இயற்கைச் சீற்றங்களும் பேரிடர்களும்! தீர்வுதான் என்ன?
-குமரன் தாஸ்
நவீன உற்பத்தி முறை, நவீனக் கண்டு பிடிப்புகள், நவீன தொழிற் சாலைகள், எந்திர வாகனங்கள், கட்டிடங்கள் இவைதான் இயற்கைப் பேரிடர்களுக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் முதன்மையான காரணங்கள் என்று சொல்லப்படுகின்றன.
அது உண்மையா?
இயற்கைப் பேரிடர்கள் என்றால் என்ன?
கொரானா போன்ற கொள்ளை நோய்கள், சுனாமி, மழை வெள்ளம் புயல், நிலநடுக்கம், காட்டுத்தீ, எரிமலைச் சீற்றம் நிலச்சரிவு போன்றவை. இவையெல்லாம் எப்போதிருந்து துவங்குகின்றன?
பூமி தோன்றியதிலிருந்து!
அப்படியென்றால் ஏன் இப்போது மட்டும் கூச்சல் அதிகமாக உள்ளது? ஏனென்றால் இப்போது மனிதன் முன்னேறி விட்டான், வசதிகளை அதிகம் பெருக்கிக் கொண்டான், அதனால் பாதிப்பு, சேதம் அதிகமாக ஏற்படுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளும் முன்னேறி உள்ளன. ஆனால் மீடியாக்கள் வளர்ந்துள்ளன. அதனால் பாதிப்புகள் முழுமையாக வெளித் தெரிகின்றன.
இதற்கெல்லாம் தீர்வாக இயற்கை சார் வாழ்க்கை முறை முன் வைக்கப்படுகிறதே? இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம், இயற்கை உரம், பாரம்பரிய கைவினைத் தொழில்கள், கால் நடை வளர்ப்பு போன்றவை தீர்வாக முன் வைக்கப்படுகிறதே? மனிதகுல வரலாற்றில் இயற்கை சார் வாழ்க்கை எங்கிருந்து துவங்குகிறது?
மனிதன் தனது தேவைகளுக்கு உற்பத்தியில் ஈடுபடத் துவங்கிய காலத்திற்கு முன்பு வரை இயற்கை சார் வாழ்க்கை தான். அதாவது மிருகங்களைப் போல இயற்கையில் கிடைத்தவற்றை அப்படியே பயன்படுத்திக் கொண்டதுவரை அது இயற்கை சார் வாழ்க்கை தான்.
ஆனால் தனது தேவைகளுக்காக உற்பத்தியில் / விவசாயத்தில் கால் நடை வளர்ப்பில் ஈடுபடத் துவங்கியது இயற்கையல்ல! அது செயற்கை!
ஆடுமாடுகளோ நாயோ பறவைகளோ மனிதன் வளர்ப்பதற்காக உருவாகவில்லை! அதே போல கழுதை குதிரைகள் மனிதனைச் சுமப்பதற்காக வந்து பிறக்கவுமில்லை! எருதுகள் உழுவதற்கும் ஜல்லிக் கட்டிற்கும் உருவானதில்லை! இந்தப் பயன்பாடுகளனைத்துமே மனிதன் கண்டுபிடித்த செயற்கை தான்! வன்முறைதான்! இயற்கையில் உணவுச் சங்கிலி ஒன்று இருந்தது. அதில் மனிதனும் ஓர் கண்ணி. ஒன்றை ஒன்று அடித்து தின்று உயிர் வாழும் சங்கிலி!
இதில் எந்த ஒரு உயிரும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை! இந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மனிதன் வெளியேறி பிறவற்றை தான் மட்டும் அடித்துத் தின்றான் அதே சமயம் தன்னைப் பிற உயிரினங்கள் அடித்து தின்னமுடியாதவாறு (ஆயுதங்கள், வீடு மூலமாக) இயற்கைக்கு விரோதமாகப் பாதுகாத்தும் கொண்டான்.
ஆக மனிதக் குரங்கிலிருந்து மனிதனாகப் பரிணமித்ததே இயற்கையை எதிர்த்த செயல்தான்! அத்தோடு நிற்கவில்லை! இயற்கைக்கு விரோதமாக பூமியைச் சமப்படுத்தி, காட்டை அழித்து விவசாய நிலமாக்கினான். நிலத்தைக்கீறி பயிரிட்டான், விலங்குகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக வேலி கட்டினான், வீடு (குடிசை) கட்டினான், சில விலங்குகளை வன்முறையாக அடிமைப்படுத்தி தனது சுக போக வாழ்க்கைக்குப் பயன்படுத்தினான்.
