உயிர்த்துடிப்புமிக்க சாகச வித்தைக்கார எழுத்து
(லஷ்மிசிவக்குமாரின்லங்கூர்சிறுகதைகள்மீதானவாசிப்புத்துலங்கல்)
பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன் (அயலகத் தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்)
மிகப்பெரிய யானையை, மிகச்சிறிய அங்குசம் கொண்டு யானைப்பாகன்கள் அடக்குவதுபோல சிறுகதை எழுத்தாளர்கள் சாகசம் செய்தாக வேண்டியிருக்கிறது என, முன்பொருமுறை எழுதிய வரிகளை நினைவுகூர்ந்து தொடங்குவதே சரியாக இருக்கும் என்றெண்ணுகிறேன்.
தொகுப்பின் அனைத்துக் கதைகளுக்குள்ளும் இடம்பெறும் கருவும் எடுத்துரைப்பும் உரையாடல்களும் விவரணங்களும் ஏதேனும் புதிதுசொல்ல முயல்வதை நூலைப் படிக்கையில் நாம் உணரமுடியும். பாத்திரங்களின் உளவியல் கோணங்கள்; சம்பவக் கோவைகளின் இட அவதானிப்புகள், புழங்கு பொருள்கள் எல்லாவற்றிலும் புதிது எனும் அம்சம் துடித்தபடி, மைய நீரோட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்படாத பணியிடச் சூழல்கள் ஓ இவ்வளவு இருக்கிறதோ என வியக்கவைக்கின்றன. குறிப்பாக, பல இடங்களில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ‘அந்தப்போது’ எனும் சொல் கூட, கூறியது கூறலின் சலிப்பின்றி ஏதோ ஒருவகையில் ஆர்வத்தைத் தூண்டி இழுப்பதாகத்தான் படுகிறது.
சர்வதேசப் பின்னணி இவரது புனைவுகளுக்குள் வந்துவிடுவது என்பதுதான் மிகத்தனித்துவம் வாய்ந்தது எனச்சொல்ல வேண்டும். அதிலும்கூட உள்ளூர் வட்டாரம் இசைகிற ரசவாதத்தையும் சேர்த்தே நிகழ்த்துகிறார். காட்டாக, ரிஷிகேஷுக்கு மாற்றலில் செல்லும் தமிழ்க்குடும்பம் நன்நிலா எனும் தமிழ்ப்பெயரோடும் பண்பாட்டு அடையாளத்தோடுமே செல்வதாகக் கதைப்பதாகட்டும், ஹாருகி முரகாமியின் யானை காணாமலாகிறது எனும் விவரணையோடு தஞ்சை பெரியகோயில் யானையை மணியோசையோடு கதைப்பதாகட்டும் இந்தப் பாங்கு அமையப்பெற்றிருக்கக் காணலாம்.
பாவக்குறியீடு, நீர்ம நிலையிலிருப்பவன், வித்தைக்காரியின் சாகச மரணம், நோமோ, வெண்பாவும் யானையும், அவன் என்றிருப்பது நான்தான், வார்டு எண் 16 ஆகிய கதைத்தலைப்புகள் தமிழ்ச்சூழலில் மிகப்புதியவை மட்டுமல்ல. கதைகளுக்குள் இடம்பெறும் விவரணங்களும் மிகமிகப் புதியவையாக மர்மக்குகைக்குள் சிறுகுழந்தையை அழைத்துச் செல்லும் அவதானிப்புடன் நகர்கிற கதையாடல் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
‘ப்ராய்டுடன் ஒரு விவாதம்’ எனும் கதைத்தலைப்பு, கதையோடு எப்படி தர்க்கம் பெறுகிறது என்பதில், எனக்குக் கேள்வியிருக்கிறது. அதேவேளை படைப்பாளி எப்படித் தலைப்பு வைக்கவேண்டும் எனக்கட்டளையிடுவதோ கருத்து கூறுவதோ படைப்புச் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகிவிடும் எனும் கரிசனத்தோடு நகர்ந்துகொள்கிறேன். ஆனால் இந்தக்கதைக்கு நான் தலைப்பு தெரிவுசெய்வதாக இருந்தால் இக்கதை முடிவில் இடம்பெற்றிருக்கும் “என்றிருந்தது அக்கடிதத்தில்” எனும் கடைசி வரிகளை தலைப்பாகத் தேர்ந்திருப்பேன். சற்று கூச்சத்தோடுதான் இதையே நான் பதிகிறேன்.
