கொரோனா முன்வைக்கும் கேள்வி – மக்களா, பொருளாதாரமா?
சுவிசிலிருந்து சண் தவராஜா
கொரோனா எனும் தீநுண்மி உலகில் அறிமுகமாகி ஏழு மாதங்கள் கடந்து விட்டன. இந்த உயிரி எப்படியானது, எவ்வாறு பரவுகின்றது, அதனை எவ்வாறு தடுக்க முடியும் என்பவை உள்ளிட்ட பல விடயங்களை பிரதான ஊடகங்களும், முறைசாரா சமூக ஊடகங்களும் அலசித் தீர்த்து விட்டன. இந்தத் தீநுண்மி சீனாவின் உயிரி ஆய்வுகூடத்தில் இருந்து வெளியேறிய ஒன்று, இதனைப் பற்றி முன்கூட்டியே உலகிற்குத் தெரிவிக்க சீனா முன்வரவில்லை, அதற்கு உலக சுகாதார நிறுவனம் துணைபோனது உள்ளிட்ட அரசியல் சொல்லாடல்களையும் பார்த்தாகி விட்டது. நாங்களே உலகின் வல்லரசுகள், எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன, நினைத்தால் பூமியைத் துளைத்துக் கொண்டு மாத்திரம் அல்ல விண்ணிலே கூட சாகசம் புரிவோம் என்று மார்தட்டிக் கொண்டு உலக அரங்கில் உலாவந்த வல்லரசுகள் பல கண்ணுக்குத் தெரியாத தீநுண்மியுடன் போர் புரிய முடியாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதையும் கண்டாகி விட்டது. இதற்கும் மேலாக, பல மாதங்கள் ஆகியும், விஞ்ஞானம் இத்தனை தூரம் வளர்ந்த பின்னரும் கூட, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் அறிவியல் உலகம் தடுமாறி நிற்கின்றது. மறுபுறம் ~சர்வ வல்லமை படைத்தவர் எனக் கருதப்படும் கடவுள்கள்| கூட, தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு ஆலயங்களுள் பதுங்கி இருப்பதையும் பார்த்தாகி விட்டது.
“கொரரோனவா? நீயா, நானா பார்த்து விடுவோம்” எனச் சவால் விட்ட ஒரு சில அரசுத் தலைவர்கள் இன்று தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். ‘கை தட்டினால் போதும், விளக்குக் கொளுத்தினால் போதும்” என்று வேதாந்தம் பேசியவர்கள் கூட வெலவெலத்துப் போய் இருக்கிறார்கள். அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு, அதன் கண்டு பிடிப்புக்களை அனுபவித்துக் கொண்டு இன்னமும் வேத காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதும் இத்தகையோர் தங்களையும் ஏமாற்றி, தம்மை நம்பியிருக்கும் மக்களையும் ஏமாற்றிக் கொண்எருக்கின்றார்கள்.
ஓயாத அலை
ஆனால், இவை யாவற்றையும் பற்றிய கவலை இன்றி கொரோனா தன் அழிவுச் செயலைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. முதல் அலைத் தாக்குதலை முடித்துக் கொண்டு இரண்டாவது அலையை அது ஆரம்பித்திருக்கின்றது எனக் கவலை கொள்வோர் ஒருபுறம். இரண்டாவது அலையல்ல இது ஓயாத அலை என எச்சரிப்போர் மறுபுறம். இதற்கிடையே, இன்றோ நாளையே தடுப்பு மருந்து ஒன்று கண்டு பிடித்துவிட மாட்டார்களா என ஏங்குவோர் ஒருபுறம். மருந்து கண்டு பிடிக்கப்பட்டாலும், செல்வந்த நாடுகள் மருந்தைத் தங்களுக்கும் தருவார்களா என்ற விடை தெரியாமல் கிறங்கும் ஏழைகள் மறுபுறம்.
காத்திருக்கிறதா அகதிகள் அலை?
இத்தகைய பின்னணியில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் தலைவரின் கருத்து கவனத்தை ஈர்க்கிறது. யூலை 23 ஆம் திகதி ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த யகன் சப்பகெய்ன், கொரோனாச் சிக்கல் முடிவடைந்து, தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ள நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்படும் போது, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமை காரணமாகவும், கொரோனத் தடுப்பு மருந்து தேடியும் அகதிகளாக இடம்பெயரக் கூடிய அபாயம் உள்தாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘உள்ளிருப்பு நடவடிக்கைகளும், நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளமையும் பெரும் எண்ணிக்கையிலான மக்களைப் பட்டினியை நோக்கித் தள்ளியுள்ளது. அவர்களது கையறு நிலமை கொரோனாத் தொற்றுக்கு இலக்காகுவதா, பட்டினி கிடந்து இறப்பதா என்ற முடிவுகளுள் ஒன்றை எடுப்பதற்கு அவர்களை உந்தித் தள்ளுகின்றது.”