நீரை அதன் போக்கிலிருந்து கால்வாய் வெட்டி திசை திருப்பி தனது பயிர்களுக்கு நீர் பாய்ச்சினான். பள்ளங்கள் தோண்டி நீரைத் தேக்கி வைத்தான், இயற்கைக்கு விரோதமாகக் குழி தோண்டி நீரைக் கண்டுபிடித்துப் பயன் படுத்தினான். இயற்கைக்கு விரோதமாக நெருப்பைப் பயன்படுத்தி உணவு சமைத்துச் சாப்பிட்டான், இயற்கைக்கு விரோதமாக நிர்வாணத்தை மறைத்து ஆடை உடுத்தினான்,
இயற்கையான பாலுறவை நாகரீகம் என்ற பெயரால் செயற்கையாக கட்டுப் படுத்தினான், வன்முறையாக வரையறை செய்தான். அதையொட்டி யுத்தம், கொலைகள் புரிவதை தர்மமாக்கினான்.
இப்படி மனித குல நாகரீகம் என்பதே செயற்கையானதும் வன்முறை நிறைந்ததுமாகும். அது ஒரு முடிவற்ற நீண்ட பயணம்! அது மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய காலத்திலிருந்து துவங்கியது! இந்தப் பயணத்தை யாராலும் இடையில் தடுத்து நிறுத்திவிட முடியாது! ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் அதனைத் தங்களது காலத்தோடு நிறுத்திவிட முயன்று தோற்றுப் போகின்றனர்.
இன்னும் சிலரோ தங்களுக்கு விருப்பமான பழைய பொற்காலத்திற்கு மீண்டும் திரும்பிவிட வேண்டும் என்ற ஆசையில் இந்தப் பயணத்தைக் கடந்த காலம் நோக்கித் திருப்பி விடவும் துடிக்கின்றனர். ஆனால் இயற்கையை எதிர்த்துத் துவங்கிய மனித குலத்தின் இந்தப் போராட்டம், பயணம் இயற்கையின் ஓர் இயங்கியல் விதிக்குட்பட்டே முன்னோக்கி நகர்ந்து செல்கிறது!
அதை தடுத்து நிறுத்த நினைப்பதோ, மீண்டும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பின்னோக்கி கொண்டு செல்ல நினைப்பதோ செயற்கையானதும் இயற்கை விதிகளுக்கு முரணானதுமாகும்.
@
சரி இப்போது இயற்கை ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் திரும்பிப் போக விரும்பும் அந்தக் காலகட்டம் தான் எது?
இயற்கைக்கு எதிராக மனிதன் பயன்படுத்திய அனைத்துமே கருவிகள் தான் என்றாலும் அந்தக் கருவிகள் காலம் தோறும் வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டும் வந்திருக்கின்றன. (எடுத்துக்காட்டாக கல், கம்பு, கோடரி, கத்தி, ரம்பம், எலக்ட்ரிக் கட்டர்….) என்றாலும் இயற்கை ஆர்வலர்கள் கத்தியோடு, மரக் கலப்பையோடு, மண் வெட்டியோடு, கிணறு & வாளியோடு, மாட்டு வண்டியோடு, மண் பானையோடு, குடிசை வீட்டோடு வளர்ச்சி நின்று போகவேண்டும் என்று விரும்பு கின்றனர்.
எந்திரங்கள் வேண்டாம் என்கின்றனர். இயற்கை மாசுபடுகிறது என்கின்றனர். இதனை வேறு விதமாகச் சொல்வதென்றால் நிலவுடமைக்கால உற்பத்தி முறையோடு வரலாற்றுப் பயணத்தை நிறுத்திவிட வேண்டும் என்கின்றனர்.
இதனை ஏற்கனவே இங்கு காந்தியடிகளும் கூட முன்வைத்துள்ளார். கிராமப் பொருளாதாரம் (அகில இந்திய கிராம கைத்தொழிற் சங்கம்) என்ற பெயரில். ஆனால் அவரால் கூட முழுமையாக தனது வாழ்க்கைத் தேவையை கிராமப் பொருளாதார, உற்பத்திமுறை சார்ந்து நிறைவேற்றிட இயலவில்லை!
ஆம்! கைராட்டையில் நூல் நூற்ற அவரால், அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரிக்கச் சொன்ன அவரால் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அவரால் முதலாளியக் கண்டுபிடிப்பான கடிகாரத்தையும், மூக்குக் கண்ணாடியையும் புத்தகத்தையும் மோட்டார் வாகனப் பயன்பாட்டையும் புறக்கணித்து விட்டு இயங்க முடியவில்லை!
இதனை அவரது தனி மனிதக் குறைபாடாக இவ்விடத்தில் குறிப்பிட வில்லை. அன்றைய சமூகத் தேவைக்கும் அதனை நிறைவு செய்யும் திறனற்ற கிராமப் பொருளாதாரத்தை அவர் முன் மொழிந்ததில் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே இதனைக் குறிப்பிட வேண்டிய தாயிற்று.
1940-களிலேயே இதுதான் நிலை என்றால் 2021-ல் இன்றைய சமூகத் தேவையை கிராமப் பொருளாதாரத்தால், நிலவுடைமைக் கால உற்பத்தி முறையால் நிறைவு செய்திட இயலுமா? அல்லது இதனை வலியுறுத்தும் நபர்களது அன்றாட வாழ்க்கைதான் இன்றைய நவீன எந்திர சாதனங்களின்றி ஒரே ஒரு மணி நேரமாவது கடந்து விடுமா?
