கொரோனாவால் தடுமாறும் கல்வி : இணைய வகுப்புகள் – அவை சார் விழுமியங்கள்
உண்மையான கல்வி என்று நாம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறுவது கல்வி ஒருவருக்கு சுதந்திரத்தையும் படைப்பாற்றலையும் நல்க வேண்டும். இந்தக் கருத்தை அவர் ஜெர்மனிய கல்வியியல் மற்றும் சித்தாந்த மேதையான ஹம்போல்ட், அவர் ஒரு கல்வியாளர் , அவரை ஒட்டிக் கூறுகிறார். அவர் ரிச்சர்ட் வாக்னர் என்ற இசை மேதையின் நண்பர் ஆவார். தன்னுடைய “பில்டிங் காஸ்ட்” Buildungest என்கின்ற ஒரு கருத்தின் மூலமாக கல்வி என்பது கட்டமைப்பது, சுதந்திரத்தை வலியுறுத்துவது, சுயமாக சிந்தித்து அதன் மூலமாக மனித விடுதலையை அடைவது போன்ற அடிப்படைகளையே அவர் கூறுகிறார்.
அதேசமயம் கல்வி என்பது ஒரு, மனிதர்களுக்கு இடையில் உள்ள ஒரு உள்ளார்ந்த கூறு என்றும் கூறுவார். இந்த உள்ளார்ந்த கூறு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தான். அது சில மனிதர்களுக்கு இருக்கும் . சில மனிதர்களுக்கு இருக்காது என்றெல்லாம் நாம் சொல்ல முடியாது. இந்த உள்ளார்ந்த கூறு என்பது மனிதனுக்கு உள்ள ஒரு பிரத்தியேகமான குணம்- என்னவென்றால், மனிதர்களுடைய சிந்தனை மற்றும் மூளையின் உடைய ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே இந்த உள்ளார்ந்த கூறு – இதுதான் மொழி உருவாக்கத்திற்கும் அடிப்படை என்று சாம்ஸ்கி கருதுகிறார்.
ஆகவே இந்த அடிப்படைகளில் அவர்களைப் பற்றி கூறும் பொழுது, நாம் எந்தவிதமான கல்வியை எல்லோருக்கும் தர வேண்டும், கல்வி என்பது எதிர்காலத்தில் வெறுமே முதலாளித்துவ விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் அல்லது நுகர்வு சந்தையினுடைய அடிப்படைகளை பொறுத்து சில பொருட்களை உற்பத்தி செய்வதற்கானதாகவோ இருக்கக் கூடாது என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது. இப்பொழுது நாம் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் நம்முடைய எல்லா நடவடிக்கைகளையும் கிட்டதட்ட முழுமையாகி விட்டது என்றே சொல்ல வேண்டும் கொரோனாவால். உற்பத்தி எல்லா நாடுகளிலும் பாதிப்படைந்துள்ளது. உழைப்பாளர்கள் உழைப்பை விட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால் முதலீடுகள் என்பவை உற்பத்தி, உற்பத்தி சார்ந்து சந்தைக்கு செல்வது என்ற அடிப்படையில் லாபத்தை ஈட்டுவதாக இல்லை . ஆகவே முதலாளிகளும் இப்பொழுது எந்த உதவியுமின்றி ஓய்வாக இருக்கிறார்கள். இந்த ஓய்வு என்பது அவர்களுக்கு நிம்மதி அளிப்பதாக இல்லை . என்றால், சந்தை இயங்கும் பொழுது தான் முதலாளித்துவம் சுறுசுறுப்பாக இருக்கும், அதே சமயத்திலே சந்தைதான் அவர்களுக்கு, அவர்களது பொருட்கள் உடைய மதிப்பையும் அவர்களுடைய நிறுவனத்தின் மதிப்பையும் கூட்டித் தரவல்லது. நிறுவனங்கள் மதிப்பு உயர்ந்தால் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் மதிப்போ,தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் அவர்கள் பெறும் ஊதியம் குறைவதன் விளைவாக சுழலும் பணம்,(money in circulation) ஆகியவற்றின் மதிப்பு முற்றிலுமாக அழிந்துபோகும். ஆகவே கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்று நோய் – ஒரு உலகம் முழுக்கப் பரவிக் கொண்டிருக்கக்கூடிய, கட்டுப்படுத்த இயலாத, தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு தொற்றுநோய். இந்த தொற்று நோய் எப்பொழுது தீரும்?
