எம்.ஜி.ஆர் கட்டமைத்த பிம்ப அரசியல் – ஒர் தொடர்கதை : குமரன் தாஸ்
மாயத்திரையின் மயக்கத்திலே!
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இப்படிக்கூறினார் , “மேதகு பிரபாகரனது உள்ளம் கவர்ந்தவர் எம்ஜிஆர் . அந்த எம்.ஜி.ஆர் கண்ட சின்னம் இரட்டை இலை, எனவே இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்றார். சீமானுடைய எம்ஜிஆர் பற்றிற்கு காரணமாக ஈழமும், பிரபாகரனும் சொல்லப்படுவது போலத் தமிழகத்தின் பிற அடித்தள மக்களுக்கிருந்த எம்.ஜி.ஆர் பற்றிற்கு வேறு பல காரணங்கள் இருக்கவே செய்திருக்கும். அவை என்ன விதமான காரணங்கள் என்று சற்று திரும்பி பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஏனென்றால் இன்றும்கூட வேறுபல நடிகர்களுக்கும் அது போன்ற காரணங்களே அபரிமிதமான மதிப்பை, செல்வாக்கை, தமிழக மக்களிடமிருந்து பெற்றுத் தரக் கூடியதாக இருப்பதை நாம் காண்கிறோம். அதனால் தான் அவர்களும் தங்களை எம்.ஜி.ஆராகக் கருதிக் கொண்டு அவரைப் போலவே தாமும் தமிழ் நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்று ஆசைப் படுகின்றனர். மேலும் ”நான் தான் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு, நீட்சி” என்று போட்டியும் போடுவதோடு, “ நான் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுப்பேன்” என்று சத்தியமும் செய்கிறார்கள்.
ஆகவே, எம்.ஜி.ஆர் திரையில் கட்டியமைத்த அவரது அரசியல் பிம்பத்தைப் பற்றியும், யதார்த்தத்தில் அந்த பிம்ப அரசியல் எப்படிப்பட்டதாக உருமாற்றம் அடைந்தது என்பதைப் பற்றியும் சற்றுத் திரும்பிப்பார்க்கவேண்டியது இன்று அவசியமாகிறது.
@
இன்றைய தேதியில் எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் அல்லது அடிமைப் பெண் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் ஆர்வத்தோடும் , உற்சாகத்தோடும் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து காணும் முதியவர்களை நான் அறிவேன்.
மேலும் திரையில் பாத்திரங்கள் பேசக்கூடிய வசனங்களை முன்கூட்டியே மனப்பாடமாகப் பேசிக் காட்டுபவர்களையும், அத் திரைப்படங்கள் குறித்த பிற விவரங்களையும், திரைப்படம் வெளிவந்த ஆண்டு, எம்.ஜி.ஆர் அப்போது கூறிய வார்த்தைகள் (அவை உண்மையா? அல்லது இட்டுக் கட்டியவையா? என்பது நமக்குத் தெரியாது ) போன்ற பல்வேறு கற்பிதங்களையும் ஒரு இலட்சிய புருஷனைப் பற்றிய வரலாற்றைக் கூறும் உற்சாகத்துடன் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு எம்ஜிஆருடன் ஒன்றி போனவர்கள் நம் அடித்தள மக்கள்.
இதற்குக் காரணம் என்ன ? அவரது பெரும்பாலான திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமே அடித்தள மக்களுடைய செல்வாக்கைப் பெற காரணமாக அமைந்தன என்று கூறலாம்.
தனது திரைப்படங்களில் சாதாரண உழைக்கும் அடித்தள மனிதனாகத் தோன்றினார் . அதாவது ரிக்க்ஷா ஓட்டுபவராக (ரிக்ஷாக் காரன் 1972), குதிரை வண்டிக்காரராக (என் அண்ணன் 1970), மீனவராக (படகோட்டி 1964, மீனவ நண்பன் 1977), திருடனாக ( திருடாதே 1961, என்கடமை 1964), விவசாயியாக (விவசாயி1967) பாரவண்டி இழுக்கும், மூடை தூக்கும், விறகு உடைக்கும், கல்லுடைக்கும் தொழிலாளியாக (தொழிலாளி 1964), சாலை போடுபவராக(கணவன்1968), தெருவில் ஆடிப் பாடி பிழைப் பவராக (நாடோடி 1966), கழைக்கூத்தாடியாக (நல்ல நேரம் 1972), சர்க்கஸ் காரராக (பறக்கும் பாவை 1966) பஸ் கண்டக்டராக (தொழிலாளி 1964), கொல்லன் பட்டறையில் இரும்படிப்பவராக (தனிப்பிறவி 1966) தோன்றினார் என்பதோடு தான் செய்யும் தொழில் பற்றிய வருத்தமும் , தன் நிலை பற்றிய கழிவிரக்கம் கொள்ளாத வராகவும், தன் நிலை பற்றிய பெருமித உணர்வு கொண்ட மனிதராகவும் திரையில் தோன்றினார். அதாவது இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள எளிய மக்களுக்கு மிகுந்த ஊக்கம், சுயமரியாதை உணர்வை ஊட்டக்கூடிய மனிதராக அவர் இருந்தார்.
வேறு பல படங்களில் அடித்தள மக்களுடைய பங்காளியாக, நண்பனாகத் தோன்றினார் அதாவது உழைக்கும் மனிதனாகவோ அல்லது உழைக்கும் மக்களின் நலன் காப்பவராகவோ தோன்றினாரே தவிர ஒருபோதும் ஏழைகளை மிதிப்பவராக, திமிர்பிடித்த பணக்காரராக, ஆணவக்காரராகத் தோன்றியதே இல்லை என்பதோடு பணத்திமிர் பிடித்த முதலாளிகளை, பண்ணையார்களை எதிர்த்துப் போராடவும், அடித்து துவைத்து திருத்தவும் கூடிய கதாநாயகராக தோன்றவும் செய்தார்.
ஆம், எம்.ஜி.ஆர் உடைய தாக்குதல் வன்முறையின் பாற்பட்டதாக ஒருபோதும் இருப்பதில்லை . அது எதிரியைத் திருத்தும் நோக்குடைய அகிம்சையின் பாற்பட்டதாகும். அவர் நடித்த சமூகப் படங்களில் அவர் ஒருபோதும் கொலை செய்ததில்லை. எத்தனை பெரிய கொலைகார வில்லனாக இருந்தாலும் அவனைப்பிடித்து , அடித்து என்பதை விட அவனை அடித்துப் பிடித்து சட்டத்தின் கைகளில் ( காவல்துறையிடம்) ஒப்படைப்பார் .
