ஆஷாபூர்ணா தேவி (AN AUTHENTIC VOICE: 1909 – 1995) – கே. சச்சிதானந்தன்
மொழியாக்கம்: கமலாலயன்
ஞானபீட விருது வென்ற முதல் பெண் எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி, ஜூலை 13, 1995 அன்று மறைந்தார். அவரது மரணத்துடன் வங்காளி இலக்கியத்தில் ஓர் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த நூற்றாண்டின் இரண்டாவது பாதியிற் தொடங்கியது அந்த அத்தியாயம். ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்து வெளியேறிவந்தவர்களான பெண் முன்னோடிகளின் வரிசையினால் தொடர்ந்து வார்த்தெடுக்கப்பட்ட அத்தியாயம் அது. ஸ்வர்ணகுமாரி தேவி (1855 – 1932), சரத் குமாரி ராய் சௌத்ரி (1861 – 1920), அனுரூபா தேவி (1882 – 1958), நிருபமா தேவி (1883 -1951) ஷைலாபாலா கோஷ் ஜயா (1894 – 1974) ஜ்யோதிர் மயீ தேவி (1894 – 1989) – இந்த இயக்கத்தின் முன்னணிப்போராளிகளில் சிலரை நினைவுகூர்வதற்காக மேற்கண்ட சில பெயர்கள். இவர்கள் பெரிய அளவில் வெளி உலகத்திற்குத் தெரிவிப்பதற்காகப் போராடியவர்கள். எனவே வங்காளிப் பெண்களின் குரல் அவளது வீடுகளுக்கும், வீட்டுச்சூழல்களுக்கும் வெளியே அப்பால் தூரத்திற்குக் கேட்கப்படத் தொடங்கியது. இந்த எழுத்தாளர்களில் சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளைத் தவிர பெரும்பாலானவர்கள் முறையான கல்வித் தேர்ச்சியின் பயன்களைப் பெற்றவர்கள் அல்லர். குடும்பம் மற்றும் சமூகங்களின் சட்டங்களுக்குள்ளேயே வாழ்த்திருந்த வர்கள்தாம். படைப்பூக்கமுள்ள எழுத்தாளர்களாகத் தமது படைப்பாற்றலின் உன்னதத்தைத் தங்களது தளராத துணிவு, பற்றுறுதி மற்றும் தொடர்ச்சியான, சாதிக்கத் துடித்த உழைப்பு – ஆகியவற்றினால் மட்டுமே எட்ட முடிந்தது. வங்காளி எழுத்துலகில் பெண்ணிய மரபை நிலை நிறுத்துவதற்கு மேற்கண்ட பெண்கள் தொடங்கி வைத்தது ஆஷாபூர்ணா தேவியினால் அதனுடைய சிகரத்தை எட்டிப்பிடித்தது.
தனது வாழ்நாளிலேயே ஆஷாபூர்ணாதேவி ஒரு வழிபாட்டுத் தேவதையாகிவிட்டார். சாதாரணமான எண்ணற்ற பெரும்பான்மையினரான பெண்களுக்காகத் தவித்த குரல் அவருடையது. வங்காளத்தின் மிக மாற்ற மடைந்த, கல்வியறிவு மிக்க உயர்தர, உயர்மத்தியதர வர்க்கத்தினரின் நளினமான வட்டத்திற்கு வெளியே இருந்தவர்கள் இந்தச் சாதனைப்பெண்கள். பழமைவாத, ஒற்றைத்தன்மையான வாழ்கை முறையில் இருப்பின் நசுக்குதலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு சாதாரணப் பெண்ணின் தனக்கான புதிய வரையறைக் கான நெடுங்கால ஏக்கம் குறித்த அசலான அடையாளச் சின்னமாக ஆஷா தென்பட்டிருக்கிறார். இந்த நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் தமது இல்லத்துப் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத, அவர்களுக்கு 15 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடும் சராசரி வங்காளி மத்தியதர வர்க்கத்துக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் இவர். இத்தகைய குடும்பங்களில் அதன் ஆண் குழந்தைகளுடைய பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்கள் தவிர இருக்கக்கூடிய புத்தகங்கள் – பகவத் கீதை, யோகவசிஷ்டா, இராமாயணம் மற்றும் பஞ்சாங்கம் – இவை மட்டுமே! இத்தகைய குடும்பத்தில் பிறந்தவரான ஆஷாபூர்ணா தேவியின் வாழ்கை, அதைப் போலவே அவரது இலக்கியம் – இவை ‘மூன்றாம் உலக ‘த்தின் எண்ணற்ற சாதாரணப் பெண்களுக்கு ஓர் உத்வேகம் தரக் கூடியவை.
ஈடிணையற்ற அவரது வெற்றி, இது துணைக்கண்டத்திலேயே அனேகமாக இதற்கு இணையான ஒன்று இல்லாத நிலையில், பரவலான பொதுமக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. ஞானபீட விருது தவிர கல்கத்தா பல்கலைக் கழக விருதுகளான – லீலா புரஸ்கார் (1954) மற்றும் புவன மோகினி தங்கப் பதக்கம் (1963); ‘ஜுகாந்தர் ‘ என்ற அதிகபட்ச விற்பனையான அன்றைய பிரதேச மொழித் தினப் பத்திரிகையின் ‘மோதிலால் புரஸ்கார் ‘ (1959), ரவீந்திர ஸ்மிருதி புரஸ்கார் (1966 ) என்ற மேற்கு வங்க அரசின் விருது, தேஷி கோட்டம்’ (1989) என்ற விஸ்வ பாரதி விருது, சாகித்ய அகாதமியின் பரிசு மற்றும், பெல்லோஷிப் மற்றும் தமிழ், பஞ்சாபி எழுத்தாளர் அமைப்புகளின் கௌரவ விருதுகள் – இவற்றின் வடிவில் இந்த அங்கீகாரம் வடிவம் பெற்றுப் பொலிந்தது. அவரது இமாலயப் புகழ் மற்றும் குறிப்பிடத்தக்க பொருளாதார வெற்றியை அவரது புத்தகங்களின் வியக்கத்தக்க விற்பனைப் புள்ளிவிவரங்கள், அவற்றின் எண்ணற்ற மறுபதிப்புகள், ஏராளமான பிறமொழிகளில் அவற்றின் மொழிபெயர்ப்புகள், இந்தியா முழுவதும் திரைப்படங்கள் – தொலைக்காட்சித் தொடர்களுக்காகத் தழுவிக் கொள்ளப்பட்ட பல்வேறு படைப்புகள் – ஆகியவற்றிலிருந்தே அளவிடலாம். நாவல் / புனைகதை யுலகில் தனது சமகால ஆண் எழுத்தாளர்களில் பெரும்பான் மையோரை அவர் வெற்றிகொண்டுவிட்டார். தனது 13 – வது வயதில் எழுதத் தொடங்கியவர் ஆஷா. அவரின் இறுதிநாள் வரை தொடர்ந்து எழுதிக் குவித்த 200 க்கும் மேற்பட்ட எழுத்துப்பிரதிகளின் தொகுதிகள் இவை : 141 நாவல்கள், 22 சிறுகதைத் தொகுதிகள், குழந்தைகளுக்காக 24 புத்தகங்கள் மற்றும் பல தரப்பட்ட எழுத்துகளின் பல தொகுதிகள். “அன்னை சரஸ்வதி தேவியின் சுருக்கெழுத்தாளர் ” என்று அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்ட வரையறுப்பில் ஆச்சர்யப்பட ஏதுமில்லைதான்!