தொற்று நோய்க்கான மருந்து எப்பொழுது கண்டுபிடிக்கப்படும் என்பது பற்றி உறுதியான சூழ்நிலையில் யாரும் இல்லை. இந்நிலையில் எல்லாமே முடங்கி இருக்கும் பொழுது கல்வி என்பதே முடங்கித் தான் இருக்கிறது. கல்வி கற்கும் போதுதான் அடுத்த தலைமுறை அறிவுபூர்வமாக மாற்றிக்கொண்டு ஏற்படுத்தப்பட்ட உற்பத்தியில் பங்கு கொள்ள முடியும். வேறு விதமான அறிவு செயல்பாடுகளை அது உற்பத்தியாக மாற்றி சமூகத்திற்கு பயன் தரும் வகையிலும் சந்தையின் மதிப்பு கூட்டும் வகையிலும் கல்வி அளிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
ஆகவே எல்லா நாடுகளும் எல்லா நிறுவனங்களும் கல்வியைப் பற்றிய சீரிய சிந்தனையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். கல்வி இல்லை என்று சொன்னால் எதிர்வரும் தலைமுறை மற்றும் செயல் ஆக்கத்திற்கான கருத்துக்கள் எதையும் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்படும். இது மனித குல வரலாற்றில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்வி மற்றும் உயர்வு, உயர்கல்வி ஆகியவற்றிற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் இன்று வரை நன்றாக உள்ளன.அடிப்படை கட்டமைப்பு ஆகிய அனைத்தும் நன்றாக இருக்கின்றது என்றாலும் பயன் பாட்டில் இல்லை என்றால் சிதைந்துபோவதற்கு வாய்ப்பு உள்ளது.
கொரோனா பெருநோய் மனித உடல்கள் அனைத்தும் ஒரே விதமான செய்கை மற்றும் கட்டமைப்பைக் கொண்டது என்பதை நிரூபிக்கிறது. மனிதர்கள் அனைவருமே தங்களது கைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக உழைப்பைச்செலுத்தி வந்திருக்கின்றனர். அதேபோலத்தான் அவர்களுடைய நாகரிகமும் வளர்ந்துள்ளது. இதனை டார்வின் கூறுகிறார். எங்கெல்சு (ENGELS) இதனை ஏற்றுக்கொண்டு வழிமொழிகிறார்.
மனித உழைப்பு எல்லா மெய்யான வளர்ச்சிக்கும் ஆதாரம், மானுட உடல் ஒத்த அமைப்பு உடையது என்பதால் எல்லோரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். Foucault மனிதர்களுக்கு அளிக்கப்படும் தனிமைப் படுத்தப்படும் சிகிச்சை முறைகள் அவர்களை அன்னியப் படுத்துவதை உறுதி செய்வார்.
மனித உடல் இப்பொது முற்றிலும் ஒரு சிகிச்சை அளிப்பவன் கையில் சிக்கிக் கொள்கிறது.