அதாவது பலாத்கார மறுப்பை, திராவிட இயக்க கோட்பாட்டை மீறாத பண்பாளராக காட்சி அளித்தார். எப்போதும் பணிவும், சுயமரியாதைவுணர்வும் மிக்க, மகனாக, அண்ணனாக, தம்பியாக, காதலனாக, கணவனாக நடித்தார் . தந்தையாக நடித்தது மிக மிகக் குறைவு . வயதான தந்தை அல் லது தாத்தா போன்றவையெல்லாம் புகைப்படங்களாக மட்டுமே காட்டப்படுமே அல்லாது உயிரோடு அல்ல . அதாவது இயலாத மனிதன் என்ற தோற்றத்தை அவர் திரையில் ஒருபோதும் அனுமதித்ததில்லை. பெரும் பணக்கார, உயர்சாதி கதாபாத்திரத்தில் (அன்பே வா 1966 , ஜே.பி கதாபாத்திரம் ) நடித்தால் கூட தனது தோற்றத்தில் ஆணவமும், திமிரும் ஒரு சிறிதும் வெளிப்பட அவர் அனுமதித்ததில்லை.
உண்மை, யதார்த்தம் என்பது பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதே இல்லை. அது போலவே வெளிப்படையான உயர் ஜாதி அடையாளம் போற்றும் விதமாகவும் அவர் காட்சியளித்ததில்லை ,வசனம் பேசியது இல்லை. இதற்கு மாறாக சிவாஜி உயர்சாதித் திமிர் கொண்ட பாத்திரங்களில் பலமுறை தோன்றினார் என்பதையும், ( என்மகன் 1974, பட்டிக்காடா பட்டிணமா 1972, முதல்மரியாதை 1985, தேவர்மகன் 1992, பசும்பொன் 1995) மீசை முறுக்கும் கதா பாத்திரத்தில் நடித்தார் என்பதையும் இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் வேறுபாட்டை நாம் உணர முடியும்.
இவை எல்லாம் சேர்ந்து அடித்தள மக்களின் கதாநாயகராக, ரட்சகராக, தலைவராக , மக்கள் திலகமாக எம்.ஜி.ஆரை உருமாற்றின என்று கூறவேண்டும் . நடிப்பு என்னும் தொழில் தான் அவரை உயர் நிலைக்கு கொண்டு சென்றது என்றாலும் கூட தன்னை ஒரு நடிகன் என்ற வரையறைக்குள் மட்டும் அவர் நிறுத்திக் கொண்டது இல்லை . தான் ஒரு நடிகன் தனக்கு வழங்கப்படும் பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்க வேண்டும் என்ற நியதி எல்லாம் அவரைப் பொறுத்தவரை ராஜகுமாரி( 1948 ) திரைப்படத்தோடு முடிந்து விட்டது என்றே கூறவேண்டும் .
ஏழைப்பங்காளன் என்ற பட்டத்திற்கு விரோதமாக ஒருபோதும் தோற்றம் அளித்ததே இல்லை . இது போன்ற மிகக் கறார் தன்மை திரைத்துறையில் அவருக்கு முன்பு , அவரது சமகாலத்தில் அல்லது அவருக்கு பின் வந்த நடிகர்களிடமும் நாம் காண முடியாத ஒன்றாகும். எம்ஜிஆர் பார்முலாவைத் தான் பின்னாளில் ரஜினி , விஜயகாந்த், விஜய் போன்றோர் பின்பற்றி தங்களை ஓர் அரசியல் சக்தியாக வளர்த்துக் கொள்ள முயன்றனர் , முயல்கின்றனர் என்றாலும் கூட எம்ஜிஆர் ஆரிடம் இருந்த இது போன்ற பல்வேறு கோட்பாடுகள் இவர்களிடம் இல்லை, அல்லது இவர்களுக்குத் தேவைப்படவில்லை என்றும் .கூறலாம்.
குறிப்பாக எம்ஜி.ஆர் மது, சூது, திருட்டு, புகை, கற்பழிப்பு, கொலை போன்ற செயல்களை ஒருபோதும் திரையில் மேற்கொள்வதில்லை என்ற கோட்பாட்டை வைத்திருந்தார் .ஆனால் எம்.ஜி.ஆராக ஆசைப்படும் ரஜினி, விஜயகாந்த், விஜய் ஆகிய அனைவரும் இது போன்ற கோட்பாடுகளை வைத்திருக்கவில்லை என்பதோடு, திருடனாக, கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக, ரவுடியாக, கடத்தல்காரனாக, தாதாவாக எல்லாம் திரையில் தோன்றி குடித்து கும்மாளமிட்டு சிகரெட்டை ஸ்டைலாகப் புகைக்கவும் செய்கின்றனர்.
ஒருவேளை எம்.ஜி.ஆரது பெரும்பாலான திரைப்படங்களில் காட்சியின் பின்னணியில் புகைப்படங்களாக இருந்து பார்வையாளர்களின் புத்தியில் உரைக்கும் படியாக போக்கஸ் செய்யப்பட்ட புத்தர், காந்தி, இயேசு, அண்ணா போன்ற திருவுருக்களுக்கு விரோதமாக செயல்படக் கூடாது , அல்லது அவர்களது தொண்டன் என தன்னை நிறுவ வேண்டும் என்ற லட்சியம் எம்ஜிஆருக்கு இருந்ததைப் போல இன்று இருக்கக்கூடிய நடிகர்களுக்கு இல்லை என்பதால் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறலாம்.
மேற்கூறப்பட்ட புத்தர், ஏசு, காந்தி, அண்ணா படங்களுக்குப் பதிலாக இன்றைய தமிழ் திரைப்படங்களில் குறிப்பாக ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய் போன்றவர்களின் திரைப்படங்களில் காட்சிப் பின்புலத்தில் காணப்படும் திரு உருக்களாக எம். ஜி. ஆர் புகைப்படங்கள் அமைந்திருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எம்.ஜி.ஆர் கதாநாயகராக முதன் முதலில் தோன்றிய ராஜகுமாரிக்கு முன் அவரும் பிற நடிகர்களைப் போலவே திரையின் ஓரத்தில் நிற்பது, துணை நடிகராக வந்து போவது என்று படிப்படியாக வளர்ந்து கதாநாயகனாக முன்னேறியவர்தான். அபிமன்யு( 1949 ) திரைப்படத்தில் நடிகர்கள் பட்டியலில் அவர் பெயர் நான்காவது இடத்தில் எம். ஜி. ராம்சந்தர் என்று குறிப்பிடப்படுகிறது. ராஜகுமாரி திரைப்படத்திற்குப் பிறகும் 3, 4 படங்களில் சாதாரணக் கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார் .
