ஏக பிரதிநிதித்துவம் – எதிர் – ஏகப்பட்ட பிரதிநிதித்துவம்
ஈழத் தமிழ் அரசியலில் ஏக பிரதிநிதித்துவம் தொடர்பில் பல உரிமை கோரல்களும், மறுப்பும் அவ்வப்போது வெளிவந்ததுண்டு. ஈழத் தமிழ் மக்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், சுதந்திரத்தின் பின்னான முதலாவது நாடாளுமன்றில் மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான பிராசாவுரிமை நீக்கச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் இருந்து வெளியேறிய ~தந்தை செல்வா| என அறியப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாகும் வரையான காலப் பகுதியில் ஏக பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தமிழரசுக் கட்சியிடம் தனது ஏக பிரதிநிதித்துவத்தைப் பறிகொடுக்க வேண்டிய நிலை உருவானது. 1976 ஆம் ஆண்டில் இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகும் வரையான காலம்வரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக தமிழரசுக் கட்சியே விளங்கி வந்தது.
1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் 18 இடங்களில் வெற்றிபெற்று, யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூடப் பெற்றுக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போதைய நிலையில் ஏக பிரதிநிதியாகவே விளங்கியது. ஆனால், அத்தகைய நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. சம காலத்தில் தோன்றிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏகபோகத்திற்குச் சவால் விடுத்தன. 1985 இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏகபோகம் தகர்ந்தது. இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆயுதப் போராட்ட இயக்கங்களான தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சிகர அமைப்பு என்பனவும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கலந்து கொண்டிருந்தன.
பின்னாளில், சக இயக்கங்களைத் தாக்கி அளித்தும், தடைசெய்தும் தமிழ் மக்களின் ஏகபோகத் தலைமைத்துவத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுக் கொண்டது. ஆரம்ப காலகட்டங்களில் இந்த ஏகபோகத் தலைமைத்துவத்தை பலரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், காலப் போக்கில் அதனை ஏற்றுக் கொண்டு, அனுசரித்துப் போகும் நிலை உருவானது.
முன்னைய சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விளங்கிய கட்சிகள் எவையும் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே எனப் பகிரங்கமாக உரிமை கோரவும் இல்லை. அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செயற்படவும் இல்லை. அது இயல்பான புரிதலுடன் கூடியதாக இருந்தது.
எனினும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை வேறு விதமாக இருந்தது. தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தம்மைப் பிரகடனம் செய்து கொண்ட விடுதலைப் புலிகள், தமது கோரிக்கையை நிலைநிறுத்த தமது பிரகடனத்தை எதிர்த்தவர்களை மிகக் கடுமையாகக் கையாண்டனர். அதேவேளை இந்தப் பிரகடனத்தை தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமன்றி, சிங்களத் தலைவர்களும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பல சமயங்களில் இது விவாதப் பொருளாகவும், ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவும் இருந்து வந்ததைக் காண முடிந்தது.
2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னான காலப் பகுதியில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி எழுந்தது. போட்டியே இல்லாத களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகுவான வெற்றிகளைப் பெற்று தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற இடத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இதனைக் கூட சீரணித்துக் கொள்ள சிங்களத் தலைமைகள் தயாராக இருக்கவில்லை. சிங்கள இனவாத நிகழ்ச்சி நிரலில் செயற்படும் தலைமைகள் தங்கள் இடையறாத முயற்சிகள் காரணமாக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்தை முறியடித்திருக்கின்றார்கள். இந்த வெற்றியின் பெருமிதம் தேர்தலின் பின்னான அவர்களின் பேச்சுக்களில் வெளிப்பட்டு நிற்கிறது.
தனது ஏகப் பிரதிநிதித்துவ நிலைப்பாட்டைத் தக்க வைக்க முறையான தந்திரோபாயத்தையோ, விருப்பையோ கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தமாயினும், தமிழர் தரப்பிலிருந்தே கிளர்ந்த விமர்சனங்களும், பரப்புரைகளும் கூட்டமைப்பின் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் என்பதுவும் உண்மை. கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனம், பங்காளிக் கட்சிகளை முறையாக அனுசரித்துப் போகாமை, உட்கட்சி ஜனநாயகம் மதிக்கப்படாமை எனப் பல்வேறு காரணங்கள் இந்தப் பின்னடைவிற்கு வித்திட்டன என்பது தொடர்பில் நிறைய அலசல்கள், சீராய்வுகள் அண்மைக் காலத்தில் இடம்பெற்றுவிட்டன.
கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைத்தெறிய முற்பட்ட சிங்கள இனவாதத் தலைமைகள் கூட்டமைப்பின் இடத்தை தமது அடிவருடிகளைக் கொண்டு நிரப்பவே விரும்பியிருந்தனர். ஆனால், அண்மையத் தேர்தல் முடிவுகள் ஒருவகையில் அவர்களுக்கு ஏமாற்றமே. ஏக பிரதிநிதிகளுக்குப் பதிலாக ஏகப்பட்ட அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள். ஏக பிரதிநிதியைக் கையாளுவதற்கே சிரமப்பட்ட சிங்கள இனவாதத் தலைவர்கள் தற்போது விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்களையும் சேர்த்துக் கையாளும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.
தனது கன்னிப் பேச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் அரசாங்கத்திற்கான முதலாவது ~தலையிடி|யைத் தொடக்கி வைத்திருக்கின்றார். ஈழத் தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பில் அவர் கொழுத்திப் போட்ட ~திரி| இன்னமும் தெற்கில் புகைந்து கொண்டிருக்கின்றது.
மறுபுறம், யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான முட்டல் மோதல்கள் தொடங்கி விட்டன. மட்டக்களப்பிலும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் உரசல்கள் எழுந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்கும் போக்குடைய சிங்கள இனவாதத் தலைமைகள் தற்போது தமிழ்த் தேசியம் பேசும் தரப்பில் இருந்து மும்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. அதேவேளை, தமக்கு ஆதரவான தமிழ்ப் பிரதிநிதிகள் இடையேயான பிணக்குகளையும் தீர்த்து வைக்க வேண்டிய நிலை உள்ளது.
எதிர்காலத் தமிழர் அரசியல் களமும், ஒட்டு மொத்த இலங்கையின் அரசியல் களமும் வெகு சுவாரசியமாக இருக்கப் போகின்றன என்பதற்கு கட்டியம் கூறும் விதமாகக் காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்கு பிடித்த கதையாக ஏக பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக ஏகப்பட்ட பிரதிநிதித்துவத்திற்கு ஆசைப்பட்டவர்களின் நிலை மாறி உள்ளது. இத்தகைய நிலையால் ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மை கிட்டுமா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.