காட்சி அதிகாரம் அல்லது எழுத்ததிகாரத்தின் மரணம்
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெரிந்த முதிய தோழர் ஒருவர் மிக அருமையான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அப்போது அவரிடம் புத்தகங்களைப் பெற்று நான் வாசித்ததுண்டு. ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு அப்புத்தகங்கள் எல்லாம் என்னவாயின என்று தெரியவில்லை. ஏனென்றால் அவரது மூன்று மகன்களில் எவரொருவரும் அப்புத்தகங்களில் ஒன்றையேனும் எடுத்து ஒருநாளும் வாசித்து நான் பார்த்ததில்லை. இந்நிலை அவர் ஒருவர் வீட்டில் மட்டும் நடந்த ஒன்றல்ல, இன்று புத்தகங்களை வாங்கிச் சேர்த்து வைத்துள்ள பலரது வீடுகளில் இதுதான் நிலை. தனது வருவாயில் ஒரு பகுதியைச் செலவிட்டு தேடித்தேடி கவிதை, கதை, கட்டுரை என விதம் விதமாகச் சேர்த்த புத்தகங்கள் அவரது மறைவிற்குப் பிறகு பழைய புத்தகக்கடையில் கொண்டுபோய் கொட்டப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை ஆர்வமுள்ள யாரோ ஒரு சிலர் வாங்கிச் செல்கின்றனர். மற்றவை தெருவோரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
ஒரு மனிதனால் சேர்த்து வைக்கப்பட்ட வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவற்றை எல்லாம் அவரது பிள்ளைகள் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஆனால் புத்தகங்கள் மட்டும் வேண்டாத சுமையாகி விடுகின்றன. குறைந்தபட்சம் பொழுது போக்கப் பயன்படும் ஒரு பொருளாகக் கூட புத்தகங்கள் பார்க்கப்பட முடியாதவாறு 100 சதவிகித நேரத்தையும் தொலைக்காட்சிப் பெட்டியே எடுத்துக்கொண்டு விட்டது. இந்த அனுபவம் நம் எல்லோருக்குமே ஏற்பட்ட அல்லது ஏற்படக்கூடிய ஒன்று தான்.
நான் எனது 11 அல்லது 12 ஆவது வயதில் நூலகத்திற்குள் நுழைந்தேன் என்று கருதுகிறேன். ஆனால் புத்தக வாசிப்புக்காக நானும் என் நண்பர்களும் நூலகம் செல்லவில்லை. எங்களது பல்வேறு விளையாட்டுக்களில் நூலகம் செல்வதும் ஒன்று. நூலக வாசகர் வருகைப் பதிவேட்டில் அய்ந்தாறு பெயர்களைக் கிறுக்கிவைப்பதும், புத்தகங்களை வாசிக்கும் சாக்கில் கிழித்து வைப்பதும், அதிகபட்சம் படம் பார்ப்பது என்பதோடு, நூலகத்திற்குள் சப்தம் எழுப்பி அதன் அமைதியைக் குலைத்து பிற வாசகப் பெருசுகளின் கோபத்தைக் கிளருவதுடன் கடுகடுத்த எங்கள் ஊர் நூலகருக்கு மேலும் கடுப்பேற்றி எங்களை விரட்டும் படிச் செய்வதே எங்களது நோக்கமாக இருந்தது.
ஆனால் அதே நூலகம் வெகு விரைவிலேயே எனக்குப் பிடித்த இடமாக மாறியதோடு அங்கு வீற்றிருந்த புத்தகங்கள் எல்லாம் எனது விருப்பத் திற்குரிய வைகளாகவும் மாறிப்போயின. அதாவது விளையாட்டுத் தனமாக நூலகத்திற்குள் நுழைந்த என்னை தங்களது கதை சொல்லும் திறத்தால் வென்று விட்டன. துவக்கத்தில் அம்புலிமாமா, காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி, பி.டி.சாமி எழுதிய திகில் கதைகள் என்று இருந்த வாசிப்பு பின்பு படிப்படியாக வளர்ந்தது.
பள்ளி விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் நூலகத்திலேயே கழிந்தது . பின்பு காலை ஏழு முப்பது முதல் 11.30 வரை, மாலை 4 முதல் இரவு ஏழு முப்பது வரை என்று அமைந்த நூலக வேலை நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு நூலக வாயிலிலேயே காத்துக்கிடக்கும் அளவுக்கு பாதி வாசித்துவிட்டு வைத்து வந்த நாவல் ஈர்த்துக்கொண்டிருக்கும். இவ்விடத்தில் வேறு சில செய்திகளையும் சொல்வது சரி என்று படுகிறது.
நூலகம் எனது ஊரான ராமேஸ்வரத்தில் மராட்டியப் பார்ப்பனர்கள் வாழும் பகுதியான நடுத்தெருவில் (மிடில்ஸ்றீட்) அமைந்திருந்தது. அன்றைக்கு (1975 -1985) நூலகத்தைப் பார்ப்பனர்கள் மற்றும் பிள்ளைமார் எனப்படும் வெள்ளாளர், செட்டியார், பொற்கொல்லர், இஸ்லாமியர் போன்றோரே அதிகமும் பயன்படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன்.
எங்கள் தெருவில் இருந்து நூலகம் சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அதுவும் எனது நட்பு எனது தெருப் பையன்களைத் தாண்டி பள்ளி நண்பர்களான பிள்ளைமார் சாதிப் பையன்களுடன் ஏற்பட்ட பிறகே நூலகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது எனலாம். எனது தெரு நண்பர்கள் யாரும் ஐந்தாம் வகுப்பைத் தாண்ட வில்லை . அவர்களுடன் சேர்ந்து நானும் துவக்கத்தில் தெருவில் விளையாடுவது, காக்கா பெல்ட் (கவண்) எடுத்துக்கொண்டு குருவி, அணில் அடிக்கச் செல்வது, பிறத்தியார் தோப்பு (தோட்டங்கள்) களில் ஏறிக் குதித்துப் புளியம்பழம், இலந்தைப் பழம் திருடுவது என்றுதான் இருந்தேன். இந்த தெரு நண்பர்களுடன் சேர்ந்து தான் நான் கெட்டுப் போவதாக என் பெற்றோர் கூறிக்கொண்டிருந்தனர்.
ஒருவழியாகத் தெரு நண்பர்களுடனான என் நட்பு முடிந்து போனது. ஆம் அவர்களும் தங்கள் குடும்பத்தின் வறுமை காரணமாகவும் ராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் குடும்ப வழக்கப்படியும் 15 வயதிற்குள்ளாகவே வாளியைத் தூக்கிக்கொண்டு யாத்திரைப் பணியாளர்களாகத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர். நானும் படிப்பு, டியூஷன் என்பதோடு அங்கு ஏற்பட்ட புதிய நண்பர்கள் என திசை மாறினேன் .இந்தப் புதிய நண்பர்களுடன் சேர்ந்தே நூலகம் சென்றேன் .