இந்த அசாதாரணமான சாதனையின் அடித்தளங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அவரது தனித்திறமை, அளவற்ற படைப்பாற்றல், தோற்கடிக்கப்பட முடியாத, தோல்வி களாலோ, சிரமங்களாலோ தளர்ந்து விடாத மன உறுதி மற்றும் எழுத்தாளர் என்ற முறையில் அவரது பணிக்கு வாழ்நாள் முழுக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது – ஆகியவற்றிலேயே கிடைக்கின்றன. அதே சமயம், வங்காளத்தின் சமகால சமூகப் பின்னணிக்குத் தொடர்பில்லாத வகையில், ஆஷாவை ஆண் ஆதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்களின் போராட்டச் சின்னமாகக் கட்டமைத்துக் கொண்டாடுகிற உந்துதலிருந்து நம்மைத் தடுத்துக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அவர் முறையான கல்வி நிலையப் பரிச்சயமற்றவரே தவிர கல்வியிற் பின்தங்கிய வரில்லை.அவரது அன்னையின் வாசிக்கிற பழக்கம் காரணமாக அவர்கள் வசித்த பகுதியின் நூலகத்திலிருந்தும், அக்கம் பக்கத்தவரிடமிருந்தும் வாங்கிப்பயன்படுத்தப்பட்ட புத்தங்கள் ஏராளம். இது வங்காளி வாழ்க்கையின் பொதுவான அம்சமாக அன்றைய நாட்களில் இருந்தது. எல்லா வகையான வங்கமொழிப் புத்தகங்களின் தொடர்ச்சியான வருகை ஆஷாவிற்கும் சுதந்திரமாக வாசிப்பில் மூழ்கித் திளைக்க உதவியாக இருந்திருக்கிறது என்பதை அவரின் நினைவலைகள் தெளிவாகக் காட்டுகின்றன. அவரது சகோதரர்கள் படிக்கிற எந்த ஒன்றையும் தான் கற்றுக் கொள்ளவும், தனக்குப் படிக்கக் கிடைக்கிற எதையும் படிக்கவும் எல்லாவற்றிற்கும் மேலாக எழுதவும், அவற்றைப் பதிப்பிக்கவுமான குறிப்பிடத்தக்க அளவு சுதந்திரத்தை அவரது வீட்டில் அவர் அனுபவித்து வந்தார். ஒரு குழந்தை என்ற வகையில் இயல்பான அவரின் நினைவாற்றல் காரணமாக குடும்பத்தாரின் உத்வேகமிக்க பாராட்டுகளைப் பெற்றார் என்பதையும், வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களின் முன்னிலையில் கவிதைகள், பாடல்களை ஒப்பித்து மகிழ்வூட்டுவதற்கு எப்படி அடிக்கடி தான் அழைக்கப்பட்டார் என்பதையும் அவரே விவரித்திருக்கிறார். இரவீந்திரநாத் தாகூர் போன்ற பிரபலமான கவிஞர் ஒருவரிடமிருந்தே ஆஷாவும், அவரின் சகோதரிகளும் எழுதிய ரசிகர் கடிதத்திற்கு அவரிடமிருந்து வரப்பெற்ற பதிலைப் பார்த்ததும் அவர்களின் தயார் “என்னால் முடியாததை நீங்கள் சாதித்தே விட்டீர்கள்” என்று பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
ஆஷாவின் கணவர் குடும்பம் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது. சில எல்லைகளுக்குட்பட்டுத்தான் இயங்க நேர்ந்த போதிலும் தொடக்கத்திலிருந்தே இவரது படைப்பாற்றல் சார்ந்த முன்னுரிமைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தவர்களாகவே அவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆஷா ஒரு மனைவி மற்றும் தாய் என்கின்ற வகையில் தன்னுடைய கடமைகளை வீட்டில் நிறைவேற்றுவதில் தவறக்கூடாது என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டிருந்தது. இன்றும் எண்ணற்ற தாராள – முற்போக்குக் குடும்பங்களில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றவும் படுகிறது. அவரே தனது வீட்டு வேலைகளை நியாயமற்றவை யாகவோ, காரணமற்றவையாகவோ ஒரு போதும் கருதிய துமில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர் தனது (புகுந்த வீடு / பிறந்த வீடு) இரண்டு குடும்பத்தினரிட மிருந்தும் பெற்ற அனுசரணையானது, அன்றைய சராசரி வங்காளி குடும்பங்களிடையே நிலவிய மிகப்பரந்த இலக்கியப் பண்பாட்டுப் பரிச்சயத்தைச் சுட்டுவதாகக்கூடக் கொள்ளலாம். உற்சாகமூட்டுவது என்று இதைக் கூற முடியாது என்கிற பட்சத்தில், ஒரு பெண் என்கிற முறையில் குடும்பத்தில் அவர் வகித்துத் தீரவேண்டிய பாத்திரத்திற்கு அப்பால் வழங்கப்பட்ட அடையாளமாகக் கொள்ளலாம். சில பெண் நாவலாசிரியர்கள் அனுபவித்து எதிர்கொண்ட போராட்டத்தை நினைத்துப் பார்க்கையில் மிகமிக அதிர்ஷ்டசாலி என்று கூட நாம் இவரை இனம் காணக்கூடும்.