நோமோ கதையின் ரிங்டோன்மேனியா அல்லது நோமோஃபோபியா பற்றிய கதைப்பு நல்ல பகடி என்பதோடு, நவீஈஈஈஈஈன வாழ்வை அச்சுறுத்திக்காட்டி செம்மையாக்கம் செய்ய முயலும் உத்தியில் தனித்துவம்கொள்கிறது.
எங்கே முடிவுபெறவேண்டும் என்பதோடு எங்கிருந்து தொடங்குவது என்பதும் எழுத்தாளருக்கு மிகமிக முக்கியமல்லவா? வெண்பாவும் யானையும் கதையில் குழந்தை வெண்பா, யானையை வரையத்தொடங்கும் சித்திரம் இடம்பெறுகிறது. “கோவிலில் தாம் பார்த்திருந்த யானையை நினைவுக்குக் கொண்டுவந்தவள், உருட்டுத் தூண் போன்ற அதன் பாதங்களிலிருந்து வரைவது என்பதுதான் சரியென முடிவுசெய்தாள். ஆனால் ஹார்ட்டின் அடையாளம் போன்றிருக்கும் அதன் தும்பிக்கை துவாரத்தின் மேல்முகப்புக் கூரிலிருந்து வரைய ஆரம்பித்தால்தான், யானை அதன் உருவத்தை நேர்த்தியாகப் பெறும் என்பதை அடுத்தடுத்த வரைதல்களில் புரிந்துகொள்வாளாயிருக்கும்” என்று எழுதுவதன் மூலம், தானும் எங்கிருந்து எழுதத் தொடங்குவது என்பதில், தெளிவும் எழுதுவினைமையும் அமையப்பெற்றிருக்கிறார் என்பதையும் கண்டுகொள்ளமுடிகிறது.
இக்கதையில் இன்னோரிடத்தில் “முரகாமியை முடித்துவிட்ட வெண்பாவின் அப்பா, இன்னொரு யானை கதையை எப்போது வேண்டுமானாலும் சொல்வதற்குத் தயாராக இருந்தவராய் அவளைப் பார்த்தார். அவள் ஆழ்ந்து உறங்கி விட்டிருந்தாள்” என்று கதையில் இடம்பெறும் வரிகள் , இப்படித்தான் பல வேளைகளில் கதைகள் சொல்ல, ஆர்வத்தோடு வந்து காத்திருக்கையில் நாம் தவறவிட்டு விடுகிறோம் அத்தருணங்களை. அல்லது சமூகம் கதைகள் கேட்காமல் வாளாவிருந்து விடுகிறது என்கிற பொதுமைப் படுத்தல் மூலம் நாம் பொருத்திப் பார்க்கமுடிகிறது. எழுத்தாளரின் சிறந்த ஆக்ககரமான இந்தக்கதையில் ஒரு குழந்தை பெரியகோயில் யானையைப் பார்த்து, புளகாங்கிதம் அடைகிறது.. ரசிக்கிறது… சிலிர்க்கிறது… யானையின் சூடான மூச்சு ததும்பும் துதிக்கையின் ஆசி, குழந்தையின் தலை மீது பட்ட அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறது. பார்த்துவிட்டு வீடு திரும்பியதும் உடனடியாக பக்கத்தில் இருக்கிற பூங்கோதை என்கிற குழந்தையை அழைத்துக்கொண்டு , எவ்வளவு தடுத்தும் கேளாமல், நேரம் கெட்ட நேரத்தில் கடையில் வண்ணப்பென்சில்கள் வாங்கப்போய்த் திரும்புகையில் விபத்தில் அடிபட்டு இறந்துவிடுகிறது. கோமா நிலையிலிருந்தபோதே வெண்பாவின் பெற்றோர்கள் இதே விபத்தில் கண்களைப் பறிகொடுத்த பூங்கோதைக்கு அந்தக் கண்களை பரிசளிக்க எந்தவிதத்திலும் தாமதப்படுத்தாமல் தயாராக இருந்தார்கள் என்று எழுதிச்செல்கிறார். பிறகு பூங்கோதை வெண்பாவின் கண்களைப் பொருத்திக்கொண்டு, வெண்பாவின் கண்களோடு