சின்னங்கள் குறியீடுகள் (சிறுகதை) – விளாதிமிர் நபகோவ்
தமிழில் –ஆர்.பாலகிருஷ்ணன்
இத்தனை ஆண்டுகளில் நான்காம் முறையாக,குணமாகாத உளவியல் நோயால் பாதிக்கப் பட்ட இளைஞன் ஒருவனுக்கு எத்தகைய பிறந்த நாள் பரிசினைக் கொண்டு செல்வது என்று அவர்கள் குழப்பமடைந்திருந்தனர்.மனிதரால் செய்யப் பட்ட பொருட்கள் அவனுக்குத் தீமையின் கூடுகளாகக் காணக் கூடும். அது அவன் கண்ணுக்கு மட்டுமே அவ்வாறு தெரியும்.அல்லது பொருள் சார் உலகின் குதூகலத்தை அது கொணரும் எனினும் அவனது சூக்கும உலகிற்கு அவை பயனற்றன.பல்வேறு பொருட்களைத் தேர்ந்தெடுத்த பின் அவற்றில் எது எல்லாம் அவனை அச்சுறுத்துமோ அல்லது வெறுப்பூட்டுமோ அவற்றைக் களைந்து(எவை அவன் பயன்பாட்டில் ஒவ்வாமையோ)அவன் பெற்றோர் ஒர் எழில் நயம் வாய்ந்த மற்றும் எளிமை நிறைந்த ஒரு கூடை ஒன்றை வாங்கினர்.
மணமாகி நீண்ட நாட்கள் கழித்தே அவன் பிறந்தான்.ஆண்டுகள் பல கழிந்திருந்தன,இன்று அவர்கள் முதுமையின் எல்லையில்…கவனமற்றுக் கட்டுண்டிருந்த அவளது செந்நிறக் கூந்தல் அலைவுற்றுக் கொண்டிருந்தது.இருண்ட மலிவான ஆடைகளை அவள் அணிந்திருந்தாள்.தன் வயதொத்த மற்றவரைப் போல் அல்லாது(அவளது அண்டை வீட்டுக் காரி திருமதி சோல் அவளது முகம் பிங்க் நிறத்தில் மின்னும் வண்ணம் ஒன்றை அணிந்திருப்பாள்,அவளது தொப்பியும் ப்ரூக் அருகில் காணும் மலர்கள் தொகுப்பாக இருக்கும்). ஒருவர் தோற்றத்தில் குறையினைத் துல்லியமாக வெளிப்படுத்தும் வேனில் வெளிச்சத்தில் ஒரு வெளிறிய தோற்றத்தில்,வெண் படலமாகவே அவள் இருந்தாள்.கணவன் ஒரு வெற்றிகரமான வணிகன்– ந்யூ யார்க்கில் இருந்தவன்.எனினும் இப்போது தன் சகோதரன் தயவில் உள்ளான்.அவன் இங்கு அமெரிக்கனாகக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவது நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன.அவன் சகோதரன் ஐசக், அவனை இவர்கள் அவ்வப்போது பார்த்தும் வருவர் , அவனை இளவரசன் என்று அழைப்பர்.
அன்று வெள்ளிக் கிழமை அவர்களது மகனது பிறந்த நாள்.யாவும் குழப்பமாகவே இருந்தன.சப் வே தொடர் வண்டிப் பயணத்தில் மின் இடையூறு காணப் பட்டது.பயணிகள் அனைவரும் கிடைத்த செய்தித் தாள்களை வாசித்தபடி இருந்தனர், அவை உரசும் ஒலி மௌனத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது.பேருந்தில் செல்லலாம் என்றால் அதுவும் தாமதப் பட்டு,அவர்கள் சாலை ஒரத்தில் நின்று கொண்டு இருந்தனர்.அது வந்து சேர்ந்த போதோ, கட்றற்ற பள்ளிப் பிள்ளைகள் நெருக்கி அடித்துக் கொண்டிருந்தனர்.அடுத்த பஸ்சைப் பிடித்து அங்கு போய்ச் சேருவதற்குள் மழை நன்றாகப் பிடித்திருந்தது.பின்னும் காத்திருந்த போது சற்றுக் கழித்து அவன் அறைக்கு செல்ல நேர்ந்தது. அவன் எப்போதும் தனது ஒளி இழந்த முகத்தை மழித்திருக்கக் கூட மாட்டான்.அவனை அவர்கள் அறை முழுக்கத் தேடினர்.அவர்களை அன்றும் கண்டு கொள்ளாமல் இருந்த செவிலி ஒருத்தி அவர்களை நன்கு அறிந்தவள் கூறினாள்- அவர்களது மகன் அன்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றான். இப்போது நன்றாக உள்ளான் எனினும் அவன் பெற்றோரைப் பார்க்க நேர்ந்தால் அவன் மனம் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதால் இன்று அவனை அவர்கள் காண வேண்டாம் என்றாள்.
