குறி பயங்கரவாதி..!
இரா.மோகன்ராஜன்
நீ என்பதும்
குறி என்பதும்
வேறு வேறல்ல.
உன் அடையாளம் என்பது
குறியிலிருக்கிறது.
நீ
குறியாயிருக்கிறாய்.
அவன், இவன், உவன்
என்று சொல்வதெல்லாம்
குறிகளின் பிறிதொரு
பெயர்களாகவே இருக்கின்றன.
நீளும் உன் நாவு
பேசும் குறியாகவே
எப்போதும்
இருந்துவிடுகிறது.
காமத்தின் உரையாடலை
தொடங்கி வைக்கும் உனது
குரல்
குறியின் ஒலிவடித்தைக்
கொண்டிருக்கிறது.
இந்திரியத்தை
ஒளித்துவைத்திருக்கும்
குறிகளைப் போன்றே
காமத்தை ஒளித்து
வைத்தித்திருக்கிறது
அது.
உனது நிமிர்ந்த மீசையை
குறியின் மயிர்
வடிவமென்கின்றாய்
குறியின் அதே
பெருமிதத்துடன்.
காமத்தின் சொற்களை
உன் உதடுகள்
உச்சரிக்கும்போது
உனது எச்சில்கள்
இந்திரியங்களையே
உமிழ்கின்றன.
பத்துவிரல்களையும்
உன்னால்தான்
குறிகளின்
மூலதனமாக்கிவிட
முடிகிறது.
சாதி, மதம்
மேல், கீழ் எல்லாம்
உன் குறியின்
பொருட்டாளானவை.
ஆட்சியும்,
அதிகாரமும்
வன்முறையும்
செங்கோலும்
லத்தியும்
உனது
அரசியல் குறிகள்.
உனது வரலாறு என்பதே
ஆண்குறிகளின்
வரலாறாகவே இருக்கின்றன.
எப்போதும்.
உனது படையணிகளும்,
பீரங்கிகளும்
ஏவுகணைகளும்
உன் குறியின்
ஆயுத வடிவமே.
உனது போர்கள் என்பன
எல்லாம்
குறிகளுக்கிடையிலானப் போரே.
வெற்றியும்
தோல்வியும்
ஆக்கிரமிப்பும்,
ஆள்தலும்,
ஆணவமும்
அதிகாரமும்
குறிகள் குறித்தனவே.
புணரும்
ஆயுதங்களுடன்
திரியும்
ஒரு
பயங்கரவாதியாக
இருக்கிறாய்
சக
பெண்ணுலகிற்கு.
வன்முறையில் நீளும்
கொலைக் கருவியாகவே
அவற்றை
கொண்டிருக்கிறாய்
நீ.
பின்எப்போதும்
மவுனிக்காத
உன் ஆயுதங்கள்
பெரும் அச்சத்துடனே
வைத்திருக்கச்
செய்கின்றன.
யோனிகளை.
அத்துமீறும் உன்
குறிகளால்
ஒரு போதும்
புரிந்து கொள்ள முடியவதில்லை
யோனிகளையும்
அவற்றின் வலிகளையும்.