யானையைப் பார்ப்பதாக கதை நகர்கிறது. ஒருவிதமான மேஜிக்கல் ரியலிசம் கதைபோலத் தென்பட்டாலும் எதார்த்தத்தை முன்பின்னாக காலத்தை நீட்டி நகர்த்திச்செல்வதன் மூலமாக ஒரு கதையாடல் வலிமையாக மனதைத் தாக்குகிறது. “நூறாண்டுகள் கழித்து பெருவுடையாரின் தேர் முதன்முதலாக ஊரைச் சுற்றிக்கொண்டு வந்தது. தேர் வருவதால் வெண்பாவின் சிநேகிதி பூங்கோதை, தன் அம்மாவிடம் சொல்லி வெண்பாவிற்குப் பிடித்த யானைக் கோலத்தை வாசலில் போடச் சொல்லியிருந்தாள். தேரின் முன்னே அலங்கரிக்கப்பட்ட பெருவுடையார் கோவில் யானை, மணி சத்தத்துடன் வந்தது.” அதே வீதியில் அதே பூங்கோதையால் வெண்பாவின் கண்கொண்டு பார்க்கப்படுகிற அந்த இரண்டாவதாக வெண்பா வரையாமல் விட்டுவிட்டுப் போன யானையை பூங்கோதை கிரையான்குச்சி கொண்டு வரைந்து முடித்துவிட்டு, அதைச் சுவற்றில் ஒட்டிவிட்டு வெண்பாவின் அம்மாவின் கண்களையும் அப்பாவின் கண்களையும் உற்றுப்பார்த்தாள். அவர்களின் கண்களில் பெருவுடையார் கோயில்யானை தெரிந்தது. வெண்பா இல்லாமல் ஆனதை உணர்ந்துகொண்ட பெருவுடையார் கோயில்யானை, தள்ளாட்டத்துடன் நடந்தது” என்று முடிக்கிறார்.
கதைக்கருவை உணர்வுபூர்வமாக மனதை நெகிழ்த்தும் விதமாக எழுதிச் செல்வதில் வெகு சாமர்த்தியமும் லாவகமும் கூடிய ஒரு படைப்பாளியாக முத்திரை பதிக்கிறார், லஷ்மி சிவகுமார். இந்தக் கதைமுடிவு போலவே லங்கூர் கதையிலும் லங்கூர் எனப்படும் இனத்தைச் சேர்ந்த ஒரு குரங்கை குழந்தையின் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டு கொண்டு வந்து வீட்டில் வைத்துக்கொள்வதன் மூலமாக, படும் பாடுகளை சொல்லிச் செல்கிறார். கதைக்குள் கதையாக சோட்டாபீம் கதையின் ஊடாட்டம் கதைசொல்லலை ஈர்ப்பாக்குகிறது. அந்தக்கதை முடிகிறபோது, பிடிவாதக்காரக் குழந்தை நன்நிலாவை அவளுடைய பிடிவாதத்தை கொண்டே கதையை முடிக்கச் செய்கிறார். நன்நிலாவின் பிடிவாதம், பிடித்தால் பிடித்த காட்டில் கொண்டு விடுவது என்று முடிக்கிறார். இப்படி எங்கு தொடங்கி எங்கு முடிப்பது? எப்படி முடிப்பது? என்பதில் இருக்கும் தெளிவும் படைப்பு வினைமையும் கூடி உணர்வுபூர்வமான ஒரு தளத்தில் கொண்டு சேர்க்கிறார்.
யாவரும் பதிப்பகம்
விலை : 150/-
“இப்பொழுது கதாசிரியன் அலட்டல்களிலிருந்து நீங்கள் கதைக்கு நகருங்கள் என்று அமைகிறது ஒருவரி, கதையில். கதாசிரியர் ஒதுங்கிக் கொள்ளுகிற; கதாபாத்திரங்களை அச்சுஅசலாக வாசகர்கள் நேரடியாக முகம் கொண்டு பேசுகிற; தர்க்கிக்கிற; விவாதிக்கிற; உரையாடல் நிகழ்த்துகிற ஒரு வாய்ப்பை இந்த கதையாடல் முறைமை தருகிறது என்பதற்கு இந்த ஒரு வரியைச் சான்றாக நாம் கூற முடியும்.