ஆகவே சிகிச்சை முறை என்பது மையங்களை நோக்கி அல்ல, அது விளிம்புநோக்கி, அதாவது மையங்கள் அல்லாத ஓரங்களை நோக்கி இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதே கோட்பாட்டை நாம் கல்விக்கும் வலியுறுத்திப் பார்க்கலாம். கல்வி என்பது எல்லா சூழ்நிலைகளிலும் தொடர்ச்சியாக நடக்க சாத்தியமுள்ள ஒன்றுதான். அது என்றும் நின்று போவது கிடையாது. மனிதர்களுடைய சிந்தனை உயிர் உள்ளவரை இருந்து கொண்டே தான் இருக்கும். அது என்றும் நிற்பது கிடையாது. சிந்தனை இருக்கும்பொழுது உரையாடல்கள் தொடர்ச்சியாக சாத்தியம் என்ற அளவில் நிச்சயமாக கல்வி என்பதும் தொடர்ச்சியானது. கற்றல் என்பது எப்பொழுதும் நிற்பது கிடையாது. கல்வி காலத்தைப் போன்றது. காலம் உள்ளவரை கல்வி என்பது தொடர்ந்து நீடிக்கக் கூடிய ஒரு செயல்ஆகும். ஆனால் ஒரு நோய்த் தொற்று இவ்வாறு கல்வி போதிப்பதைத் தடுத்து நிறுத்துகிறது என்றால் அது கல்வியின் உடைய அடிப்படையான சிக்கல் அல்லது கல்வி போதிப்பதில் உள்ள நோக்கங்கள் குறித்த சிக்கல். கல்வி என்று சொல்லப்படுவது உற்பத்திக்கும் அதாவது மனிதனுடைய சுதந்திரமான நாம் மேலே சொன்னது போல சாம்ஸ்கி கூறிய விடுதலையின் கருப்பொருளாக அது இல்லாத பொழுது வேறுவிதமான நோக்கங்களுக்காக கல்வி வடிவமைக்கப்படுகிறது. கல்வி அமைப்புகள் அத்தகைய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படுகின்றன. இப்படி உள்ள ஒரு சூழ்நிலையில் கல்வி என்பது ஒரு மையத்தை நோக்கி நடந்து செல்வதாக இருக்கும் பொழுது அந்தத் துறை தாக்குதலுக்கு உள்ளாகும் போது, கல்வியின் ஊடாக சுகாதாரம், பொது மருத்துவம், பொதுக்கட்டமைப்பு எல்லாமே தவிர்ப்புக்கு உள்ளாகின்றன. அப்படித் தவிர்ப்பதற்கு உள்ளாகும்போது கல்வியும் தவிர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.
கல்வி என்பது இங்கே எப்படி இருந்திருக்க வேண்டும்? எந்த ஒரு மாறுபட்ட கோணத்தில் அது இயங்கி வரும் பொழுது இத்தகைய சிக்கல் ஏற்படுகிறது? இந்த சிக்கலை உருவாக்கியது யார்? இந்த சிக்கல்கள் தீர்க்கவியலாததோ அல்லது இயற்கையாகவே மானிட நாகரீகம், மானுட வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படைச் சிக்கல்கள் அல்ல. இவைகள் செயற்கையாக ஒரு குறிப்பிட்ட உற்பத்தி சூழலில், குறிப்பிட்ட சிந்தனை வடிவத்தில் மையத்தை நோக்கி நகர்ந்து போவதில் உள்ள சிக்கல்கள் மட்டுமே. என்றால், என்னுடைய, கல்வி அளிப்பவனுடைய சிக்கல் தானே ஒழிய ஓரங்களின் சிக்கல் அல்ல.
கல்வி அளிப்பது எல்லா சமூகங்களிலும் எல்லாப் பொருளாதார நிலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தர வேறுபாடு இருக்கிறது. எனினும் கல்விப் பரவலாக்க நடைமுறைக்கு எந்த அதிகார வர்க்கமும் எதிராக இல்லை. அவற்றின் அடிப்படையில் உள்ள நோக்கங்கள் வேறு என்ற போதிலும். முதலாளித்துவக் கல்வியின் நோக்கம் இலாபம் தரும் பொருளை உற்பத்தி செய்வது சார்ந்து இருக்கும். சோசலிசக் கல்வியின் நோக்கம் சமூக அக்கறையுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது. சமூகத் தேவை சார்ந்தது ஆகும். எனவே கல்வி சீராக அனைவருக்கும் நவீன மற்றும் இன்றைய காரணிகளின் அடிப்படையில் பரவலாகக் காணப்படுகிறது, வழங்கப் படுகிறது. கல்வி புகட்டுவதில் முறைமைகள் வேறு படலாம், ஆனால் இடைவெளி இருக்கக் கூடாது. தர அளவு வேறுபடலாம்.