அந்த இடம் துயரமாக,பணியாளர் குறைபாடுகளோடு இருந்தது,அதனால் அங்கு பொருட்கள் எதுவும் பத்திரமாக இருக்க வாய்ப்பிலை. ஆகவே அவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பரிசுப் பொருளை விட்டுச் செல்ல விரும்பவில்லை.அடுத்த முறை வரும் போது திரும்பக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர்.
கட்டிடத்திற்கு வெளியில் அவள் கணவன் குடையை விரிக்கும் வரைக்கும், பின் அவர் தோளில் கை போட்டுக் கொண்டு தொடரவும் அவள் காத்திருந்தாள்.எதிர்ப் புறத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் குடையை மடக்கிக் கொண்டனர்.அவர் தொண்டையச் செருமிக் கொண்டார் , எப்போது மனம் உடைந்து போனாலும் இவ்வாறு தான் அவர் செய்வார் .சில அடிகள் கடந்து நீர் திவலையாய் வழியும் மரக் கிளை ஒன்றில் இருந்த சிறு பறவை சிறகு விரிக்க இயலாமல் அவ்வப்போது தன் இறகுகளைப் படபடத்துக் கொண்டது.
சுரங்கப் பாதையில் நீண்டு பயணிக்கும் போதும் அவர்கள் இருவரும் மௌனமாகவே காணப் பட்டனர்.அவரது கிழக் கைகளைப் பார்க்கும் போது அவை–குடையின் கைப்பிடி இறுக்கி,நரம்புகள் புடைக்கக் காணப் பட்ட அவை– பழுப்பு நிறம் கூடிக் காணப்பட்டன.சுற்றிலும் பார்த்த வரை அவள் தன் கவனத்தை வேறு புறம் திருப்ப முயன்றாள்.எனினும் அவள் அங்கு கண்ட காட்சி சற்று அதிர்ச்சி, வியப்பு மற்றும் பரிதாபத்தை ஊட்டுவதாகவே இருந்தது.கரிய நிறம் கொண்ட ஒரு பயணி– ஒரு பெண் அவள் கால் நகங்கள் சிவந்து சிதைந்து கிடந்த நிலையில் ஒரு வயோதிகப் பெண் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.அந்தப் பெண் யாரை ஒத்து இருந்தாள்?ரிபெக்கா போரிஸொவ்னா போன்று- அவளது மகள் மின்ஸ்க்கில் சோலோவிசெக் ஒருவனை பல ஆண்டுகளுக்கு முன் மணந்து கொண்டிருந்தாள்.
கடந்த முறை அவன் தற்கொலையை முயற்சித்தபோது ,மருத்துவர் கூற்றுப் படி,அது ஒரு புதுமையாக இருந்தது.அவனுடைய வார்டில் உடன் படுக்கையில் இருந்த ஒரு நோயாளி பொறாமை காரணமாக அவன் பறக்க முயல்வதைத் தடுக்க வேண்டும் என்று பின்னிழுக்காமல் இருந்தால் அம்முயற்சியில் அவன் வெற்றி பெற்றிருக்கக் கூடும்;அவன் விரும்புவது, அவனது உலகில் ஒரு துவாரத்தை இட்டு அதன் வாயிலாக தப்பித்துச் செல்ல வேண்டும் என்பதே.