பிறகு ஏனிந்த இயற்கைப் பித்து? பிதற்றல்?
@
கிராமங்களை இந்தியாவின் இதயமாகக் கண்ட மகாத்மா காந்தியாராலேயே நவீன முதலாளியத் தயாரிப்புகளைக் கைவிட முடியாதபோது இவர்களால் எப்படி கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருட்களின்றி இந்தக் காலத்தில் வாழமுடியும்? ஒருபோதும் முடியாது! முடியவுமில்லை! ஆனால் அந்தக் குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றி மக்களுக்கு இயற்கை / மரபு சார் வாழ்க்கையைப் பரிந்துரை செய்யும் வேலையை இவர்கள் தொடர்ந்து செய்கின்றனர்.
சமீப காலப் பெருங் கொடுமையாக கொரானா நோயையும் அதற்கான தடுப்பூசியையும் கார்ப்பரேட் சதி என்றும் அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் மக்களைப் பீதியூட்டியதையும் நாம் பார்க்கவே செய்தோம். ஆனால் தடுப்பூசி இன்று மக்களை கொரானாவில் இருந்து காத்துவருவதையும் உலகம் பார்த்து விட்டது.
ஆனால் இவர்கள் இந்தப் பீதியூட்டலை அதே கார்ப்பரேட் முதலாளிகளின் நவீன இணையத்தைப் பயன்படுத்தியே பிரச்சாரம் செய்தனர் என்பது நகைமுரண்! இது இன்று கம்ப்யூட்டர் மூலம் சோதிடம் சொல்லி, ஜாதகம் கணித்து சம்பாதிப்பதற்கு ஒப்பானதாகும்!
ஆம் இயற்கையை நேசிப்பவர்கள் பனையோலையில் எழுத்தாணியால் எழுதியல்லவா தங்களது கருத்தை பரப்பியிருக்க வேண்டும்? ஒரு புறம் கார்ப்பரேட் உற்பத்தியை எதிர்த்து இயற்கை / மரபு சார் பொருளாதாரத்தை, உற்பத்தியை ஆதரித்துக் கொண்டே மறுபுறம் கார்ப்பரேட் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்துவதென்பது கார்பரேட் வளர்ச்சிக்கு உதவுவதாகத் தானே அமையும்?
குறைந்த பட்சம் காந்தியாரின் அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தையாவது இவர்கள் முன் மாதிரியாக கொண்டு கார்ப்பரேட் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்க வேண்டுமல்லவா? அல்லது இயற்கை வேளாண் விஞ்ஞானி?! நம்மாழ்வார் போல நவீனப் பயன்பாட்டை மறுத்து அரை நிர்வாணமாகத் தோற்றமளிக்க, வாழ வேண்டுமல்லவா?
இவர்கள் மட்டுமல்ல இன்று இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம், பாரம்பரியம், மரபு என்று பெருமை பேசும் பலரது சொந்த வாழ்க்கையும் முற்ற முழுக்க மிக மிக நவீனமானதாக அமைந்திருப்பதை நாம் காண்கிறோம்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடு மாடு மேய்த்தலை அரசு வேலையாக்கி விடுவோம்! அந்த ஆடு மாடுகள் போடும் கழிவுகளை எல்லாம் நிலத்திற்கு உரமாக்கி விடுவோம்! என்று இயற்கை விவசாயத்தை இயற்கை உரத்தை ஆதரித்துப் பேசும் ஒரு தமிழ்தேசியக் கட்சித் தலைவர்தான் தினசரி நவீன உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்), நவீனக் கருவிகள் மூலமாக உடற்பயிற்சி செய்வதையும் அக்காட்சிகளை கார்ப்பரேட் இணையத் தளத்தில் வெளியிடவும் செய்கிறார். வெளிநாட்டு உடை, வெளிநாட்டுப் பறவை, வெளிநாட்டுக் கார் சகிதம் நவீன வாழ்க்கை வாழ்ந்துகொண்டு மற்றவர்களுக்கு இயற்கை / மரபு / பாரம்பரியம் சார்ந்த வாழ்க்கையைப் போதிக்கவும் செய்கிறார்.
இது ஒரு உதாரணம் தான். இதைப் போல பலரை நாம் பார்க்கமுடியும்! இந்த அரசியல் நமக்கு முரணாகத் தெரிந்தாலும் இதன் பின்புலம் மிகத் தெளிவானது. நமது நாட்டின் கடந்த 19, 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் வரலாறே இவ்வாறானது தான். கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் பேசிய தேசவிடுதலை, ஜனநாயகம், சுதந்திரம், சோசலிசம், பெண்விடுதலை போன்ற அனைத்துமே அந்நிய இறக்குமதிதான்!
இவ்வாறு அந்நியர்கள் தந்த புத்தியைக் கொண்டே அந்நிய நவீனத்தை எதிர்ப்பதும் பழைய பாரம்பரியத்தைப் போற்றுவதும் சனாதனிகளின் வழிமுறையாகும்! அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று உலகம் முழுதும் வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு இங்கும் பரவிய போது அதனை அப்படியே என்.ஜி.ஓ-க்கள் பலர் ஏற்றுக்கொண்டு இங்கும் பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்தச் சிக்கல் மிக நீண்ட காலமாக இங்கு தொடர்கிறது. மேலை நாடுகளின் அரசியல் வழிமுறைகளை முன் மாதிரியாகக் கொண்டு இங்குள்ள தனித்துவமான பின் தங்கிய சூழலை கவனிக்காமல் அப்படியே பதிலீடு செய்யும் போக்கு / அவலம் நீடிக்கவே செய்கிறது. அது அரசியல் முதல் சுற்றுச் சூழல் வரை தொடர்கிறது.
ஆனால் இங்கு கூடுதலாக ஓர் விசயம் இதில் சேர்ந்து கொள்கிறது! எந்த மேலை நாட்டு கருத்தியலை, வழிமுறைகளைப் பின்பற்றினாலும், பிரச்சாரம் செய்தாலும் அதில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்திரவாதத்தை மட்டும் உறுதிப் படுத்திவிடுவது என்பதில் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.
இதுவும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று தான். இதனை தமிழ் நாட்டில் மிகச் சரியாக உணர்ந்தவராக தந்தை பெரியாரே இருந்திருக்கிறார். ஆம் 1940-களில் காந்தியாரின் கிராமப்பொருளாதாரத்தை அம்பலப்படுத்தியதோடு ஜாதியத்தைக் கட்டிக் காக்கும் கிராமப்புறங்களையும், கிராமப்புற உற்பத்தி முறைகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றார். கிராமப்புறங்கள் பற்றிய இதே கண்ணோட்டத்தையே அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் கொண்டிருந்தார்.
ஆனால் இங்குள்ள தமிழ்த் தேசியர்கள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கிராமப் புறங்கள் பற்றிய மயக்கமும், பெருமிதமும் உள்ளது. இந்த வேறுபாடுதான் நகரங்களை நரகமாகவும் கிராமங்களைச் சொர்க்கமாகவும் இவர்களைக் கருதச்செய்கிறது!
@
கடந்த அய்ம்பதாண்டுகளில் தான் நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது, தொழிற் சாலைகள் பெருகிவிட்டன, வாகனங்கள் பெருத்துவிட்டன, நகரங்கள் கான்கிரீட் காடுகளாகிவிட்டது, விவசாயம் ரசாயனமயமாகிவிட்டது, நீர்நிலைகள், சுற்றுச் சூழல் மாசடைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இயற்கை ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
சரி! கடந்த 50ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன?
பஞ்சம், பசி, வறுமை, கொள்ளை நோய்கள், அம்மை, காசம், தொழு நோய் , பிரசவகால மரணங்கள், சிசு மரணங்கள் எவ்வளவு? சராசரி மனித ஆயுட்காலம் தான் எத்தனை?
இது மட்டுமின்றி பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமாக அரை டஜன் ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்று வளர்த்த நிலை, ஆணாதிக்கம், பெண் கல்வி மறுக்கப்பட்டமை, குழந்தைத் திருமணங்கள், இளம் விதவைகள் பெருக்கமும் அவர்கள் பட்ட துன்பமும், உடன்கட்டை, தேவதாசி முறை, ஜாதி ஆதிக்கம், நிலவுடமை ஆதிக்கம், தீண்டாமைக் கொடுமைகள், வேலையின்மை, பில்லி, சூனியம், மூடத்தனங்கள் … இப்படித்தானே இருந்தது?
1967 திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோதுகூட கடும் அரிசிப் பஞ்சம் நிலவியதே? ஆனால் கடந்த அய்ம்பது ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மாறுதல்களின் பலன்கள் எப்படிப் பட்டவை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! பஞ்சம் என்றால் என்ன என்பதை கடந்த, இப்போதைய இரு தலைமுறை அறியாதே!
புள்ளிவிபரங்களைப் பாருங்கள் பெண்கல்வி, பெண்களின் நிலையில் தமிழ்நாடு அடைந்துள்ள மாறுதல்கள் எத்தகையது? கிராமங்களில் ஜாதி ஆதிக்கவாதிகளின் நிலை என்ன? நிலவுடமையாளர்களின் நிலை என்ன? தங்களது வலிமையை இழந்திருக்கிறார்களா? இல்லையா?
தொழு நோய், காசம், பெரிய அம்மை போன்ற நோய்களின் தாக்கம் பெருமளவு குறைந்தது எவ்வாறு? பொதுச் சுகாதாரத்தின் நிலை அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வாறு மாறுபட்டுள்ளது? இந்த மாறுபாடுகள் எல்லாம் விவசாய உற்பத்தி முறையில் நவீனத்துவம், ரசாயனம், எந்திரமயம் புகுந்ததின் பயனல்லவா? பொதுப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்தின் விளைவல்லவா?
தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கைத் தரம், வசதிகள் அதிகரித்துள்ளதா இல்லையா? குடிசைகள் × மாளிகைகள் என்ற பாரதூரமான வேறுபாடு குறைந்துள்ளதா இல்லையா? இதன் பயனாக குடிசைத் தீ விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளதே!
இதன் பக்க விளைவாக காற்று மாசுபாடு நீர், நில மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான் அதனை சரிப்படுத்தும் பொறுப்பு அரசுக்கும் நமக்கும் நவீன விஞ்ஞானத்திற்கும் உண்டு. ஆனால் அதற்காக நவீன எந்திரமயம், தொழில்மயம் கூடாது பழைய கிராம வாழ்க்கை முறையே போதும் அதுவே சொர்க்கம் என்பதை கல்விகற்காத ஓர் பாமர கிராமப்புற மனிதர் கூட ஏற்க மாட்டார். ஆனால் படித்த நகர்புற, சொகுசு வாழ்க்கை வாழும் மேட்டுக் குடியினர் இயற்கை, விவசாயம், பசுமை, ஆர்க்கானிக் என்று பத்திரிக்கைகளிலும், சினிமாவிலும் கதையளந்து கொண்டுள்ளனர்.
@
நமது சமூகம் ஓர் ஜாதியச் சமூகம்! அதனை மனதில் கொண்டே இங்கு எந்தவொரு விசயத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. மேலை நாடுகளில் அணுகியதைப் போல எந்தவொன்றையும் நாம் அணுக, பின்பற்ற, கடைப்பிடிக்க முடியாது! இங்கு நவீனமயம், எந்திர மயம் என்பது முதலாளியச் சுரண்டலை மட்டும் கொண்டுவரவில்லை! அல்லது நிலவுடமை ஆதிக்கத்தை மட்டும் சிதைக்கவில்லை அதற்கும் மேலாக ஜாதியக் கட்டுமானத்தை வலுவிழக்கச் செய்தது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இந்தக் கண்ணோட்டத்தினடிப்படையிலேயே அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் பிரிட்டிஷார் செயல்பாடுகளை அணுகியதை நாம் அறிவோம். மாமேதை காரல் மார்க்ஸ் கூட பிரிட்டிஷார் இந்தியாவில் மேற்கொண்ட நடவடிக்கைகள் கீழைக் கொடுங்கோன்மையான கிராம சமூகங்களின் தேக்கத்தை அழித்தது என்ற வகையில் முற்போக்கானவை என்றே குறிப்பிட்டுள்ளதையும் நாமறிவோம். (இந்தியா பற்றி கார்ல்மார்க்ஸ்)
ஆனால் இவையனைத்தும் மற்றொரு புறத்தில் கிராமப் பொருளாதாரச் சிதைவை வரவேற்றவை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக தமிழக கிராமப்புற, விவசாய, கைவினைத் தொழில் சிதைவு என்பது ஒருவகையில் ஜாதியத் தொழில் பிரிவினையின் அழிவு என்றும் நாம் புரிந்து கொள்கிறோம்.
ஏனென்றால் இங்கு நிலவுடமையும், கைவினைத் தொழிலும் ஜாதியத்தோடு பின்னிப்பிணைந்துள்ளதை நாம் பார்க்கிறோம். எனவே நவீனமயமும், எந்திரமயமும் நவீனப் பேக்குவரத்து வசதியும் பழைய பின்தங்கிய நிலவுடமை உற்பத்தி முறையை மட்டுமல்ல ஜாதியத்தையும் வலுவிழக்கச் செய்து மனிதர்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
அதாவது சுதந்திரமான ஓர் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. கைவினைத் தொழில் நசிவால் விவசாய நசிவால் அதில் ஈடுபட்ட மக்கள் ஓட்டாண்டிகளாக மாறுவது கண்ணீர் சிந்தவைக்கும் ஓர் கொடூரம் தான். மேலும் இது முதலாளிய வளர்ச்சியின் (தொழிற்புரட்சிக்காலத்தின்) போது மேலை நாடுகள் தோறும் நடைபெற்ற ஓர் நிகழ்வு தான் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இது சமூகத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஓர் நிகழ்வாகும்.
@
இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்தும் அதன் உணவுச்சங்கிலியிலிருந்தும் விடுபட்ட மனிதன் இயற்கைக்கு விரோதமாகவும் எதிர்த்தும் செயல்படத்துவங்கினான் என்பதை முன்பே குறிப்பிட்டோம். பிற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை, தனது உடலை, உடலியக்கத்தை மாற்றிக் கொண்டு இயற்கையோடு சேர்ந்து பயணித்தது. அவ்வாறு பயணிக்க முடியாத உயிரினங்கள் மாண்டும் போயின.
ஆனால் மனிதன் மட்டும் தனக்கேற்ப, தனது தேவைகளுக்கு ஏற்ப இயற்கையில் மாற்றத்தைச் செய்ய முயற்சித்தான். அதாவது பிற உயிரினங்கள் இயற்கைக்கு அடிபணிந்து வாழ்ந்தன. மனிதகுலமோ இயற்கையை வெற்றி கொள்ளப் போராடியது. இதன் மூலம் மனித இனத்திற்கு இரண்டு குணங்கள் ஏற்பட்டன. ஒன்று எதிர்த்துப் போராடும் குணம், மற்றது கண்ணுக்குத் தெரியும் புறவுலகு அனைத்தையும் தனக்கானதாகக் கருதி ஆதிக்கம் செய்யும் சுயநல குணம்.
இவ்வாறான இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் அறிவு வளர்ந்தது, அவனது கருவிகள் வளர்ந்தது, அக்கருவிகளின் வளர்ச்சி மேலும் அவனை / அவளை வளர்த்தது . உபரி தோன்றியது
விளைவு மனித குலத்திற்குள் பிளவு, வேறுபாடு ஏற்பட்டது. முதல் பிளவு உடல் / பால் (ஆண்,பெண்) அடிப்படையிலான ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டது. பெண் அடிமையாக்கப்பட்டாள். அடுத்தடுத்து இன வேறுபாடு, வர்க்க வேறுபாடு, நிற வேறுபாடு, தேச வேறுபாடு, மதவேறுபாடு, ஜாதி வேறுபாடு என்று ஏற்பட்டு அதனடிப்படையில் தங்களுக்குள் பிளவுபட்டும் அடிமைப் படுத்தியும் அதை எதிர்த்து போரிட்டுச் சாகவும் செய்தனர்.
இப்போது இயற்கைக்கும் மனித குலத்திற்கும் இடையிலான முரண், போராட்டமானது இரண்டாம் கட்டத்திற்கு தள்ளப்பட்டு மனிதர்களுக்கு இடையிலான முரணும் போராட்டமுமே முதன்மையானது!
இந்தப் போராட்டத்தில் இயற்கை களமாகவும், கருவியாகவும், பகடைக் காயாகவும் பயன்படுத்தப்பட்டது / படுகிறது. தமது எதிரியை வெல்ல வேண்டும் என்ற போராட்டத்தில், வெறியில் மனிதர்கள் இயற்கையைச் சீரழித்தனர், சூறையாடினர் மிக கேவலமாகப் பயன்படுத்தினர் அதன் விளைவாக (நியூட்டனின் மூன்றாம் விதிப்படி) இயற்கையும் எதிர் வினையாற்றியது.
ஆனால் அந்த இயற்கையின் எதிர்த்தாக்குதலில் வலுத்தவர்கள் தப்பித்துக் கொள்வதும் இளைத்தவர்கள் பாதிக்கப்படுவதும் / அழிவதும் இங்கு நடந்தேறியது. ஆக இப்போதைய முதன்மையான பிரச்சனை மனித குலத்திற்குள் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வுகள், பகை முரண்பாடுகள், மோதல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு ஒன்றுபட்ட மனிதசமூகமாக உருப்பெறுதலே முதன்மையானது என்றே சமூக, அரசியல் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் போராடிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு ஒட்டு மொத்த மனிதகுல நலனுக்காகச் சிந்திப்பவர்கள் மட்டுமா இங்கு தோன்றினர்கள்? இல்லை! மனித குல விரோதிகளும் பாசிஸ்டுகளும் தோன்றிச் சிந்திக்கவும் செயல்படவும் செய்தனர். அது போலவே அவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட மனிதாபிமானிகளும் தோன்றினர்.
அதுமட்டுமல்ல இந்த உலகில் வலுத்தவர்களால் பாதிக்கப்படும், ஒடுக்கப்படும் அடிமைப் படுத்தப்படும் ஒவ்வொரு பிரிவின் நலனுக்காக விடுதலைக்காக சிந்திக்க, செயல்பட, போராடத் தூண்டும் தலைவர்களும் தோன்றினர் இவர்களைப் பின்பற்றும் இயக்கங்களும் தோன்றின.
ஆக இவை தான் இன்றைய முதன்மையான மனிதகுல கரிசனமாக உள்ளது. இதற்கிடையே தான் இயற்கையை நேசிப்பவர்களும், பிற உயிர்களைக் காதலிக்கும் சூழலியலாளர்களும், ஜீவகாருண்யர்களும் தோன்றி அது பற்றிப் பேசி வருகின்றனர். இரும்படிக்கும் இடத்தில் சுற்றிவரும் ஈக்களைப்போன்று இன்று இவர்கள் அனாவசியமானவர்களாகத் தோன்றினாலும் இவர்களும்கூட உலகமயத்தின் தவிர்க்கமுடியாத விளைவுதான்! பிள்ளைகள் தான் என்பதே வியப்பான உண்மை !