ஆனால் கால இடைவெளி, இடை நிற்றல் கூடாது.
கல்வி இவ்வகையினில் சமூகங்களுக்கு, அதாவது குழுக்களுக்கு, ஊரக, நகரப் பகுதிகளில் பல்வேறு மொழி பேசும் மக்கள் தொகைக்கு முறை சார்ந்து வழங்கப்படுகிறது. முறை சாராமல் மற்றும் இதர சமூகப் பகுதிகளில் வழங்கப்படுகிறது, கல்வி பள்ளிகளில் திரளாகக் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களால் உரிய முறையில் வழங்கப்படுகிறது. மாணவர்களின் இருத்தல் மற்றும் கூட்டு நடவடிக்கை, சமூகக் கட்டமைப்பு, அதன் இலக்கு, ஒழுக்கம் சார்ந்த நடத்தை இவை யாவும் பள்ளி, கல்லூரிகளில் அளிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுத்த பாடங்கள், திறன்கள் போதிக்கப்படுகின்றன எனும் போது சமுகமயமாதலின் துவக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகியன இங்கு நிகழ்கின்றன.
கல்வி நிறுவனம் ஒரு கட்டமைப்பு மட்டும் அல்ல, அது நிறுவனமாக உருவாதல் கூட. சுதந்திரமான சிந்தனை, படைப்பாற்றல் இவை யாவும் பள்ளி கல்லூரிகளில் அளிக்கப் படுகிறது. இத்துடன் கூட்டுறவாக, கூட்டமைப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு, திட்டம் ஆகியனவும் அளிக்கப் படும், தன்னளவில் குறிப்பிட்ட சிந்தனை உள்ள ஒருவன் மனித இனம் முழுமைக்கும் சிந்திப்பவனாக உள்ளான்.
இத்தகைய இலக்கைப் பள்ளிக்கல்வி மட்டுமே அளிக்க முடியும்.
Ray Bradbury எழுதி உள்ள ஒரு கதையில் வருவது போல் ஒரு தாய் தன் மகளை பள்ளிக்கு செல்லும் நேரம் வந்து விட்டது என்று சொல்லப்படுவது அவள் ஆசிரியர் எனும் இயந்திரத்தை நோக்கி செல்வது போல அல்ல. இந்த இயந்திரம் வீட்டில் உள்ளது.
இங்கேஆசிரியர் என்பவர் நேரடியாக மாணவருடன் தொடர்பு கொள்ளும்போது அவர் அவர்களுக்கு வழிகாட்டியாகவும்உள்ளார். ஆன்லைனில் மதிப்பீட்டுக் கருவிகள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் ஒரேவிதமாக இருக்கின்றன. ஆசிரியரின் போதனைசார் அளவீடுகளை பொறுத்து அவை அனைத்தும் மாறும். மேலும் இங்கே ரிமெடியல் டீச்சிங் அதாவது REMEDIAL TEACHING எனப்படும் மாணவர் குறை களையும் கல்வி அளிப்பது சற்று சவாலானதாக உள்ளது. டுட்டோரியல் வகுப்புகளையும் யார் எப்போது வடிவமைப்பது என்ற கேள்வியும் எழுகிறது? அது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த ஒன்றாக மாறிப்போய் விடும்.
இதற்கான கட்டணங்களை அவர்கள் வசூலிக்க ஆரம்பித்தால் சற்று அறிவுகுறைவான மாணவர்கள் மிகமிக அதிகமாக தாங்கள் கற்பதற்கு செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். எனினும் இன்றைக்கு அதிகமாக எல்லோரும் பயன்படுத்த detection learning மென்பொருட்கள் உள்ளன. அவை சரியான பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் நாட்கள் எடுக்கும். போலவே, நிபுணர்களின் துணைகொண்டுதான் நாம் கல்வி போதிக்கும் முறை மற்றும் பாடங்கள் அவற்றை வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் வருடத்தொடக்கத்திலேயே பாடங்களை வடிவமைத்து வைத்திருக்க வேண்டும். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறை ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பாடங்களை நிர்வாகிகள் தரும்பொழுது ஆசிரியர் தன்னுடைய தனித்திறமையைக் காண்பிக்க இயலாமல் போய் விடும். மெட்டீரியல் உற்பத்தி செய்வது நிர்வாகம் சார்ந்து மாறிவிடும்.