அவனது அதி மனப் ப்ரமைகள் ஒரு அறிவியல் ஆய்வேட்டில் விரிவான கட்டுரையாக வெளியாகி இருந்தன.அங்குள்ள மருத்துவர் இதனை அவர்கள் வாசிக்கக் கொடுத்தார்.ஆனால் முன்பே அவளும் அவள் கணவனும் இந் நடத்தைகளால் மிகவும் குழம்பிப் போய் இருந்தனர்.அக்கட்டுரையின் தலைப்பு “”ரெப்ரெசென்ஷியல் மேனியா’’ எனும் மனக் கிளர்வால் அவன் பீடிக்கப் படிருந்தான்.இத்தகைய அபூர்வ நோய்வகையினில் நோயாளி தன்னைச் சுற்றி நடப்பன எல்லாம் அவனது ஆளுமை மற்றும் இருத்தல் குறித்தே சுட்டிக் காட்டுவதாக உணர்வான்.யதார்த்தத்தில் உள்ள மனிதர்களை அவன் பொருட்படுத்த மாட்டான்.ஏன் என்றால் மற்ற மனிதரிலிருந்து தன்னை அவன் மிகு அறிவாளியாகக் காட்டிக் கொள்வதே.இயல்புக் காட்சிவாதம்–எங்கு அவன் சென்றாலும் இயற்கை அவனைப் பின் தொடர்வதாக உணர்வான். இயற்கை தன் மொழியில் அவனிடம் பேசுகிறது.ஆழ் மன உணர்வுகள் இரவில் உரைடயாடல் நிகழ்த்துகின்றன–இருண்ட நிழலின் மூலம் அசைவுகளை உருவாக்கும் மரங்கள் வாயிலாக.ஒவ்வொன்றும் ஒரு சுழியம்.அனைத்தின் மொத்த உரையாடலும் தன்னைக் குறித்தே உரைடயாடல் நிகழ்த்துகின்றன.அவனைச் சுற்றி எங்கும் ஒற்றர்கள்.
நட்சத்திரங்கள் நிறைந்த வானில் நகரும் மேகங்கள் கூடத் தன்னைக் குறித்தே பேசுகின்றன.கண்களால் நுகர இயலாத பார்வையாளர்கள் எங்கும் நிறைந்துள்ளனர்.வெளிர் ஒளியென கண்ணாடி மேற்பரப்பென,தெளிந்த குளத்தின் பளிங்குப் படலமென அவை உள்ளன.அவனது உள் மன எண்ணங்கள் இருண்ட மரங்களின் அசைவுகளால் அகரவரிசைச் சொல்லாடல் நிகழ்த்தும்.சூரியப் புள்ளிகள் அல்லது நீர்க்குமிழ்கள் அனைத்தும் தன் இடையீடில்லாமல் செய்திகளை மற்றொன்றிற்கு விளக்கித் தெளிவிப்பதில்லை.சில தனித்து நின்று கவனிக்கின்றன;மேற்பரப்புகள், அசைவற்ற நீர்க் குளங்கள்.சன்னலில் மாட்டியிருக்கும் கோட்டுக்கள்,கவுரவம் மிகு மேற் பார்ரவையாளர்,இதயத்தில் ஊடுருவல் செய்யும்.மற்றவை,ஒடும் நீர்,புயல் போன்றன,அவன் குறித்து நல் கருத்து அற்றவை.புறனி பேசுவன.அவனது ஒவ்வொரு நடத்தையையும் அவற்றைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு உரியன…அசையும் ஒவ்வொன்றும் சார்ந்து அவன் கவனமாக அறிந்து கொள்ள வேண்டும்.அவன் சுவாசிக்கும் காற்று கூட அளவு கண்டே நெருங்குகின்றது. அவன் தன்னைச் சுற்றி உள்ளவற்றில் இருந்து சற்றே ஓய்வு கொள்ள நினைத்தால் அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தால்… ஓஓ! அது நடக்குமா?தொலைவில் கானகத்தில் இருந்து இறையும் மழை நீர் பெரு வெள்ளமெனக் கொட்டும்.அவனது உதிர செவ்வணுக்களின் நிழற்படம் பன்னூறு முறை பல்கிப் பெருத்து தன் முன் உள்ள வெளியில் அகண்டு பரவும்.இன்னும் தொலைவில் உயரிய மலைகள் உறுதியோடு க்ரானைட் பாளங்கள் கூடி, உயர்ந்து முனகும் ஃபிர் மரங்கள் தாங்கி உண்மையின் ஒரு விளம்பலாக நிற்கின்றன.