ஆகவே நூலகம் என்பதும் வர்க்கம், சாதி சார்ந்து பயன்படுத்தப்படும் ஓர் இடமாகவே இருந்தது, இருக்கிறது . குறிப்பாக ராமேஸ்வரத்தில் கோவிலைச் சுற்றியுள்ள சாதியினரும், நடுத்தர, மேல்த் தட்டு வர்க்கப் பிரிவினரும் பயன்படுத்தும் இடமாகவே நூலகம் இருந்தது. கடற்கரையோர மீனவர் சாதியினரோ, ராமேஸ்வரத்தில் கணிசமாக இருக்கும் அருந்ததியினரோ வந்து பயன்படுத்தவில்லை என்றே கருதுகிறேன். அல்லது ஒரு சிலர் விதிவிலக்காகப் பயன்படுத்தி இருக்கலாம். என்னுடைய குடும்பப் பின்புலம் சார்ந்து நூலகத்தில் அதிக நேரம் செலவிட வாய்ப்புக் கிட்டியது என்று கூற வேண்டும்.
இவ்வாறாக புத்தகங்கள் மீதான காதல் தீவிரமாகி நூலகத்தில் கிடைக்காத புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பது என்று துவங்கி நானும் என் நண்பனுமாகச் சேர்ந்து சேகரித்த புத்தகங்களில் பலநூறு தொலைந்தது போக இன்று மீதமிருப்பதே ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் ஆகும்.
இந்தப் புத்தக வாசிப்பின் தீவிரத்தால் நூலகத்தில் வேலைக்குச் சேர்ந்து புத்தகங்களுக்கு நடுவே அமர வேண்டும் என்ற ஆசையில் . நூலகப் படிப்பையும் படிக்க வேண்டியதாயிற்று. இவ்விடத்தில் எனது நூலகக் கல்விக்கான தூண்டுதலாக இருந்தவரைப் பற்றிக் கூறவேண்டும். நூலகர் ஆவதற்கான படிப்பு பற்றி எடுத்துக் கூறி அதனை நீங்கள் படிக்கலாம் என்று கூறியவர் ராமேஸ்வரம் நூலகத்திற்கு அன்றுப் புதிதாக வந்த நூலக உதவியாளர் திரு. காளை அவர்களாவார்.
அதற்கு முன்புவரை இராமேஸ்வரம் நூலகத்திற்கு ஒரு நூலகர் மட்டுமே இருந்து வந்தார். அவர் உள்ளூரைச் சேர்ந்தவர். ஓய்வு பெறும் வரை ராமேஸ்வரம் நூலகத்திலேயே பணி செய்தார். இடையில் திரு. காளை மட்டுமே உதவியாளராக வந்து சில காலம் பணியாற்றிச் சென்றார் . திரு. காளை சிவகங்கைக்கு அருகில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். ராமேஸ்வரத்திற்கு மாற்றலாகி வந்து நூலகத்திலேயே தங்கிக்கொண்டார். அது ஒரு பெரிய வாடகைக் கட்டிடம். வெகுகாலமாக அக்கட்டிடத்திலேயே நூலகம் இயங்கி வந்தது. திரு. காளை உதவியாளராக வந்த காலகட்டம் தான் எங்களுக்குப் பொற்காலம் என்று கூற வேண்டும்.
ஏனென்றால் முன்பெல்லாம் நூலகர் தன் விடுப்பு நாட்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நூலகம் அடைத்தே கிடக்கும். தற்போதோ நூலகரது வருகை பற்றிய பிரச்சனையே இல்லை. மேலும் நூலகர் வராததையே நாங்கள் விரும்பினோம். ஏனென்றால் நூலகர் மிகவும் கோபக்காரர். அலமாரியில் புத்தகம் தேடும்போதே ஏதாவது அதட்டிக் கொண்டே இருப்பார். அவரது செயல்கள் அனைத்தும் நூலகத்திற்கு எவரும் வரக்கூடாது என்று விரும்புவது போலவே இருக்கும். திரு.காளை இதற்கு நேர்மாறானவர். மிகுந்த மகிழ்ச்சியோடு பேசுவார்.
புத்தகங்கள் பற்றி, அது இருக்கிறதா? இல்லையா? அல்லது எந்த அலமாரியில் இருக்கிறது. என்று தெளிவாகக் கூறுவார். அடுத்து நானும் எனது நண்பனும் அவருக்கு உதவியாக இருந்து புத்தகங்களை எல்லாம் அலமாரியில் அடுக்கிக் கொடுத்ததன் மூலம் என்ன என்ன நூல்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. அந்தச் சூழலில்தான் அவர் என்னிடம் ”நூலகப் படிப்பைப் படியுங்கள், உங்களுக்கு ஏற்றதாக அது இருக்கும்” என்றார்.
பிறகு அவர் சிவகங்கைக்கே மாற்றலாகிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன். மேலும் ராமேஸ்வரம் வரும் போதே 50 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார் . மிக மெலிந்த தேகம், நான்கு முழ வேட்டியும், வெள்ளை அரைக்கைச் சட்டையும் அணிந்து சிரித்த முகத்தோடு இருப்பார். அவரைப் போன்றோர் நூலகராக இருந்தால் வாசகர் பயனடைவர். தற்போது அவர் எங்கு இருக்கிறாரோ? எப்படி இருக்கிறாரோ? நூலகராகும் கனவை எனக்கு ஏற்படுத்தியதற்கு அவருக்கு நன்றி கூறலாம்.
ஆனால் என் ஆசை நிராசையாகிப் போனாலும் இன்றும் பேருந்துப் பயணங்களின் போது நூலகக் கட்டிடம் ஏதாவது கண்ணில் பட்டால் காதலர்களுக்குச் சந்தித்துக் கொள்ளும் பொழுது மனதிற்குள் மத்தாப்பு வெடிக்கும் என்பார்களே அதுபோல் எனக்குள்ளும் வெடிக்கும். அதுபோலவே சாலையில் நடந்து செல்லும் போது பழைய புத்தகக் கடை ஏதாவது தென்பட்டால் என்ன அவசர வேலை இருந்தாலும் இரண்டு நிமிடம் நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் அவ்விடத்தை விட்டு நகர முடியும். இது பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தெரியலாம். ஆனால் இன்றைக்கும் இந்தப் பைத்தியக்காரத்தனம் தொடரவே செய்கிறது.
ஆனால் எனது குழந்தைகள் இன்று ஒரு நாள் ஒரு பொழுது கூட எனது சேமிப்பில் இருந்து ஒரு புத்தகத்தையேனும் எடுத்து வாசிப்பதில்லை. பாடப் புத்தகத்திற்கு வெளியே உள்ள அவர்களது நேரத்தை எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியே (இப்போது 2020ல் மொபைல் போன்) பறித்துக் கொள்கிறது. இவர்களது இன்றைய வயதில் (16 வயதில்) சாண்டில்யனின் பெரும்பாலான நாவல்களை நான் வாசித்து முடித்திருந்தேன்.
எனது பள்ளி நூலகத்தை, தனியே நூலகம் என்று எதுவும் இல்லை. பள்ளி அலுவலக அறையில் இரண்டு அலமாரிகளில் புத்தகங்கள் வைத்துப் பூட்டப்பட்டு பொறுப்பு ஓவிய ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஓவிய ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றிருந்ததால் (ஓவியம் கொஞ்சம் நன்றாக வரைவேன்) நான் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன். சரியாகச் சொல்வதானால் பள்ளி நூலகத்தை அன்று வெகுவாகப் பயன்படுத்திய மாணவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் .
