குரலற்றவனின் குரல்..!
இரா.மோகன்ராஜன்
உயிரின் செவியில்
இழைந்த
முதல் குரல்
உன்னுடையதாகவே
இருக்கிறது.
கடக்க முடியாத
இரவுகளை
கடக்க முடியாத
இருளை
கடக்கமுடியாத
துயரங்களை
கடக்க முடியாத
தனிமைகளைவிட்டு
வெளியேற செய்கிறது
இறுகப் பற்றிக் கொண்ட
உனது குரலின் கரங்கள்.
புதிர்களின் இருண்மைகளை
அவிழ்த்தபடி இருக்கிறது
உனது குரலின் திறப்பு.
முடிவில்லா வாசல்களை
அது திறந்து செல்கிறது.
எங்கிருந்து வருகிறாய்
நீ.
உயிரின் குரலா
பேரன்பின் மொழியா
இசையொன்றின்
சுவரக் குறிப்பா
எதில் நீ
எது நீ.
கேட்பவர் நீ
என்கிறார்
பாடுபவர் நீ
என்கிறார்.
இசைப்பார்
நீ என்கிறார்.
பின்னிரவின் பாடகனாக
இருக்கிறாய்
எனவேதான்
பின்னிரவின்
இசையை நீயே
எழுதுகிறாய்.
அதனால் பின்னிரவை
எழுதுபவனாக
இருக்கிறாய்.
பின்னிரவின் குரல்
உன்னுடையதாக இருக்கிறது.
பின்னிரவால் ஆனது
உன் குரல்.
பின்னிரவை இப்படித்தான்
ஒரு பாடலாக்கிவிடுகிறது
உனது குரல்.
பாலையின் வெறுமையை
சோலையின் குளிர்மையை
நெய்தலின் ஈரலிப்பை
மருதம், குறிஞ்சி, முல்லையென
திணையின் பாடலாகிவிடுகிறது
உனது குரல்.
திணையைப் பாடலாக்கிவிடுகிறாய்
நீ.
அடர் வனங்களும்
மலைச் சிகரங்களும்
உனது பாடலாகிவிடுகின்றன
ஒரு பொழுதில்.
காற்று
இசையாகிவிடுகிறது
உனது குரலுக்கு.
தின்மம்
நீர்மம் ஆகிறது
உனது பாடலில்.
உனது குரலின்
நெருப்பு பற்றிக் கொண்ட
இதயம் குளிர்ந்துவிடுகிறது
உனது குரலில்
அழுகின்றனர்.
புன்னகைக்கின்றனர்.
துயருருகின்றனர்.
துயருற்றவரின் குரலாக
எப்போதும் நீ இருக்கிறாய்.
துயருற்ற இரவை
துயில் கொள்ளச் செய்கிறது
உனது பாடல்.
பின்னிரவின்
இருளை
தொட்டிலாக்கிவிடுகிறது
உனது குரல்.
நீ பாடும் போது
தாலாட்டாகிவிடுகிறது
இரவு.
பின்னிரவின் துயர
மாத்திரைகளை
உனது குரல் நித்திரைக்
கொள்ளச் செய்கிறது.
பின்னிரவைப் பிண்ணிய
மரணக் கயிறுகளின்
உயிர் முடிச்சை
நிரந்தரமாக
அவிழச் செய்கிறது அது.
இறுதியில்
பின்னிரவுப் பெருங்கடலை
ஒரு படகாக மாற்றிவிடுகிறது
உனது கானம்.
நீ பாடும்போது
கவிதை
உனது குரலாகிவிடுகிறது.
காற்றைப்
புல்லாங்குழலாக்கிவிடுகிறது
உனது குரல்.
நீ பாடும் போது
ஒற்றை நிலவு
ஆகாயமாகிவிடுகிறது.
ஆகாயமாகிவிடும்
நிலவை உனது
குரல் என்றே சொல்கின்றனர்.
குரலற்றவனின் குரலிருந்து
உனது பாடல் எழுகிறது.
யாருக்காக பாடுகிறாயோ
அவருக்கான
பாடலாகிவிடுகிறாய்.
உனது பாடலைப் பாடுவதும்
உன்னைப்பாடுவதும்
அப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது.
மின்மினியும், வண்ணத்துப் பூச்சிகளும்
பின் தொடரும்
உன் குரலுக்கு
நந்தவனமாக
இருந்துவிடுகிறாய் நீ.
உன் குரல் இருக்கிறது
அதனால் நீ இருக்கிறாய்.
உன் பாடல் இருக்கிறது.
அதனால் நீ இருக்கிறாய்.
யாரோ ஒருவர்
உன் இசையை மீட்டுகிறார்.
எழுந்து வந்து
தழுவிக் கொள்கிறாய்.
இசைத் தட்டின் முள்ளிலிருந்து
அரும்பி மலர்கிறது
உனது குரல்
மீண்டும் வந்து பாடுகிறாய்
பிறகெப்போதும்.
இசையாகிவிட்ட பேரன்பின்
பெருங்குரலுக்கு
மரணம் நேர்வதேயில்லை
என்கிறது உனது
உயிர்ப்பானப் பாடலொன்று.