ஆயுத எழுத்து :களத்தின் மொழி – இரா.மோகன்ராஜன்
கடந்த அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நீடித்து வந்த அரசியல் உரிமைப்போர் பிற்பாதியில் ஆயுதப்போராட்டமாக மாறி, மிகப்பெரிய அர்ப்பணிப்புகளையும், அழிவுகளையும் தமிழர் வாழ்வில் கோரியிருந்தது. பாராளுமன்ற வழியிலானப் போராட்டங்கள் யாதொன்றும் தோற்றுப் போன நிலையில் ஆயுதம் தறித்த வழிமுறையிலான, வன்முறைவழியிலானப் போராட்டத்தைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டியவர்கள் ஆனார்கள்.
பாராளுமன்ற வழியிலானச் சகல சனநாயகப் போராட்டங்களும், தலைமைகளும் தோற்ற இடத்திலிருந்து ஆயுதப்போராட்டம் எழுந்தது. தொடங்கியது. பாராளுமன்ற வழியை மூத்தத் தலைமைகள் முன்னெடு த்திருந்தன. பின் வந்த இளையோர் அந்த வழிகளை நிராகரிக்க வேண்டியவர்கள் ஆனார்கள். அதற்குக் காரணம் சிங்களப் பெரும்பான்மை வாதம் பேரினவாதமாக மாறியிருந்ததுதான். தமிழர்களின் பாராளுமன்ற வழியிலான மென்முறைப் போராட்டங்களையே அது சகித்துக் கொள்வதாக இருக்கவில்லை. அடக்கு முறைகளையும், வன்முறைகளையும் அது தமிழர் பிரதிநிதிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் ஒருசேர ஏவிக் கொண்டிருந்தது.
தமிழர்களின் சனநாயக வழியிலானச் சகல அரசியல் உரிமைகளையும் வளர்ந்து வந்திருந்தச் சிங்களப் பேரினவாதம் நிராகரித்ததுடன் அவ்வாறானச் சிறு அரசியல் உரிமைகளையும் அது சட்ட வழியுலும், அதற்கு அப்பாலும் வன்மையாக மறுத்தது. அடிப்படை அரசியல் உரிமைகளைக் குறிப்பாக பிரித்தானியர் வழங்கியிருந்த சிறுபான்மையினருக்கான அரசியல் வழியிலானப் பாதுகாப்புச் சட்டங்களை விடுதலைக்குப் பிறகு அது திருத்திக் கொண்டது. ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஒப்புக்கொள்ளாமை. தமிழர் நிலங்களையும், அரசியல் உரிமைகளையும் படிப்படியாக பறித்தெடுத்துக் கொண்டதுடன் அவர்கள் வாழும் பகுதிகளைப் படைத்தளமாக்கி அவர்கள் மீது போர் தொடுத்தவை என கடந்தகாலச் சிறிலங்கா அரசின் அரசியல், அரசியலுக்கு அப்பாலான வன்முறைகள் மனித சமூகம் இதுவரையிலும் கண்டிராத ஒன்றாகும்.
அதன் ஒட்டுமொத்தத் திரட்சியாக இன்றைக்கு இறுதிப்போர் என்று சொல்லப்பட்டத் தமிழர் மீதான இனஅழிப்பின் பின்பாகச் சிங்களப் பேரினவாதம் வழங்கியிருக்கும் ராஜபக்ச குடும்பத்தின் முற்றுரிமை அரசியல்.
பாராளுமன்றச் சனநாயகம் தோற்று அதன் பின்பாக இளைஞர்கள் ஆயுதம் தரித்த காலங்கள் 70களில் தொடங்கினாலும், சிறிலங்கா படையணிகளை எதிர் கொள்ளும் வலுவை அவர்கள் 1983 கறுப்பு யூலை என்று தமிழர்களால் நினைவுக் கூறப்படும் 83 ஆம் ஆண்டு ஜுலை திங்களில் நடைபெற்ற தமிழர்கள் மீதானச் சிங்கள முப்படையினர் மற்றும் அரச ஆதரவு பெற்ற சிங்களக் காடையினரின் தமிழர் மீதான இன அழிப்பும் மற்றும் திட்டமிட்டத் தாக்குதல் என்பன அரசியல் அரங்கில் என்றுமில்லாத வகையில் அதிர்வுகளை ஏற்படுத்திருந்தன. தமிழருக்கு எந்த உரிமையும் தர முடியாது என்று அன்றையச் சிங்கள சனாதிபதி ஜெயவர்த்தன முழங்கினார். தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழகத்திற்கும் இன்ன பிற நாடுகளுக்கும் புலப்பெயர்ந்தனர். 83 ஆம் ஆண்டின் இனக் கலவரம் குறித்து சனாதிபதி ஜெ.ஆர்.ஜெயவர்த்தன பேசும்போது, “அது தமிழர்களுக்கானச் சிங்களவரின் நீதியான எதிர்வினை” என்றார்.
