சா.க என்ற சாகாவனம்..!
அஞ்சலிக் குறிப்புகள்
இரா.மோகன்ராஜன்
“எழுத்து என்பது மனதில் சுரந்து வருவது. சிலருக்கு வற்றாது சுரந்து கொண்டே இருக்கும். சிலருக்கு சில ஆண்டுகள் சுரந்து வறண்டு போவதும் உண்டு. என்றும் சுரப்பவர்தான் எழுத்தாளன் என்றோ, இடையில் விடுகிறவர் எழுத்தாளர் இல்லையென்றோ சொல்ல முடியாது. என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதுதான் படைப்புலகத்தில் முக்கியமாகக் கவனம் பெறுகிறது. மேலும் ஒரு படைப்பில் சொன்னதற்கு மேலாக எழுத்தாளன் எதுவும் சொல்லிவிட முடியாது!”.
இப்படியெல்லாம் பேசுவதுதான் சா.க என்று இலக்கிய சகாக்களால் அழைக்கப்படும் சா.கந்தசாமி. கீழத்தஞ்சையின் சாயாவனத்தில் துளிர்த்து வளர்ந்தவர். மனித நேசத்திற்கு அப்பால் எழுத்தில் வேறென்ன பெரிதாய் எழுதிவிட முடியும் என்பது போலக் கேட்பவர்.
1967 ஆம் ஆண்டு நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் வெளிவந்த அவரது முதல் சிறுகதையான நினைவுச் சக்கரம் தொடங்கி அவர் மறைவு வரையிலும் சுழன்று கொண்டேதான் இருந்தது அவரது கதை சொல்லலுக்கான கதைகள். எழுத்துக்கள்.
சாத்தப்பத்தேவர் கந்தசாமி என்ற பெயரில் அது வெளியாகிறது. இனி சா.கந்தசாமி என்ற பெயரில் எழுதுவது என்று அன்றைக்கே முடிவு செய்கிறார்.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகச் சிறை செல்லும் ஒருவன் விடுதலைக்குப் பிறகு ஊர் திரும்பும் அவனது கதை அது. ஊர் நினைவுகளும், போராட்டங்களும் பற்றிய நினைவுகளூடே வீட்டிற்கு வருகிறான். தெருவில் தான் காதலித்த காவேரி என்ற பெண் விதவையாக இருக்கக் காண்கிறான். என்னை நினைவில்லையா என அவள் கேட்கிறாள். அதே வருத்தத்தில் இவன் சுரத்தில் படுக்கையில் வீழ்கிறான். நினைவு சக்கரத்தில் போகிறது அவனது சுழலும் நினைவுகள். “கதையே இல்லாத எனது முதல் கதை” என்று சா.க சொன்னாலும் அது ஏற்படுத்திச் செல்லும் விடுதலைக்கால வடுக்கள் பொதுவானவை.
எனினும் ஏறக்குறைய தனது முதல்கதையின் அடிப்படையை பிற எல்லா சிறுகதைகளிலும் சுழன்றுவருவதை சுட்டிக்காட்டுவார் சா.கந்தசாமி. “எனது முதல் சிறுகதையிலிருந்துதான் இன்னும் இன்னுமென நிறைய கற்றுக் கொள்கிறேன்!” என்பார் அவர்.
இன்னும் சொல்லப்போனால் அவரது முதல் சிறுகதைக்கு முன்பாக, 1965 ஆம் ஆண்டே சாயாவனத்தைப் படைத்துவிட்டார். முதல் சிறுகதைக்குப் பிறகே சாயாவனம் வெளிவந்தது.
சாயாவனம் அதன் கதைக் கருவுக்காக மட்டுமல்ல சொற் சிக்கனம். கட்டுமானம், வெகுசன இலக்கியத்தின் எந்த சாயலுமில்லாமல் நேரடியாக மெய்மை சுடும் எழுத்தாக அது இருந்தது. அதற்கு முந்தயக் கதை சொல்லலிருந்து முற்றாக வேறொரு பாதையில் பயணிப்பதாக இருந்தது சாயாவனம்.