பூர்ணா தேவியைப் போல் முறையான கல்வியற்று தனது மொழியிடம் இருந்தும், மக்களிடமிருந்தும் விலக்கப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் தனது வாழ்க்கை அமையப் பெறாதவர் ஆஷா தன்னையும், தந்தையற்ற குழந்தைகளையும் தானே பராமரித்துக்கொண்டு தீர வேண்டிய நிலையில் உயர்சாதி விதவை அனுபவித்துத் தீர வேண்டிய விரிவான சடங்குகளை எதிர்கொண்டு வாழ்ந்திருந்த ஒரு பெரிய குடும்பத்தைப் பராமரித்ததாக வேண்டிய பொறுப்பையும் சுமந்திருந்த ஜ்யோதிர்மயீ தேவி போலவும் ஆஷா நிர்பந்தத்திற்கு ஆளாகியிருந்ததில்லை. தனிமையும் – அநாதரவும் நிறைந்த மரணத்தை அடைந்த ஜோதிர்மயீ தேவியின் அடர்த்தியான துயரச்சுமை மிக்க வாழ்க்கையை ஆஷா வாழ நேர்ந்ததில்லை. அல்லது ஆஷா லதா சின்ஹா அனுபவித்த எல்லையற்ற துயரம் இறுதியில் அவர் தனது குடும்பம் / படைப்பாற்றல் இரண்டையுமே கைவிட்டு விட்டு வாழ்ந்தது போலவும் இவருக்கு நேரவில்லை. இதற்குப் பதிலாக பாரபட்சமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட அடிமையாக வாழ நேரும் இந்துப் பெண்ணின் பிரதி மாதிரியாக இருப்பதற்கு மாறாக – ஆஷா பெரிதும் மதிப்புக்குரியவராகவே அவரது ஆதரவு மிக்க கணவரால் நடத்தப்பட்டிருக்கிறார். கல்கத்தாவில், வங்காளமொழிப் பதிப்புலகின் மையப்புள்ளியிலிருந்த அந்நகரத்தில் ஒரு நல்ல வீட்டிலும் வாழ்கிற நல்வாய்ப்பை யும் ஆஷா பெற்றிருந்தார். சின்னஞ்சிறியதாக அமைந்த அவரின் குடும்பம்- அன்றைய அவரது தலை முறையின ருக்கு இது பொதுவாக அமைந்திருக்காத ஒன்று – மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நல்ல ஆரோக்கியம், அவர் நீண்ட, செயலூக்கமிக்க நல் வாழ்வைப் பெற்றிருந்தவர். இந்தியாவின் பெண் உடல்நலம் குறித்த புள்ளிவிவரங்களை மனதிற் கொண்டு பார்க்குமிடத்து, இந்த ஆரோக்கியமிக்க நீண்ட வாழ்க்கை என்பதே எவ்வளவு அபூர்வமான பரிசு என்பதை அறிய முடியும். எழுத்தாளர் என்ற முறையில் பிறவி அதிஷ்டக்காரர்களில் ஒருவரான அபூர்வப்பிறவியாக இருந்த ஆஷா எந்தப் பத்திரிகை ஆசிரியரிடமோ, பதிப்பாளரிடமோ ஒருபோதும் ஒரு நிராகரிப்பைக் கூட பெற்று வேதனையை அனுபவித்ததில்லை.
அவரது திறமை, அவரின் பண்புகள், இவற்றைப் போலவே அவரது சூழல் ஆகியவற்றினால் அவர் வெற்றியாளராகத் திகழ்வதற்கென்றே வடிவமைக்கப் பட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவரின் வெற்றிச்சாதனைகளில் அநீதியையும், பழிவாங்கப்படு தலையும் குறித்த உள்ளடக்கப் பிரதியை வாசிக்க முற்படு கிற நமது உந்துதலினால் முறையான கல்வியில்லாமை, குடும்ப அவசரங்களுக்கு ஈடு கொடுத்தாக வேண்டிய நிர்பந்தம் முதலியவற்றிற்கு ஆஷாபூர்ணா ஆளாக நேர்ந்தி ருப்பதைக் காணாமல் குருட்டுத்தனமான முடிவுக்குப் போய்விடக் கூடியவர்களாக நம்மை ஆளாக்கி விடக் கூடாது. இதே பிரச்னை, அன்றைய வங்காளி மொழி ஆண் எழுத்தாளர்களிலும் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர் கள் – திரைலோக்யநாத் முதல் சமரேஷ் பாபு வரை – பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடியும்.
அல்லது ஊறுகாய்களை உருவாக்கிக் கொண்டிருப்பதை விட்டு விட்டுத் தற்செயலாக எழுதுவதைத் தேர்வு செய்யும் படி நேர்ந்துவிட்டதாக ஒரு கைதூக்கிவிடப்பட்ட குடும்பத் தலைவியாகவும் ஆஷாபூர்ணா இருக்கவில்லை. ஒரு தொழில் நுணுக்கத் தேர்ச்சி மிக்க எழுத்தாளராகத்தான் ஆரம்பம் முதலே இருந்திருக்கிறார். அவர் தனது கருத்து வளங்கள் குறித்து முழுமையாகத் தன்னுணர்வு பெற்றிருந்த தோடு, அவற்றின் சிகரங்களை எட்டுமளவிற்குத் தன்னைத் தகுதி படைத்தவராகவும் ஆக்கிக் கொண்டிருந்தார். பிரிக்கப் படாத வங்காளத்தில் பிறந்து, வங்கப் பிரிவினைக்கு வெகு காலம் முன்னரே வளர்ந்து பருவம் எய்தியவராக அவர் இருந்த போதிலும் அவரது எல்லை மேற்கு வங்கத்தின் சராசரி மத்தியதரவர்க்கத்தினரின் குடும்ப வாழ்க்கையோடு மட்டுமே நின்று விட்டது; தனது நேரடி அனுபவத்தின் மூலம் இந்த வாழ்க்கையைத்தான் அவர் மிக நெருக்கமாக அறிந்திருந்தார். ஆஷா ஒரு பிறவிக் கதை சொல்லி; ஒவ்வொரு நாளும் இந்த பூமியின் எதார்த்த அனுபவங்களைத் தனது மந்திரத்தன்மை மிக்க எழுத்தினால் இரத்தினச் சுருக்க மான சொற்சித்திரங்களாகவும், பிரதிபலிப்புகளாகவும் வடிவமைத்து அற்புதங்களைச் செய்தார் . இவை அன்றாட வாழ்வின் சந்தோஷங்களும், துக்கங்களும், முரண்பாடுகளும் எதிர்பாராத ஆபத்துகளும் வாசகர்களின் நடுவே ஓர் அமைதியான மகிழ்ச்சி உணர்வை விட்டுச் சென்றிருக்கின்றன. அவரது கூர்மையான அவதானிப்பும், நுண்ணுணர்வும் சமூகத்தின் பண்புகளில் மறைந்து கிடக்கும் நுண்ணிய வேறுபாடுகள் குறித்த குடும்ப வாழ்க்கையை உடனடியாக இறந்த காலத்தில் கற்பனாரீதியில் மீட்டுருவாக்கம் செய்வதற்கு உதவும் விசைப்பலகையாக உதவின. ‘பெண்ணிய ‘சித்தாந்தம் எதிலும் ஆழமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிக்கல்களை எதிர்கொள்ளாமலே பொதுவான ஓர் அறிதலின் அடிப்படையில் சமூகத்தில் நிலவிய அநீதிகளை, பாரபட்சங்களைச் சவாலுக்கு அழைப்பவராக இதயப்பூர்வ மாகச் செயல்பட்டவர் அவர்; குறிப்பாக சராசரிப் பெண்ணின் நிலைமைகளில் அநீதியையும், பாரபட்சத்தையும் எதிர்ப்பவராக இருந்தார். இந்த சமூக விழிப்புணர்வு அவருடைய எல்லா எழுத்துகளினூடாகவும் அறத்தன்மை யாய் விரவிப் படர்ந்திருக்கிறது. ஒரு நாவலாசிரியர் என்ற முறையில் ஆஷா ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று, மூன்றாவதாக ஓன்று என மூன்று நாவல்களில் தன்னை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது; முதல் உறுதிமொழி (இது 1965 – ல் ரவீந்திர புரஸ்கார் விருதையும், 1978 – ல் ஞான பீட விருதையும் பெற்ற நாவல்) சுவர்ணலதா, மற்றும் பாகுல் கதா ஆகியவை மூன்றும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடை யவை. இவை மூன்று தலைமுறைப் பெண்களான சத்யவதி, அவளுடைய மகள் சுவர்ணலதா, அவரது பேத்தி பாகுல் ஆகியோரைப் படைத்து அவர்கள் மூலம் வங்காளப் பெண்ணின் ஒரு நுற்றாண்டுப் பயணத்தின் ஒரு புதிய இடத்தை நோக்கிய அவர்களது பயணப்பாதையில் சமூகத்துடன் தவிர்க்க இயலாத முரண்பாட்டைச் சந்திப்பதைச் சித்திரிக்கிறார்.