“இந்த இக்கட்டான நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டுமாக இருந்தால், செல்வந்த நாடுகள் வறிய நாடுகளில் வாழ்வாதார, சுகாதார மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும். அகதிகளாக வருவோரைப் பராமரிப்பதிலும் பார்க்க, இத்தகைய பொருளாதார உதவிகளை முன்கூட்டியே வழங்குதல் இலாபகரமானது” என்பது அவரது நிலைப்பாடு.
‘கொரோனாவுக்கான மருந்து நமது நாட்டில் இல்லை. அக்கரையில்தான் உள்ளது என்ற நிலைப்பாடு உருவாகுமானால் மக்களின் இடப்பெயர்வை யாராலும் தடுக்க முடியாது போய்விடும்” எனவும் அவர் எச்சரிக்கின்றார். இதுவே, இன்றைய யதார்த்தமாகவும் உள்ளது.
பொருளாதாரத்திற்கே முன்னுரிமை
சீனாவில் தோன்றிய தீநுண்மி எங்களைத் தாக்காது என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையே உலகம் மிகப் பாரிய உயிரிழப்பைச் சந்திக்கக் காரணமாகியது. சுதாகரித்துக் கொண்ட அரசாங்கங்கள் ஊரடங்கு, உள்ளிருப்பு என்று ஆரம்பத்தில் மக்கள் நலன் சார்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முடியாத அல்லது விரும்பாத நிலையே உள்ளது. ஊரடங்குத் தளர்வு, உள்ளிருப்புத் தளர்வு என அறிவிப்புகள் வெளியாகிய வண்ணமேயே உள்ளன. மறுபுறம், கொரோனாத் தாக்கத்தின் அதிகரிப்பு தொடர்பிலான செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த முடிவுகளை அரசாங்கங்கள் எடுப்பதற்குப் பிரதான காரணம் பொருளாதாரமே. பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பது என்னும் அம்சத்தின் கீழ் மக்களைப் பலிகொடுப்பதா? ~சண்டையில் கிழியாத சட்டையா? நோயில் இறக்காத மக்களா?| என வைகைப் புயல் வடிவேல் பாணியில் கேள்வி கேட்கக் கூடியவர்களோடு விவாதிப்பதில் பயனில்லை. உண்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கங்கள் எவை என்பது பெரும்பாலும் கொரோனாக் கொள்ளைநோயின் பின்னான காலகட்டத்தில் வெட்டவெளிச்சமாகி விடும்.
17 மில்லியனைக் கடந்த தொற்று
தற்போதைய நிலையில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நம்பப்படும் கொரொனாத் தாக்குதலில் உலகளாவிய அடிப்படையில் தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 17 மில்லியனைக் கடந்துள்ளது. உலக சனத்தொகையில் 10 இலட்சம் பேருக்கு 2,089 பேர் என்ற அடிப்படையில் நாளாந்தம் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கண்டறியப்படாத நிலையில் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை இந்த எண்ணிக்கையை விடவும் 5 முதல் 10 மடங்குவரை அதிகமாக இருக்கலாம் என நம்பப் படுகின்றது.
தினமும் புதிதாக 50 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நிலையில் மரணித்தோரின் எண்ணிக்கை ஆறரை இலட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத்த்தில் தினமும் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக 59,817 ஐ எட்டியது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை 40,000 வரை குறைந்தது. தற்போது ஏறுமுகமாக உள்ள இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களின் முன்னர் 66,170 ஐத் தொட்டது.
நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் உள்ள அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மாத்திரம் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது தொற்றுக்கு ஆளாகிய உலக மக்கள் தொகையில் அரைவாசி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நாடுகளும் அதிக மக்கட்தொகை கொண்ட நாடுகள் என்பதற்கும்; அப்பால், ஆட்சியாளர்கள் ஆரம்பக் கட்டத்தில் காட்டிய அலட்சியமும் ஒரு காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.
அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா உலகிலேயே முதலாவது இடத்தைப் பெற்று நிற்க, அதே கண்டத்தைச் சேர்ந்த பிரேசில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாக் கண்டத்தைப் பொறுத்தவரை இந்தியா உலகிலேயே அதிக எண்ணிக்கையான புதிய தொற்றாளர்கள் என்ற இடத்தில் முன்னணி வகிக்கின்றது. இங்கு தினசரி புதிதாக சுமார் 50 ஆயிரம் பேர்வரை தொற்றுக்கு ஆளாகின்றனர்.