சாண்டில்யன் எழுதிய கடல்புறா, ஜலதீபம் போன்ற நாவல்களின் மொத்தத் தொகுதிகளையும் வீட்டுக்கு கொண்டு வந்து இரவு முழுவதும் கண்விழித்து வாசித்தேன். என் தந்தை, நான் பாடப் புத்தகத்தைத் தான் அப்படி வாசிக்கிறேன் என்று நினைத்து ‘தூங்குப்பா உடம்பு என்னத்துக்கு ஆகும்’ என்று கவலைப்பட்டுக் கூறிய வார்த்தைகளை இன்று நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. என் தந்தை பள்ளிக்கே செல்லாதவர். திருமணத்திற்குப் பின்பே தன் பெயரை கையொப்பமிட என் அம்மாவின் வழியாகக் கற்றுக் கொண்டதாகக் கூறுவார். என் அம்மாவும் எனது சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் என் நாவல் வாசிப்பைக் கண்காணிக்க யாருமில்லை.
சாண்டில்யன் நாவல்களில் ஏறக்குறைய அனைத்தையும் வாசித்துச் சலிப்புத் தட்டிய பின்பு சுஜாதா, பாலகுமாரன் என ஒவ்வொருவராகக் கடந்து வந்தேன் . இந்தப் பட்டியல் மிக நீளமானது. புஷ்பாதங்கதுரை, பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேந்திரகுமார், ராஜேஷ் குமார், தமிழ்வாணன், கல்கி, கண்ணதாசன், மு.மேத்தா (சோழ நிலா), ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், தி . ஜானகிராமன், நாஞ்சில்நாடன், பூமணி, கே. ஏ. அப்பாஸ், லட்சுமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பாமா, ஜெயந்தன், வைரமுத்து (வானம் தொட்டுவிடும்தூரம்தான்) பா. செயப்பிரகாசம் (சூரியதீபன்), மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், வேலராமமூர்த்தி, மாலன், கந்தர்வன், விட்டல்ராவ், பிரபஞ்சன், தகழிசிவசங்கரன், ஜெகதா, கேசவதேவ், சரத்சந்திரர், காண்டேகர், சே.யோகநாதன், செ.கணேசலிங்கம், கே. டானியல் என்ற இந்தப் பட்டியல் முடிவுறாத ஒன்றாகும்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய, சீன மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. நாவல் வாசிப்பைத் தொடர்ந்து சிறுகதை, கவிதை, கட்டுரை வாசிப்பு என வளர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறான வாசிப்பின் மூலமாக நான் அடைந்தது என்ன? எனது குழந்தைகள் இன்று இழந்தது என்ன? என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு இழப்பு பற்றி பேசுவதால் இன்றைய இளம் சந்ததியினரைக் குறை சொல்வது என் நோக்கம் என்று கருதிவிடக்கூடாது.
நாம் சிறுவர்களாக இருந்தபோது (1970/1980-களில்) தொலைக்காட்சி அலைவரிசைகள் இன்று போல் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. சாலிடர் தொலைக்காட்சிப் பெட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெருவுக்கு ஓரிரு வீடுகளில் மட்டுமே இருந்தது. ராமேஸ்வரத்தில் இந்தியத் தொலைக்காட்சி – தூர்தர்ஷன் ஒளிபரப்பு துல்லியமாகத் தெரியாது. இலங்கையின் ரூபவாகினி மட்டுமே தெளிவாகத் தெரியும். வாரம் ஒரு முறை தமிழ்த் திரைப்படம் காட்டப்படும் நாளன்று தெருப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ள வீட்டில் குழுமிவிடுவர்.
மற்ற நாட்களில் குழந்தைகள் சிறுவர் சிறுமியர் அனைவரும் மாலை நேரங்களில் தெருக்களில் பல்வேறு விளையாட்டுகளில் மூழ்கி போய் கிடப்பார்கள். அந்தப் பல்வேறு விதமான விளையாட்டுக்களை எல்லாம் இன்றைய இளம் பருவத்தினர் இழந்துவிட்டனர். பள்ளி முடிந்து வந்தபிறகு, மாலை வீட்டுப்பாடம் முடிந்து விட்டால் பின்பு இரவு தூங்கும் வரை தொலைக்காட்சிப் பெட்டி முன் தான் அமர்ந்து இருக்கின்றனர். இதற்கு, மாறிப்போன சூழல் தான் காரணமே தவிர குழந்தைகள் அல்ல .
அடுத்து இன்றைய குழந்தைகள் சிறுவர்-சிறுமியர் இழந்ததைப் பற்றி பேசுவதால் அன்றைக்கு நாம் எல்லாம் பெற்று கடந்த காலம் பொற்காலமாகவும், நிகழ் காலம் இருண்டகாலமாகவும் திகழ்கிறது என்று பழம் பெருமை பேசுவது என் நோக்கமல்ல. இன்றைய இளம் பருவத்தினரது பல்வேறு திறமைகள், புத்திக்கூர்மை, கணினி அறிவு, ஆங்கில மொழியறிவு போன்றவற்றோடு ஒப்பிடும்போது நாம் அன்று பெற வாய்ப்பு இல்லாமல் போனவற்றைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
ஆக இழப்பு என்பது ஒரு தலைமுறைக்கு மட்டும் உரியது அல்ல. அதேபோல் பெறுதல் என்பதும் ஒரு தலைமுறைக்கு மட்டும் உரியது அல்ல. மேலும் காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களை எல்லாம் எச்சில் துப்பி அழித்துவிட்டு பழைய நிலைக்குச் சென்று விட முடியாது என்ற புரிதலும் நமக்கு வேண்டும். இத்தகைய பல்வேறு புரிதல்களுடன் தான் புத்தக வாசிப்பில் ஏற்பட்டு விட்ட மாறுதல்களையும் அதனால் ஏற்பட்டுவரும் விளைவுகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும். மேலும் எழுத்தின் அதிகாரம் குறைந்து காட்சியின் (திரையின்) அதிகாரம் மேலும் மேலும் அதிகரித்து வருவதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
மக்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விதம் காலம் தோறும் மாறிக் கொண்டு வருகிறது. பண்டைக்கால மக்கள் சில ஒலிகளையும் பொருள்களையும் செய்திகளைத் தெரிவிப்பதற்கு அடையாளங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். கூவுதல், சீழ்க்கை அடித்தல், சங்கு ஊதுதல், மணி அடித்தல், பறை ஒழித்தல், கொடி அசைத்தல் ஆகியவற்றின் வாயிலாகவும் செய்தியை வழங்கியுள்ளனர். தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் மூன்று வகையாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை மேலிருந்து (திருமுகம்) கடிதம் வாயிலாகவும், ஆள் வழியாகவும் செய்திகளைப் பரப்பி உள்ளதை சிலப்பதிகாரக்கதை மூலம் அறிகிறோம். ஓட்டக்காரன், குதிரை, புறா, ஒற்றன், பாணர்கள் வாயிலாகவும் செய்தி பரப்பப் பட்டுள்ளதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கி.பி. 1609 இல் ஜெர்மனியில் ‘ரிலேஷன்’ என்ற முதல் இதழும், இந்தியாவில் 1780 இல் ‘பெங்கால் கெசட்’ முதல் இதழாகவும், சென்னையில் 1785 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ்கூரியர்’ என்ற இதழாக வெளிவந்த தையும் இதழியல் வரலாறு பதிவு செய்துள்ளது .