19 – ம் நூற்றாண்டு மத்தியில் மேற்குவங்காள கிராமப்புறத்தில் அன்றைக்கு நிலவிய பெண்மை நிலைமைகளுக்கு ஏதிராகக் கலகம் செய்கிறவளாக ஆஷாவின் முதல் கதா நாயகி சத்யவதி அமைந்திருக்கிறாள். அவளது கண்ணோட் டத்தில், ஹிந்து ஆணாதிக்கத்துக்கு எல்லா அம்சங்களிலும் அதனுடைய தன்யத்தன்மையும், அடித்தளமற்ற தன்மையும் காரணமாக பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அர்த்தமற்றதாகவே இருக்கிறது. மரபுக்கும் முடிவற்ற சமூகம் தந்த வலிமையால் அதிகாரம் செலுத்துகிற குடும்ப சர்வாதிகாரிக்கும் எதிராக எண்ணற்ற சின்னஞ்சிறு தினசரி நடவடிக்கைகளின் மூலம் தனக்கென்று ஒரு புதிய பாத்திரத்தை அடைவதில் வெற்றியடைகிறார். ஓரு தாய் மற்றும் சமுதாயத்தின் செயலூக்கமுள்ள உறுப்பினர் ஆகிய நிலைகளில், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுகின்ற தன்னார்வ ஆசிரியராக இருக்கிறாள் அவள், இத்தகைய ஒரு கட்டமைப்பு மாற்றத்தை சந்திப்பதற்காக உறைந்து கிடக்கிற கிராமப்புற அச்சிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேறி கல்கத்தாவில் தனது தனிக்குடித்தனத்தை நிறுவுகிறாள்; அவளது வாழ்க்கையில் பெரும்பகுதியை அந்த நகரத்தில் தனியாகவே கழிக்கிறாள்; அவள் பங்கேற்கிற சமூக, அரசியல் மற்றும் பொருளாதார எதார்த்தங்களை உயிர்ப்புடன் எதிர் கொள்கிறாள். அவளுடைய தனிப்பட்ட கலகம் சமகால வங்காளத்தின் மத, சமூக சீர்திருத்தங்களின் பெரும் உளைச்சல்களினூடே ஆழ்ந்த தாக்கத்தைப் பெற்றிருந்த ஒன்றாக அமைந்தது. ‘முதல் உறுதிமொழி’ நாவலில் அபூர்வமான முழுமையை / துல்லியத்தை எட்டியுள்ளது. அதனுடைய மறுவிளக்கம் சமூக சக்திகளுக்கும் – தனி நபரின் அடையாளத்திற்குமிடை யிலான உறவுகளை நிபுணத்துவத்துடன் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவரது சமகால முதலாளித்துவ எழுச்சியின் வெற்றியலையைச் சரியாக எட்டிப்பிடிக்கிறாள். ஒரு முன்னோடி என்ற வகையில், தனது இலட்சியத்தில் அவள் வெல்லற்கரிய பற்றுறுதியுடனே வாழ்ந்திருக்கிறாள்; அதற்காகக் கடைசியில் அவள் கொடுக்க நேர்ந்தது உச்சபட்ச விலையாக அமைகிறது: காசிநகரில் ஓர் ஆசிரியையாகத் தனிமையில் விலக்கப்பட்ட வாழ்க்கையைத் தன் விருப்பத் தேர்வாக வாழ நேர்கிறது.