சுரங்கப் பாதையின் அதிரடி,நாற்றம் மிகுந்த பயணத்தில் இருந்து மீண்ட போது இருளில் ஒளிர்ந்த குப்பைகள் தெருவெங்கும் கிடந்தன.இரவு உணவுக்கு கொஞ்சம் மீன் வாங்க அவள் நினைத்தாள்.ஜெல்லி ஜார் கூடையை அவர் கையில் அவள் கொடுத்தாள். அவர் வீட்டை விட்டுப் புறப்படும் போது காலையில் புறப்படும் நேரம் அவர் அவள் கையில் சாவியைக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.கிட்டத்தட்ட ஒன்றாவது தெருவை அவர் கடந்து விட்டார்.
மௌனமாக அவர் அமர்ந்திருந்து பின் சலனமற்று எழுந்தார்; அவள் படிகளில் ஏறும் சத்தம் கேட்டு.அவளோ தன் முட்டாள்தனத்தை நினைத்து தலை அசைத்தவாறே முன் நகர்ந்தாள்.அவர்கள் தம் இரண்டு படுக்கை அறை வீட்டை நெருங்கியதும் அவர் தன் வீட்டு நிலைக்கண்ணாடியை நெருங்கினார்.தனது வாயின் ஒரு முனையை நன்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு,கொடூர,முகமூடி ஒன்று நகைப்பது போன்ற பிம்பமாக அவர் கண்ணாடி முன் நின்று தன் புதிய சௌகரியமற்ற பல் வரிசையை இழுத்து நீக்கினார்.அவள் மேசையை நகர்த்தி வைக்கும் வேளையில் அவர் தனது நேசமிகு ரஷிய நாளேட்டினைப் புரட்டினார்.வாசித்தவாறே வெளிர் நொறுக்குகளைப் பற்களின்றி மென்றார்.அவரது மனோ நிலை மற்றும் உணர்வுகள் அவள் அறிவாள் எனவே மௌனம் சாதித்தாள்.
அவர் உறங்கச் சென்றவுடன் முன்னறையில் இருந்த அவள் அழுக்கடைந்த சீட்டுக் கட்டுகள் மற்றும் பழைய ஒளிப்படங்களை ஆய்ந்தவாறு காணப்பட்டாள்.குறுகிய முற்றத்தைக் கண்டால் அங்கு சில தகர டப்பாக்கள் மீது விட்டிருந்த மழை சொட்டிக் கொண்டிருந்தது.சன்னல்கள் திறந்து கிடந்தன. சற்று ஒளியோடு கூடி அதன் வாயிலாக ஒரு கருப்பு நிற ட்ரௌசர் அணிந்த மனிதன் தலை மீது கைகளைக் கிடத்தி அழுக்கான படுக்கையில் மல்லாந்து கிடந்தான்.வெளிச்சத்திற்கு நகர்ந்து அவள் ஒளிப் படங்களை ஆராய்ந்தாள்.அவன் ஒரு குழந்தையாக மற்ற குழந்தைகளை விட வியந்த நிலையில் இருந்தான்.லீப்சிக்கில் அவர்களிடம் ஒரு ஜெர்மானியப் பெண் பணியாற்றிக் கொண்டிருந்தாள்.அவள் மற்றும் அவள் முகம் பருத்த கணவன் ஆகியோர் அப்படத்தில் தெளிவாகத் தெரியவில்லை.மீண்டும் அத்தொகுப்பினை ஒவ்வொரு இதழாகப் பிரித்தாள்:மின்ஸ்க், புரட்சி,லீப்சிக்,பெர்லின் ,மீண்டும் லீப்சிக் ஒரு இல்ல சாய் முற்றம் ஆகியன அவ்வளவு தெளிவாக இல்லை.இது ரோசா அத்தை,பதட்டமான முக்கோண முகம்,அகண்ட கண்கள் கொண்ட மூதாட்டி.எல்லோருடன் மிகு கவலை கொண்டு…ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் ஆகியோர் அப்படத்தில் இருந்தனர். அழகான மனிதர் , பறவைகள் அவனால் வரையப் பட்டன எனினும் முதியோர் போல் அவன் தூக்கமின்மையால் அவதியுற்றான்.அவனது ஒன்று விட்ட சகோதரன் இப்போது ஒரு செஸ் வீரன்.மீண்டும் அச்சிறுவன்… அவனுக்கு இப்போது எட்டு வயது..