நாம் இப்போது ஏன் சில பாடங்கள் எவ்வாறு இருக்கின்றன என்று இணையத்தில் பார்த்தோமென்றால் பாடங்கள் பற்றிய அடிப்படை விளக்கங்கள் இருக்கின்றன. கருத்தாக்கங்களும் இருக்கின்றன. ஆனால், அவை சுருக்கமாக இருக்கின்றன. இவை வாசிக்கின்ற மாணவருக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் வாய்வழியாக அளிப்பதற்கு எந்த விதமான பின்புலமும் இல்லை. என்றால், அங்கு ஆசிரியர் இல்லை. இம்மாதிரி ஒரு சூழ்நிலையில் விளக்கங்கள் மறுபடியும் கருத்துக்களின் விளக்கங்கள் இவற்றைத் தேடிச் செல்லவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இது இணையப் பயன்பாட்டிற்கான நேரத்தை அதிகரிக்கும். அதே சமயத்திலே மாணவர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தவும் கூடியது. ஒவ்வொரு விளக்கத்துக்கும் இணையான படங்கள் தரப்பட்டுள்ளன. இந்தப் படங்களில் உரிய புரிதல் என்பது எல்லா மாணவர்களுக்கும் சரியாக இருக்காது . இம்மாதிரி சூழ்நிலையில் ஒரு ஆசிரியரின் உதவி இங்கே மிகமிகத் தேவைப்படுகிறது.
இப்போது நாம் கொரோனா காலகட்டத்தில் இருக்கின்றோம். கல்வி என்பது எல்லோருக்குமே அளிக்கப்பட்டு தான்ஆக வேண்டும். ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு பலதனியார் நிறுவனங்கள் லாபக் கொள்ளையடிக்கின்றன என்று கூறினால் மிகையாகாது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆல்வின்டாப்ளர் எழுதிய ஒரு நூலில், ALWIN TOFFLER,’FUTURE SHOCK’, தகவல் நெடுஞ்சாலைகள், இன்பர்மேஷன்ஹைவே என்பது இனி எதிர்காலத்தில் மிகமிக முக்கியமான ஒருசெயல் வடிவம் பெறும் என்று கூறுகிறார்.அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எங்கோ உலகின் ஒருமூலையில் இருக்கக்கூடிய ஒருவர் அளிக்கும் ஆலோசனைகளை நாம் இங்கிருந்துபெறமுடியும். இது தொழில்நுட்பத்தில் பெரியசாதனை என்றால் மிகைஅல்ல. ஆனால் நாம் சரியான சமூகவியல் இலக்குகள் கொண்டு பயணிக்க வேண்டும். அதனை செய்வதற்கு மக்கள் சார்புடைய அரசுகள் முன் வரவேண்டும், ஆனால் ‘கோர்ஸெரா’ போன்ற நிறுவனங்கள் இத்துறையில் நீண்டகாலம் தங்களுடைய உழைப்பைச் செலுத்திவருகிறார்கள். அவர்கள் நல்லமுறையில் பாடங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்காலம் இணையவழிக்கல்வி இல்லாமல் இருக்காது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இணைய வழிக்கல்வி என்பது நிச்சயம் நமக்குத் தேவைப்படலாம்.
கல்வியில் தொழில் நுட்பங்கள் வரும்பொழுது அவை நமக்கு மிகவும் பயன் அளிக்கலாம் . ஆனால் அது ஒரு சமூகத்தை பிளவுபடுத்துகின்ற வேலையை செய்யக்கூடாது . எல்லா மாணவர்களும் சமமாக நடத்தப்படும் ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே நம்மிடம் வெவ்வேறு விதமான பாடத்திட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றால் பயன்பட்டு வரும் மாணவர்களுடைய தன்மையும் வெவ்வேறாக இருக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் மதிப்பீடுகள், சமூகத்தில் அவர்கள் பெறும் வெகுமதி ஆகியன வேறுபட்டதாக உள்ளன. இது இன்னும் ஆழப்பட்டுவிடக்கூடாது.