இரண்டாவது கதாநாயகி சுவர்ணா, அவளது மகள். ஒன்பதாவது வயதில் அவளுடைய பாட்டியால் திருமண பந்தத்தில் தள்ளி விடப்படுகிறாள். சத்யவதிக்கு, தனது சமாளிக்க முடியாத கலகக்கார மருமகளுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்பதற்காகவே தீர்மானகரமான உறுதி கொண்டிருப்பவள் இந்தப் பாட்டி. சுவர்ணா மரபு சார்ந்த வலிமையான எதிர்வினையை எதிர்கொள்கிறாள். நகர்ப்புற குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தினரிடையே தனக்கான புதிய புகலிடத்தைக் கண்டடைந்திருக்கிறது இந்த மரபார்ந்த எதிர்வினை. மத்திய தர வர்க்கத்தினரான தனது பல குழந்தைகளுக்குத் தாயாகவும், தன்னால் கட்டப்பட்ட ஒரு பெரிய வீட்டிற்கு உரிமையாளராக அதிகாரம் செலுத்துகிற எஜமானியாகவும் ஆக்கி விட்ட ஒரு மனித னின் மனைவி சுவர்ணா, அப்போதைய காலகட்டத்தின் அளவுகோள்களின்படி அவளது கதை பூர்ஷ்வாப் பெண்களின் இலக்கை எட்டிய சாதனைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நவீன சரித்திரத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வங்காளி சமூகத்தின் குறுக்குவெட்டு அலைகளின் உருக்குப் போன்ற ஆவணமாக்கலாக விலைமதிப்பற்ற ஒரு பணியாக நிலைத்திருக்கிறது. வெவ்வேறுபட்ட சக்திகள் அடிப்படைப் பிரச்னைகளைக் குழப்பிக் கொண்டும், குறைந்த கவனம் செலுத்திக் கொண்டும் இருந்த சூழல் அது. வங்காளத்தின் தாராளவாத மற்றும் முற்போக்கு இயக்கங்களிலிருந்து சத்யவதி தனக்கான பலத்தைத் திரட்டுகிறாள்; அவள் பிரம்ம சமாஜிகளுடன் உரையாடுகிறாள். ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்க்கிறாள். அந்நிய ஆட்சியாளர்களின் மீதான பிரமிப்பு குறித்து அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை; நவீன அறிவியல் துறைகளில் அவர்களது உயர்ந்தபட்ச அறிவுத் திறன் மற்றும் பெண்குலத்தின் மீதான அவர்களது மனித நேய அணுகுமுறை, சமூக சீர்திருத்தங்களை நிகழ்ச்சி நிரலில் பின்னுக்குத் தள்ளி விட்டுக் காலனி ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரம் பெறுவது என்ற அரசியல் குறிக்கோள் முதலிடத் திற்குக் கொண்டு வந்திருந்த காலகட்டத்தினூடேதான் சுவர்ணா வாழ்ந்திருந்தாள். தேசியப் போராட்டத்தில் தானும் இணைந்து கொள்ள வேண்டும் என்கிற அவளுடைய தீவிர விருப்பம் எந்த வித ஆதரவையோ, பிரதிபலிப்பையோ அன்றைய புறநிலை எதார்த்தத்திலிருந்து பெறவில்லை; குடும்பத்திற்குள்ளேயோ முற்று முழுதாகப் பெரும் கண்ட னத்திற்குள்ளாகியது. அடிப்படை வாதக் கருத்தோட்டங்களால் பெரிதும் அழுத்தப்பட்டுவிட்ட இந்திய தேசீயம், ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு விடுதலையடைவதற்கு இந்தியப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங் களும் செங்குத்தாக எண்ணிக்கையில் உயர்ந்திருப்பதை விளக்குவதற்கு பயன்படும் ‘தேசீய’ மொழி ஊடகங்களில் அவளைச் சித்திரிக்கும் விதத்தை விளங்கிக் கொள்ளவும் பயன்படும். வேறு வார்த்தைகளில் சொன்னால், சுவர்ணா வின் சொந்தத் துயரங்கள் அவளது காலகட்டத்தின் சமுதாயப் பண்புகளில் ஆழமாக வேரோடியிருந்தன.
மூன்றாவது கதாநாயகியான பாகுல், சுவர்ணாவின் பல புதல்விகளுள் கடைக்குட்டி. நிராகரிப்புகளினாலும், சந்தர்ப்பவாதத்தாலும் மணமாகாதவள் அவள். ஒரு புகழ்மிக்க எழுத்தாளராக வளர்ந்து வருகிறாள். கடைசியாக தனது முன்னோடிகளால் மிக மிக விரும்பப்பட்ட ஓர் இடத்தை வாங்கப் பெண் இனம் வந்தடைந்து விட்டதாகத் தோன்றியது. ஆச்சரியப்படத்தக்க வகையில் பரிணாம ரீதியில் இந்த முக்கிய பரிமாணம் சுட்டப்படவோ, சொல்லப்படவோ இல்லை. பாகுல், பிறவி எழுத்தாளர், வீட்டில் வேண்டா வெறுப்பாகச் சில வருடங்கள் படிப்பை முடித்ததுமே தனது குடும்பத்துடனோ, சமூகத்துடனோ குறிப்பிடத்தக்க அளவு எந்தப் பெரிய முரண்பாட்டையும் எதிர்கொள்ளாமல் தனது பணிவாய்ப்பைச் சட்டென்று பெற்றுவிட முடிகிறது. ஹிந்து பாரபட்சக் குடும்பத்தின் வலிமைமிக்க அதிகாரப் பிடிப்பு, பாகுலின் பாட்டி எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் முட்டுக்கட்டை போட்டு வந்தது; அவளது அன்னையின் அனைத்து உத்வேகங்களையும் நாகரீகமற்ற வன்முறையுடன் நசுக்கி ஒடுக்கியது; இப்போது அதுவாகவே சுக்கு நூறாக உடைந்து சிதறிப்போய் விட்டது போல் தோன்றுகிறது. மிகப்புகழ் பெற்றுவிட்ட ஒரு பிரபல எழுத்தாளரின் சுறுசுறுப்பான வாழ்க்கையை பாகுல் முன்னெடுப்பதை நாம் காண்கிறோம். பல்வேறு கூட்டங்களுக்கும், விழாக்க ளுக்கும் வர வேண்டுமென்று தொடர்ச்சியாக வற்புறுத்தல் களுக்கு ஆளாகிற ஒரு பொதுவாழ்க்கைப் பிரமுகர் பாகுல். வெகுமக்கள் நிர்பந்தத்தால் படைப்புகளின் குவியலை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையிலிருக்கிறாள். தனது தந்தை ஒதுக்கிச் சென்ற ஓர் அறைக்குள் வசித்துக் கொண்டு, தனது சகோதரர்களின் அடுத்த தலைமுறைக் குடும்பத்துக்கு குழந்தைகளுக்குக் கன்னி, அத்தை என்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு அதைச் செவ்வனே செய்து வருகிறாள். அவளது தனிப்பட்ட உரையாடல்கள் எப்போதேனும் ஒரு சகோதரனுடன், சகோதரியுடன் நெருக்கமாகத் தன் இளம் மருமகளுடன் அபூர்வமாக நிகழக் கூடியவையாகி விட்டன.
அவளது வாழ்க்கையில் எந்த ஓர் ஆணும் இடம் பெற்றிருக்கவில்லை; ஒரு நண்பனாகவோ அல்லது ஒரு காதலனாகவோ எவருமில்லை. பெரும்பாலான உறவுகள் எல்லாம். வணிகத் தேவைகளின் அடிப்படையிலான மிகக் குறுகியகால உறவுகள் மட்டுமே. விடலைப்பருவத்தில் தனது பக்கத்துவீட்டு இளைஞனின் குடும்பம் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டதை பற்றி இப்போது சமகாலத் திய மதிப்பீட்டில் பக்குவமடைந்து விட்ட அவளுடைய பிரதிபலிப்பில் வெறும் உணர்ச்சிவயப்பட்ட குப்பையாக ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டது. இயல்பாகவே ஒரு பார்வையாளராக இப்போது அவள் கலக நடவடிக்கைகளின் புதிய வடிவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மரணத்தில் வாழ்வின் இறுதியை உறுதிப்படுத்தி ஆனந்தம் கொள்ள மறுக்கும் பெண்கள், வர்க்கம், பால் வகைப்பட்ட உரிமைகள் மற்றும் வசதிகளை உதறி எறிந்து தியாகம் செய்வதற்காகக் கலகம் செய்கிற பெண்கள் அவளது அங்கீகாரத்தைப் பெற்று வாழ்கிறார்கள்.