ஒரு பாத்திரத்தின் புலம்பலையும் தவிப்பையும் புலப்படுத்த வந்தவர், அந்த அஃறிணைப் பொருட்களாகவாவது இருந்திருந்தால் அதைச் சொல்லிவிட முடியும் என்று அங்கலாய்ப்பது கதையில் ஈர்ப்பை உண்டாக்குகிறது. தொ.பரமசிவன் எழுத்துக்களின் வழியாக அவர் அஃறிணைப் பொருள்களின் குரல்களை கூடக் கேட்டு ஆய்வு செய்யத் தொடங்குகிறார் என்று ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதியதைப் போல, இவர் அஃறிணைப் பொருள்களின் குரலுக்கும் செவிமடுப்பதுபோல தன் கதையை நகர்த்திச் செல்கிறார் எனச்சொல்லலாம். நோமோ கதையில் இரண்டாவது பத்தியில் அவர் எழுதுகிற இந்த வரிகள் இந்த வகையில் அடங்குபவை. “வேண்டுமானால் நான் அவர் அமர்ந்திருக்கக்கூடிய சிமெண்ட் மேடையாகவோ அவர் முதுகு சாய்ந்திருக்கும் பட்டையான கம்பித்தூணாகவோ தூணில் பூசப்பட்டிருக்கும் அலுமினிய நிறமாகவோ இருந்திருந்தால் என்ன பினாத்துகிறார் என்று கூறமுடியும். அல்லது அவருக்கு முன்னாள் நிற்கக்கூடிய விலைஉயர்ந்த கார்களாகவோ மேற்கூறையாகப் படுத்திருக்கும் வேகத்தடை போன்ற ஆஸ்பெஸ்டாஸ் தட்டியாகவோ இருந்திருந்தால் கூட ,எது குறித்து என்பதைத் துல்லியமாகச் சொல்வேன்” என்று தன்னால் சொல்ல முடியாதவாறு மறைபொருளாக புதைந்திருக்கிற துயரங்களை வெளிக்கொண்டுவர ஒரு படைப்பாளியின் அங்கலாய்ப்பை வெளிப்படுத்துகிறார்.
மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிற நோயாளிகள் ஒரு விதமான துன்பத்தை எதிர்கொள்கிறார்கள் என்றால், நோயாளிகளுக்கு துணைவர்களாக வரக்கூடிய பராமரிப்பாளர்கள் படுகிற பாடுகள் வெவ்வேறு வகையில் சிக்கலானவை என்பதை அழகாகச் சொல்லிச்செல்கிறார். ஹெச்.ஐ.வி.யால் உடம்பை உருக்கி விட்ட 49 வயது நிரம்பிய கிராமத்திலிருந்து வருகிற, ஒரு நோயாளி…அவரதுமனைவி… பொருளாதார நலிவு… பக்கத்துப் படுக்கையில் நோயாளிக்குத் துணையாக வந்திருக்கக்கூடிய ஒரு மனிதரும் இவரது மனைவிக்கும் இடையிலான ஒரு சிக்கலைக் குறிப்பாகச் சொல்லிப் போகிற அந்த நேர்த்தி இப்படிப் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்னதான் செய்யமுடியும்? எனக் கேள்விகளை எழுப்பாமல் எழுப்பிச் செல்லுகிற ஒரு படைப்பு.
என்கவுண்டர் கொலைகளைப் பொழுதுபோக்கு போல செய்ய நிர்பந்திக்கப்படும் ஒரு அதிகாரியின் அடிமனதில் உறைந்திருக்கும் மனசாட்சி மிக லேசாக எழும்பிப் பார்க்கிறது. உணர்வுச்சலனத்துக்கும் கடமையின் நிர்ப்பந்தத்துக்குமான போராட்டம் ‘அவன் என்றிருப்பது நான்தான்’ எனும் கதையில் வெகு சிறப்பாகத் துலங்குகிறது.
கவனிப்பாரற்ற உதிரித்தொழிலாளி, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து இடம்பெயர் தொழிலாளியாகும் போதெல்லாம் ஓடும் ரயிலுக்குக் குறுக்கே ஓடச்செய்யும் தண்டனைக்கு பரிசோதகர்களால் உள்ளாக்கப்படுகிறான். கதை நெடுக அல்லது வாழ்க்கை நெடுக மரணம் துரத்த ஓடும் உதிரி / புலம்பெயர் தொழிலாளர் வாழ்வை முகத்திலறைந்து பேசுகிறது கதை. “உத்தேசமாகச் சொல்லப்போனால் ஒரு கால் நூற்றாண்டாக அநேக இரவுகளில் இறந்ததின் பிற்பாடுதான் விழித்திருக்கிறான்” என்று எழுதுவதைவிட வேறெப்படி எழுதிவிடமுடியும் எனத் தோன்றுகிறது.