83 கலவரங்களில் கொழும்பு வெளிக்கடைச் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 34 பேர் சிங்களப் படையினராலும், சிங்களக் குண்டர்கள் மற்றும் சிறை கைதிகளாலும் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர். அன்றைக்கு எதிர்கட்சி என்ற தகுதியிலிருந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை. அவர்கள் பதவி விலக வேண்டியிருந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உயிர் பிழைப்பதே பெரும்பாடாக இருந்தது. அவர் மாறுவேடத்தில் இந்தியாவிற்குத் தப்பி அரசியல் தஞ்சமடைய வேண்டியிருந்தது.
சிறிலங்கா அரசு, தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைச் சலுகைகள் என்ற அளவிலேயே பொருட்படுத்திக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவிற்குள் ஏதிலிகளின் வருகையும் அதனைத் தொர்ந்துத் தமிழ் இளைஞர்கள் சிறிலங்காப் படைகளை ஆயுத வழியில் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலும் இந்தியக் கரைகளை அடைகின்றனர். ஏதிலிகளுக்கு அடைக்கலமும், இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி மற்றும், பயிற்சி முகாம் அமைத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறது இந்தியா.
1983 ஆம் ஆண்டின் கலவரத்திற்கு இரு வாரங்களுக்கு முன்பாக ஆயுதம் தறித்தச் சிறு குழுவாக அன்றைக்கு இருந்தப் பிரபாகரன் தலைமையிலானத் தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறு குழுவொன்று அணிவகுத்துச் சென்ற சிறிலங்காக் கடற்படை அணிவொன்றை கண்ணி வெடி வைத்துத் தாக்கித் தகர்க்கிறது. இதன் பின்னரே தமிழர் நிலமெங்கும் கலவரங்கள் வெடிக்கின்றன. ஏதுமறியாதத் தமிழ்மக்கள் வாழ்விலும், நிலத்திலும் அவர்தம் குருதியில் நனைகிறது. அமைதியாகத் தானுண்டு தனது வேலையுண்டு என்றிருந்தத் தமிழர்களை ஆயுதப் போராட்டத்திற்குள் இழுக்கிறது சிங்களப் பேரினவாத அரசியல், அடக்குமுறை, திட்டமிட்ட வன்முறைகள்.
இந்தப் பின்னணியில் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட வாழ்வை அதன் மெய்யான வரலாற்றுடன், மெய்யான மனிதர்களுடன் வைத்து ஒரு காலத்தின் குருதி உறைந்தப் பக்கங்களைச் சொல்ல முயன்றிருக்கிறது சாத்திரி எழுதிய ‘ஆயுத எழுத்து” என்ற நாவல். புனைக் கதை என்று அதை சொல்லிவிட முடியாது. ஆனால் புனைகதைக்கானச் சகலத்தையும் கொண்டிருக்கிறது இரத்தமும், சதையுமான இப்புதினம்.
அவனுக்கு முகமில்லை. முகம் இருக்க வேண்டுமென்பதில்லை. முகமற்றவர்களின் முகத்திற்கானப் போராட்டம் என்பதால் அவனுக்கு முகம் இருக்கவில்லை. ஆனால் பெயர்கள் இருக்கின்றன பற்பல பெயர்கள். ஏதிலி என்று சொல்லாம், போராளி, பயங்கரவாதி என்று எப்படிவேண்டுமானாலும். சொல்லிக் கொள்ளலாம். அவன் ஒருவன் மட்டுமல்ல அவனது பெயர்களைப் பேலவே பலப்பல பெயற்களில் அவன் ஒருவனே இருக்கிறான்.அப்படியான ஒருவன் பற்றியப் பலரின் கதையே ஆயுத எழுத்து.
நாற்பதாண்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னணியிலானக் கதை இது. தனிப்பட்ட ஒருவனின் கதை சக மனிதர்களின் கதையாகவும், பின்னர் அதுவே உலக மனிதர்களின் கதையாகவும் விரிகிறது. போரும், போர்க்கள வாழ்வும், புலப்பெயர்வும், நிலமிழப்பின் பெரு வலியும், உறவுப் பிரிவும் உலகத்தின் பிற துயர்களுடன், அரசியலுடன், கதைகளுடன் சாத்திரியின் ஆயுத எழுத்தும் ஓரெழுத்தாக மாறிக் கொண்டுவிடுகிறது.