மூன்று நாவல்களில் இந்த முடிவு தன் புதிய அடையாளத்தைத் தேடும் வங்காளி பெண் குலத்தின் நீண்ட தேடலின் கால அட்டவணையை வரைந்திருப்பதாகத் தோற்றமளிக்கும். ஆஷா பூர்ணாதேவி அன்று தன்னைச் சூழ்ந்திருந்த சமூக எதார்த்தத்தையும், ஒரு நபர் என்ற வகையில் பெண்ணையும் பற்றிக் கொண்டிருந்த கருத்தோட்டம் பற்றிய தீவிரமான, கவலைகளை, சந்தேகங்களை எழுப்பக்கூடியதாக இந்த முடிவு அமைந்திருக்கும். சமூக மதிப்பீடுகளிலும், அறிவியல் வரையறைகளிலும் ஒட்டு மொத்தமாக ஏற்பட்டு வருகிற வீழ்ச்சியைக் குறித்த நியாயமான கவலையில் இருந்து எதிர்ப்புணர்வின் நவீன வடிவம் கொண்டிருப்பதாக தோற்றம் அளிக்கக்கூடும். ஆனால் அவர் எடுத்துக் காட்டியுள்ள உதாரணங்கள் பெண்களின் போராட்டங்களில் அக்காலகட்டத்துப் பிரதான நீரோட் டத்துடன் மிகச் சிறு அளவே தொடர்புள்ளதாக அமைந்திருக்கிறது. அப்போது எல்லா வர்க்கங்களிலிருந்தும் ‘மென்மையான’ பாலினரான பெண்களில் எண்ணற்ற உறுப்பினர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் வாழ்வாதாரப் பணிகளில், துறைகளில் ஈடுபட்டிருந்திருக்கலாம். வீட்டைப் பராமரிப்பவர்களாகவும், வருமானம் ஈட்டுகிறவர்களாகவும் பெண்கள் இருவேறு பாத்திரங்களை வகித்துக் கொண்டிருந்த காலம். 30 களிலிருந்து பாகுல் 60 களின் கடைசிப்பகுதிக்கு சும்மா கவண்கல் பொறியில் வைத்து வீசப்பட்டு அனாமிகா தேவியாக வடிவம் கொள்வதாகத் தெரிகிறது. இடைப்பட்ட பல வருடங்கள் முக்கியத்துவமற்றவையாய்க் கடந்து போனவையாகத் தோற்றம் கொள்கின்றன. இக்கால கட்டம்தான் வங்காளி சமூகத்தில் பல குரூரமான உக்ரம் நிறைந்த எழுச்சிகளும் மாற்றங்களும் நேர்ந்த ஒரு தீவிரமான கால கட்டம். தொடர்ச்சியாக வங்கப் பஞ்சம், இரண்டாவது உலக யுத்தம், மதக் கலவரங்கள், இறுதியாக வங்கப்பிரிவினை – இவையெல்லாமாகச் சேர்ந்து வங்காளி ஹிந்து சமூகக் கட்டமைப்பை ஒழுங்கற்ற பல துண்டுதுக்காணிகளாகச் சிதறியடித்துவிட்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆண்கள் எடுத்த முடிவுகளால் விசிறிவிடப்பட்ட இத்தகைய சம்பவங்கள் பல நூறாயிரம் பெண்களை, அவர்களுடைய மரபார்ந்த வீட்டு, குடும்பத்து நிலைத்தன்மையை வேரோடு பிடுங்கித் தூக்கியெறிந்தன. கற்பழிப்பு, பசி மற்றும் கைவிடப்படுதலினால் இந்தப் பெண்கள் தெருக்களில் வீசி எறியப்பட்டனர். அவர்கள் தங்களுக்காக மட்டுமன்றி, தங்களைப் பாதுகாக்கவோ ஆதரவாகவோ இருக்கவோ முடியாமற்போன தமது ஆண்களுக்காகவும் சேர்ந்தே தெருவிலிறங்கிப் பாடுபட்டுப் பொருள் சேர்க்க நேர்ந்தது. அனாமிகா தேவி என்ற பிரபல எழுத்தாளர், குடும்பம் எனும் தளை ஏதும் இல்லாதவர் ஆக இருந்தும் இந்த நிகழ்ச்சி வரிசைகளில் தன்னையோ அல்லது வேறு எந்தப் பெண்ணையோ தொடர்புபடுத்திக் கொள்ளவே இல்லை.
இந்த நிகழ்வுகள் வங்காளிகளின் மனதில் நிரந்தரமான ஓர் ஆழ்ந்த துயரப்பதிவாக நிலைத்து விட்டவை. அவளது சொந்தத் தாயும், பாட்டியுமே கூட நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டவர்களாயிருந்தும் கூர்மையான வரலாற்றுத் தன்னுணர்வை அவர்கள் வெளிப் படுத்தியிருந்தார்கள். ஆனால், இப்படியாக இந்த நிகழ்ச்சிகளின் தொடர்விளைவாக ஹிந்து பட்சபாத சமூக அமைப்பிடமிருந்து விலகி இணையாமல் நிற்பதென்பது அவரது ஆய்வெல்லைக்கு வெளியில் விழுந்து ஆஷாபூர்ணாதேவி தீட்டியுள்ள சுதந்திரத்துக்குப் பிந்தைய வங்காளி பெண்ணின் சித்திரம், முந்தைய யுகத்தின் பெண்களை வழங்கியதைப் போன்று அதே நம்பகத் தன்மையுடனோ மிக ஆழ்ந்த தெளிவைப் பிரதிபலிக்கும் வகையிலோ அமைந்திருக்கவில்லை. ஒரு மாபெரும் எதார்த்தவாத நாவலின் கதாநாயகி வெறுமனே ஒரு தனிநபராக மட்டுமின்றி ஒரு வர்க்கத்தின் சிறப்பு மரியாதைக்குரிய மற்றும் தனது காலத்தின். பிரதிபலிப் பாயிருக்கக்கூடிய ஓர் அபூர்வக் கலவையாயிருந்திருக்க வேண்டும். சத்யவதியும்,சுவர்ணாவும் அத்தகைய பாத்திர வார்ப்பின் ஆகச் சிறந்த உதாரணங்களகத் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளுகையில், பாகுலோ அல்லது இந்த முடிவுப் பகுதியில் வரும் எந்த ஒரு சிறிய கதாபாத்திரமோ தமது கால கட்டம் மற்றும் வெளி சார்ந்த தேவையான எந்த ஒன்றையும் பொதுவான வகையிலோ – சிறப்புத் தன்மை யிலோ பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளவில்லை.
