உதயநிதியின் திமுக.!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திமுகவின் இளைஞரணித் தலைவரும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி தமது சுட்டி(ட்விட்டர்) பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது அல்லது உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
நள்ளிரவில் உதயநிதியின் சுட்டியில் வெளியான அந்தப் படத்தில் உதயநிதியின் புகைப்படமும், அதையடுத்து அவர் ஒரு விநாயகர் சிலை ஒன்றைக் கையில் தாங்கியிருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. விநாயகர் சிலை இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தில் அவரது முகம் இடம்பெறவில்லை, என்றாலும் அது உதயநிதிதான்.
உதயநிதி அறியப்பட்ட திரைக்கலைஞராக இருக்கலாம். அதைவிட தமிழகத்தின் இருபெரும் கட்சிகளில் ஒன்றான திமுகவின் பொறுப்பு மிக்க இளைஞரணித் தலைவர் என்பது இன்னும் கூடுதலான அறிமுகம் கொண்டது. ஒரு திரைக்கலைஞராக மட்டும் இருந்திருந்தால் இப்படி சர்ச்சை எழுந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அவரது கட்சி சார்ந்து இந்த விமர்சனம் வைக்கப்படுவதாக எடுத்துக் கொண்டால் உதயநிதி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இது எதிர்த்தரப்பினர் வைக்கும் குற்றசாட்டிற்கான ஏற்பு அல்ல. கட்சியின் கருத்தியலூடாக எழும் நீதியான ஏற்பு.
மதங்களைப் போல, சாதியைப் போல ஒரு கட்சியின் ஒரு குடும்பத்தில் பிறப்பவர்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவராகப் பார்க்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது சூழல், பார்வை, அணுகும் விதம் என்பவற்றைக் கொண்டு அவரவருக்கென்று சில தெரிவுகள் இருக்கலாம். இருக்கும். உதயநிதிக்கு அப்படியானத் தெரிவுகள் இருந்திருக்கலாம். எனினும் அவர் தனது குடும்ப, கட்சி, கொள்கை முன்னெடுப்பின் வழி திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். எனவே திமுகவின் கருத்தியலிலிருந்து அவர் தப்பிச் செல்ல முடியாது. கூடாது.
உதயநிதி செய்தது சரி அல்லது தவறு என அவர் சார்ந்த கட்சியிலிருந்து எழும் கருத்தியல் வழியிலான, தன்னாய்விலிருந்து எழும் விமர்சனங்களே சரியானதாக இருக்க முடியும். எதிர்த்தரப்பினர் வைக்கும் குற்றசாட்டு என்பது ஏறக்குறைய தேசவிரோதி என்பதுபோல இருக்கிறது. அப்படி இருக்கும் என்பதால் அவர் அதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்பதில்லை.
விநாயகர் அல்லது சிவன், விஷ்ணு போன்ற கடவுள்கள் மதங்களுக்கு சொந்தமானதாக இருக்கலாமேயன்றி கட்சிகளுக்குச் சொந்தமானவையாக, உரிமை கொண்டாடுவதாக இருக்க முடியாது. இந்து மதத்திலேயே கூட கடவுள், வழிபாடு அடிப்படையில் பிளவும், பிரிவினைகளும் நீடிக்கவே செய்கின்றன. அப்படி மதங்களை முன்நிறுத்தாமல் மதத்தின் பெயரால் அல்லாமல் ஒரு மதத்தின் அனுமதியோடு ஏகப் பிரதிநிதியாக தேர்தல் அரசியலை செய்யும் கட்சி என்று ஒன்று இருந்தால் தமக்கான கடவுள் ஒன்றை அவர்கள் சொந்தம் கொண்டாடலாம். அவ்வாறு தேர்தலையோ, பாராளுமன்றத்தையோ சமூகத்தையோ சந்திக்கும் துணிவு மதத்தை முன் நிறுத்துவதாகச் சொல்லும், சொல்லிக் கொள்ளும் எந்தக் கட்சிக்கும் கிடையாது.
உதயசூரியன் திமுகவுக்கு தேர்தல் கமிசன் வழங்கிய ஒரு சின்னம். அது தேர்தல் அரசியல் தொடர்பான உரிமை மட்டுமே. அதற்கு வெளியே வானில் உதிக்கும் சூரியனை அது சொந்தம் கொண்டாட முடியாது. இயலாது. இந்து மதக் கடவுள்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தம் என்பது பிறப்பிலிருந்தும், வழிபாட்டிலிருந்தும் வருவதாகக் கொண்டால் கூட, அதை ஒரு அரசியல் கட்சியானது, ஒரு சின்னம் போல சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் அதைத்தான் இப்போது பாஜகவும், அதனைச் சேர்ந்தவர்களும் செய்து கொண்டுள்ளார்கள்.
இங்கிருந்துதான் பாஜகவின் மீதான எல்லா விமர்சனங்களும், அதன் பாசிசமும் தொடங்குவதாக இருக்கிறது. மதத்தில் பிறந்தாலே தனது கட்சியில் பிறந்ததாக அது சொந்ததம் கொண்டாடுகிறது. ஒருவர் இந்து மதத்தில் இருப்பதனாலேயே, அவர் பாஜக அல்லது பாரிவாரங்களில் ஒன்றை சேர்ந்தவராக இருக்க வேண்டும், இருந்தாக வேண்டும் என்கிறது அதன் பாசிச அரசியல்.
இந்து மதம் என்பது ஒரு கலாச்சாரம், ஒரு வாழ்வியல் நெறி என்கிறது உச்சநீதி மன்றம். எங்கேயும் அது ஒரு அரசியல், அது ஒரு அரசியல் கட்சி என்று சொல்லவில்லை.
உதயநிதி வைத்திருந்தது பாசகவின் பிள்ளையார்தான் என்று பாசகவினர் சொல்லவில்லை. எனினும் அது பாசகவின் பிள்ளையாராக இருக்குமோ என்று எழுந்த விமர்சனங்களின் பின்னணியில் உதயநிதி பதட்டமடைந்திருக்கிறார்.
அதனால்தான் அவர் தனது தாயின் பிள்ளையார் என்கிறார். தனது மகளின் விருப்பத்தின் பெயரில் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்கிறார்.
திமுக என்பது மதம் நீக்கப்பெற்ற கட்சியல்ல. எனவே மதத்தில் உள்ளோர் யாதொருவரும் திமுகவில் இருக்கவே செய்வர். மதம் நீக்கப்பெற்றவர்கள் அல்லது மதம் நீங்கியவர்கள் திமுகவில் இருப்பதாகத் தெரியவில்லை. பண்பாட்டுக்கூறுகளையே தமது மதக்கூறுகளாக, மத அரசியல் கூறுகளாகக் கருதும் பாசக, திமுகவில் இந்து பெயர்களோடு இருப்பவர்கள் இந்து மதத்தில் இருந்துகொண்டே, திமுகவிலும் இருப்பதனால் அவர்கள் எல்லோரும் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் என பாசக உரிமை கொண்டாட முடியாது. உதயநிதி ஒரு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தவில்லை.
ஒரு கட்சியின் அரசியலைப் பயன்படுத்துகிறாரா என்று வேண்டுமானால் கேட்கலாம்.
திமுகவில் இருக்கும் இந்துக்களைத் திருப்திப்படுத்த அல்லது திமுகவிற்கு வெளியே இருக்கும் இந்துக்களை திமுகவிற்கு அழைக்க அல்லது திமுகவிலிருந்து வெளியேற இருக்கும் இந்துக்களைத் தடுத்து நிறுத்த உதயநிதி இதைச் செய்தாரா என்று கேட்டுக் கொள்வோமானால் இப்படி செய்துதான் தொண்டர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், அல்லது திரட்ட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் திமுகவுக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது.
உயதநிதி தந்திருக்கும் விளக்கம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் கூட, தனக்கும், தனது மனைவிக்கும் கடவுள்நம்பிக்கை இல்லை, தனது குழந்தையின் ஆசையையே தான் நிறைவேற்றியதாக உதயநிதி கூறிக் கொண்டுள்ளார். ஒரு குடும்ப உறுப்பினராக, சிறு குழந்தையின் தந்தையாக அதை நிறைவேற்றுவது நீதியானதாக இருக்கக்கூடும். குழந்தை, யானை ஏற வேண்டும் என்று சொன்னால் தன் மீது அவர் ஏற்றி செல்வதிலும் தவறில்லை. அதை அவர் ட்வீட்டட்டும்.
.ஆனால் ஒரு மரபான கட்சியின் கருத்தியல் தொடர்பான நினைவு அவருக்கு இருத்தல் முக்கியமானதாகும். பிள்ளையார் என்பது இப்போது கடவுளாக இருக்கவில்லை. பிள்ளையார் என்பது ஒரு அரசியல். எனவே பிள்ளையாரை வைத்திருத்தல், வழிபடுதல் என்பனவும் அரசியலே. அப்படியே பார்க்கப்படுகிறது. அப்படியே பொருள் படுகிறது.
திராவிடத்தாக்கம் காரணமாக தனது படஙகளில் எம்.ஜி.ஆர் பொட்டு வைத்துக் கொள்ளாமல் நடித்திருந்தார். பின்னாளில் அவர் திராவிடக் கட்சியொன்றைக் கட்டி அதன் தலைவராக ஆனபின்னர், மூகாம்பிகைக் கோவிலுக்குச் சென்றார், பொட்டு வைத்துக் கொண்டார். சினிமாவில் கொள்கையைக் கடைபிடித்தவருக்கு அதற்கு வெளியே அதைக் காப்பாற்ற இயலாது போனது என்பது அவரது கருத்தியல் வறட்சி மட்டுமல்ல, தமிழக அரசியல் அவலமும் கூட.
சினிமாவில் பிள்ளையாரை வைத்துக் கொண்டு உதயநிதி பாடலாம், ஆடலாம். அவரது தாத்தாவைப் போல “கோவில் வேண்டாம் என சொல்லவில்லை. அது கொள்ளையர் கூடாரமாகிவிடக்கூடாது” என்று கூட வசனம் பேசலாம். ஆனால் அதற்கு வெளியேயான அரசியல் இன்றைக்கு பாரதூரமான இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
பார்ப்பன அரசியலில் மத மற்றும் கடவுள் அரசியல் வகித்த அதிகாரத்தின் பங்கை உடைக்கவும், வெளிபடுத்தவும் பார்ப்பனர்கள் பயன்படுத்திய அதேக் குறியீட்டை, பெரியார் பயன்படுத்த வேண்டியவரானார். எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ அதை எடுப்பதே சரியானது என்று அவர் நினைத்திருக்கக்கூடும்.
பிள்ளையார் பார்ப்பனியத்தின், பார்ப்பனிய அதிகாரத்தின் குறியீடாக அவர் அதை பிரதியீடு செய்தார். பிள்ளையார் கடவுளாக இருக்கலாம், அதை அரசியலுக்கு கொண்டு வருபவர்கள் பின்னணியில் அதிகாரம் இருக்கிறது. பார்ப்பனியம் இருக்கிறது. எனவே பிள்ளையாரை அரசியலிருந்து அகற்றுவதன் வழி பார்ப்பனியத்தையும், அதிகாரத்தையும் அகற்ற முடியும் என்று பெரியார் நம்பினார். அப்படியே அவர் காலம் முழுவதும் செயற்பட்டார்.
கடவுளுக்கும், மதத்துக்கும் பல பொருள் இருக்கலாம் ஆன்மிக வழியில். ஆனால் அரசியலில் அதற்கு ஒரு பொருள் மட்டுமே இருந்தது. அது அதிகாரம். பார்ப்பனர்களிடமும், அதிகாரவர்க்கத்தினரிடமும் பிள்ளையார் அதிகாரமாகவே நிறுவப்பட்டிருக்கிறார். எனவேதான் பெரியார் பிள்ளையாரை உடைப்பதை முதன்மைப்படுத்துகிறார். பிள்ளையாரை உடைப்பதென்பது அதிகாரத்தை, பார்ப்பனியத்தை உடைப்பது. குறியீட்டுக்கு எதிர்க் குறியீட்டை முதன்மைப்படுத்துகிறார்.
இந்தக் குறியீட்டின் தீவிர அரசியலை பெரியார் சமூக மட்டத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்க பெரியாரிலிருந்து பிரிந்த திமுக தேர்தல் அரசியலை ஏற்றதன் காரணமாக அது அதிகாரத்துடன் உடன்படுவதன் காரணமாக, பார்ப்பனியத்துடனும் உடன்பட நேர்கிறது. சமூக அரசியலிலும், தேர்தல் அரசியலிலும் ஒருவித மதத் தன்மையை ஏற்க வேண்டியிருந்தமையால் அவர்கள் ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்றார்கள். இந்த ஏற்பு தேர்தல் அரசியலில் சகல மதங்களில் உள்ளவர்களையும் அரவணைத்துப் போகவேண்டியிருந்தமையால் நேர்ந்த அவலம். சமூகத்தை மதப் பார்வையிலிருந்து அணுகாமல், வர்க்கப்பார்வையிலிருந்து அணுகியிருந்தாலோ இது நேர்ந்திருக்காது. மதத்தை ஏற்பதால்தான் கடவுள் வருகிறார். தேவன் வருகிறான். பெரியார் வழியில் வந்த அண்ணா தேர்தல் அரசியலில் இப்படிச் சொல்ல வேண்டியிருந்தது.
சமூகத்திலும், தேர்தல் அரசியலிலும் நிலவிய, நிலவிக் கொண்டிருந்த மத, கடவுள் அரசியலின் தாக்கமே திமுக வை பெரியாரிலிருந்து விலகக் கோருகிறது. அண்ணாவின் அரசியல் மிகத் தெளிவான நிலவியல் சார்ந்த, மதங்களை உள்ளடக்கிய, மொழிக்கு முக்கியத்துவமுடைய, முதன்மைப்படுத்திய ஓர் அரசியலாக இருந்தது. அவர் அன்றைக்கு எதிர் கொண்ட அரசியல் அப்படியானது. எனவே அண்ணாவின் தெரிவாயுதமும் அப்படியானதாக இருந்தது. பார்ப்பனர்களை ஏற்றுக் கொண்டு பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகச் சொன்னது அது.
சீன – இந்தியப் போர் நிலவியல் உரிமை கோரும் ஒன்றாக இருந்தது. எனவே நிலவியல் தேசமொன்றை எழுப்பும் தேவையிலிருந்த அண்ணா அதை அப்படியே, அதே காரணங்களுடன் ஒத்திவைப்பதாகச்சொன்னார். நிலவியல் அரசியல் செய்து கொண்டிருந்த காங்கிரசு அன்றைக்கு அண்ணாவைப் பிரிவினைவாதி என்றது. பிரிவினை என்பது நிலவியல் தொடர்பில் வருகிறது.
கருணாநிதி கால திமுக அல்லது கருணாநிதியின் திமுக அண்ணாவையும், பெரியாரையும் இணைத்து இணங்கிப் போக வேண்டிய தேவையைக் கொண்டிருந்தது. இது தொடக்ககால திமுக. பெரியார் உயிரோடு இருந்தார். பெரியார் கொள்கைள் உயிரோடு இருந்தன. பெரியாரியவாதிகள், திமுக தமது கருத்தியல் நீட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனவே கருணாநிதி நிலவியல் வழியிலும், கருத்தியல் வழியிலும் தமது ஆட்சியை நடத்த வேண்டியவராக இருந்தார். முதற்கட்டக் காலத்தில்.
அண்ணா சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கி பெரியாரை நிறைவுப்படுத்தியது போல இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை, அனைவரும் அர்ச்சகராகும் உரிமை என்பன சமூகத்திலும், அரசியலிலும் அண்ணா, பெரியார் இருவருக்காக கருணாநிதி பெரும் போராட்டத்திற்கிடையே கொண்டுவந்த சட்டங்களாகும். திமுக அவர்களை மறக்கவில்லை என்பதற்காகக் கொண்டு வந்ததாகும்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் விலகல், அவரது கொள்கையற்ற கொள்கையான அண்ணாயிசம் என்பன முற்றிலும் பிறிதொன்றாக, அரைப்பார்ப்பனியமாக மலர்ந்து கொண்டிருந்தது. தேர்தல் அரசியலை முன்னிறுத்தி காங்கிரசுடன் இணைந்தும் முரண்பட்டும் சென்று கொண்டிருந்தது.
திமுக காங்கிரசையும், அதிமுக வையும் எதிர்க்கொள்ள கருத்தியல் சார்ந்து பெரிதாக முயற்சிக்க வேண்டியிருக்கவில்லை என்பதால் பெரும்பாலும் ஆளுமை சார்ந்தாகவே 90 கள் வரையிலும் அதன் அரசியல் இருந்தது. அதாவது கருணாநிதி, எம்.ஜிஆர் என்ற பிம்பக்கட்டமைப்பு அரசியல். எம்.ஜி.ஆருக்கு திரைக்கு வெளியே அரசியலில் ஒரு நம்பியார் கிடைத்திருந்தார். அதிமுகவினர் எல்லோரும் பச்சைக் குத்திக்கொள்ளவும், கையில் கத்தி வைத்துக் கொள்ளவும் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜிஆர் கோரியதானது கருணாநிதியைக் கருத்தியல் வழியில் எதிர்கொண்ட அவரது விசேடபாணியாகும். சினிமா பாணியாகும். கருணாநிதியும் இதற்கான அரசியலை செய்ய வேண்டியவராக இருந்தார். அன்றைக்கு உலக அரங்கில் பெரும் சிக்கலாக எழுந்த ஈழத்தமிழர் உரிமைப் போரானது இந்த இரண்டு துருவங்களுக்கிடையே சிக்கிச் சீரழிந்தது தனிக் கதை.
