய இடத்தில் அவன் நீடுதுயில் கொள்கிறான்.
கியூப தேசியக் கவிஞன் நிக்கலஸ் கில்லனின் சே குவேரா குறித்த நினைவஞ்சலியில் உள்ள இரண்டு வரிகள் இன்றும் எமது நாடித் துடிப்பினுள் அதிர்கிறது :
“நீ வாழ்ந்ததைப் போலவே வாழ்வதற்கு
நீ மரித்ததைப் போலவே மரிப்பதற்கு
நாங்கள் வருகிறோம்..”.