@
ஆனால் எந்திரமயத்தினால், ரசாயன மயத்தினால் உருவாகும் பக்க விளைவுகளுக்கு, மாசுபாடுகளுக்கு உலகமயத்தின், நவீனமயத்தின் பிள்ளைகளான, நவீன கல்விகற்ற இவர்கள் (சுற்றுச்சூழல்வாதிகள்) முன் வைக்கும் தீர்வுதான் / மாற்றுதான் படு பிற்போக்கானதாக உள்ளது! மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்துவதுபோல் எந்திரங்களே வேண்டாம்! தொழிற்சாலைகளே வேண்டாம், மோட்டார் வாகனங்களே வேண்டாம்! என்று சொல்வதோடு பதிலுக்கு பழைய கிராமப்புற வாழ்க்கை முறையை சிபாரிசு செய்கின்றனர்.
இவர்களது இந்தப் பரிந்துரையானது இப்போது தமிழ் நாட்டு அரசியல் அரங்கில் திராவிட இயக்கத்திற்கு எதிராக முன்வந்து நிற்கும் பழமைவாதிகளான தமிழ் இந்துப் பாசிஸ்டுகளுடன் கொண்டுபோய் இவர்களைச் சேர்த்து விடுகிறது. மேலும் இவர்கள் மாற்றாக முன்வைக்கும் கிராமப்புற வாழ்க்கை (நிலவுடமைக்காலம்) என்பது இயற்கை மாசுபாடுகள் அற்ற காலமா? என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த காலத்தில் மன்னர்கள் யானைப்படை குதிரைப்படை சகிதமாக அண்டை நாடுகள் மீது படைஎடுத்துச்சென்று மக்களை மட்டுமா கொன்றுகுவித்தார்கள்? இயற்கையைச் சீரழிக்கவில்லையா? பிற உயிரினங்களை அழிக்கவில்லையா? நாடு நகரங்களையும் கட்டிடங்களையும், வயல்வெளிகளையும், காடுகளையும் தீக்கிரையாக்கி அழிக்கவில்லையா? அதில் மனிதர்கள் மட்டுமா பழியானார்கள்? இயற்கை பாழ்படவில்லையா?
இன்றளவும் கிராமங்களில் தனக்கு கீழே உள்ள ஜாதிக்காரன் குளிக்கும் / குடிக்கும் நீரில் நஞ்சை, நரகலைக்கலந்து அந்த நீரைப்பருகும் உரினங்களையெல்லாம் சாகடிக்கவில்லையா? தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளையும், வயல்களையும் கொளுத்தவில்லையா? அதில் சுற்றுச்சூழல் மாசுபடவில்லையா? இயற்கை பாழ்படவில்லையா?
அல்லது பெரிய பெரிய அரண்மனைகளையும், கோபுரங்களையும் தாஜ்மஹால் போன்ற நினைவுச்சின்னங்களையும் கட்டினார்களே அதில் மனித உழைப்பும் உயிரும் மட்டுமா வீணானது? இயற்கை சூறையாடப் படவில்லையா? அதற்கான மண்ணும் கல்லும் எங்கே இருந்து எடுத்தார்கள்? பூமியைத்தோண்டித்தானே? மலையை வெட்டித்தானே எடுத்தார்கள்?
இன்றைக்கும் அனைத்து மதத்தினரும் தங்களது பக்தியின் பெயரால் கடவுளின் பெயரால் ஒரே நாளில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கில் கூடி நீர் நிலைகளையும் சுற்றுப்புறத்தையும் மல ஜலம் கழித்து சீரழிக்கிறார்களே அது சுற்றுச்சூழல் மாசுபாடில்லையா?
வளராத அல்லது வளரும் நாடுகளின் நிலை இவ்வாறு என்றால் வளர்ந்த நாடுகளில் வேறுவிதமான சீரழிவுகள். தனது அண்டை நாட்டுக்காரன் ஓர் அணு வெடிச் சோதனை செய்துவிட்டால் தான் இரண்டு அணு வெடிச்சோதனையைச் செய்து அவனைவிட தான் பலசாலி என்று காட்டும் வெறி, தான் எதிரியாக, போட்டியாகக் கருதும் நாட்டுக்காரன் ஏவுகணையோ ராக்கெட்டோ ஏவிவிட்டால் பதிலுக்குத் தானும் ஏவிவிட வேண்டும் என்று அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டு இயற்கையை பாழ்படுத்தும் நிலை.
இரண்டாம் உலகப்போரின் போது தனது எதிரியான ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு போட்டு இன்றுவரை அந்நாட்டுக் குழந்தைகள், பறவைகள், புல், புழு பூச்சிகள் வரை உடல் பாதிப்புடன் பிறக்கும் இரக்கமற்ற செயலைச் செய்த அமெரிக்க வல்லரசு ஓர் நவீன முதலாளிய நாடு அல்லவா?
அதேபோல நகரத்தில் தனது அண்டை வீட்டுக்காரன் இரண்டடுக்கு மாடி கட்டினால் தான் நான்கடுக்கு மாடி கட்டுவதும் அவன் 100 அடிக்கு ஆழ்குழாய் துளையிட்டால் தான் 200 அடிக்கு ஆழ்குழாய் போடுவதும் பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் தான் இரண்டு கார் வாங்குவதும் முதலாளியச் சமூகச் சிந்தனையின் சீரழிவாகும்.
ஆக கிராமமோ, நகரமோ, அல்லது நிலவுடமைக்காலமோ முதலாளியக் காலமோ தனிவுடைமை முறையும் அதன் விளைவாக எழும் போட்டி பொறாமை குரோத உணர்வுமே இங்கு சுற்றுச்சூழலையும் இயற்கையையும் மனித உயிர்களையும் வாழ்க்கையையும் சீரழிப்பதாக உள்ளது…
இன்று உற்பத்தி உலகமயமாகிவிட்டது! நுகர்வும் உலகமயமாகிவிட்டது. அதன் மூலம் சுரண்டலும் உலகமயமாகிவிட்டது. அதாவது முதலாளிகள் (கார்ப்பரேட்டுகள்) உலகமயமாகிவிட்டனர். ஆனால் மக்கள் மட்டும் தேசங்களாகவும், பல்வேறு மொழிகளாகவும், இனங்களாகவும், நிறங்களாகவும், வர்க்கங்களாகவும், ஜாதிகளாகவும், பால்களாகவும், மதங்களாகவும் பிரிந்து நின்று மோதிக்கொண்டும் சண்டையிட்டும் கொண்டுள்ளனர்.
அதை இந்த உலக முதலாளிகள் வரவேற்கவும் தூண்டிவிடவும் ஆயுதங்கள் விற்று லாபம் பார்க்கவும் செய்கின்றனர். ஆக உலகம் முழுதுமுள்ள மக்கள் தங்களது குறுகிய சிந்தனைகளை, எல்லைகளைக் கலைந்து உலகமயமாக வேண்டும்! ஒரே மனிதகுலமாக வேண்டும்! இங்கு மனிதர்களால் கண்டுபிடிக்கப்படும் அனைத்து நவீனங்களும் அனைவருக்குமானது! மனிதகுல முன்னேற்றத்திற்கானது! வளர்ச்சிக்கானது! எந்தவொரு தனி நபருக்கோ அல்லது எந்தவொரு குழுவுக்கோ உரியதல்ல! என்ற நிலை இங்கு வரவேண்டும் அதற்கு இங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் பகை முரண்கள் அனைத்தும் முதலில் ஒழிய வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலை உருவாக வேண்டும்.
இதைத்தான் தந்தை பெரியார் 1930-களிலேயே சொல்லியிருக்கிறார்! (இயற்கையின் கொடுமை, செயற்கையின் பெருமை, நகர வாழ்க்கையின் சிறப்பு- தந்தை பெரியார். காட்டாறு வெளியிட்டுள்ள கட்டுரை) நவீன எந்திரமயத்தால் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உருவாகும் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிகள் சோவியத் ரஷ்யாவில் இல்லையே ஏன்? அவர்கள் அந்த நெருக்கடிகளைச் சமாளித்துவிட்டார்களே அது எப்படி? என்று கேட்கிறார். ஆக நவீனமயம் எந்திர மயம் என்பது மனிதகுல முன்னேற்றத்திற்குத் தேவையானது. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளைக் கலைந்து மக்களைக் காக்கும் சோசலிச சமூக அமைப்பு முறையே, அரசே தேவை!
அல்லது இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக்காக்க குறைந்த பட்சம் ஓர் மக்கள் நல அரசாவது வேண்டும் என்பதை இன்றைய தமிழ் நாட்டின் யதார்த்த நிலை நமக்கு உணர்த்துகிறது. ஆம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மழைவெள்ளத்தை கையாள முடியாமலும் மக்கள் மீது அக்கறையற்றும் நடந்து கொண்டதற்கு மாறாக இன்றைய திமுக அரசும் முதல்வரும் கொரரானா பெருந்தொற்றையும், இப்போதைய மழை வெள்ளம் புயல் பாதிப்புகளையும் நவீன மருத்துவ வசதிகளை, கருவிகளைக் கொண்டு சிறப்பாகக் கையாண்டு மக்களைக் காத்து வருவதுடன் சுற்றுச்சூழலையும் சீர்படுத்தி வருவதையும் நாம் பார்த்துவருகிறோம்.!
ஆகவே இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க, சுற்றுச்சுழலைப் பாதுகாக்கத் தேவை நவீனத்தை ஏற்றுக்கொண்ட அறிவியல் மனப்பான்மையும் கண்ணோட்டமும் கொண்ட முற்போக்கான திராவிட / இடதுசாரி ஆட்சியாளர்களே தவிர மாறாக வலதுசாரி தமிழ் இந்துக் கண்ணோட்டம் கொண்ட கிராமப்புற ஜாதியாதிக்கப் பண்ணையார்களோ! கிராமப்புற ஜாதிய வாழ்க்கை முறையோ அல்ல!
@