அதாவது அவர் திரைத்துறைக்குள் நுழைந்த 1936 முதல் 1947 வரை ஏறக்குறைய 25 படங்கள் இவ்வாறு அமைந்தன என்று திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு குறிப்பிடுகின்றார். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரிக்கு(1947) கதை, வசனம் எழுதியவர் கலைஞர். மு . கருணாநிதி ஆவார். .ராஜகுமாரியிலிருந்து ஒளிவிளக்கு ( 20/ 9 /1968) வரையிலான 79 படங்களில் ஏறத்தாழ 26 படங்களுக்கு திராவிட இயக்கத்தவர்களான அறிஞர் அண்ணா, ஏவிபி ஆசைத்தம்பி , முரசொலிமாறன், சொர்ணம் , கண்ணதாசன், அரங்கண்ணல், தென்னரசு போன்றவர்கள் கதை, வசனம் எழுதி உள்ளதாகவும் க.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். இதில் கலைஞர் மட்டுமே 9 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர் வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளார்.
அதாவது எம். ஜி. ராமச்சந்திரன் என்ற ஒரு சாதாரண நடிகர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் ஆக வளர்ச்சி அடைந்ததில் திராவிட இயக்கத்திற்கும், கலைஞருக்கும் முக்கியப் பங்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களை மூன்று காலகட்டங்களைச் சேர்ந்தவையாக பிரித்துக் கொள்ளலாம். 1936 முதல் 1948 வரையிலான துவக்க கால கட்டப்படங்கள், 1948 முதல் 1972 இல் அதிமுக துவங்குவது வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த திரைப்படங்கள். இவைதான் அவரை புரட்சி நடிகராகவும் , மக்கள் திலகமுமாக உயர்த்திய திரைப்படங்கள் . 1972க்குப் பின் வந்த திரைப்படங்கள் என்ற 3 பிரிவுகளாகக் காணலாம்.
இவற்றில் இரண்டாம் கட்டத்தை சேர்ந்த திரைப்படங்களில் தான் திராவிட இயக்க கொள்கையும், பொதுவுடமைக் கொள்கையும் பிரச்சாரம் செய்யப்பட்டதோடு, திராவிட இயக்க வசனகர்த்தாக்கள் மிகச்சிறப்பான வசனம் எழுதி எம்ஜிஆரை மக்கள் திலகமாக வளர்த்தெடுத்தனர். கூடவே மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்றோர் எழுதிய கொள்கைப் பாடல்கள் எம்.ஜி.ஆரது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின .
எடுத்துக்காட்டாக, நாடோடி மன்னன் திரைப்படம் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும், மக்களாட்சிக்கு ஆதரவாகவும் பேசியதோடு , ஜோதிடத்தை நையாண்டி செய்யும் வசனங்களைக் கொண்ட படமாகவும் இருப்பதைக் காணலாம். ஒரு சரித்திர படத்தில் பகுத்தறிவு, நாத்திகம், சீர்திருத்தக் கொள்கைகள் போன்றவை மிகச் சிறப்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது என்ற வகையில் நாடோடி மன்னன் திரைப்படம் இன்றைக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் மட்டுமல்லாமல் அனைவராலும் கொண்டாடப் படக்கூடிய திரைப்படமாக இருக்கிறது.
நாடோடி மன்னன்( 22/ 8 /1958) திரைப்படத்தில் வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் என குறிப்பிடப்படுகிறது. இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதும் போது கண்ணதாசன் திமுகவில் இருக்கிறார். படத்தின் துவக்க காட்சியே அபாரமாக இருக்கிறது. மன்னர் ஆட்சி ஒழிக ! மக்களாட்சி வாழ்க! என்ற கோஷத்தோடு திரளான மக்களுக்கு தலைமை தாங்கி எம்.ஜி.ஆர் வருகிறார் . மக்கள் வேலை கொடு! சோறு போடு ! உணவு கொடு! என்ற முழக்கங்கள் தாங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பிடித்துள்ளனர் . உண்மையில் மன்னராட்சிக் காலத்தில் இவ்வாறான முழக்கங்கள் தாங்கப்பட்ட பதாகைகளுடன் மக்கள் ஊர்வலம் போனார்களா? என்பது சந்தேகமே. ஆனால் 1958 இல் அது என்னவிதமான எழுச்சியை தோற்றுவித்து இருக்கும்? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.
கூடவே இன்று மன்னராட்சி குறித்த கண்ணோட்டங்கள் தமிழ்ச்சூழலில் மாறிக்கொண்டு வரும் நிலையில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் முற்பாதி மிகவும் முற்போக்கானதாகவே இன்றைக்கும் அமைந்துள்ளது எனலாம். சிவாஜியின் ராஜராஜசோழன் திரைப்படத்தோடு ஒப்பிட்டால் இதனைப் புரிந்துகொள்ளலாம் . மற்றொரு காட்சியில் மதகுரு ( பி .எஸ். வீரப்பா) வீராங்கன் (எம்.ஜி.ஆர் ) ராணி ( எம்.என் .ராஜம் ) யைச்சந்திக்கக்கூடாது , சந்தித்தால் உயிருக்கு ஆபத்து என்று கூற அதனை எம்.ஜி.ஆர் முட்டாள்களின் உளறல் என்றும், ஜோதிடர்கள் பிழைப்புக்கு வழி என்றும் நையாண்டி செய்வார் .
தமிழ்ச்சமூகத்தில் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு எந்த மன்னனும் இப்படி நாத்திகர் ஆகவும், சோதிட மறுப்பாளராகவும் இருந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட எம்.ஜி.ஆர் மன்னராக தோன்றும்போது அம்மன்னன் திராவிட இயக்கத்தவனாகவும் , சுயமரியாதைக் காரனாகவும் மாறிவிடுகிறான். மேலும் இக்காலகட்டத்தைச் சேர்ந்த திரைப்படங்களில் டைட்டில் பாடல் என்பது திராவிட இயக்கக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் பாடலாகவும் அமைந்திருப்பதையும் காண முடிகிறது.