இப்போதைக்கு ஏராளமான செயலிகள் ஆன்லைன் கல்வியில் இருக்கின்றன. இன்னும்வரக்கூடும். இப்போதைக்கு நமக்கு கூகுள்மீட், கூகுள்ப்ளஸ் போலவே ஜியோ, ஜும் ஆப் போன்றவை பயன்பாட்டில்உள்ளன. சமயங்களில் இவற்றால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றாலும் இவை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதே நம்முடைய கேள்வி? சமூகவியல் ரீதியாக கல்வியைக் கற்பதற்கு இடைவெளி இல்லாமல் கொரோனா காலத்திலும் நாமே செல்வதற்கு நாம் செய்ய வேண்டியது – சமூகக் கூடங்களை பயன்படுத்திக்கொள்வது அல்லது மாணவர்கள் ஆசிரியர்களுடைய வீடுகளுக்குச் சென்று இச்சமயம் கல்வி கற்கலாம். அது ஒரு சிறந்தவழி.
மேற்கண்ட உரையாடல்களின் அடிப்படையில் நாம் கல்வி சமூகவியல் ரீதியாக அளிக்கப்படுவது என்பது நிச்சயம். அது வகுப்பறைகள் மற்றும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. வகுப்பறைகள் மாணவர்கள் நிறைந்தவை. பள்ளிகளும் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்தவை.இங்கு வெவ்வேறு அடுக்குகளில் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகள் நடக்கின்றன. எனவே இது ஒரு கல்வி நிலையம் என்பது ஒரு சமூகக் கூடமாக இருக்கிறது. கல்வி கற்பிக்கும் ஒரு கூடம் இருக்கிறது. பழைய முறைமைகளில் தொன்மை வகையினில் நாம் குருகுலக் கல்வியைக் கற்று வந்தோம். அது இன்றைக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையாக இருக்காது. ஏனென்றால், அது கல்வியை பரவலாக கொடுத்திருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. இம்மாதிரி ஒரு சூழ்நிலையில் குறிப்பாக, பாதிக்கப்பட்ட இந்தச் சூழ்நிலைகளில் கொரோனாவால் பாதிப்புகள் பரவலாக உருவாகி வரும் நிலையில் மாணவர்கள் வெளியே எங்கும் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. ஆனாலும் அவர்களுக்குக் கல்வி என்பது தடையில்லாமல் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற வகையில் அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி அதாவது இணைய வழிக் கல்வியை பெற முயற்சி செய்கின்றன. ஏற்கனவே என் பி சி எல் போன்ற
அமைப்புகள் இன்ஜினியரிங் கல்வியை ஆன்லைன் மூலமாக இணையம் மூலமாகத் தந்து கொண்டிருக்கின்றன.
வெவ்வேறு விதமான தனியார் நிறுவனங்களும் இணைய வழி மூலமாக கல்வி தந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இது ஒன்றும் புதிது அல்ல, எனினும் இந்திய சமூகம் வறுமை அதிகமாக உள்ள ஒரு சமூகம். இங்கு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களிடம் உரிய சாதனங்கள் இருக்க வேண்டும்.