தொகுப்பின் முத்திரைக் கதையாக இருக்கக்கூடிய ஒரு வித்தைக்காரியின் சாகச மரணம் கதையின் தொடக்கமே வினோத உவமையோடு. இந்த இடத்தில் ஜெயகாந்தன் நினைவுக்கு வருகிறார். ஆனால், அவர் ரொம்பச் சின்னதாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். ஒரு டப்பா நகரப்பேருந்தை இதைவிடவும் நாகரிகமாக சுருக்கமாகச் சொல்லி விட முடியாது எனும் நிலையில்: “வந்து நின்றது, அந்த டீசல் அநாகரிகம்”.
லஷ்மி சிவகுமார் எழுதுகிறார்: “சவலைக் குதிரையைப் போல உடல் வற்றி வயிறு நீர்ப்பந்தினைப் போல் புடைத்து தோல் நோய் கொண்டது போன்ற உடலில் உள்ள ரோமங்கள் எல்லாம் உதிர்ந்து எதையோ அசைபோட்டபடி வாயிலிருந்து பிசுபிசுத்த திரவம் ஒழுக நகர வீதிகளில் கவனிப்பாரற்றுத் திரியும் ஒற்றைக் குதிரையைப் போல.. கழுதையைப் போல.. அல்லது ஒரு முதியவரைப் போல.. சைக்கிள் ரிக்க்ஷா ஒன்று தேர் கணக்காக அந்நகரப் பரபரப்புக்கு மத்தியில் ஊர்ந்து கொண்டிருக்கிறது” என்று தொடங்குகிறார். குறியீடாக பாழடைந்த ரிக்க்ஷா கதையைத் தொடங்கி ஆனால் ஒரு வித்தைக்காரியின் சாகச மரணம் என்கிற தலைப்புக்கு ஏற்றபடி கதையை நடத்திச் செல்கிறார். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்கிற இந்தக்கதையில், கொடூரமான ஒரு வறுமை ஒரு ரிக்ஷாக்காரர்… மிச்சம் மீதியாக எச்ச சொச்சமாகச் சமூகத்தில் தங்கியிருக்கிற கடைசி சைக்கிள் ரிக்ஷாவாக இது தான் இருக்குமோ என்று சொல்லத் தோன்றுகிற அதைக் குறியீடாக வைத்து நகர்த்திக்கொண்டு போகிற கதை, பின்பு தற்செயலாக வந்து தங்கியிருக்கிற சர்க்கஸ் கம்பெனி விளம்பரங்களைப் பார்த்து அங்கே செல்கிறபோது அருணா மாதவிலக்கு நாட்களில் சர்க்கசில் முக்கியமான ஒரு சாகசத்தை செய்யவேண்டிய அந்தப் பெண்மணியைப் பார்க்கிறார். புதிரை அவிழ்ப்பதைப் போல பேசத்தொடங்கித் தொடர்கிறது கதை. “நீண்டகாலத்திற்கு முன்பு நீ இந்த சர்க்கஸ் கம்பெனியில் இருந்தாயே. இப்போது எனக்குப்பதிலாக இந்த மூன்றுநாட்கள் எப்படியாவது சமாளித்துக்கொடு. மறுபடியும் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்துவிடு. வித்தையைக் காண்பிக்கிறபோதே இறந்துபோன உன் கணவனை நினைத்து வெறுத்துப் போய் சர்க்கஸ் தொழிலை விட்டு விலகியிருந்த நீ எப்படியோ இன்றைக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு அகப்பட்டுக் கொண்டாய். பழச எல்லாம் மறந்துவிடு. சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து மிகச் சாகசமான காட்சியை முடித்துக்கொடு” எனக்கேட்கிறாள். “பார்க்காமல் கலைந்து போய்விடாதீர்கள் இதுதான் உன்னதமான காட்சி” என்ற அறிவிப்பு வருகிறது. கைத்துப்போன, சர்க்கஸில் கணவனை இழந்து, பொருளாதாரத்தில் அடிபட்டு