அதாவது அன்றைக்கு சமூகத்தளத்தில், அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வளர் நிலையில் இருந்தபோது அதோடு தன்னை உணர்வுப்பூர்வமாக இணைத்துக் கொண்டு அதன் கொள்கைகளை தனது திரைப்படங்களில் முழங்கி அதன் மூலம் தானும் வளர்ந்தார் . திமுகவின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தார். நாடோடி மன்னன் திரைப்படத்தில் திமுக கொடி ஏந்திய ஆண் பெண் உருவங்களின் கீழே எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இலட்சினையோடு தான் திரைப்படம் துவங்குகிறது .
இக்காலகட்டத்தில் திமுகவின் கொள்கைக்கு மாறான படங்களில் நடிக்க மாட்டேன் என வெளிப்படையாக எம்.ஜி.ஆர் அறிவித்ததால் இரு திரைப்பட வாய்ப்புகள் கைநழுவிப் போனதாகவும் அதன் மூலம் இரண்டு லட்ச ரூபாயை அவர் இழக்க நேரிட்டதாகவும் அன்றைய இதழ் (தென்றல் 2/10/1956 ) ஒன்று எழுதியதாக க. திருநாவுக்கரசு கூறுகிறார் . இத்தகைய கொள்கைப் பிடிப்பும் , உறுதியும் கூட பிற நடிகர்களிடம் இன்று வரை நாம் காண முடியாத ஒன்றாகும் . திராவிட இயக்கத்தில் சிவாஜியும் சில காலம் இருந்திருந்தும் கூட அவர் எல்லா விதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளதை நாம் காண்கிறோம்.
குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களையும் சிவாஜி அவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் வேறுபாடு துலக்கமாகத் தெரியும். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரக் கலைஞராக சிவாஜி நடித்தார். மிருதங்க சக்கரவர்த்தியில் மிருதங்க வித்வானாக நடித்தார் . இதற்கு மாறாக எம்ஜிஆர் பேண்ட் வாத்தியக் கலைஞராக நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் தோன்றினார்.
பார்ப்பனராக எம்ஜிஆர் நடித்தது இல்லை. மாறாக சிவாஜி பார்ப்பனராகப் பல படங்களில் தோன்றியதோடு (கௌரவம், பரீட்சைக்கு நேரமாச்சு, வியட்நாம் வீடு) பார்ப்பனத் திமிரையும், மிடுக்கையும் திரையில் காட்டினார். எங்கள் தங்கம் திரைப்படத்தில் பார்ப்பனராக வேடமிட்டு, குடுமி பூணூல் சகிதமாக எம்ஜிஆர் செய்யும் கதாகாலட்சேபம் நல்ல நேரம், ஜோதிடம் போன்றவற்றிற்கு எதிரான மிகவும் சிறப்பான பகுத்தறிவு பிரச்சாரம் ஆகும். அதேபோல் எம்ஜிஆர், தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடல் காட்சியில் ( நேற்று இன்று நாளை) தெருக் கூட்டுவார் . இவ்வாறு தெருக்கூட்டும் காட்சியிலும் சிவாஜி ஒருபோதும் தோன்றியதில்லை .
இவ்வாறு 1949 லிருந்து 1968 வரையிலான 20 ஆண்டுகளில் தமிழகத்தில் திமுக ஏழை எளிய அடித்தள மக்களிடம் செல்வாக்குப் பெற்று அவர்களது அரசியல் கட்சியாக வளர்ந்த அதே காலகட்டத்தில் தமிழ்த் திரை உலகில் எம்ஜிஆர் அதே ஏழை எளிய மக்களின் நாயகராக, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக வளர்ச்சி பெற்றார். அதாவது உதிரித் தொழிலாளியாகத் திரையில் தோன்றி, நடித்து உதிரித் தொழிலாளர்களின் தலைவரானார் எம்.ஜி. ஆர்.
எம்ஜிஆர் நேரிடையாக அடித்தள மனிதராக தோற்றமளித்ததைவிட அடித்தள மனிதர் அல்லாத பிற உயர் வர்க்க மனிதராக இருந்தும் அடித்தள மக்கள் மீது பரிவு கொண்ட ரட்சகராகத் தோற்றமளித்த திரைப்படங்கள் அதிகம் என்றாலும் அடித்தள மனிதராக காட்சியளித்த மதுரைவீரன், படகோட்டி, என் அண்ணன் , நாடோடி, திருடாதே , மாட்டுக்கார வேலன் போன்ற திரைப்படக் கதாபாத்திரங்கள் மூலமாக பெற்ற செல்வாக்கு அபரிமிதமான ஆகும் .
இவ்வாறு அடித்தள கதாபாத்திரங்களில் தோன்றினாலும் கூட அம் மக்களைப் போல அவர் இருக்க மாட்டார், திரையிலும் எம்ஜிஆர் ஆகவே தனித்த ஒழுக்கங்களுடனும், பண்புகளுடனும் காட்சியளிப்பார் , எடுத்துக்காட்டாக ரிக்க்ஷா ஓட்டினாலும் கல்லூரி மாணவியும் தேடிவந்து காதலிக்கும் படியாக தோற்றமளித்தார். குடிகார ரிக்க்ஷாக்காரராக தேங்காய் சீனிவாசன் தோன்ற அவருக்கு புத்திமதி சொல்லக் கூடியவராகவும் , கண்டிக்க கூடியவராகவும் எம்.ஜி,ஆர் இருப்பார் .
இந்த ரிக்சாக்காரர்தான் பாட்ஷாவில் ஆட்டோக்காரராக (ரஜினி) உருமாறினார். ஆனால் எம்ஜிஆரது அரசியல் கோட்பாடு , ஒழுக்கம், பண்பு நலன்களுக்கு எதிராக பாட்சா/மாணிக்கம் (ரஜினி) படைக்கப்பட்டிருப்பார்.. எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் நெற்றியில் விபூதி பூசி ஒரு படத்தில் கூட நடித்திராத நிலையில் ரஜினியோ நெற்றி நிறையப் பட்டையும், கழுத்தில் ருத்திராச்சக் கொட்டையுமாக காட்சி அளித்தார்.
ரிக்க்ஷாக்காரர். மட்டுமல்ல குதிரை வண்டிக்காரர் , மீனவர் ஏன் திருடன் என்றால் கூட எம்ஜிஆர் திருடன் வேடம் ஏற்றவுடன் அத்திருடன் பல உயர்ந்த பண்பு நலன் கொண்டவராக, கடமை , கண்ணியம், கட்டுப்பாடு கொண்டவராக காட்சியளிப்பதை (ஒளிவிளக்கு, திருடாதே) நாம் பார்த்து வந்துள்ளோம். அதாவது திரைப்படக் கதாபாத்திரம் முன் நிற்க ஒருபோதும் எம்ஜிஆர் சுதந்திரம் அளித்ததே இல்லை. எப்போதும் எத் தோற்றத்திலும் அவரே முன்நின்றார்.