கி. பி. பதினாறாம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டது. கி.பி. 1577-ல் தமிழ் எழுத்துகளை அச்சிடும் முயற்சி நடந்தது. தொடக்க காலத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தமது சமய நூல்களை அச்சிட்டனர். ஆயினும் அச்சு இயந்திரம் வந்து 300 ஆண்டுகள் கழித்து 1879 இல் தான் தமிழில் முதல் நாவல் எனப் போற்றப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1876 இல் எழுதிய ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ வெளிவந்தது. ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ போன்றவை அடுத்தடுத்து வெளிவந்த குறிப்பிடத்தக்க நாவல்கள் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் தமிழில் சிறுகதை படைக்கப்பட்டது. வா.வே.சு. ஐயரே முதல் சிறுகதை (மங்கையர்கரசியின் காதல்) படைத்தவர் என்று கூறப்படுகிறது. இதைப்போன்றே 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம்நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டுரை எனும் வடிவில் உரைநடை இலக்கியம் பலரால் எழுதப்பட்டது.
இவ்வாறு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாவல், சிறுகதை, கட்டுரை போன்ற இலக்கியங்கள் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி பரவலாக செல்வாக்குப் பெறுவதற்குள் அடுத்தடுத்து ஆங்கிலேயர்களால் வானொலியும், சினிமாவும் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இத்தாலியை சேர்ந்த அறிவியல் அறிஞர் மார்க்கோனி (1901இல்) வானொலியைக் கண்டுபிடித்த பின்பு 1925ஆம் ஆண்டில் ஜெர்மனியில் வானொலி நிலையங்கள் தோன்றின. அது முதலாக வானொலி மக்கள் பயன்பாட்டு ஊடகமாக வளர்ந்தது. 1.1.1936இல் புதுதில்லி வானொலி நிலையமும் 16.06.1938 இல் சென்னை வானொலி நிலையமும் தொடங்கப்பட்டன .
தொலைக்காட்சியை 1925 இல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் லூகி என்பவர் கண்டுபிடித்தார். மக்கள் காணும் முறையான தொலைக்காட்சி ஒளிபரப்பினை 1938இல் பி.பி.சி நிலையம் தொடங்கியது. அதேபோல் பொதுமக்கள் வீடியோ கேமராவைப் பயன்படுத்தி வீட்டு விழாக்களைப் படம் பிடித்து தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கும் வழக்கம் 1972இல் ஹாலந்து நாட்டின் பிலிப்ஸ் நிறுவனம் வீட்டு வீடியோ வகையை (வீடியோ ஹோம் சிஸ்டம் ) சந்தையில் அறிமுகப்படுத்திய பிறகே புழக்கத்திற்கு வந்தது.
யுனெஸ்கோ நிறுவனம் இந்தியாவில் தொலைக்காட்சி நிலையத்தை நிறுவும் செலவுக்காக 20,000 அமெரிக்க டாலர்களையும் அதனுடன் 180 தொலைக்காட்சிப் பெட்டிகளையும் மானியமாக அளித்தது. 1959இல் புதுதில்லியில் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்திருந்து புதுதில்லி தொலைக்காட்சி நிலையத்தை நிறுவினார்கள். முக்கியப் பிரமுகர்கள் 180 பேர் மட்டும் சந்தாதாரர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, அந்த மானியமாக வந்த 180 தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் மட்டுமே இந்தியாவின் தொடக்ககாலத் தொலைக்காட்சியின் பயனைஅனுபவித்தனர்.
1975 இல் சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டது. அது கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி யாகவே இருந்ததோடு சென்னையைச் சுற்றி சுமார் 50 கிலோமீட்டர் சுற்றுக்கு மட்டுமே தெரியக் கூடியதாக அன்றைய தூர்தர்ஷன் ஒளிபரப்பு இருந்தது. 1982இல் வண்ணத் தொலைக் காட்சியும், 1993 ஏப்ரல் 14 முதல் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது.
இதேபோல் திரைப்படம் என்பது உலகில் லூமியர் சகோதரர்களால் 1895ஆம் ஆண்டு பாரிசில் காட்டப்பட்ட முதல் திரைப்படம் முதல் 1927 வரையிலும் உள்ள 32 ஆண்டு காலம் திரைப்படவரலாற்றில் மௌனத் திரைப்படக் காலம் (Silent Era) என்று கூறப்படும்.
இந்தியாவில் 1913இல் தாதா சாகிப் பால்கே தயாரித்து அளித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற திரைப்படம் முதல் 1931 இல் ‘ஆலம் ஆரா’ என்ற இந்தி மொழி பேசும் படம் தோன்றியது வரை உள்ள 19 ஆண்டு காலத்தை இந்திய நாட்டின் மௌனத் திரைப்படக் காலம் என்று கூறுவர். அதே 1931 ஆம் ஆண்டிலேயே தமிழில் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது. எனவே முதல் தமிழ் பேசும் படம் வெளிவந்து இன்றைக்கு (2014 இல்) 80 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதைப்போன்றே தமிழ்நாட்டின் முதல் நிரந்தரத் திரையரங்கமான ‘வெரைட்டிஹால்’ கோவையில் 1914இல் சாமிக்கண்ணு வின்சென்ட்* அவர்களால் அமைக்கப்பட்டு 97 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆக தமிழர்களுக்கு, திரைப்படத்திற்கு அரை நூற்றாண்டிற்கு முன் பரிச்சயமான நாவல் வாசிப்பு இன்று திரைகளின் ஆதிக்கத்தால் குறைக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். அதாவது காட்சி ரசனை, வாசிப்பு ரசனையை வென்று வருகிறது. அதே சமயம் காட்சி வாசிப்புக்கு மாற்றாகுமா? என்ற கேள்வியும் எழுகிறது .
கல்வி பெறாதவர்கள் இன்னும் உள்ள நாட்டில் எழுத்தை விட எளிமையானதும் வலிமை வாய்ந்ததுமான காட்சி ஊடகம் எளிதாக செல்வாக்குப் பெற முடியும் என்றாலும், எழுத்தில் ஒரு படைப்பாளி கூறுவதை எல்லாம் காட்சியாக்கி நிறைவு செய்துவிட முடியுமா? என்பது விவாதத்துக்கு உரிய ஒன்றாகும் . இவ்விடத்தில் எது உயர்ந்தது? எழுத்தா? காட்சியா? என்பதல்ல நமது கேள்வி. எழுத்தைக் காட்சியால் நிரவிவிட முடியுமா அல்லது அது சரியா என்பதுதான்.
மேலும் எளிய மக்களிடம் எழுத்தை விட சினிமா எளிதாக நெருங்கி விடுவது உண்மைதான் என்றாலும் மேட்டிமைத் தன்மை கொண்ட இயக்குனர்களது திரைப்படங்கள் எம்.ஜி.ஆர் படம் பார்த்துப் புளகாங்கிதம் அடையும் சாதாரண ‘சி’ செண்டர் பார்வையாளனைக் களிப்படையச் செய்வதில்லை. இதற்கு மற்றொரு உதாரணம் கவுண்டமணி, செந்தில், வடிவேல் நகைச்சுவைக் காட்சிகளைப் போன்று கமலஹாசன் படத்தில் வரும் கிரேசி மோகன் எழுதிய பார்ப்பனத்தனமான நகைச்சுவைகள் ‘சி’ செண்டர் பார்வையாளர்களால் ரசிக்கப் படுவது இல்லை.