அவனுக்கும் பிற எல்லா இளைஞர்களையும் போல ஒரு வாழ்வும், அதில் திட்டிக் கொண்டே இருக்கும் தந்தையும், அரவணைக்கும் அம்மாவும். அன்பு சகோதரியும், சகோதரனும், ஒரு கனவும், ஒரு காதலியும் இருக்கவே செய்கிறார்கள். 1983 யூலைக் கலவரத்தில் அவனது ஊரும், தெருவும், உறவும் குருதி சிந்துகிறது. படையணியினர் வீதியால் வந்து துவக்குச் சூட்டில் ஏதுமறியா மக்களை கொன்றுபோடுவதை நேரில் கண்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போன்றே அவனும் ஆயுதப்போராட்டத்தை ஒரு வழிமுறையாகத் தெரிவு செய்பவனாக இருக்கிறான். பள்ளி இறுதித் தேர்வுக்குப் பிறகாக அவனும் கல்வியையும், காதலியையும் பிரிந்து ஆயுதக் குழுவில் இணைகிறான். தமிழ் இளைஞர்களின் இறுதிப் புகலிடமாக ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன. அவனும் தூக்கிச் சுமக்க முடியாதக் கனரக ஆயுதங்களுடன் ஈழக் கனவையும் காவித்திரிகிறான்.
பிள்ளைகளுக்கு ஒரு காதல் இருப்பதை சாதியால் இறுகிப்போன யாழ் சமூகம் ஏற்றுக் கொண்டது. அது ஆயுதப் போராட்டத்தின்பால் இளைஞர்கள் சென்று இணைந்து கொள்வதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் சுயநலமாகக் கருதினார்கள். ஆனால் வாழ்நிலை அவ்வாறு இருக்கவில்லை. ‘பிள்ளைகள் வீடு திரும்பாத காலம் ஒன்றின் பிரதிநிதிகளாகப் பெற்றோர் வாழத்தொடங்கியக் காலம் அது’.(பக்-33) என்று அதை சாத்திரி நினைவுகூறுகிறார் அதை. யாழ் திண்ணவேலி சந்தியில் வைத்துப் படையினர் புலிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்துத் தமிழ், சிங்கள இனங்களிடையே அன்றாட வாழ்கை என்பதுச் சாதாரணமானதாக இருக்கவில்லை. தமிழ் இளைஞர்களுக்கு அது அடக்குமுறைக்கு எதிரான முதல் தொடக்கமாகவும், சிங்கள மேலாதிக்கவாதிகளுக்கு அது பயங்கரவாதமாகவும் மாறிக்கொண்டிருந்த காலத்தில் யாழ் இளைஞர்கள் அவர்களது பெற்றோர்களை, உறவுகளை, சகோதர, சகோதரிகளை, காதலிகளைப் பிரிந்து இயக்கத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.
இளைஞர்களின் முன்பாக இரு தெரிவுகளே இருந்தன ஒன்று ஆயுதப்படைகளிடம் சாரணடைந்து செத்துப்போவது மற்றது ஆயுதப்போராட்டத்தை எதிர் கொண்டு வீரச்சாவடைவது. பின்னதில் இருந்த சுயமரியாதை, கனவு என்பன ஆயுதக்குழுக்களை நோக்கி அவர்களை உந்தித்தள்ளின.
இலங்கையின் வடக்கு கிழக்கில் பல விடுதலை இயக்கங்கள் முளைக்கத் தொங்குகின்றன. அவற்றில் ஒன்று உமாமகேசுவரன் என்ற முகுந்தனின் தமிழீழ விடுதலைக் கழகம். ‘பிளாட்’ அதில் உள்ளுர் இளைஞர்கள் பெருமளவில் இணைகின்றனர். யாழ்ப்பாண சமூகம் எப்போதும் சாதி, கல்வி இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன் படி புளொட் அமைப்பின் தலைவர் உயர்ச் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவராகவும் இருந்தார். எனவே இளைஞர்கள் பெருமளவில் பிளாட் அமைப்பில் இணைந்து கொண்டதை நாவல் சுட்டிக் காண்பிக்கும் அதே வேளையில் ஈபிஆர்எல்எப் ஒடுக்கப்பட்டவாகள் நடுவில் வளர்ந்ததையும், பெரிய பெரிய கம்யூனிச புத்தககங்களைப் படிக்கக் கொடுத்து தெரிவு செய்வதையும் சொல்லிச் செல்கிறது. அடக்குமுறைக்கு உள்ளான இளைஞர்கள், எடுத்தவுடன் துவக்கு ஏந்தி களமுனைக்குச் செல்ல ஏக்கமுடையவர்களாக பலிக்குப்பழி வாங்குபவர்களாக இருந்தார்கள். ஒரு சில பயிற்சியின் வழி துவக்கை கையில் கொடுத்து அவர்களை இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் புலிகளின் தொடக்கக்கால வழி முறையானது அவர்கள் பின்னாளில் எப்படி பெரியதொரு இயக்கமாக வளர முடிந்தது என்பதைச் சொல்கிறது.
அவனும் பிற ஈழ இளைஞர்களைப் போன்றே புலிகளைத் தெரிவு செய்வதில் வியப்பொன்றுமிருக்கவில்லை. இயக்கமும், இயக்கத்துடன் அவனும் சேர்ந்தே வளர்கிறார்கள். இயக்கத்தின் முதிர்வு, முதிர்வின்மை, பலம், பலகீனம் என சேர்ந்தே வளர்கிறார்கள். வளர்த் தெடுக்கப்படுகிறார்கள். இந்தியா அவர்களுக்கு பின்தளமாக இருக்கிறது. களம் மற்றும் அரசியற் செயற்பாட்டிற்கு. இயக்கத்திற்குள் மட்டுமல்ல பிற இயக்கங்களுடனும் முரண்பாடு எழுகிறது. தலைவரது திருமண முடிவு இயக்கத்திற்குள் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பிளாட், டெலோ போன்ற இயக்கங்களுக்குள்ளாக உள் சனநாயகம் துடைத்தெறியப்படுகிறது. களத்திலும், புலத்திலும் பல படுகொலைகள் ஈழத்தின் பெயரால் சொந்த குருதிகளை ஓடவிட்டே நீதிபடுத்தப்படுகிறது. அவன் வெடிகுண்டு பயிற்சியாளனாக இயக்கத்தினுள் அறியப்படுகிறான்.
அவன் சிறிலங்கா அரசின் இனவெறியை, பேரினவாத போக்கை நீதிபடுத்தும் படை நடவடிக்கைகளை, வன்முறை வெறியாட்டங்களை, அடக்குமுறையை எதிர்த்தே இயக்கத்தினுள் வருகிறான். முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்கள் அப்படியாக இருக்கவில்லை. போராட்டம், இலக்கு, புனிதமாக இருந்தாலும் இயக்கம் புனிதமாக இருக்கவில்லை. எ அவன் அறியவே செய்கிறான். காதலில் விழுந்துவிட்ட ஒரு பணக்கார செட்டியார் இயக்க ஆதரவாக இருக்கிறார். இலட்சக் கணக்கில் இயக்கத்திற்குப் பணம் தருகிறார் என்பதற்காகவே அவரது மகளை காதலனிடமிருந்து பிறித்தெடுத்துத் தருகிறார்கள். இயக்கதின் நிதி சுமை அவர்களைத் தொடக்கக்காலத்தில் இப்படியாக இயக்குகிறது. அது போலவே சுதுமலை அம்மன் கோயில் கொள்ளை. இயக்கம் ஆயுதம் வாங்குவதற்கும் பிற செலவுகளை ஈடுகட்டுவதற்கும் தள்ளாடும் போது தமிழ் நிலத்துக் கடவுள்களே உதவுபவர்களாக இருக்கிறார்கள். இது சகல இயக்கங்களுக்கும் பொதுவானக் கொள்(ளை)கையாக, இருந்தது. புலிகளும் விலக்கல்ல. ஆனால் தலைமைக்குத் தெரிவிக்காமல் கொள்ளை அடிக்கப்படுகிறது. தலைவர் இதை விரும்பவில்லை. தலைவர் அம்மன் மீது கடவுள் மீது நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். ஆனால் அன்றைய யாழ்தளபதி கிட்டுவுக்கு அந்த நம்பிக்கை இருக்கவில்லை. காரணம் அவர்களது தமிழகத்துடனான, பெரியாரிய இயக்கங்களுடனான தொடர்பு என்கிறார் ஆசிரியர். பிரதித் தளபதிக்கு மட்டுமல்ல இயக்கத்தின் பல போராளிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
இந்தியத் தலையீடு இயக்கங்களுக்குள் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துகிறது. ரெலோ அழிக்கப்படுகிறது. சிறியைத் தேடும் குழுவில் அவனும் இருக்கிறான். அதன் தலைவர் சிறிசபாரட்ணம் சரணடையத் தயாராகவிருந்தும் கோண்டாவில் பகுதியில் ஒரு புகையிலைக் குவியலுக்குள் வைத்து கிட்டுவால் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்படுகிறார். ‘தம்பியோடை கதைக்கிறன். தம்பி என்னைச் சுட சொல்ல மாட்டார்!” என்று கெஞ்சுகிறார் சிறி. ஆனால் பொறுப்பாளரின் முகம் இறுகுகிறது. துரோகி என்று சொல்லி அவரை சுட்டுத்தீர்க்கிறார்.
பிற்காலங்களில் இந்த துரோகி என்ற சொல் எவ்வாறெல்லாம் ஈழ விடுதலை வெளியில் நீதிபடுத்தப்பட்டது. புழங்கியது என்பதைத் துவக்குகள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது. துவக்குகள் மவுனிக்கும் வரைத் துரோகிகளும், துரோகங்களும், துரோகம் என்ற சொல்லும். துரோகத்திற்கானச் சொற்களும் நீடிக்கவே செய்தன. இறுதிப்போரின் முன்னும், பின்னும் அவை மட்டுமே உயிர்த் தரித்திருக்கின்றன.