இந்த முன்னிறுத்தலைத்தான் எம்ஜிஆருக்குப் பின் வந்த ரஜினி, விஜயகாந்த் , விஜய் போன்றோரிடம் நாம் இன்று காண்கிறோம். இந்தவிதமான உருவேற்றத்திற்கு பல்வேறு இயக்குனர்களும் துணை நிற்பதை நாம் பார்க்கிறோம் . அன்று எம்ஜிஆருக்கு நீலகண்டன், எம் .ஏ . திருமுகம் , ராமண்ணா, ஸ்ரீதர் எனப். பலர் உதவியது போல ரஜினிக்கு எஸ்பி . முத்துராமன், பி .வாசு ,கே.எஸ். ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா எனப்பலர் உதவியுள்ளனர்.
இந்த இயக்குனர்கள் நகைச்சுவை நடிகர்களைக் கொண்டு எம்ஜிஆரையும், ரஜினியையும், விஜயகாந்தையும், விஜய்யையும் துதிபாடச் செய்து பார்வையாளர்களிடம் ஒருவித பக்தியை உருவாக்குகிறார்கள். எம்ஜிஆருக்கு துதிபாட சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் , ஐசரி வேலன் எனப் பலர் இருந்தனர். இவர்களில் தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் ஆகியோரது துதிப்பாடல் ஓர் எல்லை கடந்து (1972 குப்பின்) அருவருப்பை ஊட்டும் அளவுக்கு திரைப்படத்தில் துருத்திக் கொண்டு இருந்ததை அனைவரும் அறிவர்.
ரஜினிக்கு ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ் , செந்தில், விவேக் என்றும் விஜய்க்கு விவேக், சந்தானம், சூரி எனவும் இந்த ஜால்ராக்கள் விளங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்தத் துதி பாடலை திரையில் செய்ய மறுத்தது தான் வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான முரண்பாட்டின் துவக்கம் என்றும் கூறப்படுகிறது. இந்த துதிப்பாடல்கள் என்பது இந்நாயகர்களை அந்த அந்தக் கால அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிறுவும் உள்நோக்கம் கொண்டவை ஆகும்.
@
எம்ஜிஆரைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக கட்டமைக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த அவரது கதாநாயக பாத்திரம் காலப்போக்கில் ( 1972 பின் ) கொள்கையைப் பின்னுக்குத் தள்ளி அவரை முன்னுக்கு கொண்டு வருவதில் போய் முடிந்தது . இவ்வாறான நாயக வழிபாடு மேலாதிக்கம் பெற ஏதுவான தமிழக மக்களுடைய சிந்தனையின் அடித்தளத்தையும் நாம் கணக்கில் கொண்டு பரிசீலிக்க வேண்டும். மேலும் எம்ஜிஆர் அடித்தள மக்களின் தலைவராக உருப் பெறுவதற்கு திராவிட இயக்கத்தின் ஜனநாயகக் கருத்துக்களை இவர் திரையில் பேசியதும் , அதற்கு துணை செய்த திராவிட இயக்க வசனகர்த்தாக்களும் காரணம் என்று நாம் மேலே பார்த்தோம்.
அதே வேளையில் அந்த திராவிட இயக்கக் கொள்கைகளை திரையில் எம்ஜிஆரை விட திறம்பட பேசி நடித்த சிவாஜி ( பராசக்தி, மனோகரா ) எஸ்.எஸ்.ஆர் (அவன் பித்தனா ,பூம்புகார், மணிமகுடம்) நடிகவேள் எம்.ஆர் .ராதா போன்றோர் மக்கள் திலகமாகவும், புரட்சித் தலைவராகவும் மாற முடியாமல் போனது ஏன்? என்ற கேள்விக்கான பதில்தான் எம்ஜிஆரின் தனித்தன்மையை நமக்கு உணர்த்தக் கூடியதாகும் .
சிவாஜியின் பாபு திரைப்படத்தையும், எம்ஜிஆரின் ரிக்க்ஷாக்காரனையும் ஒப்பிட்டுப்பார்த்தால் எம்ஜிஆரின் தனித்தன்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும் . எம்ஜிஆர் எதார்த்த மனிதனுடைய பலவீனங்கள் அற்ற “ மீ “ மனிதராக திரையில் தோன்றித் தோன்றியே தமிழர்களை தன்வசப்படுத்தினார் . இதன் விளைவாக தப்பித்தவறி மீ மனித நிலையில் இருந்து சற்று இறங்கி எதார்த்த மனித சாயல் ஓர் திரைப்படத்தில் காணப்படுமேயானால் அப்படம் தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது (ஒரு தாய் மக்கள், பாசம் ) .
அடித்தள மக்கள் அவரைத் தம் மனதில் ஏற்றி வைத்த இடத்தில் இருந்து சிறிதும் சரிய இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையை அவர் அடைந்த பிறகு அதாவது கட்சி, கொள்கை என்பவற்றை எல்லாம் விட எம்ஜிஆர் என்ற தனி மனிதர் மீதான பற்று / வெறி மிகுந்த போது இவர் பேசுவதே கொள்கையாகியது ( அண்ணா நாமம் வாழ்க) இந்நிலையை தமிழ்ச் சமூகத்தில் இவர் அடைவதற்கும் கட்சியில் முரண்பட்டு பிரிந்து தனிக் கட்சியை துவக்குவதற்கான காலம் ஒத்திசைவாக இருந்தது .
இவ்விடத்தில், இந்திராகாந்தி திமுக வைப்பிளக்க எடுத்த முயற்சி, அதன் ஒரு பகுதியாக எம்.ஜி.ஆர் வருமானம், வரி தொடர்பான விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டு பிறகு அவர் தனது ஆடிட்டர், வழக்கறிஞர் சகிதமாக இந்திராகாந்தியைச் சந்தித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது, தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு விருது வழங்கியது, அதனையொட்டி மதுரையில் நடத்தப்பட்ட பாராட்டுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் தான் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என அவர் பேசி சர்ச்சையை துவங்கி வைத்தது பற்றியெல்லாம் விரிவாக ஆர்.முத்துக்குமார் தனது திராவிட இயக்க வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார். அது இக்கட்டுரைக்கு நேரடித் தொடர்பில்லாதவை என்பதால் நாம் அதற்குள் போக வேண்டாம்.