திணறும் தென்னாபிரிக்கா
மறுபுறம், தென்னாபிரிக்கா உலக வரிசையில் ரஸ்யாவிற்கு அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் உள்ள அதேவேளை ஆபிரிக்கக் கண்டத்தில் முன்னணியில் உள்ளது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் இங்கே 4,71,123 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை யூலை 7 ஆம் திகதி முதல் சடுதியாக இரண்டு மடங்காக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த நாட்டில் 7,497 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். தினசரி மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 244 ஆக உள்ளது. ஆகக் கூடுதலாக யூலை 15 இல் 312 மரணங்கள் பதிவாகி உள்ளன. யூன் மாதத்தில் திறக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் நான்கு வாரங்களுக்குப் பூட்டப் பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பல ஆயிரக் கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளமை கண்டறியப் பட்டுள்ளது. தற்போதைய தொற்று வீதத்தின் உச்சம் செப்டெம்பர் மாதத்திலேயெ நிகழும் என்ற ஆய்வாளர்களின் கணிப்பு தென்னாபிரிக்காவில் நிகழவுள்ள பேராபத்தை விளக்குவதாக உள்ளது.
அதேவேளை, நிகழ்ந்த இழப்புக்கள் மக்களின் உயிர்களை விடவும் பொருளாதாரத்தைப் பெரிதாக நினைத்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவு என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. தென்னாபிரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல்களின் பிரகாரம் மே 6 முதல் யூலை 14 வரையான காலப்பகுதியில் 17,090 மேலதிக மரணங்கள் சம்பவித்துள்ளன. பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளர்களின் அதிகரித்த வறுமை காரணமாக படுக்கைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் சுமார் 8,000 வரையான மருத்துவ ஊழியர்கள் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் அரைவாசிக்கும் அதிகமானோர் தென்னாபிரிக்காவிலேயே உள்ளனர்.
மூன்றாம் உலக நாடுகளின் துயரம்
வளர்ந்த நாடுகளை மாத்திரமன்றி மூன்றாம் உலக நாடுகளையும் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. சில நாடுகளில் மருத்துவத் துறையே முற்றாகச் செயலிழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. குறிப்பாக, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கசாக்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.
நீண்டகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுவரும் நாடுகளுள் ஒன்று ஈராக். இங்கு யுத்தம், பொருளாதாரத் தடை, மூளைசாலிகளின் வெளியேற்றம் மற்றும் ஊழல் என்பவை காரணமாக மருத்துவத் துறை முற்றாகவே செயலிழந்த நிலையிலேயே உள்ளது. பட்டியலில் 21 ஆவது இடத்தில் உள்ள ஈராக் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியோரில் ஒரு இலட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. அது மாத்திரமன்றி 2,968 பேர் மரணத்தையும் தழுவியுள்ளனர். இதில் தொற்றுக்கு ஆளாகியோரில் அரைவாசியும் மரணத்தைத் தழுவியோரில் அரைவாசிப் பேரும் யூலை மாதத்திலேயே பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 39 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்களே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் உண்மையான பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விடவும் அதிகமாகவே இருக்கும் என்பது நிச்சயம்.
மூன்றாம் உலக நாடுகளின் நிலையை இவ்வாறு விவரித்துக் கொண்டே செல்ல முடியும். வறுமை, அறியாமை, ஊழல் மலிந்த ஆட்சி என்பவற்றின் பிடியில் சிக்குண்டுள்ள கோடிக் கணக்கான மக்கள் கொரோனாத் தொற்றுக் காலத்தில் விபரிக்க முடியாத துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே, வறுமையை அனுபவித்த மக்கள் ஊரடங்கு மற்றும் உள்ளிருப்பு நடவடிக்கைகள் காரணமாக பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனாத் தீநுண்மி ஏழை பணக்காரன் என்று பாரபட்சம் பாராமல் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அரசாங்கங்கள் என்னவோ ஏழைகளைப் பாரபட்சமாகவே நடாத்தி வருகின்றன. இந்தக் கொரோனாக் காலத்தில் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறி இருக்கின்றார்கள் என்பதுவும், அவர்கள் கேட்காமலேயே அரசாங்கங்கள் தாமாக முந்திக் கொண்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன என்பதையும் பார்க்க முடிகின்றது. ~பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்| என்ற சொற்றொடரில் மறைந்து கொண்டு அரசாங்கங்கள் ஏழை மக்களின் வாழ்வோடு விளையாடி வருகின்றன.
தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கு மட்டும் மக்கள் இருந்தால் போதும் என நினைக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?
(02.08.2020 அன்று வீரகேசரி இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுவெளியீடு)