ஆட்டம் போடும் இஸ்ரேல், அரவணைக்கும் அமெரிக்கா
சுவிசிலிருந்து சண் தவராஜா
‘ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டான்” என்ற சொலவடை ஒன்று தமிழில் உண்டு. இந்தச் சொலவடையில் உள்ள கருத்தை அன்றாடம் நாம் காணும் பல விடயங்களில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. வாழ்வியல் முதல் அரசியல் வரை இது பொருந்தும். இத்தகைய ஒரு விடயத்தைப் பற்றியதே இந்தக் கட்டுரை.
அரபுலக வசந்தம்
‘அரபுலக வசந்தம்’ என்ற பெயரில் மத்திய கிழக்கு நாடுகளிலும் மேற்கு ஆபிரிக்காவிலும் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகள் பற்றி நாம் அறிவோம். இயல்பாக இடம்பெற்ற மக்கள் எழுச்சிகள் தாமாக வெற்றியை நோக்கிச் சென்ற வேளையில், இடையில் புகுந்த பிற்போக்குச் சக்திகள், நடைபெற்ற வெகுசனப் போராட்டங்களின் செல்நெறியை மாற்றி ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’ எனும் பாணியில் முன்னைய அடக்குமுறை ஆட்சியாளர்களை பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அதே தன்மை கொண்ட புதிய முகங்களை ஆட்சியில் அமர்த்தியதையும் பார்த்தோம்.
லிபியா, யேமன் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இந்த மக்கள் எழுச்சிகள் உள்நாட்டு யுத்தங்களாக மாற்றப்பட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனங்களும் அவர்களின் கைக்கூலிகளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமக்குப் பிடித்தமில்லாத ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, தமது சொல்கேட்டு நடக்கக் கூடிய பொம்மைகளைப் பதவியில் அமர்த்த தம்மாலான அனைத்தையும் செய்தனர் . லிபியாவில் வெற்றியளித்த அந்தத் தந்திரம் சிரியாவிலும், யேமனிலும் வெற்றியளிக்கவில்லை. யேமனில் போட்டி அரசாங்கங்களுக்கு ஒருபுறம் ஈரானும், மறுபுறம் சவூதி அரேபியாவும் ஆதரவு வழங்கி மறைமுக யுத்தமொன்றை அந்த நாட்டில் நடத்திக் கொண்டிருக்கின்றன. மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாத நிலையில் தொடரும் இந்த உள்நாட்டு யுத்தம், சொந்த நாட்டு மக்களைப் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளிச் ‘சாதனை’ படைத்து நிற்கின்றது.
லிபியாவில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு சுதாகரித்துக் கொண்ட ரஸ்யா, சிரிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தனது படைகளை அந்த நாட்டுக்கு அனுப்பி மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிரியாவில் ஆட்சி மாற்றம் தடுக்கப்பட்டது. 10 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தில் பாரிய உயிரழிவுகளும், பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்ட பின்னரும் நாடு முழுவதையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவர முடியாத நிலையில் சிரிய அரசாங்கம் உள்ளது. உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட ஒருசில ஆயுதக் குழுக்கள் நாட்டின் ஒருசில பகுதிகளில் நிலை கொண்டிருப்பதுவும், அமெரிக்க மற்றும் துருக்கிப் படையினர் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றமையுமே இதன் காரணமாகும்.
சிரியாவில் அமெரிக்கப் படைகள்
அமெரிக்க அரசுத் தலைவராக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் சிரிய மண்ணில் சட்டவிரோதமாகக் கால்பதித்த அமெரிக்கப் படையினர் ட்ரம்ப் காலத்திலும் அங்கு நிலைகொண்டே உள்ளனர். தனது நிலையற்ற கொள்கைகள் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு விமர்சனங்களுக்கும், பரிகாசங்களுக்கும் ஆளாகிவரும் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதத்தில் ”சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளைத் திருப்பி அழைக்கப் போவதாக” அறிவித்தார். படை அதிகாரிகளிடம் இருந்தும், அரசியல்வாதிகளிடம் இருந்தும் வெளியான கண்டனங்களையும், கடுமையான விமர்சனங்களையும் அடுத்து, தனது முன்னைய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப், ”சிரியாவின் எண்ணை வளங்களைக் கணக்கில் எடுத்து, தனது முடிவை மாற்றிக் கொள்வதாக”த் தெரிவித்தார். இங்குதான் கட்டுரையின் முதல் பந்தியில் குறிப்பிட்ட சொலவடை பொருந்தி வருகின்றது.
