இப்படியும் தொடங்கக்கூடும் நமக்கான சொற்கள்..!
இரா.மோகன்ராஜன்
(1)
ஒரு நல்ல தேநீர்
பருகுவதற்கு
என்றுதான்
நீங்களும் என்னோடு
வருகிறீர்கள்..
என்னுடனே
விசாரித்தபடி வருகிறீர்கள்..
பிறகொரு இசையரங்கில்
யாருமற்ற இருக்கையில்
அருகருகே உட்கார நேர்கிறது.
உங்களுக்கும் எனக்கும்.
நல்லதொரு இசைக்கு
எனது விரல்களைப் போன்றே
உங்களது விரல்களும்
தாளமிடுகின்றன.
இருவருமே
அரங்கின் கழிப்பறையை
சபித்தபடியே
வெளியே வருகிறோம்.
இசைகுறித்த எந்த
புகாரும் நமக்குள்
இருப்பதாகத்
தெரியவில்லை.
இசை கரைந்துபோய்விட்ட
ஒரு தொலைவின்
தருணத்தில்
நீங்கள் என்னுடன்
வருவது குறித்து
நினைவுப்படுத்துகிறேன்.
இப்போது வேறுதிசையில்
திரும்பி
நடக்கத் தொடங்குகிறீர்கள்
நீங்கள்.!
———— ———– ————
(2)
கைப் பேசியை
ஒற்றியவுடன்
உடனடியக
அலையில் வருகிறீர்கள்
நீங்கள்.
உரையாடலில் விருப்பமுடைய
உங்களுக்கு
நீளும் நம் பேச்சுகள் மீது
எந்த மறுப்பும்
இருப்பதில்லை
உங்களுக்கு.
எனக்குப் பிடித்த இசை
எனக்குப் பிடித்த சுவரங்கள்
எனக்குப் பிடித்த
நிறங்கள்.
எனக்குப் பிடித்த
புத்தகங்கள்
எனக்குப் பிடித்தக் கவிதை.
எல்லாம் உங்களுக்கும்
பிடித்தவையாக இருக்கின்றன.
எனக்குப் பிடிக்காதவை
எவை என்று
நீங்களும் கேட்டதில்லை.
நானும் சொன்னதில்லை.
நமது குரல்கள்
பல சமயங்களில்
எனது குரலைப் போன்றே
இருக்கின்றது.
முகம் குறித்த நமது
சித்திரம்
ஒன்றுபோல இருக்கக்கூடும்
என்கிறேன் நான்.
நமது விசாரிப்புக்கள் கூட
நமக்கானதாகவே
இருந்துவிடுகின்றன
பெரும்பாலும்.
உங்களைப் பற்றி
பேசுவதென்பது
பல வேளைகளில்
என்னைப் பற்றியும்
பேசுவதாகிவிடுகிறது
எப்படியோ.
கைபேசியை
உங்களைப் போலவே
அணைத்து வைக்க
விருப்பமற்றவனாகவே
இருக்கிறேன்.
உரையாடலையும்
கைபேசியையும்
எப்போது
நிறுத்தி வைப்பது
என்பதில்
என்னைப் போலவே
இருக்கிறீர்கள்
நீங்கள்.
——— ————– ———
(3)
முன்னறிவிப்பு
எதுவுமின்றி வருகிறீர்கள்
நீங்கள்.
எல்லா உரையாடல்களும்
முடிந்துவிட்டன என்கிறேன்
நான்.
விவாதங்களின் சூட்டில்
சிறிது
அமர்ந்துவிட்டுப் போகிறேன்
என்கிறீர்கள்.
இப்போது அவற்றில் பல
ஆறிவிட்டன.
சில தீர்ந்துவிட்டன
என்கிறேன்
பருகப்பட்டத்
தேநீர் குவளைகளைக் காட்டி.
சிந்திய நீர்மங்களை
நோக்கி
ஊர்ந்து செல்லும்
எறும்புகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்.