90களில் அத்வானியின் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு என்பன மத அரசியலை முன்னுக்கு கொண்டு வருகிறது. மத அரசியல் முன்னெடுப்பு அதன் எதிரிகளை எல்லாம் நினைவுபடுத்திக் கொள்ளவும், அழித்தொழிக்கவுமான ஏற்பாடாக மாறியிருந்தது. இந்திய விடுதலை அரசியலுடன் கோயிலுக்குள் முடங்கியிருந்த பிள்ளையாரை வீதிக்கு இழுத்து வருகின்றனர். தேர்தல் அரசியலில் பிள்ளையார் ஓர் தவிர்க்க முடியாத ஆளுமையாக முன் நிறுத்தப்படுகிறார்.
திலகரின் பிள்ளையார், இந்துக்களின் பங்கை விடுதலைப் போரில் கோருவதாக இருக்க பாசகவின் பிள்ளையார், அதையே தேர்தல் அரசியலில் கோருவதாக இருந்தது. பிள்ளையாருக்கு இப்போது பழைய கோபமெல்லாம் மீளத் திரும்புகிறது. பிள்ளையாரின் கோபம் என்பது பிள்ளையாரின் கோபம் மட்டுமல்ல. அது பார்ப்பன அதிகார நடுவத்தினரின் கோபம். பாசகவின் பிளவரசியல் பெரியார் போன்ற பழைய எதிரிகளைக் கோரி, தேடி அழிக்க, உடைக்க முயல்கிறது.
பெரியார், பிள்ளையாரை உடைக்கப்போக இப்போது பிள்ளையார், பெரியார் சிலைகளை உடைக்கத் தொடங்கினார்.
கருணாநிதி இப்போது மத அரசியல் கட்டத்தைக் கடக்க வேண்டியவராக இருந்தார். அரசியல் அரங்கில் பெரியார், அண்ணா இருவரும் இல்லை. காங்கிரசின் நில அரசியல் போல பாசகவின் மத அரசியலை கருணாநிதி எதிர்கொள்ள வேண்டியவராக இருந்தார். இந்திராகாங்கிரசு காலத்தில் மொழியை முன்நிறுத்தி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்த கருணாநிதிக்கு இப்போது அவற்றையெல்லாம்விட மத அரசியலை எதிர் கொள்வது சவாலானதாகவும், சிக்கலானதாகவும் மாறியிருந்தது. 90க்குப் பிந்தய உலகமயம், திமுகவின் போக்கிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருக்கவே செய்தது. இதன் பின்னணியில்தான் பார்ப்பனிய ஊடகம் தொடங்கி, உளவுத்துறை வரையிலுமாக அவர் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்தார். எதிர் கொண்டிருந்தார்.
காங்கிரசு காலத்தில் கருணாநிதியின் ஆட்சி இந்திய நிலப்பரப்புக்கு எதிரானதாகப் பார்க்கப்பட்டது போல, பாசக காலத்தில் மத எதிரியாக கருணாநிதியைச் சித்தரிக்கும் அரசியல் முன்னுக்கு வந்தது. வருகிறது. கருணாநிதியின் நாக்கிற்கு விலை பேசப்பட்டது. வட இந்தியாவின் பரிவார சாமியார் கருணாநிதியின் நாக்கை அறுப்பேன் என்றார். வழமை போல பாசகவின் அரசியல் கலாசாரம், கலாசார அரசியல் கருணாநிதியை சூத்திரனாக்கியது. பிறகு சூத்திரனும் இந்துக்களின் பகுதிதான் என்றளவில் அவருடன் அரசியல் பேரம் பேசியது. காங்கிரசுடன் உறவுக்கு கைகொடுத்தது போல, பாசகவுடனும் கைகொடுத்தது திமுக.