வசனம் இல்லாமல், அல்லது குறைவான வசனத்துடன் காட்சியால் கதை சொல்வதே திரைப்படம் என்று இலக்கணம் பேசினாலும், திரைப்படத்தை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் திரைக்கு முன் அமர்ந்து ஹீரோ பேசும் பஞ்ச் டயலாக்கைக் கேட்டு கைதட்டி, விசில் அடித்துக்கொண்டிருக்கும் சாதாரண மனிதர்கள் தான் என்பதே உண்மை.
ஆக, எழுத்து வழி கலை இலக்கியம் என்பதை பெரும்பான்மையாக நுகர்பவர்கள் நடுத்தர, மேல்த்தட்டு மக்களாக இருக்க அடித்தள மக்கள் என்பவர்கள் கூத்து, நாடகம், சினிமா என்பனவற்றின் மூலமாகவே தங்களது கலை இலக்கிய தாகத்தை நிறைவு செய்து கொண்டனர் எனலாம். தற்போது இந்த நடுத்தர மேல்த்தட்டுப் பிரிவினர்கள் என்போரும் தாளில் அச்சிடப்பட்ட நூல்களை வாசிப்பது, தாளில் எழுதுவது என்ற நிலையைக் கைவிட்டு, திரையில் வாசிப்பது, திரையில் மிகச் சுருக்கமாக எழுதுவது என்ற நிலையை தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வந்து அடைந்து விட்டனர் .
இதனை ஒரு சிறு விளம்பரத்தினை எடுத்துக்காட்டாக கொண்டு விளங்கிக் கொள்ளலாம். ‘ஐடியா’ எனும் நெட்வொர்க் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் மரங்களை வெட்டிக் காகிதம் தயாரித்து அதில் எழுத வேண்டாம் மொபைல் திரையில் எழுதலாம் என ஓர் மரம் (அபிஷேக்பச்சன்) பேசுவதாகக் காட்சிப் படுத்தும் விளம்பரம் இன்றைய நிலவரத்தை மிகத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டக்கூடியதாக இருக்கிறது .
இன்றைக்குள்ள இளைய தலைமுறையினர் கடிதம் என்பதை அறியாதவர்களாக உள்ளதை நாம் அறிவோம். அவர்களுக்கு தெரிந்த ஒரே கடிதம் பள்ளிப்பாடத்தில் காணப்படும் லீவ் லெட்டர் மட்டுமே ஆகும். படிப்பறிவற்ற மக்கள் பிறரிடம் கொடுத்துக் கடிதம் எழுதச் செய்து தம் உறவினருக்கு அனுப்புவது என்பதெல்லாம் பழங்கதை. தற்பொழுது கிராமப்புறத்தைச் சேர்ந்த பழைய தலைமுறை முதியவர்கள் முதல் இளைய தலைமுறையினர் வரை அனைவர் கைகளிலும் மொபைல் போன் காணப்படும் நிலையில் அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் பேசி விடுகின்றனர். எழுதப் படிக்கத் தெரிந்த இளைய தலைமுறையோ அனைத்தையும் குறுஞ்செய்திகளாகப் (எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்) பரிமாறிக்கொள்கின்றனர்.
எனவே திரையின் பயன்பாடு கூடிக் கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியில் பெரிய நீண்ட கட்டுரைகள், ஆய்வுகள், உரைகள் என்பவை இளைய தலைமுறையினருக்கு எரிச்சலூட்டக் கூடிய ஒன்றாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
நீண்ட, ஆழ்ந்த, கனத்த வாசிப்புக் குறைவினைப் பயன்படுத்தி சில பதிப்பகங்கள் மிக மேலோட்டமான செய்திகளையும், கருத்துக்களையும் கொண்ட குறு நூல்களை, உலகின் அனைத்து விசயங்கள் பற்றியும் உடனுக்குடன் தேர்ந்த எழுத்துக் களவாணிகளைக் கொண்டு எழுதச்செய்து வெளியிட்டுப் பணம் பார்க்கும் தேர்ந்த வியாபாரிகளாகத் திகழ்வதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவர்களால் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் (ஆம் இவர்களைப் பொறுத்தவரை புத்தகங்கள் என்பதும் கூடசரக்குதான் ) தமிழகத்தின் அனைத்துச் சிறு நகரங்களின் சந்து பொந்துகளில் அமைந்திருக்கும் சிறு பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் எல்லாம் தேங்காய் எண்ணெய், சாம்பு பாக்கெட்டு களுடன் சமமாகத் தொங்க விடப்பட்டுள்ள உரைகளில் செருகப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இதனைக் கண்டு ஆஹா! புத்தகங்களை மக்களின் வீட்டினருகிலேயே கொண்டு சென்று விட்டார்களே! என்று மகிழ்ச்சி அடைவதா? அல்லது உலகின் தீவிரமான விஷயங்களை எல்லாம் மேலோட்டமானதும், இவர்களது சாதி, வர்க்க நிலைப்பாடு சார்ந்த பொய்யும் மெய்யும் கலந்த திரிபுகளாக உற்பத்தி செய்து மக்களின் சிந்தனையில் திணிக்கிறார்களே என்று கவலைப்படுவதா என்று தெரியவில்லை .
சிலர் இந்த விதமான பதிப்புச் செயல்பாடுகளால் மக்களின் வாசிப்புத் திறன் கூடும் என்று கருதலாம். ஆனால் இது ஒருவகையான வாரப்பத்திரிக்கை வாசிப்பை ஒத்த தன்மையை வளர்க்கும். என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதாவது பரபரப்பான செய்திகளை வாசித்து விட்டு இதழ்களைத் தூக்கி குப்பையில் போடும் வழக்கத்துடன் இந்தப் புத்தகங்களையும் கொண்டு சேர்க்கிறது. பொதுவாகக் கூறுவது என்றால் திரைப்படங்களில் நல்லவை, கெட்டவை என்று தரம் பிரிப்பது போலவே புத்தகங்களிலும் நல்லவை, கெட்டவை என்று தரம் பிரித்து விட முடியும். திரைப்படமானாலும் சரி புத்தகமானாலும் சரி அது தாங்கி இருக்கக்கூடிய கருத்தின், காட்சியின் அடிப்படையிலேதான் தரம் பிரிக்கப்படுகிறது . மற்றபடி வடிவம் என்பது ஈர்க்க மட்டுமே செய்யும்.
சமூக அக்கறை கொண்ட ஓர் எழுத்தாளர் அதே அக்கறையுடன் எழுதும்போது அது நல்ல நூலாகவும், அதேபோல் சமூக அக்கறையுடன் ஒரு இயக்குனர் ஒரு கதையைப் படமாக்கும்போது அது சிறந்த படமாகவும் அமைகிறது. ஒரே ஒரு வேறுபாடு எழுத்தாளர் ஒருவரே ஒரு படைப்பை உருவாக்கி விடுகிறார். சரி, தவறு எல்லாம் அவர் ஒருவரைச் சார்ந்ததாக அமைந்து விடுகிறது. ஆனால் திரைப்படம் என்பது ஒரு குழுச் செயல்பாடாக (Team Work) அமைகிறது. அக்குழுவில் உள்ள ஒருவருடைய தவறு ஒட்டுமொத்த படத்தையும் சிதைத்துவிடும்.