‘பெண்’ பற்றிய ஆஷாபூர்ணாதேவியின் கருதுகோளை ஆராயும் போது அந்த ஆய்வின் முடிவு தீவிரமான ஒரு முரண்பாட்டை நோக்கிக் குவிகிறது. திருமணம் என்கிற ஒரு நிறுவனத்தின் மீது தனக்கும் நம்பிக்கையைத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்திக் கூறுகிறது. குடும்பம் தான் ஒரு பெண்ணின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான மூலவளம் – ‘அவளது பாதத்திற்குக் கீழே பூமி, அவளது தலைக்கு மேலே கூரை’. அதே சமயம், அவரது கண்ணோட்டத்திலும், அனுபவத்திலும் பெண் ஒரு தனி நபர் என்ற வகையில் குடும்பத்தில் அவளுக்கான இடத்தை நிர்ணயிக்கும் ஹிந்து சமூகத்துடன் தொடர்ந்து ஒரு நீண்ட கால எதிர்ப்புணர்வு இருந்து வந்திருப்பதை அவரறிவார். எனவே ஒரு கலைஞர் என்ற முறையில் ஒரு நடவடிக்கைப் போக்கைத் துல்லியமாக வரையறுத்துச் சித்திரித்திருந்தார்: அது மாற்றமேதுமின்றி நிலையாக குடும்பத்தின் மைய இடத்திலிருந்து பெண்ணை அகற்றி விளிம்பை நோக்கி அவளைத் தள்ளிச் செல்வதாகவே எப்போதும் அமைந்திருந்தது. அவருடைய கதாநாயகிகளின் புனைவுலக வாழ்க்கையில் ‘பூமி’ பெண்ணைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிற புதைமணலாகவும், ‘கூரை’ ஒரு மனிதப் பிறவி என்ற வகையில் பெண் வளர்வதற்கு இயலாமல் மிகத் தாழ்வானதாகவுமே அமைந்திருந்தன. ஆளுமையுடன் கூடிய ஒரு பெண் படிப்படியாகக் குடும்பத்தினுள் விளிம்பிற்குத் தள்ளப்படுபவளாகவே ஆகிறாள். சத்யவதி தனது கணவரையும், குழந்தைகளையும் கைவிட்டு ஒதுங்கி விடுகிறாள்; சுவர்ணாவும் அவர்களிடமிருந்து விலகிக் கொள்கிறாள்; பாகுல், பால் தன்மையற்ற ஒரு பொதுப் பிம்பமாக மட்டுமே இருக்கிறாள்; அவளுக்கென்று யாருமில்லை.
கல்வி கற்பதற்கும், வெளியுலக வாழ்க்கையில் பங்கேற்பதற்கும் பெண்ணுக்குள்ள பிரச்சனைகள் ஆஷா பூர்ணாதேவியின் படைப்புகளில் திட்டவட்டமான சம காலத் தன்மையுடன், நுண்ணுணர்வுடன் இடம் பெற்றிருக் கின்றன. இவை வங்காளி மனதில் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்வு காணப்பட்டுவிட்ட பிரச்னைகளாகவே அமைந்திருக்கின்றன. அவருடைய மேதைமை கடந்த காலத்தை மீளவும் உயிர்ப்புடன் சித்தரிக்கும் வாழும் வல்லமை அவரது சொந்த வாழ் நாட்களிலோ அல்லது இன்றைக்கும் போலவோ பாரபட்ச அமைப்புக்கு ஏதேனும் தீவிர சவாலையோ, அச்சுறுத்தலையோ உண்மையிலயே விடுத்திருந்ததா என்று ஒருவர் இன்னமும் ஐயுறக்கூடும். வங்காளத்தின் வேறு சில பெண் எழுத்தாளர்களை நாம் நினைவுகூர்ந்தோமென்றால், சுவர்ணகுமாரி, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பெண்ணின் உளவியலை ஆழமாக ஆராய்ந்து அதனுடைய ஆழத்தில் தற்காலிகமான, குறுகிய கால காதலுக்கு எப்போதும் நிலையான ஒரு கோரிக்கை இருந்து கொண்டே இருப்பதை உணர்த்தியிருப்பார். அல்லது, இரு சகோதரிகளான சீதா மற்றும் சாரதா தேவி 1920 – களில், பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு, தேர்வு செய்வதில் உரிமையும் கோரி விருப்பமுற்று நின்ற புதிய வங்காளப் பெண்ணின் வகை மாதிரியைப் படைத்துக் காட்டியிருந்தார்கள். அல்லது, 40 -களில் பெண்ணின் பாலியல் தன்மையுடன் வெளிப்படும் ஆண் எதிர்வினையையும், சகிப்புத் தன்மை அல்லது கைவிட்டுவிடும் தன்மை (கடைசி நிகழ்வில்)யையும் எதிர்கொண்டு நின்றதைக் காண முடியும்.இவற்றை எல்லாம் காண்கையில் ஆஷாபூர்ணாவின் மீது குவிக்கப்பட்ட கௌரவங்கள், வழங்கப்பட்ட விருதுகள், அதேபோல் பல்கிப் பரவியிருந்த அவரது புகழ் – இவையெல்லாம் ‘பாதுகாப்பாளர்,’ ‘சரியான’ ஒரு திறமை படைத்த பெண்ணை நிறுவனமயமாக்கும் ஹிந்து ஆண் விருப்பத்திலிருந்து நீட்சி பெற்றதன் வடிவமாகக் காணலாம். இந்தச் சந்தேகம் இலக்கிய விமர்சனத்தின் விதிகளை உருவாக்கும் ஆண் அறிவு ஜீவிகள் ஒட்டு மொத்த மாகத் தரும் தொகுப்பு வடிவம் எந்தவித மரியாதைக்கும் தகுதியற்றது என்று தெளிவற்று ஒதுக்கித் தள்ளுவதில் உறுதிப்படுகிறது. அவரது படைப்புகள் பிரபலமான கருத் தாக்கத் தொகுதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவனவாக இருந்தன என்று கூட ஒருவர் அச்சமடையலாம். துன்பப்படு வதில் ஒரு மகோன்னதம் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள தொன்மத்தை விநியோகித்துச் செல்வதாக, அநீதியையும், சமமற்ற தன்மையையும் ஒவ்வொரு நாளும் சந்தைப்படுத் தும் வணிகமயமாக்குதலுக்கு உட்படுத்துவதாகக் கூடக் கருதக்கூடும்.