14 /10 /1972 இல் திமுகவை விட்டு வெளியேறிய எம்ஜிஆர் 18 / 10 / 1972 இல் நான்கே நாட்களில் அதிமுக வைத் தோற்றுவித்தார் . அப்போது திமுகவின் 184 சட்டமன்ற உறுப்பினர்களில் பதினோரு பேர் மட்டுமே எம்ஜிஆருடன் சென்றதாக மார்க்சிய அறிஞர் கோ. கேசவன் தனது நூலில் குறிப்பிடுகிறார் . இந்நிலையானது எம்ஜிஆர் தன் ரசிகர் மன்றங்களையும் தன் மீது பற்றுக்கொண்ட அடித்தள மக்களையும் எந்த அளவுக்கு நம்பியிருந்தால் தனிக்கட்சி துவங்கி இருப்பார் என்பதை காட்டுகிறது.
எம்ஜிஆரது நம்பிக்கை (சினிமா மீதும் தமிழக மக்களது சினிமா ரசனை மீதும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை ) வீண் போகவில்லை என்பதைக் கடந்த கால நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன.
1972 இல் திமுகவில் இருந்து வெளியேறிய பின் வந்த திரைப்படங்கள் யாவும் எம்ஜிஆரை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவரது அருமை பெருமைகளை பேசுவதாகவே அமைந்தன . குறிப்பாக இதயவீணை (20 /10 /1972) துவங்கி மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் ( 14 / 10 / 1 978 ) வரையிலான 17 திரைப்படங்களிலும் கதாநாயகிகளும் , நகைச்சுவை நடிகர்களும், துணை நடிகர், நடிகைகளும் எம்ஜிஆரைப் புகழ்வதையே நடிப்பாகவும், அதுவே காட்சியாகவும் அமைக்கப்பட்டிருந்தன .
திரையில் அவர் வள்ளல் என்றும் , பொன்மனச்செம்மல் என்றும் பார்வையாளருக்குத் திகட்டும் அளவுக்கு புகழப்பட்டார். இதனைக் கண்டு ரசிகர்களும், அடித்தள மக்களும் கிறங்கிப் போயினர். இதன் விளைவு அவருக்கு ஒன்று என்றால் தமிழகமே அதிர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக முன்பு எம். ஆர். ராதாவினால் சுடப்பட்ட போதும், பின்னாளில் அவர் உடல் நலமின்றி அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் தற்கொலைக்கு முயன்றவர் எண்ணற்றோர் . இதில் பலர் இறந்தும் போனார்கள். எம்ஜிஆர் மீதான பக்தி அதாவது வெறி தம் உடலில் அவரது உருவத்தை பச்சை குத்திக் கொள்வதில் துவங்கி அவருக்காக மொட்டை அடிப்பது என்று வளர்ந்து இறுதியில் அவருக்காக தம் உயிரையும் மாய்த்துக் கொள்வது என்று உச்சத்தை அடைந்தது என்று கூறலாம்.
உலகில் வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற நிலை உள்ளதா என்று தெரியவில்லை. ரசிகன் பக்தனாக மாறுவதும், நடிகன் கடவுளாக மாற்றப்படுவதும் தமிழர்கள் உலகிற்கு அளித்த கொடை என்றே கூறவேண்டும். அன்று எம்ஜிஆரில் துவங்கிய இப்போக்கு வளர்ந்து இன்று கட்டவுட்டுக்கு மாலை, கற்பூரம், பாலாபிஷேகம், ஆரத்தி, தியேட்டர் வாயிலில் கிடாவெட்டி பொங்கல் வைப்பது , மண் சோறு திண்பது என்றும், தங்களது நாயகர்களின் பிறந்த நாளுக்கு கோயில்களில் அன்னதானம், சிறப்பு வழிபாடு, தீக்குழி இறங்குவது, மொட்டை போடுவது, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்துவது வரை சென்றுவிட்டது.
தமிழ்ச் சினிமா நாயகர்கள் கடவுள் ஆகியதும் ரசிகர்கள் மூடர்களாக இழிந்து போனதும் எம்ஜிஆர் அன்று போட்ட விதையினால் தான் என்றால் அது மிகையில்லை . இப்புகழ் முழுவதும் திரு எம் ஜி யார் அவர்களையே சாரும். தமிழ் சினிமா ரசிகர்களிடம் காணப்படும் இந்த பக்தி மூடத்தனம் ஏதோ விடலைப் பருவத்தினருக்கு மட்டும் அதாவது டீன் ஏஜ் க்குச் சொந்தமானது என்று கருதிவிட முடியாது. 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்ச் சினிமா ரசிகன் விடலைப் பருவ அறிவோடு உறைந்து போய் விட்டதாகவே நாம் கருத வேண்டி உள்ளது.
ஏனென்றால் திரையில் எம்ஜிஆர் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்கள் போடும் ஏழைப்பங்காளன் வேடத்திற்கும் , அவர்களின் உண்மை வாழ்வுக்கும் இடையிலான பாரதூரமான வேறுபாட்டை இவர்களால் உணர முடியாத போது இவர்களை நாம் வேறு எப்படி மதிப்பிடுவது. . எம்ஜிஆர் பற்றி அடித்தள மக்களிடம் இன்றும் பல்வேறு விதமான கற்பிதங்கள் மலிந்து கிடப்பதை நாம் அவர்களுடன் உரையாடும் போது அறியமுடிகிறது. அவரை வீரராகவும் , ஏழைப் பங்காளன் ஆகவும் , தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலராகவும், தாய்க்குலத்தின் தங்க புண்ணியவான் ஆகவும், வள்ளலாகவும் என்று பலவாறாகவும் படிமப் படுத்தப்பட்டுள்ளதைக் காணும்போது இதுவெல்லாம் எவ்வாறு நிகழ்ந்தது என்று மலை.க்கத் தோன்றும் இந்த கற்பிதங்களுக்குப் பின் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகிறோம்.
எம்ஜிஆர் அவர்கள் 1972ல் கட்சி துவங்கி 1977 முதலமைச்சர் பதவியையும் பிடித்தார் 1977 லிருந்து அவர் இறக்கும் 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்தார். இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ மக்கள் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஒடுக்குமுறைகள் எல்லாம் நடைபெற்றன . அவற்றைப் பற்றி பல்வேறு செய்திகள் , கட்டுரைகள், கண்டனங்கள் எல்லாம் இதழ்களில் வரவே செய்தன.
ஆனால் இவையெல்லாம் அடித்தள மக்களிடம் எம்ஜிஆர் மீதான பக்தியை ஒரு சிறிதளவும் குறைக்கவில்லை என்றே எதார்த்த நிலவரங்கள் காட்டுகின்றன . இந்த உண்மை தான் எழுத்தை விட சினிமா தமிழக மக்களிடம் அதிக செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும், எழுத்துருவில் இருந்த புராணங்கள், வரலாறுகள் எல்லாம் தமிழ்த் திரையின் மூலமாகத் தமிழக மக்களிடம் பரப்பப்பட்டதையும் இதற்கு எதிராக சினிமாவின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட கற்பிதங்களை ஒருபோதும் எழுத்தின் மூலமாக கவிதை, கதை , கட்டுரை அழித்துவிட முடியாது என்ற உண்மையை இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
எடுத்துக்காட்டாக கூறுவது என்றால் அன்று எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மெரினாவில் மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு இதனை பல்வேறு இயக்கத்தவர்களும் கண்டித்தனர் . மீனவ நண்பன் ஆட்சியில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு என விமர்சித்தனர். ( இன்குலாப், துப்பாக்கிகள் பூ வாளிகள்). ஆனால் அதே காலகட்டத்திலும் அதற்குப் பின்னும் படகோட்டி திரைப்படம் திரையிடப்பட்ட போது மீனவர் பகுதிகளில் கூட்டம் ரிலீஸ் படம்/ புதிய திரைப்படம் பார்க்கத் துடிப்பது போலவே அலைமோதியது. மீனவர்கள் மட்டுமல்ல எல்லாப் பிரிவினர் நிலையும் இதுதான்.
அனைத்து பிரிவினருக்கும் ( விவசாயிகள் , தொழிலாளிகள் ) அவர் படம் வைத்திருந்தார் . நரிக்குறவர் இன மக்களுக்கு ( நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க , ஒளிவிளக்கு) அவர் தான் இன்றும் கடவுள், தலைவர் எல்லாம் ) எம்ஜிஆர் கெட்டவராக, வில்லனாக நடிக்க மாட்டார் அப்படி ஒரு சில படங்களில் கெட்டவராக நடித்தார் என்றால் ( நினைத்ததை முடிப்பவன், நீரும் நெருப்பும் ) அதே படத்தில் நல்லவராகவும் அவரே நடிப்பார் . அதாவது அது இரட்டைவேடப் படமாக இருப்பதோடு , அந்த கெட்டவர் பாத்திரமும் அதற்கான நியாயங்களையும் நல்ல பண்புகளையும் கொண்டிருக்கும்.
இந்தப் போக்கையும் எம்ஜிஆருக்குப் பின் வந்த நடிகர்கள் பலரும் பின்பற்றுகின்றனர் . ஒரு நடிகர் துவக்கத்தில் வில்லனாக அல்லது துணை நடிகராக நடித்து வளர்ந்து கதாநாயகனாக மாறி மக்கள் அபிமானத்தைப் பெற்று விட்டால் பிறகு மீண்டும் அவர் வில்லனாக நடிக்கவே மாட்டார் . அப்படி வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் அது இரட்டை வேட படமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அதாவது சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்ற வேறுபாடு ஒழிந்து இரண்டும் ஒன்றே எனக் கருதும் மனப்போக்கில் இருந்தே இந்த இமேஜை கட்டிக் காத்தல் என்ற நிர்பந்தம் வந்து விடுகிறது.
ஒரு நடிகரின் நிஜ வாழ்க்கையிலிருந்து அல்லாமல் திரையில் இருந்து அவரது அரசியல், சமூக நிலை மதிப்பிடப்பட்டு தமிழக மக்கள் தங்கள் மனதில் ஓர் இடத்தைக் கொடுக்கும் நிலை இருப்பதால் நடிகர்கள் திரையில் தங்களது இமேஜில் ஒரு சிறு கீறலும் விழாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆக தமிழ்த்திரை என்பது உலகின் வேறு பல நாடுகளில் காணப்படும் சினிமாவில் இருந்து மாறுபட்ட மாயத்திரை யாக கட்டியமைக்க பட்டுள்ளதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். இந்தக் கட்டமைப்பில் திரு எம் ஜி ஆருக்கு மிக முக்கிய பங்குண்டு என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும் . இது எந்த விதத்தில் ஆரோக்கியமானது என்பதை சமூக நலனில் அக்கறை கொண்டோர் சிந்திக்க வேண்டும் . மேலும் மேலும் இந்த கட்டமைப்பை இறுக்கமாக்க உதவும் இயக்குனர்களின் பங்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எம் ஜி ஆர் இறந்த பிறகு அவருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகுமார், பாக்யராஜ், சத்யராஜ், விஜயகாந்த், ராமராஜன் எனப் பலரும் எம்ஜிஆரைத் தங்களது படங்களில் இமிடேட் செய்ய முயன்றுள்ளனர் . குறைந்தபட்சம் இரட்டை விரல்களை (இரட்டை இலை) யாவது காட்டியுள்ளனர். விஜயகுமார் . பாக்கியராஜ், ராமராஜன் ஆகியோர் தங்களை எம்ஜிஆரின் கலையுலக வாரிசாகவும் அடையாளப்படுத்த முயன்றனர். அன்றைக்கு விஜயகாந்த் தன்னைக் கருப்பு எம்ஜியார் என அழைப்பதை விரும்ப கூடியவராக இருந்ததையும் நாம் பார்த்தோம்.
இவ்வாறு எம்ஜிஆர் ஓர் மாபெரும் திருவுருவாக அடுத்த தலைமுறை நடிகர்களால் கொண்டாடப்பட்டதன் தொடர்ச்சியே இன்று ரஜினி அவரது அடுத்த தலைமுறை இளம் நடிகர்களால் கொண்டாடப்படுவதாக அமைகிறது . இது இப்படியே காலந்தோறும் புதிய புதிய நடிகர்களை அந்த இடத்தில் பதிலீடு செய்து பார்ப்பதாக தொடரும் என்றே கருதவேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழர்களுக்கு கதாநாயக வழிபாட்டில் சலிப்பு ஏற்படும் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழகத்தின் இன்றைய சூழலில் ஓர் கொள்கைக்காக, மக்கள் நலனுக்காக போராடுவது, உயிரைவிடுவது, சிறை செல்வது என்பனவற்றால் மக்களின் அன்பைப் பெறுவது, மக்களிடம் செல்வாக்குப் பெறுவது என்பதெல்லாம் கற்பனையாக போய்விட்டது மட்டுமல்ல , கொள்கை என்பதே தேவையற்றுப் போய்விட்டது அல்லது கதாநாயகர்கள் பேசுவதுதான் கொள்கை என்ற நிலை. ஜனநாயக சமூகம் என்று கூறப்படும் இன்றைக்கு இதுதான் எதார்த்தம்.