ஆகவே சினிமா, புத்தக வாசிப்பு என்பனவற்றால் ஓர் மனிதர் நல்லதை மட்டுமே அடைவார் என்று கூறுவதற்கில்லை. அதேபோல் மனிதர்களுடைய நேரடி அனுபவம் என்பதும் மிகவும் வரம்புக்குட்பட்ட ஒன்றாகும். ஒருவருடைய வர்க்க, மத, சாதிய பின்புலங்கள் அவருடைய அறிதல் வாய்ப்பு, சூழல் நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட வர்க்க , சாதிய, மத வாழ்நிலையைக் கொண்டவர் பிறிதொரு (மாற்றுப்) பிரிவினரின் அனுபவங்களையும், அது சார்ந்த உணர்வுகளையும் பெறுவது இங்கு சாத்தியமில்லாததாக இருக்கிறது .
இந்நிலையில் புத்தகங்கள் ஒரு பிரிவினர் உடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரிதொரு பிரிவினர் அறிந்துகொள்ளவும் அதன் மூலம் அப்பிரிவினரைப் புரிந்து கொள்ளவும், ஏற்கனவே அவர்களைப் பற்றி தமது சிந்தனையில் உள்ள உண்மைக்குப் புறம்பான, தப்பிதமானக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இதைப்போலவே திரைப்படமும் மாற்றுகளின் உலகத்தை காட்சியாக விரித்து, பொதுப்புத்தியைச் சிதைத்து, புதிதாகக் கட்டமைக்கிறது . ஆயினும் ஒரு தனிமனிதரான எழுத்தாளர் சமூகப் பொருளாதார, அரசியல் தெளிவு கொண்ட வராகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு சிறந்த படைப்பை உருவாக்கி விட முடியும். பிறகு அதனை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பதிப்பகம் அல்லது இதழ்கள் வாயிலாக வெளிப்படுத்துவது என்று வரும்போது பதிப்பாசிரியர், இதழாசிரியர் என்போரது ஒத்துழைப்பும் அவர்களது சமூக அக்கறையும் முன்நிபந்தனை யாகிறது.
ஆனால் ஒரு சிறந்த இயக்குனரது ஸ்கிரிப்ட் திரைப்படமாக மாறுவதற்கு தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பெரிய முன்நிபந்தனை வந்துவிடுகிறது. குறிப்பாக இன்றையச் சூழலில் தயாரிப்பாளர், தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி நடிகர்கள் ஆகியோரைச் சரிக்கட்ட இயக்குனர் தன் ஸ்கிரிப்ட்டையே மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதாவது பணமும், ஹீரோயிஸமும் ஒரு சிறந்த திரைக்கதையை காலி செய்துவிடுகிறது.
அதாவது ஒரு படைப்பாளி, பணம், அதிகாரம் ஆகியவற்றின் முன் மண்டியிட்டு தன் படைப்பை வெளிக்கொணர வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் சிறந்த சமூக அக்கறை கொண்ட திரைப்படம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவிடுகிறது. இதுதான் திரைப்படம் ஒரு புத்தக உருவாக்கத்தில் இருந்து வேறுபடும் முக்கியமான இடமாகும்.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையே அவ்வப்போது ஓரிரு திரைப்படங்கள் சமூக, அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்து விடுகின்றன. இத்திரைப்படங்கள் நூறு சதவிகிதம் மிகச் சரியானவை என்று கூற முடியாவிட்டாலும் ஓரளவாவது பொதுப்புத்தியை அசைத்துப் பார்க்கக் கூடியவைகளாக இருக்கின்றன. நான் வாசித்த புத்தகங்களில் பலவும், பார்த்த திரைப்படங்களில் சிலவும் எனது பிறப்பு மற்றும் வாழ்நிலை சார்ந்த கற்பிதங்களை உடைத்து என்னை மனிதாயப்படுத்தின என்று கூறமுடியும் .
குறிப்பாக சாண்டில்யன் , சுஜாதா, பாலகுமாரன் போன்றோரது நாவல்கள் எனது சிந்தனையில் இருந்த சாதிய, வர்க்க, ஆணாதிக்க, இந்துத்துவக் கூறுகளை ஒரு சிறிதளவும் அசைக்கவில்லை. மாறாக மேலும் கெட்டிப்படுத்தவே செய்தன. அதேசமயம் ஈழத்து செ.கணேசலிங்கன் எழுதிய பல நாவல்களைத் தொடர்ந்து வாசித்தபோது பெண் விடுதலை குறித்தும் பல புதிய புரிதல்கள் ஏற்பட்டன. அதைவிட ஈழத்து தலித் இலக்கிய முன்னோடி டேனியல் அவர்களது எழுத்துக்கள், நாவல்கள் (பஞ்சமர், அடிமை, கோவிந்தன், தண்ணீர் போன்றவை ) தான் எனக்குள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி தவறான பல்வேறு கற்பிதங்களையும் போக்கியது என்று கூற வேண்டும்.
தோப்பில்முகமதுமீரான் எழுதிய நாவல்களை வாசித்ததன் மூலம் இஸ்லாமியர் வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்பட்டது. கவர்ண்மெண்ட் பிராமணன், எச்சில், தந்தையற்றவன், ஊரும்சேரியும் போன்ற தலித் தன் வரலாறுகள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தின. ச.பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி பழங்குடியின மக்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தியதோடு சமவெளி மனிதர்கள் மற்றும் அரசு, அவர்கள் மீது புரிந்த வன்கொடுமைகளையும் எடுத்துரைத்து எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தின.
அதேபோல் ரசிய மொழி பெயர்ப்பு நாவல்களை வாசித்த பொழுது சோசலிச நிர்மாணக் காலகட்டம் பற்றிய மிக ஆழமானதும், மிக நுணுக்கமானதுமான புரிதலை அடைய முடிந்ததுடன் சுயபரிசீலனையிலும் ஈடுபடச் செய்தன. குறிப்பாக மிகையீல் ஸோலகவ் எழுதிய ‘கன்னிநிலம்’ (இருபாகங்கள்), அலெக்சேய் பதேயெவ் எழுதிய ‘முறியடிப்பு’, பரிஸ் பொலவோய் எழுதிய ‘உண்மை மனிதன் கதை’, மக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ மற்றும் பிறர் எழுதிய ‘ஜமீலா’, ‘வீரம் விளைந்தது’, ‘அதிகாலையின் அமைதியில்’ போன்றவை எனக்குள் மிகுந்த நட்சிந்தனையை ஏற்படுத்திய நாவல்களாகும்.
இதைப்போன்றே சீன நாவல்களான ‘சூறாவளி’, ‘போர்வீரன் காதல்’ போன்றவையும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு இங்கு கம்யூனிஸ்டுகள் என்று கூறிக் கொண்டு சுயமோகிகளாகத்திரியும் பல நண்பர்களையும் அடையாளம் காண உதவி செய்தன. எனவே பிற தத்துவ அரசியல் நூல்களை விட நாவல் இலக்கியத்தால் நான் பெற்ற நன்மைகள் ஏராளம் என்று கூற வேண்டும்.