இனம் புரியாத அந்த நிலையில் நுழைவில் இருந்த முகப்போவியத்தைக் கண்டு அவன் துணுக்குற்றான், தன் நூலில் இருந்த ஒரு படத்தைக் கண்டு அச்சம் கொண்டான்.அங்கு இருந்தது ஒரு பரந்த நிலம், மலை மீது இருந்த கற்கள் இலைகளற்ற மரத்தில் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழைய சக்கர வண்டி.இப்பொழுது அவன் பத்து வயது ஆனவன்.அவர்கள் அப்போது ஐரோப்பாவிற்கு குடி பெயர்ந்தனர்.அந்த பரிதாபமான, அது ஓர் அவமானகரமான பயணம் பின் அவன் சேர்ந்த பள்ளிக் கூடம் அங்கு காணப் பட்ட அவலட்சணமான,சிதைந்த,உளம் சம நிலையற்ற பிள்ளைகள்.அமெரிக்காவிலும் அவன் இதே போன்ற ஒரு மாற்று மனோ நிலை கொண்ட பள்ளியில் சேர நேர்ந்தது.பின் நிமோனியா ஏற்பட்ட பின் அவன் முகம் கோணிப் போனது.அவனுக்கு நிகழ்ந்த குறு பீதி பிரமைகள்… அவன் பெற்றோரை அதை–ஒரு திறன் கொண்ட பிள்ளை பிறள்வு கூடிப் போன பின் இவ்வாறு அடர்ந்த ப்ரம்மைகள் தொடராக வீழும் ஒரு மனதில் சிக்கிக் கொண்டதை அவர்கள் உணர்ந்தனர்.அது மற்ற மனிதரை ஒத்த மனோ நிலை அல்ல.
எல்லாவற்றையும் மீறி வாழ்வு என்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல துன்பங்கள் கூட நிறைந்தது;அவள் வாழ்வோ மகிழ்ச்சி கூட அல்ல சற்று முன்னேற்றம் கூட இல்லாமல் இருந்ததாகக் கூட இல்லை.தொடர் துயர்களின் தாக்குதல்கள் அவற்றால் எற்பட்ட வலிகள் ஆகியவற்றை அவள் மற்றும அவள் கணவன் இருவரும் தொடர்ந்து தாங்கி வந்திருக்கின்றனர்.ஆனால் அவர்கள் மகன் கண்ணுக்குப் புலனாகாத நோய்மைகளின் வலியால் பீடிக்கப் பட்டிருந்தான்.எண்ணிலடங்காப் பரிவுகள்,அதன் ஊழ்,அனைத்தும் வீண் அல்லது மனப் பிறழ்வில் முடிந்து போயின.கைவிடப்பட்ட பிள்ளைகள் கண் காணாத மூலைகளில் ஒடுங்கிப் போய் ரீங்காரமிட்ட ஒலங்களை நெஞ்சுரத் தாங்கி குமைந்தனர். களை என்பது எவ்வளவு அழகானதாக இருந்த போதிலும் குடியானவன் கண்ணுக்குப் புலப்படாமல் ஒளிந்து வாழ முடிவதில்லை.
நள்ளிரவில் அவள் கணவன் படுக்கை அறையில் முனகுவதை இங்கிருந்து கேட்டாள்.முரட்டு ஆட்டுத் தோல் காலர் கொண்ட நீலப் பிரிய இரவு உடைக்குள் அவன் தன்னை சுருக்கிக் கொண்டிருந்த வண்ணம் உறக்கம் கொண்டிருந்தான்…
‘என்னால் தூங்க முடியல’ ,கதறினான்
‘ஏன்…நீ ரொம்பக் களைத்திருக்கிறாய்’, தூங்கு.
‘நான் இறந்து கொண்டிருக்கிறென்’…அதனால் முடியவில்லை’. அவர் படுக்கையின் கீழ் இப்போது வந்திருந்தார்.
‘வயிற்று வலியா இருக்கும். நான் டாக்டர் சொலொவைக் கூப்பிடுகிறேன்’.