நிலத்தகரறுகளில் ஒரு கட்டைப் பஞ்சயாத்து தலைவரைப்போலவே போராளிகளின் வட்டாரப் பிரதிநி இயங்குகிறார். இப்படிதான் இயக்கங்கள் வளர்கின்றன. மக்களை அச்சுறுத்தியும், இயக்கத்தினரை அச்சுறுத்தியும், இயக்கங்களை அச்சுறுத்தியும். அச்சுறுத்தலும், இயக்கமுமே வளர்கின்றன. சனங்கள் சிறிலங்கா அரசின் பெரிய அச்சுறுத்தலை சிறிய அச்சுறுத்தலுடன் சமன்படுத்தியவாறு மனச் சமாதானம் கொள்கிறார்கள். எனினும் தொடக்கக் காலங்களில் மிதிவண்டியில் வீடுவீடாக யாழ்ப்பாணத் தெருக்களில் வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை விற்று நிதி சேகரிப்பவர்களாகவும் போராளிகள் இருக்கிறார்கள்.
புலிகளுனுடையச் சடுதியில் தாக்கிவிட்டுத் தப்பும் செயற்திறம். சிறிலங்கா படையணிகள் மீது தினப்படியானத் தாக்குதல்கள் என்பன அரசை நிலைகுலைய வைக்கின்றன. பல பெரும் தாக்குதல்களில் அவனது பங்கும் கனிசமானதாகவே இருக்கிறது. அப்பையா அண்னையின் தலையிமையிலான வெடிபொருட்களைக் கையாளும் குழுவில், தொழிற்சாலையில் அவனது பணியாற்றுகிறான்.
80 களில் தமிழ் நிலத்திற்காக ஆயுதமேந்தியவர்கள் எல்லைச் சாமியானார்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களானார்கள். ஆயுதம் மட்டுமே நீதி என்றானது. ஆயுதக்குழுக்கள் தமது எதிரிகளை வீதி மின் கம்பங்களில் தொங்கவிட்டு எச்சரித்துக் கொண்டிருந்தனர். போராளிகளின் இப்படியானப் போக்குகள் குறித்து இலங்கை ‘சார்ட்டர்டே ரிவ்யூ’ போன்ற நாளேடுகளிலும், வீரகேசரியிலும் அன்றைக்கு தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. தமிழ் பொடியன்கள் இலக்குமாறி சென்று கொண்டிருப்பதாக யாழ்பாணத்தின் ‘குரல் மவுனிக்கப்பட்ட’ மக்கள் நொந்து கொண்டிருந்தனர். இப்படியான நாட்களில்தாம் இந்திய-இலங்கை உடன்படிக்கையும் அமைதிப்படையின் வருகையும் நிகழ்கிறது.
அமைதித் திரும்பிவிட்டதாகக் கருதிக்கொண்டிருந்த நிலையில் அமைதி உடன்படிக்கை கைச்சாத்தான 5 திங்களின் பின்பாக இந்திய அமைதிப்படையும், புலிகளும் மோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்படுத்தப்படுகிறது. பிரபாகரனைப் பிடிப்பதற்காகச் சுதுமலை அம்மன் கோவியில் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப்படுகிறது. ஆனால் அவர் அங்கிருக்கவில்லை. சீற்றமடைந்த இந்தியப்படைகள் ஊருக்குள் புகுந்து வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்துகின்றன. சகல இயக்கங்களையும், அழித்து அல்லது தடை செய்துவிட்டுப் புலிகள் மட்டுமே களத்தில் சண்டைபிடிக்கின்றனர். புலிகள் பல சிறு குழுவாகப் பிரிந்து இந்தியப் படைகள் மீது கெரில்லாத் தாக்குதல் நடத்துகின்றனர். பாரிய இழப்பை இந்திய அமைதிப்படைச் சந்திக்கிறது. அவன் வெடிப்பிரிவில் இருந்தவாறு கண்ணிவெடிகளால் இந்தியாவின் பல கனரகத் தாங்கிகளை வீழ்த்துகிறான்.
பிற எல்லா யாழ்வாசிகளைப் போன்றே அவனது குடும்பமும் இந்தியப் படையினரின் தாக்குதலுக்கு ஆளாகிறது. பிரபாகரன் மீதான சீற்றத்தால் இந்திய அமைதிப்படையினர் 1987 யாழ் வல்வெட்டித்துறையில் படுகொலையில் இறங்கினர். வியத்நாமின் மைலாய் என்று அன்றைக்கு இதை ஜார்ஜ்பெர்னான்டஸ் வர்ணித்திருந்தார்.
இந்தியப் படைகளை எதிர்த்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அவனுக்கு அவனது தந்தையும், சகோதரியும் இந்தியப்படையினரால் கொல்லப்பட்ட ஆனால் உறுதிபடுத்தப்படாதச் செய்தி வருகிறது. அவன் தனது வீட்டுக்குச் செல்கிறான். வீதியால் காவல் இருக்கும் இந்திய படைவீரனைக் கடந்து அவன் செல்ல வேண்டியிருக்கிறது.
‘ராணுவத்தினர் நான்கு உடலங்களை ஒன்றாகப் போட்டு ஒரு டயரை போட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். அவை அரைகுறையாக எரிந்தபடி நாற்றமெடுத்துக் கொடிண்டிருந்தது. இரவாகவும் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. அவற்றை அருகிலிருந்த காணியில் புதைக்கலாம் என்று முடிவு செய்தனர். மண்வெட்டி தேவை. மண்வெட்டியைத் தேடிக் கொண்டுபோனபோது வீட்டின் விறாந்தையில் இன்னொர் உடல் தனியாகக் கிடந்தது. அருகில்போய் பார்த்தான். அது அவனுடையச் சகோதரியின் உடல் . துணி எதுவும் இன்றித் தலைப் பகுதி சிதறிப்போய் கிடந்தது. அக்காவுக்கு என்ன நடந்திருக்கும் என புரிந்தது.(பக்-172)
இந்தியப் படையணிகள் தமிழ்மண்ணில் நிலை கொண்டிருந்த வேளையில் அது ஆக்கிரமிப்புப் படையாக இருந்தனவேயன்றி அது ஒரு போதும் அமைதிப்படையாக இருந்திருக்கவில்லை என்பதை மெய் நிகழ்வுகளூடாக நாவலுக்குள் பயணிக்கும் ஒருவரால் இனம் காணக்கூடியதாகவிருக்கும்.
இந்தியப்படைகள் சண்டையிடத் தொடங்கியிருந்தக் காலத்தில் படையணித் தளபதிகளை வட்டார அளவில் பொறுப்பேற்கச் செய்திருந்தது. தெய்வேந்திர சர்மா மருதனாமடம், உடுவில் பொறுப்பதிகாரியாக இருந்தார். இவரே சுதுமலை அம்மன் கோவில் பகுதியில் பிரபாகரனைப் பிடிக்கமுடியாமல் அப்பகுதி மக்களை வீதியால் நிறுத்திவைத்து தாங்கிகளைக் கொண்டு நசுக்கிக் கொன்றவர் என்று சொல்லப்படுவதுண்டு. புலிகள் என்று சந்தேகப்படும் யாதொருவரையும் பிடித்து வந்து மனம்போனப் போக்கில் வதைப்படுத்திக் பின்னர் படுகொலை செய்து கொண்டிருந்தார். இளைஞர்களுக்கு இப்படியானத் தண்டனைகள் என்றால், பெண் பிள்ளைகளைப் புலிகளென்று பிடித்தால் நேரே தமது முகாமிற்கு எடுத்துச் சென்றுவிடுவார். அவரை புலிகள் தமது பாணியில் போட்டுத்தள்ளுகிறார்கள்.
தெய்வேந்திரசர்மாவுக்கு இந்தியப் படை அவரது செயலைப் பாராட்டி, நினைவுச் சின்னமொன்றை யாழ் மண்ணிலே எழுப்பிவைக்கிறது.
புலிகள் ஒரே நேரத்தில் மூன்று எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். இந்தியப்படைகள் அவர்களுக்கு ஆதரவான எதிரிகுழுக்கள். இந்தியப் படைகளே உருவாக்கி வைத்திருந்த திரீஸ்டார் என்ற உதிரிகுழுக்களை ஒழுங்கமைத்து கட்டப்பட்ட இயக்கம். பிளாட் அமைப்பை பிளந்து பரந்தன்ராஜன் தலைமையிலான ஒரு அணியை ஈன்.டி.எல்.எப் என்ற பெயரில் இந்திய உளவுத்துறை உருவாக்கியிருந்தது. பிறகு இலங்கைப் படையணிகள்.
இந்திய உளவுப்பிரிவால் உடைக்கப்பட்ட பிளாட் மேலும் பலவீனமடைந்தக் காரணத்தினால் இலங்கை அரசை அது தஞ்சமடைய வேண்டிவந்தது. உமாவின் தலைமையிலானப் பிளாட் அமைப்பு இலங்கை படையணியின் உதவியுடன் கொழும்பில் தமது முகாம்களையும் அமைதுக் கொண்டிருந்தது. உமா மகேசுவரன் அன்றையப் பாதுகாப்பு அமைச்சர் லலித்அதுலத் முதலியின் ஆதரவில் தங்கிக் கொண்டார்.