இவ்வாறு சில திரைப்படங்களும் நல்ல உணர்வை இளவயதில் ஏற்படுத்தின எனலாம். இந்த தாக்கம் என்பது அன்றைய எனது வயது சார்ந்த (டீனேஜ்) ஒன்றாகவும் கொள்ள வேண்டும். அதே திரைப்படங்கள் இன்று அதே உணர்வை ஏற்படுத்துமா? என்று தெரியவில்லை. ‘சிவப்பு மல்லி’ ‘சுமை’, ‘பட்டம் பறக்கட்டும்’ , ‘அலையோசை’, ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘கவிதை பாட நேரமில்லை’, ‘நட்பு’ போன்ற திரைப்படங்களைத் திரை அரங்கில் அமர்ந்து பார்த்த போது ரோமம் சிலிர்த்தது. ஆனாலும் புத்தகங்கள் அளவுக்கு சினிமா காத்திரமாக இல்லாமல் பல்வேறு பலவீனங்களையும் தன்னகத்தே கொண்டு இருந்தன எனலாம். குறிப்பாக சிவாஜி கணேசன் நடித்த ‘அவன்தான்மனிதன்’ (1975) திரைப்படம், தனது பணம், சொத்து, சுகம், உயிர்வரை அனைத்தையும் பிறருக்கு கொடுப்பதே சிறந்த மனிதப் பண்பு என்ற ஓர் தாக்கத்தை பத்து வயதில் ஏற்படுத்தியது என்று கூறலாம் .
இத்தகைய புத்தக வாசிப்பின் தாக்கத்தால் நேர்மையாக வாழ்வது, தவறுக்கு வருந்துவது, தோழர்களிடையே தன்னலம் பாராட்டாமல் விட்டுக் கொடுத்துப் போவது, மூடநம்பிக்கைகள் இல்லாதிருப்பது, ஜாதியைத் துறந்து தலித் மக்களோடு சேர்ந்து நிற்பது, ஒன்று கலப்பது, ஆணாதிக்கப்போக்குகளை விட்டொழிப்பது போன்றவற்றை அடைந்ததாக மூத்த, மற்றும் என் வயதொத்த சக தோழர்கள் பலரும் கூறக் கேட்டிருக்கிறேன்.
நல்ல புத்தக வாசிப்பை இழந்து, இன்று சினிமாவாலும், தொலைக்காட்சியாலும் வளர்க்கப்படும் நம் இளவயதுக் குழந்தைகள் மேற்காணும் குணநலன்களைக் கொண்டவர்களாக இருப்பார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
இன்றைக்குப் பதிப்பகங்கள் பெருகிவிட்டன. ஆண்டுக்குப் பல ஆயிரம் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டு வெளிவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக்கண்காட்சிக்காக என்றே ஒவ்வொரு பதிப்பகமும் போட்டிபோட்டுக்கொண்டு நூல்களை வெளியிடுகின்றன. பல பழைய நூல்கள் மீண்டும் புதிதாகப் பதிப்பிக்கப்படுகின்றன. நூலகங்களும் நூல்களை வாங்கிக் குவிக்கின்றன. ஆனால் புத்தக வாசிப்பு மக்களிடையே குறைந்து வருவதாக பலரும் கூறுகின்றனர் .
இது ஒரு முரணான செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் பதிப்பகங்களின் பெருக்கம், புத்தகங்களின் பெருக்கம், புத்தக விற்பனை அதிகரிப்பு மறுபுறம் வாசிப்புக் குறைந்து வருகிறது. நூலகங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக 20 வயதிற்கு கீழ்ப்பட்ட வயதினர் நூலகத்திற்கு வருவது மிக மிக அரிதாகிவிட்டது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களும், ஓய்வு பெற்றவர்களும் வந்துபோகும் ஒரு இடமாக நூலகங்கள் மாறிவிட்டன.
அவர்களும் தினசரி மற்றும் வார இதழ்களைப் புரட்டிப் பார்க்கவே நூலகம் வருகின்றனர். அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களை எடுத்து வாசிப்போர் இல்லை என்றே கூற வேண்டும். பாவம் பல ஊர்களில் நூலகரே வாசகர் வருகைப் பதிவேட்டில் தினமும் போலியாக பல கையொப்பங்களைப் போட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாசகர் வந்து போவதாக கணக்குக் காட்டி வருகின்றனர். அப்படிச் செய்யாவிட்டால் அவ்வூருக்கு நூலகம் தேவை இல்லை என்று கருதி நூலகத்தை மூடி விடும் அபாயம் உள்ளது.
இன்னும் சில ஊர்களில் நூலகக் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து போய் அருமையான அரிய, பழைய நூல்கள் மழைத் தண்ணீரில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. மாவட்டத் தலைமை நூலகத்தால் பிரித்து வழங்கப்பட்ட நூல்களை அடுக்கி வைக்கப் போதிய மரப்பேழையின்றி சாக்கில் மூட்டையாக கட்டி வைத்துள்ளனர்.
புத்தகங்கள் நிறைய உள்ளன வைக்க இடம் இல்லை. எனவே எங்களுக்கு வேண்டாம் என்று கூறும் அதிகாரம் நூலகருக்கு இல்லை. அல்லது புத்தகங்கள் எவ்வளவு கிடைத்தாலும் அதனை பராமரிக்கும் விதமாக வசதிகளைப்பெருக்கிக் கொள்ள உதவும் புரவலர்கள் இன்று இல்லை. ஏனென்றால் நூலகத்தை உயர்வான இடமாகவும், புத்தகங்களை அறிவுப்பெட்டகமாகவும் கருதிப்போற்றும் நிலையில் மக்கள் இன்று இல்லை. எனக்குத் தெரிய ஒரு ஊர் நூலகத்தின் வாயிற்படியை குடிமகன்கள் தினமும் ‘பார்’ ஆக மாற்றி விட்டுச் செல்வதும், நூலகர் வந்து காலையில் சுத்தம் செய்வதும் என்ற நிலை தொடர்கிறது. மூடத்தனத்திற்கு அளவின்றி செலவு செய்யும் ஒரு சமூகம் அறிவுக்குத் தரும் மரியாதை இதுதான். பிறகு எப்படிப் புரவலர்கள் கிடைப்பர்?
ஒரு காலத்தில் வாசிக்க நூலகம் இல்லை, போதுமான புத்தகங்கள் இல்லை என்ற நிலை மாறி இன்று வாசகன் இல்லை என்ற தலைகீழ் நிலைக்கு தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று அறிஞர் ஒருவர் கூறியதாகச் சொல்வர். ஆனால் சிறையில்தான் புத்தகங்களை வாசிக்கவும், எழுதவும் முடிகிறது வெளியே முடியவில்லை எனச் சிறை சென்று வந்த பலரும் கூறுகின்றனர். ஆகவே ஒன்று நூலகங்களைச் சிறைச்சாலைகளுக்குள் கொண்டு சென்றால் நூல்களும் பயன்படுத்தப்படும். அல்லது சிறைச்சாலைகளை அதிகப்படுத்தினால் புத்தக வாசிப்பு அதிகப்படும்.
