ஏதிலி
நூல் மதிப்புரை: இரா.இயேசுதாஸ்
எதுவுமே இல்லாத… கதியற்ற..அகதிகளை இந்நாவலாசிரியர் “ஏதிலி” என்கிறார்.
உள்நாட்டுப்போர் முடிந்து முள்ளிவாய்க்காலில் பேரழிப்பில் லட்சக்கணக்கில் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு அனைத்து நாடுகளின் ஆயுத ஆதரவோடு ஆளான பின்பும் இன்றும்… இன்னும்… இலங்கைக்கு ஈழத்தமிழ் அகதிகள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தமிழக அகதி முகாம்களில் இருந்து திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது.
இலங்கையைவிட தமிழ்நிலம் அவர்களுக்கு அப்படிப் பிடித்துப்போய் விட்டதா என்ன?
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர்… மக்கள் பட்ட ஆற்றொணா அவதிகள் பற்றி சுருக்கமாகவும்…. தமிழகம் மற்றும்பிற வெளிநாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் அனுபவிக்கும் அவஸ்தைகள் பற்றி நுட்பமாகவும் விவரிக்கிறது.
14அத்தியாயங்களாக தனித்தனி கூறுகளை கடிதம்… உரை… உரையாடல்… சிறுகதைகள்..என விறுவிறுப்பாக பிரச்னைகளை வெளிப்படையாக அலசுகிறது இந்நாவல்.
கைக்கு அடக்கமாக… பெரிய எழுத்துக்களில்… எளிதாக ஒரே நாளில் தொடர்ந்து படித்து முடிந்துவிடும் அளவில் உணர்ச்சிகளைத்தூண்டாமல் அறிவுபூர்வமாக சிந்திக்கும் வண்ணம் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் அகதிகள் பிரச்னை பற்றி வெளியாள் எழுதுவதை விட, உள் ஆள் எழுதுவது எதார்த்தமான படைப்பாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்… என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு அத்தியாயமும் ஓராயிரம் அகதிகளின் துயரத்தை கூறுகிறது.
என்னதான் தொப்புள்கொடி உறவு என கூறினாலும் தமிழக மண்ணுடனும்… மக்களுடனும் ஈழத்தமிழ் மக்கள் ஒட்டமுடியாமல் தாமரை இலைத்தண்ணீராகவே உள்ளனர். அதுவும் நிலம்… வீடு… சொந்தம்… எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏதிலிகளாக நாடுவிட்டு நாடு வந்தாலும் ஜாதியை மட்டும் விடாமல் சுமக்கும் கொடுநிலை தொடர்வதை நாவல்அழுத்தமாகவே பதிந்துள்ளது. கடற்கரையில் கட்டுமர / படகுகளில் இருந்து இறங்கி அகதிகளாக முகாம்களில் பதிவு செய்யும் போதே எல்லோரும் தன்னை “வெள்ளாளர்” ஜாதி என்றே பொய்யாகவே பதிந்து கொண்டனர். ஆனால் எல்லா முகாம்களின் அமைவிடமும்… வாழ்நிலையும்… தமிழக சேரிகளைவிடகேவலமாகவே இருப்பதை பார்க்கலாம்.
மேடைப் பேச்சில் கொட்டி முழக்கும் அரசியல்வாதிகள் அகதிகளின் எதிர்பார்ப்புகளை அறிந்தும் அறியாதே இருக்கிறார்கள். “பத்துக்கு பத்து” அடி வீட்டில் ஆறு… ஏழு பேர் கொண்ட குடும்பம் தனிமனித ரகசிய உறவுக்கு கூட இடமில்லாமல் பல பத்துஆண்டுகள் தீப்பெட்டிகள் வரிசையாக அடுக்கியது போல் ஏன் நெருக்கமாக குறைந்த பரப்பில் திறந்தவெளி சிறையாக பாதுகாப்பு வளையத்தில் முடக்கப்பட்டிருப்பது ஏன்?
முக்கிய அரசியல் தலைவர்கள் முகாம் அருகில் உள்ள ஊருக்கு வந்தால்… முகாமில் உள்ள அனைவருக்கும் தீவிர சோதனை நடத்துவது ஏன்?… அவர்களை தீவிரவாதிகளாகவே கண்காணிப்பது ஏன்?
காலையில் வெளியே போகும்போதும்… மாலையில் ஆறு…. ஏழு மணிக்குள் முகாம் திரும்பும் போதும் அகதிகள் போய்வருவதுமுகாம் ஆபிஸில் பதிவுசெய்யப்படுவது இன்றும் கட்டாயம். வராவிட்டால் விசாரணை..சிறைத்தண்டனை நிச்சயம்!