தற்போது கிடைத்துள்ள செய்திகளின் படி, கடந்த சில வாரங்களில் சிரியாவின் வடகிழக்குப் பிராந்திய டியர்-எஸ் சோர் மற்றும் அல் ஹசக்காஹ் அமெரிக்கத் தளங்களை நோக்கிப் பல படைத் தளவாடங்கள் சிரிய-ஈராக்-யோர்தான் எல்லையோர அல்-ரான்ப் நகரூடாக எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. இதில் யுத்த தாங்கிகள், கவச வாகனங்கள், எண்ணைத் தாங்கிகள், ஆயுதம் தரித்த ட்ரக்குகள் என்பவற்றுடன் இரண்டு நடமாடும் எண்ணெய் சுத்திகரிப்பு இயந்திரங்களும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.
போர்க் குற்றம்
இந்தப் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க சார்பு சிரிய ஜனநாயகப் படை என்னும் ஆயுத அமைப்புக்கும் டெல்ரா கிறசென்ற் எனர்ஜி எனும் பெயரிலான அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கும் அமைவாகவே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகச் செல்லப்படுகின்றது. குறித்த எண்ணெய் நிறுவனத் தலைவர்களுள் குடியரசுக் கட்சியின் வட கரோலினா முக்கியஸ்தர்களுள் ஒருவரான ஜேம்ஸ் கெய்ன் அவர்களும் உள்ளார். டென்மார்க் நாட்டுக்கான முன்னைநாள் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய இவர், விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்குத் அமெரிக்கப் படையினர் பற்றிய தகவல்களை வழங்கிய குற்றச் சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள செல்சியா மன்னிங் அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும் எனக் கூறிக் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆக்கிரமிப்புக்கு இலக்காகியுள்ள ஒரு நாட்டில், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக இயற்கை வள ஆய்வில் ஈடுபடுதல் போர்க் குற்றம்’ என்கின்றது ஜெனீவா உடன்படிக்கை. சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு சிரிய அரசாங்கமோ அன்றி ஐ.நா. சபையோ அங்கீகாரம் வழங்கியிராத நிலையில் சிரிய எண்ணெய் ஆராய்ச்சியிலோ, ஏற்றுமதியிலோ அமெரிக்க நிறுவனம் ஈடுபடுவது பன்னாட்டு விவகாரங்களின் கீழ் ஒரு கொள்ளையாகவே கணிக்கப் படுகின்றது.
ஆனால், இவை பற்றியெல்லாம் கவனத்தில் எடுக்கும் நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியமோ அவர்களின் நண்பர்களோ இல்லை. மனித உரிமைகள், சிவில் உரிமைகள், இறைமை, சமாதானம் என்பவை போன்ற சொற்களை உச்சரித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு அவற்றைப் போதித்துக் கொண்டு தாம் அவற்றைக் கடைப் பிடிக்காமல் இருப்பதே தமது நலன்களுக்கு உகந்தது என்பது அவர்களின் எண்ணம்.
அமெரிக்காவின் பிரதான இலக்கு
உலகில் பல நாடுகளில் எண்ணெய் வளம் இருக்க, ஏன் தனது சொந்த நாட்டில் கூட எண்ணெய் வளம் இருக்க, மத்திய கிழக்கில் உள்ள சிரியாவில் கால்பதித்து தனது நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள எண்ணெய் வளம் மட்டும்தானா காரணம்? உலக எண்ணெய் வளத்தில் வெறும் 0.1 விழுக்காடு மாத்திரம் தன்னகத்தே கொண்டுள்ள சிரியாவின் பூகோள அமைவிடமும், அமெரிக்காவின் வில்லன் நாடுகளில் ஒன்றான ஈரானுடன் சிரியா கொண்டுள்ள உறவுகளுமே உண்மையான காரணங்கள்.
கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மைக் பொம்பியோ தனது பயணத்தின் போது சூடான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். ஜெரூசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவைச் சந்தித்து உரையாடிய பொம்பியோ தொடர்ந்து ஊடகர்களைச் சந்தித்தார். இதன்போது அமெரிக்காவின் ஒத்துழைப்பைச் சிலாகித்துப் பேசிய நெத்தன்யாஹு ஈரான் மீது அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகளை வெகுவாக வரவேற்பதாகக் கூறினார். அவரது கருத்துப்படி மத்தியகிழக்கில் ஈரான் எறிகணைத் தாக்குதல்களுக்கும், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும், கொலைகள், நாசகார வேலைகள் என்பவற்றுக்கும் உதவி வருகின்றது. இத்தனைக்கும் மேலாக நாடுகளின் இறைமையை மீறி விமானத் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள், கொலைகள், படை நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றில் ஈடுபடுவது இஸ்ரேல் அல்லவா என வாசகர்கள் நினைக்கக் கூடும். உண்மை அதுவாக இருப்பினும் அமெரிக்க நண்பனின் சகாயத்தினால் அவை யாவும் நியாயப் படுத்தப் படுகின்றன.
மத்திய கிழக்கைச் சீர்குலைக்கும் இஸ்ரேல்
ஈரானின் நட்பு நாடுகள் என வர்ணிக்கப்படும் சிரியா, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் பல ஆண்டு காலமாக மேற்கொண்ட, தொடர்ந்து மேற்கொண்டுவரும் நாசகார வேலைகள் ஒன்று இரண்டல்ல. அது மாத்திரமன்றி ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்துவிடுவதைத் தடுத்தல் என்ற போர்வையில் நேரடியாகவும், தனது முகவர்கள் ஊடாகவும் ஈரானிலும் பல தாக்குதல்களையும், அழிவு வேலைகளையும் – அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் – இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது. இவ் வருடத்தின் யூன் மற்றும் யூலை மாதங்களில் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை இலக்கு வைத்து பல நாசகாரத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வந்ததை உலகறியும்.
ஈரானை ‘வழிக்குக் கொண்டு வருவதற்காக’ அதன் நண்பர்களை இலக்கு வைத்துவந்த இஸ்ரேல் தற்போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டு நேரடியாகவே ஈரான் மீது தாக்குதல்களை அதிகரித்து உள்ளது. மாறியுள்ள இந்தச் செயற்பாட்டை ‘ஒக்ரோபஸ் கோட்பாடு’ என்கிறார் இந்தக் கோட்பாட்டின் பிதாமகனான இஸ்ரேலின் முன்னாள் படைத்துறை அமைச்சர் நபாற்றலி பென்னற். அவரது கருத்தின் படி ஒக்ரோபஸ்ஸோடு போராடும் போது அதன் கரங்களை ஒவ்வொன்றாக வெட்டி நேரத்தை வீணாக்குவதை விட தலையிலேயே ஒரு போடு போட்டு நசுக்குவதே சிறந்தது என்கிறார். புதிய சித்தாந்தத்தின் படி ஈரானிய ஆலோசகர்களையும் அதிகாரிகளையும் தாக்கிக் கொல்வது ஊக்குவிக்கப் படுகின்றது.
மறுபுறம், ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறிய அமெரிக்கா, ஒப்பந்தம் காலாவதியாகிவரும் இன்றைய நிலையில் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்ட முயற்சித்து வருகின்றது. ஈரானின் அணு ஆயுத அபிலாசைகளைத் தடுத்தல் என்பதற்கும் அப்பால் ஈரானில் ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வந்து தனக்கு இசைவான ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவிக் கொள்வதே அமெரிக்காவின் உண்மையான இலக்கு.
இப்போது இதைப்பற்றி பேசுவானேன்? அதுதான் நவம்பரில் ஆட்சி மாற்றம் வரப் போகிறதே, பிறகு எல்லாமே மாறிவிடும் என அப்பாவித்தனமாக யாராவது நினைத்தால், அவர்கள் அமெரிக்க அரசியல் இயந்திரத்தைப் பற்றி முறையாகப் புரிந்து கொள்வில்லை என்பதே பொருள்.
(வீரகேசரி வார இதழில் முதலில் 30.08.2020 அன்று வெளியிடப்பட்டது)