இந்த யதார்த்த நிலவரம் தான், உங்கள் கட்சிக்கொள்கை என்ன என்று கேட்டவுடன் “ எனக்கு அப்படியே தலை சுத்திப் போச்சு “என்று ரஜினியை வெட்கமில்லாமல் சொல்ல வைக்கிறது. கட்சி துவங்கி இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் கமலஹாசனால் தனது மக்கள் நீதி மைய்யத்தின் கொள்கையைச் சொல்ல முடியாமல் “ கொள்கையைச் சொன்னால் காப்பியடித்து விடுவார்கள்” என்று சிறுபிள்ளைத்தனமாகவும், அருவருப்பின்றியும் சொல்ல வைக்கிறது.
மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற பிம்பங்களால், முன்னுதாரணங்களால் உந்தப்பட்டே இவர்கள் எல்லாம் கட்சி துவங்குவதால் தான் மீண்டும் மீண்டும் நாங்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த எம்.ஜி.ஆர் ஆட்சி என்பது பொற்கால ஆட்சி ஒன்றும் அல்ல! அது ஓர் சர்வாதிகார ஆட்சியாகவே இருந்தது என்பது இங்கு வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளதை இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.
இவ்விடத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சில மோசமான நிகழ்வுகளை, மக்கள்மீது நடத்தப் பட்ட தாக்குதல்களைச் சற்று நினைவு படுத்திகொள்வது பயனுடையதாக இருக்கும்,
- தமிழகத்திலேயே அதிகமான போலிஸ் அடக்குமுறைகளையும், துப்பாக்கிச் சூட்டையும் நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சிதான்.
- மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைப் பிரயோகப் படுத்தி பல கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
- விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டசம்பவங்கள் அனேகம்! அதில் ஒருமுறை 14 பேரும்,மற்றொரு முறை 5 பேரும் கொல்லப்பட்டனர்.
- சென்னை மெரினாவில் மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாகிச்சூட்டில்14 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய ஏழை,எளிய இளைஞர்களை நக்சளைட்டுகள் என்று முத்திரைகுத்தி, குருவி சுடுவதைப்போல சுட்டுத்தள்ளியதில் சுமார் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
- இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்திய வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் 21 வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- போராடும் தொழிலாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய்வழக்குகள், கைதுகள், சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
- சிறைச்சாலைகளில் விசாரணைக்கைதிகளின் மரணம் அதிகரித்தது.
- பால்டிகாகப்பல், நிலக்கரி பேர ஊழல் தொடங்கி ராபின் மெயின் மர்மங்கள் வரை எம்.ஜி.ஆர் ஆட்சி ஊழலுக்குப் பேர்போன ஆட்சிதான்.
- உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் சிதையக் காரணமானவர்……..
சாவித்திரி கண்ணன். அறம் இணைய இதழ்,19/12/2020.
இவை அனைத்தும் ஓர் சாம்பிள் மட்டும்தான். எம்.ஜி.ஆர் ஆட்சியின் மக்கள்விரோதப் போக்குகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். திரையில், எம்.ஜி.ஆர் யார் யாராகவெல்லாம் தோன்றினாரோ அந்த விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள், புரட்சிக் காரர்களை எல்லாம் தனது ஆட்சிக்காலத்தில் தாக்கி அழித்தார். ஆனால் திரையில் தான் யாரையெல்லாம் எதிர்த்து, தாக்கி, அடித்து துவைத்தாரோ அந்தப் பண்ணையார்களை, முதலாளிகளை, சாராய சாம்ராஜ்யவாதிகளை எல்லாம் தனது ஆட்சிக் காலத்தில் பாதுகாத்தார்.
ஆக, இன்று எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தரப்போவதாகக் கூறும் நடிகர்கள் ஆட்சிக்கு வந்தால் அது எப்படிப் பட்ட கொடுங்கோல் ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலமே(1977—1987) முன்னுதாரணமாக உள்ளது.
ஆனால் இதை எல்லாம் மறந்து போகும்படியாக மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர் திரையில் பேசிய வசனங்களை, நடிப்பை, பாடல்களை ஒலி,ஒளி பரப்பி மக்களை மயக்கத்திலேயே வைத்திருக்கும் வேலையை அனைத்துத் திரைகளும் (பெரிய,சின்ன,குட்டித்திரைகளும்) செய்துவந்தன, வருகின்றன. அதன் விளைவாகத்தான் இன்றும் எம்.ஜி.ஆர் தேர்தல் அரசியல் களத்தில் முன்னிறுத்தப்படுகிறார்.
இதன் தொடர்சியாகத்தான் ரஜினியும், கமலும் நடித்த திரைப்படங்களை தொலைக்காட்சிகள் இப்போது அடிக்கடி போட்டு, அவர்களின் பிம்பங்களை மக்களின் மூளைக்குள் திணித்தவண்ணமுள்ளனர். போதாக்குறைக்கு கமலை நியாயவானாகக்காட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் அவரது அரசியலுக்கு ஒத்தூதுகிறது.
ஆகவே சினிமாவில் நாயக வழிபாட்டின் உச்சமாக , பிம்ப அரசியல் கட்டமைப்பின் துவக்கப் புள்ளியாக எம்ஜிஆரைக் கூறலாம். அதே சமயம் எல்லாப்பழி, பாவங்களையும் அவர் ஒருவர் தலையில் மட்டும் சுமத்திவிட்டு தமிழக மக்கள் சிந்தனையில் உள்ள முடிச்சுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுவதும் நியாயமல்ல. தமிழ் மக்களிடம் காணப்படும் இந்த நாயக வழிபாடு பற்றி விரிவாக ஆய்வு செய்யப் படவேண்டிய தேவையுமுள்ளது.
எனவே இந்த மாயத்திரையின் மயக்கம் நம் மக்களிடம் நீடிக்கும்வரை, நாயக வழிபாடு என்பதும், எதார்த்த அரசியலில் அவர்களது தலையீடு என்பதும் எம்ஜிஆருடன் முடிந்து போய்விட்ட, அல்லது போய்விடக் கூடிய ஒன்று அல்ல! மாறாக அது ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் எனத் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தை ஆட்டுவிக்கும், தமிழக அரசியலைச் சீரழிக்கும் ஓர் தொடர்கதையாகவே இருக்கும்.