பாபர் மசூதி இடிப்பின் ஒவ்வொரு செங்கற்களையும் பாசக ஓட்டாக மாற்றிக் கொண்டது. மேலும் பாசகவின் மிதவாதத் தலைவராக வாஜ்பயி முன் நிறுத்தப்பட்டு அதற்கான பிரசாரம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது. ஒளிரும் இந்தியாவில் கண்கள் கூசி நின்ற உதயசூரியனுக்கு இந்திய, தமிழக அரசியலில் ஔி மங்கி, மயங்கி மறையும் வேளை வந்துவிட்டது போல ஓர் தோற்றம் இருந்தது. இதனாலெல்லாம் கருணாநிதி பாசகவுடன் கூட்டணி வைக்கவில்லை மெய்யாகவே வாஜ்பேயியுடன்தான் என்பது போல நீதிப்படுத்திக் கொண்டார். இருவருமே கவிஞர்கள், அரசியல்வாதிகள் என்பதால் இலக்கியத்திற்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் ஒளிர்ந்தது போல இருந்தது.
நேர் அரசியல், கருத்தியல் எதிரியான பாசகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது திமுகவின் வெற்றியாக இருக்க முடியாது. அது பாசகவின் வெற்றி. திமுகவில் பார்ப்பனியக் கூறுகள் இருந்தால் அவற்றின் வெற்றி.
புலிகளை ஆதரித்து ராஜிவ்காந்தியைக் கொன்றவர் என்ற பெயரை காங்கிரசுடனான கூட்டணியின் வழியாக இறுதிபோரில் மவுனம் சாதித்து அதைத் துடைக்க முயன்றார். இப்போது பாசகவின் இந்துத்துவ எதிரி என்ற அழியா கரையைப் போக்க வேண்டியிருந்தது. நடுவில் வழக்கமாக அதிமுக, திமுக என்ற தமிழக ஆளும் கட்சிகள், நடுவணரசுடன் இணைந்து போய் தமிழகத்துக்கான தேவைகளை நிறைவு செய்வதாக சொல்லிக் கொள்ளும் அரசியலின் தொடர்ச்சி என்று பேசப்பட்டது. இது திமுக, கருணாநிதி என்ற அளவில் பார்க்க முடியாது. அவர்களது அரசியல் எதிரிகள் யார்? பார்ப்பனியத்தின் வலிமை என்ன என்பவற்றையெல்லாம் சேர்த்துதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்றைக்கு பார்ப்பனியம் என்பதும், இந்துத்துவம் என்பதும் தனியாக இருக்கவில்லை. அரைபார்ப்பனியமான காங்கிரசை, பாசக நேரடியாக வீழ்த்த வேண்டும் என்பதில்லை. காங்கிரசில் பெருந்தொற்றைப் போல இருக்கும் பார்ப்பனிய இந்துத்துவ அரசியல் கூறுகளே அதை செய்துவிடக்கூடும். ஏனெனில் மத அரசியல் குறித்து காங்கிரசு அலட்டிக்கொள்வதில்லை. பாபர் மசூதி இடிப்பே காங்கிரசு ஆட்சியில்தாம் நடந்தன. இன்றைக்கு இலங்கையில் மதவாதம், மத தேசியம் என்ற அரசியல், ஆளும் கட்சி எதிர்கட்சி என்று இரண்டாகத் தோற்றமளிக்கும் ஒற்றைக் கருத்தியலை, அரசியலை ஆட்சியை நடத்துவது போல, கொண்டிருப்பது போல, பாசக, காங்கிரசை எதிர்கட்சியாக வைத்துக் கொண்டு மாநிலக் கட்சிகளையும் தனது இந்துத்துவ செல்வாக்கினுள் செரித்துக் கொண்டு ஒற்றைக் கொள்கை பல கட்சிகள் என்றளவில் அது மததேசியத்தைக் கட்டமைத்துக் கொள்ளப்போகிறது. கருத்தியல் வழியில் தானே எதிர்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்கும் மததேசிய அரசியல்.
இந்துத்துவம் என்றாலே அது பாசகவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இந்துத்துவம் பாசகவாக இருக்கிறது. எனவேதான் தற்போது காங்கிரசைப் பிளப்பதிலும், திமுகவைக் குழப்புவதிலும் அது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது.