வறுமை சூழ்ந்த ஒரு நாட்டில் உரிய சாதனங்கள் என்பவை அவற்றைப் பெறுவதற்கு நாம் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக, மடிக்கணினி என்பது தமிழ்நாடு அரசால் இலவசமாக எல்லோருக்கும் வழங்கப்பட்டது . இருந்த போதிலும் அவைகள் எல்லோரிடமும் இருக்கின்றனவா என்பது கேள்வி? போலவே, கல்லூரி மாணவர்களிடம்
அத்தகைய மடிக்கணினிகள் இருப்பதாகக் கூறமுடியாது. ஒரு வீடியோவில் ஒரு இளம்பெண் கூறுகிறார், ”எனக்கு ஐந்து ஜி நெட்வொர்க் 4ஜி நெட்வொர்க் தேவைப்படுகிறது என்று”. இன்னொரு இளைஞன் கூறுகின்றான் ,”எனக்கு இன்னும் புதுமையான கேட்ஜெட்ஸ் அதாவது நவீன தொலைத் தொடர்புக் கருவிகளை யாராவது தரமுடியுமா இலவசமாக?” என்று கேட்கின்றான். உண்மையில் அவர்களுக்கு இவை தேவையில்லை. அவர்களுக்குத் தேவையானது அடிப்படை சுகாதாரம் மற்றும் நீர் விநியோகம். ஆக இளைஞர்கள் இன்றைக்கு பரவலாக இந்த நவீன சாதனங்களின் feel பீல் ஏற்பட்டாலும் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை.
முகத்திற்கு நேரே கற்பித்தல் என்பது பள்ளிகளில் நிகழக்கூடிய ஒன்று. ஆசிரியர் தனக்கு எதிராக மாணவர்களை இருத்திக் கல்வி போதிக்கின்றார். அப்பொழுது ஆசிரியர் என்னுடைய தொனியை மாணவர்கள் மற்றும் கேட்க இயலும் வகையில் ஆசிரியர்களை இன்டராக்டிங் INTERACTING அதாவது இடைமறித்து மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை உடனடியாக தீர்த்துக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் பல மாணவர்களுக்குப் பாடம் நடத்தினாலும் கூட வெவ்வேறு மாணவர்களின் தரத்தை அறிந்து அவர் அவர்களுக்கு ஏற்றவாறு கல்வியை நல்க முடியும் இந்த வசதி என்பது நிச்சயமாக நெட்வொர்க்கில் இல்லை. இன்டராக்டிங் மூலமாக இணைய வழியில் கல்வி கற்கும் பொழுது நாம் நம்முடைய மாணவர்களுக்கு எவ்வளவு பெயருக்கு இந்த மெசஞ்சரை பயன்படுத்த தெரிகிறது என்பதும் அதே வேளையில் இவை எவ்வளவு தரமாக உள்ளன என்பதும் கேள்விக்குறியே? உடனுக்குடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்ற இந்த வசதி இணையத்தில் இல்லை.
மேலும் ஆசிரியர் என்பவர் ஒரு லீடர் அதாவது எல்லோரையும் தலைமைப்பண்பு கொண்டு வழி நடத்திச் செல்கின்ற ஒருவராக இருக்கிறார். அவரால் மாணவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்தத் தன்மை இணையவழிக் கல்வியில் இல்லை. பல்வேறு திறன் கொண்ட மாணவர்களை ஒரே விதமாக ஒரு எந்திர கதியில் பாடம் நடத்தி அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுடைய திறனை மேம்படுத்துவது என்பது மிகவும் கடின செயலாகவே உள்ளது. இணையவழிக் கல்வி நிறைய சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. மேலும் மாணவர்கள், ஆசிரியர் நேரடியாக இல்லாத சூழ்நிலையில் அவரிடம் சில அருவருப்பான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எழுந்திருக்கிறது, போலவே, தொழில்நுட்பங்களின் போதாமையும் இருக்கிறது. மாணவர்களின் உடல் மொழியும் சிற்சில சமயங்களில் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. அவர்கள் எந்த வகை உடை அணிகிறார்கள்? சீருடை அணிகிறார்களா? போன்ற சிக்கல்களும் இதில் நிறைய உள்ளன.
சமூகவியல் ரீதியாக கல்வியைக் கற்பதற்கு இடைவெளி இல்லாமல் கொரோனா காலத்திலும் நாமே செல்வதற்கு நாம் செய்ய வேண்டியது: சமூககூடங்களை பயன்படுத்திக் கொள்வது அல்லது மாணவர்கள் ஆசிரியர்களுடைய வீடுகளுக்குச் சென்று இச்சமயம் கல்வி கற்கலாம். அது ஒரு சிறந்த வழி.