கதைகளைச் சொல்வதில் எதுவித சிகினா வேலைகளிலும் ஈடுபடவிரும்பாதவர். சொல்லவந்ததை சொற்களில் எதுவித பூச்சிக்களுமில்லாமல், மிகைப்படுத்தலுமின்றி சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். எழுத்தை தேடி வாசகனை அலையவிடாமல் அயர்ச்சியில் வீழ்த்தாமல் வாசிக்க வைக்கும் எழுத்தையே அவர் தெரிவு செய்திருந்தார்.
“நமது சங்க இலக்கியம் தொடங்கி, சிலப்பதிகாரம் வரை பார்க்கையில் அலங்காரம் ஒழித்து இயல்பு என்பது பிரதான அம்சமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை காண முடிகிறது. இதுவே நவீனப் படைப்புக்கும் உரியது எனக் கருதினேன். இந்த அடிப்படையிலேயே எனது நாவல்களும், சிறுகதைகளும் அமையலாயின!” என தனது எழுத்து முறை தெரிவு குறித்துப் பேசுகிறார்.
சாயாவனம் என்பது அவர் கதைக்கான புனைக்களமல்ல, அவரது சொந்த ஊரின் பெயரிலேயே அமைகிறது. கரும்பு ஆலைக்காக தனது வாழ்வாதாரத்தை இழக்கும் மண், மனிதர்கள் பற்றிப் பேசும் நாவல் அது. நிலம் என்பது வெறும் நிலமல்ல. செடி கொடி, பறவைகள், விலங்குகள், சிறு பூச்சிகள் என எல்லாவற்றின் வாழுலகு. அப்படியான தனது சிறு நிலத்தை இழக்கும் மனிதனின் கதை அது. அந்த சிறு தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளின் பெயர்தானும் நாம் அறிந்திருக்கிறோமா; இன்றைய தலைமுறைக்கு அவை செடியா, கொடியா என்றே தெரியாது; அத்தனை அறியவகை செடிகளின் பெயர்களுடே அந்த நிலத்தின் கதைவிரியும்.
கரும்பு ஆலை வந்து சீமைச் சக்கரை வந்தாலும் நம்ம தோட்டத்துப் புளியமரத்து இனிப்புக்கு ஈடாவுமா என கிழவி தூவென துப்புவாளே.. அதன் தெறிப்பும், ஆவேசமும், ஆதூரமும் இன்றைக்கு வானுயர்ந்து நின்று மனிதர்களை, மண்ணைச் சுரண்டும் எல்லா உயிர்த்தின்னும் ஆலைகளின் முகத்தின் மீதும் காலம் கடந்து புளிச்சென விழும் அவமானத்தின் எச்சில்.
1998 ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது இவரது விசாரணைக் கமிசன் நாவலுக்கு கிடைத்தது. ‘அவன் ஆனது’ நாவலும் சா.க. வின் முக்கியமான நாவலில் ஒன்றே. தனது நாவலில் சிறந்தது ‘அவன் ஆனது’ என அவரே குறிப்பிட்டுக் கொள்வார். தக்கையின் மீது நான்கு கண்கள் குறிப்பிடத் தகுந்த சிறுகதையாகும். இது பின்னர் தொலைக்காட்சியில் காட்சி வடிவமாகவும் வந்தது.
விசாரணைக் கமிசன் என்ற தலைப்பே அரசு, அதிகாரவர்க்கம் இவற்றை தீவிரமாக விசாரணை செய்வது போலத் தோன்றினாலும், சா.க எப்போதுமே தனது சொந்த அரசியல் கருத்துக்களை தமது படைப்புக்களில் வலிந்து திணிப்பவரல்லர். நாவலோ சிறுகதையோ தம்மைத்தாமே எழுதிக் கொள்வதையே விரும்புபவராக இருந்தார். “கட்சி அரசியல் சித்தாந்தங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் அரசியல் சித்தாந்தங்களில் எனக்கு ஈடுபாடு உண்டு. மேலும் வாக்களிக்கும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல சமயங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளேன். எனது படைப்புக்கள் கூட கட்சியின் அரசியல் சித்தாந்தங்களை கேள்வி கேட்டு விமர்சிப்பது மாதிரி இருக்கின்றன. அரசியல் சித்தாந்தங்கள் சில வேளைகளில் எனது புத்தகங்களை நிராகரிக்கவும் காரணமாகின்றன”. விசாரணைக் கமிசன் நாவல் அவ்வாறு பெயரைப்பார்த்துவிட்டு தமிழக அரசின் நூலகத் துறை வாங்க மறுத்துவிட்டது குறித்து ஒருமுறை இப்படி தமது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
நண்பர்களுடன் சேர்ந்து கசடதபற இலக்கியச் சிற்றிதழ் ஒன்றை நடத்தினார். ஞானக்கூத்தன், அய்ராவதம், பதி, ராமகிருஷ்ணன் போன்றோர் அவரவர் தனித்தன்மையை அவரவர் வழியில் பின்பற்றிக் கொண்டே அவ்விதழ் வந்தது.”யாருடனும், எதனுடனும் சமரசம் செய்வதில்லை என்பதை அறிவிக்கப்படாத ஒரு கொள்கையாகக் கொண்டு செயற்பட்டோம்.” இதுதான் அக்காலத்தில் ‘எழுத்து’, ‘இலக்கிய வட்டம்’ போன்ற இதழ்களிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவதாக அமைந்ததாக அவ்விதழ் குறித்து சா.க குறிப்பிடுவார்.
நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்திய கசடதபறவில்தான் ஆதிமூலம், பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தமது காலத்தால் அழியாத வரைகோடுகளைத் தீட்டினர். மேலும் சிற்பம், திரைப்படக்கலை என்று கசடதபறவின் இலக்கிய கூறுகள் அக்காலத்திலேயே விரிவடைந்திருந்தது.
ஓவியனாக வரவேண்டும் என்று பெரு விருப்பம் கொண்டிருந்த சா.க அவர்கள் பின்னர் காட்சிகளை விவரிப்பதன் ஒளி ஓவியங்களாகத் தீட்டுவதன் வழி தனது எழுத்துக்களில், ஒளிப்பதிவுக் கருவிகளில் பின்னாளில் அதை சாதித்துக் கொண்டார். எழுத்து இலக்கியம் என்று இருந்தவர் 90களில் காட்சிப் பதிவுக்குள் சொல்கிறார். ஆவணப்படம் இயக்குவதில் தனக்கென சிறப்பிடம் பிடித்துக் கொண்டார் கந்தசாமி.
மணற் சிற்பங்களான ‘டெரகோட்டா” வை கொண்டு ‘காவல் தெய்வங்கள்’ என்று ஒரு தொடரை சென்னைத் தொலைக்காட்சிக்காக இயக்கினார். அதற்குச் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்தது. ஒவியம், சிற்பம், பிறகு எழுத்தாளர்கள் என்ற வரிசையிலும் ஆவணப்படங்களை எடுக்கத்தொடங்கினார். அசோகமித்திரன், கல்கி, ஜெயகாந்தன் என்று முதன்மையான எழுத்தாளர்களை தனது ஒளிக்கருவியில் புதுவிதமாக எழுதத் தொடங்கினார். “ ஒரு சிறுகதை எழுதுவதும் ஆவணப்படம் எடுப்பதும் தனக்கு ஒன்றுபோலவே இருப்பதாகச் சொல்வார் சா.க.
சிறந்த நாவல்கள், சிறுகதைகள், எழுத்தாளர்கள் என்று சிலரை மட்டுமே அனுமதிக்கும், வரையறுக்கும் சா.க. அவரது பட்டியலில் வராதவர்கள் அவரை குற்றம்சாட்டவே செய்கின்றனர். நம்முடைய தமிழ் இலக்கிய மரபு தொகுப்பு நூல் மரபு. ஆகையால் தொகுப்பு நூலின் தேவை இன்றும் உள்ளது எனும் சா.க., இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதை தொகுப்பொன்றை அவர் கொண்டு வந்தபோது அவரது கறார் தன்மை பரவலாக விமர்சனத்திற்குள்ளானது. இந்தியா, இலங்கை மலேசியா உள்ளிட்ட நாடுகளின் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அந்த தொகுப்பில் இருந்தன. சிறந்த சிறுகதைகள் என்பது அவரவர் வாசிப்பானுபவத்தைத் தாண்டி விருப்பு வெறுப்புக்களைக் கொண்டது என்று அந்த தொகுப்பப் பற்றி விமர்சனம் வந்த போது. அதை நிராகரித்த அவர் தனது சொந்த வாசிப்பனுபவத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராகவே அதை எதிர் கொண்டார்.
“சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லப்படாமல் இருக்கும் வாழ்க்கையைச் சொல்வதுதான் கதைகளாக இருக்க முடியும்!” என்று சொல்லும் சா.க. 1993 இலிருந்து 1997 வரையிலும் சாகித்திய அகாதெமியின் தேர்வு குழுவில் இருந்தார். எனினும் சாகித்திய அகாதெமி மீது கடும் விமர்சனங்களை வைக்க அவர் தயங்கியதே இல்லை. சாகித்திய விருதுகளுக்குத் தரும் பணம் நிறைவானதல்ல என்றாலும் தகுதியானவர்களுக்கு அது கிடைப்பதில்லை. அதே சமயம் தமிழக அரசு தரும் விருதுகளுக்கு நிறைவான பணம் கிடைத்தாலும் இந்தப் பரிசுகளால் அரசுக்கும் பெருமையில்லை, தமிழலக்கியத்திற்கும் பெருமையில்லை என்று சாடியிருந்தார்.
திராவிட இயக்க எழுத்துக்கள் மொழிக்கு வேகம் கூட்டின என்று சொல்லும் சா.க., ஒரு கதை சொல்லியாக இலக்கியத்திற்கு மொழி முக்கியமானதல்ல என்பார்.
மொழியின் வழி இலக்கியம் எழுதப்பட்டாலும் அது மொழியில் மட்டுமே அடங்கியிருப்பதல்ல. மொழியின் வழி அது வெளிபட்டு எங்கும் அது வியாபிக்கிறது.
காதல் அன்பு நகைச்சுவை போன்ற சொற்கள் இல்லாமலே காதலையும், அன்பையும், நகைச்சுவையையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிலக்கியத்தில் எழுதி நிலைநிறுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களைப் பின்பற்றுகிறேன்.
பின்பற்றுகிறேன் என்பது மொழியின் மீதான தேவையற்ற காதலை தவிர்க்கிறது. மொழியை அதனுடைய அழகு, தீவிரத்துடன் எழுதுவதற்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறது.
ஒருவன் அறிவாளி என்று நிரூபிப்பதற்கு அறிவைப் புலப்படுத்தும் சொற்கள் தேவையில்லை. காதலை வெளிப்படுத்த காதல் என்ற சொல் தேவையில்லை. இதை பலவாறான சொற்களில் மக்கள் வெளிபடுத்தவே சொல்கிறார்கள். புழக்கத்தினுள்ள சொற்களிலிருந்தே எனது எழுத்துக்கள் இருக்கின்றன. என்று தனது எழுத்துக்களைப் போன்றே தன்னை அலங்காரமற்று வெளிப்படுத்துபவராக சா.க. இருந்தார். இருக்கிறார்.
எழுத்து என்பது தனித்த ஒன்றாகவோ, அதில் சாதித்துவிட்டதாகவே சா.க. ஒருபோதும் கருதியிருக்கவில்லை. ஏனெனில் தனது எழுத்தைப் போலவே அவர் அவரது எளிமையைப் பேணிக் கொண்டிருந்தார்.
“எழுத்தை வாழ்க்கையாவே கருதுகிறேன். வாழ்க்கையை எவ்வாறு செம்மையாக வாழவேண்டுமோ, அவ்வாறே எழுத்தையும் மேலான விதத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்து எழுதுகிறேன். வாழ்விலும், எழுத்திலும் வலுவில் சிக்கல்களை ஏற்றிக் கொள்வதல்லாது அதன் போக்கில் எழுதுவது. வாழ்வை போல அதன் போக்கில் வாழ்வதாகும்”.
நிலத்தை, மனிதனை, உயிர்ச் சூழலைப் பேசும் பேரன்பு மிக்க மானிட எழுத்துக்கள் நிலைபேறு பெற்றவை. அமைதியான சூழலில் சிறுகதையொன்றை, நாவலொன்றை வாசிக்க நூலொன்றை கையிலெடுக்கும் தீவிரமான தேடல் மிக்க வாசகனொருவனுடன் சா.க. எழுந்து வந்து மீண்டும் உரையாடத் தொடங்கிவிடுவார். ஏனெனில் சாயாவனத்தின் சகா அவர்.