அகதிகளின் உலகம்… தனி உலகம்…
கடந்த காலத்தை சுமந்து கொண்டு… நிகழ்காலத்தை நகர்த்திக்கொண்டு… எதிர்காலம் பற்றி எந்த நம்பிக்கையும் இன்றி உழலும் தனி உலகம் அகதிகள் உலகம்!
அகதிகள் மனநிலையை கொஞ்சமாவது புரிந்துகொள்ள நமக்கு இந்நாவல் உதவும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என…. இருக்கும் முகாமை விட்டு இன்னொரு நாட்டிற்கு தெரியாமல் தப்பித்து கள்ளத்தோணியில் / படகில் / சிறு கப்பலில் உயிரைப் பணையம் வைத்து ஓடும் முயற்சிகள் தொடர்கின்றன.(ஆஸ்திரேலியாவிற்கு).வசதிபடைத்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கும்..வசதி குறைந்தோர் தமிழகத்திற்கும் வந்தனர்.எந்த நாடாக இருந்தாலும் தன்னிடம் அடைக்கலம் நாடி வந்த அகதிகளுக்கு தங்க இடம்..கல்வி… வேலைவாய்ப்பு… தர வேண்டும் என்ற உலக மனித உரிமை பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் தேர்தல் காலத்தில்கூட இவர்கள் பிரச்னை வாக்குறுதியாவதில்லை!.
அகதிகள் வாழ்க்கை பற்றி தனிச் சட்டம் இதுவரையில்லை… ஏன்… நம்மில் எத்தனை பேர் இவர்கள் பற்றி நினைத்துப்பார்க்கிறோம்?… பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்… உரியநேரத்தில் வந்து தமக்கான சொந்த நாட்டை மீட்டு புதுவாழ்வு தருவார்…. என்ற நம்பிக்கையையூட்டி ஈழத்தமிழர் எழுச்சி எழுந்து விடாமல் ஆறப்போட்டு அமுக்கப்பட்டுவிட்து என்கிறார் விஜிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செல்வத்தை தன்னகப்படுத்திக்கொண்டு அவர் வந்ததும் ஒப்படைக்கிறேன் என்று ஸ்வாஹா விட்டவர்கள் ஏராளம் என்கிறது நாவல்… தங்களது அரசியல் லாபத்திற்காக அரசியல்வாதிகள் மக்களை இயக்கமாக்காமல்… அதிகார செல்வவளத்துடன் இன்றும் வணிகரீதியில் செயல்படுவதை தர்க்கரீதியாக விளக்குகிறது நாவல்!… இலங்கைக்குத் திரும்பி வாருங்கள்.,. குடும்பம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை தருகிறோம்…. என என்.ஜி.ஓக்கள் மூலம் அழைப்புகள் வருகின்றன… ஆனால் இன்றும் இலங்கைத்தமிழ் பகுதியில் ஒன்றரை லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான முள்வேலி முகாம்களில் ஈழத்தமிழர் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் அவர்களுக்கு நிலம்… வீடு… வாழ்வு கொடுங்கள்… அப்புறம் தமிழகத்திற்கு வரலாம் என்கிறது நாவல்!
இலங்கையை கூறுபோட்டுக்கொள்ள வல்லரசுகள் இயங்குகின்றன. மனித உரிமையைக் காக்கிறேன் என்ற போர்வையில் இன்று ஐ.நா.வில் பேசும் அமெரிக்காவும்தான் அன்று முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பின் போது அமைதிகாத்தது என சுட்டிக்காட்டுகிறார் விஜிதரன். தற்போதைய தமிழக அரசின் தலையீடுகள் சற்று ஆறுதல் தந்தாலும் நிரந்தர அரசியல் தீர்வுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது கேள்விக்குறிதான்… ஜெய்பீம் படம் திரு.ஸ்டாலினை இருளர்கள் குடிசைகளுக்கு ஈர்த்திருக்கிறது. “ஏதிலி” அவர் கவனத்திற்கு சென்றால் நல்லது நடக்கக் கூடும்!
நாவல் முழுவதும் உணர்ச்சிகரமானவாதங்களை விட..அறிவுபூர்வமான ஆழமான வாதங்கள் நிரம்பியுள்ளது தீர்வுக்கு உதவும்.
அ.சி.விஜிதரன் (ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் வசிப்பவர்)
சிந்தன் புக்ஸ் வெளியீடு
305 பக்கம்/ரூ.250/- முதல் பதிப்பு:ஜனவரி 19