கொள்கை, கோட்பாடு, சமரசமின்மை, எதிரியைத் தெளிவாக மக்களிடம் அடையாளம் காட்டுவதில் ஏற்பட்ட சுணக்கமே இன்றைக்கு திமுகவின் முன் நிற்கும் மிகப்பெரிய சவால்களாகும். காங்கிரசு செய்தால் நாட்டுக்காக, திமுக செய்தால் பிரிவினைவாதம். பாசக கொள்ளையடித்தால் தேசாபிமானம், திமுக அதற்கு இசைந்து போனால் இந்துத்துவ எதிரி இப்படியான திட்டமிட்ட கட்டமைப்பும், பிரசாரமும் திமுகவிற்கு தாமே எதிரியாகி நிற்கின்றன. இதில் திமுகவிற்கு பங்கில்லையா என்று பேசுவதைவிட இந்திய தமிழக அரசியலில், சமூக நீதிக்களத்தில் இடதுசாரி, முற்போக்கு களப்போராளிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துதான் பேச வேண்டியிருக்கும்.
திமுக கொள்கையில் சமரசமானால் அது கருத்தியலிலும், தேர்தல் அரசியலிலும் தோற்கடிக்க செய்ய வேண்டும் அல்லது அதை திருத்துவதற்கு முயல வேண்டும். இதற்கான அரசியல், சமூக வலிமை யாருக்கேனும், எந்த முற்போக்குச் சக்திகளுக்கேனும், தலைமைகளுக்கேனும் இருந்தததா, இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். திமுகவின் பின்னடைவில் இவர்களது பங்கையும், மவுனத்தையும் சேர்த்தேப் பேசவேண்டும்.
ராஜிவ் கொலையில் திமுகவின் கை இருந்தது என்று நம்பியவர்கள், காங்கிரசில் மட்டும்தான் இருந்தார்களா என்ன?. திமுக வை காங்கிரசு மட்டும்தான் தோற்கடித்ததா என்ன?. பார்ப்பனிய அதிகார அரசியலில் ராஜிவ்காந்தியின் பிணத்தின் மீது நின்று பல காய்களை அடித்து வீழ்த்தியவர்களின் அரசியல் சதிக்கு முற்போக்குகளின் மவுனம் ஒரு காரணமாகவே இருக்க முடியாதா?.
திமுகவை வீழ்த்துவது வெற்று அரசியலுடன் போய்விடாது. அது நிலையான சமூக நீதி அரசியலையும் தோண்டிப் புதைத்துவிடும் என்பதை அதன் அரசியல் எதிரிகள் அளவுக்கு புரிந்து வைத்திருப்பவர்கள் வேறு யாதொருவரும் இருக்க முடியாது. திமுகவின் வெற்றியில் தம் பங்கு பற்றிப் பேசுபவர்கள் அதன் பின்னடைவிலும் தமது பங்கை உறுதிபடுத்தியே ஆகவேண்டும். ஆகவேண்டியிருக்கும்.
ஈழச் சிக்கலில், இறுதிப் போரில் திமுகவின் தோல்வி, துரோகம் என்று பேசுமளவிற்கு ஈழ அரசியலில் பார்ப்பனியத்தின், இந்துத்துவ அரசியலின் வெற்றி, வெறி என்று யாதொருவருமே பேசுவதில்லை. காங்கிரசைக் குற்றம் சாட்டியவர்கள் கூட, பார்ப்பனியம், இந்துத்துவப் பாசிச அரசியல்தான் இது என்பதை அடையாளப்படுத்தவில்லை. நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தில் கோடரி போட்டுக் கொண்டிருப்பது யார்? திமுகவின் பின்னடைவு தமது தன்மரியாதையின், சமூக நீதியின் பின்னடைவு என்பதை புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
கடவுள் என்றாலே பார்ப்பனியம் தொடர்பானது, அது இந்துத்துவம் தொடர்பானது, பாசக தொடர்பானது என்ற உளவியல் கட்டமைப்பு அரசியலே திமுகவை அல்லது அவர்களது குடும்பங்களை இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள், ஊருக்கு ஒன்றும் தமக்கொன்றுமாகச் செயற்படுபவர்களாக அடையாளப்படுத்துகிறது. மொழித் தொடர்பிலும் அப்படியான கருத்தே திமுகவிற்கு எதிரானவர்களால் முன்வைக்கப்படுகிறது. ஒருவர் சாதியில் இருப்பதால் அவர் சாதித்துவவாதி என்று சொல்வது போல கருணாநிதியின் குடும்பத்தினர் இந்துக் குடும்பத்தில் பிறந்திருப்பதே பிறப்பு அடிப்படையில் பார்க்கப்போனால் இந்துக்கள் எனவே அவர்கள் இத்துத்துவாதிகள் என்பதை மறைக்க வேண்டியதில்லை என்பது போன்ற கூற்றுகள் அரசியல் சர்ச்சைகளாக்கப்படுகின்றன.