மிதிபட்டு ஒடுக்கப்பட்ட அருணா, நீண்ட காலத்திற்குப் பிறகு எல்லா நினைவுகளோடும் சர்க்கஸ் கம்பெனிக்கு வேறுவழியில்லாமல் பொருளாதார நிர்ப்பந்தம் மறுபடியும் உந்தித்தள்ள சம்மத்கிக்கிறாள். தலையில் பழம் வைக்கப்படுகிறது. வீசப்படுகிறது கத்தி. கதாசிரியர் அவளை விடுதலை அடையச்செய்வதுபோலக் கதையின் கடைசி வரிகளை இப்படி முடிக்கிறார். “ஏகலைவனின் கையிலிருந்து ஓங்கி வீசப்பட்ட கத்தி, அசுர வேகத்தில் அருணாவின் தலையில் இருந்த ஆப்பிளை நோக்கிப் பாய்ந்தது. ஆப்பிளின் மையத்திற்குச் சீறிய கத்தியின் வேகத்தைக் கச்சிதமாக கணித்த அருணா அதன் கூரிய நுனியின் இலக்கை தன் தொண்டைக் குழிக்குள் இறங்கும் கணக்கிற்கு கச்சிதமாக எழும்பினாள்” என்று முடிக்கிறார். மிகப் புதுமையான முறையில் கதை சொல்லலும் கதையை நகர்த்திச் செல்வதில் ஒரு தொய்வில்லாத அதேசமயம் ஒரு லாவகமும் செய்நேர்த்தியும் விறுவிறுப்பான ஒரு ஈர்ப்பான கதையாடலும் இந்தக் கதைகளுக்கு எழுது வினைமை கூடிக்கொண்டே போவதை ஒவ்வொரு கதையிலும் பார்க்கமுடிகிறது. ஒருவிதமான விதந்தோதல் வகையான; பாராட்டு வகையான திறனாய்வு தான் இந்த கதைகளின் மீது என்னால் நிகழ்த்த முடிகிறது. அது எனது விமர்சகப் பலகீனமா அல்லது லக்ஷ்மி சிவக்குமார் எனும் படைப்பாளியின் படைப்புப் பலமா எது என்பதை இந்த தொகுப்பின் கதைகளை வாசித்து அதன் மூலமாக வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
கயிறுதொழிற்சாலை, மருத்துவக்கல்லூரிச்சாலை, வல்லம், சர்க்கரை ஆலை, முந்திரித்தொழிற்சாலை, சோழன் பணிமனை, கரந்தை, இப்படி, கதைகளின் தஞ்சைப் புழங்குவெளியை வெறும் பற்றுறுதிக்காகவோ வீண் ஜம்பமாகவோ சித்திரித்துவிடாமல் அதைச் சர்வதேச எல்லைகளில் இணைத்துப் பார்க்கும் ஆவல்மீதூர அவர் படைத்துக்காட்டும் அக்கதைகளின் பரிச்சயமான புழங்குவெளியிலிருந்துதான் நான் வெளியேறுகிறேன் என்றாலும், கடவுச்சீட்டைத் தொட்டுப்பார்த்தபடி குடிவரவுப் பரிசோதனை முடித்து வெளியேறும் ஏக்கப்பரவசத்தோடு வெளியேறுகிறேன்.
லஷ்மி சிவக்குமாருக்கு மொழியாடலும் எடுத்துரைப்பும் புதுமையாக்கமும் கைவரப் பெற்றிருப்பதைப் பெருமையுடன் பகிர்கிறேன். தமிழ்ப்படைப்புலகு கவனித்து வளர்த்தெடுக்க வேண்டிய படைப்பாளி லஷ்மி சிவக்குமார். ஒரு நாள் அரும்பாடுபட்டு சிறுகதைப் பட்டறைக்காக பல்கலைக்கழக மாணவர் மத்தியில் கொண்டுபோய் உட்கார்த்திவைத்த ஒரு சிறு முயற்சி தவிர, தாமதமாகவாவது இப்படி ஒரு மதிப்புரையை எழுதுவது தவிர, இவருக்கு என்ன செய்துவிட்டோம் எனும் குற்ற உணர்ச்சியிலிருந்து இப்போதைக்குச் சற்றே விடுபடுகிறேன்.
வெளிவரவிருக்கும் ‘வெயிலைப் பருகி நதியைக் கொப்பளித்தல்’ தொகுப்பிலிருந்து