புலிகள் அலம்பில் காட்டுப்பகுதியில் நிலையெடுத்திருந்தனர். அங்கிருந்துக் குடாப்பகுதியில் கெரில்லா தாக்குதலில் ஈடுபட்டு இந்தியப் படையணியினரை அவ்வப்போது அதிர்ச்சிக்கும் பாரிய உயிரிழப்புக்குமாக நிலைகுலையச் செய்து கொண்டிருந்தனர். அலம்பில் காட்டுப்பகுதியில் பிரபாகரன் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இந்தியப் படைகள் இடம் தெரியாத காட்டுப்பகுதியில் நுழைந்து ரசியாவில் நுழைந்த நெப்போலியன் படைகள் போல பெருத்த உயிர் சேதத்தைச் சந்தித்தன.
அலம்பில் காட்டுப்பகுதியில் அவனும் இந்தியப்படையணிகளை எதிர்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டிருந்தான். பிறகு காயம்பட்டு சிகிச்சைக்காக வன்னி முகாமிற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். அங்கிருந்து கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதன் பின்னர் இயக்கம் இப்போது அவனுக்கு நிழல் வேலைகளை ஒதுக்குகிறது.
அவன் புலிகளின் சர்வதே ஆயுத கொள்முதலின் முகம். இயக்கம் கொடுக்கும் பணிகளைச் செய்வதே தனது இலக்காகக் கொள்கிறான். அதற்கு சாகவும் அவன் தயார். அவன் இப்போது புலிகளின் பிற எல்லாப் போராளிகளின் முகமும் கூட. புலம்பெயர் போராளி. அவன் கொழும்பு வருகிறான். அங்கிருந்து சிங்கப்பூர். தனது விமானப்பயணத்தில் சிங்கப்பூரைப் போலத் தனது நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும் என்று உத்வேகம் கொள்கிறான். அங்கு சத்திரசிகிச்சைச் செய்து கொண்டு முகம் தெரியாத அவன், அவ்வப்போது முகம்தெரியாத மனிதர்களின் தொடர்புகளுடாக இயக்கப் பணிகளை சர்வதேச அரங்கினூடாக செய்துகொள்கிறான். இதற்காக அவன் அய்ரோப்பா, ரசியா, தென்னாப்பிரிக்கா என சர்வதேச ஆயுத சந்தைகளை மேப்பம்பிடித்துக் கொண்டு செல்கிறான. அவனது சரளமான ஆங்கில அறிவு, அதற்கு பலமாக இருக்கிறது. பிரான்சில் அவன் பிரென்ஞ் மொழியைக் கற்றுக் கொண்டே காதலிக்கவும் செய்கிறான். விதவிதமான அனுபவங்கள், விதவிதமானத் தொடர்புகள். விதவிதமான மது கோப்பைகள் என அவனது சர்வதேச முகம் இருக்கிறது. ஆனால் அவனது சொந்த முகம் என்பது இயக்கத்தின் முகமாகத்தான். இருக்கிறது.
கடவுச்சீட்டுக்கள் தயாரிப்பது, குடிவரவு, குடியகல்வு கடிதங்களை, முத்திரைகளை தயாரிப்பதும், எல்லைகளைக் கடப்பதுமே அவனது பிரதான வேலைகளாகின்றன. ஆயுதங்களைக் காவித்திரிந்த அவன் இப்போது கடவுச் சீட்டு பொதியைச் சுமக்கிறான். சர்வதேச ஆயுத வணிகர்களை சந்திக்கிறான். ஆயுத சந்தை அனுபவங்களை, அதன் அரசியலை அவனது வழியாக இயக்கம் பெற்றுக் கொள்கிறது. தமிழர்கள் பெறுகிறார்கள். சிவந்து கொண்டிருக்கும் ஈழம் பெற்றுக் கொள்கிறது. எனவே அவன் என்பது அவன்மட்டுமல்ல ஒருபோதும்.
தன்வரலாற்றின் பிறிதொரு பக்கத்தில் யாழ் முசுலீம் வெளியேற்றம் ஒரு சிறுகதை போல சொல்லப்படுகிறது. அன்றைக்குப் பரவலாக சர்ச்சைக்குள்ளானப் புலிகளின் இந்த நடவடிக்கையானது சிறுபான்மையினருக்குள் ஒரு பெரும்பான்மையினரின் இன மேலாதிக்கமாகவே பார்க்கப்பட்டது. புலிகள் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அன்றைக்கு யாழ்குடாவிலிரந்து இசுலாமியர் வெளியேற்றப்பட்டதானது, புலிகளுக்குள் இருந்த பார்ப்பன, சைவ மேலாதிக்கவாதிகளின் முடிவாக, ஆதிக்கமாகவே கருத வேண்டியிருந்தது.