‘வேண்டாம் வேண்டாம்’ அவர் முனகினான்.டாக்டர்களால ஒண்னும் முடியாது .. நாம உடனே அவனை இங்கு கொண்டு வர வேணும். பின்னால நாம் வருத்தப் படக் கூடாது.டக்கென்று எழுந்து உட்கார்ந்து அவர் கால்கள் தரையில் படத் தலையில் அடித்துக் கொண்டார்.
‘சரி அமைதியா இரு.. நாம காலையில் அவனைக் கூப்பிட்டு வருவோம்’.
அவர், ‘எனக்குக் கொஞ்சம் டீ வேணும்’ என்றார்.பின் கழிப்பறைக்கு சென்றார்.
கடின முயற்சியாகக் குனிந்து அவள் சில சீட்டுக் கட்டுகள் ஒரு ஒளிப் படம் ஆகியன எடுத்துக் கொண்டு நகர முயன்ற வேளை ஆர்டின்,ஸ்பேடுகள்,எல்சாவின் ஒளிப் படம் உடன் முட்டாள் பகட்டுக்காரனது ஒளிப் படம் ஆகியன விழுந்து தொலைத்தன.அவர் திரும்ப வந்ததும் உற்சாகமாகக் கூவினார், ‘’படுக்கை அறையை ஒழித்துக் கொடுப்போம்,ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவில் அவனுக்குக் காவல் இருப்போம்’’.
அப்போது டெலிபோன் சினுங்கியது. இந்நேரத்தில் டெலிபோனா?
அறை நடுவில் நின்றிருந்து அவர் தன் ஒரு சோடிக் காலனிகளைக் கால்களுக்குள் நுழைக்க முயன்றார்.ஒரு செருப்பு அடம் பிடித்தது.பல் இல்லாமல் அவளை நோக்கி அவர் இளித்தார்.அவளுக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் என்பதால் அவளே எப்போதும் தொலை பேசியை எடுப்பாள்.
ஒரு இளம் பெண் சற்றுக் களைத்த குரலில், ‘’சார்லியோட நான் பேச முடியுமா?’’
‘’என்ன நம்பர் வேணும்?இல்ல ..ராங்க் நம்பருங்க’’.
மெதுவாக ரிசீவரை வைத்து நெஞ்சை இதமாகத் தொட்டு ‘’அய்யோ,நான் ரொம்ப பயந்துட்டேன்’’ என்றாள்.
அவர் தன் நிலைக்கு உடன் திரும்பிப் பழைய கதையை ஆரம்பித்தார்.’’நாம் வீட்டுக்குக் கொண்டு வந்துடுவோம் பின் கத்திகள் எல்லாவற்றையும் ஒளித்து வைப்போம் …ஒரு பாதுகாப்புக்கு.மத்தவங்கள அவன் ஏதும் செய்துடக் கூடாது இல்லையா?’’
டெலிபோன் மீண்டும் அழைத்தது.அதே தீனமான குரல்.பதட்டமாக சார்லீ??
‘’நீங்க தப்பான நம்பரக் கூப்பிடுறீங்க. சீரொவுக்கு பதிலா ஒ அழுத்துறீங்க’.
அவர்கள் தங்களது, இரவு பண்டிகைக் கால அவ்வேளை அபூர்வமாக அருந்தக் கூடிய டீ அருந்த அமர்ந்தனர்.இரைச்சலோடு அவர் அதனைக் குடித்தார்.அவர் முகம் ப்ரகாசமடைந்தது.டீ டம்ளரை ஆட்டி ஆட்டி உறிஞ்சிக் கொண்டிருந்தார்.சர்க்கரை நன்கு கரைய.வழுக்கைத் தலையில் நரம்புகள் புடைத்துக் காணப்பட்டன.பிறந்த நாள் பரிசு மேசையில் அப்படியே கிடந்தது.இன்னொரு கோப்பை அவள் ஊற்றிய போது அவர் கண்ணாடி அணிந்து கோப்பையில் நடமிடும் மஞ்சள், பசுமை,மற்றும் கோப்பையின் சிவப்பு வண்ணங்களைக் கண்டார்.அவரது தளர்ந்த ஈர உதடுகள் வண்ணமிகு பழங்களைப் பெயரிடத் தொடங்கின…வாதுமை,திராட்சை,கடற் ப்ளம்,சீமை மாதுளை…பின் ஒரு ஆப்பிளைக் கடிக்க எடுத்த போது மீண்டும் போன் அலறியது.