கருணாநிதியின் குடும்பத்தினர் இந்துத்துவ அரசியலுடன், பார்ப்பனிய அதிகாரத்துடன், இணைந்து போகிறார்களா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறதே தவிர அவர்கள் அதிகாரத்திற்கு தொடர்பற்ற குலதெய்வ கோவில்களில் வழிபாடு செய்வதை, பெருந்தெய்வ இந்துத்துவ அரசியலுடன் தொடர்புப்படுத்துவதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்துத்துவ அரசியல் மேலே வந்திருக்கும் நிலையில் உதயநிதியின் செயல் இன்றைக்கு பெரிதுபடுத்தப்படவே செய்யும். உதயநிதி கொள்கை சார்ந்த கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார், குழந்தைகள் அணியில் அல்ல. 2014 ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் விநாயகர் சதூர்த்தி வாழ்த்தொன்றை வெளியிட்டதாக எழுந்த சர்ச்சையின் போது, அதை அவர் மறுத்தார். கருணாநி பெரிதும் வருத்தமடைந்தார். பின்னர் அந்த வாழ்த்து அவரது முகநூல் பக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டிருந்தது.
அதன் போது, திமுகவில் இருப்பவர்களில் முக்கால்வாசிபேர் இந்துக்கள் என்று ஸ்டாலின் சொன்னது அத்தனை முதிர்ச்சியான வார்த்தைகள் அல்ல. கருணாநிதியின் மஞ்சள் துண்டுபோல அது துருத்திக் கொண்டுத் தெரியவே செய்தது. திமுகவில் இருப்பவர்கள் இந்துத்துவ அல்லது பார்ப்பனிய அடையளத்துடன் கூடிய இந்துக்கள் அல்ல எனறோ அவர்கள் தமிழர்கள் என்றோ ஸ்டாலின் அன்றைக்குச் சொல்லியிருக்க வேண்டும். சொல்ல வேண்டும் அப்படி சொல்லாமல் போனதன் உபவிளைவாகவே உதயநிதி இருக்கிறார். இருப்பார்.
இப்போது உதயநிதியின் முறை போலும். உதயநிதி போன்ற இளைஞர்களிடையே காணப்படும் கொள்கை வறட்சியே திமுகவின் மிகப்பெரிய பலவீனமாக மாறியிருக்கிறது. அதன் நீட்சியே இப்படியான சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்துவிடுவதாகும்.
திமுக தன்னைப் பெரிதும் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இடதுசாரி உள்ளிட்ட ஏனைய முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் தொடர்புகளை அது பேணிக்கொண்டால் ஒழிய அதற்கு எதிர்காலம் இல்லை. ஆனால் தேவை இருக்கிறது என்பதை அது ஒப்புக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். எந்த சமூகநீதிக் கொள்கைகளுடன் அது வளர்ந்து வந்ததோ அதற்கான எதிர்த் திசையில் செல்வதை அவற்றின் ஊடகங்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. ஆன்மிகத்திற்கும், நாத்திகத்திற்கும், பகுத்தறிவுக்குமான இடைவெளியைப் புரிந்து கொள்ளாமல் முற்றிலும் மூடநம்பிக்கை சார்ந்தவற்றை கொண்டு சேர்ப்பதன் வழி கட்சிக்குக்குள்ளும், அதற்கு வெளியேயும் இருக்கும் இளைஞர்களை பகுத்தறிவுக்கு எதிராக நிறுத்துகிறீர்கள். அது உங்களுக்கு எதிராகவும் நிற்கும். நிற்கிறது என்பதை அறியத்தான் வேண்டும்..
திமுக வின் கடந்தகாலப் பகுத்தறிவுக் கொள்கை வழி உதயநிதி வரவில்லை. கருணாநிதியின் வழி அவர் வரவில்லை. ஊடகங்கள் வழிதான் வந்து சேர்ந்திருக்கிறார். உங்கள் ஊடகங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படித்தான் உதயநிதியும் இருப்பார். இருக்கிறார். எதிர்காலத்தில் திமுக இளைஞரணியும், திமுகவும் இப்படித்தான் இருக்கக்கூடுமா என்பதை உயதநிதிகள்தாம் இனி யோசிக்க வேண்டும். முடிவு செய்ய வேண்டும்.