பிரச்சனைகள் காலங்கடந்தவையாக ஆகும் தருணத்தில் சமூகத்தின் கவலைகள் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கி விடுகின்றன என்பதை ஒருவர் மிகுந்த சிரமத்துடன்தான் மறுக்க முடியும். ஆஷாபூர்ணாதேவியின் பரந்த எழுத்துத்தொகுதியின் பொருத்தப்பாடு என்று எது மீந்திருக்கிறது என்று பார்ப்போமானால், அடிப்படையான சமூக அமைப்புடன் ஒத்துப்போக முடியாத, முரண்பட்டு நிற்கிற ஒரு தனிநபர் என்றென்றைக்கும் எதார்த்தத்தை எதிர்த்துக் கலகம் செய்கிற இலட்சியவாதி – இந்த பிம்பத்திற்கு மரபார்ந்த நிழற்பிரதி ஒரு காவியத்தன்மையை வழங்கி விடுகிறது. தனது காலத்தில் ஆஷாபூர்ணாவின் ஆண் முன்னோடிகளான ரவீந்திரநாத் தாகூருடனோ, வீரபத்திரருடனோ அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றிய ஒரு முன்னோடியோ, பரிசோதனைவாதியோ அல்ல. எது ஆஷாவைத் தனித்து எடுப்பாகக்காட்டியது என்றால் படைப்பின் செய்நேர்த்தியில், கதை சொல்வதில், பாத்திரப்படைப்பில், நடையில் எளிதாக அவர் பெற்று விட்ட வெற்றிகரமான நிபுணத்துவம் தான்.
அசலான நிகழ்வைப்பற்றி ஒரு கருத்துதான் தொடக்க வாக்கியமாக அமையும்; நிகழ்வின் முடிவைப் பற்றியதாக அது அமைந்திருக்கும். சட்டெனவும், கூர்மையாகவும் முரண்பட்ட ஒரு கருத்து அல்லது கவனத்தை ஈர்த்துக் கவ்விப் பிடிக்கிற ஒரு கேள்வியுடன் தொடங்கி அசல் நிகழ்வு பின் வருவதாக அமையும். மரபு சார்ந்த கவித்துவ எல்லைக்குள் ஆஷா கால வரிசையில் விவரிக்க முடியாத வேறுபாடுகளை அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களுடன் பாத்திரவார்ப்புத் தன்மையோடு படைத்தளிப்பதை அறிமுகம் செய்திருந்தார்.
பொதுவாக அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நன்கு அறிமுகமாகியிருக்கக்கூடிய மனிதர்களே அனைத்துப் பாத்தி ரங்களாகவும் படைக்கப்பட்டிருப்பதால் வாசகர் அவர்க ளின் உணர்வுகளோடு ஒன்றிப் போவதற்கு ஆஷாவின் நுட்ப மான கலவை, எதார்த்தத்தையும், விமர்சனத்தையும் இணைத்திருந்த கலவை -மிகவும் திறன் படைத்த ஒன்றாக அமைந்திருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி எழுத்தாளர்களால் நிறுவப் பெற்ற எதார்த்தவாத மரபிலிருந்துதான் ஆஷா தனது பாணியைப் பெற்றிருப்பினும் அவர்கள் எல்லாரை யும் தாண்டி வெகுதூரம் முன் சென்றவர். ஒரு ஹிந்துக் குடும்பம் என்பது மரபார்ந்த மதிப்பீடுகள் மற்றும் நெறிகளின் சுவர்க்கம் என்பது மாதிரியான புனைவுகளை ஈவிரக்கமின்றித் தகர்த்தவராக இருந்ததுதான் இந்த முன்நகர்தலின் அடிப்படையாக அமைந்தது. சராசரி மத்திய தர வர்க்க வாழ்க்கை எதார்த்தைச் சற்றே மிகைப்படுத்திய தன்மையான அவரது உத்தி நாடக பாணியில் காட்சிப் படுத்தியதன் ஓரளவிற்கு அடிப்டையற்ற தன்மையை புவியியல் எல்லைகளுக்கப்பாலும் ஒட்டுமொத்தப் பெண் இருப்பை கூர்மைமிக்க கத்தியைப் போன்ற வரிவடிவில் ‘மூன்றாம் உலகப் பரப்பில்’ ‘சமைப்பது, குழந்தைகளை ஓயாமல் அடித்துத் துவைத்து வம்பளப்பது, அவமானப் படுத்தும் குத்தல் மொழிகளை இடையறாமல் பரிமாறிக் கொள்வது மற்றும் எப்போதேனும் ஹிஸ்டீரியலாக வெடிப்பது‘ என்பதான சித்திரத்தை வரைந்தளிப்பது. மொழியைப் பயன்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பெண்மை சார்ந்த நடையை சற்றும் பிசகாமல் உள்வாங்கிக் கொண்டதில்தான் ஆஷாவுடைய மிகப் பெரிய வளம் உள்ளுறைந்திருக்கக் கூடும். முயற்சி ஏதுமின்றியே பெண் களின் வெவ்வேறுபட்ட உரையாடல்கள், பிரத்யேக மொழி வழக்குகளைக் கச்சிதமாகக் கவ்விப் பிடித்துப் பதிவு செய்ததன் மூலம் தாய் மொழியைப் பயன்படுத்துவதில் கூட எப்படி பால் வேறுபாடு நீட்சி பெற்றிருக்கிறது என்பதை ஆஷா நிறுவியிருக்கிறார். எதார்த்தத்தைப் போலி செய்து அதற்கொரு நம்பகத்தன்மையை வழங்குவதற்கு ஒரு நாவலாசிரியரின் கலையில் எதார்த்த மொழிநடை நிறுவப் பட்ட உட்பகுதியாக ஏற்கனவே நிலைபெற்றிருந்திருக் கிறது. ஆனால், ஆஷாவிற்கென்றமைந்த இயல்பான திறனை, சாதாரண வங்காளிப் பெண்ணின் துல்லியமான பேச்சு வழக்கைப் பதிவு செய்வதில் யாராலும் தோற்கடிக்க முடியாது. மரபுத் தொடர்களும், பழமொழிகளும் அசாதாரண நேர்த்தியுடன் நெய்யப்பட்ட மொழியில் பெண்ணிய முத்திரை பதிந்த பிரத்தியேக வார்த்தைகளின் பிரயோகம் அடிக்கடி நிகழும். சிதறலாய்த் தெளிக்கப்படும் இவற்றின் வேர்கள் இந்தியத் தன்மை வாய்ந்த எளிமைப்படுத்தப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட சமஸ்கிருதத் தொடர்களாகும். தரமான வங்காளி மற்றும் ‘சரியான’ சம்ஸ்கிருத வடிவங்களைப் பயன்படுத்துகிற திறன், ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. ஹிந்து மேலாதிக்கம், வர்க்கம், பாலினம் ஆகியவற்றின் அதிகாரத்தை வலுவாக மறுக்கும் மாற்று ஊடகமாக தாய்மொழி உருவாகி வந்துள்ளது. இந்த நம்பகமான குரலுடன்தான் பெரும் திறன்மிக்க கலைஞராக காலத்தை வெல்லக்கூடிய கருப்பொருளுடன் ஆஷா பூர்ணா தேவி இலக்கியத்தில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தைக் கண்டடைந்திருக்கக்கூடும்.
” Asha Purna Devi : An Authentic Voice”
An article translated from English by Kamalalayan
From the book : ‘Author’s Speak’ edited by k.sachithananthan; published by Sakithya Akadamy
Sixteen authors of Indian launguages speak their works and lives.
First published : 2006