எனவே சிறைகள் அதிகப் பட்டால் தான் தமிழகத்தில் புத்தகங்கள் திறக்கப்படும் என்று கூற வேண்டிய சூழ் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டும் என்றால் இன்றைய இளம் குழந்தைகளுக்குப் பள்ளி பருவத்திலேயே பல்வேறு இலக்கியங்களையும் அறிமுகம் செய்விக்கும் விதமாக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். சமூக முன்னேற்றத்திற்கு ஏற்ற பகுத்தறிவு மற்றும் நற்பண்புகளைப் போதிக்கும் இலக்கியங்களைத் தினமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் காணச் செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல மனிதர்கள் தமிழகத்திற்குக் கிடைப்பார்கள் என்பதோடு, நல்ல வாசகர்களும், நல்ல புரவலர்களும் பெருகுவார்கள், நல்ல நூல்களும் தமிழுக்கு கிடைக்கும்.
@
பின்குறிப்பு;
- சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைக் களமாகக் கொண்ட எனக்குத் தெரிந்த தோழர்கள் பலரும் தங்களது பிள்ளைகள் பாடப்புத்தகத்தைத் தவிர பிற இலக்கியங்களை வாசிப்பது இல்லை என்றும் தங்களின் சேமிப்பில் உள்ள புத்தகங்கள் தங்களுக்குப் பின் குப்பையில் கொட்டப்படலாம் என்று கூறியது, மற்றும் சொந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தெரிவிக்கலாம்.
- இன்று நாம் பல்வேறு விதமான மாறுதல்களைப் பார்த்து வருகிறோம். திரைப்படங்கள் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் திரையரங்குகள் அழிந்து கொண்டிருக்கின்றன. அல்லது திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. இது போன்றதுதான் புத்தக உற்பத்தியும். அதற்கு எதிராக நூலகங்களின் அழிவும் அதாவது இன்று மனிதர்கள் ஒன்றாக ஓரிடத்தில் கூடிப் பிறரைச் சார்ந்து கூட்டாக நுகர வேண்டிய தேவை இல்லை. மனிதர்கள் மேலும் மேலும் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். சமூகம், வீடு, தனிமனிதன் என்று தொழில் நுட்ப வளர்ச்சியானது ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாகப் பிரித்து நிறுத்திவிட்டது.
3) ஒரு திரைப்படத்தையோ , ஒரு புத்தகத்தையோ ஒரு மனிதன் தன் கையிலுள்ள மொபைலின் குட்டித் திரையிலேயே பார்க்கவோ , வாசித்துவிடவோ முடியும் என்பதோடு தனது கருத்துக்களையும் உடனுக்குடன் இணையத் தளத்தில் பதிவு செய்து எதிர்வினை ஆற்றவும் விவாதிக்கவும், உரையாடவும் கூடிய சூழல் இன்று உருவாகி உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இந்த மாற்றமடைந்து ள்ள சூழலில் பழைய, அழிந்துகொண்டிருக்கும் கருவிகள், வடிவங்கள், முறைமைகளுக்காக நாம் வக்காலத்து வாங்குவதோ, இயங்குவதோ, போராடுவதோ பிற்போக்குத்தனமான செயலாகும் .
ஆகப் பெரிய , பிரமாண்டமான அளவுகளில் என்பதற்கு மாறாக சிறிய, நுண்ணிய அளவு களிலேயே அதே பயனைப் பெறுவது அல்லது அதைவிட க் கூடுதலான பயனைப் பெறுவது என்பதே இன்றைய தொழில் நுட்பப் புரட்சியாகும். இனிவரும் காலத்தில் தாள், புத்தகம் என்பதெல்லாம் இருக்குமா? என்பது சந்தேகமே! ஆனால் வாசிப்பு என்பது இல்லாது ஒழிய முடியாதல்லவா? அல்லது கூடாது அல்லவா? ஆனால் சமகாலத்தில் வாசிப்புக் குறைந்து வருகிறது என்ற மறுக்க முடியாத உண்மையின் தாக்கத்தால் எழுதப்பட்டதே இக்கட்டுரை .
*அடிக்குறிப்பு: சாமிக்கண்ணு வின்சென்ட்; 1896 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டிலிருந்து டுபாண்ட் என்பவர் ‘ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு’ எனும் திரைப்படத்தைக் கொண்டுவந்து பம்பாயில் காட்டினார் . அது மௌனப் படம். அதுதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கதைப் படமாகும். இந்தியாவின் பல இடங்களில் டூபாண்ட் அதனைத் திரையிட்டு நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் பொருள் ஈட்டினார். தமிழ்நாட்டிற்கு டுபாண்ட் வந்தார். திருச்சி நகரில் அவர் இயேசுவின் வாழ்க்கை என்ற அந்தப் படத்தைதிரையிட்ட நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
அப்படத்தை வியந்து பார்த்து அதன்பால் வெறியோடு ஈர்க்கப்பட்ட சாமிக்கண்ணுவின்சென்ட் திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டுபாண்ட் திடீர் உடல்நலக்குறைவால் தன் தாய் மண்ணான பிரான்ஸ் நாட்டிற்கு திரும்ப உள்ளார் என்ற செய்தி அறிந்து அவரிடம் ஓடினார் . தன்னிடமிருந்த எதையெல்லாமோ விற்று 2000 ரூபாய்க்கு இயேசுவின் வாழ்க்கைப் படச்சுருளையும், படம் காட்டு கருவியையும் டுபாண்ட்டிடம் இருந்து விலைக்கு வாங்கினார். உடனே ரயில்வே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊர் ஊராகக் கிளம்பினார். வடஇந்தியாவிற்கும் சென்று அப்படத்தை பார்த்திராத மக்களுக்கு போட்டுக்காட்டினார். இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் பெயராகப் பொறிக்கப்பட வேண்டிய பெயர் சாமிக்கண்ணு வின்சென்ட் இன் பெயர்தான். ஊர் ஊராகச் சென்று கூடாரம் (டென்ட்) அடித்து சலனத் திரைப்படத்தைக் காட்டும் போது, ஒரே ஊரில் அந்தக் கூடாரம் சில நாட்களுக்கு நிலைத்து விடும் . இப்படி உருவானதுதான் டென்ட் கொட்டாய்கள். அதேபோல் ஊர் ஊராகப் போய் படம் காட்டியதால் டூரிங் கொட்டகை, டூரிங் தியேட்டர் அல்லது டூரிங் டாக்கீஸ் என்ற பெயர் கிராமத்து திரையரங்கத்திற்கு ஏற்பட்டது.
தமிழ் நாட்டில் நிரந்தரக் கொட்டகையை முதன் முதலில் கட்டிய பெருமையும் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களையேச் சேரும். இவர் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் 1914 ஆம் ஆண்டு ஒரு நிரந்தர திரையரங்கத்தை அமைத்தார். தமிழ் மக்களிடையே திரைப்பட ஆர்வத்தை விதைத்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். இவரது முயற்சியைத் தொடர்ந்து தான் தமிழ்நாட்டின் பல நகரங்களில் திரைப்பட ஆர்வமும், திரையரங்குகளின் தேவையும் பெருகின.