பிரான்சில் அவன் சந்திக்கும் அவனது இசுலாமிய நண்பர் குடும்பத்தின் நசீமாராணியின் சொற்களில் விரிகிறது அந்தக் கதை.
1990 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி யாழ் முசுலீம் தலைவர்களை ஒஸ்மேனியா கல்லூரியில் ஒருங்குபடுத்தி யாழ் மாவட்டத்தின் அன்றைய அரசியற் துறை பொறுப்பாளர் இளம்பரிதி முசுலீம்கள் தமது பாதுகாப்புக் கருதி யாழ்குடாவைவிட்டு வெளியேற கேட்டுக் கொள்கிறார். அவர்களுக்கு ஒருநாள் மட்டுமே கெடுவிதிக்கப்படுகிறது.
இசுலாமியர்கள் மாற்றுத் துணி மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
15,000 க்கும் அதிகமான முசுலீம் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் இரண்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஓரிரவுக்குள் அனைத்து முசுலீம்களும் வெளியேறிவிடுவதுடன் அவர்கள் அன்றிரவுக்குள் வவுனியாவை தாண்டியிருக்க வேண்டும் என்ற கட்டளை இருந்தால் முசுலீம்கள் வேறு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
நிசாவின் தந்தையிடம் ஒரு வாகனம் இருந்ததால் அவசர அவரசமாக வீட்டில் இருந்த விலை உயர்ந்தப் பொருட்களையெல்லாம் அதற்குள் திணித்துக் கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி வந்த ஒருவன் பொருட்களை விட்டுவிட்டு துணிகளை மட்டுமே கொண்டு போகலாம் என்கிறான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்ககிறார்கள். கலாம் அந்தப் புலி உறுப்பினரிடம் கெஞ்சிப் பார்த்தார். ஆனால் அவனோ துப்பாக்கி நுனியை கலாமின் காதருகில் வைத்துக் கொண்டுச் சொன்னதை மட்டும் செய் என்றான்.
அதனைப் பார்த்து ஆத்திரமடைந்த கலாமின் அம்மா ஆயிசா, இதெல்லாம் என்ரை மகன்க கஸ்ரப் பட்டு சம்பாதித்து வாங்கினது அதை எவருக்கும் குடுக்க மாட்டம் என்று சத்தம் போட்டவாறே வாகனத்தில் திணித்தததிருந்தப் பொருட்களையெல்லாம் கொண்டு போய் வீட்டுக் கிணற்றுக்குள் போட தொடங்க, அதைப் பார்த்த ஆயுததாரி, ஒப்போய் ஆயிசாவின் முதுகில் துப்பாக்கியால் ஓங்கி அடித்தான். அல்லா..” என அலறியபடி விழுந்த ஆயிசாவை நிசாவும் கலாமும் ஓடிப்போய் தூக்க, ஆயிசாவோ மீண்டும் நிலத்தில் வீழ்ந்து இரண்டு கைகளாலும் மண்ணை வாரி அள்ளி அவனை நேக்கி வீசி எறிந்தபடி “டேய் அல்லா மேலை சத்தியமாகச் சொல்றண்டா, நீங்கள் நல்லாவே இருக்க மாட்டிங்கள், நாசமா போவீங்கள் அழிஞ்சு போவீங்கள்!” என்கிறார்(பக்-256)
இறுதிப்போருக்கு முந்தயச் சாபங்கள் புலிகளையும் துரத்துகிறது. இறுதிப்போரோ சவதேசம் மவுனிக்க, இந்தியா மவுனிக்க, புலிகள் மவுனிக்க, தமிழர் குருதியை நந்திக்கடல் உரிஞ்சிக் குடிக்கிறது. வாழுரிமை என்பது இனி இப்புவியில் எங்கும் தனக்கான முற்றுரிமை என்று அதிகாரவர்க்கம் ஈழப்போரின் வழித் தன்னை நீதிபடுத்திக் கொள்கிறது. கொண்டிருக்கிறது. தமிழர் வாழ்வை சூரையாடியதன் வழி மனிதகுலம் தனது முற்றுரிமைகளை அதிகாரவர்க்கத்திடம் இழப்பதை ஒருவாறு ஏற்றுக் கொண்டுவிட்டது. கொண்டிருக்கிறது. ஆயுத எழுத்து அதைத்தான் பற்பல நிகழ்வுகளுடாக முன்வைத்துப் பேசுகிறது. பேசும்.
நூல்-ஆயுத எழுத்து
ஆசிரியர் –சாத்திரி
முதற்பதிப்பு -2015
விலை –இந்தியாவில்-400
ஐரோப்பாவில்-10யூரோ.
வெளியீடு-திலீபன் பதிப்பகம், புலம்